Thursday, December 31, 2009

புத்தாண்டு சிந்தனைகள்


வழக்கமா எப்பவும் செய்யுற அதே விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமா செய்யனும்ன்கறது இந்த புது வருஷத்து தீர்மானங்களுள் ஒன்னு!

ஒவ்வொரு வருஷமும் தீர்மானங்கள் எடுக்கறதும், அதை ஒத்திவெக்கறதும், பின்னர் கைவிடுறதும் ரெகுலர் மேட்டர் ஆயிருச்சு!

அப்பா இந்தவருஷத்துக்கான தீர்மானம் இதுன்னு சொல்லிட்டு ரெண்டே நாளில் அதை மறந்து வழக்கமான வேலைகளில் வழக்கமான முறையில் ஈடுபடறது தானே நம்ம பொழப்பே??

சரி, இந்த வருஷத்துக்கு என்ன தீர்மானம் பண்றதுன்னு நேத்து முழுக்க யோசிச்சு பாத்து, மேலே சொன்னபடி, எப்பவும் செய்யறதையே கொஞ்சம் வித்தியாசமா இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்!  அது தானே ஈசி?

Learning from the Past and Continuous Improvement தான் வாழ்க்கை! ஆனால் டிசம்பர் 31 ஆம் தேதி உக்காந்துட்டு இந்த வருஷம் என்ன எல்லாம் தப்புக்கள் பண்ணினோம், அந்த தப்புக்களை அடுத்த வருஷம் எப்படி தவிர்க்கறது, அப்படி தப்புக்கள் வராம எப்படி தற்காத்துக்கறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?  எந்த ஹோட்டல்லே  இன்னைக்கு என்ன பார்ட்டி, ஸ்பெஷல் கெஸ்ட் யாரு, பீஸ் என்னன்னு அலைஞ்சு திரியறதுக்கே நேரம் பத்தமாட்டேங்குது!

இப்போ புதுசா கொலம்பஸ் மாதிரி ரூட்டு தேடி அலையணும்!  காமராஜர் சாலை ஈசி ஆர் சாலை ரெண்டிலேயும் வாகன போக்குவரத்துக்கு இன்னைக்கு ராத்திரி தடா!  கால்நடையா(!) போயிக்கவேண்டியது தான்.

அந்த கஷ்டத்தை விடுங்க... நாம புத்தாண்டை பத்தி புலம்பலாம்!

ஒருபக்கம் நம்ம பிரண்டு ஒருத்தரு, இன்னும் ரெண்டு வருஷத்திலே உலகமே அழியப்போகுதாம் மச்சான், அதனால் எவ்வளவு என்ஜாய் பண்ணணுமோ பண்ணிக்கோன்னு சூதானமா அடுவைசு கொடுத்துட்டு பறந்துட்டாரு!  ஆனா புதுசு புதுசா வர்ற முதலீடுகளையும் வளர்ச்சி திட்டங்களையும் பாத்தா உலகம் அழியும்ங்கற நம்பிக்கை சுத்தமா எனக்கு இல்லை.  அதனால் நிதானமாவே யோசிப்போம்!

2009 எனக்கு ரொம்ப மறக்கமுடியாத வருஷம்!  எதையெல்லாம் நல்லா பண்ணனும்னு நெனச்சேனோ அதையெல்லாம் அக்ஷரம் பிசகாம சொதப்பி தொலைச்சேன்.  நிறைய பயணங்கள், நிறைய செலவுகள், நிறைய குழப்பங்கள், நிறைய நஷ்டங்கள், நிறைய சங்கடங்கள்ன்னு நெகடிவ் விஷயங்கள் அதிகமா இருந்தது.

இதுக்கு, சனி சரியா உக்காரலை, ராகு ராங்கா நிக்கிறாரு, கேது எது சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாருன்னு ஏகப்பட்ட அலப்பறை வேற.  அதுக்கு பரிகாரம் பண்ணினா அவங்க எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்கன்னு வேற சொன்னாங்க!  இப்படி பரிகாரம் பண்ணியே தப்பை திருத்திக்கலாம்னா நிறைய பரிகாரம் பண்ணலாமேன்னு தோணிச்சு!

இந்த அஜால் குஜால் வேலையெல்லாம் தூக்கி தூரப்போட்டுட்டு, ஒழுங்கா எதை எப்படி செய்யணுமோ அதை அப்படி தெளிவா திருத்தமா செஞ்சு பாத்தா என்னன்னு ஒரு யோசனை. 

2010 இல் அதை அமல்ப்படுத்திட்டு அதன் சாதக பாதகங்கள் பத்தி அடுத்த வருஷம் இதே நாள் இதே நேரம் புலம்பி வெக்கறேன்.

நல்லபடியா புத்தாண்டு வந்து எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும்! என்ஜாய்!  

Wednesday, December 30, 2009

தமிழக தொழில் துறை !தமிழகத்தில்  துறையின் அதீத வளர்ச்சி அனைவராலும் அண்ணாந்து பார்க்கப்படும் உயரத்தை உடையது.  மிக மிக அபரிமிதமான தொழில் வளர்ச்சி இந்த குறுகிய காலத்திலேயே வந்து நிறைந்து இருக்கிறது!

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஹோசூர் ஆகியவை தான் தொழில் மையங்களாக இருந்தன.  வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக சமீபத்தில் தொழில் வளம் வரபெற்ற வரம் பெற்றன. இப்போது பின் தங்கிய பகுதிகளுக்கும் தொழில் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரிய வாய்ப்பு உள்ளதால், திருவண்ணாமலை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களை தொழில்மயம் ஆக்க முனைந்து இருக்கிறது தமிழக அரசு! வரவேர்கப்படவேண்டிய முயற்சி தான் ஒரு வகையில்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு புதிதாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறது. காண்க http://investingintamilnadu.com.  இந்த தளத்தில் இருக்கும் பெரும்பான்மையான தகவல்கள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகள்.  இத்தனைக்கும் கடந்த வாரம் தான் இந்த இணைய தலமே துவக்கப்பட்டது.  துவக்கும்போது சமீபத்திய தகவல்களை இணைத்து துவக்கி தொலைத்து இருந்தால் முதலீடு செய்ய வருவோருக்கு உதவியாக இருந்திருக்கும்.. இத்தனைக்கும் சென்னை தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக பெருமை பேசிக்கொண்டு வேறு இருக்கிறோம்.

2004-05 ஆம் ஆண்டைய புள்ளி விவரங்களை அள்ளி தெளித்து உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த இணைய தளம் முதலீடு செய்வோரின் கொஞ்சநஞ்ச ஆர்வத்தையும் முடக்கி போட்டுவிடக்கூடும்.

அதுபோகட்டும், இதுவரை முதலீடு செய்திருப்போரின் நிலை என்ன??

அமைதியான மாநிலம், ஆக்கப்பூர்வமான தொழிலாளர்கள், கடின உழைப்புக்கும், தெளிந்த விசுவாசத்துக்கும் பேர் போன மக்கள், நிலையான பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து வசதி என்று பல்வேறு நன்மைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு இப்போது ஒட்டுமொத்த பேரிடியாக வந்து சேர்ந்தது மின்வெட்டு.  சென்னையில் இரண்டு மணிநேரம், பிற பகுதிகளில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் வரை.  இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவு, நஷ்டம் போன்ற பலவற்றை பற்றி விரிவாக தனியே விரிவாக பேசவேண்டிய அளவுக்கு இருக்கிறது தற்போதைய முதலீட்டாளர்களின் நிலை.

வளர்ந்துவரும் பொருளாதார சூழலில் புதிய புதிய முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலமாக தமிழகம் மிளிருவதர்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்து செய்யவேண்டும்.

அதுவரை "புதிய" இணைய தளத்தை யாரேனும் திருத்த முனையுங்களேன்!

ஹெல்மெட் இம்சைகள்


நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம்.  நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு. எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது வண்டி.

தண்டலம் தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு.  அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில் என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட் எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால் கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார் ஆயிருச்சு.  முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு.

தப்பு என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே??  ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது.

அது பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க் அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங் வருமே... தலைவலி!!  மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட் என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.

இன்னொரு அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு.  பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம.  சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம்.  எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற நம்ம ஜனங்களும் தெரியாது.  ரெம்ம்ம்மம்ப  கஷ்ட்டம்ம்ம்ம்..

மழை காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.

இது தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற வலிகள் இனாம்.  என்ஜாய்!

சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்?  ஆமாம் கட்டாயம் தான்.

சாலை விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது.  அதை தடுக்கணும்னா என்ன செய்யணும்??

என்ன சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது.. வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம் செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???

இல்லீங்க...நீங்க எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்.. அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான் போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும் ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ  இதை எல்லாம் எதுவும் செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்!  இது தான் சட்டம்.

ஆக்சுவல்லா.. இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு.  அதாவது விபத்துக்களை குறைக்கறது பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால் ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு போட்டுச்சு நீதிமன்றம்.  இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை.  தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?

சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!

16-09-2005 அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும்.  டூ வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால் தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது.  ஹெல்மெட் என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.

ஆனா எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை.  அப்படி எந்த நிறுவனமும் கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை பத்தி கவலையே படலை.  பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை.  அதுக்காக வாதாட யாருமே இல்லை.

இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும் ஒரு உத்தரவை  போட்டுது. கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு.  அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.

இப்படியான சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு.  அவரை மக்கள் நல விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை!  அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும் பெரிசா எடுத்துக்கலை!

இன்னைக்கு எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க?? சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்?  (எல்லா சட்டத்தையும் அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது)

சரி... இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள் குறைஞ்சுதா??  இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா குறைஞ்சிருக்கு!

அரசோட கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால் ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை.  ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை.   சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும்.  சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள் இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.

அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!


Sunday, December 27, 2009

சாலை பாதுகாப்பு வார விழா!

சாலை பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது! வரும் ஜனவரி மாதத்துக்கான விழா ஏற்பாடுகள் இப்போதே களை கட்ட துவங்கி விட்டது.

அந்த ஒரு வாரம் மட்டும் (!) சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வர்ணங்கள் பூசுவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது, பிரச்சார இயக்கம் நடத்துவது, துண்டு அறிக்கைகள் கொடுப்பது, பேரணி நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொடுப்பது என்று காவல் துறை பரபரப்பாக இருக்கும்.  அந்த வாரம் முடிந்தவுடன் அவ்வளவு தான்.  நாடு சுபிட்சமாக ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் தங்கள் இயல்பான வேலையை செய்ய சென்று விடுகிறார்கள்.

அதிகரித்து வரும் விபத்துக்களுக்கான காரணிகள் என்ன??  நான்குவழிப்பாதையும் நடுவில் காங்கரீட் தடுப்பு சுவரும் அமைத்தும் கூட அதிகமான விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது??

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை எதிர் எதிர் மோதல்களோ, திருப்பங்களிலான மோதல்களோ கிடையாது.

பெரும்பாலான வாகனங்கள், வண்டியின் முன்பும் பின்பும் அவசியமான விளக்குகளை இயங்க செய்வதில்லை.  திரும்பும்போதும், நிறுத்தும்போதும் சைகையாக காட்டப்படவேண்டிய பல விளக்குகள் இயக்கப்படுவதில்லை.  இதனால் தான் பின்னே வருகிற வண்டிகள் மோதுவது ஏற்படுகிறது. 

அப்படியானால் அந்த வண்டிகளுக்கான தர சான்றிதழ்களை தருகின்ற போக்குவரத்து துறை அதிகாரிகளோ, அந்த வாகனம் இயங்கும்போது சாலையில் அவற்றை கண்காணிக்கிற கடமையும் அதிகாரமும் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளோ எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்??

நகரங்களை பொறுத்தவரை முன் முகப்பு விளக்குகளின் பங்கு விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று!  கண்கூசும் முகப்பு விளக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன, எனினும் எல்லா வாகனங்களும் ஒளிர் விளக்குகளுடனேயே விரைகின்றன.  இந்த விளக்குகளால் சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் குறுக்கே வரும் இரு சக்கர வாகனங்களோ, சாவகாசமாக சாலையை கடக்கும் பாதசாரிகளோ கண்ணுக்கு தெரிவதே இல்லை.

போதா குறைக்கு சாலைகளின் தரம் வேறு சந்தி சிரிக்கிறது!  ஒரே ஒரு கிலோமீட்டருக்கேனும் ஒட்டோ, குழியோ, மேடோ, சதுப்போ இல்லாத ஒரு சாலையும் சென்னையில் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு நன்கு தெரியும், கைப்பிடி அதிராத ஒரு பயணமும் சென்னையில் சாத்தியம் இல்லை என்று. அந்த லட்சணத்தில் இருக்கிறது சென்னையின் சாலைகளின் தரம். புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் கூட சமமான பரப்பில் சமதள சாலைகள் இல்லை என்பதன் வருத்தம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் மட்டுமே உணரப்படுகிறது!

எல்லா சாலைகளிலும் போதுமான வெளிச்சமும், சாலைகளின் ஓரத்தில் சாலை விதி சங்கேத குறிகளும் கட்டாயமாக வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது விதி.  இப்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசு தனியான ஒரு சட்டத்தையே போட்டு இருக்கிறது.  இதற்காக தனி நிதியத்தை ஏற்படுத்தி அந்த நிதியை கொண்டு 27 வகையான சாலை மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சட்டம்.  எத்தனையோ சட்டங்களை போலவே இந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது.  சாலை குறிப்புக்களோ, தடுப்புக்களோ, முறையான போக்குவரத்துக்கான வசதிகளோ இது வரையும் செய்து கொடுக்கப்படவே இல்லை.  எனினும் செலவுகள் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, எதற்காக என்றே தெரியாமல்.  பல
 பல சிக்னல்கள் சென்னை நகரில் வேலை செய்வதே இல்லை என்பது நகரா வாசிகள் அனைவரும் அறிந்த ரகசியம்.  அதை பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தமும் செலவும் செய்தும் இது வரை பயனில்லை.

சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் முறையான வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஒட்டாமல் இருப்பதும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம்.  சட்டென்று திரும்புவது, திடீரென்று நிறுத்துவது, போதிய எச்சரிக்கை விளக்குகளை உமிழ விடாதது போன்ற காரணிகளால் பிற வாகனங்கள் மோதலுக்கு உள்ளாகிறது.

நகரங்களில் வாகன சோதனை நடத்தும் காவலர்கள் ஆவணங்களை சரிபார்ப்பதோடு நின்று விடாமல், வாகனங்களின் / வாகன ஓட்டிகளின் இத்தகைய முறையற்ற தன்மைகளையும் தணிக்கை செய்வதும், அதற்கான கடுமையான நடவடிக்கைகளுமே ஒழுங்கான வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும்.

இரு சக்கர வாகன விபத்துக்களுக்கான காரணிகளை தவிர்க்க முனையாமல், குறைக்காமல், விபத்து ஏற்பட்டால் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கான ஹெல்மெட்டை கட்டாயம் செய்திருக்கிறது நீதிமன்றம்.  விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமே தவிர விபத்தில் மரணத்தை தவிர்ப்பது அல்ல!  இது எந்த செவியிலும் நுழையவேயில்லை. (ஹெல்மெட் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுத  அவசியம் ஏற்பட்டு இருக்கிறது... எனவே, விரைவில்!)

எத்தனையோ சட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறை நண்பர்கள் போக்குவரத்து சட்டங்களையும் அலட்சியம் செய்வதால் தான் இத்தனை மரணங்கள் வாகன விபத்துக்களில் ஏற்ப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே சற்றேனும் மனிதாபிமானம் கொண்டு இந்த ஒரு சட்டத்தையாவது கடுமையாக அமல்படுத்த முனையவேண்டும்.

முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது வாகன தணிக்கையும், அதில் சிக்கும் தவறு செய்வோருக்கு தக்க நடவடிக்கையும் எடுப்பது தான், வாகன போக்குவரத்தில் ஒழுக்கத்தையும் சுமுகமான சூழலையும் கொண்டு வரும்.

மனிதம் காப்பார்களா மரியாதைக்குரிய காவலர்கள்??

காவிரியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா?

"நாடெங்குமே செழிக்க,
நன்மையெல்லாம் பிறக்க,
நடந்தாய் வாழி காவேரி."

இது அகத்தியர் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் எட்டு திக்கும் பரவிய புகழ் பெற்ற பாடல்..


(ஆர்ப்பரிக்கும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சி)


ஆனால் உண்மையில் நடந்து அல்ல, ஆர்ப்பாட்டமாக தான் நுழைகிறாள் காவேரி நம் அன்னை தமிழகத்துக்குள்.  தருமபுரியில் நுழைந்து மீண்டும் கொஞ்சம் கர்நாடகம் சென்று திரும்ப தமிழகத்துக்குள் நுழைந்து பின் நில்லாத ஓட்டம் தான் கொள்ளிடம் வரை.


ஆனால் வளம் கொழிக்க, வழி சிறக்க வந்த காவிரியை நாம் முறையாக தான் பயன்படுத்தி கொள்கிறோமா?


உபரி நீரோ, மழை நீரோ எதோ ஒன்றை எல்லா வருடமும் கர்நாடகத்தில் இருந்து காவிரி தமிழகத்துக்கு கொண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.  அப்படி சில மாதங்களில் மட்டும் கிடைக்கும் சில டி.எம்.சி தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்??  சேமிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததால், தண்ணீர் வரும்போது எவ்வளவு உபயோகிக்க முடியுமோ 'அதை மட்டும்' உபயோகித்து மீதத்தை வீணாக கடலில் வீணடித்து வாளாவிருக்கிறோம்.   நீர் வரும் வேளைகளில் அதனை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை தமிழகம் எடுக்கவேயில்லை.(மேட்டூர் நீர்தேக்கத்தின் எழில் வடிவம்)

தமிழகம் வந்து சென்று மீண்டு திரும்பும் இடத்தில் மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இருக்கிறது.  இது வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது.  அங்கே ஒரு நீர்த்தேக்கம் இருந்தால் தான் (அப்போதைய)ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் விவசாய தேவைக்கும் நீர்தேவைக்கும் உதவியாக இருக்கும் என்று அறிந்து கட்டப்பட்டது.  இந்த அணையின் மூலமாக பாசன வசதிக்கும், மின் உற்பத்திக்கும் குடிநீர் தேவைக்கும் நீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  சேலம், ஈரோடு மாவட்டங்கள் இதனால் பயன் அடைகின்றன.


சரி, மேட்டூரில் இருந்து விடப்படும் நீர் நேராக எங்கே செல்கிறது??


(திருச்சியில் முக்கொம்பு அணை)

 மேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் தங்கு தடை எதுவும் இன்றி நேராக சென்று அடைவது திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருக்கும் தடுப்பணைக்கு தான்.  அதுவரை நில்லாமல் ஒரு ஓட்டம் ஓடுகிறாள் காவேரி.

மேட்டூரில் இருந்து முக்கொம்பு வருவதற்குள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி என்று நான்கு மாவட்டங்கள் கடக்கிறாள்.  மேலும் பவானி, நொய்யல், அமராவதி என்று மூன்று சகோதரி நதிகளையும் தன்னுடன் இணைத்து கொள்கிறாள்.

நான்கு மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் காவிரிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு தடுப்பணையாவது கட்டி தொலைத்து இருந்தால், அந்தந்த மாவட்டங்களின் பாசன, நீர் தேவைகளை ஈடு செய்திருக்க முடியுமே?? ஆனால் அதை செய்யக்கூடிய நிலையை நாம் அடையவே இல்லை!  நமக்கு எப்போதுமே எதிர்கால சிந்தனை என்பதே இல்லை!

ஒவ்வொரு மாவட்டத்திலும் அணைகள் கட்டி, வாய்க்கால்கள் வெட்டி, ஏரி குளங்கள், நீர்தேக்கங்கள் அமைத்து, நீரை அங்கே கொண்டு சென்று சேமித்து வைத்திருப்பது அந்தந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும் என்பதை ஏனோ நாம் யோசித்து பார்ப்பதே இல்லை. 

நீர் வரும் காலங்கள் குறைவு. ஆனால் வருகிற நீர் மிக அதிகம். அதனை கடலில் வீணடிப்பதை விட, அங்கங்கே தேக்கி வைத்தால் என்ன என்கிற கேள்வி ஏனோ இத்தனை ஆண்டுகளில் நமக்கு எழாமலேயே போய்விட்டது.

முக்கொம்பு கடந்தால் அடுத்து காவிரி நிற்பது கல்லணையில்

 

இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய அணை.. எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அவன் கட்டி வைத்தது இன்று வரை நமக்கு பயன் கொடுத்து கொண்டே இருக்கிறது.  ஆனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்காக, ஏன் நமக்காகவே கூட என்ன செய்ய போகிறோம் என்பது புரிவதே இல்லை!

சோழ பேரரசில் நீர் தேவையின் முக்கியத்துவம் உணரப்பட்டதால் தான் கல்லணையில் இருந்து அங்காங்கே வாய்க்கால்கள் வேட்டி நீர்த்தேக்கங்கள் அமைத்து, அணையில் இருந்து நீரை எங்கெல்லாம், எவ்வளவு எல்லாம், நீரை தேக்கி வைக்க முடியோ அவ்வளவையும் தேக்கி வைத்து, மிச்சம் இருப்பதை, இதற்கு மேல் தேக்க முடியாது என்கிற நிலையில் உள்ள நீரை மட்டுமே கடலுக்கு அனுப்புவது என்று திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.  அந்த திட்டமிடல் தான் தஞ்சைவளநாட்டை தரணி புகழ் நெற்களஞ்சியமாக மாற்றி காட்டி பெருமை பேச வைத்து இருக்கிறது.

இதே போல, மேட்டூருக்கும், முக்கொம்புக்கும் இடையிலான பகுதிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நீர்தேக்கங்கள் அமைத்து வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நீர் தேக்கங்களை அமைத்து நீரை சேமித்து வைப்பது, அணையில் இருந்து நீர் தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்வது என்று திட்டமிட்டால், கர்நாடகத்தில் இருந்து கிடைக்கின்ற நீரை முழுமையாக கடலுக்கு வீணடிக்காமல் பயன்படுத்த முடியுமே?? 

கர்நாடகம் நமக்கு கொடுக்க வேண்டிய நீரை வரையறுக்கப்பட்ட அளவுக்கு கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால் அப்படி கிடைக்கிற நீரை நாம் முறையாக பயன்படுத்தி கொள்கிறோமா என்றால், இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது!  

கர்நாடகத்துக்கு எதிராக சதிராட முனையும் நமக்கு அதே நேரத்தில் சாதுரியமாக நீர் மேலாண்மையும் செய்ய முனைந்தால், தமிழகத்தின் நீர் இருப்பும் கூடும், தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரியின் மூலமான நீர்பாசனம் பெருகும்.

பிற மாநிலங்களோடு முண்டா தட்டுவதற்கும், அதை பேசி தமிழக மக்களை உணர்ச்சிக்கடலில் தள்ளி கொதித்தெழ செய்வதற்கும், உணர்ச்சிப்பிழம்பாக முழங்குவதற்கும், ஆர்பாட்டம் போராட்டம் போன்றவற்றை நடத்தி பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் இங்கே எத்தனை எத்தனை அரசியலாளர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே!  அவற்றில் ஒருவரேனும், தமிழக விவசாயிகள் நலனுக்கான நீர்ப்பாசன திட்டங்களை முன்வைத்ததுண்டா??  நீராதாரம் பெருக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததுண்டா?? 

நாடெங்குமே செழிக்க பாயும் காவேரியை நாம் தஞ்சைக்கான காவேரி என்று சுருக்கிக்கொண்டோமோ என்று ஐயமாக இருக்கிறது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக அரசு அமைகிறதோ அப்போதெல்லாம் தஞ்சை தரணியில் மட்டும் தூர்வாரும் பணிகளும் ஏரிகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  அது போதாது.

காவேரி  நாடெங்கிலும் நீர் கொடுக்க தயாராக தான் இருக்கிறாள்.. பயன் படுத்திக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா....அதற்கான திட்டங்களை யாரேனும் முன்னெடுத்து செய்வார்களா??? 

Saturday, December 26, 2009

ரவிகுமார் நூல்கள் வெளியீட்டு விழா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், அந்த கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருமான திரு ரவி குமார் அவர்களின் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டு இப்போது தான் இல்லம் ஏகினேன்!

எழுத்தாளர், சமூக ஆர்வலர், சிந்தனையாளர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொது செயலாளர் என்று பன்முகம் கொண்டவர் ரவிகுமார்.  அவரை நான் பேஸ்புக் மூலம் தான் அறிமுகம் செய்து கொண்டேன்.

விழா நடைபெற்றது தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம்.  மிதமான குளிரில் அளவான கூட்டம்.  அரங்கம் நுழையும் முன்னேயே தேநீரும் சுவீட்டும் கொடுத்தார்கள்... விற்பனைக்காக பரப்பி வைக்கப்பட்டு இருந்த எண்ணற்ற நூல்களில் நிதானமாக தேடி ஆராய்ந்து மூன்று நூல்கள் வாங்கி கொண்டு அரங்கம் நுழைந்தேன்.

எனது இருக்கைக்கு அருகில் இருந்த நண்பரை பார்க்க வந்த ரவிக்குமாருடன் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.  சில பத்திரிக்கைகளிலும், அவரது புரோபைல் படத்திலும் தெரிவதை போல அத்தனை வயதானவர் அல்ல.. மேலும் அந்த படங்களையும், அரசியல் பிரமுகர், சட்டமன்ற உறுப்பினர் என்கிற பின்புலத்தோடு வெள்ளை வேட்டி சட்டையில் அவரை கற்பனை செய்து சென்ற எனக்கு ஜீன்ஸ் & டிசைனர் ஷர்ட்டில் மிக மிக இளமையாக வளைய வந்த ரவிகுமார் ஆச்சரியப்படுத்தினார்.

விழா துவங்கியது.... தமிழ் தாய் வாழ்த்து இல்லாமலேயே!

தலைமை தாங்குவதற்காக திரு தொல்.திருமா வளவனும், முன்னிலை வகிக்க அமைச்சர் தங்கம் தென்னரசுவும் வருகை தந்திருந்தனர்.

நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ரவிக்குமார்.  நான்கும் நான்கு திசைகளில் பயணிக்கிறது. 

கற்றனைத்தூறும் - தமிழக கல்வி நிலை பற்றி;
சூலகம் - பெண்ணிய சிந்தனைகள் அவர்களது பிரச்சனைகள் பற்றி;
பிறவழி பயணங்கள் - கட்டுரைகளின் தொகுப்பு;
அவிழும் சொற்கள் - ஆச்சரியகரமாக அவரது கவிதை தொகுப்பு.

கற்றனைத்தூறும் நூலை அலசி ஆராய்ந்து விமரிசிக்க நாவலாசிரியர் இமையம் வந்திருந்தார்.  பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவை முன்னிலையில் வைத்துக்கொண்டே பள்ளி கல்வியின் அத்தனை குறைகளையும் ரவிகுமார் சார்பாக போட்டு கிழி கிழி என்று கிழித்தார்.  அவர் சொன்னவை அனைத்திலும் ஆயிரம் மடங்கு உண்மைகள் பொதிந்திருந்தது... அப்படி கல்வி துறையை விமரிசிக்க அவருக்கு உரிமை இருக்கிறது... அவர் ஆசிரியராக இருந்தவர். (அதை பற்றி தனியாக எழுதவேண்டும்).  இமையம் அவர்களின் நாவல்களில் இருக்கும் தெளிவான நடை, அவரது பேச்சில் இல்லாதது ஒரு குறை.  இத்தனைக்கும் எழுதி வைத்து தான் படித்தார்.. ஆனாலும் அந்த தமிழ் திக்கி திணறி வெளியேறியதை பார்த்தபொழுது அவரது மாணவர்கள் பற்றிய கவலை வந்தது எனக்கு!

சூலகம் நூலை விமரிசித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் (அழைப்பிதழில் முன்னால் என்று இருந்தது) வசந்தி தேவியின் உரை தெளிவாகவும் அழகாகவும் நோக்கத்தை விட்டு பிசிறாமலும் இருந்தது.  பெண்ணியம் பற்றிய நூல் என்று அட்டையில் போட்டு இருந்தாலும், அதன் கட்டுரைகள் பேசியது பெண்ணியம் மட்டுமே அல்ல, பெண்ணியத்தோடு சார்ந்த சமூக அவலங்களையும் பற்றி விரிவாக பேசுவதை தெளிந்த உதாரணங்களோடு எடுத்து காட்டினார்.

பிறவழி பயணத்தை விமரிசித்த ராமசாமியும், அவிழும் சொற்களை விமரிசித்த கவிஞர் சுகுமாரனும் செம்மையாக பேசினார்கள்... அந்தந்த நூலுக்கான தெளிவான விமரிசனம்.

இப்படியான இலக்கிய உரை கேட்டு எத்தனை நாளாயிற்று?? நன்றி ரவிகுமார் அவர்களே!

இந்த நூல்களை வெளியிட்ட உயிர்மை பத்திப்பகத்தின் மனுஷ்ய புத்திரனை இரண்டாவது முறையாக இங்கே சந்திக்கிறேன்.  ஏற்கனவே சாரு நிவேதிதாவின் பத்து புத்தகங்களை ஒரே விழாவில் ஒட்டுமொத்தமாக வெளியிட்ட விழாவுக்கும் சென்றிருந்தேன்.  உடல் ஊனம் எதற்குமே தடையல்ல என்று நிரூபித்த பெரும் சாதனையாளர் மனுஷ்யபுத்திரன்.  இதோ இப்போது  ரவி குமாரின் நான்கு புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  நூல்கள் அதிகமாக வெளியிட வெளியிட புது புது எழுத்தாளர்களுக்கான வாய்ப்பும், புது புது கோணங்களிலான எழுத்துக்கும் வாசல் திறந்து வைக்கப்படுகிறது.

அடுத்து வந்தது இன்னொரு ஆச்சரியம்.

சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் செம்மொழி மத்திய ஆராய்ச்சி நிலைய தலைவர் திரு எஸ். மோகன் தனது கருத்துரை நல்கினார்.  அவரிடம் தமிழ் சிக்கி திணறி மூச்சு முட்டிய அழகை காண (கேட்க?) கண் கோடி வேண்டும்!  செம்மொழி ஆராய்ச்சிக்கு இவர் தான் தலைவர் என்று அறியவந்தபோது தமிழ் மீதான பரிதாபம் இன்னமும் கூடியதை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை.  என்ன அடிப்படையிலே நியமனங்கள் நடைபெறுகின்றன அரசாங்கத்தில் என்கிற கேள்வி இன்னும் ஒரு முறை வந்து போனது மனசுக்குள்!

முன்னிலை வகித்த தங்கம் தென்னரசு, ஒரு அமைச்சராக தன மீதான விமரிசனங்களை பற்றி அங்கே விவாதிக்காமல் தவிர்த்தார்... அது கண்ணியம்...  என்ன விஷயமாக வந்தோமோ அந்த வேலையை மட்டும் செவ்வனே செய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார்..  நூலை பற்றிய அவரது கருத்துக்கள், ரவிக்குமாருடனான தனது நட்பு, ரவிக்குமாரின் சமூக சிந்தனைகள், சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணி, அவரது எழுத்தின் நேர்மை என்று பலவற்றை சிறப்பாக பேசினார்.  தனது பணியை சிறப்பாக செய்தார்.  இப்படியான அரசியல் வாதிகளை காண்பது அரிதாக இருக்கிறது!  பெரும்பாலும் அரசியல் வாதிகள் எந்த விழாவுக்கு போனாலும் வந்தவேலையை விட்டுவிட்டு சொந்த பிரதாபங்களை முழங்குவது தானே வழக்கம்??

அடுத்ததாக வந்தார் திருமா... அவரது பேச்சை முதல் முதலாக இப்போது தான் கேட்கிறேன்!  கணீர் குரல்.  இன்றைய தினத்துக்கு சிறப்பான பேச்சாற்றல் கொண்ட அரசியல் வாதிகளில் குறிப்பிடத்தக்கவர் அவர்.

ரவிக்குமாருடனான தனது உறவு, கட்சிக்காக ரவி செய்த செயல்கள், அவரது பெருமை என்று பலவற்றை பேசினார்... பின்னர் நூல் விஷயங்களுக்கு வந்தார்.   நேரமின்மையால் நான் அதிக நேரம் இருந்து கேட்க முடியாமல் போனது ஒரு பெரும் குறை!

ஜூனியர் விகடனில் ரவிகுமார் எழுதி வரும் தொடர்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்..  அவர் எங்கேயும் எப்போதும் தனது கட்சி சாயத்தையோ, அரசியல் நிலைப்பாட்டையோ, கட்சியின் கொள்கையையோ எழுத்தில் வடித்து வைக்க மாட்டார்...  எதை பற்றி எழுதுகிறாரோ, அதனை நடுநிலையோடு தீக்கமாக உறுதியாக குறிப்பாக நேர்மையாக எழுதுவார்.    இப்படி எழுதுவதற்கு அவரது தனிப்பட்ட திறம் ஒரு புறம் என்றாலும், கட்சியும் கட்சியின் தலைமையும் அதற்கு ஒத்துழைப்பு தராமல் அது சாத்தியமல்ல.. அந்த வகையில் திருமா பாராட்டாப்படவேண்டியவர்.  வேறு யாரேனும் ஆயின், "நம்ம கூட்டணியில் இருக்கோம், அப்படி இருந்திட்டே திமுக அரசை விமரிசிக்கிறானே" என்று ரவி மீது மாறுபட்ட கருத்தை கொள்வதற்கோ, அவரது எழுத்துக்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கவோ வைத்திருப்பார்கள்.  கட்சி வேறு, கட்சி உறுப்பினரின் சொந்த கருத்து வேறு என்கிற தீர்க்கம் திருமாவுக்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது...

இதே போல எல்லா கட்சி தலைமைக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கமும் வந்து தொலைக்கிறது!

Friday, December 25, 2009

நன்னீர் ஆகுமா கடல் நீர்??பார்க்க பார்க்க சலிக்காத விஷயங்கள் யானை, ரயில், குழந்தை என்கிற வரிசையில் கடலும் உண்டு!

அப்படி ஒரு சலிக்காத ரசனையோடு இன்றைக்கு கடல் கண்டு கொண்டு இருந்தேன்.  எங்கெங்கு காணினும் நீர் நிலை! ஓயாத அலைகள்! நுரைத்து சிரிக்கும் கடல் நீளமாக விரிந்து கிடக்கிறது!

கடல் கண்டு கொண்டு இருக்கும்போது மனதை கட்டு படுத்த தெரியவில்லை... இயற்கையை ரசிக்கும்போது அறிவை முடக்கி வைக்கவேண்டும் என்பது எவ்வளவு சொன்னாலும் மனதில் ஏறுவதில்லை...

இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே... இதனால் என்ன பிரயோஜனம் என்கிற யோசனை வளர்ந்து பெரிதாக துவங்கியது!

ஒரு பக்கம் நம் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக  குறைந்துவருகிறது; தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் அதை விட வேகமாக வளர்ந்து இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சி வருகிறது;  ஆறுகள் எல்லாம் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகிறது;

இன்னொரு பக்கம் உலகம் வெப்பமயமாவதன் காரணமாக இமையம் போன்ற பனிமலைகள் உருகத்துவங்கி வட மாநில நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டு இருக்கிறது;  கடல்மட்டம் இன்னும் இரண்டடி உயருமானால் கடலோர நகரங்கள் மூழுகும் என்கிற அபாய எச்சரிக்கை ஓலம் கேட்கிறது.

இரண்டுக்குமான ஒரே தீர்வாக பெரும்பாலானோர் முன் வைப்பது கடல் நீரை குடிநீராக்கும் / நன்னீராக்கும் திட்டம்!


(சென்னைக்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் நீராதார மையங்கள்)

அளவில்லாமல் இருக்கும் கடல் நீரை நன்னீராக மாற்றி தொழிற்சாலை தேவைக்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்தினால், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்க முடியும்.  கடல் நீரை குடிநீராகவே மாற்றி பயன்படுத்த முடியும் என்று பல நாடுகளும் நிரூபித்து இருக்கின்றன.  எனினும் தமிழகத்தில் அதனை எவ்வளவு தூரம் ஏற்று கொள்வார்கள் என்பது தெரியவில்லை.  அதனால் தொழிற்சாலைக்கும் விவசாயத்துக்கும் கடல் நீரை பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

சென்னை, கோவை, திருச்சி, ஹோசூர், மதுரை, கடலூர்,  தூத்துக்குடி ஆகியவை தமிழகத்தின் தொழில் நகரங்களாக இருக்கின்றன.  இதில்  சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களுக்கு தொழிற்சாலை தேவைக்காக கடல் நீரை பயன்படுத்தலாம்.

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாய தேவைக்கும் கடல் நீரை பயன்படுத்தலாம்.  இதன் மூலம் காவிரியை நம்பி மட்டுமே விவசாயம் என்கிற நிலை மாறும்.  உப்பு நீர் ஆயிற்றே  என்கிற தயக்கம் விவசாயிகள் மத்தியில் கொஞ்சம் இருக்கிறது.  இஸ்ரேல் நாட்டில் ஏற்கனவே விவசாயத்துக்கு கடல் நீரை நன்நீராக்கி தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.  எனவே "திட்டமிட்ட சாகுபடிக்கு", கடல் நீர் மிகுந்த உபயோகமாகவும் எப்போதும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இதன் மூலம், கடலில் கலக்கும் உபரி நீரை மிகுதியான அளவில் நாம் பயன்படுத்திக்கொள்ள்வதன் மூலம், கடல் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தி வைக்கவும் முடியும், கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தை குறைக்கவும் முடியும், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்கவும் முடியும்.  இது ஒரு வகையில் பல்நோக்கு திட்டம்.

தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற ஒரு கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது.  சென்னை மெரீனாவில் டீம் நிறுவனம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சில காலம் செயல்படுத்தி வந்தார்கள்.. என்ன காரணத்தாலோ அது திடீரென நிறுத்தப்பட்டது.


(மீஞ்சூரில் கட்டப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் - மாதிரி வரைபடம்)

மத்திய அரசு சார்பில் சென்னைக்கான குடிநீர் தேவைக்காக மீஞ்சூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக நிதி ஒதுக்கியபோதும், அப்போதிருந்த தமிழக அரசு அந்த திட்டத்தை நிராகரித்ததன் காரணமாக முடங்கியது.  பின்னர் வந்த இப்போதைய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தி திட்டம் பயன் தரும் நிலையிலே இருக்கிறது.

இது தவிர மாமல்லபுரம்  அருகே நெமிலியில் இன்னொரு நன்னீராக்கும் திட்டமும் தொடங்கப்படவிருக்கிறது!  மேலும் கல்பாக்கம் அணுமின் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலையம், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் போன்றவைகள் மூலமாக சில கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அவை அந்த அந்த நிறுவனங்களின் நீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் இவை போதாது.  தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்து கடல் நீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சி பயன்படுத்தினால் தான் தமிழகம் தப்பிக்கும் என்பது தான் இப்போதைய நிலை.

சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், கல்பாக்கம், கடலூர், சிதம்பரம், சிர்காழி, நாகபட்டினம், வேதாரண்ணியம், மனோரா, மீமிசல், தேவிபட்டினம், ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விஜயாபதி/மகேந்திரகிரி, கன்னியாகுமரி/வட்டக்கோட்டை, இரணியல் போன்ற பகுதிகளில் புதிய பெரிய அளவிலான நன்னீராக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியாகவேண்டிய நிலையில் இப்போது தமிழகம் இருந்து வருகிறது!

சென்னையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையும், தொழில் துறையும் அதிக அளவில் நீராதாரத்தை தீர்த்து வருகின்றன.  தமிழகமே ஒட்டுமொத்தமாக நீர் தேவையில் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது.  அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நதி நீரை நம்பியே நாம் அதிக காலம் ஓட்டமுடியாது என்பது இன்னமும் தமிழகத்தில் உணரப்படாமலேயே இருக்கிறது!

தமிழகம் இப்போதே தொலைநோக்கு பார்வையை கொண்டு வருங்கால சந்ததியினருக்கான திட்டங்களை ஏற்படுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது!  தற்கால தலைமுறைக்கே நீராதாரத்தை மேம்படுத்தவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது!

எனவே இனியேனும் நம் நீண்ட உறக்கத்தை கலைத்து செயல்பட்டாக வேண்டும்... செயல்படுமா தமிழகம்??? நன்நீராகுமா கடல் நீர்??

Thursday, December 24, 2009

கல் கண்ட கலைகள்!தமிழகத்தில் கல் வேலைப்பாடுகள் மிக பிரசித்தமானவை.. அப்படியான கலை வடிவங்களில் நான் கண்டு வியந்தவைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

மேலே உள்ள படத்தில் இருக்கும் தூண், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கிறது... விசேஷம் என்னவென்றால், ஒரே கல்லை பல தூண்களாக செதுக்கி இருக்கிறார்கள்...  கூடுதல் விசேஷம் என்ன வென்றால்,  ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை எனினும், ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சப்தத்தை கொடுக்கிறது!
திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் தாயுமான சாமி கோவில் மண்டபத்தில் இந்த சங்கிலியை பார்த்தேன்... நீங்கள் நினைப்பது போல அது இரும்பு சங்கிலி அல்ல.. கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி.. அதாவது ஒரு கல்லை சங்கிலி போல செதுக்கி எடுத்து இருக்கிறார்கள்!

இவற்றை கவனிக்க நீங்கள் தவறி இருந்தால், அடுத்தமுரைஎனும் கண்டு பிரமிப்பீர்களாக!

எம்.ஜி.ஆர் - ஒரு சகாப்தம்!


டிசம்பர் 23, 1987.

கிரிஸ்துமசுக்கான அதீத ஏற்பாடுகளுக்காக கோவையில் சில நண்பர்களுடன் இரவின் பெரும் பகுதியை கழித்துவிட்டு வந்து உறங்கினேன்!

மறுநாள் காலை இன்னும் சில வேலைகள் இருந்தது... ஆல் இந்தியா ரேடியோவின் அதிகாலை செய்தியில் அமிலம் தெளித்து வந்து விழுந்தது விசும்பலான வார்த்தைகள்!

"தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்!"

நம்ப முடியவில்லை!  எம்.ஜி.ஆருக்கு கூட மரணம் வருமா?? நினைத்து பார்க்கவே முடியவில்லை!  என்ன செய்வது என்றும் தெரியவில்லை!  குடும்பத்தில் ஒருவர் இறந்து போனதுபோன்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டோம்!

காலை பத்து மணிக்கு சென்னைக்கு இலவசமாக ஒரு ரயில் இயக்கப்படுவதாக அறிந்து அவசரம் அவசரமாக கோவை ரயில் நிலையம் சென்றோம்... ஆனால் அதற்குள்  ரயில் முழுமையாக நிறைந்து பிதுங்கி விட்டிருந்தது!

அந்த கோமகனின் இறுதி சடங்கை காணமுடியாமலேயே கடந்து போனது காலம்!

எம்.ஜி.ஆர்!

இந்த மூன்றெழுத்தின் சக்தி அளப்பரியது!  ஒவ்வொரு குடும்பத்திலும் அவரால் பயன் பெற்றவர்கள் என்று (நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அவரது சட்டங்கள் மூலமாகவோ, நல திட்டங்கள் மூலமாகவோ) ஒருவரேனும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தபோது, சென்னை எண்ணூரில், ஒளிவிளக்கு திரைப்படத்தின் பாடலை உச்ச ஸ்தானியில் ஒலிக்கவிட்டு, தங்களை தாங்களே எரித்து கொண்டு இறந்தவர்களை தூர நின்று பார்க்க நேர்ந்திருக்கிறது எனக்கு, என் சிறு வயதில்!

"உன்னுடனே வருகின்றேன், என்னுயிரை தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!"

இறந்து இதோ இருபத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது!  இன்னமும் அவர் இறந்ததை சிலரால் நம்ப முடியவில்லை!  எங்கேயோ உயிருடன் தான் இருக்கிறார்... மாறுவேடத்தில் வாழ்கிறார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருப்போர் பலர்... எம்.ஜி.ஆர் படத்துக்கு பூஜை அறையில் இடம் ஒதுக்கி வழிபாடு மேற்கொள்வோர் பலர்....

எப்படி சம்பாதித்தார் இத்தனை அன்பு?

அவர் மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின் வலிகளை உணர்ந்தவர், மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரியாமலேயே தீர்த்து வைப்பவர்...

ஒரு முறை திருச்சி திமுக மாநாடு! அப்போதெல்லாம் மாநாடு ஐந்து நாட்கள் வரை நடக்கும்!  நுழைவு கட்டணமும் உண்டு!  எல்லா ஊர்களில் இருந்தும் வண்டி வாகனங்களில் மாநாட்டுக்கு வந்து மாநாட்டு பந்தலிலே தங்கி இருப்பார்கள் தொண்டர்கள்!

ஒரு நாள் விடிகாலை, மறுநாள் நிகழ்வு குறித்தான ஆலோசனைக்காக அண்ணா, கருணாநிதி,சம்பத் போன்றோர் மாநாட்டு திடலுக்கு வந்தபோது திடல் அருகே பெரிய அளவிலே சமையல் நடந்து கொண்டு இருந்ததாம்.... விசாரித்தால் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருக்கும் தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் தன சொந்த செலவில் உணவு தயார் செய்து கொண்டு இருந்தாராம்.....

அந்த தொண்டர்களுக்கே அப்போது அது தெரியாது!  அவன் பசி பற்றி அவன் உணரும் முன்பே உணர்த்து அதை தீர்க்க முற்பட்டவர் எம்.ஜி.ஆர்!  அந்த குணம் தான் தன்னை பற்றி கவலைப்பட ஒரு தலைவன் இருக்கிறான் என்று எல்லோருக்குள்ளும் நம்பிக்கை தந்தது!

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோழுது, அதனை பார்வையிட்டு செப்பனிட அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரான காளிமுத்துவை அனுப்பினாராம் எம்.ஜி.ஆர்.  ஆனால் மழையில் வழி தெரியாமல் நீண்ட நேரமாக அங்கே நின்றுகொண்டிருந்த காளிமுத்து, வெகு நேரத்துக்கு பின்னால் யாரோ சிலர் வருவது அறிந்து தெம்பு அடைந்தாராம்.   வந்தது வேறு யாரும் அல்ல... எம்.ஜி.ஆரும் சில அதிகாரிகளும் தானாம்!  அமைச்சரை அனுப்பி விட்ட பிறகும் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டு, தானே களத்தில் இறங்கிய முதல் அமைச்சர் அவர்...  அவரும், காளிமுத்துவும், அதிகாரிகளும், பொதுமக்களுமாக அந்த நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை சீர்படுத்த துவங்கினார்கலாம்.. (இது கோவை பாப்பநாயக்கன் பாளையம் பொதுக்கூட்டத்தில் திரு காளிமுத்துவே சொன்னது)

இப்படி அவரை பற்றிய, அவரது மக்கள் நலம் குறித்தான செய்திகள் சில புத்தகங்கள் அளவுக்கு தேறும்!

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தமிழக அரசியலில் அவர் பெயரை சொல்லாமல் அவருக்கு வேண்டாதவர்கள் கூட பிழைக்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தவர் அவர்!

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மாநில வளர்ச்சி, தொழில் துறை மேம்பாடு என்று சகல துறைகளிலும் முற்போக்கான சிந்தனைகளால் தமிழகத்தை வேகமாக முன்னெடுத்து சென்றவர் அவர்!  இன்றைக்கு நாம் எல்லோரும் இந்த அளவுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றதற்கான முதல் புள்ளியை ஊன்றி வைத்தவரே அவர் தான்! 

மொத்த தமிழகத்தை தன சொந்த வீடாக கருத்தி, அனைவரையும் தனது குடும்பத்தினராக கருதி, அவர்களுக்கான தேவைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்!

எம்.ஜி.ஆரை பற்றி சொல்லிக்கொண்டே போவதானால் தீரவே theraathu!

வைரமுத்து "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலில் சொன்னதை போல "உலகத்தில் ஒரே ஒரு சூரியன் தான்; உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான்; உலகத்துக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்"

இந்த நினைவு நாளிலாவது அவரை நினைவு கூறி நன்றியுடையவனாக முயற்சிக்கிறேன்!!

Wednesday, December 23, 2009

விண்வழி பயணம்!

மொட்டை மாடியில் நின்று விமானத்துக்கு டாட்டா காமித்து குதூகலித்து குதித்த இளமை காலங்கள் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் கழிந்தபோது, விமான நிலையத்தை பார்க்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசையாக இருக்கவில்லை! விமானத்தை பார்ப்பது தான் ஆசையாக இருந்தது!அப்போது கோவையில் சிவில் விமானப்போக்குவரத்து துவங்கவில்லை. சூலூர் விமானப்படை விமான தளத்தில் இருந்து சில விமானங்கள் இயங்கி வந்தாலும், பயணிகள் விமானம் இயங்க அனுமதி இல்லை!

பின்னர் பீளமேடு விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து முதல் முதலாக வாயுதூத் விமான சேவை துவக்கப்பட்டது.. அப்போதும் பெரிதாக எந்த ஆர்வமும் எழவில்லை விமானம் பார்ப்பதற்கு!

ஏர்பஸ் கோவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு மும்பை (அப்போது பம்பாய்) -கோவை விமான சேவை துவங்கியபோது, விமான நிலையம் சென்று பார்க்கவேண்டும் என்று ஆர்வம் முதல் முதலில் எழுந்தது!

விமான நிலையத்தில் பார்வையாளருக்கு அப்போது அனுமதி இல்லை என்பதால் சைக்கிளில் நானும் எனது நண்பனும் சிங்கநல்லூர் வழி எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அடைந்து விமான நிலைய ஓடுபாதை முடியும் இடத்தில் காத்திருக்க துவங்கினோம்.

அடடடடடா....  விமானம் வந்து தரை இறங்கும்போதும்.... பின்னர் புறப்பட்டு விண்ணுக்கு எழும் போதும் பார்த்து பார்த்து பரவசப்பட்ட அந்த சந்தோஷம் சொல்ல முடியாதது!

பின்னர் காங்கிரீட் காடான சென்னையில் வேலை... வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம்.. பெரும்பாலும் பேருந்து.. அவ்வப்போது ரயில்... எப்போதேனும் அத்தி பூத்தாற்போல் விமானம்! (ஆமா "அத்தி" எப்போது பூக்கும்?? தனியே விவாதிப்போம்)

விமான பயணம் இப்போது எல்லோருக்குமே சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதால், நான் விமானத்தில் பயணித்ததை பெருமையாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை!  ஆனால் அந்த விமான பயணத்தின் காட்சிகள்... அந்த பரவச சிலிர்ப்பு!முதல் முதல் எனக்கான விமான பயணம் பூனே நகரில் தான் துவங்கியது... அவசர பயணத்தில் சென்னைக்கு ரயில் டிக்கெட் கிடைக்காமல் போன அதிர்ஷ்டம் விமானத்தை நோக்கி ஓட வைத்தது!  பின்னர் பல்வேறு பயணங்கள்... பல்வேறு நோக்கங்கள்... பல்வேறு தேவைகள்...

புனே விமான நிலையம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.. சின்ன விமான நிலையம்!  சுற்று வட்டாரத்தில் நம்மை வெட்டி போட்டால் கூட யாரும் கேட்க மாட்டார்கள்... அத்தனை பொட்டல் வெளி காடு!  கடை கன்னி எதுவும் கிடையாது!  மதியம் சாப்பிடாமல் ஏர்போர்ட்டுக்குள் போயி அங்கே ஏதாவது சாப்பிட்டு கொள்ளலாம்னு நினைத்து யானை விலையில் சோளப்பொறி சாப்பிட்ட அனுபவம் எல்லாம் சொல்லி மாளாத தனி கதை!

ஒரு வழியாக விமானத்தில் ஏறி அமர்ந்தாச்சு.. பேருக்கு ஏத்த மாதிரியே அது பஸ் மாதிரி தான் தெரிந்தது எனக்கு!

பேருந்திலாவது புஷ் பேக் வசதி கொண்ட சீட்டுக்கள் இருக்கும்.. இதில் அது கூட இல்லை... நெருக்கமான இருக்கைகள்...மிதமான ஏசி...ஆடம்பர விலையில் காப்பி... உள்ளுக்குள்ளேயே நடமாடும் ஷாப்பிங் காம்பிளக்ஸ் என்று வித்தியாசமான பயணமாக பல பயணங்கள் அமைந்தது...

ஏர்பஸ் விமானத்தை விட போயிங் விமானங்கள் ஸ்மூத்தாக பயணிப்பதாக எனக்குள் ஒரு உணர்வு!  ஏர் பஸ்ஸில்  அதிர்வுகளும் விண்ணில் திரும்புகையில் எல்லாம் ஒரு ஜெர்க்கும் சாதாரணமாக இருக்கிறது! போயிங்கில் அப்படியான அதிர்ச்சிகள் எதுவும் இல்லை! 

இன்னொரு விஷயமும் கவனித்தேன்... எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஏதேனும் ஒரு வகை விமானங்களை மட்டும் தான் வாங்குமாம்!  விமான பராமரிப்புக்கு ஒரே நிறுவனத்தை வைத்து கொள்ளலாமே என்பதால்!  இல்லை என்றால் ஒவ்வொரு நிறுவனமும் தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு வகை விமானத்துக்கும் ஒவ்வொரு நிறுவனத்தை பராமரிப்பு பணிக்காக வைக்க வேண்டி இருக்கும்!

கிங் பிஷர் நிறுவனம், ஏர்பஸ் விமானங்களை மட்டும் தான் வாங்குகிறது... ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போயிங் விமானங்களை மட்டும் தான் வாங்குகிறது... இரண்டு வகை விமானங்களையும் வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ்....

அதேபோல, தனியார் விமான நிறுவனங்களின் விமானிகளை விடவும் இந்தியன் ஏர்லைன்சின் விமானிகள் சிறப்பாக விமானத்தை இயக்குவதை பார்த்து இருக்கிறேன்... ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த விதமான அதிர்வும் இல்லாமல் மென்மையாக விமானத்தை அவர்கள் கையாளுவார்கள்!  (ஒருவேளை நான் பயணித்த விமானங்கள் அப்படியோ என்னவோ? யார் கண்டது?)

 ரொம்ப அற்புதமான விஷயமே, மழை மேகத்துக்கு மேலே பறப்பது தான்...  மேகத்துக்கு மேலே வெயிலும் மேகத்துக்கு கீழே மழையுமாய் ஒரு வித்தியாசமான வானிலையில் கொத்து கொத்தாக செம்மறியாட்டு கூட்டம் போல மழை மேகம் திரண்டு நிற்க, அதன் மீது பறந்து செல்வதன் சுகம் அனுபவித்தால் தான் தெரியும்! 

அதிலும், நீங்கள் இறங்கும் இடத்தில் மழை பெய்து கொண்டு இருந்தால், மழை மேகத்துக்கு மேலே இருந்து மேகத்தை கிழித்து கீழ் வருவதன் சிலிர்ப்பு வார்த்தைகளால் வருணிக்க எனக்கு தெரியவில்லை! நதியாடும் நாணல் போல மேகம் நீண்டு நீண்டு அளைவது கொள்ளை அழகு!

சூரியனுக்கு எதிர்ப்பக்கம் பறக்க நேரும்போதெல்லாம், மேகங்கள் மீதான நம் விமான நிழலை சுற்றி முழுவட்டத்துக்கு வானவில் தோன்றுமே அது அதி அற்புதம்!  முழு வட்ட வானவில்லை அப்போது தான் நான் கண்டேன்!  அது ஒளி சிதறல் என்றும், மேகத்தின் நீர் திவலைகளில் சூரியனின் கதிர்கள் காட்டும் மாய பிரதிபலிப்பு என்றும் பக்கத்தில் இருந்தவர் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்.... அறிவியலை விட்டு தள்ளுங்கள்... சில நேரங்களில் மட்டுமாவது அறிவில்லாமல் இருப்பது தான் சுகம்!  அந்த சிலிர்ப்பான அனுபவத்தை அனுபவிக்க அறிவு ஒரு தடையாக இருந்து தொலைக்க கூடாது!
ஏற்காடு மலை மீதான பயணமும், சபரிமலை மீதான பயணமும் அடிக்கடி நிகழ்வதாலோ என்னவோ என்னை மிக கவர்ந்த ஒன்று.... (அப்போ இமைய மலை மீதான பயணம் எப்படி இருக்கும்??)  ஏற்காடு நம் கண்ணுக்குள் உட்கார்ந்து  கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்வதற்குள் கோவை நகரம் வந்து தொலைக்கிறது.

எண்ணூறு கிலோமீட்டர் வேக பயணம் என்பதின் உண்மையான அர்த்தம் அது தான்!  சேலத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் மூன்றரை மணி நேரம்... ரயிலிலும் அதே!  ஆனால் பத்து நிமிடத்தில் கோவையில் இறங்கி விடுவதால் காவிரியை பார்க்க தவறி விடுகிறேன்.. ஒவ்வொரு முறையும்!எந்த விமான நிலையத்துக்கு உள்ளே போக அனுமதியில்லாமல் வெளியே நின்று விமானம் பார்த்து ரசித்தேனோ, அதே பீளமேடு விமான நிலையத்துக்கு விமானத்திலேயே வந்து இறங்குகையில் ஒரு மிதப்பு வருமே மனசுக்குள்... அதுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது!  எதையோ சாதித்த திருப்தி!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள் தான் செயல்பாட்டில் இருக்கிறது... இதோ இப்போது புதிதாக சேலமும்!

தஞ்சை, வேலூர் விமான நிலையனகளையும் சேவையில் ஈடுபடுத்தவேண்டும்... அது தவிர இரண்டாம் நிலை நகரங்களில் ஹெலிபேடுகள் அமைத்து ஹெலிகாப்டர் வசதியும் ஏற்படுத்தவேண்டும்.. இவை தான் தமிழகத்தின் சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும்!

எப்போது விமானம் விட்டு இறங்கினாலும் ஒரே ஒரு ஆவல் மனசுக்குள்ளேயே ஏக்கத்துடன் இருக்கும்!

கடல் பார்க்கவேண்டும்... சுற்றிலும் கடல்... கடல் மட்டும்! வேறு எந்த நிலப்பரப்போ, கட்டிடங்களோ காண கிடைக்காமல் எங்கெங்கு காணினும் நீர்நிலையாக!  சுருங்க சொன்னால் பூமிப்பந்தின் ஒரு மேற்பரப்பை முழுமையாக பார்ப்பது!

எப்போது நிறைவேறுமோ இந்த அநியாய ஆசை??

Tuesday, December 22, 2009

தமிழகம் - வித்தியாசமான துறைகள்! - (பாகம் 2)


தேவையில்லாத வேலைகளை செஞ்சிகிட்டு மக்கள் பணத்தை வீனடிக்கிரத்தில் தமிழக அரசும் ஒன்னும் குறைஞ்சது இல்லை..

ஏற்கனவே வீடு கட்டறதா சொல்லி என்ன நடக்குதுன்னு இங்கே பார்த்தோம்..

இப்போ ஒரு கம்பெனியை பத்தி பார்ப்போம்!

TANCEM - இது அரசின் சிமெண்ட்டு நிறுவனம்... ஆலங்குளம், அரியலூர் பகுதிகளில் தலா ஒரு சிமெண்ட்டு தொழிற்சாலைகளும், விருத்தாச்சலத்தில் பைப்பு தொழிற்சாலையும் உள்ளது...  (இந்த நிறுவனத்தை பற்றி விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம்!)

இந்த நிறுவனத்தை முற்றிலுமாக மூட சொல்லி 2002 இலேயே ஆலோசனை வழங்கி இருக்கிறது... காண்க அறிக்கை.

அதற்கு பின்னர், அரசு தன தரப்பில் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அத்தனையும் எடுத்து, அந்த நிறுவனத்துக்கு எப்படியாவது உயிர்கொடுக்க முயற்ச்சிகள் மேற்கொண்டது!

சரி!  இந்த நிறுவனம் என்ன தான் செய்கிறது என்று கேட்கிறீர்களா??

சிமெண்ட்டு, சிமெண்ட்டு குழாய்கள் உற்பத்தி செய்கிறது... ஆனால் முன்பெல்லாம் (இப்போது மட்டும்??) அரசே இந்த சிமென்ட்டை வாங்குவதில்லை!  அரசாங்கம் செய்கிற கட்டுமானங்களுக்கோ, பிற கட்டுமானங்களுக்கோ, அரசு விடும் தெநடறுக்கோ கூட இந்த சிமெண்ட்டு வாங்கப்படவில்லை!  ஆனால் மாதாமாதம் அங்கே இருக்கும் ஊழியர்களுக்கும் நிர்வாக அதிகார்களுக்கும் முறையாக ஒழுங்காக சம்பளம் மட்டும் சென்று சேர்ந்துவிடும்!

விற்பனையே அதிகம் இல்லாத ஒரு சிமேன்ட்டுகாக இத்தனை செலவு எதற்கு என்று தான் தணிக்கை துறை கேள்வி கேட்டது!  வெட்டியாக இத்தனை நிறுவனங்களை நடத்தி அதற்காக மானியம், ஊதியம் கொடுத்துக்கொண்டிருப்பதை விட, அவற்றை முற்றிலுமாக மூடிவிட்டால் அரசுக்கு நல்லது என்று சொன்னது அந்த அறிக்கை!

ஒரு வழியாக அந்த நிறுவனங்களுக்கு புத்துணர்வு அளிக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன... அதற்காக ஆனா செலவு கணக்கெல்லாம் கேட்கப்படாது!

இப்போதைய நிலைமை என்ன??

இது தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தொழில்துரைக்கான கொள்கை விளக்க உரை. அதில் கடந்த ஆண்டு டான்செம் நிறுவனத்தின் நிதி நிலைமை கொடுக்கப்பட்டு இருக்கிறது (பார்க்க பக்கம் 17).

அதன் படி ஆலங்குளம் சிமெண்ட்டு நிறுவனம் மூலம் மட்டும் 544.30 லட்சம் ரூபாய் நஷ்டம். மாயனூரில் உள்ள பைப்பு நிறுவனம் மூலம் 46.95 லட்சம் ரூபாய் நஷ்டம்.

நல்ல விஷயங்களும் உண்டு!

அரியலூர் தொழிற்சாலை மூலம் 1616.62 லட்சமும், ஆலங்குளம் சிமெண்ட்டு சீட்டு தொழிற்சாலை மூலம் 50.08 லட்சமும், விருதாச்சலம் பைப்பு தொழிற்சாலை மூலம் 6.10 லட்சமும், சென்னை தலைமை அலுவலகம் மூலம் (பொருட்கள் விற்பனை) 201.80 லட்சமும் லாபமும் கிடைத்து இருக்கிறது...   அதாவது ஒட்டுமொத்த லாபம் 1,283.35 லட்சம்!

மேட்டர் என்னன்னா!  வராக்கடன் அல்லது வரவே வராது என்று கணக்கிடப்பட்ட தொகை இந்த 1,283.35 லட்சத்தில் 1,022.84 லட்சம்... இதனால் நிறுவனத்தின் நிகர லாபம் 260.51 லட்சம் தான் இப்போது!

இந்த வாராக்கடன் என்பது வேறு ஒன்றும் இல்லை... இவர்கள் சிமென்ட்டை விற்கிறார்கள் அல்லவா... அதனை வாங்கியவர்கள் நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டிய தொகை... அதை அவர்கள் தரவில்லை... அதை வாங்க இவர்கள் என்ன முயற்ச்சிகள் எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை... ஆனால் அந்த தொகையை அப்படியே கழித்து இனி வரவே வராது என்று முடிவு செய்துவிட்டார்கள்!  அதாவது அந்த தொகைக்கான பொருட்களை 'அவர்களுக்கு' இலவசமாக கொடுத்துவிட்டார்கள்!  இது எப்படி இருக்கு!

சுருக்கமாக சொன்னால் மொத்த லாபத்தில் 79.70% வீணாக போய்விட்டது!  யார் பணம்?? வரிப்பணம்!

இதெல்லாம் ஒரு மேட்டரா என்று கேட்பவர்களும் இருக்கலாம்... தப்பில்லை.. ஏனெனில் அரசு நிறுவனம் என்றாலே நஷ்டம் தான் வரவேண்டும்... இது எவ்வளவோ பரவாயில்லை... லாபம் காட்டி இருக்கிறார்களே என்று சந்தோஷமும் படலாம்!

அரியலூர் தொழிற்சாலை தனது உற்பத்தியில் 72.05% தான் உற்பத்தி செய்திருக்கிறது! விருதாச்சலம் தொழிற்சாலை தனது உற்பத்தியில் 45.60% தான் உற்பத்தி செய்திருக்கிறது!

இனி.. வழக்கமான கேள்விகள்!

சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் அதிகாரிகள் அந்த வராக்கடனை வசூலிக்க என்ன செய்தார்கள்?

எத்தனையோ மானியமும், ஊக்கத்தொகையும் சலுகைகளும் கொடுத்தான் கூட தனது முழுமையான உற்பத்தி திறனை எட்டாமல் பாதிக்கும் குறைவாகவே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கிறதே... இந்த உற்பத்தி இழப்புக்கான செலவை ஏற்பது யார்??

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தில் இயங்கி, தொழிற்சாலைகளை மூடுமாறு தணிக்கை அதிகாரியே அறிக்கை கொடுக்கும் அளவுக்கு வந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன வகையான நடவடிக்கைகள் எடுத்தது?

அரசே சிமெண்ட்டு உற்பத்தி செய்யும் நிலையில், அரசு திட்டங்கள் அரசு ஒப்பந்தங்கள் போன்றவற்றுக்கு கட்டாயமாக அரசு சிமேன்ட்டைத்தான் உபயோகிக்கவேண்டும் என்று உத்தரவிடாமல் இருப்பது ஏன்?

இந்த நிறுவனங்களை மூடுவதன் மூலம், அரசுக்கான இழப்பு கணிசமாக மிச்சம் ஆகும் என்கிற நிலையிலும், தொடர்ந்து இந்த நிறுவனங்களை அரசு நடத்தி வருவது மனிதாபிமான அடிப்படையில் தான்... எனினும் அதில் பணி புரிபவர்களுக்கு அந்த உணர்வு வராததன் காரணமாக மீண்டும் குறைவான உற்பத்தியும், வராக்கடன் தள்ளுபடியும் நிகழ்கிறது! இந்த நிலையிலும் இன்னமும் அவர்களுக்கு மனிதாபிமானம் காட்டத்தான் வேண்டுமா??

தூங்கா நகர் மதுரை!

மதுரை!

இந்த நகரத்தை பார்க்கனும்னு எனக்குள்ளே ரொம்ப காலமா ஒரு வேட்கையே இருந்தது... ஆனால் முதல் முதல் நான் மதுரைக்கு போனது அவ்வளவு சுவாரசியமான விஷயமாக அமையலை!  வேலை விஷயமா எங்க கம்பெனியில் இருந்து போன அன்னைக்கு அதே நாள் சாயந்தரமே திரும்பி தொலைக்க வேண்டி இருந்ததால் மதுரையை ஓர விழியால் பார்த்துகிட்டே பயணிச்சது தான் மிச்சம்!


(மதுரை மீனாக்ஷி கோவிலின் தெற்கு வாசல்)

மதுரைன்னு ஒரு கவிதையே வைரமுத்து "பெய்யேன பெய்யும் மழையில்" எழுதி இருந்தாரு.. பாண்டியர் குதிரை குளம்படியும்னு அட்டகாசமான கவிதை... அப்படியே எனக்கு மனப்பாடம்!  கவிதைய படிச்சு முடிச்சதும் அந்த ஊரை ஒரு தடவையாவது பாத்துப்புடனும்னு ஒரு வெறியே வந்துச்சு!

அழகர் திருவிழா, இளங்கோவடிகளின் சிலப்பதிகார கதை, பாண்டியர் வரலாறு இதெல்லாம் படிச்சபோதும் அதே வெறி வந்து கொஞ்சம் கொஞ்சமா உக்காந்துட்டு இருந்தது உள் மனசுக்குள்ளே!

பின்னே ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது!

அப்போ நான் மதுரை போயி இறங்கினப்போ நாடு நிசி ஒரு மணி!  விடியறவரைக்கும் என்ன பண்றது எங்கே தங்கறதுன்ன்னு யோசனையோடவே மதுரைக்கு பயணிச்ச  எனக்கு மதுரை நகரம் தந்தது ஒரு தவுசன் வால்ட் ஆச்சரியம்....

சிம்மக்கல்லு பக்கத்தில் பரபரப்பா இயங்கிட்டு இருக்கு மார்க்கெட்டு, சலூனில் ஒருத்தர் அந்த நேரத்திலும் ஷேவிங் பண்ணிட்டு இருந்தாரு! (அவங்களுக்கு அப்போ தான் கொஞ்சம் ஒய்வு கிடைக்குமாம்!) டீ டிபன் எல்லாம் எந்நேரத்திலும் கிடைக்குது... ஒன்னும் குறைச்சல் இல்லை... பகல் மாதிரி தான்!

மதுரை காரவிங்க பேசுற அந்த இழுவையான மண் மனம் மாறாத ஸ்லாங் இருக்கே.. அதுக்கே கொடுக்கலாம்! அம்புட்டு அழகு!  வெள்ளந்தியா பேசுறாங்களா வெவகாரமா பேசுராங்கலான்னே புரிஞ்சுக்கமுடியாத அளவுக்கு ஒரு குழப்பமான சிநேகம் கலந்த பேச்சு!  அதிலேயும் அவங்க பேச்சுக்கு இடை இடையே அள்ளி தெளிக்கிற சில சொற்கள் இருக்கே... டைமிங் ரைமிங்! அதெல்லாம் ஒரு கலை! எம்புட்டு டிரை பண்ணினாலும் நம்ம நாக்குக்கு அது சிக்க மாட்டேங்குது!

மதுரை, விடிஞ்சாலும், விடியலைன்னாலும் ஒரே மாதிரியான பரபரப்பு தேன்! அடிதடி பரபரப்பு வன்முறை அது இதுன்னு ஒரு யுத்தக்களம் மாதிரி கற்பனை பண்ணி வெச்சிருந்த நகரத்தை பரம சாதுவா பாத்தப்போ சந்தேகமா இருந்தது!  அந்த மதுரை தானா இது??


(பெரியார் அருகில் இருக்கும் சர்ச்!)

முதலில் ஒரு பிரண்டை பாக்கறதுக்காக பெரியார் ஜங்க்ஷன் போனேன்... அங்கிட்டு ஒரு சர்ச் இருந்தது.. பாக்கும் போதே பளிச்சுன்னு இழுத்தது!  அதுக்கப்புறம் தான் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்!  பிரம்மாண்டமான கோவில்! அருமையான கலை நயம் மிக்க வேலைப்பாடுடைய கோபுரங்கள்!  மீனாக்ஷி கோபுரமும், ஆண்டாள் கோபுரமும் தான் நம்ம தமிழ்நாட்டிலேயே அழகாம்!  அப்புடியா??

மதுரை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம், வைகை ஆறுன்னு சில இடங்கள் தான் இருக்கு சுற்றுலா தலமா... மத்தபடிக்கு எல்லாமே ஆன்மீக தளங்கள் தான்!

மதுரையில் வெறுப்பேத்தின விஷயம் அந்த நெரிசலான போக்குவரத்து.. எதோ இப்பத்தைக்கு பைபாஸ் போட்டு இருக்கிறதால சிட்டி கொஞ்சம் சிரமம் இல்லாம இருக்கு... ஆனா நான் போனபோதெல்லாம் செம டென்ஷன் டிராபிக்.

பெரிசா எந்த தொழிற்சாலையும் நகரத்துக்குள்ளே இல்லை.. மதுரா கோட்ஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் தான் அங்கே பெரிய கம்பெனிகள்... மேலூர் போற வழியில் தான் நிறைய கம்பெனிங்க இருக்கு!  அதனால் கிட்டத்தட்ட மொத்த மதுரைக்காரவுங்களும் அங்கிட்டு தான் போறாயிங்க!

ஒரு ஏர்போர்ட்டு  இருக்கு...ஊருக்கு ஒதுக்குப்புறமா!  அங்கிட்டு போறதுக்கு கொடுக்கிற ஆட்டோ சார்ஜு இருந்தா மேட்ராசுக்கே பஸ்ஸில் போயிராலமப்புன்னு தெளிவு படுத்தினாங்க..!  அந்த பக்கமா ஒரே ஒரு பஸ்சு தான்  போகுதாம்...  அதுசரி!  காரில் வர்றவுங்க மட்டும் தானே பிளேனிலும் வருவாயிங்க... அவிங்களுக்கு என்னாத்துக்கு பஸ்சுன்னு நினைச்சாங்களோ என்னவோ!

மதுரை சின்ன ஊரு தாம்!  அங்கிட்டு திருநகர், இங்கிட்டு விசுவநாதபுரம், அப்படிக்கா நாகமலை,  இம்புட்டு தான்... ஆனா அந்த ஊருக்குள்ளே குறுக்கும் நெடுக்குமா எதனை சந்து எந்தனை வீதி... அத்தனையும் நிறைஞ்சு கிடக்குது கடைங்க கடைங்க கடைங்கன்னு!

பழமை மாறாத கட்டிடங்களுக்கிடையே இப்போ புதுசு புதுசா கண்ணாடி மாளிகைகளும் வர ஆரம்பிச்சு இருக்கு! 


(மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை)


எந்நேரமும் எங்கிட்டு போனம்னாலும் மதுரையில் இருந்து வண்டி கிடைக்கும்.. ரயிலானாலும் சரி,பஸ்சு ஆனாலும் சரி! 

மணக்க மணக்க இட்லியும் டிபனும் இருபத்து நாலு மணி நேரமும் கிடைக்குது...

மல்லி பூவு தான் பேமசு.. ஆனால் ரோஜா பூவும் அதிகமா விக்குதாம்!  ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பூ வியாபாரம் பண்றவிங்க  சொன்னாயிங்க!  இன்னமும் தாவணி, பாவாடி சட்டை பிள்ளைகளை மதுரையில் பாக்கலாம்...  அம்புட்டு கலாச்சாரம்!

புகழ்பெற்ற கல்லூரிகள் இருக்குன்னு சொல்றாங்க... ஆனால் யாரு பேசுனாலும் படிக்காதவிங்க பேசுறாப்புலேயே தோணுது!  அங்கத்த பேச்சு அப்படியாம்!

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் குடுக்காம இருக்கிறது! எதிர்கால தேவைகளை அனுசரிச்சு அதுக்கேத்த படிப்புக்களை முன்னெடுத்து செல்லாம இருக்கிறது! வருங்கால தொழிலுக்கு ஏத்தமாதிரி தங்களை மாத்திகாம மாணவர்கள் இருக்கிறது! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாம இருக்கிறது! அடிப்படை வசதிகள் பத்தி யோசிக்காமையே இருக்கிறதுன்னு, மதுரை இன்னமும் ஒரு வளர்ந்த கிராமம்ங்கற தோற்றத்தை தான் ஏற்படுத்துது! 


தமிழகமும் ரயில்வே துறையும்!


இன்றைய தினம் தமிழக முதல்வரால் சில புதிய ரயில்கள் தமிழகத்தில் துவக்கி வைக்க பட்டு இருக்கிறது!

நெல்லையில் இருந்து பிலாசபூருக்கு திருவனந்தபுரம் வழியாக வாரந்திர அதி விரைவு ரயில்...

கன்னியாகுமரியில்
 இருந்து ராமேசுவரத்துக்கு மதுரை வழியாக வாரம் மூன்று முறை இயங்கும் அதிவேக விரைவு ரயில்....

ஜம்முதாவியில் இருந்து மதுரை வரை இயங்கி வந்த விரைவு ரயில் நெல்லை வரை வரை நீட்டிப்பு...

சென்னை - மங்களூர் அதிவேக விரைவு ரயில் வாரம் மூன்று முறையில் இருந்து ஆறு முறையாக சேவை விஸ்தரிப்பு...

போன்ற துவக்க நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது!

நெல்லைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில் மகிழ்ச்சி.. எனினும், அவை கேரளம் வழியாக இயக்கப்படுவதால் தமிழகத்துக்கு என்று எந்த பெரிய நன்மையையும் இருக்கப்போவதில்லை!

கோவையில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதை இரட்டை வழி பாதையாகவும் முழுமையாக மின்வசதியும் செய்யப்பட்டு இருப்பதால் இன்னமும் எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் அந்த வழியாக இயக்கமுடியும்.. மேலும் அது கொங்கன் ரயில்வேயுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் மிக குறைந்த நேரத்தில் வட இந்திய நகரங்களுக்கு சென்று சேர இயலும்!

சென்னையில் இருந்து விழுப்புரம் வரைக்கும் மின்சார வசதியுடன் இரு வழிப்பாதை இயங்குகிறது... விழுப்புரம் திருச்சி இடையே ஒரு வழிப்பாதை தான்... எனினும் அது மின்வசதி செய்யப்பட்டு இருக்கிறது... இன்னமும் அது முறைப்படி துவக்கி வைக்கப்படவில்லை!  திருச்சி மதுரை இடையே இருவழிப்பாதையும், மின்மயமும் கோரிக்கை அளவிலேயே நின்றுபோய்விட்டது... மதுரை திருவனந்தபுரம் வழிப்பாதை பற்றி எந்த கோரிக்கையும் இல்லை!


(நெல்லை சந்திப்பில் இந்த வித்தியாசமான ரயில் இன்ஜினை பார்த்தேன்!)

இதற்கிடையே, விழுப்புரம் - மயிலாடுதுறை இடையேயான ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக இருக்கிறது என்றாலும், அந்த பாதை துவக்கி வைக்கப்படவில்லை!  கிழக்கு தமிழகத்தின் ஜீவாதார போக்குவரத்து வசதிக்கு அந்த ரயில் பாதை மிக மிக முக்கியம்!

துவக்க விழாவுக்கு  முக்கிய  பிரமுகர்களின் தேதி கிடைக்காமலேயே தள்ளி போன மக்கள் நல திட்டங்களின் எண்ணிக்கை நம் தமிழகத்தில் மிக மிக அதிகம்...

நாம் இப்போதைக்கு ரயில்வேயை பற்றி மட்டும் புலம்புவோமாக!

கோவை - பழனி - திண்டுக்கல் ரயில்பாதை அகலப்பாதை ஆக்கும் பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது... பணியின் வேகம் போதுமானதாக இல்லை!  விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் வழித்தடமும் அப்படியே!

விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கம் எல்லா வகையிலும் துவக்கத்துக்கு தயாராக இருந்தும் தேதி கிடைக்கவில்லை!

சேலம் - நாமக்கல் - கரூர்;  கோவை - சத்தி - சாம்ராஜ்நகர்; தருமபுரி - ஹோசூர்; போன்ற புதிய ரயில் திட்டங்கள் கோரிக்கை அளவிலேயே இருக்கின்றன.

(கோவை போத்தனூர் ரயில்வே பணிமனை அருகில் இந்த காட்சி படமாக்கப்பட்டது! எத்தனை காலம் உழைத்ததோ அந்த பழமையான ரயில் இஞ்சின்?)

கோவை நகரத்துக்கும் சென்னையை போலவே மின்சார புறநகர் ரயில் சேவை கோரிக்கையாக இருக்கிறது.. அது வந்தால், கோவை - பாலக்காடு; கோவை - பொள்ளாச்சி; கோவை - மேட்டுப்பாளையம்; கோவை - திருப்பூர் - ஈரோடு போன்ற வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் கோவைக்கு கல்வி / வேலை போன்றவற்றுக்கு வரும் ஆயிரக்கணக்கானோர் பயனடைய முடியும்.... அங்கே ரயில் பாதைகள் போதுமான போக்குவரத்து இன்றி இருப்பதாலும், குறிப்பிட்டுள்ள அந்த வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து போதுமான அளவில் இல்லாததாலும் ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன், எல்லோரும் பாதுகாப்பான விரைவான பயணம் செய்யவும் அது ஏதுவாகும்!

இத்தனைக்கும் கோவையில் இருந்து பாலக்காட்டுக்கு 20 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும்; கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும்; கோவையில் இருந்து திருப்பூருக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், இயங்கி வருகிறது.. கூட்டம் தான் குறைந்தபாடில்லை!

பொதுவாகவே தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் மிக மிக மெதுவாக அல்லது அலட்சியமாக நடைபெற்று வருகிறது....காரணம் நம் ஒற்றுமையின்மை! 

கேரளா போன்ற மாநிலங்களில், மாநில வளர்ச்சியை கவனத்தில் வைத்து எல்லா கட்சியினரும் ஒற்றுமையாக குரல் கொடுத்து அனைத்து திட்டங்களையும், புதிய ரயில்களையும் பெற்று கொள்கிறார்கள்!

(திருச்செந்தூர் ரயில் நிலைய நடைபாதை மேடையில் இருந்து கிளிக்கியது)

தமிழகத்தில் விடப்படும் ரயில்களால் தமிழகத்துக்கு பெரிதாக எந்த நன்மையையும் இருப்பதில்லை!

சென்னை - கோவை; சென்னை - மதுரை மார்க்கங்களில் ஒரு காலை நேர விரைவு ரயில் தேவை...  சென்னை - கோவை; சென்னை - திருச்சி; சென்னை - மதுரை மார்க்கங்களில் கூடுதலாக ஒரு இரவு ரயில் தேவை; சென்னை - நாகர்கோவில் மார்க்கத்தில் குறைந்தது இரண்டு ரயில்களாவது தேவை; இப்படி தேவைகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் தமிழகத்தில் இருந்து தேவைக்கான குரல்கொடுப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது!

எப்போது நம் தமிழகத்தை பற்றி சிந்திக்கின்ற நிலை இங்குள்ளோருக்கு உருவாவும்?

Thursday, December 17, 2009

SETC - அவசரப்பட்டுட்டேனோ??


போன வாரம் தான் நம்ம அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதி வெச்சேன்!

கொஞ்சம் அவசரப்பட்டுடேனொன்னு தோணுது இப்போ!

தொடர்ந்து ரெண்டு நாளா ரெண்டு விபத்து..

முந்தாநாளு ராத்திரி சென்னையில் இருந்து பெங்களூர் போன வண்டி வாணியம்பாடி கிட்டே ஒரு லாரி பின்னாடி இடிச்சு.. ஸ்டீரிங் பெண்டு ஆயி மேற்கொண்டு போக முடியாம நின்னு போச்சு... ஆளுங்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருந்திருக்காங்க டிரைவரும் கண்டக்டரும்... அந்த நேரம் பாத்து பஸ்சுக்கு பினாடி ஒரு வேன் வந்து டமார்னு இடிச்சதிலே அந்த பஸ்சு நகர்ந்து பஸ்சு முன்னாடி நிட்டுட்டிருந்த பயணிகள் மேலே மோதி அஞ்சு பேறு காலி, அதே இடத்திலேயே!

இது இப்படின்னா...

நேத்து ராத்திரி சேலத்தில் இருந்து ராமேசுவரம் போன பஸ்சு அரவாக்குறிச்சி கிட்டே பிரேக் டவுன் ஆகி நின்னுபோச்சு... அதே மாதிரி ஆளுங்களை இறக்கி வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருக்கிற நேரம் பாத்து ஒரு லாரி அந்த கூட்டத்துக்குள்ளே திடீர்ந்து புகுந்து இடிச்சு தள்ளினதுலே அஞ்சு பேறு மரணம்!

ரெண்டு நாளில் பத்து பேரு...

முதல் சம்பவத்தில், டிரைவரோட அஜாக்கிரதையால லாரி மேல மோதி இருக்காரு..
ரெண்டாவது சம்பவத்தில் வண்டியே பிராப்ளம்...

இப்போ, விரைவு போக்குவரத்து கழகத்திலே மெயிண்டனன்ஸ்  மேல சந்தேகமா இருக்கு!

பஸ்சு வாங்கி கொடுக்கறது அரசாங்கத்தோட வேலை! அதை சரியா செஞ்சிட்டாங்க!

ஆனா அதை பராமரிக்கிறது அந்த அந்த கொட்ட பணிமனை அதிகாரிங்களோட கடமை இல்லையா?? என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க??

டிரைவருங்களுக்கு போதுமான பயிற்சியோ, ஓய்வோ, இல்லாததும் ஒரு சின்ன குறை... தொடர்ச்சியா வேலை பாக்கவேண்டி இருக்கிறதால ஏற்படுற வெறுப்பு, சலிப்பு, இதோட சேர்ந்து ஒய்வின்மையால் இருக்கிற அசதி... இதெல்லாம் விபத்துக்கு சின்ன சின்ன காரணியாய் அமைஞ்சிடுது...

இனி மேலாவது, பேருந்துகளை ஒழுங்கா பராமரிக்கிறது, நீண்ட பயணத்துக்காக பணிமனையில் இருந்து வண்டியை எடுக்கும்போதே, முழுமையா பரிசோதிச்சு அதுக்கான கிளியரன்ஸ் கிடைச்சபின்னாடி எடுக்கறது, டிரைவருக்கு போதுமான ஒய்வு கொடுக்கறது, யோகா மாதரியான கவனம் கூட்டும் பயிற்சி கொடுக்கறதுன்னு செய்யலைன்னா, ரொம்ப கஷ்டம்!

Wednesday, December 16, 2009

புதிரான "திறந்த நிலை பல்கலை கழகம் "

ல்லோரும் பட்டப்படிப்பு படிக்கணும்னு ஒரு நல்ல யோசனையின் விளைவா பிறந்தது தான் "திறந்த நிலை பல்கலை கழக" முறை!

அதாவது... பத்தாம் வகுப்போ அல்லது அதற்கு கீழோ படித்து கொண்டிருக்கும் ஒரு மாணவன்/மாணவி (நாம இங்கே போதுமொழியாய் மாணவர்னே வெச்சுக்குவோம்) மேற்கொண்டு படிக்க முடியாதபடிக்கு குடும்ப சூழலோ, நோய்வைப்படுதலோ, பொருளாதார மந்த நிலையோ ஏற்பட்டு படிப்பு தடைபடுதுன்னு வெச்சுக்குவோம்..

அவங்க சில பல காலம் கழித்து, நல்ல நிலைக்கு வந்தப்புறம் - அல்லது சிறு வயசிலேயே வேலைக்கு போயி சம்பாதிச்சு குடும்பத்தை காக்க வேண்டிய சூழலால் படிப்பை விட்டு வேலைக்கு போயி ஒரு நல்ல நிலைக்கு வந்தப்புறம் - ஒரு உள்ள குறையாய் இந்த பட்ட படிப்பு ஆர்வம் மனசுக்குள்ளே ஒரு ஓரமா தங்கி கிடந்தது தவிதவிக்கும்!

அட... என்ன வசதி இருந்து, வேலை இருந்து என்ன.. ஒரு பட்டப்படிப்பு படிக்க முடியலையேன்னு...  இதுக்கோசரம் தான் தொடங்குனாங்க "திறந்த நிலை பல்கலை கழகம்".  உனக்கு முறையான படிப்பு இல்லேன்னாலும் பரவாயில்லை... 18 வயசு முடிஞ்சிருந்தா பட்ட படிப்பு, 21 வயசு முடிஞ்சிருந்தா பட்ட மேற்படிப்பு படிச்சு உன்னை நீயே மெருகேத்திக்கொன்னு, அற்புதமான திட்டம்!  ஆனா அதுக்காக எல்லோரையும் பட்ட படிப்பு படிக்க அனுமதிக்கலை... அவனுக்கு படிக்க ஆர்வம் இருக்கா.. புரிஞ்சுக்கிறானான்னெல்லாம் தெளிவா தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு முன்படிப்பு கொடுத்து அதுக்கு ஒரு தேர்வு வெச்சு அதில் பாசாகுற பிள்ளைகளை தான் பட்டப்படிப்புக்கு அனுமதிக்கிறாங்க!  அந்த முன்படிப்புங்கறது +2 ரேஞ்சுலே இருக்கும்.

இந்த திட்டம் மூலமா படிச்சு பட்டம் வாங்கி நல்ல வேளையில் சேர்ந்தவங்க, அட அரசாங்க வேலை, IAS, IPS, பாசாகி அதிகாரிகள் ஆனவுங்க அதிகம் பேரு.

இப்போ ஒரு சிக்கல் வந்து தொலைச்சிருக்கு!

தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் முதல்வரா இருந்தவரு இது போல "திறந்த நிலை பல்கலை கழகம்" மூலமா முதுகலை பட்டம் பெறவரு... அவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்தது செல்லாதுன்னு ஒரு நல்ல மனசுக்காரறு கேசு போட, நீதிமன்றம் அந்த முதல்வர் வேலைக்கு டாடா சொல்லிருச்சு!

இதுக்கிடையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் தேவையில்லாம ஒரு விளக்கத்தை பல்கலை கழக மானிய குழுகிட்டே கேட்டுது.... நாங்க அரசு பணிக்கு ஆள் எடுக்கறதா இருக்கோம்... திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலமா வாங்குற பட்டம் செல்லுமான்னு, கொஞ்சம் பாத்து சொல்லுங்கன்னு கேட்டுச்சு...

வந்தது வினை!

முறையா +2, PG, UG ன்னு படிச்சா தான் பட்டம் செல்லும், மத்தபடி திறந்த நிலை பல்கலை கழக பட்டமெல்லாம் செல்லாதுன்னு அவங்க ஒரே போடா போட, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் அப்படி படிச்சு தேர்வானவங்களை தனியே லிஸ்ட்டு போட்டு, உங்க படிப்பு செல்லாது.. சாரின்னு சொல்லிடிச்சு!

இப்போ புதுசா எடுக்கறவங்களுக்கு இந்த உத்தரவு சரி! ஏற்கனவே இந்த மாதிரி படிச்சு வேலையில் பதவியில் இருக்கிறவங்க கதி??? பதிலை காணோம்!

இப்போ புதுசா 38 நீதிபதிகள் தேர்வு வேற நிறுத்தி வெச்சிருக்காங்க!

தமிழக அரசு இதே மாதிரியான ஒரு சூழல் வந்தபோது, ரெகுலரா படிச்சாலும் சரி, திறந்த நிலை பல்கலை கழகத்தில் படிச்சாலும் சரி, படிச்சு பட்டம் வாங்கிட்டா அவரை பட்டதாரின்னு ஒரே தராசில் வெச்சு தான் பார்க்கனும்னு தெளிவா ஒரு உத்தரவை முன்னாடி போட்டு இருந்தது!

ஆனா இப்போ வந்திருக்கிறது நீதிமன்ற உத்தரவாச்சே?? ஒன்னும் பண்ண முடியலை...

இப்போ (வழக்கம் போல விடை தெரியாத) கேள்விகளுக்கு வருவோம்:

முதல் முதலில் "திறந்த நிலை பல்கலை கழகம்" திட்டத்துக்கு அனுமதி கொடுக்கும்போது, இந்த வித்தியாசங்கள் தெரியலையா??

காசு கொடுத்து வருஷ கணக்கில் படிச்சு எக்சாமையும் அர்ரியரையும் புராஜெக்ட் வர்க்கையும் முடிச்சிட்டு பட்டம் வாங்கி சந்தொஷப்பட்டவன் எல்லாம் பாவம் பண்ணினவனா??

UGC இப்போ கொடுத்து இருக்கிற விளக்கத்தை அப்பவே கொடுத்து இருந்தா... நேரடியா PG பண்ணாம +2, UG, PG ன்னே பண்ணி தொலைச்சிருக்கலாமே... இப்போ கடந்து போன வயசை திரும்ப பெற முடியுமா??

பேப்பரில் எல்லாம் பக்கம் பக்கமா வருஷா வருஷம் விளம்பரம் செஞ்சிச்சே எல்லா பல்கலை கழகங்களும், அப்போ இந்த UGC என்ன பண்ணிட்டு இருந்தாங்க??

சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுன்னா... ஏற்கனவே திறந்த நிலை பல்கலை கழகத்தில் படிச்சிட்டு அதிகாரிகளா இருக்கிறவங்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஏன்?

திறந்த நிலை பல்கலை கழகத்தில் படிக்கிற பாடத்துக்கும், ரெகுலரில் படிக்கிற பாடத்துக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லாதபோது, ரெகுலர் பட்டம் செல்லும், திறந்த நிலை பட்டம் செல்லாதுன்னு சொல்றதுக்கான தெளிவான காரணம் என்ன??  இரண்டும் எந்த வகையில் வித்தியாசப்படுது??

பாதிக்கப்பட்டு நிற்கும் பல லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலம் என்ன??

தமிழக உயர் கல்வி துறையோ... மத்திய கல்வி துறையோ... பல்கலை கழக மானிய குழுவோ... மேன்மை தாங்கிய "நீதி" மன்றங்களுக்கோ..... யாருக்காவது இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுமா??

Printfriendly