Tuesday, June 29, 2010

சந்துரு கொடுத்த சவுக்கடி!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள் பல பல பரபரப்பான தீர்ப்புக்களை தீர்க்கமாய் கொடுத்து வருபவர்.  இப்போது என்றில்லை, அவர் வழக்கரின்ஞராக அதே நீதிமன்றத்தில் பணி புரிந்தபோழுதும் சமூக அக்கறை மிளிரும் பல பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்.  சமுதாய மறுமலர்ச்சிக்கான பல தீர்ப்புக்களை பெற்று கொடுத்தவர்.

நீதிபதியாக உயர்ந்த பின் - தீர்ப்புக்களை வழங்குகின்ற நிலைக்கு வந்தபின் - வழக்குகளை சமூக கண்கொண்டு கண்டு பல முற்போக்கான தீர்ப்புக்களை அளித்தவர்.  முக்கிய வழக்குகளில், எதை பற்றியும் கவலை படாமல் நேர்கொண்ட நெஞ்சோடு தீர்ப்புக்களை எழுதியவர்.

நேற்று இன்னுமொரு முக்கியமான தீர்ப்பை தந்திருக்கிறார். 

விஷயம் இது தான் - சுருக்கமாக.

தமிழருவி மணியன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் வீடு குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.  கடந்த பத்தொன்பது மாதங்களாக அந்த குத்தகை புதுப்பிக்கப்படாமலேயே அவர் அங்கே குடியிருந்து வருகிறார்.  அதனால் அவரை காலி செய்ய சொல்லி இருக்கிறது வீட்டு வசதி வாரியம். 

தன்னை போலவே பலரும் குத்தகை புதுப்பிக்காமல் அங்கே குடியிருந்து வரும் நிலையில் தன்னை மட்டும் காலி செய்ய சொல்வது பகையுறவை பாராட்டி பாரபட்சமாக அரசு நடந்துகொள்வதை காட்டுகிறது என்று கூறி அவர் வழக்கு போட்டார்.

அந்த வழக்கில் தான் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார் திரு.சந்துரு.

தமிழ் வாழ்க என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் நோக்கத்துடன், "தலைமை செயலகத்தின் மீது தமிழ் வாழ்க என்று நியான் விளக்கு ஒளிர விட்டால் மட்டும் போதாது.. தமிழறிஞர்களை பாதுகாக்கவும் வேண்டும் அரசு. அப்போது தான் தமிழ் வாழும்" என்று தனது கருத்தை சுளீறேன்று சொல்லி இருக்கிறார்.

இதை வேறு விதமாக பார்க்க விரும்புகிறேன்.

சட்டத்தின் கண்கொண்டு நியாயமான தீர்ப்பாக அவர் சொல்லி இருக்கவேண்டியது என்ன என்று எல்லோருமே அறிவர்.  பிறர் குத்தகை புதுப்பிக்காமல் இருப்பதை காரணம் காட்டி திரு. தமிழருவி மணியன் அவர்களும் அப்படி இருக்க உரிமை கோர முடியாது.  நியாயமாக சட்டத்தை நீதியை நிலை நாட்டி இருக்கவேண்டிய நீதிமன்றம், தமிழருவி மணியனை குத்தகை புதுப்பிக்க சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவரை காலி செய்ய சொல்லி இருக்க வேண்டும்.    குத்தகை புதுப்பிக்காமல் குடியிருந்து வரும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.  (அதாவது குத்தகை புதுப்பித்தல் அல்லது காலி செய்தல்)

ஆனால் அப்படி இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் அரசின் மீது பாய்வது தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.

அரசு தமிழ் ஆர்வலர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற விஷயத்தை, குத்தகை புதுப்பிக்காமல் குடியிருக்க தமிழருவி மணியனை அனுமதிக்கவில்லை என்பதுடன் சம்மந்தப்படுத்தி, அதனையே வாய்ப்பாக கொண்டு தமிழக அரசின் மீது பாய்ந்து இருப்பது, சந்துரு மீதான மதிப்பை கொஞ்சம் இறக்கிவைக்க தான் செய்கிறது. 

எனினும், அவர் கொடுத்திருக்கும் சவுக்கடி - தவறான இடத்தில், தவறான சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் - அரசுக்கு தேவையான சவுக்கடி தான் என்பதில் சந்தேகம் இல்லை.  

சொல்லளவில் இருக்கும் தமிழுணர்வு செயல்வடிவம் பெற சந்துருவின் இந்த தீர்ப்பு அரசுக்கு உத்வேகம் தருமேயானால், அது தமிழ் பெற்ற பயனாகும்.

No comments:

Post a Comment

Printfriendly