Thursday, September 13, 2018

விநாயக சதுர்த்தியும் பெரியாரியலின் வெற்றியும்


ட்விட்டரில் பலரும் 'வீதிக்கு வீதி விநாயகர் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறதே. இது திராவிட இயக்கத்தின் பெரியாரியலின் தோல்வி அல்லவா?' என ஏளன பதிவுகள் இட்டிருப்பதை பார்க்க நேர்ந்தது.

எனக்கு ஏனோ சிரிப்பு சிரிப்பாக வந்தது.

உண்மையில் இது பெரியாரியலின் வெற்றி. எந்த வகையிலும் தோல்வியே அல்ல.

ஆலையங்களுக்குள் சென்று இறைவனை வழிபடவேண்டும் என்கிற விருப்பம் இருந்தும் ஆலையத்தினுள் நுழையமுடியாமல் தடுக்கப்பட்டு இருக்கும் சமூகம், ஆலையத்தினுள் நுழைந்து இறைவனை வழிபடுவதற்கான உரிமையை மீட்டெடுக்க போராடிய இயக்கம் திராவிட இயக்கம்.

இறை நம்பிக்கை நமக்கு இல்லை எனினும், இறை நம்பிக்கை உள்ளவர்களின் உரிமைக்காக போராடுவதே சமத்துவம். இதை தான் வைக்கம் போராட்டத்தின் மூலம் பெரியார் புரியவைத்தார்

அத்தகைய நிலையில் இருந்து, இன்று ஆலையத்துள் அடைந்து கிடந்த இறைவனை வீதிதோறும் கொண்டு வந்து இருத்தி எல்லோரையும் வழிபட வைத்திருப்பது உண்மையில் பெரியாரியலின் திராவிட பேரியக்கத்தின் மகத்தான வெற்றி அல்லவா?

இந்து சமய ஆலைய ஆகம விதிகளின் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இறை சிலைகள் தான் வழிபாட்டுக்குரியவை என்கிற தாத்பர்யங்களை எல்லாம் தூக்கி தூரப்போட்டு எந்த நிலையிலும், எந்த பொருளிலும், எந்த உருவிலும் சிலையாய் செய்து அதையும் தெய்வம் தான் எனச்சொல்லி வழிபட வைத்தது கூட இந்து சமய ஆகம விதிகளின் தளைகளை உடைத்துப்போட்ட ஒரு பகுத்தறிவு புரட்சி அல்லவா?

இந்து சமய கட்டுப்பாடுகளை அவர்களே உடைத்து எல்லோருக்கும் எல்லாமுமாய் இறைவனையும் இறங்கி வரவைத்தது பெரியாரியலின் திராவிட இயக்கங்களின் பெரு வெற்றியே!

இதில் மகிழ்ச்சி தான் எனக்கு!

Sunday, September 2, 2018

தமிழக அணைகள் - காமராஜரா கலைஞரா?

தமிழக அணைகள் பற்றிய துரைமுருகனின் பேட்டி ரெண்டு நாளாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.

காமராஜர் தான் அணைகள் கட்டி தமிழகத்தை காப்பாற்றியவர் என்கிற 'கட்டமைக்கப்பட்ட பொதுக்கருத்துக்கு' எதிரானதாக துரைமுருகனின் பேட்டி இப்போது பார்க்கப்படுகிறது.

உண்மையில் நாம் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காமராஜர் காலம் என்பது சுதந்திரம் கிடைத்தவுடனான காலம். நாம் எல்லாவற்றையும் புதிதாக ஏற்படுத்த வேண்டி இருந்தது. பிரதமர் நேருவின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான எல்லா நதிகளிலும் அணைகள் கட்டி நீர் சேமிப்பை செய்யவேண்டும் என்பதில் அனைத்து மாநில முதல்வர்களும் செயல்படுத்தினார்கள். அவர்களுள் காமராஜரும் ஒருவர்.

இரண்டாவதாக, அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். இப்போதைய தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் அனைத்துக்கும் அவர் தான் முதல்வர். ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. சுருக்கமாக சொல்வதானால் 'திராவிட நாடு'.

அதனால் இந்த பரப்பு முழுமையும் அணைகள் கட்டவேண்டிய பொறுப்பு மாநில முதல்வரான காமராஜர் அவர்களின் அடிப்படை கடமையானது.

இதை வைத்து பார்க்கையில்..

மாநில பிரிவினைக்கு பின்னர், 1967 க்கும் பின்னர், விடுபட்டிருந்த இடங்களை எல்லாம் கண்டு பிடித்து, இங்கெல்லாம் அணைகள் இருந்தால் தான் தமிழகம் செழிக்கும் என திட்டமிட்டு மாவட்டங்கள் தோறும் அணைகள் கட்டியதெல்லாம் திமுகவின் சாதனைகள் தான் என்பது தெளிவாக புரியும்.

அடிப்படை கட்டமைப்புக்களை ஏற்படுத்தியவர் நேரு. அதில் மாநில தேவைகளை நிறைவேற்றியது திராவிட இயக்கங்கள்.

இந்த அடிப்படையில் மீண்டும் துரைமுருகன் அவர்களது பேட்டியை பாருங்கள். உங்களுக்கே மலைப்பாக இருக்கும்.

Printfriendly