Sunday, December 23, 2018

GST கவுன்சில் கூட்ட முடிவுகள்

நேற்று கூடிய GST கவுன்சில் கூட்டம் பல முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறது.

சுருக்கமாக சொல்வதானால் 23 பொருட்களுக்கு வரி குறைப்பு, 42 கொள்கை முடிவுகள், 18 விளக்கங்கள், 4 சட்ட திருத்தங்கள். அவ்வளவு தான்.

இவற்றுள் சிலவற்றின் சாதக பாதகங்கள் என்ன என சுருக்கமாக பார்க்கலாம்.

1. மாதாந்திர ரிட்டர்ன் தொடர்ந்து 2 மாதங்கள் தாக்கல் செய்யாத வணிகர்கள் இனி E Way Bill எடுக்க முடியாது.

இது ஒருவகையில் நல்ல திட்டம். பல வர்த்தகர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலும் வரி கட்டாமலும் தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களிடம் பொருட்கள் வாங்குவோருக்கு ITC கிடைக்காமல் பெரும் பொருள் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக இந்த திட்டம். வரவேற்கத்தக்கது.

ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. உதாரணமாக ஒரு கன்ஸ்டிரக்‌ஷன் சர்வீஸ் புராஜக்டை எடுத்து கொள்வோம். திட்டம் முடிவடைய ஆறு மாதங்கள் ஆகும் என வைத்து கொள்வோம். ஆறு மாதம் கழித்து திட்டம் முடிந்த பின்னர் தான் பில் இட்டு வருவாய் பெற்று வரி செலுத்த முடியும் எனில், இடைப்பட்ட காலங்களில் அவர்கள் பொருட்களை எப்படி எடுத்து செல்வது? இது பற்றி எல்லாம் சிந்தித்தார்களா என தெரியவில்லை. இதற்கு இன்னொரு திருத்தம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

2. 2017-18 காலகட்டத்தில் நடைபெற்ற வர்த்தகத்துக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் அவகாசம் 31.10.2018 ல் முடிவடைந்து விட்டது. அதை மீண்டும் உயிர்பித்து 31.03.2019 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.

இதுவும் ஒரு வகையில் நல்ல முடிவு. பல வர்த்தகர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்களிடம் பொருட்களை வாங்கியவர்களுக்கு ITC கிடைக்கவில்லை. எனவே பொருட்களை விற்றவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் அதன் அடிப்படையில் பொருட்களை வாங்கியோர் ITC எடுத்து கொள்ளவும் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது வணிகர்களின் நஷ்டத்தை பெருமளவில் குறைக்கும்.

இப்போது வணிகர்கள் மீண்டும் 2017-18 வர்த்தக விவரங்களை சரிபார்த்து விடுபட்ட விவரங்களை அந்தந்த வணிகர்களுக்கு அனுப்பி வரிகட்ட சொல்ல வேண்டும். ஏற்கனவே பல நிறுவனங்கள் அவ்வாறு ரிட்டர்ன் தாக்கல் செய்யாத வர்த்தகர்களை Blacklist செய்து வியாபாரத்தை நிறுத்தியதால் அந்த வணிகர்கள் நொடிந்து போயிருந்தனர். பல்வேறு முறையீடுகளுக்கு பின்னர் இப்போது அரசு அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

3. 2017-18 ஆண்டுக்கான வருடாந்திர ரிட்டர்ன் (GSTR9) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 31.12.2018 லிருந்து 31.03.2019 ஆக முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. அது மீண்டும் 30.06.2019 க்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம், டிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் GSTR9 படிவத்தை இணையத்தில் ஏற்றமுடியாத நிலை ஏற்பட்டு தவிப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நீட்டிப்பின் அடிப்படையில் தான் வரிக்கழிவுக்கான கால அளவை 31.03.2019 வரை நீட்டப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


4. 2017-18 காலகட்ட வணிகங்களை 2018-19 காலகட்டத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்தாலும் செல்லும் என முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனடிப்படையில் சட்டத்தை திருத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இது கொஞ்சமும் லாஜிக் இல்லாத விஷயம் என்றாலும், வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் என்பதால் வரவேற்கத்தக்கது.

அதாவது, ஒரு வணிகர் தனது பொருளை நவம்பர் 2017 ல் விற்பனை செய்தார் என வைத்துக்கொள்வோம். அவர் அதற்கான வரியை டிசம்பர் 2017 ல் செலுத்தி, ரிட்டர்னை தாக்கல் செய்திருக்கவேண்டும். அந்த பொருளை வாங்கியவருக்கு அப்போது தான் ITC கிடைக்கும்.

ஆனால் விற்றவர் வரி தாக்கல் செய்யவில்லை. அவருக்கு 31.10.2018 வரை அவகாசம் கொடுத்தது அரசு. ஆனால் அவர் அந்த காலகட்டத்தில் வரி செலுத்துவதாக இருந்தாலும் நவம்பர் 2017 மாதத்துக்குரிய ரிட்டர்ன் படிவத்தில் தாக்கல் செய்தால் தான் செல்லும். ITC யும் கிடைக்கும். மாறாக ஜூன் 2018 மாதத்துக்குரிய ரிட்டர்னில் வரி செலுத்தி இருந்தால் ITC கிடைக்காது. காரணம் அது 2018-19 க்குரிய ரிட்டர்ன்.

சில டெக்னிகல் கரணங்கள் காரணமாக அவரால் நவம்பர் 2017 ரிட்டர்னை திறக்க முடியவில்லை. அரசும் தனது இணைய தளத்திலும் அந்த வசதி ஏற்படுத்தி வைக்கவில்லை. இதனால் வரி செலுத்த தயாராக இருக்கும் ஒரு நேர்மையான வணிகரால் வரி செலுத்த முடியாமல் போகிறது. அவரிடம் பொருளை வாங்கியவருக்கும் நஷ்டம். அந்த நஷ்டத்தை விற்றவரின் கணக்கில் வைப்பதோடு இனி அவர்களிடம் பொருட்கள் வாங்காதபடிக்கு Blacklist உம் செய்யப்பட்டது சில நிறுவனங்களில். இதனால் பல பல வணிகர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இப்போது அரசு தனது தவறால் ஏற்பட்ட முடிவை மாற்றிக்கொண்டு, ஜூன் 2018 ல் வரி தாக்கல் செய்தாலும் அதை நவம்பர் 2017 க்கு உரியதாக கருதி ITC எடுத்து கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது.

இதில் ஒரு சிக்கலான சவாலும் உள்ளது.

2018-19 க்கான வரி தாக்கல் கணக்கீடு செய்கையில் இது போல 2017-18 க்கான வரிகள் எவை என்பதை தனியாக கணக்கிட்டு அவற்றை கழிக்க வேண்டி இருக்கும்.

இதை விட நவம்பர் 2017 ரிட்டர்னை திருத்த வசதி செய்திருந்தாலே போதும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனால் அது மிக மிக எளிமையான தீர்வு என்பதாலோ என்னவோ அரசு அதை செய்யாமல், சிக்கலான மற்றொரு தீர்வை முன்வைத்து இருக்கிறது.

எது எப்படியானாலும், சிரமமான பணி என்றாலும் இது நஷ்டத்தை பெருமளவு குறைக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது தான்.

5. புதிய ரிட்டர்ன் படிவங்கள் 01.07.2019 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. முன்னதாக 01.04.2019 முதல் 30.06.2019 வரை அதன் டிரயல் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் அர்த்தம் ஏப்ரல், மே, ஜூன் 2019 காலத்தில் நீங்கள் இரண்டிரண்டு ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய வேண்டி வரும். (அதிகாரப்பூர்வமானது ஒன்று, டிரயல் ஒன்று)

மேலும் 2019-20 க்கான ஆனுவல் ரிட்டர்ன் கணக்கிடும் பொழுது முதல் மூன்று மாதங்கள் ஒரு வகையாகவும் மற்ற ஒன்பது மாதங்கள் வேறு வகையாகவும் கணக்கிட வேண்டி இருக்கும் என்பது தான் ஒரே சிறு சிரமம்.

ஆனால் முறையான ரிட்டர்ன் படிவத்தை கூட முடிவு செய்யாமல் அரைகுறையாக 2017 ஜூலையில் GST அமலாக்கி எல்லாரது வாழ்க்கையையும் சிரமத்துக்குள்ளாக்கியது ஏன் என்பது தான் தெரியவில்லை

6. பொருட்கள் வகைகளில் 17 சேவை துறையில் 6 இனங்கள் வரி குறைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

இதை தான் எல்லோரும் பல காலமாக கேட்டு வருகிறார்கள். ராகுல் மிக தீவிரமாக கோரிக்கை வைத்தபோது அவரை அரசு கிண்டல் செய்தது. இப்போது யதார்த்தத்தை உணர்ந்து இறங்கி வந்திருப்பது நல்ல விஷயம்.

மொத்தத்தில் வணிகர்களின் சிரமத்தை மிக மிக கால தாமதமாக உணர்ந்து கொண்டு செயல்பட தொடங்கி இருக்கிறது அரசு.

ஆனால் இடைப்பட்ட இந்த ஒன்றரை வருடங்களில் நசிந்து போன வர்த்தகம் இனி துளிர்த்தெழ மிக நீண்ட காலம் ஆகலாம். திருத்த முடியாத சில தவற்களை அரசு செய்ததால் அழிந்து போனவர்கள் அதிகம்.

இனியேனும் அரசு எதையும் யோசித்து தகுந்த ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டால் தான் இந்திய பொருளாதார நிலை சீராகும்

அதற்கு நேற்றைய முடிவுகள் முதல் படியாக இருக்கட்டும்

Saturday, December 22, 2018

GST யும் தோசை மாஸ்டரும்

ஊரில் ஒரு மெஸ் இருந்துச்சு.

தோசை, ரோஸ்ட், ஆனியன் ரவால்லாம் அங்கே செம ஃபேமசு. ரொம்ப காலமா ஒரே மாஸ்டர் தான். டேஸ்டில் அப்பப்ப சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அவரோட தோசைக்கு மவுசு அதிகம்.

சில மாசம் முன்னெ புதுசா ஒரு பையன் வேலைக்கு சேர்ந்தான். மாஸ்டர் தோசை சுடுற லட்சணத்தை நக்கலடிச்சுகிட்டே இருந்தான். இதெல்லாம் என்ன தோசை நான் சுடுவேன் பாரு தோசைன்னு அவனோட புது புது ஐடியாக்களா அப்பப்ப சொல்லீட்டே இருப்பான். நான் தோசை சுட்டா இப்போ இருக்கிற கூட்டத்தைவிட இன்னும் கூட்டம் கூடும். முதலாளிக்கு லாபமோ லாபம்னு அடிச்சு விட்டுட்டே இருந்தான்.

முதலில் கண்டுக்காம இருந்த மொதலாளி மெல்ல மெல்ல அவனோட பேச்சுல ஈர்க்கப்பட்டு ஒரு நாள் கூப்பிட்டு அவனோட ஐடியாக்களை கேட்டாரு.

அவன் போன பெரிய பெரிய ஹோட்டல்கள்ள விதவிதமான தோசைகளை பார்த்த விவரம் பத்தியெல்லாம் அவன் சொன்னபோது மொதலாளிக்கும் ஆசை வந்திருச்சு.

அப்புறம் என்ன?

தோசை மாஸ்டரை பாத்திரம் கழுவ அனுப்பீட்டு, பையனை தோசை மாஸ்டர் ஆக்கீட்டாரு!

புது டைப் தோசை சுடுறதை பார்க்க பழைய மாஸ்டரும் மொதலாளியும் மற்ற வேலக்காரவுங்களும் கூட வந்துட்டாங்க. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.

பாரம்பர்யமான அந்த இரும்பு தோசைக் கல்லுல எண்ணெய் கூட காட்டாம மாவை ஊத்தும்போதே எல்லாரும் திட்டுனாங்க. ஏண்டா இப்படி பண்றேன்னு. இன்னும் என்ன பழைய ஸ்டைல் வேண்டி கிடக்கு, நீங்கல்லாம் எப்போ மாடர்ன் ஆவுறது? இது தான் இப்போ ஃபேஷன். நான் தானே தோசை மாஸ்டர். நீங்க புத்தி சொல்றத விட்டுட்டு ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்கன்னு கிண்டலா சொல்லிட்டு தோசை சுட ஆரம்பிச்சாப்ல!

தோசை ஒட்டிக்கிச்சு. எப்படி எடுத்தாலும் வரலை. எல்லாரையும் பார்த்தான். யாரும் ஒண்ணும் சொல்லாம அமைதியா இருந்தாங்க. சட்டுகத்தை வெச்சு எல்லா சைடிலிருந்தும் குத்தி நெம்பி சுரண்டி தோசையை பீஸ் பீசா எடுத்துட்டான். மொத தடவை சுடும்போது இப்படித்தான் இருக்கும்னு சப்பைக்கட்டு வேறெ. அடேய் இது பலவருஷமா நல்லாருந்த கல்லுடா. நேத்து வரைக்கும் நல்லா தோசை வந்துச்சேன்னு கேட்ட முதலாளியை தனக்கு எதிரா சதி செய்யுறாரு, தனக்கு கெட்டபேரு வரவைக்கிறாருன்னு எரிஞ்சு விழுந்ததும் மொதலாளியும் அமைதி ஆயிட்டாரு.

முதலாளிக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு இந்த வம்புன்னு அமைதியான மத்தவங்களை, தன் திறமையை பார்த்து அதை ஆதரிக்கிறாங்கன்ற மமதையோட, இன்னும் பலமா சொரண்ட, தோசைக்கல்லு ஒண்ணுக்கும் உதவாத லெவலுக்கு உருப்படாம போச்சு.

கடுப்பான முதலாளி கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சதும், நான் ஒண்ணும் பண்ணலை. பழைய மாஸ்டர் தான் கல்லை கெடுத்து வெச்சிருக்கார்.  அவரும் இதோ இப்போ அமைதியா நின்னுட்டிருந்தாங்களே இவங்களும் தான் காரணம்னு அழ ஆரம்பிச்சிட்டான்!

சொல்லுங்க. இப்போ முதலாளி அவனை என்ன பண்ணணும்?

பி.கு:
கல்லு - எகனாமி
தோசை - GST
முதலாளி - வாக்காளர்
தோசை மாஸ்டர் - காங்
பையன் - பாஜகன்னெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

Friday, December 21, 2018

GST - பலாபலன்கள் என்ன? - பாகம் 1

ஆஹா ஓஹோ என மிக பெரிய எதிர்பார்ப்புக்களோடு கடந்த 2017 ஜூலை 1 முதல் அமலான GST உண்மையில் இந்த 17 மாதங்களில் என்னதான் சாதித்தது என பார்த்தால் அதில் 20% நன்மைகளையும் 80% பாதிப்புக்களையும் தான் காணமுடிகிறது.

அப்படியென்ன பாதிப்புகள் என வகை பிரித்தால், ஏற்றுமதி செய்வோர், சிறு குறு தொழில் செய்வோர், மத்திய ரக தொழிற்சாலைகள், வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் என வகை பிரிக்கலாம்.

ஒவ்வொன்றாக பார்க்கலாம் எனில் முதலில் ஏற்றுமதி செய்வோரில் இருந்து தொடங்கலாம்.

கடந்த ஆண்டு தொடர்ந்து 11 மாதங்கள் ஏற்றுமதி குறைந்து கொண்டே வந்தது. காரணம் சரியான முன் யோசனையின்றி GST சட்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு சிறிய விதி (Rule).

பின்னர் நிதானமாக சுதாரித்துக்கொண்ட அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் இப்போது மெல்ல மெல்ல மேல் நோக்கி செல்ல தொடங்கி இருக்கிறது Graph.

ஏற்றுமதி குறைந்தால் என்ன ஆகும்? இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை நாம் வர்த்தக பற்றாக்குறை (Current Account Deficit - CAD) என்கிறோம். இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்தால் அது நமது அன்னிய செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserve) குறைக்கும்.

எனவே ஏற்றுமதியை ஊக்குவிக்க, வரிவிலக்கு, ஊக்கத்தொகை திட்டங்கள் ஆகியவற்றை அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதிக்கு சாதகமான ஒரு சூழல் இருந்தது.

ஏற்றுமதி செய்வோரில் முக்கியமானவர்கள் தொழில்துறை உற்பத்தியாளர்கள் (Industrial Manufacturers); துணி ஏற்றுமதி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி (காய், பழம், பூ); போன்றவை முக்கியமானவை.

விவசாய ஏற்றுமதியை பொறுத்தவரை நேரடி ஏற்றுமதியை (Direct Export) விடவும் வர்த்தக ஏற்றுமதி (Merchant Export) தான் அதிகம். அதாவது உற்பத்தியாளரே நேரடியாக ஏற்றுமதி செய்வதை விடவும், மற்றவர்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது.

ஏற்றுமதி செய்வதற்கு என பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கான அனுமதிகள் பெற்றவர்கள் மட்டுமே ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுகிறார்கள். எனவே உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. வர்த்தகர் விவசாயிகளிடமிருந்து வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். இப்படி விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கு வரி கட்ட தேவை இல்லை. ஏனெனில் அது ஏற்றுமதிக்கு போவதால் வரி விலக்கு இருந்தது.

எனவே, ஒரு வர்த்தகர் ஒரு விவசாயியிடமிருந்து ₹1 லட்சம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி அதை பேக் செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ₹1.50 லட்சத்துக்கு விற்கிறார் என வைத்துக்கொள்வோம், பேக்கிங் செலவு வண்டி வாடகை ஏற்றுமதிக்கான ஏஜென்சி செலவு கஸ்டம்ஸ் அதிகாரிக்கான செலவு என 25000 போனாலும் 25000 லாபம். ஒரு மாதத்தில் 10 முறை ஏற்றுமதி செய்பவர்கள் இருக்கிறார்கள். இது விவசாய வளர்ச்சிக்கான மறைமுக காரணியும் கூட. தமிழகத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், ஊறுகாய், வற்றல் என பலவும் ஏற்றுமதி ஆகிறது. வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கிடைப்பது இப்படித்தான். இந்தியா முழுதும் இப்படி ஏற்றுமதி செய்வோர் சுமார் 40 லட்சம் பேர் உள்ளனர்.

சரி, GST யால் இவர்களுக்கு என்ன பதிப்பு? அப்படியென்ன அந்த விதி பெரிய சிக்கலை உண்டுபண்ணியது? அந்த விதி தான் என்ன?

GST அமலானபோது இந்த அரசு, வர்த்தக ஏற்றுமதிக்கு வாங்கும் பொருட்களுக்கும் 18% வரி விதித்தது. இந்த வரியை நீங்கள் உங்கள் GST ரிட்டர்ன் தாக்கல் செய்யும்பொழுது கட்டிவிட வேண்டும். ஆனால் நீங்கள் ஏற்றுமதி செய்தபின் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்களை (Proof of Export) சமர்பித்து விட்டால் நீங்கள் செலுத்திய வரியை அரசு உங்களுக்கு திரும்ப கொடுத்துவிடும் (ரீஃபண்டு)

நல்ல விஷயம் தானே? இதிலென்ன தவறு?

முன்னேற்பாடுகளின்றி அவசர கதியில் அள்ளித்தெளித்த நிலையில் GST யை அமல்ப்படுத்திய இந்த அரசு, ரீபண்டுக்கான தெளிவான விதிமுறைகளையோ, ரீஃபண்டு விண்ணப்பிப்பதற்கான முறைகளையோ, அதற்கான இணைய தள வசதியையோ சட்டம் அமலான ஜூலை 2017 ல் செய்யவில்லை. எல்லோரும் பல பல முறையீடுகள் செய்தபின்னர் மார்ச் 2018 ல் தான் ரீஃபண்டுக்கான முறையான வசதிகள் செய்தனர்.


ஒரு மிகப்பெரிய சட்டம் வருகையில் இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும் தான். அதெல்லாம் சகஜம் என நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பை பார்க்கும்போது மிகுந்த மன கஷ்டம் ஏற்பட்டது. என்ன பதிப்பு? ரீஃபண்டு லேட்டாக கிடைத்தது. அவ்வளவு தானே?

அது தான் மிகப்பெரிய பாதிப்பு.

நான் மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

GST க்கு முன் ₹1 லட்சத்துக்கு பொருள் வாங்கி ₹1.5 லட்சத்துக்கு ஏற்றுமதி செய்தால் 25000 லாபம் கிடைத்தது.

GST க்கு பின், ₹1 லட்சத்துக்கு பொருள் வாங்க ₹18000 வரிகட்ட வேண்டும். எனவே லாபம் 7000 தான். இந்த 18000 அரசிடம் மாட்டிக்கொண்டது. மாதம் 5 ஏற்றுமதி செய்தால் 90000 அரசிடம். ஜூலை முதல் மார்ச் வரை 9 மாதங்களில் அரசிடம் சேர்ந்தது ₹8,10,000 இந்த ஒரு வர்த்தகரிடமிருந்து மட்டும். நாடு முழுதும்?? GST வருவாய் அதிகரித்தது என கணக்கு காட்டி சந்தோஷப்பட்ட அரசு அதில் திருப்பித்தரவேண்டிய இது போன்ற தொகை எவ்வளவு என்பதை கவனித்து கழிக்காமல் விட்டுவிட்டது. எனவே இந்த வரி வருவாய் ஒரு மாயை (இல்லாத வரியை புதிதாய் நுழைத்து வரி வசூலித்து திருப்பி தராமல் இழுத்தடித்தது)

கோர்ட் தலையிட்டு ரீஃபண்டு வழங்க சொன்ன பின் அவசரம் அவசரமான ரீஃபண்ட் வாரம் எல்லாம் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏப்ரல் 2018 முதல் திருப்பித்தந்தது அரசு.

சரி இடைப்பட்ட காலத்தில் நம்ம வர்த்தகருக்கு என்ன ஆகி இருக்கும் என யோசித்து பார்த்தீர்களா?

ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் அரசுக்கு வரி செலுத்தி இருப்பார். லாபம் கணிசமாக குறைந்ததால் அவரது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும். குடும்பத்தில் நிம்மதியின்மை வேறு. போதாக்குறைக்கு தினசரி டீசல் விலை உயர்வால் வண்டி வாடகை அதிகரித்து உள்ள லாபத்துக்கும் வேட்டு. இது தவிர வரி தாக்கலுக்கு அடிட்டர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை வேறு. வீடு, நகை எல்லாம் அடமானம் வைத்து GST வரி கட்டியவர்களை நான் அறிவேன். அடுத்த மாசமாவது அரசு ரீஃபண்டு தந்துவிடாதா என்கிற  எதிர்பார்ப்புடன் மாதாமாதம் ஒழுங்காக வரி கட்டி வந்தவர்கள் பலரில் ஐந்து மாதத்துக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் தொழிலை மூடியவர்களும் சிலர்.

எல்லா பாதிப்புக்களும் மொத்தமாக நிம்மதியையும் எதிர்காலத்தையும் தொலைத்தழித்த பின்னர் ஏப்ரல் முதல் கிடைக்க தொடங்கியது ரீஃபண்டு.

பெரிய நிறுவனங்கள் கார்ப்பொரேட் ஏற்றுமதியாளர்கள் தாக்குபிடித்தனர். சிறு குறு ஏற்றுமதியாளர்கள் தான் அழிந்து போனார்கள்.

சரி இதை தவிர்த்திருக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். ஏற்கனவே அமலில் இருந்த சட்டத்தில் புதிதாக ஒரு  விதிமுறையை புகுத்தும்பொழுது அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என ஆராய்ந்து பார்த்து பின் முடிவெடுப்பது தான் ஒரு நல்ல அரசின் செயலாகும். ஆனால் GST அமலாக்கத்தில் அப்படியான ஆய்வுகள் நடந்ததா என தெரியவில்லை.

வர்த்தக ஏற்றுமதிக்கு வாங்கும் பொருட்களுக்கு வரியில்லை என்கிற கடந்த ஆட்சியின் நிலைப்பாடே தொடர்ந்திருக்கும் எனில், மிகைப்படுத்தப்பட்ட வரிவருவாயோ, ரீஃபண்டு தரவேண்டிய நிர்ப்பந்தமோ, ரீஃபண்டு வராததால் தொழிலை மூடவேண்டிய நிலைக்கு வர்த்தகர்களை தள்ளியதோ நடந்திருக்காது.

அல்லது இப்படி வரிவிதிப்பது தான் இறுதி முடிவு எனில் அதற்கான விதிமுறைகளை தெளிவாக வகுத்து வரி செலுத்துவதற்கும் ரீஃபண்டுக்கும் தேவையான இணைய தள வசதிகளை ஏற்படுத்தியபின் சட்டத்தை அமலாக்கி இருக்க வேண்டும்.

அதற்கு சற்றேனும் முன் யோசனை வேண்டும். அந்த முன் யோசனை இல்லாததால் ஏற்றுமதி பாதிப்பு, தொழில் முடக்கம், வர்த்தகர்களின் வேலை இழப்பு, ஏற்றுமதியை நம்பி விளைவித்த விளை பொருள் விற்பனை ஆகாமல் நொடிந்த விவசாயிகள் என பலதரப்பட்ட பாதிப்புக்களால் அந்த துறையே நொடிந்தது.

இது இந்த தொடரின் சின்ன உதாரண சாம்பிள் தான். நாம் இனி வரிசையாக அடுத்தடுத்த துறைகளின் பாதிப்புக்களை அடித்தடுத்த பதிவுகளில் அலசலாம்.

Saturday, December 15, 2018

5 மாநில தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல் பல வகைகளில் மிக மிக முக்கியமானது. இதன் முடிவுகள் மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கான மதிப்பீடு என கருதப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிலவியது.

ராஜஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கைக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டதால் அதன் வெற்றி பெரிய ஆச்சர்யம் தரவில்லை. மேலும் பாஜக ஆட்சியின் மீது ராஜஸ்தான் மக்கள் எவ்வளவு வெறுப்பாக இருந்தார்கள் என்பதும் நாடறிந்த ஒன்று.

மத்திய பிரதேசம் இழுபறி இருந்தாலும் பாஜகவுக்கே செல்லும் என எதிர்பார்த்தேன். ஹிந்தி & ஹிந்து பெல்ட்டை பொறுத்தவரை பிரதமர் மோடி அவர்கள் தனது வளர்ச்சி திட்டங்கள் பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் ராமர் கோவில், ஏழை தாயின் மகன், டீக்கடை என பழைய செண்டிமெண்ட் சங்கதிகளையே பேசி வந்தார். எனக்குக்கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதாவது, அந்த பெல்ட்டில் யாரும் வளர்ச்சி பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஜெய் ராம் ஸ்ரீ ராம் என சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள். அடுத்து 2019 ம் கூட மோடி தான் வெல்வார் என்றெல்லாம் ஒரு கருத்து எனக்கும் இருந்தது.

ஆனால் மத்திய பிரதேசத்தின் தலையாய பிரச்சனைகள், அதனை களைவதற்கான திட்டங்கள், விவசாய கடன் தள்ளுபடி என ஆக்கப்பூர்வமாகவும் நிதானமாகவும் ராகுல் செய்த பிரச்சாரம் ஹிட் அடித்து இருக்கிறது.


இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ராமர் கோவில் எல்லாம் ஓட்டு வாங்கி தராது. செண்டிமெண்ட் பொய்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான். மக்களின் இந்த மன நிலையை மோடி புரிந்து கொள்ளாதபோது ராகுல் தெளிவாக அதை புரிந்துகொண்டது தான் முதல் வெற்றி.

சட்டீஸ்கார் தான் எனக்கு பேரதிர்ச்சி. காங்கிரஸ் ஓரளவு நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற்று நல்ல பலமான எதிர்கட்சியாக வரவேண்டும் என எதிர்பார்த்திருக்கையில் முழு மெஜாரிட்டியிலான ஆட்சியே அமைத்திருக்கிறது. பாஜகவின் கோட்டை என சொல்லப்பட்ட மாநிலம் செதில் செதிலாக சிதைக்கப்பட்டதற்கு, மக்களின் வேதனைகளை பிரச்சனைகளை புரிந்துகொள்ளாத பாஜக ஆட்சியினர் தான் காரணம என்பஎன்பதில் மாற்று கருத்து இல்லை. ராகுலின் பேச்சும், திட்டங்களை பற்றிய விவரிப்பும் மக்களுக்கு அவர் மீது ஒரு நல்ல நம்பிக்கையை வரவழைத்து இருக்கிறது. இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட். மக்களோடு மக்களாக பயணித்து அவர்களை நன்றாக புரிந்துகொள்வது என்பது ஒவ்வொரு தலைவருக்கும் அவசியமான குணம். மோடி இந்த விஷயத்தில் இதுவரை இறஙகியதே இல்லை. தமிழகத்தில் இது எல்லோரும் செய்வது தான். ராகுலும் அதே ஃபார்முலாவில் மக்களை கவர்ந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதுவும் அபரிமிதமான வெற்றி.

மிசோரம் எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் தான். மக்கள் முன்னணியின் கோரிக்கைகள் நியாயமானவை. இதுவரையும் காங்கிரசோ பாஜகவோ மத்திய அரசில் இருந்து கொண்டு மிசோராமின் கோரிக்கையை சரியாக கையாளவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

தெலுங்கானாவை பொறுத்தவரை சந்திரசேகர ராவ் மிக மிக சாதுர்யமாக செயல்பட்டு இருக்கிறார். முன்னதாகவே ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி முழு மெஜாரிட்டி பெற்று அடுத்த ஐந்து வருடத்தையும் தனதாக்கி கொண்டுள்ளார். ஒருவேளை வழக்கமான நேரத்தில் தேர்தல் வரட்டும் என காத்திருந்தால், இப்போது நான்கு மாநிலங்களில் தோல்வி அடைந்த பாஜக சுதாரித்துக்கொண்டு மக்கள் நல திட்டங்களை அள்ளி வீசினால் ஒருவேளை தெலுங்கானா தனது கையை விட்டு போகும் என முன்பே யோசித்து இருப்பார் சந்திரசேகர ராவ் என தோன்றுகின்ற அளவுக்கு அவரது திட்டமிடல் இருந்தது. எல்லா இடத்திலும் பாஜக அடி வாங்கும் என சரியாக கணித்தவர் அவர் மட்டும் தான். அந்த அலையில் தெலுங்கானாவிலும் தோற்கட்டும் என சரியாக திட்டமிட்டு ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்து வென்றிருக்கிறார். மிக தேர்ந்த அரசியல்வாதியாக வளர்ந்திருக்கிறார் சந்திரசேகர ராவ்.

***

பொதுவாகவே இந்த தேர்தல் நமக்கு சொல்லி இருப்பது பல செய்திகள். அதில் மிக மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை

செண்டிமெண்ட் டயலாக்குகள், சிம்பதி அழுகைகள், ராமர், மதம், மொழி ஆகியவை எல்லாம் ஓட்டுக்களை தரும் என்கிற நம்பிக்கை இனி வேலைக்கு ஆகாது. உருப்படியாக ஏதேனும் மக்களுக்கு செய்தால் தான் வெல்லமுடியும்.

மக்களின் மனதை புரிந்து கொண்ட மக்களுக்கு நல்லதொரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய ஒரு தலைவராக ராகுல் வளர்ந்து வருகிறார். பாஜக செல்வாக்காக இருந்த பகுதிகளிலேயே அவர் பெற்றிருக்கும் வெற்றி அதை உறுதி செய்கிறது

மத்திய அரசின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகள் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. கொள்கை முரண்பாடுகள், அடித்தட்டு மக்களுக்கு ஒழைக்கப்பட்ட அநீதி, வளர்ச்சியின்மை, பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சி இன்மை ஆகியன மக்களால் அன்றாடம் உணரப்பட்டன. ஆனாலும் அரசின் தரப்பில் இருந்து அவற்றுக்கான எந்த தீர்வும் இல்லை என்பது மக்களிடையே ஒரு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலிலும் அதைப்பற்றி பேசாமல் தன்னை பற்றியே பிரதமர் பேசி வந்ததின் பலன் தான் மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவை தோல்வியுத செய்தது

இனி மக்களை புரிந்து கொள்வதும் அவர்களுக்கான தேவைகளை தீர்த்து வைப்பதும் தான் வெற்றிக்கான வழி. அல்லாமல் ராமரோ, இந்துவோ, இந்தியோ தூக்கி நிறுத்தப்படுவதல்ல.

இதனை ராகுல் தெளிவாக புரிந்துகொண்டு விட்டார். மோடியும் பாஜகவும் புரிந்து கொள்வதற்கான முயற்சியேனும் செய்தால் தான் இனி வெல்ல முடியும்.

ராகுலின் தன்னம்பிக்கை, மோடியின் தலைக்கனத்தை இப்போதைக்கு தகர்த்திருக்கிறது.

இனி பாஜக சுதாரித்து கொள்ள வேண்டியது அவசியம். மக்கள் மோடி மீதான மாயையில் இருந்து வெளியேறிவிட்டதை உணர்ந்து எதார்த்தத்தை புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.

செய்வார்களா?

Printfriendly