Saturday, October 7, 2017

ஜி.எஸ்.டி – குழப்பத்திலிருந்து சிக்கலுக்கு!

நேற்றைய தினம் நடந்த 22ஆம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சிறு / குறு தொழில் செய்வோரும் ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரும் படும் இன்னல்களை என்னைப்போன்றோர் நாயாய் பேயாய் கத்திய பின், இப்போது தான் அது அரசின் செவிகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் அவர்களுக்கெல்லாம் ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சந்தோஷம் வந்தாலும், அதெல்லாம் அந்த முடிவுகளை அலசி ஆராய்கையில் வடிந்துபோனது.

உண்மையில் சிறு குறு வணிகர்களுக்கும் ஏற்றுமதி செய்வோருக்கும் நல்லது செய்வதாக சொல்லி, கிட்டத்தட்ட பெரிய இடியை தான் இறக்கி இருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில்.

அத்தகைய இடிகளில் இருந்து சில குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்கள் இனி மாதம் தோறும் வரி செலுத்த தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தினால் போதும்:

இந்த அறிவிப்பு அவர்களுக்கான சலுகையாக பலராலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நானும் கூட முதலில் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள சிக்கல்களை பார்த்தபோது அவர்களை பற்றி பரிதாபப்படவே முடிந்தது.

தற்போது ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவோர் ரிவர்ஸ் சார்ஜ் (RCM) முறையில் வரியை அவர்கள் சார்பாக அடைக்கவேண்டும் என்கிற ஒரு நிபந்தனை இருப்பதால் பலரும் பதிவு செய்யப்படாத வணிகர்களை புறக்கணிக்க தொடங்கி அவர்களது தொழில் தேய்பிறையாகி வருவது நீங்கள் அறிந்ததே.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4 கோடி பேர் இருக்கலாம். இது குறைவாக இருக்கிறதே என அரசு சங்கடப்பட்டதோ என்னவோ, நேற்றைய தினம் புதிதாக மற்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அது தான் ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோருக்கு காலாண்டு வரி தாக்கல் முறை. இதில் என்ன பிரச்சனை?

ஜி.எஸ்.டியில் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை நாம் செலுத்தவேண்டிய வரிக்கு கழித்துக்கொள்ளலாம் (Set off). இது முன்பு போல மெனுவல் எண்டிரி ஆக அல்லாமல், ஆட்டோமாடிக் எண்டிரி ஆக ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது நமக்கு பொருட்களை விற்பவர் அந்த விவரங்களை (Outward Supplies) GSTR-1 ரிட்டர்னில் தாக்கல் செய்தால் தான் அது நமது GSTR-2 (Inward Supplies) ரிட்டர்னில் ஆடோமாடிக்காக வரும். அந்த வரியை நாம் எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.

நேற்று அரசு அறிவித்த புதிய விதியின் கீழ், நாம் பொருட்களை வாங்கிய வர்த்தகர் பதிவு பெற்றவராக இருந்தாலும், அவர் இப்போது போல மாதாமாதம் வரி தாக்கல் செய்ய தேவை இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

இதில் சிக்கல் என்னவென்றால், நாம் அப்படி பட்ட வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி இருந்தால், அவர்கள் வரி தாக்கல் செய்யும் வரை நமக்கு ITC கிடைக்காது. இது போன்ற வணிகர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, அதன் வரி வருவாய் கூடுதலாக இருந்தால், அதை நாம் உபயோகப்படுத்த 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை நமது வரியை நாம் பணம் கட்டி தான் செலுத்த வேண்டி இருக்கும்.

இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது உங்களால் ஊகிக்கக்கூடியதே! அதே தான்!  இது போன்ற வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நாம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க தொடங்குவோம். அப்படியாக 20 லட்சம் முதல் 1.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்போ எண்ணிக்கை கணிசமாக உயருமில்லையா? அரசு அதை தான் எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ?

4 மாதங்கள் காத்திருப்பதற்கு பதிலாக நாமே ஏன் மாதாமாதம் GSTR-2 ரிட்டர்னில் மெனுவலாக எண்டிரி செய்து ITC எடுத்துக்கொள்ள கூடாது என நீங்கள் கேட்கலாம்.  அப்படி செய்தாலும் ஓகே தான். ஆனால் 4 மாதம் கழித்து அது ஆட்டோமேடிக்காக வரும்போது அதில் இருந்து நாம் வரியை எடுத்த பில்களை எல்லாம் தேடி தேடி நீக்கவேண்டி இருக்கும். இது பெரிய நொச்சு பிடிச்ச வேலை. அதற்கு நீங்கள் தயார் எனில், உங்களிடம் இது போன்ற வர்த்தகர்கள் குறைவு எனில் இந்த முறையை பின்பற்றலாம். பொதுவாக அதிக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இது தலைவலியாக முடியும். எனவே சிறு குறு வணிகர்களின் நிலை கஷ்டம் தான்.
******
2. எக்ஸ்போர்ட் ரீஃபண்ட் உடனடியாக வழங்க நடவடிக்கை. ஈ-வாலட் மூலம் கொடுக்கப்படும்.

போன பதிவில் எக்ஸ்போர்ட் செய்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது முதலீடெல்லாம் முடங்கி கிடப்பதையும் படித்திருப்பீர்கள். இப்போது அப்படி முடங்கி கிடக்கும் முதலீட்டை அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 



ஆனால் இதிலும் சந்தோஷத்துக்கு பதிலாக சங்கடமே வந்து தொலைக்கிறது.

அதாவது ஜூலை மாத எக்ஸ்போர்ட் ரீபண்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்துக்கிடப்பவர்களுக்கு ரீபண்டு உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்கிறது. ஆனால் ரீபண்டு அப்ளை செய்வதற்கான வசதியே இன்று வரை ஜி‌.எஸ்.டி போர்டலில் கொண்டுவரவில்லை. இப்படி இருக்க, யாருமே அப்ளை செய்திருக்க முடியாத ஒரு விஷயத்தை அரசு தருவதாக சொல்வது இடிக்கிறது என்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், அப்படி கொடுக்கப்படும் ரீபண்ட் முன்பெல்லாம் செக்காக தருவது மாறி இப்போது ஈ-வாலட் முறையில் தான் வழங்கப்படும் என்றும் அதை ஜி.எஸ்.டி வரி செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருப்பது மற்றொரு இடி.

ஜி.எஸ்.டி வரி செலுத்தும் நிலையே வராதவர்கள் தான் தங்களிடம் இருக்கும் ITC ஐ காசாக்கும் வகையில் ரீபண்டுக்கு அப்ளை செய்வார்கள். வரி செலுத்தும் நிலை இருந்தால் அதை வைத்து வரியை செலுத்திவிட்டு போய்ட்டே இருப்பார்கள்.

தங்களிடம் மிச்சமிருக்கும் ITC, எக்ஸ்போர்ட்டுக்கு கட்டிவிட்டு அதை ரீபண்டாக்க காசாக வாங்கிக்கொண்டால் தான் முதலீடு கைக்கு வரும். ஆனால் அரசு அதை வாலட்டில் வரவு வைக்குமாம் அதை வைத்து நாம் வரி கட்டிக்கொள்ளலாமாம் என்றால் எந்த வரியை கட்டுவது?

சுருக்கமாக சொல்வதானால் ITC லெட்ஜரில் இருந்து Cash லெட்ஜருக்கு அந்த தொகை மாறும். இதை தவிர தம்படி பிரயோஜனம் கிடையாது நமக்கு. மொத்தத்தில் முடக்கப்பட்ட ITC முடக்கப்பட்டதாகவே இருக்கும்.

இந்த முடிவு நமக்கு மறைமுகமாக சொல்லும் ஒரு கொசுறு செய்தி என்னவென்றால், அரசிடம் ரீபண்ட் வழங்க பணம் இல்லையாமே என்கிற ஊகத்தை உண்மை என நிறுவி இருக்கிறது அரசு!
******
3. ரூ. 50,000 க்கு மேல் நகை வாங்கினால், அப்படி வாங்குபவரின் பான் & ஆதார் எண்ணை கொடுக்கவேண்டியதில்லை.

ஊழல் & கருப்பு பணத்துக்கு எதிரான போராக தனது நிதி சீர்திருத்தங்களை வர்ணித்துக்கொண்டிருக்கும் அரசு தான் இந்த முடிவை அறிவித்து இருக்கிறது. ஆச்சரியமாயில்லை?

இனி யார் வேண்டுமானாலும் தன்னிடம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை தங்கமாக மாற்றி கொள்ளலாம். பணமாக வாங்கப்படும் லஞ்சம் இனி தங்கமாக வாங்கிக்கொள்ள எந்த தடையும் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் பணத்தை கொடுத்து தங்கம் வாங்கிக்கொள்ளலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். வாங்குவோர் தம்மை பற்றிய எந்த குறிப்பையும் கொடுக்கவும் தேவை இல்லை. ஏற்கனவே நகைக்கடைகள் பில் இல்லாமலும் வரி கட்டாமலும் தான் பெரும்பாலான வணிகத்தையே செய்துவருகிறார்கள் என்பதால், அவர்களுக்கும் சிக்கல் இல்லை.

எனவே, கருப்புப்பணத்தை நிலமாக பொருளாக முதலீடு செய்து வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக தங்கமும் செய்து தந்திருக்கிறது அரசு.  இதனாலும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை. தங்கத்தின் விலை மேலும் ஏறும், ஊழல் கருப்புப்பணம் இனி பயமின்றி நடமாடும், அதிகாரிகள் இனி தைரியமாக லஞ்சம் கேட்பார்கள் (என்ன, அதை பணமாக அல்லாமல் தங்கமாக கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான்)
******
சரி, நேற்றைய கூட்டத்தில் நல்ல முடிவுகளே எடுக்கப்படலையா என்கிற கேள்வியும் இருக்கிறது. எடுத்து இருக்கிறார்கள். சில விஷயங்கள் அருமையான நடவடிக்கை. சிறிய அளவில் இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடியவை. அவை சுருக்கமாக:

1.   பிரிண்டிங் பணிகளுக்கான வரி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. (விரைவில் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இது அரசியல் கட்சிகளுக்கு உதவியாக இருக்கும். நிறைய போஸ்டர் பேனர் அடிக்கவேண்டி இருக்கும் நிலையில் 7% வரி குறைப்பு என்பது மிகப்பெரிய வரம்)

2.   ரிவர்ஸ் சார்ஜ் முறையில் ஒரு பகுதிக்கு, அதாவது செக்ஷன் 9(4) க்கு மட்டும், விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பெரும் தலைவலியின் ஒரு பகுதி தீர்ந்தது.

3.   அரசு பணிகளுக்கான வர்க்ஸ் காண்டிராக்ட் (Works Contract) முறைக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது அரசுக்கு செய்யப்படும் பணிகளுக்கு மட்டும் தான். மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது. ஆனாலும் இது நல்ல விஷயம் தான். இதன் மூலம் அரசின் கட்டுமான திட்டங்களுக்கான செலவு குறையும்

4.   சிறு வணிகர்கள், அதாவது ரூ. 1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோர், தாங்கள் வாங்கும் அட்வான்ஸ் தொகைக்கு இனிமேல் வரி கட்ட தேவை இல்லை. இது அவர்களது வர்க்கிங் கேப்பிட்டலை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

5.   ஈ-வே பில் எனப்படும் ரோடு பெர்மிட் முறை 2018 ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்படுகிறது.

6.   Advance Authorisation லைசன்ஸ் இருந்தால் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு IGST வரி கட்ட தேவை இல்லை.

7.   மெர்சண்ட் எக்ஸ்போர்ட்டுக்கு பொருட்கள் வாங்கும்போது இப்போது HSN படி உள்ள வரி கட்டவேண்டும் என்று இருப்பதற்கு பதிலாக வெறும் 0.1% வரி கட்டினால் போதும் என்பது உண்மையிலேயே ஒரு போனான்சா தான்.

இப்படி சில.

ஆனால் நான் எதிர்பார்த்த பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது தான் பெரிய வருத்தம்.

பார்ப்போம், அவை அடுத்த கூட்டத்திலாவது விவாதிக்கப்படுகிறதா என.

மொத்தத்தில் இதுவரை ஜி.எஸ்.டி என்பது குழப்பம் என்கிற நிலைமையில் இருந்தது.. இப்போது குழப்பம் ஓரளவுக்கு தீர்ந்துவிட்டது. ஆனால் நடைமுறை படுத்துவதிலும், தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பெரும் சிக்கல் இருக்கும் வகையில் சில ரூல்ஸ் இருப்பது தான் ஆபத்து.

இதையும் அரசு கவனத்தில் எடுத்து, விதிமுறைகளை எளிமைப்படுத்தும் என நம்புகிறேன்.


நம்பிக்கை... அதுதானே எல்லாம்?

******
Reference:

1.  Press realease on 22nd GST Council Meeting dated 06.10.2017
2.  Press note export packages.
3.  GST rates approved by GST council on 06/10/2017

Printfriendly