Saturday, June 26, 2010

ராஜ்யசபா கனவுகள்!

ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து புதிதாக ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.

உறுப்பினர்கள் கணக்கு படி, அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும், திமுகவுக்கு நான்கு உறுப்பினர்களும் கிடைக்கக்கூடும்.. இதில் திமுக தனது ஒரு இடத்தை காங்கிரசுக்கு கொடுக்கும் என்பது ஊரறிந்த பரம ரகசியம்.

தமிழகத்தில் தங்களை புறக்கணித்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது என்று கொக்கரித்த பாமக, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தங்கள் இயக்கத்தின் செல்வாக்கு மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், ஜாதி ஓட்டுக்களை வைத்தே பெரும் சக்தியாக விளங்க முடியும் என்கிற நப்பாசையினாலும், பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளிடம் இருந்தும் சம தூரத்தை பராமரித்தது.  பென்னாகரம் தேர்தலில் தனித்து வெற்றி பெற்றால் அது பின்னாட்களில்  வரும் தேர்தல்களில் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளவும், அதிகப்படியான இடங்களில் போட்டியிடக்கூடிய அளவிலே இடங்களை பெற்றுக்கொள்ளவும் உதவும் என்பதால்,  தங்கள் இன ஓட்டுக்கள் அதிகம் இருக்கும் நம்பிக்கையால் பெரும் துணிவோடு தேர்தலை சந்தித்தது.

தோல்வி தான் எனினும், கவுரவமான தோல்வி என்று சொல்ல தக்க அளவிலே நாற்பதாயிரம் ஓட்டுக்களை பெற்று தனி சக்தியாக தாங்கள் அங்கே இன்னமும் விளங்கி கொண்டு இருப்பதை கம்பீரமாகவே பறை சாற்றி இருந்தனர்.  இன்னும் சொல்லப்போனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பெற்று இருப்பதன் மூலம் தங்களை பென்னாகரத்தில் நிலைப்படுத்தி கொண்டனர்.  எனினும் மாநில அளவில்?

தன குடும்பத்தில் இருந்து யாரேனும் பதவிகளுக்கு வந்தால் அவர்களை சவுக்கால் அடிப்பேன் என்று அறைகூவிய இயக்கம் அன்புமணியை ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர் பதவியையும் அனுபவித்தது.  மீண்டும் அப்படி நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற அதீத ஆவல் அகத்துள் இருந்தும், தனது இயக்கத்துக்கு தமிழகத்தில் இருக்கும் 'அதீத' செல்வாக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கணக்கிட்டு பார்க்கையில், தேர்தலை சந்திக்காமல் மக்கள் மன்றத்துக்கு வராமல் மேலவை உறுப்பினர் ஆவதே பாதுகாப்பானது என்கிற முடிவுக்கு இயக்கம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் யார் மூலமாக வருவது?

திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைப்பதாக பாவித்து இருவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தாயிற்று.  மீண்டும் சில சமாதான தூதுகள் அனுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.  அதிமுக அவசரமாக தனது இரண்டு உறுப்பினர்களையும் அறிவித்ததால், திமுகவை கேஞ்சிக்கொண்டிருன்தது பாமக.  திமுகவும் காங்கிரசும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துவிட நட்டாற்றில் நிற்கிறது பாமக.

ராஜ்ய சபா கனவில் இருந்த தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி (!) குழப்பத்தின் உச்சியில் இயலாமையுடன் இருந்து கொண்டிருக்கிறது.

இரு இயக்கங்களும் இத்தகைய ஒரு போன் தருனத்துக்காகவே காத்திருந்ததுன் போல, பாமகவை தனிமை படுத்தியதன் மூலமாக ஜாதி இயக்கங்களை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றனர்.  மேலும் சொந்த செல்வாக்கு என்று எதுவும் இல்லாமல், பிறர் முதுகை மட்டுமே நம்பி சவாரி செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் பாமகவுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.  ராஜ்ய சபா கனவு என்பது தனியே காண வேண்டியது அல்ல என்பதை இப்போது பாமக உணர்ந்திருக்கும்.

இதன் பிற விளைவுகள் சுவாரசியமானவை!

பாமகவின் ஆர்பாட்டம் முன்பு போல எடுபடாது
சொந்தமாக தங்களுக்கென சுய செல்வாக்கு இல்லாத\ஒரு இயக்கம் என்பது தெளிவாகி விட்டதால் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்
திமுக பரந்த மனப்பான்மை உள்ள கட்சி என்பதால் மீண்டும் தங்கள் அணியில் பாமகவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது, எனினும், இட ஒதுக்கீட்டு பேரன்களில் திமுகவின் நிலைப்பாடே இறுதியாக இருக்க கூடும். பேரம் பேசும் உரிமை இப்போது பாமவுக்கு இல்லாததாலும், அவர்களின் சுய செல்வாக்கு பட்டவர்த்தனம் ஆகி இருப்பதாலும், குறைந்த அளவிலே தான் இடங்கள் கிடைக்கும்.. அது தமிழகத்துக்கு பல வகையிலும் நல்லது.

ஒருவேளை, இந்த ராஜ்ய சபா கனவு மட்டும் பாமகவுக்கு வராமல் இருந்திருந்தால், அமைதியாக அரசியல் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்திருந்தால், பென்னாகரம் ஒட்டு எண்ணிக்கையை வைத்து திமுக, பாமகவுக்கு ஒருவேளை கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்க கூடும்.  சட்டமன்ற தேர்தல் வரை பாமக அடக்கி வாசித்து இருந்தால், அவர்கள் மீதான மரியாதை கூடி இருக்கும். செல்வாக்கு பற்றிய சந்தேகம் மெல்ல மெல்ல தணிந்து இருக்கும்.  ஆனால் ராஜ்யசபா ஆசை அவசரமாக இரு இயக்கங்களிடமும் தூது அனுப்பி கெஞ்ச வைத்து, தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி, இறுதியில் எந்த பலனும் இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழலுக்கு பாமகவை தள்ளி இருக்கிறது.

பாமக தனித்து விடபடுவது தமிழகத்துக்கு நல்லது எனினும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு தங்களை தாங்களே உட்படுத்தி கொண்டிருப்பது வித்தியாசமான விஷயம்.  ஆசை யாரை விட்டது?

No comments:

Post a Comment

Printfriendly