Sunday, January 1, 2012

அதிமுக - இழந்த பெருமையை மீட்குமா?

அதிமுக செயற்குழு

தமிழக அரசியலை பொறுத்தவரை, சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு மிகுந்த சிறப்பு வாய்ந்தது.

அதிமுக தமிழகத்தின் தனிப்பெரும் பலம்வாய்ந்த கட்சி என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை, அந்த கட்சி அதற்கு உரிய அங்கீகாரத்தையும் பெருமையையும் பெறவில்லை என்பது.  அதிமுகவின் இயக்க வரலாறு முறையாக இது வரை பதிவு செய்யப்படாமலேயே போனது ஒரு முக்கிய காரணமாக கருதுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவுக்கு அடுத்தபடியாக மக்களை பற்றியும், சமூகத்தை பற்றியும் தீர்க்கமாக சிந்தித்து பல பல புரட்சிகரமான முன்னோடி திட்டங்களை வகுத்து மாநிலத்தை வலப்படுத்தியத்தில் அதிமுகவின் பங்கு மகத்தானது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது காலத்தில் தமிழகம் வளர்ந்ததை போல, இந்தியாவின் எந்த மாநிலமும் வளரவில்லை என்றே நான் கருதுகிறேன்.

இன்றைக்கும் இந்தியாவில் பரவலாக பயணிக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம், தமிழகம் மட்டும் தான் மாநிலம் முழுமையாக நகர்ப்புறமாக வளர்ந்திருக்கிற மாநிலம் என்பது. (மற்ற எல்லா மாநிலங்களிலும் பல நகரங்கள் மட்டுமே நகர்ப்புறமாக ஆகி இருக்கும், பெரும்பாலான பகுதிகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும்.)

அதிமுகவின் அரசு பணிகள் சமூக திட்டங்கள், மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை என்பதெல்லாம் இப்போதைய எனது பதிவுக்கு சம்மந்தமர்ரவை. நான் அதிமுக என்கிற அரசியல் இயக்கத்தை பற்றி மட்டுமே இங்கே பதிய விரும்புகிறேன்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இருந்தவரை, திமுகவின் பாதையை தான் அவர் தனது அதிமுகவுக்கும் பின்பற்றினார்.  உட்கட்சி ஜனநாயகம், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கான முக்கியத்துவம், கட்டுக்கோப்பான கட்சிக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள், மக்களிடம் நேரடியான தொடர்பு என திமுகவின் பாதையிலேயே பயணித்த அதிமுகவின் பயணம், புரட்சி தலைவரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தலைமைக்கு வந்தபின் முற்றிலுமாக மாறிவிட்டது.

முக்கியத்துவம் பெற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரும் கட்சியை விட்டு புறக்கணிக்கப்பட்டனர், இன்னும் சொல்வதானால் கட்சியை விட்டே வெளியேற்றப்பட்டனர். தான் சொல்வதை மட்டுமே கேட்கக்கூடிய, தவறான முடிவுகளை எடுத்தாலும் அதை அப்படியே கேட்கக்கூடிய நபர்களை மட்டுமே பதவியில் அமர்த்தினார்.  அப்படி அமர்த்தப்படும் நபர்களும் நிரந்தரமானவர்கள் அல்ல என்பது மட்டும் தான் அங்கே நிரந்தரமான உண்மை. 

சசிகலா

1982 முதல் தனது தோழியாக இருக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் கட்சியையும் அரசையும் விவ்வுவிட்டு ௧௫ ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் பெருமையை வீணடித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டை ஜெ. மீது சுமத்துவதற்கான சரியான காலகட்டத்தை எதிர்பார்த்து அரசியல் விமரிசிகர்கள் காத்திருக்கும் வேளையில், ஒரு அதிரடியை அரங்கேற்றி அனைவரையும் இனிய அதிர்த்திச்சிக்கு ஆளாக்கி இருக்கிறார்.

 இத்தனை காலம் நிழல் அரசை நடத்திவந்ததாக கருதப்பட்ட சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியிலிருந்து முற்றாக நீக்கி தான் எப்போதுமே கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டவர் என காட்டி இருக்கிறார்.

முன்பே இதுபோலோருமுறை சசிகலாவை அவர் நீக்கியதும், பின்னர் இணைத்துக்கொண்டதும் தமிழகம் அறிந்த வரலாறு.  சசிகலா நீக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில், சசிகலாவை விமரிசித்த அனைத்து அதிமுகவினரும், மீண்டும் சசிகலா அதிமுகவுக்குள் வந்தபின்னர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர் அல்லது ஒதுக்கப்பட்டனர். அதனால், இப்போதைய சசிகலா நீக்கத்தை பற்றி கருத்து சொல்ல கூடிய நிலையில் அதிமுகவில் யாரும் இல்லை.  மீண்டும் சசிகலா கட்சிக்கு வந்தால் தங்கள் நிலை என்ன ஆகும் என்பதை அவைகள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இப்படியான ஒரு மவுன வெதும்பல் கட்சியில் நிலவி வருவதை ஜெ. உணர்ந்திருப்பதை அவரது செயற்குழு பேச்சு தெரிவிக்கிறது.  "கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இப்போது கட்சியில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு, மீண்டும் நாங்கள் கட்சிக்கு வருவோம் என்று, பேசிவருவதை அறிவேன். அப்படி தலைமை மீதே சந்தேகத்தை விதைக்கும் அவர்களது செயலையும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களையும் மன்னிக்கவே மாட்டேன்" என உறுதியாக தெரிவித்து இருப்பது, அதிமுகவினரை மட்டும் அல்ல, மொத்த தமிழகத்துக்கே ஒரு மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறேன்!

அதிமுக - தொண்டனின் பார்வையில்


அதிமுக இயக்கத்தை பொறுத்தவரை தமிழகத்தின் மிக பெரும் தொண்டர்பலம் உள்ள கட்சியாகும். அப்படியான தொண்டர்கள் நீண்ட காலமாக உரிய அங்கீகாரம் கிடைக்காமல் மனம் வேதும்பிக்கொண்டிருப்பதை இது வரை தலைமை கண்டு கொள்ளவில்லை. திமுகவில் எல்லா தரப்பினருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் சிபாரிசுகளின் அடிப்படையிலும், முகஸ்துதியின் அடிப்படையிலும் மட்டுமே அங்கீகாரம் கிடைத்து வருவது, அடிப்படை தொண்டர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை உற்பத்தி செய்து வந்தது.

எல்லா தரப்பினருக்கும் மனதின் ஆழத்தில் இருக்கிற ஒரு எண்ணம் என்பது, "ஜெ. திறமையானவர், மக்களை பற்றியும் கழகத்தை பற்றியும் தொண்டர்களை பற்றியும் அதிக அக்கறை கொண்டவர். எம்.ஜி.ஆரின் அதே குணநலன்களை கொண்டவர். இடையில் வந்த சிலரால் தான் அவர் மாறிவிட்டார். இப்போது அவர்கள் நீக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் கழகத்துக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உரியதை செய்வார்" என்கிற எண்ணமாகும். அதை முற்றிலுமாக தவறு என்றும் சொல்லிவிட முடியாது, முற்றிலுமாக உண்மை என்றும் சொல்லிவிடமுடியாது.

இப்போதைய அதிமுக அடித்தள தொண்டன், சரியான உறுதியான தலைமை இல்லாத காரணத்தால் மனம் குழம்பி இதர கட்சிகளிலும், இயக்கங்களிலும் சிதறி கிடப்பதும், மற்றும் சிலர் மனமின்றி எம்.ஜி.ஆருக்காக கட்சியில் தொடர்ந்து கொண்டிருப்பதுமாக கழிந்துகொண்டிருக்கின்றனர்.

இப்போதைய ஜெ.வின் மனமாற்றம் நிலையானதாக இருந்து, கட்சியினருக்கு உரிய அங்கீகாரத்தை செய்தால், இயக்கத்தில் இருந்து சென்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தவறான தகவல்களால் நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் மீண்டும் விரும்பி வந்து இணைவார்கள் என்பதில் மாற்று கருத்து எதுவும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்பு

அதிமுக வலுவடைவது மட்டுமே தமிழகத்துக்கு நன்மையை தரும் என்பது பொதுவான ஒரு கருத்து. அதன் முக்கியமான காரணம் திமுகவின் நிலைப்பாடுகளில் சமீப காலமாக நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை.  தமிழக மக்களை பற்றி உணமையிலேயே கவலைப்படக்கூடிய, மக்களிடம் ஆதரவை பெற்றிருக்கிற வேறு கட்சிகள் எதுவும் இப்போது இல்லை.

அதிமுக, இதுவரை செய்த அனைத்து தவறுகளை எளிதாக மன்னித்து விட முடியும் ஒரு தொண்டனாலும், பொதுமக்களாலும். எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருப்பது, அதிமுக மீண்டும் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கவேண்டும், தமிழகத்தின் தமிழகமக்களின் பிரதிநிதியாக தனது குரலை வழக்கம்போல உயர்த்தி ஒலிக்கவேண்டும் என்பது தான்.

நடக்குமா?


Printfriendly