Friday, April 18, 2014

தேர்தல் களம் - 2014

நாடாளுமன்ற தேர்தலுக்கான களம் தயாராக இருக்கிறது. ஏற்கனவே சில கட்ட வாக்குப்பதிவுகள் முடிவுற்று, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் பல பல வகைகளில் முக்கியத்துவம் வாயந்ததாக நான் கருதுகிறேன்.


பொதுவாக நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, மத்தியில் யார் நிலையான நல்லாட்சி தருவார்கள், பொருளாதார சிக்கல்களை சமாளித்து நிதிநிலையை மேம்படுத்துவார்கள், வளர்ச்சி, தொழில், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை உயர்த்துவார்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கம். இரு முக்கிய கட்சிகளும் ஏதேனும் ஒரு தேசிய கட்சியை சார்ந்து தேர்தலை சந்தித்து வந்ததால், நமக்கு நம்முடைய மாநில கட்சி நிலைப்பாடு, மத்திய கட்சி நிலைப்பாடு ஆகியவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இது வரை வந்ததில்லை. இந்த தேர்தலில், இரு முக்கிய தமிழக கட்சிகளும் தனித்து நிற்பது மாதிரியே தேசத்தின் முக்கியமான மூன்று கட்சிகளும் தனித்தே தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.

நான் இந்த கட்டுரையில் எனது மனவோட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன். இது பொதுவான கருத்தாக இருக்கவேண்டும் என்றோ, மற்றவர்கள் எனது கருத்துடன் உடன்படவேண்டும் என்றோ நான் கட்டாயப்படுத்தவில்லை.

நிற்க!

நடைபெற இருப்பது மத்திய ஆட்சிக்கான தேர்தல் என்பதால், முதல் நோக்கிலேயே நான் மாநிலக்கட்சிகளை விலக்கிவிட நினைக்கிறென். அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்களும் தமிழகத்துக்காக தமிழக நலனுக்காக மிகப்பெரிய பலனளிக்கக்கூடிய திட்டங்களையெல்லாம் நல்கி, நாமெல்லாம் இன்றைக்கு இந்த அளவுக்கு சீரோடும் சிறப்போடும் கவுரவத்தோடும் வாழ வழி செய்தவை என்பதற்கான நன்றி என்றென்றைக்கும் எனக்கு உண்டு. ஆனால் இந்த நிமிடம் வரை, நான் அதிமுகவை ஆதரித்தாலோ, திமுகவை ஆதரித்தாலோ, அந்த வாக்குகள் மத்தியில் யாருடைய ஆட்சி அமைவதற்கு, அல்லது யாருடைய ஆட்சியின் ஆதரவிற்கு உதவும் என்பது தெரிவிக்கப்படாமலேயே இருக்கிறது.


சமீபகாலம் வரை பாஜகவை விமர்சிக்காமல் இருந்த அதிமுக, தனது கூட்டணியிலிருந்து இஸ்லாமிய இயக்கம் விடைபெற்றுக்கொண்ட பின்னால், பாஜகவையும் எதிர்க்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வந்துவிட்டது. திமுகவின் தேர்தலுக்கு பிந்தைய நிலை இன்னமும் தெளிவாகவில்லை. மூன்றாம் அணி என்பது வெற்றுக்காகிதத்தில் விரல்கொண்டு வரைந்த அழகிய ஓவியமாய் யாருக்கும் பயனின்றி கழிந்துவிட்டது.

எனவே, மாநில வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டிருந்தாலும், நடைபெறவிருப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை கருத்தில் கொண்டு, திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களையும் நான் எனது பரிசீலனை பட்டியலில் நின்றும் அகற்றிவிட்டாயிற்று.

தேசிய கட்சிக்காக தான் ஓட்டளிக்க முடியும் என்கிற நிர்ப்பந்தத்தில் என் முன்னே மூன்று அணிகள் நிற்கின்றன.

தேசமெல்லாம் சட்டென ஒரு மாற்றத்துக்கான அலை வீசுவதாக கற்பிக்கப்பட்டு அந்த அலையின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மரியாதைக்குரிய திரு நரேந்திர மோடி அவர்கள் மீதான மதிப்பை அவரது கட்சியின் தேர்தல் அறிக்கையும், அவர் வெளியிட்ட வெற்று பரபரப்பு விளம்பரங்களும், குஜராத் பற்றி வந்துகொண்டிருக்கும் அலை அலையான நிதர்சன செய்திகளும், சிற்சில மேடைகளில் அவர் பேசிய பேச்சுக்களின் யதார்த்தமின்மையும் உடைத்துப்போட்டுவிட்டன.

ஒரு சில மாதங்கள் முன்பு வரை கூட எனக்கு பாஜக ஆட்சி என்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் என்கிற முன் அனுபவம்,. அத்வானி போன்றவர்களின் தற்போதைய பண்பட்ட நிலை, சுஷ்மா போன்றவர்களின் சமத்துவ கொள்கை, யஷ்வந்த், பிரமோத் போன்றவர்களின் அறிவார்ந்த ஆளுமை ஆகியவை, பாஜகவை எப்போதோ ஒரு தீண்டத்தகாத கட்சி என்கிற நிலையிலிருந்து மேம்படுத்தி ஆளும் திறமையான கட்சியாக எனக்குள் உருவகப்படுத்தி விட்டிருந்தது. ஆனால், பிரதமராக மோடி முன்னிறுத்தப்பட்டது, அவரது வெளிப்படையான கொள்கை, அவர் பேசியெ சில பேச்சுக்கள், மிக மிக முட்டாள்த்தனமான பாஜக தேர்தல் அறிக்கை ஆகியவை அதை மறுபரிசீலனை செய்ய வைத்து விட்டன. நான் இந்துவாக இருப்பதை விடவும் இந்தியனாக இருக்கவே அதிகம் பிரியப்படுகிறேன். ஆனால் இந்தியனாக இருப்பதை விடவும் இந்துவாக இருப்பவனுக்கே முன்னுரிமை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது பாஜகவின் தேர்தல் அறிக்கை. இளம் பிராயத்திலிருந்து உண்டு உறங்கி பழகி வளர்ந்த சக தோழர்களை என்னிலிருந்து விலக்கிவைக்கும் ஒரு கொள்கைக்கு கனவிலும் நான் ஆதரவளித்துவிட தயாராக இல்லை.

இன்றைக்கு இந்தியா எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார சிக்கல்கள், சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து தப்பிக்கவேண்டிய கட்டாயம், எதிர்கால சந்ததியினருக்கான வளர்ச்சி திட்டங்கள் என எதையும் பாஜகவின் தேர்தல் அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. மிக முக முக்கியமான, வெளியுறவு கொள்கை குறித்து ஒரே ஒரு வரி கூட தேர்தல் அறிக்கையில் இல்லைமாறாக இராமர் பாலம், இராமர் கோவில், இந்துக்களுக்கு மட்டுமான பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டுக்கு பாதகமான நிலைப்பாடு, கொசுக்கள் ஒழிப்பு என மிக மிக பத்தாம் பசலித்தனமான ஒரு தேர்தல் அறிக்கையை சமர்ப்பித்து, யுவ இந்தியாவின் கனவுகளை தகர்த்திருக்கிறது பாஜக.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முரண்பாடான கட்சிகளை சேர்த்து கட்டிய குடுவையாக ஒரு கூட்டணியை அமைத்திருப்பதும், தங்கள் கட்சியின் ஒருமுகப்பட்ட ஆட்சி அமையும் என்கிற அவர்களது நம்பிக்கையின்மையும், எனக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாற்றம் தேவை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது பள்ளத்துக்கு பயந்து பாதாளத்தில் குதித்த கதையாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். இப்போதைய பொருளாதார சூழலில் இந்தியாவில் ஒரு பரீட்சார்த்தமான ஆட்சிமுறை என்பது முட்டாள்த்தனமான முடிவாகவே அமையும். முரண்பாடுகளின் சங்கமம், பெரும்பாலும் நிம்மதியான ஆட்சியை கேள்விக்குறியாக்கி, முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் நாட்டை சீரழித்துவிடும் என்பதை நாம் பல முறை கண்டு உணர்ந்துள்ளோம்.

இரண்டாவதாக என் கவனத்தை கவர்ந்தது, நான் எப்போதும் பெரிதும் மதிக்கும் நேசிக்கும் கம்யூனிஸ்டு கட்சியினர்.



இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைக்கும் உரிய நல்ல தீர்வுகளை தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரே இயக்கம் இடது சாரி இயக்கம் என்பதில் எனக்கு எப்போதுமே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்கள் தங்களை காலத்துக்கு தக்கபடி மேம்படுத்திக்கொள்ளவில்லை என்பதிலும், ஆக்கப்பூர்வமாக செயல்பட தவறிவிட்டார்கள் என்பதிலும் எனக்கும் கனத்த வருத்தமுண்டு.

மிகுந்த பிராயத்தனத்தினிடையில் பதினோரு கட்சிகள் உள்ளடக்கிய மூன்றாம் அணியம் சில மாதங்களுக்கு முன் அறிவித்த கம்யூனிஸ்டுகள், என் மனதில் லேசாக நம்பிக்கை விதையை நட்டு வைத்து சென்றார்கள். நேர்மை, நாகரீகம், மதச்சார்பின்மை, பொருளாதார தெளிவு நிலை, அடிப்படை தொழிலாளர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் கஷ்டங்கள் புரிந்த, உணர்ந்த ஒரு இயக்கமான கம்யூனிஸ்டுகளின் கைகளில் ஆட்சி பொறுப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்காத நாளில்லை. அதே சமயம், முதலாளித்துவத்துக்கு எதிரான மிக முரட்டுத்தனமான கொள்கையையும் அது கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் இரு தரப்பையும் ஒரு சேர அனுசரித்து சென்றாலொழிய ஒட்டுமொத்த வளர்ச்சியை காண முடியாது. மேலும் நாடு முழுமையும் பரவலாக ஆதரவில்லாததால், மாநில கட்சிகளை நம்பி மட்டுமே களமிறங்குகிறது. இதுவும் ஒரு வகையில் நிலையற்ற, நிர்ப்பந்தங்களுக்குட்பட்ட ஆட்சியாக அமைந்து விட்டால், இன்றைய பொருளாதார நிலையில் இந்தியா மீண்டெழ முடியாத ஆழத்தில் வீழ்ந்துவிடும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இறுதியாக, விரும்பியோ விரும்பாமலோ என் முன்னே வந்து நிற்பது, காங்கிரஸ் தான். எத்தனையோ பாதக முடிவுகளை எடுத்திருந்தாலும், கசப்பான உணர்வுகளை ஊட்டியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் மிக பெரிய வளர்ச்சியையும், பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கை தர உயர்வையும் தந்திருக்கிறார்கள். சிற்சில மாநிலங்களில் நான் பயணிக்க நேர்கையிலெல்லாம் உணர்ந்திருக்கிறேன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்த இடங்களா இவை? மருத்துவமனை, சாலைகள், பள்ளிக்கூடங்கள், நீர்தேக்கங்கள், மின் திட்டங்கள், குடிநீர் வசதி, விவசாய மேம்பாடு என அவை வளர்ந்து கிராமங்களில் இருந்துவந்த இடமாற்ற சதவீதத்தை கணிசமாக குறைத்திருக்கிறது இந்த ஆட்சி.

யாரை பிரதமராக முன் நிறுத்தப்போகிறார்கள் என தெளிவாக சொல்லாவிட்டாலும், அவர்களது தேர்தல் அறிக்கை தெளிவாக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு என்னென்ன தேவை என்பதை சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அவற்றில் பாதியை நிறைவேற்றினால் கூட நாம்  கணிசமான முன்னேற்றத்தை அடைந்துவிட முடியும். பிற கட்சிகளை போல நாட்டுக்கு உண்மையிலேயே என்ன தான் தேவை என்பதை உணராமல் இருக்கும் அவல நிலை காங்கிறசிடம் இல்லைகாங்கிரஸ் மீது வைக்கப்ப்டும் புனை குற்றச்சாட்டுக்களை அவர்கள் கையாண்ட விதமும், அப்படியான வன்மங்களை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் உரிய வளர்ச்சிப்பணிகளை  மக்களின் நலனுக்காக கொண்டுவததும் என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் கவர்ந்தது.

நாட்டிலுள்ள 32 மாநிலங்களில் சராசரியாக மாநிலத்துக்கு 9 சீட் வென்றாலும் கூட எளிதாக காங்கிரஸ் ஆட்சியை வென்றெடுத்துவிடும் என்பதிலும் மத்திய இந்தியா, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் அதிரடியாக ஏற்படுத்திய அபரிமிதமான வளர்ச்சியை கண்கூடாக கண்டு அனுபவித்து வரும் அந்தந்த மாநில மக்கள் கணிசமாக ஆதரித்து காங்கிரசை அரியணையில் ஏற்றிவிடும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

எனவே வெற்றிபெறக்கூடிய ஒரு கட்சிக்கு, அதிலும் தேசிய கட்சிக்கு எனது வாக்கினை காணிக்கையாக்குவதே அந்த வாக்குக்கான மரியாதையாக இருக்கும் என கருதுகிறேன்.

ஒருவேளை, திமுக தனது ஆதரவினை பாஜகவிற்கு வழங்குமேயானால், திமுகவின் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி என்கிற நிலை உருவாகுமேயானால், எனது வாக்கினை திமுகவிற்கோ, பாஜகவிற்கோ அளிப்பதில் சங்கடமில்லை. காரணம், திமுக ஒருபோதும் தேச நலனுக்கு எதிராக எந்த கட்சியையும் செயல்பட அனுமதிக்காது. அதற்கு பல பல உதாரணங்கள் உள்ளன. திமுகவின் கட்டுப்பாட்டில் பாஜக ஆட்சி வருமானால், நிச்சயமாக மக்கள் விரோத முடிவுகளை பாஜக எடுக்க திமுக அனுமதிக்காது. காங்கிரசிடமிருந்து ஒரு மாற்று வேண்டும் என்கிற எல்லோரது எதிர்பார்ப்பும் அதன் மூலம் நிறைவேறக்கூடும்.




ஆனால், இன்றைய நிலையில் திமுகவோ, அதிமுகவோ தங்க்ள் குழப்ப நிலையிலிருந்து வெளியே வராமல் இருப்பதாலும், தங்கள் எதிர்கால திட்டம் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாலும், பாஜக தனது அடிப்படையான பிற்போக்கு கொள்கைகளை முன் வைத்து வருவதாலும், மாற்று ஆளுமையான கம்யூனிஸ்டுகள் பலமிழந்து நிற்பதாலும், நாட்டின் எதிர்காலத்தை கருதி, காங்கிரசை ஆதரித்தாக வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம்.

தமிழகத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலை பொறுத்தமட்டில், எல்லா முக்கிய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவதால், ஒரு தொகுதியில் ஒரு கட்சிக்குள்ள வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியும்இந்த தேர்தலில் அனுதாப அலையோ, அரசியல் அலையோ, தேர்தலுக்கான முக்கிய பிரச்சனையோ எதுவும் இல்லாமல் களம் மிக தெளிவாக இருக்கிறது. அவரவர் கட்சிக்கு, ஒவ்வொரு தொகுதியிலும் என்ன பலம் என்பது தான் முக்கியம் என்பதால், ஓரளவு வெற்றி தோல்வியை கணித்துவிட முடிகிறது.

மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் அதிக பலம் இருப்பதும், காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளில் பாரம்பரிய ஓட்டுக்கள் இருப்பதும் அனைத்து கட்சியினரும் அறிந்த ஒன்றே. முந்தைய தேர்தல்களில், அந்த ஓட்டுக்களை குறிவைத்தே அவர்களை அரவணைத்து சென்றன கழகங்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்பதால், தங்களது பாரம்பரிய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் தாங்களே பெற்றிட முடியும் என்கிற நம்பிக்கை அவர்களிடம் அதீதமாக காணப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சிஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். பாஜக அணி, காங், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி என வாக்குகள் பிரிகையில் யாருக்கு அந்த தொகுதியில் அதிக பலம் இருக்கிறதோ அவர்களே வெல்வார்கள் என்பதால்மிக சிறிய வாக்கு வித்தியாசங்களில் கூட வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படலாம்.

புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் மிக அதிக அளவில் ஆர்வமாக வந்திணைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. கல்வி, தொழில், உள்கட்டமைப்பு மேம்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கண்கூடாக கண்டு அனுபவித்து வருபவர்கள் அவர்கள். பொருளாதாரம் புரிந்தவர்கள், சர்வதேச மந்த நிலையிலும் இந்தியா தனித்தன்மையோடு நின்றதற்கான காரணத்தை அறியாமல் இருக்க மாட்டார்கள்.

எனவே, இந்த தேர்தலில் பலரது கணிப்பையும் பொய்யாகி விசித்திரமான தேர்தல் முடிவு வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

தேர்தல் நெருக்கத்தில் திமுக பிரயோகிக்கவிருக்கும் பிரம்மாஸ்திரமும், தமிழக தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் வெளியிடக்கூடிய முக்கிய அறிவிப்புக்களும் கூட தேர்தல் கணிப்பையும், ஏன், எனது தனிப்பட்ட கணிப்பையும் கூட தகர்த்து எறிந்து விடக்கூடும் தான்.

என் இந்தியா என்னவாகிவிடப்போகிறது என்கிற அச்சம் கலந்த ஆர்வத்துடன் எல்லோரையும் போல காத்திருக்க தொடங்குகிறேன்.. மே 16க்காக.

Printfriendly