Sunday, April 15, 2018

ஜெ திராவிட தலைவரா ?

ஜெ திராவிட தலைவரா என்று ஒரு விவாதம்.

இதில் என்ன சந்தேகம் என தெரியவில்லை. ஜெ. நிச்சயமாக திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவர்தான். குழப்பமே வேண்டாம்.

அவர் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அவரை திராவிட தலைவர் அல்ல என வாதிடுவோர் நீதிக்கட்சி பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும். இனத்தின் அடிப்படையில் அல்ல. உணர்வின் அடிப்படையிலேயே அவரது திராவிடத்துவம் தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட இயக்க உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகளுள் சிலவற்றையேனும் செய்ய முனைந்தவர்கள், அவர்கள் எவ்வினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் திராவிட இயக்கத்தின் தலைவர்களே.

***

திராவிட கொள்கைகளுள் சமூக நீதியும் ஒன்று. எல்லா இனத்தவர்க்கும் சம உரிமை.. சமத்துவம்.. எல்லாவர்க்கும் கல்வி வழங்குவதற்கான வசதிகள்..அதற்கான சட்டங்கள் என சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமையை, அவர்களுக்கு வழங்கி அவர்களையும் எல்லோரையும் போல சமூகத்தில் உயரிய இடத்தை அடைய செய்வதும் திராவிட கொள்கையே.

ஆதிக்க இனத்தினரின் அழுத்தங்களையும் மீறி, அவர்களில் ஒருவராக இருந்தும் அதை புறக்கணித்த்ய், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காக போராடி 69% இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்ததுடன், அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பும் பெற்று தந்த ஜெ.வை எப்படி திராவிட தலைவர் அல்ல என சொல்ல முடியும்?

திராவிட உணர்வை.. பெரியாரின் அண்ணாவின் கனவுகளை.. நனவாக்கும்  எவரும் பெரியாரிஸ்டுகளே!

விழுப்புரம் கூட்டத்தில் ஜெ ஒருமுறை சொன்னதுபோல 'இது பெரியாரின் புண்ணிய பூமி.. அவரது வழி வந்தவர்கள் மட்டுமே ஆள உரிமை கொண்ட இடம்'. இதை சொல்லி முழங்கும்போது அவரது இனம் நமக்கு ஞாபகம் வருவதில்லை. அவரது உணர்வு தான் ஞாபகம் வருகிறது. அது திராவிட உணர்வு. பெரியாரியலில் ஊறிய உணர்வு.

இது ஒன்றே போதும்.. புரட்சித்தலைவி ஜெயலலிதா திராவிட தலைவர்களுள் முக்கியமானவர்.. பெரியாரின் வழிவந்தவர் என சொல்வதற்கு.

ஏழைப்பெண்களின் திருமணம், பெண்ணுரிமை போற்றும் ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தைகள், பாலூட்ட தனி அறை, விதவை மறுமணத்துக்கான உதவி என பெண்ணியம் சார்ந்த திட்டங்கள் ஆகட்டும்

தொழில் கல்வி கிராம வளர்ச்சி என சமூக நலன் சார்ந்த பிற திட்டங்கள் ஆகட்டும்

பெரியாரின் பார்வையில் பெரியாரின் சிந்தனையில் தான் செயல்பட்டு வந்திருப்பதாக உணர்கிறேன்!

என்னளவில் ஜெ திராவிட தலைவரே. ஐயமில்லை!

என்ன செய்தது திராவிடம்?

இன்று நண்பருடன் சிறு உரையாடல்

திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது? அதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதும் அதே ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது? என உண்மையான வருத்தத்தோடே கேட்டார். அவர் உயர்வகுப்பை சேர்ந்தவர் (ஆம் அதே தான் 😝) ஆனாலும் அவரது கேள்வியில் உண்மையான வேதனை இருந்தது

ரவா கிச்சடி சாப்பிட்டபடியே பேசினேன்.. சுருக்கமாக

"நீங்க இப்போ என்ன வேலை செய்கிறீர்கள்னு சொல்லமுடியுமா?" நான்

"சென்னையில் ஒரு கம்பெனியில் தலைமை எஞ்சினியர்" அவர் (இனி உரையாடலாக புரிந்துகொள்ளவும்)

"உங்களுடன் பணிபுரிவோர்....??."

"பல தரப்பட்டவர்கள்.. பல இனத்தவர்..குலத்தவர்.."

"அவர்களோடு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?"

"இல்லவே இல்லை.. அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அவர்களோடு சகஜமாக பழகுகிறேன்.. அவ்வளவு ஏன்.. அவர்களோடு உணவை பகிர்ந்துகொள்ளுகிறேன்.. அவர்களது டிபன்பாக்ஸையே எடுத்து சாப்பிடுவேன்.. (வெஜிட்டேரியன் ஐட்டம்சாக இருந்தால் மட்டும்)"

"உங்களுக்கு எப்படி எல்லோரும் சமம் என்கிற உணர்வு வந்தது?"

"அது எனது கல்வியினால் வந்த மெச்சூரிட்டி"

"ஏன் வட மாநிலங்களில் கல்வி கற்றவர்களுக்கே கூட இந்த மெச்சூரிட்டி வரவில்லை?"

"......."

"சரி அதை விடுங்கள். உங்களுக்கான தொழில்களை விட்டுவிட்டு நீங்கள் எஞ்சினியரிங் படிக்க விரும்பியதும்.. உங்களுடன் பணிபுரியும் அந்த ஒடுக்கப்பட்டோர் எஞ்சினியரிங் படித்து உங்களுக்கு சமமாக வந்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?"

"இது சமுதாய வளர்ச்சியின் பரிணாம வெளிப்பாடு. சமூக வளர்ச்சியும் நாகரீகமும் வளர வளர நாங்களும் பிற துறைகளில் கால்பதித்து வென்றோம். அவர்களும் மெல்ல எல்லா துறைகளிலும் முன்னேறினர். இது கால மாற்றம். இதில் என்ன ஸ்பெஷல்?"

"இதே சமுதாய முன்னேற்றம்.. நாகரீக யுகம் வடக்கிலும் உள்ளதே? பிறகும் ஏன் ஒடுக்கப்பட்டவர்களால் அவர்கள் விரும்பிய கல்வியை படிக்க முடியவில்லை? தென்கோடியில் மட்டும் எப்படி அது சாத்தியமானது? அவர்களது வளர்ச்சி உங்களுக்கு எந்த உறுத்தலையும் தராத அளவுக்கு உங்களுக்கு மன முதிர்ச்சி வந்திருக்கிறது. ஆனால் உங்களை சார்ந்தவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் அந்த முதிர்ச்சி வரவில்லை?"

"இங்கு அடிப்படி கல்வியில் இருந்தே அந்த சமதர்மம் பாடமாக இருக்கிறது. வடக்கில் எப்படி என தெரியவில்லை"

"அது தான் திராவிடம் தந்த பெரும் மாற்றம்... "

நான் முடித்துவிட்டேன்

உணவையும் உரையாடலையும்

அவர் என்னுடன் காரில் வரும்பொழுது நிறைய பேசினார். இப்போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. உற்சாகமாக இருந்தார். திராவிட இயக்கம் பற்றி நிறைய படிக்கப்போவதாக சொன்னார். ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தும் தென் மாநிலங்களில் மட்டும் இந்த மெச்சூரிட்டியும் சகிப்புத்தன்மையும் எல்லோருக்குள்ளும் வந்திருப்பதன் தாத்பர்யத்தை விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். திராவிடம் சத்தமில்லாமல் மிக பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்வதாக சொன்னார். இன்னும் இன்னும் நிறைய பேசினார்.. வழி நெடுக நீண்ட பயணத்தில்..

சந்தோஷமாக இருந்தது.

ஒரு சாதாரண உரையாடல் பத்து நிமிடத்துக்குள் இத்தனை மாற்றத்தை தரும் என நானே கூட நினைத்துப்பார்க்கவில்லை

ரவா கிச்சடி மிகவும் சக்திவாய்ந்தது !

Wednesday, April 11, 2018

மோஹன் தாஸா? மோஹன் லாலா?

பிரதமரின் டங் ஸ்லிப்கள் பிரசித்தம். அதிலும் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் 'டங் ஸ்லிப்'பாக சொல்வதில் அவர் கில்லி

எடப்பாடி ஸ்டாலின் எல்லாம் ஒரே விஷயத்தில் மீண்டும் மீண்டும் ஸ்லிப் ஆகும் அளவுக்கு இன்னும் தரம் தாழலை

மஹாத்மா காந்தியை 'மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி' என சொல்வதற்கு பதிலாக ஒவ்வொரு தடவையும் "மோஹன்லால்" கரம்சந்த் காந்தி என்றே சொல்லி வருகிறார் நம் பிரதமர்.


அவர் சார்ந்த இயக்கத்தை பொறுத்தவரை காந்தி ஆகாதவராக இருந்தாலும், அவர் இப்போது பிரதமராக இருப்பதால் அவர் மரபுகளையும் மரியாதைகளையும் மீறாமல் இருக்கவேண்டும் என்பது தான் முறை.

ஒரு முறை தவறினாலே திருத்திக்கொள்ளும் நம் தலைவர்கள் மத்தியில் பலமுறையாக ஒரே தவறை செய்து வரும் பிரதமரின் செயல் எதேச்சையானதா தெளிவாக செய்ததா என்பது விவாதிக்கவேண்டிய விஷயம்

அல்லது அவரது இயல்பான ஆர்வமான சினிமா மீது கொண்ட தீராத காதலின் காரணமாக, சினிமா பிரபலங்கள் மீதான அதீத ஆர்வம் காரணமாகக்கூட மோஹந்தாஸ் என சொல்ல வருகையில் மோஹன்லால் என சொல்லி இருக்கலாம்.

எது எப்படியோ, பிரதமர் பதவிக்கு என உள்ள ஒரு மரியாதையை அவர் இனியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது எல்லோருடைய ஆவல்

ஸ்டாலின் எடப்பாடி போன்றோருக்கு எதேச்சையாக டங் ஸ்லிப் ஆகி உடனே அடுத்த செகண்டே அதை திருத்தி சொன்னாலும் கூட எள்ளி நகையாடி கைகொட்டி சிரித்து கேலி செய்து பதிவுகள் இட்ட நடுநிலை நண்பர்கள் பிரதமரின் விஷயமாக மௌனம் காப்பது ஏன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டும் என்றில்லை. அவர்களது மனநிலை என்ன என்பதை இங்குள்ளோரும், மக்களும், நன்கு அறிவார்கள்!

பிரதமர் பீஹாரில் பேசிய லேட்டஸ்ட் வீடியோ.. இதோ இந்த ட்வீட்டில்

https://twitter.com/GauravPandhi/status/983752677116010496

Tuesday, April 10, 2018

காவிரி - ஸ்கீம் - விளக்கம்

உச்சநீதிமன்றம் நேற்று கொடுத்திருக்கும் விளக்கம் என்னை (விளக்கெண்ணெய் என தப்பா படிச்சா கம்பெனி பொறுப்பல்ல 😝) மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு தான் வழக்கின் சாரம்சமே. அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி அதை அமல்ப்படுத்த வேண்டியது தான் பாக்கி.

சரி, நடுவர் மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது? நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பு காவிரி விவகாரத்தின் முழுமையான ஆவணம். இதுவரை நடந்தது என்ன? எத்தனை பேச்சுவார்த்தை நடந்தது? ஒப்பந்தத்தை மீறி அதிகரிக்கப்பட்ட பாசன பரப்புக்கள், கூடுதல் அணைகள் என்னென்ன? ஒவ்வொரு பகுதியிலுமான சராசரி மழை அளவு. ஒவ்வொரு மாநிலத்தின் நீர் தேவை. என எல்லா விதமான ஆய்வுகளையும் விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்து அதன் அடிப்படையில் இனி பேச்சுவார்த்தையோ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் அணையோ சாத்தியமில்லை என்பதற்கு தகுந்த காரணிகளையும் பதிவு செய்திருக்கிறது.

இதற்கு தீர்வாக சொல்லப்பட்ட ஸ்கீம் பற்றியும் விரிவாக ஸ்டெப் பை ஸ்டெப் புரசீஜர்ஸ் நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதாவது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். அதில் உரிய நபர்களை உள்ளடக்கிய ஒரு குழு (மத்திய மாநில அரசு அதிகாரிகள் & மாநில பிரதிநிதிகள்) அமைத்து அவர்களது பொறுப்பில் எல்லா அணைகளையும் கொடுக்கவேண்டும்.

மாதாமாதம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நீர் கொடுக்கவேண்டும் என நடுவர் மன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. அதன் அடிப்படையில் முறையாக நீர் திறந்துவிடும் கடமை காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு. அதற்கு தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் மத்திய அரசு செய்யவேண்டும்.

இது தான் அந்த ஸ்கீம். இந்த ஸ்கீமின் ஒரு பகுதி தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது.

இத்தனை விளக்கமாக நடுவர் மன்ற தீர்ப்பு இருந்தும் அதை படிக்காமல், ஸ்கீமுக்கான விளக்கம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல.

ஆனால் அந்த நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என கர்னாடக அரசு பிடிவாதம் பிடித்ததால் தான் உச்சநீதிமன்றம் சென்றோம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் விரிவாக மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பாமல் சுருக்கமாக 'நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை. அந்த ஸ்கீமை செயல்படுத்த ஆறுவார காலம் மத்திய அரசுக்கு கெடு' என சிம்பிளாக முடித்து விட்டது. மத்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும்? நடுவர் மன்ற தீர்ப்பை எடுத்து படித்து பார்த்து அதில் சொன்னபடி செயல்பட ஆரம்பித்து இருக்கவேண்டும். ஆனால் அதை படிக்காமல் காலத்தை கடத்த விளக்கம் கேட்டு குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆறு வாரம் கழிச்சு ஸ்கீம்னா இன்னா? என ஒரு விளக்கம் கேட்டு அதற்கு நேற்று உச்சநீதிமன்றம் விளக்கமும் தந்திருக்கிறது

அதாவது CMB அமைத்து நீர் திறந்துவிடும் திட்ட அறிக்கை தயாரித்து மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமித்து அணையின் மேலாண்மை பொறுப்பை நிறைவேற்றுவது.

இதை தான் நடுவர் மன்றம் விரிவாக தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அமல்ப்படுத்த தானே ஆறுவாரம் அவகாசம்.

திரும்பவும் எல்.கே.ஜி குழந்தை போல் சந்தேகம் கேட்பதும் நடுவர் மன்ற தீர்ப்பையே மீண்டும் வாசித்து காட்டுவதும் தமிழகத்தை கேலிக்குள்ளாக்குவதும் நேரம் கடத்துவதுமே அன்றி வேறில்லை

இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் இன்னொன்று உள்ளது.

மத்திய அரசு தனது மனுவில் "தீர்ப்பை செயல்படுத்த தனக்குள்ள பிரச்சனைகள் இருப்பதால்.." என மேம்போக்காக சொல்லி இருக்கிறது. அது என்ன பிரச்சனை? தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மனமில்லையா? நடுவர் மன்ற தீர்ப்பை அமல்ப்படுத்தி கர்னாடக மக்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம் என நினைக்கிறதா? கர்னாடக தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறதா? என்றெல்லாம் விரிவாக சொல்லாமல் மொட்டையாக பிரச்சனைகள் என சொல்லி இருக்கிறது. இதை தான் நாம் இப்போது கேள்வி கேட்கவேண்டும். தீர்ப்பை அமல்ப்படுத்துவதில் தமிழகத்துக்கு நீதி வழங்குவதில் பாஜகவுக்கு என்ன பிரச்சனை என்பதை விளக்க சொல்லி கேட்பது தமிழகத்தின் தமிழக மக்களின் கடமையும் கூட

முன்பை விட பாஜக மீது அதீத வெறுப்பை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது இவ்விளக்கம்

Sunday, April 8, 2018

காவிரி - பேச்சுவார்த்தை சாத்தியமா?

கேப்டன் நேற்று "கர்னாடக அரசுக்கு ராகுல் மூலம் அழுத்தம் தந்து காவிரி விவகாரத்தை தீர்க்கவேண்டும்" என்கிற ரீதியில் பேசி இருப்பதை 'சிலர் மட்டும்' ஆகா ஓகோ என புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் பிரச்சனை இப்போது மத்திய அரசின் கையில் இருக்கிறது. கர்னாடக அரசின் கையில் அல்ல. இந்த அடிப்படை கூட இங்கே பலருக்கும் புரியவில்லை.

இதில் கூடுதலாக திமுக/அதிமுக காவிரிக்காக எதையுமே செய்யவில்லை என்கிற உளறல் வேறு.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் பேச்சுவார்த்தை, சட்ட போராட்டங்கள் என போராடி வந்ததை அறியாதவர் எவரும் தமிழகத்தில் இல்லை.

பாசனபரப்பு அதிகரித்தல், கூடுதல் வாய்க்கால்கள் அமைத்தல், அணைகள் என தமிழக ஒப்பந்தத்துக்கு எதிராக கர்நாடக அரசு நடந்து அதை எதிர்த்து ஜெ & முக இருவர் ஆட்சியிலும் பல வழக்குகள் பதிந்து பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்றது.

திமுக மத்திய விபி சிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் நடுவர் மன்றம் அமைந்தது.

நடுவர் மன்றம் முழுமையாக விசாரித்து விரிவான தீர்ப்பு கொடுத்தபின் அதை அரசிதழில் வெளியிட ஜெ அரும்பாடு பட்டு ஜெயித்தார்.

இப்படி திராவிட இயக்கங்களின் தொடர் சட்ட போராட்டங்களின் காரணமாகவே தமிழகத்துக்கு சாதகமான இறுதி தீர்ப்பு வந்தது

இதன் படி, CMB அமைத்து அவர்களது கட்டுப்பாட்டில் நீர் திறப்பு/தேக்கம் ஆகியவை ஒப்படைக்க வேண்டும். அது நடுவர் மன்ற தீர்ப்பின் படி நீரை திறந்து விடும்.

மத்திய அரசு இந்த CMB அமைத்தால் மட்டும் போதும். மற்றவற்றை அதுவே பார்த்துக்கொள்ளும். அதற்கான அதிகாரத்தை Tribunal & SC அதற்கு கொடுத்து இருக்கிறது

எனவே இனியும் பூசி மெழுகி மழுப்பாமல், சட்டப்படி தமிழகத்துக்கு சேரவேண்டிய உரிமையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதை வலியுறுத்துவதை தவிர வேறு எதை சொன்னாலும் அது சரியல்ல. ஒவ்வொரு மனசாட்சியுள்ள மனிதனும் இனியும் தாமதப்படுத்தாமல் ம.அரசு தனது கடமையை செய்யவேண்டும் என்றே விரும்புவான்

---------

பிற்சேர்க்கை:

இது தொடர்பான சில கேள்விகள் பிறிதொரு இடத்தில் கேட்கப்பட்டு அதற்கான எனது பதிகள்

கே: அரசு அரசியல்வாதிகள் சட்டம் எல்லாம் தேவையில்லை. இரு மாநில விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளலாமே?

ப: விவசாயிகள், அரசு, கட்சிகள், சட்டம், நீதிமன்றம் என அனைத்து முறைகளிலான பேச்சுவார்த்தைகளும் சட்ட போராட்டங்களும் நடந்து முடிந்து இறுதியாக தான் நடுவர்மன்றமும் அதன் தீர்ப்பும் வந்திருக்கிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய நிலையில் தமிழகம் இல்லை

கே: வி.பி.சிங்குக்கு கொடுத்தது போல ஏன் மன்மோகன்சிங்குக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?

ப: மன்மோகன் சிங் காலத்தில் தான் நடுவர் மன்ற தீர்ப்பு அமல்ப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுத்து அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து கர்னாடக அரசு வழக்கு தொடுத்து அந்த வழக்கு விரிவாக நடந்து அதற்கான தீர்ப்பு தான் இப்பொப்து பிப்ரவரியில் வந்திருக்கிறது

கே: CMB அமைக்கப்பட்ட பிறகும் மாநிலங்கள் அதற்கு பணியவில்லை என்றால்?

ப: CMB க்கு மாநிலங்கள் பணிய வேண்டும் என்று இல்லை. CMB யிடம் அணைகளின் பொறுப்பை மத்திய அரசு கொடுத்துவிடும். நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை முறைவைத்து திறந்துவிட வேண்டியது அதன் பொறுப்பு. CMB முறையாக செயல்படுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் மத்திய நீர்வளத்துறை மூலம் மத்திய அரசே செய்யவேண்டும். (இந்த நிலைக்கு நடுவர் மன்றம் வர காரணமே இது வரையும் வந்த எந்த தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்காமல் நடந்துகொண்டது தான். ஒவ்வொரு முறையும் எதிர்த்து எதிர்த்து வழக்கிட்டு வழக்கிட்டு தாமதப்படுத்திக்கொண்டே வந்தது. நாமும் அதை எதிர்த்து நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி தான் இந்த தீர்ப்பை பெற்று இருக்கிறோம்)

கே: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வந்திருக்காதே?

ப: மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்காக அப்போது இருந்த அதே காரணங்கள் இப்போதும் இருக்கின்றன. அதற்கும் நீர் பங்கீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Wednesday, March 28, 2018

இளையராஜாவும் ஏசு உயிர்த்தெழுதலும்

ஏசு உயிர்த்தெழுந்தது கற்பனையே அறிவியல் பூர்வமான ஆய்வோ ஆதாரமோ இல்லை என இளையராஜா குறிப்பிட்டத்தில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.எப்படி ராமன், கிருஷ்ணன், முருகன் போன்ற இறை நிலையில் வைத்து பார்க்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்கள் (உதாரணமாக: பேசும் ஜடாயு, பறக்கும் வானரப்படை, சங்கு சக்கரத்தால் சூரியனை மறைய செய்தல் பொன்ற பல நூறு சம்பவங்களை சொல்லலாம்) நம்பமுடியாதவையாகவும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகவும் இருக்கிறதோ அதைப்போலவே நான் ஏசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களையும் நான் பார்க்கிறேன்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களது வாழ்க்கை கதையில் கூட இப்படியான சம்பவங்கள் சில உள்ளன. உமறு புலவரே கூட அதை சொல்லி இருக்கிறார்.

புத்தர், மஹாவீரர் என யாரும் இதில் விதிவிலக்கல்ல.

கதைகள் சொல்லப்பட்டபொழுது அந்த கதையின் சுவாரஸ்யத்துக்காக சில மிகைப்படுத்தல்கள் வருவது இயல்புதான்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி அவர்களது வாழ்க்கை பற்றி சொல்லும்பொழுது கூட சில சம்பவங்கள் இயல்பை மீறி மிகைப்படுத்தலோடு விவரிக்கப்பட்டதை நான் கேட்டுள்ளேன். அது அவர்களது ஆளுமையை அதீத உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறை. அவ்வளவே.

சில நூற்றாண்டுகள் கழித்து 'ஸ்டாலின் சொடக்குப்போட்டால் கவிழ்ந்துவிடக்கூடிய ஆட்சியாக எடப்பாடியின் ஆட்சி நடைபெற்றது' என சொல்லப்பட்டு அதுவும் நம்பப்பட்டு வரலாறாகவே கூட ஆகும் வாய்ப்பு இருக்கிறது

எனவே ஒரு விஷயத்தை பற்றிய அதீதங்கள் இருந்தாலும் கூட அதை நாம் மென்மையாக புறக்கணித்துவிட்டு சொல்லவரும் விஷயங்கள் என்ன என்பதை மட்டும் கவனிப்பது நல்லது.

கீதோபதேசம் நடைபெற்ற சூழல் நடைபெற்ற விதம் அது தூரே இருக்கும் திருதிராஷ்டினனுக்கு சஞ்சயன் வழியாக நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்டது என்கிற செய்தி ஆகியவை எல்லாம் நம்பத்தக்கது அல்ல.. நம் இளையராஜா அவர்கள் குறிப்பிடுவது போல அறிவியல்பூர்வமானதோ ஆய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்ல.. எனினும் கீதையின் மூலம் கிருஷ்ணன் எனும் பாத்திரம் சொல்ல வரும் செய்தி என்ன என்பதில் மட்டுமே நமது கவனம் இருக்கவேண்டும். அது நல்ல கருத்துக்கள் உடையது எனில் அதை நம் வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் எனது புரிதல்.

அதை விடுத்து அதெப்படி சஞ்செயன் நேரடி ஒளிபரப்பு செய்தார்? இதெல்லாம் என்ன நம்புறமாதிரியா இருக்கு? என எள்ளி நகையாடுவதை விடுத்து அதையும் நம்பும் அளவுக்கு தான் நாம் பலருக்கு கல்வித்தரத்தை கொடுத்திருக்கிறோம் என நினைத்து அதை மேம்படுத்த முனைவதில்லையா? அதைப்போலவே எல்லாவற்றையும் கருத வேண்டும்

இளையராஜா சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லா மத கதைகளிலும் இருப்பது தான் அது. ஆனால் அதை குறிப்பான குற்றச்சாட்டாக வைப்பது சரியல்ல. அப்படி எனில் எல்லா மதத்திலும் இருக்கும் அதுபோன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத அனைத்து சம்பவங்களையும் அவர் சாடி இருக்கவேண்டும். சாடுவார் என எதிர்பார்க்கிறேன்.

என்னதான் ஆன்மீகத்தில் அமிழ முயன்றாலும் அடிப்படையாகவே அவர் மனதில் கொலுவிருக்கும் அந்த கம்யூனிசமும் பகுத்தறிவும் இன்னமும் உயிர்த்திருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி

மெல்ல பகுத்தறிவு பாதைக்கே மீண்டு(ம்) வருவார் என நம்புகிறேன்!

Tuesday, March 20, 2018

பாஜக ஆட்சியின் காரணிகள்

பாஜக கடந்த 2014 ல் ஆட்சிக்கு வர காரணம் பொருளாதார காரணங்களே தவிர ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை. ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை (!). வேலை வாய்ப்பின்மை பொருளாதார சீர்கேடு ஆகிய காரணங்களால் தான் காங்கிரசை மக்கள் எதிர்த்தனர் என்றொரு திடீர் புத்திசாலித்தன பதிவுகள் வர தொடங்கி இருக்கிறது..

ஊழல் இந்திய தேர்தலில் மிக முக்கிய காரணி

உதாரணம் 2ஜி. அது ஊழலே அல்ல. ஆனால் பாஜக அதை ஊழல் என ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் மீது மிகப்பெரிய பழியை போட்டது. மக்கள் அதை முழுமையாக நம்பி வாக்களித்தனர். (இப்போது அது ஊழல் இல்லை என்பதும் வினோத் ராயை வைத்து பாஜக ஆடிய நாடகம் என்பதும் மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும் கறை கறை தான்)

மாநில அளவிலும் கூட, 1996 தேர்தலில் ஜெ தோற்க ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம். 2011 தேர்தலில் திமுக தோற்கவும் ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம்..

கடந்த 2014 தேர்தலை பொறுத்தவரை பாஜக ஜெயித்ததற்கு முக்கிய காரணங்கள்:

1. பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களால் காங்கிரசை Character Assassination செய்ததோடு தாங்கள் வந்தால் ஊழலற்ற ஆட்சி தருவோம் என வாக்களித்தது (உண்மையில் காங்கிரசை விட அதிக ஊழல்களும் முறைகேடுகளும் இப்போதைய ஆட்சியில் நடப்பது நாம் அறிந்ததே. உம். ரஃபேல்)

2. பாஜகவின் அஜெண்டாக்களுக்கு (ராமர் கோவில், காமன் சிவில் கோடு போன்றவை) அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்த பிரச்சாரம். இவை வட இந்தியாவில் இனியும் நன்றாக எடுபடும். தென்னிந்தியா சட்டை செய்யாது

3. கருப்பு பணத்தை 100 நாளில் மீட்பேன், கார்ப்பரேட் ஊழல்வாதிகளை ஒடுக்குவேன் என மாநிலத்துக்கு மாநிலம் விதம் விதமாக கொடுத்த வாக்குறுதிகள் (கார்ப்பரேட்  ஊழல்களின் பொற்காலம் இது என்பதும் குற்றவாளிகள் அரசு ஆதரவோடே வெளிநாடு சென்று பாதுகாப்பாக இருப்பதும் நீங்கள் அறிந்ததே)

மற்றபடி வேலைவாய்ப்பை வைத்தெல்லாம் ஆட்சியை மக்கள் தீர்மானிப்பதில்லை. அப்படி பார்த்தால் சிறு குறு தொழில்கள் 23% இழுத்து மூடப்பட்டு இருக்கிறதே இந்த ஒரே ஆண்டில்? அதற்காக பாஜக தோற்கடிக்கப்படும் என்கிறீர்களா? பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள இந்நிலையில் ஏற்றுமதி முடங்கிவிட்ட சூழலில் அதெல்லாம் பாஜகவை பாதிக்கும் என நம்புகிறீர்களா என்ன?

உண்மையில் பொருளாதார நிலையை பார்த்தால், 2005-2014 மிக பிரமாதமாக இருந்ததும் 2014 க்கு பின் அதள பாதாளத்தில் வீழ்ந்ததும் எல்லோருக்குமே தெரியும்

அதேபோல வேலைவாய்ப்பு தொழில்வளர்ச்சி ஏற்றுமதி ஆகியவையும் இப்போது பாஜக ஆட்சியில் தான் சரிந்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும். மூடப்பட்ட தொழில் நிறுவனங்களே அதற்கு சாட்சி

பாஜகவுக்கு தேவை 275 எம்.பிக்கள். அதை ராமர் கோவில், இந்துத்துவா, இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும், தலித்கள் ஒடுக்கப்படுவார்கள், காமன் சிவில் சட்டம் போன்ற வழக்கமான வாக்குறுதிகளை வைத்தே வட இந்தியாவிலேயே எடுத்துக்கொள்ள முடியும்.

தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கவலையில்லை.

அடுத்ததும் பாஜக ஆட்சி தான்

காரணம் பாஜகவை ஆதரிப்பவர்களின், அவர்களின் சிந்தனைத்திறனின் தரத்தின் டிசைன் அப்படி.

Printfriendly