Sunday, January 31, 2010

வைகோ : சரிந்த சரித்திரம்!

பழனி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம்.
காங் வேட்பாளர் கார்வேன்தனை ஆதரித்து திமுக அணியினரின் பொதுக்கூட்டம்.
கூட்டத்தில் பேசிய அனைவரும் (நடுநிலையாளர் என போற்றப்படும் முரசொலி மாறன் உட்பட) வைகோ என்கிற பேரை கவனமாக தவிர்க்கிறார்கள்.
பிற்பாடு பேசவருகிறார் புரட்சி புயல்.
எடுத்த எடுப்பிலேயே "என் பாராளுமன்ற அரசியல் ஆசான் அண்ணன் முரசொலி மாறன் அவர்களே" என தொடங்க அதிர்கிறது கைதட்டல்.  அந்த கைதட்டல் கொடுத்த சவுக்கடியின் வீச்சை மேடையில் இருந்த திமுக தலைவர்களால் தாங்கி கொள்ள முடியாததை நாங்கள் கண்கூடாக கண்டோம். அந்த பேச்சில் அத்தனை தொண்டர்களையும் கட்டி போட்டார் வைகோ.  அந்த பேச்சு திறம்....

திமுகவில் இருந்து வெளியேற நேர்ந்தபின் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க குடவாசல் பொதுக்கூட்டம்..  வரலாற்று நிகழ்வுகளை கட்டி கோர்த்து நிகழ்கால அரசியலை தொட்டு தூக்கி மிக நீண்ட சொற்பொழிவு.... அந்த பேச்சு திறம்..

பின்னர் அவரது எத்தனை எத்தனையோ மேடை பேச்சுக்கள்....  சந்தேகமே இல்லை.. அவர் ஒரு மிக மிக சிறந்த அரசியல் பேச்சாளர் தான்.

எல்லா சிறந்த தளபதிகளும் சிறந்த தலைவர்களாக பரிணமிப்பது இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் வைகோ.

திமுகவில் இருந்து வெளியேறி புதிய இயக்கம் கண்டு சிறப்பான தொடக்கம் கண்டார். எனினும் தவறான முடிவுகளால் தன்னையும் தன இயக்கத்தையும் தமிழகத்தின் சிறந்த காமடி இயக்கமாக மாற்றி காட்டினார்.

எந்த இயக்கத்தை எதிர்த்து தனி இயக்கம் கண்டாரோ அதே இயக்கத்துடன் அணி சேர்ந்தது.  பாசிச சக்தி என்று நரம்பு புடைக்க முழங்கி எதிர்த்த அதிமுகவுடன் அணி சேர்ந்தது.. அதுவும் உப்பு சப்பு இல்லாத சங்கரன்கோவில் தொகுதியை காரணம் காட்டி.. என்று நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது வைகோவுக்கு எதோ தவறான வழிகாட்டுதல்கள் நடைபெறுவதான தோற்றமே ஏற்படுத்தியது.

திமுக 22 தொகுதிகள் கொடுக்க இசைந்து அதில் பெரும்பான்மையான தொகுதிகள் மதிமுக செல்வாக்கான தொகுதிகளாக கொடுக்க இசைந்தும், சங்கரன் கோவில் தொகுதி அந்த பட்டியலில் இல்லை என்று காரணம் சொல்லி அதிமுகவின் 35 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் போட்டு அணி சேர்ந்தார்.  கொடுமை என்னவெனில் மதிமுக செல்வாக்கான தொகுதிகள் ஒன்று கூட அதிமுக பட்டியலில் இல்லை.  எந்த சங்கரன்கோவில் திமுக தரவில்லை என்று வெளியேறினாரோ, அதே சங்கரன்கோவில் அதிமுகவும் தரவில்லை. அதை எதிர்த்து வைகோவால் எந்த முணுமுணுப்பும் செய்யமுடியவில்லை.  ஒருவேளை திமுகவின் தொகுதி ஒதுக்கீட்டை ஏற்று இருந்தால் குறைந்தது 13 தொகுதிகளிலாவது மதிமுக வெற்றி பெற்று இருக்கும்.  அதிமுகவுடன் இணைந்ததில் வெற்றி வாய்ப்புக்களை இழந்து, அதிமுகவின் பிரச்சார குழு தலைவராக மட்டும் வளைய வர முடிந்தது வைகோவால்.

முன்பு 211 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டு துணிச்சலாக தேர்தல் களம் கண்ட மதிமுகவுக்கு இப்படியான அடிமை சாசன நிலைப்பாடு ஏற்படும் என்று எந்த மதிமுக தொண்டனும் எதிர்பார்த்து இருக்க மாட்டான்.

தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கிராமங்கள் தோறும் குக்கிராமங்கள் தோறும் கிளைகள் நிறுவி, பிரச்சாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து நின்ற தலைவர்களுள் ஒருவர் வைகோ.  அவரது இயக்கத்தின் வீச்சு தமிழகம் முழுமையும் விரவி கிடக்கிறது.  பாமக, வி.சி  போன்ற குறுகிய பிராந்திய கட்சிகளே தெம்பாக சட்டமன்றம் செல்லும் பொழுது மதிமுக போன்ற பேரியக்கம் கூனி குறுகி யாரோ போல சட்டமன்றம் நுழைவதற்கு, வைகோவின் தவறான அரசியல் நிலைப்பாடுகள் அன்றி வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

திமுக, அதிமுக இயக்கங்களுக்கு மாற்றாக பேரியக்கமாக முகிழ்த்து சரித்திரம் படைக்கும் என கருதிய மதிமுக இன்று சரிந்து தேய்ந்து அதிமுகவின் துணை அமைப்பு போல அமைந்து போனது வருத்தமே!  மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, அவ்வப்போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் பணியாளராக தங்களை முன்னிறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மதிமுக செய்யவேயில்லை.

திமுக இயக்கத்தை பொறுத்தவரை உட்கட்சி ஜனநாயகம் மிக சிறப்பாக இருக்கும்.  அந்த இயக்கத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை பிரமுகர்கள் கூட உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னேர்ரப்படுவார்கள்.  இயக்கம் மீதான விமரிசனம் ஏதும் இருப்பின் அவர்களால் தைரியமாக அதனை வெளிப்படுத்த முடியும்.  பிற இயக்கங்களான அதிமுக, காங், பாமக போன்றவற்றில் அப்படி அல்ல. அங்கே தலைமையும் தலைமைக்கு விசுவாசமான சில தலைவர்கள் தவிர வேறு யாருமே முக்கியத்துவம் பெறுவதில்லை.  அப்படியான ஜனநாயகத்தில் வளர்ந்த வைகோவும், தனது சுய திறன் காரணமாக உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் பெற்றவரே.  திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக முன்னேறினார்.  அத்தகைய அங்கீகாரம் திமுகவில் கொடுக்கப்படுகிறது.  இப்போதும் மூக்கையா போன்ற மாவட்ட செயலாளர்கள் கூட தனி செல்வாக்குடன் வளைய வருவது திமுகவில் மட்டும் தான் சாத்தியம்.

ஆனால், மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது மிஸ்ஸிங்.  இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுயமாக வெளிப்படுத்தும் நிலை இப்போது அங்கே இருப்பதாக தெரியவில்லை.  அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுத்தாலே, மதிமுகவின் வளர்ச்சிக்கான வழிகளை மனம் திறந்து கொட்டுவார்கள்.

இப்போது சரிந்திருக்கும் மதிமுகவின் செல்வாக்கு பின்னர் சரித்திரமாக உயர வாய்ப்பு உண்டு??  ஆனால் அது சாத்தியமா???  சுய முடிவுகள் எடுக்கும் திறன் வைகோவுக்கு வருமா??  அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த இயக்கம் விடுபடுமா???  

Saturday, January 30, 2010

எது தியாகம்??

நேற்று சென்னை முழுக்க ஒரு திடீர் ஆச்சரியம்!  போஸ்டர் ஓட்ட தடை செய்யப்பட சென்னை மாநகரத்தில் திடீர் திடீரென முளைத்திருந்தது "வீரத்தமிழ் மகன்" முத்துக்குமார் நினைவஞ்சலி போஸ்டர்கள்.  நினைவேந்தல் நிகழ்ச்சியில் சத்தியராஜ் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வேறு அள்ளி தெளிக்கப்பட்டு இருந்தது!

தோழன் முத்துக்குமரன், இலங்கையில் நடைபெற்று வந்த போரை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கையோடு, தன்னை தானே எரியூட்டி இறந்துபோன இளைஞர்.  அவரது "வீரத்தையும்" "தியாகத்தையும்" மெச்சி விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சீமான் கொளத்தூர் மணி போன்றோரும் நேரடியாக அஞ்சலி செலுத்தி அவரை கவுரவித்தனர்!  முத்துக்குமாரின் மரணம் ஒரு புதிய எழுச்சி அலையை ஏற்படுத்தியது தமிழகத்தில்.  அது போன்ற "வீரத்துக்கான" பாராட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் காரணங்களுக்காக தியாகம் செய்வது ஒரு வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று.  இன்று நேற்று அல்ல, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படியான தியாகங்கள் போற்றப்பட்டு வருகின்றன.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது தமிழுக்காக உயிர்கொடுத்த மொழிப்போர் தியாகிகள் அரசாங்கத்தாலேயே வருடாவருடம் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.  அதில் ஒரு நியாயம் இருக்கிறது.  எங்கே எமது மொழி அடியோடு அழிந்து போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் காரணமாக போர்முனையில் இறந்தவர்கள், மற்றும் தங்களை தாங்களே உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்பவர்கள் எல்லோரையும் பாராட்டுவது என்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் புரூக்கிளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் உயிரை கொடுத்தாவது அந்த மாமனிதன் உயிர்பெற வேண்டும் என்கிற அளவிலே தங்களை தாங்களே எரியூட்டி கொண்டு இறந்தவர்கள் அநேகம் பேர்.   அது தியாகமோ, வீரமோ அல்ல என்பது எனது கருத்து.  அது ஒரு மனிதன் மீதான அபிமானத்தில் எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான முடிவு.  எனினும் அது குற்றச்சாட்டுக்கு உரிய சங்கதியாக இருந்திருக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கியபோதும், ஜெயலலிதா கைது செய்யப்பட போதும், ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியுற்ற போதும் அதிமுக தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது ஒரு அரசியல் கட்சி தொண்டர் தன தலைமை மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை / விசுவாசத்தின் வெளிப்பாடு.

திமுகவில் இருந்து வெளியேறவேண்டிய சூழல் வைகோவுக்கு ஏற்பட்டபோது, இடிமழை சங்கர் உட்பட ஐவர் தற்கொலை செய்துகொண்டனர்.  அதுவும் தனது நம்பிக்கைக்குரிய தளபதியின் நிலை கண்ட அதிர்ச்சியை வெளிப்படுத்தும் முகமான ஒரு தொண்டனின் உணர்ச்சிவசப்பட்ட முடிவு தான்.  தனி இயக்கம் தொடங்க முதல் புள்ளி வைத்தது அந்த தற்கொலைகள்.  முதல் மூன்று ஆண்டுகள் அந்த தற்கொலைகள் போற்றப்பட்டு பின்னர் மறக்கப்பட்டது.  சமூகம் சார்ந்த தியாகங்கலாக அவை ஒரு போதும் பார்க்கப்படவில்லை.

பொதுவாக, இந்தியாவில் தற்கொலை என்பது கைதுக்குரிய கடுமையான குற்றம்.  அப்படியான தற்கொலைகளை ஆதரிப்பது / அங்கீகரிப்பது என்பது பிறரையும் அது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட தூண்டும் என்பதால், அப்படி ஆதரிப்போர் / அன்கீகரிப்போர் தற்கொலைக்கு தூடுதலாக இருந்ததாக கருதப்பட்டு நடவடிக்கைக்கும் உரியவர் ஆகின்றனர்.

எனினும், சில அரசியல் இயக்கங்கள் மட்டும் எதற்காகவோ, சமூகம் சாராத தற்கொலைகளை நியாயப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

அப்படி அங்கீகரிப்பது ஒரு புறம்... ஆனால் அவற்றுக்கு வீரம், தியாகம் என்றெல்லாம் பெயர் சூட்டி புளகாங்கிதம் அடைவது சகிக்க முடியவில்லை.

நாகை பள்ளி குழந்தைகள் இறந்த சம்பவத்தில் ஆசிரியை சுகந்தி நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை காப்பாற்றி இறுதிவரை போராடி உயிர்விட்டாரே... அதை வீரம் என்றோ, தியாகம் என்றோ அங்கீகரிக்க எந்த அரசியல் வாதிக்கும் மனமில்லை.  காரணம் அந்த "தியாகம்" ஓட்டுக்கள் பெற்று தராது!

இப்படியான தமிழக சூழலில் எது தியாகம் என்கிற தெளிவு யாருக்கேனும் பிறந்தால் தெரிவியுங்களேன்... தெளிவுறுகிறேன்!

Monday, January 25, 2010

சுகந்திக்கு அண்ணா விருது!

நாகை மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் பள்ளி குழந்தைகளுடன் போராடி மரித்த ஆசிரியை சுகந்தி பற்றி அறிந்திருப்பீர்கள்!

அந்த சம்பவம் பற்றி காண இங்கே  சொடுக்கவும் .  அந்த சின்ன பெண்ணின் வீரத்தை மெச்சி புளகாங்கிதம் அடைந்த தமிழகம்.. அவரது குடும்பத்தினருக்கு வீடும், நஷ்டஈடும், நினைவு சின்னமும் அறிவித்து பெருமை பெற்றது.

விபத்து நடைபெற்ற விஷயம் - சுகந்தி பற்றிய குறிப்புக்கள் - இணையத்தில் உலவ விட்ட மறு நாளே அரசு சார்பில் தொடர்பு கொண்ட ஓர் உயர் அதிகாரி, சுகந்திக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்து இருந்தார்.  இது குறித்தும் விபத்துக்கு  பின் என்கிற எனது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

இப்போது வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், சுகந்திக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வந்திருக்கிறது என்றாலும், அரசு அப்படி ஒரு விருதை கொடுத்து அவரை கவுரவிக்கும் என்கிற உத்திரவாதத்தை ஏற்கனவே நான் பெற்று இருந்தேன்.  சொன்னதை செய்தும் காட்டி இருக்கிறது அரசு.

தமிழகத்தின் வீரம் இன்னும் ஒருமோரை அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது...

கண்ணீர் துளிகளோடு அஞ்சலி... அந்த ஆசிரியைக்கும்... அவருடன் மறைந்த குழந்தைகளுக்கும்!

Monday, January 18, 2010

தேதிக்காக காத்திருக்கும் ரயில்வே!தமிழகத்தில் பல பல ரயில் திட்டங்கள் ஒரு வழியாக நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறன.  அவை பயன்பாட்டுக்கு வரும்போது தான் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் பல திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.  ஆனால் வித்தியாசமாக சில விஷயங்களையும் நான் அறிய நேர்ந்தது... அது உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக!

முழுமையாக பணிகள் முடிவடைந்தும் வி.ஐ.பிக்களின் தேதிக்காக காத்திருக்கும் இரண்டு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை மார்க்கம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று இப்போது முடிவும் பெற்று விட்டது.  மெயின் லைன் என்று சொல்லப்படும் அந்த வழி தடம் மிக மிக முக்கியமான நகரங்கள் வழியாக பயணித்து, சென்னைக்கும், தேன் மாவட்ட நகரங்களுக்கு நேரடி இணைப்பை தந்து கொண்டு இருக்கிறது. 

அகல ரயில் பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றன அந்த நான்கு மாவட்டங்களும்!  இந்நிலையில் பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமாலேயே காத்து கிடக்கிறது புதிய ரயில் பாதை.  இப்போதைக்கு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகள் ரயில் "முறையான" துவக்க விழாவுக்கு பின் பயணிக்கும்!

அதேபோல, விழுப்புரம் - திருச்சி பாதை மின் மாயம் ஆக்கப்பட்டு சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனினும், பயணிகள் ரயில் போக்குவரத்து வி.ஐ.பிக்களால் முறையாக துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது!

தேதிக்காக ரயில்வே காத்திருப்பதால் மக்களுக்கு திட்டங்கள் காத்து கிடக்கிறது. 

Printfriendly