Sunday, December 22, 2013

தமிழக வாட்வரி சட்ட திருத்தம் - முடங்கும் தொழில்துறை



மிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி நாளிட்டு ஒரு சட்டதிருத்தத்தை அமல் செய்தது. அந்த ஒரே ஒரு சட்ட திருத்தம் ஒட்டுமொத்த தமிழக தொழில்துறையையும் கொந்தளிப்பில் கொதிக்கவைத்துவிட்டது.     

தமிழக அரசின் வணிகவரித்துறை வெளியிட்ட அந்த சட்டத்திருத்தத்தையும்  TNVAT Act 28 of 2013, 5th Amendment   அதன் விளைவுகளையும் தமிழக தொழில்துறை ஏன் இந்த அளவுக்கு வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக பார்க்கலாம்.



வாட் வரலாறு: 2006ம் ஆண்டு தமிழகத்தில் வாட் வரி முறை அமலுக்கு வந்தது. 2007 ஜனவரி 1ம் தேதியிட்டு இந்த வரிமுறை அமலானது. அதுவரை இருந்த தமிழக அரசு பொது விற்பனை வரி முறை (TNGST – Tamil Nadu General Sales Tax) நீக்கப்பட்டு நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி முறைக்காக வாட் வரி (TNVAT – Tamil Nadu Value Added Tax) முறை கொண்டுவரப்பட்டது. வாட் வரி முறையை முதலில் எல்லோரும் எதிர்த்தாலும் அது மிகவும் சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருந்ததால் பின்னர் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். 

வாட் வரி முறையில் நாம் கொள்முதலுக்கு (Purchase) செலுத்திய வரியை விற்பனை வரியில் (Sales Tax) கழித்துக்கொள்ளலாம். அதாவது ஒரு பொருளை வாங்கும்போது அந்த பொருளுக்குன்னு ஒரு வரியை செலுத்தியிருப்போம். மீண்டும் அதே பொருளை இன்னொருவருக்கு விற்கும்போது அதற்குன்னு தனியா இன்னொரு வரியை செலுத்தவேண்டி இருக்கும். இது தான் பழைய TNGST முறை. 

இது இரட்டை வரி விதிப்பாக கருதப்பட்டதால் வாட் வரி முறையில் செலுத்தவேண்டிய வரியில் இருந்து பர்சேசின் போது செலுத்திய வரியை கழித்துவிட்டு மீதமுள்ளதை அரசுக்கு கொடுத்தால் போதும். அதாவது நாம் வைக்கும் லாபத்துக்கு அல்லது நாம் செய்த சேவைக்கு மட்டும் வரி. The Value which has been added alone considered for Value Added Tax. 

சிம்பிளா ஒரு உதாரணம் பார்ப்போமா?  நீங்க ஒரு பெயிண்ட் கடை வெச்சிருக்கீங்கன்னு எடுத்துக்கலாம். ஒரு லிட்டர் பெயிண்ட் டப்பாவை நீங்க கம்பெனியில் இருந்து ரூ.100/-னு வாங்குறீங்க. அதுக்கு 12% வரி அவன் போட்டிருப்பான். அப்ப நீங்க கம்பெனிக்குகொடுக்கிறது ரூ.112. அந்த பெயிண்ட் டப்பாவை நீங்க உங்க கடையில் ரூ.150/-ன்னு விக்கிறீங்கன்னு வைங்க. இதுக்கு நீங்க 12% வரி போட்டீங்கன்னா ரூ.168/- தான் விற்பனை விலை.  இப்ப பழைய TNGST முறைப்படி பார்த்தா, நீங்க ரூ.12/- வரியா கம்பெனிக்கு கட்டிருக்கீங்க. அது தவிர ரூ.18/- நீங்க வரி போட்டிருக்கீங்க. ஆக மொத்தம் அந்த 1 லிட்டர் பெயிண்ட் டப்பா மூலம் அரசுக்கு கிடைக்கிற வரி ரூ.30/-. பெயிண்டின் விற்பனை விலை ரூ.168/- உங்களுக்கான லாபம் (150-112) ரூ.38/-.   

ஆனா புதிய வாட் வரி விதிப்பு முறைப்படி பார்த்தா எப்படி வரும் தெரியுமா? நீங்க கம்பெனிக்கு கொடுத்த ரூ.12/- நீங்க கழிச்சுக்கலாம். அதனால் அரசுக்கு நீங்க கட்டவேண்டியது (விற்பனை வரி ரூ.18 (-) செலுத்திய வரி ரூ.12) ஆகமொத்தம் ரூ.6 தான். இந்த முறைப்படி பார்த்தால். அரசுக்கான வரி வருவாய் 12+6 = ரூ.18 தான். நீங்க ரூ.168/- க்கே பெயிண்டை வித்தா, உங்களுக்கு லாபம் ரூ.44 (செலுத்திய வரியான ரூ.12 + நீங்க வெச்சிருக்கிற லாபமான ரூ. 32). ஒருவேளை நீங்க உங்க லாபம் அதே ரூ.32 போதும்னு நினைச்சா பெயிண்டின் விற்பனை விலை ரூ. 168 லிருந்து ரூ.156ன்னு குறைஞ்சிரும்.  கான்செப்ட் ரொம்ப சிம்பிள். ஒரு பெயிண்டுக்கு கம்பெனிக்காரன் 12 ரூபாயும் நீங்க 18 ரூபாயும் அரசுக்கு கட்டியிருந்தது மாறி. நீங்க கட்டுற 18 ரூபாய்க்குள் கம்பெனிக்காரன் கட்டின 12 ரூபாயும் இருப்பதால் 6 ரூபாய் மட்டும் வரியா கட்டினா போதும். அரசுக்கு வரி வருவய் குறையும். ஆனா உங்களுக்கு லாபம். 

இப்படி வரியை அட்ஜஸ்ட் செய்யுறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. அதாவது நம்ம மாநிலத்துக்குள்ளேயே வாங்கின பொருளுக்கு தான் வரியை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கின பொருளுக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் கிடையாது. அதே மாதிரி நம்ம மாநிலத்துக்குள்ளேயே விக்கிறதா இருந்தா அட்ஜஸ்ட் செய்துக்கலாம். வெளி மாநிலத்துக்கு விக்கிறதா இருந்தா ரெண்டு வகையான கண்டிசன் இருக்கு. வெளி மாநிலத்தில் உங்க பொருளை வாங்குறவர் பதிவு பெற்ற கடையா இருந்து அவர் உங்களுக்கு C Form கொடுக்கிறதா இருந்தா, நீங்க இங்க வரியை அட்ஜஸ்ட் செய்துக்கலாம். ஒருவேளை, வெளிமாநிலத்திலுள்ள உங்க கஸ்டமர் அந்த மாநிலத்தில் ரிஜிஸ்டர் செய்யாம இருந்திருந்தா அவருக்கு நீங்க விற்கும் பொருளுக்கான வரி அட்ஜஸ்ட்மெண்டை நீங்க செய்ய முடியாது. இது தான் கண்டிசன்  



புதிய சட்ட திருத்தம் என்ன?: தமிழக அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்ட சட்ட திருத்தம் நவம்பர் 11 முதல் அமலாகும்னு சொல்லி இருக்காங்க. அந்த சட்டதிருத்தத்தின் படி, வெளிமாநில கஸ்டமர் பதிவு பெற்ற டீலரா இருந்தாலும் அவருக்கு விற்கிற பொருளுக்கான வரி அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து 3% வரியை தமிழக அரசுக்கு திருப்பி செலுத்தணும்னு இருக்கு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே இப்படி ஒரு முட்டாள்த்தனமான சட்டம் இல்லை. நம்ம தமிழகத்தில் மட்டும் தான் இருக்கு. 

இந்த சட்டதிருத்தத்தினால என்ன பிரச்சனைன்னா, நாம இதுவரையும் எடுத்திட்டிருந்த வரி அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து 3% குறையும். அரசு இந்த திருத்தத்துக்கு சொல்ற லாஜிக் சரியாக இருக்குதுன்னு நினைக்கிறேன். 

உதாரணம் பார்ப்போமா? அதே பெயிண்ட் விஷயத்தை எடுத்துக்கலாம். நீங்க கம்பெனியில் 12% வரி கட்டி வாங்கி இருக்கீங்க. அதை வெளிமாநில கஸ்டமருக்கு அனுப்புறீங்கன்னு வெச்சுக்கோங்க. அந்த கஸ்டமர் பதிவு செய்யாத டீலரா இருந்தா நீங்க 12% வரி அவர்கிட்டேயிருந்து வசூலிச்சு அரசுக்கு கட்டணும். மேலும் பதிவு செய்யாத டீலருக்கு வித்ததால் கம்பெனிக்காரங்களுக்கு கட்டின 12% வரியை அட்ஜஸ்ட் செய்ய முடியாது. ஒருவேளை, உங்க கஸ்டமர் பதிவு பெற்ற டீலரா இருந்து அவர் உங்களுக்கு C Form கொடுக்கிறதா இருந்தா, நீங்க 2% வரி மட்டும் வசூலிச்சு கட்டினா போதும். அதுவும் இல்லாம கம்பெனிக்கு கொடுத்த 12% வரியையும் நீங்க அட்ஜஸ்ட் செய்துக்கலாம். இந்த இடத்தில் தான் அரசு குதர்க்கமா யோசிக்குது. 12%ல வாங்கின ஒரு பொருளை 2% வரிக்கு வித்திட்டு, அந்த 12% வரியையும் அட்ஜஸ்ட் செய்தால், அரசு உங்களுக்கு 10%ஐ திருப்பி தரவேண்டி இருக்கு. இது அரசுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துது. அதனால் அரசு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கு. இதன் படி அரசு திருப்பி தரவேண்டிய 10% என்பது 7% என குறையும். சுருக்கமா சொன்னா வெளிமாநில விற்பனைக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் என்பதில் 3% ரிவர்ஸ் செய்யவேண்டும். 

சரி, தொழில் துறைக்கு இதில் என்ன பிரச்சனை? லாபம் குறையும். வரி கட்டும்போது நிறைய கணக்கீடுகள் செய்யவேண்டி வரும். வேலை பளு கூடும். அவ்வளவு தானே? அரசுக்கு அதிக வருவாய் வருகிற பட்சத்தில் நாமளும் அதுக்கு உதவித்தானே ஆகணும்? சரிதான். ஆனால் இதன்படி விற்பனை விலை கூடும். பிற மாநில டெண்டர்களில் நமது டெண்டர்விலை அதிகமாக காட்டும். அதனால் பிசினஸ் பாதிக்கும்னு வியாபாரிகள் சொல்றாங்க. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா எனக்கு தெரியலை.  பிரச்சனை வியாபாரிகளுக்கு இல்லை. தொழில் துறையினருக்கு தான். 

அதென்ன ரெண்டு பேருக்குமான வித்தியாசம்? வியபாரிகள் வாங்கிய பொருளை அப்படியே இன்னொருவருக்கு விற்பனை செய்பவர்கள். அதனால் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி கட்டியிருக்கோம்னு தெளிவா கணக்கு இருக்கும். ஆனா தொழில் துறை அப்படி இல்லை. பல பொருட்களை வாங்கி அதை அப்படியே வெச்சோ அல்லது உருமாற்றியோ புதிதாக ஒரு பொருளை செய்யுறவங்க. இவங்களுக்கு இந்த சட்டத்தில் பெரிய பிரச்சனை வரும். அது எப்படி? இது வரைக்கும் இவங்க உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும்போது அதிலுள்ள எல்லா பொருட்களுக்கான வரியையும் மொத்தமா அட்ஜஸ்ட் செய்துக்குவாங்க. ஆனா புது முறைப்படி, இவங்க உற்பத்தி செய்த பொருள் வெளிமாநிலத்துக்கு C Form மூலம் விற்பதாயிருந்தால், அந்த பொருளுக்குள் இருக்கும் உப பொருட்கள் Input materials / spares ஆகியவற்றுக்கு எவ்வளவு வரி கட்டியிருக்கோம்னு தனித்தனியா கணக்கெடுத்து அதில் 3% வரியை கணக்கிட்டு அரசுக்கு திருப்பி கொடுக்கவேண்டி வரும். இது ரொம்ப லொள்ளு பிடிச்ச விவகாரம். ஒரு பெரிய மெஷின் செய்யுற கம்பெனியின் நிலைமையை நினைச்சுப்பாருங்க. அந்த மெஷின் செய்வதற்காக வாங்கிய மொத்த பொருட்களின் லிஸ்டையும் எடுத்து அதுக்கான வரியை தனித்தனியா கணக்கிட்டு ரிவர்ஸ் செய்யணும். 


இதில் இன்னொரு சிக்கல் உருமாற்றிய பொருட்கள். உதாரணமா இரும்பு தனியாவும், ஈயம் தனியாவும் வாங்கி ஃபவுண்டரியில் ரெண்டையும் அலாயா மிக்ஸ் செஞ்சு ஒரு கருவியை உருவாக்கிற கம்பெனிகள், இந்த ரிவர்ஸ் வரிக்கான கணக்கீட்டை எப்படி செய்யுறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க.   

இதில் எல்லோரும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு. தமிழக அரசு வெளியிட்ட சட்டத்திருத்தம் முட்டாள்த்தனமானது மட்டும் இல்லை, தெளிவாவும் இல்லை. உற்பத்தி துறையினர் இந்த ரிவர்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணுமா வேண்டாமான்னு தெளிவா சொல்லவேயில்லை. சில வணிகவரி துறை ஆபீஸ்ல உற்பத்தி துறை ரிவர்ஸ் செய்யணும்னும், மற்றும் சில ஆபீஸ்ல செய்யவெண்டாம்னும் குழப்பிட்டு இருக்காங்க.  

இப்போதைய நடவடிக்கை என்ன?:  இப்போதைக்கு தொழில் துறையினர் இந்த ரிவர்சல் செய்யுறதா இல்லை. CII – Confederation of Indian Industry சார்பா இந்த சட்டதிருத்தத்துக்கு விளக்கம் கேட்டு மனு செஞ்சிருக்கிறதாவும், இன்னும் சிலர் ஹைகோர்ட்டை அணுகப்்போவதாாவுுுும் நிறைய தகவல்கள் வந்துட்டு இருக்கு. தமிழக அரசு இந்த நிமிஷம் வரைக்கும் எந்த விளக்கத்தையும் கொடுக்கலை. அதைவிட சிக்கல், நவம்பர் 11ம் தேதி முதல் அமலாகுதுன்னு அறிவிச்ச அரசு அது நவ 11 வரை வாங்கிய பொருளுக்கா, நவ 11 முதல் விற்பனையாகும் பொருளுக்கான்னு தெளிவுபடுத்தலை. இப்ப வரி எந்த அடிப்படையில் கணக்கிடணும்னும் யாருக்கும் தெரியலை. ஒரே மாதத்தில் நவ 11 வரை ஒரு முறையிலும், அதுக்கு பின்னர் மற்றொரு முறையிலும் வரியை கணக்கிடவேண்டிய நிலையில் இருக்கிற வணிகர்களுக்கு மற்றுமொரு பிரச்சனை ஆன்லைன் மூலம் இந்த வரி செலுத்துவதற்கு இந்த கால வித்தியாச கணக்கீடுக்கான இரு வேறு ஃபார்ம்கள் ஆன்லைனில் இல்லை. அதே பழைய ஃபார்ம் தான். எப்படி வரியை கணக்கிடுவது, எப்படி வரியை கட்டுவதுன்னு செம்ம குழப்பத்தில் இருக்காங்க. நல்லவேளையா தமிழகத்தில் எதிர்கட்சின்னு எதுவும் இல்லாததால் அரசின் இந்த முட்டாள்த்தனத்தை யாரும் இதுவரை கேள்வி கேட்கலை. தொழில்துறையே தான் விளக்கம் கேட்டு அலைஞ்சிட்டு இருக்கு. அரசு அவங்களை கண்டுக்கறதா இல்லை. 

இப்ப சொல்லுங்க, தொழில்துறை முடங்குமா முடங்காதா? வெறுத்து போவாங்களா இல்லையா? இப்படி வரி ரிவர்ஸ் ஆனா விற்பனை விலை கூட நமக்கு கிடைச்சிட்டிருக்கிற பிசினஸ் லாஸ் ஆகுமா ஆகாதா? இது நம்ம பொருளாதாரத்தை பாதிக்குமா பாதிக்காதா? வெளிமாநிலத்துக்கான விற்பனையை மட்டுமே நம்பியிருக்கிற வணிகர்கள் முடங்குவாங்களா மாட்டாங்களா? யார் இந்த கேள்வியையெல்லாம் அரசாங்கத்துக்கிட்டே கேட்பாங்க? அட்லீஸ்ட் அதிகாரிகளாவது எடுத்து சொல்லியிருக்கவேண்டாமா? இப்படி நிறைய கேள்விகள். பதில் தான் தட்டுப்படலை.

Saturday, September 14, 2013

தாமரையை மலர்த்துவாரா மோடி?


நேற்று நடந்த பாஜக காரிய கமிட்டி கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரு வேறு கருத்துக்கள் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக வரக்கூடாது என ஒரு சாராரும், அவர் தான் வரவேண்டும் என ஒரு சாராரும் கடுமையாக விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

நேற்று மாலை மோடி அவர்கள், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியையும் தனது பொறுப்பையும் பற்றி மிக சிறந்த ஒரு உரை ஆற்றினார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளால் மிக அருமையானதொரு உரை அது. நான் கேட்ட வரையில் மோடியின் மிக சிறந்த பேச்சு அது தான்.

மோடி மிக சிறந்த நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. குஜராத் மாநிலத்தின் இப்போதைய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சீரிய நிர்வாகம் இதனை எல்லாம் நான் சூரத், வதோதரா, கச், அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு சென்றபோதெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள எனது நண்பர்கள் பலரும் மோடியின் அருமைகளை விளக்கமாக எடுத்து சொன்னார்கள். இன்றைக்கு தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருப்பதற்கு மோடியின் செயல்களும் திட்டங்களும் தான் அடிப்படை காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்து முதல்வராக அவர் நீடிப்பதன் காரணமும் அது தான். பரவலாக மாநிலம் முழுமையும் மோடி குறித்தான மிக நல்ல அபிப்பிராயமே நிலவுவதை நான் கண்டிருக்கிறேன்.

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு என பார்த்தால் வகுப்பு வாதம், கோத்ரா கலவரம், கலவரத்தை ஊக்குவித்தது, இனப்படுகொலைக்கு துணை நின்றது போன்றவையாக மட்டும் தான் இருக்கமுடியும். அதுவும் இன்னமும் சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு ஊகம் தான். எப்படி பார்த்தாலும் குஜராத்தை பொறுத்தவரை மோடி தான் ஹீரோ. அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் பிரதமர் பதவி வேட்பாளர் என வரும்பொழுது நான் குஜராத் முதலவராக மட்டுமே மோடியை பார்க்க விரும்பவில்லை. பிரதமர் பதவி என்பது நாடு முழுமைக்குமான பொதுவான பதவி. மேலும், அவர் முன் நிறுத்தப்படுவது பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளராக.

இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் யாரும் ஒரு மதம் சார்ந்த கொள்கையினை முன்னெடுத்து அரசியல் செய்வதை விரும்பமாட்டார்கள்.

இன்றைய தேதியில் பாஜகவின் வலுவான செல்வாக்கு என்பது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்பதோடு, ஓரளவு செல்வாக்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்டு, பீஹார், ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆகிய மாநிலங்களிலும் இருக்கிறது. இதை சற்று பரவலாக பார்த்தால், வட இந்தியாவின் ஒரு பகுதி, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பாஜகவுக்கு ஆதரவுள்ளது என்பது புரியும். தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு.

வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், தெற்கு இந்தியா, உச்ச வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜகவுக்கு என எந்த செல்வாக்கும் இல்லை. கட்சியை இந்த பகுதிகளில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும் இதுவரை பாஜக எடுக்கவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஏ.பி.வி.பி, சங் பரிவார் போன்றவை அதிக பலத்துடன் உள்ள மேற்கு & மத்திய இந்தியாவை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல் செய்துவந்த கட்சி தான் பாஜக. எனவே மிக பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பா.ஜ.க செல்வாக்காக இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

வட இந்தியாவை எடுத்துக்கொண்டால், உத்தரபிரதேசம் & உத்தரகாண்டு தான் இந்தியாவின் மிக அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பகுதி. பஹுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாடி பார்ட்டி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தான் இந்த பகுதியில் செல்வாக்காக உள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரும் லாலுவும் கோலோச்சுகிறார்கள். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளமும், பஞ்சாபில் அகாலிதளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் & கம்யூனிஸ்டு கட்சிகளும், அசாமில் அசாம் கன பரிஷத்தும், மிக அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்த அத்தனை மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் தான் இப்போதும் இருக்கிறது.

தென் இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக & திமுக, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு அடிப்படையில் அது இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.

எனவே சுருக்கமாக பார்த்தால் நாடு முழுதும் பரவலாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில கட்சிகளின் கையே ஓங்கி இருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட ‘எல்லா’ மாநிலங்களிலும் கணிசமான ஓட்டுவங்கி நிரந்தரமாக இருக்கிறது.


ஆட்சி பெரும்பான்மையான 272 எம்.பிக்களை வென்றெடுப்பது தான் பிரதமர் பதவிக்கான அடிப்படை தகுதி என எடுத்துக்கொண்டால், என்னை பொறுத்தவரை காங்கிரஸ் அதை எளிதாக எட்டிப்பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் கொண்டுவந்த அருமையான திட்டங்களை விரிவாகவும் முறையாகவும் எடுத்து சொன்னாலே போது. பயனை அனுபவித்தவர்கள் திட்டத்தின் நன்மை உணர்ந்து எளிதாக காங்கிரஸை ஆதரித்துவிடுவார்கள்.

காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் அள்ளிக்கொள்வது போக, மீதமிருக்கும் தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும். எனினும், பாஜக மிகுந்த செல்வாக்காக இருக்கும் மேற்கு, மத்திய இந்தியாவில் கணிசமான தொகுதிகளை வென்றெடுப்பதன் மூலம், எதிர்கட்சி வரிசையை தக்கவைத்துக்கொள்வதில் ஒன்றும் சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.


எனது இத்தனை கணக்கும், மூன்றாவது அணி என ஒன்று அமையாத நிலையில் தான். ஒருவேளை, மூன்றாவது அணி அமையுமானால், மாநில கட்சிகளின் தனி செல்வாக்கு ஓங்குமானால், எதிர்கட்சி வரிசை மூன்றாம் அணிக்கு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் மீதான அதிருப்தியை சரியாக ஊதி பெரிதாக்க முடிந்து, மூன்றாவது அணியில் ஒற்றுமையும் இருந்து, பிரதமர் பதவிக்காக ஏகமனதாக ஒரு நபர் முன்னிறுத்தப்படுவாரேயானால், மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூட கிட்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது அணி என நான் நினைக்கும் அணியில் நிறைய பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சமாதானம் செய்து ஒருவர் வென்று நிற்பது கஷ்டம் தான்.

கட்சி சார்ந்து இது தான் பாஜகவின் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் கள நிலை.

மோடி, மிக சிறந்த நிர்வாகி என்றாலும் கூட அவரது கட்சியிலேயே கூட அவர் 'ஏகமனதாக' வேட்பாளராக்கப்படவில்லை என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோருக்கு பிரதமர் பதவி ஆசை இருந்ததும், அதற்காக அணிகள் அமைத்துக்கொண்டதும் பிரசித்தமான விஷயம்.


இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.

மோடி நிர்வாகி என்பது ஒரு புறம். அடிப்படையில் அவரது மன ஓட்டம் என்பது வீரிய ஹிந்துத்துவாவை சார்ந்தது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரது வெளியுறவு கொள்கை அவ்வளவு பாராட்ட தக்கதல்ல. இன்றைக்கு கூட அமெரிக்கா, மோடிக்கான தனது விசா கொள்கையை உறுதி செய்திருக்கிறது. கோபம், பிடிவாதம், தீவிர ஹிந்துத்துவா, பின் விளைவுகள் குறித்த கவலையின்றி முடிவுகள் எடுத்து சிக்கலாக்கி கொள்வது என சமீப காலமாக மோடியின் செயல்பாடுகள் கவலையளிக்கக்கூடியவை தான். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் குஜராத் உயர்நீதிமன்றம், உள்கட்டமைப்பு, சாலைகளின் நிலை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுக்காக மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதையும் கவனிக்கவேண்டும். சூரத், அஹமதாபாத், வதோதரா போன்ற நகரங்களை மட்டுமே காட்டி மாநிலம் வளர்ந்துவிட்டது என விளம்பரம் செய்கிறார் என்கிற பிற கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ என்கிற ஐயம் பரவலாக தோன்ற தொடங்கி இருக்கிறது. அவருக்கென அமைக்கப்பட்ட தனியார் விளம்பர நிறுவனம், அவரது செல்வாக்கை உயர்த்துவதாக சொல்லி செய்யும் செய்கைகளில் உண்மையில் அவரது செல்வாக்கு சரிந்துகொண்டு தான் வருகிறது. இந்தியாவிலேயே தனது சுய செல்வாக்கை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்தை நியமித்து அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும் ஒரே தலைவர் என்கிற பெருமையும் மோடிக்கே உள்ளது!



பொதுவாக பாஜக கட்சி தலைவர்களில் வாஜ்பாயி மிதவாதி, எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவராக இருந்தார். அத்வானி முன்பு பிடிவாத போக்கு கொண்டவராக விளங்கினாலும், தற்போது அவரும் மிதவாதியாகவே மாறிவிட்டார். நாட்டு நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவரது தனிப்பட்ட வலைப்பூங்காவில் அதிகம் காணமுடிகிறது. மோடி அப்படிப்பட்டவரல்ல. எனவே பிரதமர் பதவி என்கிற உயர் அந்தஸ்து கிடைக்குமானால், அவரது செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. நம்மை போன்ற பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒரு சாராருக்கே அந்த அச்சம் இருக்கிறதை உணரமுடிகிறது.

இதெல்லாம், 2014ம் ஆண்டு இறுதியில் முறைப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் இருக்கக்கூடிய சூழல் தான். ஒருவேளை காங்கிரஸ் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, மூன்றாம் அணி இன்னும் அமையவில்லை, பாஜவிலும் அதிருப்தி நிறைந்திருக்கிறது, இந்த சமயத்தில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்திவிட்டால் மொத்தமாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட சாத்தியமிருப்பதை உணர்ந்து செயல்பட்டால், எல்லா கணக்குகளும் முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும்? சொந்த கட்சியான பாஜகவின் தலைவர்களை மோடியால் சமாதானப்படுத்த முடிகிறதா? இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் பரவலாக பாஜக பெற முடியுமா? மூன்றாவது அணி அமையுமா? அப்படி அமைந்தால் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடையில் தான் இருக்கிறது மோடியின் பிரதமர் கனவு.

இப்போதைக்கு பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததையே மிகப்பெரிய வெற்றியாக கருதி அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். அதில் எந்த சங்கடமும் யாருக்கும் இல்லை!

Thursday, August 29, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 3


ந்த தொடரின் பாகம்-1 & பாகம்-2 ஆகியவற்றை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால் நாம நேரா விஷயத்துக்கே போயிரலாம். இந்த பாகத்தில் நாம் விவாதிக்க போறது ‘அந்நிய முதலீடு’ பத்தி தான்.

என் முதல் பாகத்தை படிச்ச பலரும் ‘அந்நிய செலாவணி’ என்பதை ‘அந்நிய முதலீடு’ என்பதுடன் போட்டு கன்பீசன் ஆகி சகட்டு மேனிக்கு விமர்சிச்சதால, முதலில் அது ரெண்டுக்குமான வித்தியாசத்தை பார்த்திரலாம்.

அந்நிய செலாவணி (Foreign Reserve) என்பது நம்மிடம் இருக்கும் டாலர் கையிருப்பு. இந்த அந்நிய செலாவணி எந்த அளவுக்கு நம்ம கிட்டே கையிருப்பு இருக்குதோ அதன் அடிப்படையில் தான் உலக நிதி நிறுவனங்கள் நம்ம நாட்டின் கடன் நம்பகத்தன்மையை (Credit Credibility) வரையறை செய்யும். இப்படியான நிதி நிறுவனங்களின் வரையறை அடிப்படையில் தான் நம் நாட்டுக்கு மற்ற நாடுகள் முதலீடு செய்யும். ஆக, நம்ம கிரெடிட் ரேட்டிங்கை நல்லபடியா வெச்சிக்க நாம முயற்சி செய்யணும்.

சரி, அதை எப்படி செய்யறது?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்கள், சேவைகள் (Export of Goods & Services) எல்லாத்துக்கும் நாம டாலரில் பணம் வாங்குறோம். இன்னொரு பக்கம் நமக்கு தேவையான பொருட்கள், சேவைகளை இறக்குமதி (Import of Goods & Services) செய்யுறோம். அதுக்கு நாம டாலரில் பணம் கட்டுறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி குறைவா இருந்தா நமக்கு டாலர் கையிருப்பு வரும். அதன் மூலம் அந்நிய செலாவணி அதிகரிக்கும். ஆனா இப்போதைய நிலையில் ஏற்றுமதியை விட 32% அதிகமா இருக்கு இறக்குமதி.


அதனால, நமக்கு வர்ற டாலர்களை விட நாம கொடுக்க வேண்டிய டாலர் அதிகமா இருக்கு. வேறே வழியில்லாம நாம நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து கொடுக்க வேண்டியதா இருக்கு. இந்த வகையில் அந்நிய செலாவணி குறையுது.

அந்நிய செலாவணி கையிருப்பு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிக்குது என்பதால் ரூபாயின் மதிப்பு அதிரடியா குறைஞ்சிருச்சு.

‘அந்நிய முதலீடு’ங்கறது வெளிநாட்டு நிறுவனங்கள் நம்ம நாட்டில் செய்யும் முதலீடு. ஏன் வெளிநாடு முதலீடு செய்யணும்? இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகளுக்கு வாய்ப்பு இருக்கு. இன்னமும் சாலை, அடிப்படை வசதிகள் இல்லாத ஊர்கள் அனேகம். ஒழுங்காக வரி கட்ட கூட யோசிக்கும், வரி ஏய்க்கும், நாணயமற்ற மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்திய நாட்டில் அரசாங்கத்தால் மட்டுமே அவ்வளவு வளர்ச்சி பணிக்கான நிதியையும் திரட்டிட முடியலை. நம்மகிட்டே அந்த அளவுக்கு நிதி கையிருப்பும் இல்லை. கடனா வாங்கினாலும் அதை திருப்பி கொடுக்க ஆகும் காலம் எவ்வளவுன்னு சொல்ல முடியாது. உதாரணமா, 100 கி.மீக்கு ஒரு ரோடு போட நாம 425 கோடி ரூபாய் கடன் வாங்குறோம்னு வெச்சுக்கிட்டா, அந்த 100 கி.மீ ரோடு மூலம் அந்த 425 கோடி ரூபாய் வசூலாக எத்தனை வருஷம் ஆகும்னு யாருக்கும் தெரியாது. ரிட்டர்ன் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் (RoI – Return of Investment) அந்த அளவுக்கு கியாரண்டியா இல்லை.

நம்ம கிட்டே பணமும் இல்லை. நமக்கு நிறைய வளர்ச்சியும் தேவை. நம்மால் கடனும் வாங்க முடியாது. அப்போ என்ன செய்யணும்? யார் கிட்டே பணம் இருக்கோ அவ்ங்களை அந்த பணத்தை நம்ம கிட்டே முதலீடு செய்ய வெக்கணும். அந்த முதலீட்டிலிருந்து அவங்க வருவாயை எடுத்துக்குவாங்க. நாம வளர்ச்சியை எடுத்துக்குவோம். நம்ம கிட்டே முதலீடு செய்ய நினைக்கிறவன் என்ன செய்வான்? நீங்க ஒரு தொழில் தொடங்கணும்னு நினைச்சாலோ, வீடு வாங்கணும்னு நினைச்சாலோ, ஷேர் வாங்கணும்னு நினைச்சாலோ என்ன செய்வீங்க? எங்கே முதலீடு செஞ்சா நமக்கு லாபமா இருக்கும்? நல்ல விலையேற்றம் இருக்கும்? இதெல்லாம் யோசிப்பீங்க இல்லே? கடந்த கால ஹிஸ்டரி, எதிர்கால கணிப்புக்கள் எல்லாத்தையும் யோசிச்சு தானே முதலீடு செய்வோம்? (ஸ்பிளண்டர் பைக் வாங்கு மாப்பிள்ளே. நல்ல ரீசேல் வேல்யூ இருக்கும் – மாதிரி).

இதே டைப்பில் தான் இந்தியாவில் முதலீடு செய்யுறதா, இலங்கையிலா, பாகிஸ்தானிலா, பர்மாவிலான்னு யோசிச்சிட்டு இருக்கிற வெளிநாட்டு நிறுவனங்கள இந்தியாவில் தான் முதலீடு செய்யணும்னு முடிவெடுக்க வெக்கிறதே சர்வதேச நிதி நிறுவனங்கள் கொடுக்கிற கிரெடிட் ரேட்டிங்கும், முதலீட்டுக்கு கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்ஸும் தான். அது நம்பிக்கையா இருக்கிற பட்சத்தில் நம்ம நாட்டில் முதலீடு செய்வாங்க.

ஏன் வெளிநாட்டு முதலீட்டையே எதிர்பார்க்கணும்? இந்தியாவில் முதலீடு செய்யற அளவுக்கு ஆள் இல்லையா? அரசாங்கத்துக்கிட்டே பணம் இல்லைன்னா என்ன? தனியாரை முதலீடு செய்ய சொல்லலாம் இல்லே?

இப்ப ஒரு நகரத்தில் பைப்பாஸ் ரோடு போடணும்னு வெச்சுக்கோங்க. கிட்டத்தட்ட 40 கிமீ நீளம். சும்ம ஜம்முன்னு நாலு வழி சாலை. சர்வதேச தரத்தில் போடணும்னு வெச்சுக்கோங்க. மொத்த பட்ஜெட் சுமார் 200 கோடின்னு உதாரணத்துக்கு எடுத்துக்கலாம். அரசாங்கத்துக்கிட்டே 70 கோடி தான் இருக்குன்னா ஒரு தனியாரை கூப்பிட்டு நீ பாக்கி 130 கோடி போட்டு ரோட்டை போடு. அந்த பணத்தை சுங்கவரியா 30 வருஷத்துக்கு வசூல் பண்ணி எடுத்துக்கோன்னு சொல்லுவாங்க. இதை தான் BOOT (Build Own Operate Transfer) System னு சொல்லுவாங்க. அவங்களே நிர்மாணிச்சு, குறிப்பிட்ட காலம் வரை சொந்தமாக்கி, அதுக்கான சுங்கம் வசூலிச்சு, பின் அரசாங்கத்துக்கிட்டே திருப்பி கொடுக்கிறது. இந்த மாதிரி நிறைய சாலைகள் நம்ம தமிழ்நாட்டிலேயே இருக்கு. PPP (Public Private Partnership) Project மூலமா பல சாலைகள் போட்டிருக்கோம்.

சரி சின்ன புராஜக்ட்களுக்கு இது ஓகே. மிகப்பெரிய புராஜெக்டுகளுக்கு நிதி உதவி செய்யுற அளவுக்கு இந்திய நிறுவனங்கள் கிட்டே பணம் இருக்கா? இல்லை. அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்களை நாடுறோம். அவங்க பெரிய அளவில் முதலீடு செஞ்சு வருமானம் பார்க்கிறாங்க. நமக்கு வளர்ச்சியும் கிடைக்குது. இப்படி வெளிநாட்டிலிருந்து நமக்கு வருகிற முதலீடுகளும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தறதோட, இந்தியாவின் கடன் தரத்தையும் உயர்த்துது.

நேரடியா முழுமையான முதலீடு செய்யுற முறை மட்டுமல்லாம கூட்டு தொழில் மூலமா முதலீடு செய்யுற முறையும் இந்த அந்நிய முதலீட்டில் இருக்கு. ஹீரோ-ஹோண்டா, கவாசாகி-பஜாஜ், எஸ்கார்ட்ஸ்-யமாஹா, டிசிஎம்-டொயோட்டா, கிர்லோஸ்கர்-டொயோட்டா, டிவிஎஸ்-சுசுகி, மாருதி-சுசுகி மாதிரியான நிறுவனங்கள் இந்திய-வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனங்களா வாகன துறையில் இயங்கியவை. 49% & 51% பங்கு அடிப்படையில். இதன் மூலம் என்ன ஆச்சு, வெறும் ராஜ்தூத், ஜாவா, என்பீல்டு மட்டுமே இருந்த இருசக்கர வாகனதுறையில் நவீன வாகனங்கள் வர தொடங்கிச்சு. விலையும் குறைவாச்சு. பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைச்சுது. வாழ்க்கை தரம் உயர்ந்தது.

தொலைபேசி, சாலை, வாகனம், விமான போக்குவரத்து, பெரும் தொழிற்சாலைன்னு பல பல துறைகளில் அந்நிய முதலீடு வந்து குவியறதால இந்தியாவில் இந்திய அரசாங்கமோ, இந்திய தனியார் நிறுவனங்களோ மட்டுமே சேர்ந்து செய்தால் கிடைக்கக்கூடிய வளர்ச்சியை விட மிக மிக அதிகமான வளர்ச்சியும் மேம்பாடும் கிடைச்சுது. இப்படி போட்ட முதலீட்டுக்கு நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைச்சதால் நிறைய நிறுவனங்கள் போட்டி போட்டு இந்தியாவில் முதலீடு செய்துச்சு.

ஆக, அந்நிய செலாவணிங்கறது வேறே. அந்நிய முதலீடுங்கறது வேறேன்னு இப்போ புரிஞ்சிருக்கும். அதே சமயம் அந்நிய முதலீடு ஒரு வகையில் மறைமுகமா அந்நிய செலாவணிக்கு உதவுதுன்னும் தெரிஞ்சிருக்கும்.

இந்த அந்நிய செலாவணி தான் இப்போ நம்ம பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியம். அந்த அந்நிய செலாவணியை உயர்த்துறதுக்கான பல காரணிகளில் அந்நிய முதலீடும் ஒண்ணு. அம்புட்டு தான்!

பங்கு வர்த்தகம், முன்பேர வர்த்தகம், கரன்சி வர்த்தகம், கம்மாடிட்டி வர்த்தகம் மாதிரியான செயல்களால் பொய்யாக உருவகப்படுத்தப்படும் அபரிமிதமான விலை உயர்வும் கூட டாலர் மதிப்பு உயர காரணம். கண்ணிலேயே பார்க்காத ஒரு பொருளை மாய உலகமான இண்டெர்நெட்டில் ‘வாங்கி’ கையிருப்பு வெச்சுகிட்டு விலையை உயர்த்தி ‘விற்று’ லாபம் பார்க்கிற இந்த முன்பேர இணைய வர்த்தக முறையை தடை செய்யணும்னு பலரும் பலகாலமா போராடிட்டு வர்றாங்க. இந்த முறையால தான் இயல்பான விலையை விட அதிகமான விலையை வெங்காயம் முதல் தங்கம் வரை எல்லாத்துக்கும் ஏற்றி கிடக்குது.

உற்பத்தி துறை கிட்டத்தட்ட மொத்தமா முடங்கி கிடக்கிறதால், உள்நாட்டு உற்பத்தி அளவு குறைஞ்சு ஏற்றுமதியும் மந்தமாயிருச்சு. அதனால் நமக்கு வரக்கூடிய டாலர் வரத்தும் குறைஞ்சிருச்சு. இப்போ உடனடியா தொழில்துறையை முடுக்கிவிட்டு ஏற்றுமதியை ஒரே மாசத்தில் அதிகரிக்க முடியாதுங்கறது அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும். நீங்களும் நானும் ஒழுங்கா வேலை செய்யாததுக்கு அரசாங்கத்தை குற்றம் சொல்லி என்ன ஆகப்போகுது? அதனால தான் அரசாங்கம் மாற்று ஏற்பாடுகளை சிந்திக்குது.

 

நேற்று (28.08.2013) மதியம் பிரஸ் மீட் நடத்துன நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட அதை தான் சொன்னாரு. நம்ம மார்க்கெட் குளோஸ்டு மார்க்கெட்டா இருந்து பிரயோசனம் இல்லை. இன்னும் கூடுதலா ஓப்பன் மார்க்கெட்டா மாறணும். அப்ப தான் பொருளாதாரம் உறுதியாகும்னு சொன்னாரு. அதாவது வெளிநாட்டு முதலீட்டுக்கு இன்னும் அதிக அளவில் பிற துறைகளை கொண்டு வரணும். முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தணும். கவர்ச்சிகரமான ரிட்டர்ன்ஸுக்கு உத்தரவாதம் கொடுக்கணும். இதையெல்லாம் செஞ்சா அந்நிய முதலீடு அதிகரிக்கும், அதன் பலனா டாலர் வரத்து அதிகரிக்கும், அது நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும்.

நேற்று ப.சிதம்பரம் சொன்ன பத்து திட்டங்களில் இந்த திட்டம் முக்கியமானது. (மற்றொரு முக்கிய திட்டம், தொழில்துறையை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் பல சலுகைகள் கொடுக்கப்போறதா சொல்லி இருக்கார்.) அரசாங்கம் சரியான திசையில் தான் பயணிக்க தொடங்கி இருக்கு. ஆனா ரொம்ப தாமதமா பயணத்தை தொடங்கி இருக்கு.

அந்நிய செலாவணியை அதிகரிக்கிறது மட்டும் தான் இப்போதைக்கு இந்திய அரசின் உடனடி நோக்கம். அதுக்காக தான் அந்நிய முதலீட்டை அதிகரிக்கிறாங்க. இப்போ இந்த ரெண்டுக்குமுள்ள வித்தியாசம் ஓரளவு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

இந்திய பொருளாதாரத்தை இப்போ இருக்கிற நிலையிலிருந்து சீராக்க வெறும் அந்நிய செலாவணி, அந்நிய முதலீடு மட்டும் போதுமா என்ன? பத்தவே பத்தாது. பொருளாதார சீர்திருத்தம்ங்கறது நீண்ட கால பெரும் திட்டம். ஆனா எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்கிற நிலையில் இந்திய மக்களும், சில கட்சிகளும் இப்போது இல்லை. இது வரை நாம பார்த்தது எல்லாமே பொருளாதார ரீதியான பார்வை. ஆனால், அரசியல் ரீதியான பார்வையும், நிர்வாக ரீதியான பார்வையும் சிலது இருக்கு. அந்த பிரச்சனைகளையும் சரி செஞ்சா தான் மொத்த பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். அது என்னென்னன்னு அப்புறம் பார்க்கலாம்!

 

Tuesday, August 27, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 2

முதல் பாகத்தை படிச்சவங்களுக்கு முன்னுரை தேவையில்லை. படிக்காதவங்க ஒரு நடை இங்கே படிச்சிட்டே வந்திருங்க.

இப்போ நாம ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு போயிரலாம்.

2ஜி வழக்கை பொறுத்தவரைக்கும் அது ஒரு ஊகமான கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்ததுன்றது எல்லோருக்குமே தெரியும். அதாவது 2ஜி அலைக்கற்றையின் மதிப்பை மதிப்பிட நம்ம கிட்டே எந்த டெக்னாலஜியோ, முன்மாதிரியோ இல்லை. 3ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டப்போ கிடைச்ச தொகையை அடிப்படையா வெச்சு புரோ-ரேட்டா பேசிசில்  (Pro-rata basis) 2ஜி விலையை கணக்கிட்டிருக்காங்க ஆடிட்டருங்க. ஆனா அந்த முறை சரியா வராதுங்கறது எந்த ஒரு சாதாரண அக்கவுண்டண்டுக்கும் தெரியும்.

3ஜி டெக்னாலஜி வந்ததுமே 2ஜி அவுட்-டேட்டட் டெக்னாலஜி ஆயிருச்சு. அதனால் அதன் மதிப்பு குறைய தான் செய்யும். மேலும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2ஜி அலைக்கற்றைகள் போக மிச்சம் மீதி இருந்த அலைக்கற்றைகளை தான் ஒதுக்கீடு செஞ்சாங்க. ஆக, கிடைச்ச ஒவ்வொரு ரூபாயும் அரசுக்கான கூடுதல் லாபம் தான். ஆடிட்டருங்க கூட அரசுக்கு நஷ்டம்னு எங்கேயும் சொல்லலை. இன்னும் கூடுதல் லாபம் கிடைச்சிருக்கும்னு தான் சொல்லி இருக்காங்க. அதுவும் எப்படி, இத்தனை பேர் ஏலத்தில் கலந்துகிட்டு, இத்தனை ரூபாய்க்கு அது ஏலம் போயிருந்தா இத்தனை லட்சம் கோடி கிடைச்சிருக்கும்னு தான் அறிக்கையே இருக்கு. மொத்தமாவே அது ஒரு ஊகமான கணக்கீடு தான். (கடைசியில் அது இப்போ 30,000 கோடின்னு வந்து நிக்குது. அதுவும் கூட தவறான கணக்கு. அந்த அளவுக்கு இருக்காதுன்னு விவாதம் நடந்துட்டு தான் இருக்கு)

இந்தியாவில் ஆடிட்டிங், தணிக்கை அறிக்கை பத்தின ஒரு பேசிக் விஷயத்தை சிம்பிளா சொல்றேன். அது உங்க புரிதலுக்கு உதவியா இருக்கும்.

உதாரணத்துக்கு, நீங்க ஒரு கம்பெனி வெச்சிருக்கீங்கன்னு எடுத்துக்குவோம். அதில் ஒரு நாளைக்கு 100 மோட்டார் (Motor) உற்பத்தி பண்றீங்கன்னு வெச்சுக்குவோம். அப்படீன்னா மாசத்துக்கு 3000 மோட்டார். சரியா? இதை ஆடிட் செய்ய ஒரு குழு வருது. அவங்க சாம்பிளிங் (Sampling) படி ஒரு நாள் உற்பத்தியான 100 மோட்டாரிலிருந்து 14 மோட்டார்களை ஆடிட்டிங்குக்கு எடுத்துக்குவாங்க. அதில் 4 மோட்டார் தரமில்லைன்னு கண்டுபிடிக்கிறாங்கன்னு வெச்சுக்கோங்க, அவங்க அறிக்கை என்னவா இருக்கும் தெரியுமா? “சோதனைக்கு எடுத்த மோட்டார்களில் 25% தரமற்றவையாக இருந்தன. இந்த வகையில் நாளொன்றுக்கு 25 மோட்டார்களும், மாதத்துக்கு 750 மோட்டார்களும் தரமற்றவையாக இருக்க ‘வாய்ப்பு இருக்கிறது” ன்னு அறிக்கை கொடுப்பாங்க. அப்படி தான் அறிக்கை கொடுக்கணும்னு சட்டம் (IGAPP – Indian General Accounting Practice and Procedures) சொல்லுது. ஆனா நிஜத்தில் அந்த மாச உற்பத்தியான 3000 மோட்டார்களில் அந்த 4 மட்டுமே தரமற்றவையாக இருக்கவும் மற்ற 2996 மோட்டார்கள் தரமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. அதை 100% முழுமையான ஆடிட்டிங்குக்கு உட்படுத்தி பார்த்தா தான் தெரியும். பெரும்பாலான ஆடிட்டிங் குழுக்கள் இப்படியான சாம்பிளிங் படி தான் அறிக்கை தருது. என் ஸ்டேட்மெண்ட் இது தான். இது சரியா தப்பான்னு நீங்க யாரை வேணும்னாலும் வெச்சு செக் பண்ணிக்கோங்க டைப்பில். யாரும் அதை ரீ-செக் செய்யமாட்டாங்கன்னு 200% நம்பிக்கை. 2ஜியிலும் அப்படி தான் நடந்தது. (இது அக்பர் பீர்பால் கிட்டே செம்மறி ஆட்டின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்குன்னு கேட்ட கேள்விக்கு பீர்பால் சொன்ன அந்த அல்டிமேட் பதில் மாதிரி தோணுதில்லே?)

இப்போ நாம இந்த வங்கிகளின் வாராக்கடன் மேட்டருக்கு வருவோம்.

வாராக்கடன் 1.76 லட்சம் கோடின்னு கணக்கிட்ட ஆடிட்டருங்க, கணக்கிட்ட விதம் பற்றி தனியா ஒரு அனெக்சர் (Annexure) கொடுத்திருக்காங்க. அதன் படி ஒரு விசித்திரமான மெத்தடை அவங்க கையாண்டிருக்கிறதை புரிஞ்சுக்க முடியுது.

ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க ஒரு வங்கியில் 3 கடன்கள் வாங்கி இருக்கீங்கன்னு வெச்சுக்குவோம். 3ம் 1 லட்சம்னு வெச்சுக்குவோம். மொத்தம் 3 லட்சம் கடன். மாசம் ஒவ்வொரு கடனுக்கும் 2000/- கட்டணும். அப்படீன்னா மாசத்துக்கு 6000/-. நீங்க 2 கடனுக்கு கரெக்டா டியூ கட்டிட்டே வர்றீங்க, ஆனா 3வது கடனுக்கு மட்டும் ஒழுங்கா டியூ கட்டலைன்னா, நியாயமா அந்த 3வது கடன் தொகையான 1 லட்சம் (அதில் உள்ள, கட்டவேண்டிய, பாக்கி தொகை) தான் வாரா கடன். ஆனா ஆடிட்டிங் மேனுவல் படி பார்த்தா, உங்களது அனைத்து கடன்களும் வாரா கடன் தான். அதாவது நீங்க ஒழுங்கா டியூ கட்டிட்டு வர்ற அந்த 2 கடன் கணக்கும் கூட வாரா கடன்ல தான் சேர்த்திருவாங்க. இது ஒரு பக்கம் அப்படியே எடுத்து வெச்சுக்கோங்க. இன்னொரு விஷயம் கவனிங்க.

இந்த ‘வாரா கடன்’ என்பதற்கு என்ன அளவுகோல் வெச்சிருக்காங்க தெரியுமா? 90 நாட்களுக்கு மேல் ஒரு கணக்கில் எந்த பண பரிமாற்றமும் இல்லை என்றால் அது வாரா கடனாம். இதுக்கும் உதாரணம் வெச்சிருக்கேன்.

நீங்க கடைசியா உங்க கடனுக்கான டியூவை ஜூன் மாசம் கட்டியிருக்கீங்கன்னா, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூணு மாசத்தில் ஒரு நாள் கூட, ஒரு ரூபாய் கூட நீங்க அந்த கணக்கில் கட்டாம இருந்தா அது வாரா கடன். அந்த வகையில் அந்த கடன் தொகையும், உங்க பேர்ல இருக்கிற மற்ற பிற (ஒழுங்கா கட்டப்பட்டுட்டு வர்ற) கடன்களும் எல்லாமே வாரா கடன் லிஸ்ட்ல வந்திரும். ஒருவேளை உங்களுக்கு அக்டோபர் மாசம் கொஞ்சம் லம்பா அமௌண்டு கிடைச்சு மொத்த பாக்கியையும் நீங்க செட்டில் பண்ணிடுறீங்கன்னு வெச்சுக்குவோம், அப்போ என்ன ஆகும்? ஒண்ணும் ஆகாது. நீங்க செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஜீரோ ஆயிரும். ஆனாலும் உங்க கடன் கணக்குகள் எல்லாமே வாரா கடன்ல தான் இருக்கும். ஏன்னா, அதில் தான் ஜூன் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியா 90 நாட்கள் பண பரிமாற்றம் நடக்கலையே? அதுக்கு பின்னாடி எல்லாத்தையும் சேர்த்து கட்டிட்டாலும் அது வாரா கடன் தான். (இந்த மாதிரியான கடன்களை வாரா கடன்னு (NPA – Non Performing Asset) கணக்கு வெக்காம தாமதமாக செயல்படும் கடன்னு (SPA – Slow Performing Asset) கணக்கு வெக்கணும்னு ஒரு விவாதம் இப்பவும் நிபுணர்களால் நடத்தப்பட்டுட்டு இருக்கு! என்னை கேட்டால், அது தான் நியாயமும் கூட.)

இந்த ரெண்டு ரீதியில் தான் (அதாவது ஒழுங்கா கட்டப்படும் கடன்களும், தாமதமா கட்டப்படுற கடன்களும்) இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் வாரா கடன் லிஸ்டில் வந்திருக்கு. இப்போ சொல்லுங்க. இது உண்மையாவே 1.76 லட்சம் கோடியா இருக்க வாய்ப்பு இருக்கான்னு? நிச்சயமா இருக்காது.

‘வாரா கடன்’ங்கறது மிக மிக சொற்பமான அமௌண்டா தான் இருக்கக்கூடும். மற்றவை எல்லாம் தாமதமாக செயல்படும் கடன் அல்லது, ஒரே நபரின் பிற ஒழுங்காக செயல்படும் கடன் தான்.

சரி, 1.76 லட்சம் கோடி வாரா கடன்னே வெச்சுக்குவோம். இதனால் வங்கிகளுக்கு என்ன நஷ்டம்? நஷ்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனா வரவேண்டிய லாபம் குறைஞ்சிருச்சு.

உதாரணமா நம்ம ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை எடுத்துக்கலாம். 2013-14 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கை (Q1 Results for FY 2013-14) சமீபத்தில் வெளியாகி இருக்கு. அதில் இந்த வாரா கடன் எல்லாம் கழிச்சப்பறமும் (Bad debts write off) கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாபம் 14% குறைஞ்சிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. சரி அப்படி எவ்வளவு லாபம்னு நினைக்கிறீங்க?

இது ஒரு பொது துறை வங்கி. சேவை மனப்பான்மையோடு, லாப நோக்கின்றி செயல்படும் வங்கி. இவங்க கணக்கு சொல்றது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும். அதாவது வெறும் 90 நாட்களுக்கான கணக்கு. இதில் வாரா கடன் வேறே எக்கச்சக்கமா இருந்ததுன்னு சொல்றாங்க. அப்படின்னா எவ்வளவு லாபம் வந்திருக்கும்? ஒரு 10 கோடி? 20 கோடி? இல்லைங்க இல்லை. நல்லா தம் கட்டி மூச்சை இழுத்து பிடிச்சுக்கோங்க. 3,241.08 கோடி ‘நிகர’ லாபம். (நிகர லாபம் – Nett Profit – அப்படின்னா, எல்லா செலவும், வரியும், ஒதுக்கீடும் எல்லாம் போக மொத்தமா கைல நிக்கிற தொகை). ஜஸ்ட் 90 நாளைக்கு. வெறும் பொது சேவையும், மக்கள் நலனும் மட்டுமே முன்வெச்சு இயங்குற ஸ்டேட் பாங்க் நிலையே இப்படின்னா, ICICI, HDFC, KVB மாதிரியான தனியார் வங்கிகளை பத்தி நீங்களும் ஆடிட்டர் மாதிரியே குத்துமதிப்பா ஒரு கணக்கு போட்டு பார்த்துக்கோங்க.

இப்போ நான் முன்னே சொன்ன விஷயத்தை யோசிச்சு பாருங்க, ஒரு மிகப்பெரிய முரண்பாடு புரியும். அதாவது ஒழுங்கா கட்டுற கடனுக்கான பணம் வங்கிக்கு வந்திருச்சு. ஆனா, அவருடைய மற்றொரு கடன் வாரா கடனா இருக்கிறதால இந்த கடனும் வாராகடன் லிஸ்டில் இருக்கு. சுருக்கமா ஒரு கடனுக்கான தொகை லாபத்திலும், வாரா கடனிலும் என ரெண்டு இடத்திலும் இருக்கு. இந்த முரண்பாட்டை தான் நிறைய பேர் விவாதிச்சிட்டு இருக்காங்க. (நியாயமா இதை பத்தி விவாதிக்க வேண்டிய அரசாங்கம் வழக்கம்போல சைலண்டா தான் இருக்கு). அப்படி பார்த்தா 3,241.08 கோடி லாபம்ங்கறதும் தப்பு. 1.76 லட்சம் கோடி வாரா கடன்னு சொல்றதும் தப்பு.

இந்த லட்சணத்தில் தான் இருக்கு, இந்திய தணிக்கை துறை. குத்துமதிப்பா குன்சா அடிச்சு விடுறதிலயும், அப்படி அடிச்சு விட்ட தொகையை நியாயப்படுத்த சுற்றி வளைச்சு கணக்கு சொல்றதிலயும் அவ்ங்க ஜகஜ்ஜால கில்லாடிங்க. (எனக்கென்னமோ, முதல் பாகத்தில் சொன்ன மாதிரி, யூகமான, குத்துமதிப்பான ஆதாரமற்ற கணக்கீடுகளுக்கெல்லாம் ஒரு ஐடண்டிடிக்காக ‘ரூ.1.76 லட்சம் கோடி’ ங்கறதை வெச்சுக்கறாங்களோன்னு ஒரு டவுட்டு).

இணையத்தில் சமீப காலமா, அந்நிய முதலீடுக்கு எதிரா ஒரு மௌன மருகல் சப்தம் கேட்டுட்டே இருக்கு. உண்மையில் இந்த அந்நிய முதலீடுங்கறது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா? அது என்னென்ன மாதிரியான விளைவுகளை நமக்கு தரும்? ஏன் யார் எது பத்தி பேசினாலும், யாரோ ஒருத்தர் வந்து சம்மந்தமேயில்லாம அந்நிய முதலீடு பத்தி அதில் வம்பிழுக்கிறாங்க? அந்த அளவுக்கு அதில் என்ன இருக்கு? இதையெல்லாம் அடுத்த பதிவில் விரிவா பார்க்கலாம்!

Saturday, August 24, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 1

நேற்றைய தினம் இந்தியா முழுக்க பரபரப்பாக்கிய ஒரு செய்தி, இந்திய வங்கிகளின் வாராக்கடன் (NPA - Non-Performing Asset) 1.76 லட்சம் கோடி என்பது. இந்த 1.76 லட்சம் கோடிங்கறது ஆடிட்டருங்களுக்கு ரொம்ப பிடிச்ச தொகை போல இருக்கு. 2ஜி ஊழலுக்கும் அதே அமௌண்ட்டு, நிலக்கரி ஊழலுக்கும் கிட்டத்தட்ட அதே அமௌண்ட்டு, இப்போ வாரா கடனுக்கும். சரி, அதை விடுங்க. நாம விஷயத்துக்கு வரலாம்.


இந்திய பொருளாதாரம் மிக பெரிய சரிவை நோக்கி போயிட்டு இருக்கிறது நமக்கெல்லாம் தெரியும். டாலருக்கு எதிரா இந்திய ரூபாய் 65ங்கற நிலைக்கு போயிருச்சு. தங்கம் பவுனுக்கு 24,000 ரூபாயை தாண்டிடுச்சு. பங்கு சந்தையில் ஒரே நாளில் 2.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. இப்படியான செய்திகள் நமக்கு சொல்ல வர்றது என்னன்னா, இந்திய பொருளாதார மந்த நிலைங்கறதில் (Economic Recession) இருந்து பொருளாதார நெருக்கடியை (Economic Emergency) நோக்கி போயிட்டிருக்குங்கறது தான். ஆனா இதில் பயப்படுற அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏன்னா, இது நஷ்டம் இல்லை. வரவேண்டிய தொகை வராம இருக்கிறது, உற்பத்தி குறைப்பு, அபரிமிதமான இறக்குமதி, வரி ஏய்ப்பு (Tax Evasion) போன்ற காரணிகளால தான் இந்த நிலை. இதை ரொம்ப சுலபமா சீர் செஞ்சிட முடியும். ஆனா அதுக்கு உறுதியும் தொலைநோக்கும் கொண்ட ஒரு திறமையான அரசாங்கம் வேணும். அதுவும் இருக்கு. ஆனா செயல்பட முடியாம அதை ஏதோ ஒண்ணு கட்டி போடுது. அந்த ஏதோ ஒண்ணு தான் இப்போ பிரச்சனை.

உலகம் முழுக்க பொருளாதார மந்தநிலை இருந்தப்ப கூட நிமிர்ந்து நின்ன பொருளாதாரத்துக்கு சொந்தக்காரங்க நாம. இப்பவும் அந்த திறன் இருக்கு. அதுக்கான காரணங்களை சுருக்கமா பார்க்கலாம்.

கரண்ட் டிஃபிசிட் (Current Deficit):

இந்திய பொருட்களை வாங்காம, இறக்குமதி பொருட்கள் மீதும், வெளிநாட்டு உதிரிபாகங்களை வெச்சு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுற பொருட்கள் மீதும் நமக்கு இப்போ அபரிமிதமான ஆர்வம் வந்திருக்குது. சாதாரண பேனா தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, போன், அட நாம போடுற ஷூ, ஷாம்பூ வரைக்கும் வெளிநாட்டு மோகம் பிடிச்சு ஆட்டுறதால் அந்த பொருட்களை அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்யுறோம். அதே சமயத்தில் இந்திய பொருட்களின் உற்பத்தி வெகுவா குறைஞ்சிருச்சு. வேலை நேரத்தில் முழு திறனோடு உற்பத்தி செய்யாம இருக்கிறது (பாதி நேரம் சோஷியல் நெட்வொர்க்கிலேயே போயிருது பாஸ். அப்புறம் எங்கே வேலை செய்யுறது?), தரமற்ற உற்பத்தி போன்ற காரணங்களால் பொருட்களின் உற்பத்தி விலை கூடி, இந்திய பொருட்களுக்கான சந்தை குறைஞ்சிட்டு வருது. யாரும் நம்ம பொருட்களை விரும்பலை. நாமளே விரும்பலை அப்புறம் தானே வெளிநாட்டுக்காரன்?

இதன் ரிசல்ட் என்னன்னா, இறக்குமதி மதிப்பு அதிகம். ஏற்றுமதி மதிப்பு குறைவு. இது ரெண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை தான் ‘கரண்ட் டிஃபிசிட்’ ன்னு சொல்லுவாங்க. இந்த வித்தியாசம் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு டாலர் தேவையும் தட்டுப்பாடும் அதிகரிக்குது. அதாவது அன்னிய செலாவணி கையிருப்பு குறையுது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைஞ்சிருச்சுன்னா, ரூபாயின் மதிப்பும் குறைய தொடங்கும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP – Gross Domestic Production Value), அன்னிய செலாவணி கையிருப்பு, தங்கத்தின் கையிருப்பு, கரண்ட் டிஃபிசிட்டின் அளவு இதெல்லாம் வெச்சு தான் மதிப்பிடுறாங்க.

தங்கம் இறக்குமதி:

சமீப காலமா திடீர் திடீர்ன்னு நிறைய நகைக்கடைகள் முளைச்சிட்டு வருது. இந்திய மக்களுக்கும் தங்கம் வாங்கும் ஆசை அதிகரிச்சிட்டு வருது. 1991-ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் பலனா இன்னைக்கு நிறைய தொழில் வாய்ப்புக்களும் கைநிறைய சம்பளமும் எல்லோருக்கும் கிடைக்க தொடங்கிருச்சு. அதனால் வீடு, வண்டின்னு வாங்கி போட்டு முடிச்ச்வங்க அடுத்ததா தங்கத்தை வாங்கி சேமிக்க ஆரம்பிச்சாங்க. அதோட இப்போதைய ரிசல்ட், அதிகமான நகை கடைகள் தோன்றி இருக்கு. அது யாருடைய பினாமிங்கற சர்வதேச அரசியல் விளையாட்டுக்குள்ளே எல்லாம் போக விரும்பலை. ஆனா இந்த அதிகப்படியான நகை கடைகள் மிக மிக அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செஞ்சு ஒவ்வொரு கடையிலும் டன் கணக்கில் ஸ்டாக் வெச்சிருக்காங்க. அதனால் தங்கம் இறக்குமதி அளவு அதிகரிச்சிருக்கு. ஆனா இங்கிருந்து ஏற்றுமதி குறைஞ்சிருக்கு. இது தங்க கையிருப்புக்கான கடனை அதிகரிச்சதால சமீபத்தில் இந்திய அரசாங்கம் தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிச்சதோட மட்டுமில்லாம, மக்களையும், தங்கம் வாங்காதீங்கன்னு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.

வரி ஏய்ப்பு (Tax Evasion) :

பில் இல்லாம வியாபாரம் பண்றது, குறிப்பா பெரும்பான்மை வியாபாரத்தில் ஈடுபடுற மளிகை கடைகள், கமிஷன் ஏஜெண்டு வகையறாக்கள், குறைந்த வரிக்காக குறைத்து மதிப்பிட்டு பதிவு செய்யப்படும் சொத்துக்கள், வருமான வரியை குறைக்க கணக்கில் காட்டப்படாத வருமானங்கள், விதிக்கப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரியை கூட ஒழுங்காக கட்டாத மக்கள்ன்னு வரி ஏய்ப்பு பல பல வகையில் தொடர்ந்து நடந்துட்டு தான் இருக்கு. இதன் விளைவு என்னன்னா, இந்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரி வருவாய் கிடைக்கலை. அதனால் திட்டங்களை தீட்ட பிற வரிகளை உயர்த்தியாகவேண்டிய நிலை. இது விலைவாசி உயர்வில் கொண்டு போய் விட்டுடுது. நாம ஓரிடத்தில் செய்யும் வரி ஏய்ப்பை சரிக்கட்ட இன்னொரு இடத்தில் கூடுதல் வரி செலுத்தவேண்டிய நிலை ஏற்படுது. இதனால் வரி சமநிலை இந்தியாவில் இல்லாம போயிருச்சு (Tax Imbalance). வரி சீர்திருத்தத்துக்காகவும், வரி வசூலுக்காகவும், நிறைய குழுக்கள் நியமிச்சு அதன் பரிந்துரைகள் கிடைச்சாலும், மக்கள் அதை ஏத்துக்கமாட்டாங்கன்ங்கறாதால் அதையெல்லாம் அமல் படுத்தாம இருக்கு அரசாங்கம். இன்னொரு பக்கம் ஹசன் அலி மாதிரியானவங்க கோடி கணக்கில் வரி பாக்கி வெச்சிருந்தாலும், அவங்ககிட்டேயும் வசூலிக்க தயங்கறாங்க. டெண்டுல்கர், சினிமா துறை மாதிரி நிறைய இடங்களில் வரி சலுகையும் கொடுத்து இருக்கிற வருவாயையும் குறைச்சிக்கிட்டாங்க. எல்லாம் சேர்ந்து நம்ம தலையில் தான் வந்து வீழுது.

வாரா கடன் (NPA – Non Performing Asset) :

வங்கிகள் கொடுக்கிற கடன்களை திருப்பி செலுத்தாதவர்களாள் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கிற வாராக்கடன் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட ரூ.1.05 லட்சம் கோடி ரூபாய் மொத்தமா ஒரு 30 நிறுவனங்கள் கிட்டே இருந்து மட்டும் வரணும். பாக்கி இருக்கிறது சில்லறை கடன்கள் (தனிநபர் கடன், வாகன கடன், வீட்டு கடன், விவசாய கடன், கல்வி கடன், தொழில் முதலீட்டு கடன் இத்யாதி இத்யாதி)

சில்லறை கடன்களை பொறுத்தவரை, கடன்களை கட்ட முடியாத சூழல் தான் காரணம். 2008-09 ல் ஏற்பட்ட உலக பொருளாதார முடக்கம் எல்லாரையும் பதம் பார்த்திருச்சு. அதனால் பலர் தொழிற்சாலைகளை மூடிட்டாங்க, கடன்களை கட்ட முடியாம சிலர் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. இப்படியான நிலை ஒருபக்கம்னா, கட்ட வாய்ப்பும் வசதியும் இருந்தும் கட்டாம இருக்கிறவங்க சிலர். இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெளிவா உணர்ந்தாலும், பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாதுன்னு கடுமையான நடவடிகை எடுக்கலை. அதில் ஒரு மனிதாபிமான நியாயம் இருக்குதுன்னு ஒத்துக்கலாம்.

பெரும் நிறுவனங்களின் வாரா கடனான 1.05 லட்சம் கோடியை வசூலிக்க அரசு காட்டுற தயக்கம் தான் யோசிக்க வைக்குது. நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும்போது அதை விட அதிக மதிப்புக்கு ஈடான சொத்துக்களையோ உத்தரவதத்தையோ வங்கிகள் வாங்கிக்கொள்ளும். வாரா கடனை அதன் மூலமா ஈடு செஞ்சுக்கலாம். ஆனா எந்த வங்கியும் அதை செய்யலை. சிறு கடன்களை போல, கட்ட முடியாத சூழலில் அவர்கள் இல்லை. கட்ட மனமில்லாத நிலையில் தான் இருக்காங்க.


உதாரணத்துக்கு விஜய் மல்லையாவை எடுத்துக்கலாம். அவருடைய கிங்ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டம் ஆனதால் அந்த நிறுவனத்துக்காக வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன் வாரா கடன் ஆகிருச்சு. பொருளாதார கணக்கு படி அது சரி தான். ஆனா, வங்கிகள் அடுத்து செஞ்சது தான் ஷாக். மீண்டும், நிதி சீர்திருத்தம்ங்கற பேரில் ஏற்கனவே இருந்த வாரா கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செஞ்ச்தோட கூடுதலா கடன் கொடுத்துச்சு. அதுவும் வரலை. சரி, அந்த கடனை அடைக்க முடியாத நிலையில் மல்லையா இருக்கிறாரான்னா, அப்படி இல்லை. அவருடைய யூ.பி குரூப்பின் (UB Group – Union Breweries, Distilleries, Union Batteries etc.,) பிற தொழில்கள் மூலம் அபரிமிதமான லாபம் கிடைச்சிருக்குன்னு அவரே அரசாங்கத்துக்கு அறிக்கை கொடுத்திருக்காரு. கிங்ஃபிஷரின் நஷ்டத்துக்கு அவர் தான் கடனை திருப்பி அடைக்கணும். பிற தொழில்களின் லாபத்துக்கும் அவர் தான் வரி கட்டணும். ஆனா கிங்ஃபிஷர் கடன் பார்வையில் மல்லையா கடனை கட்ட வழியில்லாதவர். மற்ற தொழில்களின் பார்வையில் அவர் அபரிமிதமான வரி செலுத்துபவர். இப்போ நிலுவையில் இருக்கும் சட்டங்களால், ஒரே நபரின் ஒரு நஷ்டத்துக்கு ஈடாக அதே நபரின் பிற வருமானத்திலிருந்து பொறுப்பு கேட்க முடியாது. அவரா முன்வந்து கட்டினால் தான் உண்டு. இந்த இடத்தில் தான் நிதிக்கொள்கையில் சீர்திருத்தம் தேவை படுது. இதே நிலை தான் அந்த 30 நிறுவனங்களுக்கும்.

அரசு அந்த 30 நிறுவனங்களின் பெயரை கூட வெளியிட மறுக்குது. அதே சமயம் தேனியில் கல்வி கடனின் இரண்டு டியூவை கட்டாத மாணவியின் ஃபோட்டோவை நடுரோட்டில் விளம்பரமா வெச்சாங்க. அரசு பாரபட்சம் பார்க்காமல் நாட்டு நலன் கருதி அந்த 30 நிறுவனங்களின் வாரா கடனையும் வசூலித்தாலே பாதி பொருளாதார பிரச்சனை தீரும். கருப்பு பணம், வரி ஏய்ப்பு ஆகியவையும் கட்டுப்படுத்தினால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பழையபடி 45 ரூபாய்க்கு கீழே வந்துவிட நிறைய வாய்ப்பு இருக்கு.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த கணக்கீடு (1.76 லட்சம் கோடி) சரிதானா? அல்லது 2ஜியில் சொதப்பின மாதிரி உல்லுலாயி கணக்கான்னு ஒரு கேள்வி இருக்கு இல்லே? உல்லுல்லாயி மாதிரி தான் இருக்கு. அடுத்த பதிவு வரைக்கும் வெயிட் பண்ணுங்க… விரிவா விளக்குறேன். 

Saturday, August 17, 2013

கோவையில் மோடி


ரும் செப்டெம்பர் மாதம் கோவையில் நரேந்திரமோடி பெரும் பேரணி நடத்தவிருப்பதான செய்தியுடன் விடிந்தது இன்றைய பொழுது. தமிழகத்திற்கு மோடி வருவது ஆச்சரியமில்லை. சமீப காலமாகவே இந்தியா முழுதும் பயணித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தான் அவர் தமிழகத்துக்கு வருகிறார். ஆனால் தலை நகர் சென்னை, பாஜக செல்வாக்காக இருக்கும் குமரி, திருச்சி போன்ற பகுதிகளையெல்லாம் விட்டுவிட்டு, சென்சிட்டிவ்வான கோவையை தேர்ந்தெடுத்தது தான் பல பல மறைமுக செய்திகளை சொல்கிறது.

அது 1998 பிப்ரவரி 14. நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். இரவு செய்தியில் அமிலம் தோய்த்து வந்தது அந்த செய்தி. கோவையில் தொடர் குண்டு வெடிப்பு. கோவை வந்த அத்வானியை குறிவைத்து தாக்குதல். பல பேர் மரணம். தொடர் கலவரம். தீவைப்பு என வந்துகொண்டு இருந்த செய்திகளெல்லாம் வெந்துகொண்டிருந்த மனதில் வேல்பாய்ச்சுவதாகவே இருந்தன. செண்டு பூத்த சோலைகளுள்ள கோவையில் வெடி குண்டு பூத்து கொன்று தீர்த்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அதுவரையிலும் தொழில் நகராக, வர்த்தக தலைநகராக விளங்கிவந்த கோவையின் சரிவு அப்போது தான் தொடங்கியது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. புகழ்மிக்க வர்த்தக நிறுவனங்கள் இடம் பெயர்ந்தன. தொழிலின்றி, நிம்மதியின்றி, எதிர்கால நம்பிக்கையின்றி பலரும் மனதளவில் ஓய்ந்துபோனதோடு, கொலை, கொள்ளை திருட்டு வன்முறை ஆகியவை பெருக தொடங்கின. இன்றுவரையும் அது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இத்தனை வருடம் கழித்து, எல்லா துயரங்களையும் துடைத்து தூர எறிந்துவிட்டு மறுமலர்ச்சியை நோக்கி மெல்ல மேலெழ தொடங்கியுள்ளது கோவை. கேரள எல்லை பகுதிகளிலும், பொள்ளாச்சி சாலையிலும் பல தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல முளைக்க தொடங்கி, மீண்டும் கோவை தன் பழம்பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் முன்னடி எடுத்துவைக்கும் இந்த வேளையில் தான் இப்படி ஒரு செய்தி. கோவையில் மோடியின் பேரணி.

மோடி பேரணி நிகழ்த்துவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிற எகத்தாள கேள்விக்கு என்னிடம் பதிலில்லை தான். ஆனால் என்ன ஆகிவிடுமோ என்கிற அச்சம் கேள்வி கேட்பவர்களின் மனதிலும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதை அவர்களால் மறுக்க முடியாது.


பாஜக இந்த தேர்தலை சந்திக்கும் விதமே அலாதியானது. தென் இந்தியாவில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி பா.ஜ.க. வட இந்தியாவிலும் மெல்ல தேய்மானத்தில் இருக்கிறது. கிழக்கிந்தியாவில் அதன் நிழல் கூட இன்னமும் வீழவில்லை. இந்த சூழலில், மேற்கு மாநிலங்களில் சிலவற்றில் மட்டும் கிடைக்கும் ஒரு குறைந்த சதவிகித வெற்றியை வைத்து இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோலோச்ச முடியாது என்பது நன்றாக தெரிந்ததால் தான், திறமையான அரசியல் அறிவுடைய, நிர்வாக திறன் மிகுந்த பலர் இருந்தும், மோடியை முன்னிறுத்துகிறது பா.ஜ.க

மற்ற தலைவர்களை விட மோடியிடம் உள்ள சிறப்பே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாகரீகமான பேச்சாலேயே வன்முறையை விதைத்து, செண்டிமெண்ட் ஓட்டுக்களை அள்ளும் கலை என பல சொல்ல கேட்டிருக்கிறேன். எங்கெங்கெல்லாம் பலவீனமான மனநிலை கொண்ட மனிதர்கள் உள்ளனரோ, எங்கே எளிதில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருக்கிறதோ, எங்கே எப்படி பேசினால் உணர்ச்சி வசப்பட்டு மக்கள் திரளக்கூடுமோ அவ்வாறான நகரங்களை குறிவைத்தே நரேந்திரமோடியின் பேரணிகள் நடப்பதை பலரும் உன்னிப்பாக கவனித்தே வருகிறார்கள். மங்களூர், ஹைதிராபாத் பேரணிகளும் அவ்வாறு திட்டமிடப்பட்டவையே.

தமிழகம் பொதுவாக அமைதிப்பூங்கா தான் எனினும், கோவை கொஞ்சம் விதிவிலக்கு. சமீப காலமாக தீவிரவாதிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாக கோவை திகழ்ந்துவருவதை பல பல செய்திகள் செவியிலறைந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒரு பேரிழப்பிலிருந்து மெல்ல மீண்டு சகஜ நிலைக்கு திரும்ப உத்தேசித்துள்ள மக்களை மீண்டும் நொறுங்க செய்வது எளிது என்கிற மனோநிலை பா.ஜ.கவுக்கு வந்திருக்கிறதோ என்கிற ஐயம் வேறு ஆட்கொள்கிறது.

செப்டம்பர் மாதத்துக்கு இன்னும் அதிக நாட்களில்லை. விழாக்காலம், பண்டிகைக்காலம் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டிய தருணத்தில், மனதில் கலக்கத்துடன் கழியவேண்டி வருமோ என்கிற அச்சம் கோவை மக்களுக்கு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. மோடி தமிழகத்தில் பேரணி நடத்துவதை தடுக்க தேவையில்லை. ஆனால் வேறு நகரத்துக்கு மாற்ற முயற்சிக்கலாம்.

பார்ப்போம். தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை.

Wednesday, July 17, 2013

நானும் கடவுளும்!

டவுள் குறித்த எனது கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது சொல்லிவந்தாலும், அது குறித்த விரிவான கட்டுரை எழுதுவேன் என்றெல்லாம் இன்றுவரை நான் எண்ணியதில்லை. எனினும் அப்படியான ஒரு சூழல் வந்து சேர்ந்ததை எந்த கணக்கில் வைப்பது?

எல்லா குழந்தைகளையும் போல எனக்கும் இறை நம்பிக்கை ஊட்டப்பட்டபடி தான் வாழ்க்கை தொடங்கியது. எனது அப்பா, முன்னாள் தீவிரமான திமுக காரர். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் வெளியேறி அதிமுகவில் கடைசி வரை இருந்து வந்தவர். அதனால் அவர் எனக்கு பகுத்தறிவு சிந்தனைகளையும், பக்தி மார்க்கத்தையும் சரிவிகிதத்தில் சொல்லி தந்திருந்தார்.

சிறுவயதில் இருந்தே எனது இஷ்ட தெய்வம் முருகன் தான். எப்போதுமே கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்வது முருகனிடம் தான். தமிழகத்திலுள்ள ஆறு படைவீடுகளுக்கும் சென்று தரிசித்திருக்கிறேன். என் அப்பா, எல்லா வருஷமும் ராணி முத்து காலண்டர் வாங்குவதே அந்த முருகனின் அழகுக்கு தான். எனினும் எல்லா தெய்வங்களிடமும் எனக்கு பிரியம் இருக்கிறது. இஸ்லாமிய, கிருத்தவ நண்பர்கள் அறிமுகத்தால் அவர்களது வழிபாட்டு தலங்களுக்கும் நிறைய சென்றிருக்கிறேன். வருடத்துக்கொருமுறையேனும் வேளாங்கண்ணி சென்று வருவது ஒரு வழக்கம். சென்னையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெசண்ட் நகர் சர்ச்சிலோ, லஸ் சர்ச்சிலோ நான் இருப்பேன். தெய்வங்களில் நான் பாகுபாடு பார்ப்பது கிடையாது. தெய்வம் தெய்வம் தான். தெய்வம் இருக்கிறதா எனக்கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், தெய்வசெயல்கள் பலவற்றை நான் நிறைய என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்.

கடவுள் விஷயத்தில் நான் ஒரு வகையில் கலைஞர் கட்சி. கடவுளை மறுக்கவில்லை. ஆனால் இது தான் கடவுள், இப்படி தான் வழிபடவேண்டும், இவர்களுக்கு மட்டும் தான் உரிமை, இன்னின்ன சடங்குகள் செய்யவேண்டும் போன்ற ஆதிக்கதன்மையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். பக்தி என்பது வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. எந்த கடவுளும், எந்த விதமான சாங்கியத்தையும் செய்ய சொல்லியதாக வரலாறில்லை. நாமாக ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட வழக்கங்கள் தான் அவை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

பத்தாம் வகுப்பில் ஒரு செய்யுள் வரும்.

“அல்லா என்பார் சிலபேர்கள்; அரன் அரி என்பார் சிலபேர்கள்

வல்லான் அவன்பர மண்டலத்தே வாழும் தெய்வம் என்பார்கள்

சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள்

எல்லாம் இப்படி பலபேசும் ஏதோ ஒரு பொருள் இருக்கின்றதே”

இந்த செய்யுள் தான் எனது நிலைப்பாட்டை ஓரளவுக்கு விளக்கக்கூடியது என நினைக்கிறேன்.

தூய பக்தி, அன்பு, உள்ளார்ந்த வேண்டுதல், பிரார்த்தனை ஆகியவை மிக அற்புதங்களை நிகழ்த்தி காட்டியதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதனால் கடவுள் இல்லை என ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால், அது தொடர்பான மூட பழக்க வழக்கங்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, கட்டுப்பாடுகளை, ஆதிக்க அடக்குமுறைகளை, வருணாசிரம வேறுபாடுகளை, வேதம் சொன்னதாக சொல்லி சொல்லி செய்யப்படும் புனை கற்பனை கதைகளை நான் ஏற்பதில்லை. புராணங்களை கூட அதன் கதை சொல்லும் திறனுக்காக தான் வாசித்தேன். ஆனால் அதை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

ராமாயணத்தை நம்பவேண்டும் என்றால், பேசும் கழுகு, பறக்கும் புஷ்பகவிமானம், தாவும் குரங்கு கூட்டம், மாய மான் என பலவற்றை நான் நம்பவேண்டி இருக்கும். அது இயலாத காரியம். கலைஞர் அவர்கள் 1970களில் காரைக்குடி கம்பன் கழகத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ராமாயண சொற்பொழிவு நடத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் கம்பனின் தமிழை வியந்தோதினார். இந்த ஒப்பீட்டுக்காக அனைத்து வடிவ, அனைத்து மொழி ராமாயணங்களையும் முழுமையாக கற்றவர். இன்றைய தேதியில் எல்லா வித ராமாயணத்தையும் அறிந்த ஒருவர் அவராக தான் இருக்க முடியும். புராணத்தை புராணம் என படிப்பதோடு சரி. அதை நம்பி செயல்படுவதில்லை. அதே கொள்கை தான் கிட்டத்தட்ட எனக்கும்.

என் அப்பா சொல்வார். “வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களின் தகவல்களினால் பிரித்தாளப்பட்டாலும், கிருஷ்ணர், இயேசு, நபிகள் நாயகம் ஆகியோரின் வாழ்க்கையில் பல ஒற்றுமை இருக்க காணலாம். மூவருமே ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. அதை ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு விதமாக சொல்லியிருக்கவும் வாய்ப்புண்டு” என்பார். மூவரின் வரலாறையும் படித்த பின், ஓரளவுக்கு அவர் சொன்னது சரியாக இருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். மூவரையும் ஒரு மன்னர் கொல்ல துரத்துகிறார், மூவரது சொற்பொழிவின் சாராம்சமும் ஒன்றே, மூவருக்கும் சீடர்கள், ஒருவர் மாட்டு தொழுவத்திலும், ஒருவர் ஆட்டிடையிலும், ஒருவர் ஒட்டக பட்டியிலும் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எல்லாம் ஒருமாதிரி கிட்டத்தட்ட ஒத்து வருவது போல நானே கற்பனை செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரை சிலர் காங்கிரஸ் காரர் என்றும், சிலர் திமுக காரர் என்றும், சிலர் அதிமுக காரர் என்றும் வெவ்வேறு கால கட்டத்தை ஆதாரம் காட்டி சொல்வதில்லையா? அது போல என நானே நினைத்துக்கொள்வேன்.

கர்த்தர் தன்னை கடவுள் என சொல்லிக்கொள்வதில்லை. ஜெஹோவா தான் கடவுள், அவர் உருவமற்றவர், நான் அவரது தூதன் மட்டுமே என்கிறார். இதையே தான் நபிகள் நாயகம் (சல்) சொல்கிறார். இறைவன் உருவமற்றவன். நான் இறையோதும் திருத்தூதன் என்கிறார். நாமும் கூட, சக்தி ஜோதிவடிவானவள், உருவமற்றவள் என்கிறோம். இன்னும் சொல்லப்போனால், உருவமற்ற கடவுளின் குறியீடாக மூன்று மதத்தவர்களுமே மூன்றாம் பிறையை தான் வைத்திருக்கிறார்கள் என்பது. எனவே எனக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நான் நிறைய பயணிப்பேன். அப்படியான பயணங்களில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயங்கள் நிறைய. அதில் குறிப்பிடத்தக்கது, கோவிலுக்குள் அனுமதியில்லாத தெய்வங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழக ஊரகப்பகுதிகளில் தான் நான் தெய்வங்களிலும் ஜாதி பிரித்து கோவிலுக்கு உள்ளிருக்கக்கூடிய சாமி, வெளியிலிருக்கக்கூடிய சாமி என பாகுபாடு காட்டப்படுவதை கண்டிருக்கிறேன். மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகன் போன்ற கடவுளர்களுக்கான மரியாதையும் வெவ்வேறானவை என்பது எனக்கு உண்மையில் ஆச்சரியம் தான் கொடுத்தது.

தெய்வங்களிலோ, பக்தர்களிலோ பாகுபாடு பார்ப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கலைஞர் ஒருமுறை சொன்னார், “கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் கடவுள் இருப்பதாக நம்பி வழிபடுவோரின் உரிமையை நான் பாதுகாக்கவேண்டும்”. அந்த வகையில் கோவில்களில் எல்லாம் ஒரு வேளையாவது பூஜை நடைபெற வேண்டும், முறையாக குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்றெல்லாம் ஆணையிட்டு, தமிழகத்தில் முதல்முறையாக இந்து சமய அறநிலைய துறை என தனியாக ஒரு துறையையும் ஏற்படுத்தி அனைத்து ஆலையங்களுக்கும் பாதுகாப்பு தந்தார். அதை அவரது தனிப்பட்ட கருத்தோடு இணைத்து பார்த்து வம்பளக்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பார்த்தால், அவரது அணுகுமுறையின் நாகரீகம் விளங்கும். “நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன். ஆனால் அதை இம்மக்கள் மீது திணிக்க மாட்டேன். மாறாக அவர்களது விருப்பம் வழிபாடு என்றால் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பேன்” என்கிற கலைஞரின் அந்த அணுகுமுறை எனக்கும் உடன்பாடான ஒன்றே. அப்படியான எண்ணத்திலிருந்த எனக்கு, சிலர் கோவிலுக்குள் செல்லக்கூடாதெனவும், சில இனத்து தெய்வங்களுக்கு கோவிலுக்கு வெளியே தான் இடம் எனவும் சொல்லப்பட்ட விஷயங்கள் ஆச்சரியத்தோடு சேர்த்து வெறுப்பையும் தந்தது.

வாதாபி கோட்டையில் மதிற்சுவரில் காவல் தெய்வமாக இருத்தப்பட்ட கணபதியை (எண்+கண+நாதன்=எட்டு திசை காவலன்; கண+பதி=திசைகளின் காவலன்) தளபதி பரஞ்சோதி பெயர்த்தெடுத்து தமிழகத்துக்குகொண்டுவந்து, பிள்ளையார்பட்டியில் வைத்து, பின்னர் கதைகள் மூலம் சிவன் குடும்பத்தில் சேர்ப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் காவல் தெய்வமாக யாழி (குதிரை உடல், யானை துதிக்கை) இருந்து வந்தது. பின்னர் சிற்சில கதைகள் கட்டப்பட்டு கணபதியை நாம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், இப்போதும் பெரும்பாலானோர் வீட்டு மதிற்சுவரிலும், ஊர் எல்லையிலும் மட்டுமே வைத்து வழிபட்டு வருகின்றனர்.
அப்படி கணபதிக்கு சில கதைகள் கட்டப்பட்டு வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதை போல, மதுரைவீரன், பொம்மி, கருப்பண்ணசாமி வகையறாக்களுக்கும் ஏதேனும் கதைகள் கட்டி கோவிலுக்குள் அனுமதித்தால் நன்றாக இருந்திருக்குமே என நான் பலமுறை நினைத்ததுண்டு.

மக்களில் சிலரே கோவிலுக்குள் நுழைய முடியாது என்கிற நிலையில், அவர்களை ஆலைய பிரவேசம் செய்த மரியாதைக்குரிய பெரியாரின் மண்ணிலிருந்துகொண்டு, மனிதரிலும், கடவுளரிலும் வேற்றுமை விதைக்கவும் சிலரால் முடிந்திருக்கிறது என்பதே ஒரு ஆச்சரியம் தான். இன்றைக்கு கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதை போராட்டமாக முன்னெடுத்து செல்லப்படுவதாக செய்திகள் படித்தேன். ஆலைய பிரவேசமோ, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதோ இறைவன் முன்னால் அனைவரும் சமம் என காட்டுவதற்கே அன்றி, வேறு பிடிவாதம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனாலும், கலைஞர் அவர்களே பல்லாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தும் கூட, ஆலையங்களில் பக்தர்களிடம் கட்டண அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டை களைவதற்கு எந்த சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

கேரள கோவில்களில் ஒரே வரிசை தான். கடவுளை தொழ வந்தவர் ‘யாராகிலும்’ அவர்கள் பக்தர்கள் என்கிற ஒரே வரையறையில் வைத்தே பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய மனநிலையும், பண்பாடும் தமிழகத்தில் வர வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை. தமிழக மக்களின் மனநிலையை மிக பண்பட்டதாக, முற்போக்காக மாற்றியதில் பெரும் பங்கு வகித்த கலைஞர் கூட இது விஷயத்தில் தோற்றுப்போனதாகவே கருதுகிறேன்.

என்னை பொறுத்தவரை, எந்த கோவிலென்றாலும் செல்வேன், மனம் உருகி பிரார்த்திப்பேன், என் சங்கடங்கள், வேண்டுதல்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருவேன். அவ்வளவு தான் எனக்கும் கடவுளுக்குமான உறவு. அதற்கான பரிகாரம், பூஜை, மந்திரம், மாந்திரீகம், ஸ்தோத்திரம், மண்சோறு, அலகு, மொட்டை இத்யாதி இத்யாதி போன்றவற்றை நான் அங்கீகரிப்பதில்லை. அதை ஆமோதிப்பதுமில்லை. முதலில் சொன்னது பக்தி. பின்னர் சொன்னது மூட நம்பிக்கை. இதையெல்லாம் செய்தால் தான் அது நடக்கும் என்றால் அதன் பெயர் வியாபாரம். நீ இதை செய்யாததால் உனக்கு கஷ்டம் என்றால் அது சிறுபிள்ளை தனம். கடவுளை இப்படியெல்லாம் நிர்பந்தங்கள் கொடுப்பவர் என வரையறுப்பதே கடவுளை இழிவுபடுத்தும் செயல் என கருதுகிறேன். இறைவன் அன்பு வடிவானவர். இறைவன் யாரையும் பாதுகாப்பதுமில்லை, யாரையும் அழிப்பதுமில்லை, யாரையும் துன்புறுத்துவதுமில்லை. ஆனால், நமது உள்ள குமுறல்களை அழுது தீர்க்க, யாரிடமும் சொல்ல முடியாதவற்றை கேட்டுக்கொண்டிருக்க, மொத்த மன பாரத்தையும் இறக்கி வைக்க அங்காங்கே வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்கள் அமர்ந்திருக்கிறார். என்னை பொறுத்தவரை கடவுள் அவ்வளவு தான்.

இறைவன் அதிசயங்களை செய்வார் எனில் அவனது வாசலில் அனுதினமும் யாசித்துக்கொண்டிருக்கும் யாசகர்களுக்கு என்றோ நல்லவழி காட்டி இருப்பார். எனவே அப்படியான அதிசய சக்தியாக எல்லாம் என்னால் அவரை காண முடியவில்லை. எதிர்த்து பேசாத, எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு தோழனை போலவும், எங்கிருந்தோ எனது நியாயமான ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுபவனாகவும், எனது துயரங்களை மெல்லமெல்ல துடைத்தெறியும் வலிமையை தருபவனாகவும் நானறியாமல் எனக்குள்ளே இயங்கிக்கொண்டிருப்பதாக மட்டுமே உணர்கிறேன்.

உன் ஆசைகளை கட. உனக்கு உள்ளே இருப்பான் இறைவன் என்கிற கட+உள் விளக்கத்தை விட, உன் ஆசைகளை அதிகரித்துக்கொண்டே இரு.. அதை அடையும் வழியை அவன் காட்டுவான் என்கிற தத்துவம் தான் எனக்கு இன்று வரை பயனளித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றை அடைந்ததற்கு நான் மட்டுமே காரணம் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை.

Printfriendly