Friday, August 31, 2012

தூக்குதண்டனை - அவசியமா?ப்போது சமீப காலமாக மீண்டும் ஓங்கி உயர்ந்து ஒலிக்க தொடங்கியிருக்கு மரணதண்டனை பற்றிய பெரும் விவாதம்! மரண தண்டனையே கூடாதுன்னு சிலரும், அது தவறில்லைன்னு சிலரும் பல பல பாய்ண்டுகளா அள்ளி வீசிட்டு இருக்காங்க! இதில் என் கருத்து என்னன்னு விரிவா எழுத சொல்லி ஒரு 'வம்பு'க்குரிய நண்பர் எனக்கு கோரிக்கை மெயில் கொடுத்திருக்காரு!

இப்போ ஏன் திடீர்னு மரண தண்டனை பத்தின விவாதம்னு ஒரு கேள்வி வருது! இந்திய சைக்காலஜியில் எதுவுமே நிலையானது இல்லை! எப்ப எல்லாம் பரபரப்பு வேணுமோ, அப்பப்ப மட்டும் கொஞ்சம் பரபரப்பை உருவாக்கிட்டு கொஞ்ச நாளில் அமைதியாயிருவாங்க. அப்படித்தான் இப்பவும்! மரணதனடனையே வேண்டாம்னு ஒரு வருஷம் முன்னாடி முழங்கிட்டு ஓய்ஞ்சவங்களுக்கு மீண்டும் அந்த ஸ்லோகம் இப்போ ஞாபகம் வர காரணமாயிருச்சு, சமீபத்தில் உச்சநீதிமன்றம் கசாபின் தூக்கு தண்டனையை உறுதி செஞ்சு அளித்த தீர்ப்பு!

இந்த தீர்ப்பு வந்ததுமே தமிழகத்தில் சிலர், மிகச்சிலர் மட்டும் அந்த தீர்ப்பு தவறுன்னும், மரணதண்டனையே கூடாதுன்னும் முழங்க ஆரம்பிச்சிருக்காங்க. அதன் நோக்கம் ரொம்ப சிம்பிள்! 

தமிழகத்தின் வேலூர் சிறையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, காத்திருக்கும் மூன்று பேரையும் எப்படியாவது விடுதலை செய்யணும்னு கேட்டு தமிழகத்தில் சில அமைப்புக்கள் தொடர்ந்து போராடிட்டு இருக்காங்க! அவங்க நோக்கத்துக்கு ஆதரவா இருக்கணும்ங்கறதுக்காக (வேறே வழியில்லாம) கசாபின் தண்டனையையும் எதிர்க்கவேண்டி இருக்கு அவங்களுக்கு!

நான் இந்த இரண்டு வழக்கையும், தமிழகத்தில் அதன் பிரதிபலிப்புக்களையும் மட்டும் இங்கே கொஞ்சம் விரிவா விவாதிக்கலாம்னு இருக்கேன்!

முதலில் கசாப் விவகாரத்தை எடுத்துப்போம். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யணும்னு இங்கே தமிழகத்தில் குரல்கொடுப்பவர்களின் வாதம் நியாயமானதா?


கசாப், பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி எடுத்து, இந்தியாவில் அச்சுறுத்தலையும், பொதுமக்களை கொல்லும் நோக்கிலும் திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக மும்பையில் பல உயிர்களை சுட்டு கொன்றவன். அவனுடன் வந்தவர்கள் பலரும் தாக்குதலிலேயே இறந்துவிட, கசாப் மட்டும் மாட்டிக்கொண்டான். அவனிடமிருந்து உண்மைகளையும் விவரங்களையும் வரவழைக்கும் விசாரணை அதிகமாக பலன் கொடுக்கவில்லை. அதனால் அவனுக்கு உதவியவர்கள் குறித்தான அவனது வாக்குமூலம் கிடைக்கவில்லை. இந்திய உளவு அமைப்புகள், இந்த சதி செயலுக்கு பின்ன்ணியிலிருந்தவர்கள ஆதாரத்துடன் பாகிஸ்தானிடம் அடையாளம் காட்டியுள்ளது. கசாபின் குற்ற செயல் சந்தேகமின்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கசாப் நடத்திய தாக்குதல் வீடியோக்கள், மிக மிக அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. மும்பையில் இன்னமும் பலருக்குள் மனவியல் ரீதியாக அச்சத்தில் உறைந்திருப்பதை மறுக்கமுடியாது. ஒரு கொடூர தாக்குதலை, பல உயிர்களை கொல்ல காரணமாக இருந்த செயலை, எந்தவித முன்விரோதமுமின்றி, நீண்டகாலமாக திட்டமிட்டு, நிறைவேற்றி இருக்கிறார்கள் கசாபும் அவனது கூட்டாளிகளும்.

குற்றத்தின் தன்மை, அதன் பின்னணி, கொடூரம், தெளிவான ஆதாரங்கள் ஆகிய அனைத்தையும் விரிவாக விவாதித்து தான் அவனுக்கு தூக்குதண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

இந்தியாவில் நீதிமன்றத்தின் மீது பல குறைகள் சொல்லப்பட்டாலும், அத்தகைய குறைகள், பெரும்பாலும் கீழ் கோர்ட்டுகளிலும், மாவட்ட கோர்ட்டுகளிலுமே நடைபெறும். இது போன்ற அதிக முக்கியத்துவமான வழக்குகளில், மரணதண்டனைக்கு தீர்ப்பாகும் வழக்குகளில் இந்த நிமிடம் வரை இந்திய நீதிமன்றங்கள் நியாயமாகவும், சிறப்பாகவும் தான் செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதை அடித்து சொல்ல முடியும். மேலும், இந்தியாவில் இன்னொரு சிறப்பு அம்சம், தண்டனை விதிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டத்துக்குட்பட்டு, அவர் தனது தரப்பை தெளிவு படுத்தி, எடுத்து சொல்லி, அவர் பக்கம் கொஞ்சமேனும் நியாயமிருந்தால் அதன் அடிப்படையில் மரணதண்டனையை குறைக்கவும் முழுமையாக சட்டரீதியான வாய்ப்பு வழங்கப்படுத்துகிறது. எல்லா விதமான அப்பீல்களிலும் அவரது தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே, தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இந்த சூழலை பின்னணியாக வைத்து பார்த்தால், கசாபுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையும், அதை நிறைவேற்றாமல் அவருக்கு மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதையும், அதிலும் அந்த தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் அறியலாம்!

இனி, நான் தமிழக விஷயத்துக்கு வருகிறேன்!

இங்கே வேலூர் சிறையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருப்பதால், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என  சில இயக்கங்கள் போராடி வருகின்றன. திமுக தலைவர் கலைஞர் கூட, இத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின் அவர்களுக்கு மரண தண்டனை என்பது இரட்டை தண்டனையாக அமையும், எனவே அவர்களை மன்னித்து விடுதலைசெய்யவேண்டும் என சொல்லி இருக்கிறார்.


ஏற்கனவே, நான் சொன்னதை போல, இந்திய நீதிமன்றங்கள், மரணதண்டனை விஷயத்தில் மிக மிக கவனமாகவும், பொறுப்பாகவும் தான் இதுவரை செயல்பட்டு வந்திருக்கின்றன. அரிதிலும் அரிதான கொடூர குற்ற செயல்களுக்கு மட்டுமே நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கிறது மேலும் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் விடுதலை ஆவதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைத்து, சட்டப்படி, அவர்கள் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி வெளிவருவதற்கான முழுமையான சந்தர்ப்பத்தை இந்திய நீதி துறை தருகிறது. அதன் அடிப்படையில் தான் 1992ம் ஆண்டு முதல் அவர்களுக்கான தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படாமல் அவர்களுக்கு உரிய நியாயமான வாய்ப்புக்களை (பூந்தமல்லி நீதிமன்றம், தடா சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உச்சநீதிமன்ற பெஞ்ச், குடியரசு தலைவருக்கான கருணைமனு என எல்லா வகையிலான வாய்ப்புக்களையும்) அவர்களது தண்டனையை குறைப்பதற்காக வழங்கப்பட்டது. இவை அனைத்திலுமே, அவர்களது குற்றச்செயலின் தன்மையை கருத்தில்கொண்டு தீர்ப்பை உறுதி செய்திருக்கிறார்கள். 

இப்படியான மேல் முறையீட்டுக்கான கால அளவு தான் இந்த 20 ஆண்டுகள் என்பதை கவனித்தால், அவர்களுக்கான தண்டனையை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்வதற்காக 20 ஆண்டுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதை எல்லோருமே உணரலாம்! எனவே 20 ஆண்டுகள் அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கலைஞரின் வாதம் சரியல்ல.

அவர்களை விடுதலை செய்வதற்கு சொல்லப்படும் மற்றொரு விசித்திரமான காரணம், அவ்ர்கள் தமிழர்கள் என்பது. அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது தமிழினத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றெல்லாம் கூட மே17 இயக்கத்தினர் முழங்க கேட்டிருக்கிறேன். தமிழுணர்வு, இனவுணர்வு உள்ள அனைவருமே அவர்களது விடுதலைக்கு பாடுபடவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது!

தமிழர் என்பதால், தண்டனை கூடாது என்று சொன்னால் அதனை பொதுமை படுத்தி, தமிழகத்தில் சிறையிலிருக்கும் அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய முனையவேண்டும், தமிழர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இனத்துக்கு எதிரான தாக்குதல்னு முழங்கி மொத்தமுள்ள 16000 சொச்சம் தமிழர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க போராடியிருக்கணும். அது தான் உண்மையான தமிழுணர்வாக இருக்கமுடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்த மூவரை மட்டும் தான் விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை. அப்படியெனில், இந்த மூவருக்கு தமிழர் என்பதை தாண்டி இன்னும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கணும் இல்லையா?

விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் / ஆதரவாளர்கள் என்பதால் மட்டும் தான் அவர்கள் விடுதலைக்காக அத்தனை முயற்சிகளும் நடைபெற்று வருகிறது என்பதும், அப்படி வெளிப்படையாக அதை சொல்லி ஆதரவு திரட்டமுடியாது என்பதால், தமிழுணர்வு பூச்சு பூசி மெழுகி உணர்ச்சிகரமான உரைகளால் மக்களை திசை திருப்ப பிரத்தனப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நல்லவேளையாக தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை எந்த அளவுக்கு முட்டாள்தனமானதோ, அதை விட முட்டாள்தனமானது அவர்கள் மனித வெடிகுண்டை பயன்படுத்தி அவரை கொன்றது.

ராஜீவ் கொல்லப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட 05-03.1991 ல் பிரபாகரனின் பிரதிநிதியாக டெல்லிவந்த கவிஞர் காசி அனந்தன் அவர்கள், ராஜீவை சந்தித்துவிட்டு அவர் வீட்டு முன்பு கொடுத்த நன்றி அறிக்கையும், 15-03-1991 ல் விடுதலை புலிகள் கொடுத்திருக்கும் அறிக்கையும் ராஜீவ்-புலிகள் உறவு மிக சிறப்பாக இருந்ததை தெளிவாக சொல்கிறது. அதற்கு ஒராண்டுக்கு முன்பே அதே ராஜீவை கொல்ல ஆட்களையும் அதே இயக்கம் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிமிடம் வரை ராஜீவ் கொல்லப்பட்டதற்கான உண்மையான காரணம் யாராலும் தெளிவுபடுத்த்ப்படவேயில்லை. அமைதிப்படையின் அட்டூழியம் தான் காரணி என  சப்பைக்கட்டு தான் கட்டப்ப்டுகிறது. (தமிழர்களை பாதுகாக்க அமைதிப்படை அனுப்பப்பட்டது புலிகளுடன் இணைந்து இலங்கையை எதிர்த்தது உண்மை நிலவரம் என்ன என்பதறிந்து இந்தியாவுக்கு சொன்னது இந்தியா தமிழர்களுக்கு உரிய அரசியல் ரீதியான தீர்வுக்கு முயன்றது புலிகள் விரும்பியபடி, ஆட்சி அதிகாரத்தை நேரடியாக புலிகள் கையில் தூக்கி கொடுக்க இந்தியா சம்மதிக்காமல் தேர்தல் முறையை ஆதரித்தது அதிருப்தி அடைந்த புலிகள் இயக்கம் ஜெயவர்த்தனாவுடனேயே கூட்டு சேர்ந்து இந்தியாவை எதிர்த்தது அமைதிப்படை வெளியேற்றப்பட்ட பின் மீண்டும் தமிழர்களை பகடையாக்கி கேடைய போர் நடத்தியது போன்ற தனி ஆட்சி பதவி மோக வரலாறுகள் முழுமையாக நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள், சிலருக்கு மாற்று கருத்தும் சில அரசியல் இயங்கங்களின் புனைகருத்துக்களின் மீதான கண்முடித்தனமான நம்பிக்கையும் இருக்கக்கூடும், அது விரிவாக விவாதிக்கப்படக்கூடியது. அது இந்த பதிவுக்கு அவசியமற்றது எனபதால் அதை கடந்து சென்று விடுவோம்!)

ராஜீவை கொல்வது என்று முடிவெடுத்திருந்தாலும் அதை மனிதவெடிகுண்டு உபயோகித்து கொடூரமாக கொன்றிருக்க அவசியமே அப்போது எழவில்லை. அப்போது ராஜீவ் சாதாரணமான ஒரு எம்.பி தான். ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அவருக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்த 495 பேரடங்கிய NSG பாதுகாப்பும் கூட, அப்போது துணைபிரதமாராக இருந்த தேவிலால் அவர்க்ள் உத்தரவின்படி விலக்கிக்கொள்ளப்பட்டு இருந்தது. வெறும் 10 சாதாரண போலீசாருடன் தான் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தமிழகத்திலும் அப்போது கவர்னர் ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 
இப்படியான ஒரு மிக மிக சாதாரணமான சூழலில், அசாதாரணமாக மனிதவெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதன் கொடூரத்தை நாம் கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தாலே, யாரும் அதை ஆதரிக்கமாட்டோம். அதை நான் ராஜீவ் மீதான தாக்குதலாக அல்லாமல் நம் தமிழகம் மீதான தாக்குதலாகவே காண்கிறேன்.

குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு இப்போது மேல் முறையீட்டு வாய்ப்புக்காக நாம் பாதுகாத்துக்கொண்டிருக்கும் அந்த மூவரும், அந்த கொடூர தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள். ஒரு மிகப்பெரிய குற்றச்செயல் நடைபெறவிருப்பதை அறிந்தும் அதை மறைத்ததோடு அதற்குரிய உதவிகளை செய்தவர்கள். இனி இந்தியாவில் இதுபோலொரு கொடூர நிகழ்வு நடைபெறக்கூடாது என்பதற்கான படிப்பினையாகவே, குற்றத்தின் அடிப்படையிலும், குற்றச்செயலின் தன்மையிலும் உள்ள கொடூரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறத. எல்லா நீதிமன்றங்களும் வலுவான ஆதாரங்கள் அடிப்படியில் அதை உறுதி செய்திருக்கின்றன.

மேலும், ராஜீவ் மீதான வெற்று கோபத்துக்கு விலையாக, அந்த தாக்குதல் சம்பத்தில் அப்பாவி தமிழர்களும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று, தமிழுணர்வு, இன உணர்வு என்றெல்லாம் பொங்குபவர்கள், அந்த அப்பாவி தமிழர்களை பற்றி என்றைக்காவது சிந்தித்திருப்பார்களா என  யோசித்து பாருங்கள். அவர்களை பற்றி எந்த அக்கறையும் யாருக்கும் இல்லை. அவர்கள் தமிழர்கள் இல்லையா? நம் இனம் இல்லையா? அவர்கள் மீதெல்லாம் தமிழுணர்வு ஆதரவாளர்களுக்கு இரக்கம் இருக்காதா? உண்மையான தமிழுணர்வாளர்கள், உங்களுக்கிடையிலான முட்டாள்தனமான சண்டையில் என் சகோதரர்களள எதற்கு கொன்றீர்கள் என்று அவர்கள் மீது தான் கோபப்பட்டிருக்கவேண்டும்.

ஆகையினால், சுயசிந்தனை உள்ள எல்லோருக்குமே, இன்று அந்த மூவரின் விடுதலைக்காக போராடுபவர்களுக்கு இருப்பது, தமிழுணர்வா, இனவுணர்வா, மனித உரிமை ஆர்வமா, இயக்க ஆதரவா என்பது தெளிவாக புரிந்திருக்கும்!
இந்த இரண்டு வழக்குகளையும் பார்க்கும்பொழுது, இரண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டவர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு, தெரிந்தே, மன ஒப்புதலுடனேயே மிகக்கொடூரமான இந்த தாக்குதலை நடத்தியிருப்பது தெளிவாகும். கொல்லப்பட்டவர்களுக்கும், கொன்றவர்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை என்பதும் தெளிவாகும். இப்படி காரணமேயில்லாமல் கொடூர கொலை நிகழ்த்துவோரையும் அதை ஆதரிப்போரையும் தண்டிக்கக்கூடாது என்பது சரிதானா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

இனி மரணதண்டனை பற்றி வருவோம்!

ஒட்டுமொத்தமாக மரணதண்டனையே கூடாது என  நாம் முடிவெடுக்கவேண்டும் எனில், அத்தகைய தண்டனைக்குரிய குற்றத்தை செய்யாதவர்களாக நமது சமூகம் பண்பட்டு இருக்கவேண்டும். குற்றங்கள் கொடூரமாக இருக்கும் ஆனால் தண்டனை மென்மையாக இருக்கவேண்டும் என  எதிர்பார்ப்பது நியாயமல்ல. நாம் குற்றம் செய்யாதபோது, நமக்கு தண்டனை இல்லை எனப்து தான் இங்கே நிதர்சனம்!

கொடூர செயல்கள் இருக்கும் வரையும் அதற்குண்டான தண்டனையும் இருக்கவேண்டும் என்பது தான் பொதுவான கருத்து. மேலும் இந்திய நீதித்துறை மரணதண்டனை விதிப்பது அபூர்வமானது, தகுந்த காரணமின்றி அப்படி ஒரு தீர்ப்பு வராது, அப்படியே தண்டனை கொடுத்தாலும், அவர்களுக்கு முறையான அனைத்து வாய்ப்புக்களும் வழங்கி அவர்கள் விடுதலைக்காக சட்டப்படியான நடவடிக்கைகள் இருக்கும், அதையும் மீறி அனைத்து சட்டமும் அவர்களது தண்டனையை உறுதிப்படுத்தினால் தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்கிற வழக்கத்தையெல்லாம் கவனிக்கையில், மரணதண்டனை இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இன்றைய சமூகத்தில் அப்படியொரு தண்டனை அவசியமும் கூட. 

நாம் மரண தண்டனை வேண்டாம் என  சொல்கிற அளவுக்கு பண்பாடும், நாகரீகமும் கொண்டவர்களாக இன்னும் ஆகவில்லை!

ஊர்சுற்றியின் உணவனுபவங்கள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (குறள் 942)

வள்ளுவர் சொல்லிட்டாரு. ஆனா எது அற்றது எது உற்றதுன்னு ஆராய்ச்சி பண்ணி சாப்பிடுற நிலமையிலயா நாம இருக்கோம்? நாக்கு தான் நமக்கு ஃபர்ஸ்ட் பிரஃபரன்ஸ். மத்ததுக்கு தான் நிறைய டாக்டருங்க இருக்காங்களே? அவங்க பாத்துப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!
எனக்கு சின்ன வயசிலிருந்தே பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். அப்போ நான் கோவையில் இருந்தேன். சாயிபாபா கோவில் பக்கத்தில் லக்ஷ்மி உணவகம்னு ஒரு சின்ன ஓலை கடை இருக்கும். அதில் தான் எனக்கு குஸ்காவும் புரோட்டாவும் அறிமுகம் ஆச்சு. எங்கப்பாகூட சாயந்தர நேரத்தில் அவருக்கு ஹெல்பரா அவர் வேலை செஞ்ச கம்பெனியிலேயே வெல்டிங் அடிச்சிட்டு இருப்பேன். ஓவர் டைம் சமயங்களில் சேரன் டிப்போ எதிர்ல இருந்து இட்லியும் காரசட்னியும் கம்பெனிக்கு  வரும்.

கொஞ்சம் வளர்ந்தப்புறம், கோவை காந்திபுரம் ஸ்ரீகிருஷ்ணா லஞ்ச் ஹோம் (அழகு பார்மசி கீழே) தான் என் லஞ்ச் ஏரியா. அங்கே ஒரு ஊத்தப்பம், நடுவில் முந்திரி எல்லாம் போட்டு, புதினா தூவி, மல்லி சட்னியோட கொடுப்பாங்க. செமெ! (இப்போ அந்த கடையோ, அந்த மெனுவோ இருக்கான்னு தெரியலை)1992ல சென்னைக்கு வந்தேன் சென்னை வந்ததுமே எனக்கு முதலில் வந்த ஆசையே புரசைவாக்கம் வெல்கம் ஹோட்டலுக்கு போகணும்னு தான். அங்கத்த இட்லி சாம்பார் அவ்வளவு சூப்பரா இருக்கும்னு சொல்ல கேள்வி பட்டிருக்கேன். அதை விட முக்கியமானது, சென்னையிலேயே காலை வேளையில் சூப்பரான சேமியா பால் பாயசம் அந்த ஒரு ஹோட்டலில் தான் கிடைக்கும்ன்றது. இந்த ரெண்டு விஷயத்துக்காகவும் அங்கே அடிக்கடி போவேன்.

சென்னை வர்ற வரைக்கும் பூரி, சப்பாத்தி மாதிரியான ஐட்டங்களில் மேல அப்படியொண்ணும் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. "பார்றா.. இது தான் பூரி.. சாப்பிடு"ன்னு வெல்கம் ஹோட்டலில் சாப்பிட்டது தான்.. இன்னிவரைக்கும் நான் பூரிக்கு அடிமையாயிருக்க காரணம்.
இட்லி சாம்பார்னா எனக்கு மூணு ஹோட்டல் தான் நினைவு வருது. சென்னையில் வெல்கம் ஹோட்டல் (இங்கே உடுப்பி ஸ்டைல் சாம்பார்), ரத்னா கஃபே & கோவையில் ஆர்.எச்.ஆர் (இந்த ரெண்டிலுமே தமிழ்நாடு ஸ்டைல் சாம்பார்)

தோசையை பொறுத்தவரை ஊர் ஊரா போயி எத்தனை தோசை சாப்பிட்டாலும், மனசில் இன்னமும் நீங்காம இருக்கிறது, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரவிங்கறவர் நடத்துற சின்ன ஹோட்டலின் ரோஸ்டு (சென்னையில் ஸ்பெஷல் சாதான்னு சொல்லுவாங்க) தான் நல்ல பெரிசா, நைசா, மொறுமொறுன்னு கருகாம சூப்பரா போட்டு தருவாரு.

முதல் முதல் பெங்களூர் போனப்போ, மெஜஸ்டிக் எதிர்ல ஒரு ஹோட்டலுக்கு போயி மசாலா தோசை கேட்டேன். நம்ம ஊரில் கல்தோசை/ஊத்தப்பம் போடுற மாதிரி சும்மா ட்யூரோபிளக்ஸ் மெத்தை ரேஞ்சுக்கு கனமா போட்டு கொண்டு வந்தாங்க. அதோட பெங்களூரில் தோசை சாப்பிடறதை நிறுத்திட்டேன் (முதல் கோணல் முற்றும் கோணல்)

எந்த ஓட்டலுக்கு போனாலும், அந்த மெனு கார்டை ஃபுல்லா மனப்பாடம் பண்ணிட்டு அல்லது அந்த சப்ளையரை முழு மெனுவையும் மனப்பாடமா ஒப்பிக்க சொல்லி கேட்டு ரசிச்சிட்டு, கட்ட கடைசியில் ஒரு பிளேட் இட்லி, ஒரு காபின்னு கடுப்படிக்கிற பொது வழக்கம், எனக்கும் முதலில் இருந்தது. என் முன்னாள் மேனேஜர் சொல்லுவாரு, ஓட்டலுக்கு போனா, நாம அடிக்கடி சாப்பிடாத (சாப்பிட வாய்ப்பில்லாத) ஐட்டங்களா ஆர்டர் பண்ணனும்னு. ஓ.. இது தான் சீக்ரெட் ஆஃப் ஆர்டரிங்கான்னு தெரிஞ்சு அன்னைக்கே ரூட்டு மாறியாச்சு. இப்பவும் ஓட்டலுக்கு போனா, எந்த வழக்கமான உணவையும் (பூரி தவிர!) ஆர்டர் செய்யுறதில்லை.

ஆழ்வார்பேட்டையில் சச்சின் கா தாபாவில் அன்லிமிட்டடு நார்த் இண்டியன் டிஷ்சில் ஆரம்பிச்சது என் வித்தியாசமான உணவு ருசிக்கும் வேட்டை.அது எந்த ஓட்டலுக்கு போனாலும், நார்த் இண்டியனாவே என்னை ஆக்கிருச்சு.

நான்-வெஜிடேரியன் ஐட்டத்தில் நான் பிரியாணிக்கு ரொம்ப ரொம்ப அடிமை. அதிலும் சிக்கன் விஷயத்தில் சிக்கனமே பார்க்கிறதில்லை. உலகத்தில் எத்தனையோ பறவைகள் இருக்கு. ஆனா கோழி தான் சாப்பிட டேஸ்டுன்னு கண்டுபிடிச்சானே, அவன் செம ரசனைக்காரனா இருந்திருக்கணும்.

சென்னை அண்ணாநகர் ஹாட்சிப்ஸ் எதிரில் HDFC Bank ATM பக்கத்து ரோட்டில் போயி ரைட் எடுத்தீங்கன்னா, அதில் அமலா மெஸ்னு ஒரு சின்ன கடை வரும். அது ஆக்சுவலா ஒரு வீடு. அதை ஹோட்டலா மாத்தியிருக்காங்க. அது என் வழக்கமான பிரியாணி ஸ்பாட். நாட்டு கோழி பிரியாணி அங்கே ரொம்ப பிரசித்தம். அது தவிர, அண்ணாநகர் கிழக்கில், KLN Auto பக்கத்தில் செனபெல் னு ஒரு ஹோட்டலிலும் பிரியாணி நல்லா இருக்கும். செனபெள்ள பார்சல் வாங்குற கூட்டம் தான்  இருக்கும், எப்பவுமே. முன்னெல்லாம் நாம வண்டி கட்டிட்டு டவுனுக்கு போயி சாப்பிடுவோமே அந்த மாதிரி காறேடுத்துட்டு செனபெல் வந்திருவாங்க போல.

என்ன தான் பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டு பெருமை அடிச்சிகிட்டாலும், எனக்கென்னவோ, சின்ன சின்ன ஹோட்டல்களில் கிடைக்கிற ருசியும் ஆதம திருப்தியும் பெட்டரா இருக்கிறாப்ல ஒரு ஃபீலிங். பிராட்வே மினர்வா தியேட்டர் பக்கத்தில் (பழைய கொத்தவால்சாவடி ஏரியா) பிளாட்பாரத்தில் டெண்ட் கட்டி தட்டு சோறு வித் மீன் கொழம்பு (மீன் வறுவல் எக்ஸ்டிரா!) கொடுப்பாங்க. 15 ரூபாய்க்கு சொர்க்கம்! வேலு  ஹோட்டல்ல 70 ரூ கொடுத்து சாப்பிட்டா கூட அந்த திருப்தி கிடைக்காதுன்னு நினைப்பேன்

'ரோட்டோர இட்லிக்கடையில் சாப்பிடாதே, அது அவ்வளவு சுத்தமா செய்யமாட்டாங்க'ன்னு ஒரு தப்பான அபிப்பிராயம் என் நண்பர்களுக்கு இருக்கிறதால், அந்த மாதிரியான ஓட்டல்களில் சாப்பிட்டு முடிச்சதுமே, என்கிட்டே இந்த மாதிரி ஓட்டலில் எல்லாம் சாப்பிடக்கூடாதுடான்னு அட்வைஸ் பண்ணுவாங்க! ஆனா, எனக்கு அதில் கொஞ்சம் குதர்க்கமான கருத்து இருக்கு.

பெரிய பெரிய ஓட்டல்களில் இருக்கும் கிச்சனை நாம பார்க்க முடியாது. அங்கே என்ன மாதிரி சுத்தம் இருக்கு, என்ன மாதிரி பாத்திரங்களை சுத்தப்படுத்துறாங்க எதுவுமே நமக்கு தெரியாது! ஆனா ரோட்டோர கடைகளில் நாம எதிர்லயே நிக்கிறதால், ரொம்ப சுத்தமா வெச்சிருப்பாங்க, தட்டு பாத்திரமெல்லாம் அப்பப்பவே கழுவிக்குவாங்க, அதுக்குன்னே ஒரு ஆள் வெச்சிருப்பாங்க. நம்ம கண் முன்னாடியே சுட்டு தருவாங்க. ஓல்டு ஸ்டாக் பிரச்சனையே இருக்காது. ஒவ்வொரு உணவு மாற்றத்திலும் கையை கழுவிக்குவாங்க. அந்த தார்மீக பயம், நாம என்ன நினைப்போமோன்ற அக்கறை எல்லாம் பார்க்கும்போது, எனக்கென்னவோ ரோட்டு கடை கொஞ்சம் பாதுகாப்பாவும் நம்பிக்கையாவும் படுது. (இப்போ சில பெரிய ஓட்டல்களிலும் இந்த சைக்காலஜியை மனசில் வெச்சு ஓப்பன் கிச்சன் கொண்டு வந்திருக்காங்க. சமைக்கறதை நாம பார்க்க வசதி இருக்கு!)

சென்னை அண்ணாநகரில் ஹாட்சிப்ஸ் கடைக்கு ஒட்டின மாதிரியே ஒரு சின்ன பிளாட்பார கடை  இருக்கு. கார்த்திக் டிபன் செண்டர்னு பேரு. அதில் வர்ற கூட்டம், ஹாட்சிப்ஸுக்கு வர்றதை விட அதிகமா தெரியும்! அதே மாதிரி தி.நகர்ல நடேசன் பார்க் பக்கத்தில் ஒரு சின்ன கடையில் கிடைக்கும் பொடி தோசை மாதிரி வேறே எங்கேயும் சுவையா நான் அதை சாப்பிட்டதேயில்லை


ஒரு தடவை லாரியில் தூத்துக்குடிக்கு போனேன். திருச்சி, மேலூரெல்லாம் தாண்டி கொஞ்ச தூரம் போனதும் லாரியை ஒரு சின்ன குடிசை கிட்டே நிறுத்தினாங்க. அதில் தான் காலை டிபன். ரொம்ப ரொம்ப சீப்பா இருந்தது. சின்ன சின்னதா தோசை இட்லி வடைன்னு ஒரு சின்ன குடும்பமே சமைச்சு போடுறாங்க, அதுவும் சல்லிசான விலையில. வீட்டில் சாப்பிட்ட திருப்தி வேறே.

அதே போல மதுரை அண்ணாநகர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு ஓட்டலில் ரொம்ப ரொம்ப சீப்பா சாப்பாடு தர்றாங்களாம். வெறும் 6 ரூபாய்க்கு சாதம், கொழம்பு, பொரியல், ரசம் எல்லாம் சேர்த்த வீட்டு சாப்பாடு. பல வருஷமா அதை செஞ்சிகிட்டு இருக்காங்களாம். ஒவ்வொரு தடவை மதுரை போகும்போதும் அங்கே போக நினைப்பேன், முடியாம போயிருது. அடுத்த தடவை அங்கே போயிரணும்.

அதே மாதிரி, கயத்தாறு பைபாஸ் கிட்டே ஒரு ஓலைக்கடை பார்த்தேன். போர்டு தான் ரொம்ப பிடிச்சது. “ஓட்டல் ஐயனார் – சுத்த அசைவம்”.


கேரளாவில் பயணம் செஞ்சா எனக்கு பெரிய பிரச்சனையே இந்த உணவுகள் தான். மதியம், நைட்டு ஓக்கே.. நான் வெஜ் சாப்பிட்டுக்குவேன். ஆனா காலங்காத்தால நான் வெஜ் சாப்பிட எனக்கு எப்பவுமே பிடிக்கறதில்லை. ஆனா, அங்கே காலையிலேயே புட்டு கடலைக்கறி இல்லைன்னா பரோட்டா & கறிக்கொழபு தான் தருவாங்க. நல்லகாலத்திலேயே நான் புட்டு சாப்பிடுறதில்லை. வறவறன்னு தொண்டையை அடைச்சமாதிரி, ரொம்ப கஷ்டம். அந்த கடலையை மெல்றதை விட சும்மா இருக்கலாம்னு தோணும். அதனால் கேரளா பயணத்தில் பெரும்பாலும் நான் காலைல பட்னி தான் கிடக்கறது!
சாயந்தர நேரத்தில் சென்னையில் எந்த டீக்கடை போனாலும் பஜ்ஜி வித் தேங்கா சட்னி கிடைக்கும். மத்த ஊர்களில் எப்படின்னு தெரியலை. தினசரி பஜ்ஜி & டீ இல்லாம கழிஞ்சதே இல்லை. ஆனா பூனே வந்தப்போ வித்தியாசமான காட்சி பார்த்தேன். இங்கே ஸ்னேக்ஸுக்கு பதிலா ரொட்டி  துண்டுகளை சாம்பார்ல முக்கி சாப்பிட்டு இருக்காங்க! எப்படிய்யா சாப்பிடுறாங்கன்னு ஆச்சரியமா இருக்கும். (அவங்க நம்மளை பார்த்து ஆச்சரியப்படுவாங்களோ என்னமோ?)

பஞ்சாபில் லுதியானாவுக்கு போனப்போ ஒரு கடையில் சாப்பாடு கிடைச்சது. சாம்பாரை லைட்டா ஊத்தி பிரட்டி சாப்பிட்டிட்டிருந்தேன். கூட வந்த கிளையண்டு என்னை வித்தியாசமா பார்த்தாரு. அங்கேயெல்லாம், சாம்பாரை மொத்தமா கொட்டி, சாப்பாட்டை அதில் மிதக்கவிட்டு கிட்டத்தட்ட கரைச்சு குடிப்பாங்களாம். நாம இங்கே ரசத்தில் தான் அதை செய்வோம்னு சொன்னேன்.

ஹைதிராபாத்தில் பெரும்பாலும் நான்வெஜ் ஹோட்டல்கள் தான். நான் கொண்டாப்பூரில் வசிச்சிட்டு இருந்த சமயம், நல்ல தமிழக ஓட்டலுக்கு தேடிய தேடல்கள் தனி கதை. கடைசியில் கொண்டாப்பூரிலேயே அப்போலோ கிளினிக் எதிர் ரோட்டில் ஒரு சின்ன சந்துக்குள் தமிழ்நாடு ஓட்டல்ங்கற பேரில் ஒரு தஞ்சாவூர் காரர் முழுக்க முழுக்க தமிழக உணவுகளை கொடுத்துட்டு இருக்காருன்னு ஒரு ஆட்டோக்காரர் மூலமா தெரியவந்தது. ரெண்டு சந்தோஷம். ஒண்ணு தமிழக உணவு வகை கிடைச்சது. ரெண்டு, தமிழ் பேச ஆள் கிடைச்சது.

இன்னும் பல ஊர்கள் பல உணவகங்கள் பல உணவுகள் பத்தி எழுதிட்டே போகலாம் தான். ஆனா அதுக்கு இந்த இடம் பத்தாது.

சாப்பிடறதுக்கு தான் கணக்கு பார்க்கக்கூடாது, ஆனா எழுதுறதுக்கு கணக்கு பார்க்கணுமில்லே?Tuesday, August 28, 2012

கல்வி அறிவு ஏன் 100% இல்லை ?


ல்வி ஓன்றே அழியா செல்வம். 

பல்லாயிரம் வருஷத்துக்கும் முன்பே நம் தமிழ் ஆன்றோர்கள் இதை தெளிவா புரிஞ்சு வெச்சு சொல்லியிருக்காங்க. ஏன் அப்படி சொன்னாங்க? சொத்து சுகம், நிலம், புலம் நீச்சு, மச்சு பரம்பு எல்லாமே அழிஞ்சு ஒருவனை வாழவிடாம செஞ்சிர வாய்ப்பு இருக்கு. ஆனா படிச்ச படிப்பு எந்த காலத்திலும் அவனை கைவிடாது. ஒருவேளைன்னாலும் ஒருவேளை சோத்துக்கு அவனுக்கு அது வழிபண்ணும்னு தான் தெளிவா சுருக்கமா அதை சொல்லி வெச்சாங்க நம்ம முன்னோர்கள்.

சரி, நாம இப்போதைய கதைக்கு வருவோம்.

கேரளா & புதுவையில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் 100% மற்ற மாநிலங்களில் எதிலும் 100% கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் 80.3% (2011). இதிலிருந்து நமக்கு தெரியவர்ற விஷயம் என்னன்னா, படிக்காதவங்க, படிப்பறிவு இல்லாதவங்க நாட்டில் ஜாஸ்தி இருக்காங்க. ஒட்டு மொத்த இந்தியாவில் 70% தான் கல்வியறிவு. அதாவது 30% பேர் கிட்டத்தட்ட 33 கோடி பேருக்கு கல்வியறிவு இல்லை.
இந்தியா சுதந்திரம் கிடைச்சு, 65 வருஷம் ஆயிருச்சு. நம்மை நாமே ஆண்டுட்டு வர்றதா பெருமை பேசிட்டு இருக்கோம். ஆனா, நம்ம பிள்ளைகளுக்கு நம்மால் படிப்பு சொல்லி கொடுக்க முடியலை.

இந்திய அரசியல் அமைப்பு விதி 21A என்ன சொல்லுது?

The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in a such manner as the State may, by law, determine

அதாவது, தங்கள் மாநிலத்திலுள்ள குழந்தைகளுக்கு 6 முதல் 14 வயதுவரையும் கட்டாய இலவச கல்வி அளிக்கவேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை.

இது படி பார்த்தா, ஒவ்வொரு மாநிலத்திலும் 14 வயசுக்கு மேல கல்வியறிவு இல்லாதவங்களே இருக்க கூடாது! அனா, அதே அரசுகள் தான் எங்கள் ஆட்சியில் இத்தனை சதவிதத்தில் இருந்து இத்தனை சதவிதமாக கல்வியறிவை மேம்படுத்தியிருக்கிறோம்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. நாமளும் சந்தோஷமா கைதட்டிட்டு வந்திடுறோம். ஆனா நாம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நியாயமா பார்த்தா 100% ஆகியிருக்கணுமே, ஏன் ஆகலைன்னு யோசிக்கணும். நமக்கு தான் லாஜிக்கா யோசிக்கிற பழக்கமே கிடையாதே?

சரி, இப்படி கடமையை செய்யாத அரசுக்கு தண்டனை இல்லையா? இருக்கு. அதே அரசியல் சட்டம் என்ன சொல்லுதுன்னா, அரசியல் சட்டம் சொல்லும் கடமைகளை சட்டப்படி அமல்செய்வேன், அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்வேன்னு சொல்லி பதவி ஏற்கிற அரசுகள், அப்படி அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றலைன்னா அதை கலைச்சிரலாம்னு சொல்லுது. அப்படி பார்த்தா, கேரளா & புதுவை மாநிலங்களை தவிர வேறு எந்த மாநில அரசுக்கும் இன்னைய தேதிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை, மத்திய அரசு உட்பட. ஏன்னா அவங்க ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி உரிமையை மறுத்திருக்கறதோடு, அரசியல் சட்டம் விதிச்ச கடமையையும் மீறி இருக்காங்க. ஆனா இப்படி எல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.

அதனால் நாம மத்த விஷயங்களை பத்தி அலசலாம்!

சட்டம் சொல்றபடி 6 14 வயசு வரைக்கும் உள்ளவங்களுக்கு இலவச கட்டாய கல்வி இப்போ கொடுக்கப்படுதா?

அந்த சட்டத்தை எந்த அரசுமே மதிக்கலை. மதிச்சிருந்தா, அந்த அரசியல் சட்டப்படி நடந்திருந்தா, நாட்டில் தனியாக் பள்ளிகளே இருந்திருக்காது. தனியார் பள்ளிகளை மேம்படுத்தறதுக்காக, அரசு பள்ளிகளை தரமில்லாததா ஆக்கியதோட, சட்டப்படியான கடமையையும் எந்த அரசாங்கமும் (கட்வி வேறுபாடு இல்லாம) கண்டுக்கவேயில்லை. கேரளாவில் மட்டும் தான் அரசு பள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க.

நாம நம்ம தமிழ்நாட்டை பற்றி மட்டும் லைட்டா விவாதிக்கலாம்!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் வந்து படிக்கணும்னு முடிவு பண்ணினாரு. ஆனா அதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. முதல் சிக்கல், ஜாதி ரீதியா சில மானவர்கள் சில மாணவர்களுடன் சேர்ந்து படிக்க அவங்க பெற்றோர்கள் விரும்பலை. இதை தடுக்க இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரிவு படுத்தினாரு. அதுக்கு அப்புறம், புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு நாங்க என்ன பண்றது? 

வேலைக்கனுப்பினாலாவது கால் காசு சம்பாதிக்கும்ன்ற புலம்பலை கேட்டு, ஏற்கனவே காமராஜர் கொண்டுவந்த மதிய உனவு திட்டத்தை எல்லா பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கி விரிவு படுத்தினாரு. யூனிசெஃப் அறிக்கையில் குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்கறதில்லைங்கறதை படிச்சிட்டு, மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமா மாற்றி ஊட்டச்சத்துக்கும் வழி செஞ்சாரு. புஸ்தகம், நோட்டு, சீருடை கவலை எல்லாம் பெற்றவங்களுக்கு இருக்கக்கூடாதுன்றதுக்காக, எல்லாத்தையுமே அரசே இஅலவசமா செய்யும்னு அறிவிச்சாரு. ரொம்ப தூரத்தில் பள்ளிக்கூடம் இருக்கே எப்படி போறதுன்னு யோசிச்சவங்களுக்காக, எல்லா அரசு பஸ்களிலும் இலவசமா பயணிக்க பாஸ் கொடுத்தாரு. இத்தனையும் எதுக்காக செஞ்சாரு எம்.ஜி.ஆர்?
நம்ம புள்ளைங்க நல்லா படிக்கணும். படிப்புன்ற ஒரு விஷயம் அவங்களுக்கு இருந்தாலே போதும், அவங்க வாழ்க்கையை அவங்களே அழகா தீர்மானிச்சுப்பாங்க, எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிடுவாங்கன்னு தீர்க்கதரிசனமா முடிவு செஞ்சு இத்தனையையும் செஞ்சாரு. இதன் காரணமா தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் 52% னு உயர்ந்தது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவங்க சின்ன சின்னதா சில முன்னேற்றங்களை கொடுத்தாங்க. ஜானகி எம்.ஜி.ஆர் இலவசமா செருப்பு கொடுத்தார். கருணாநிதி, சத்துணவுடன் முட்டையும் பழமும் கொடுத்தார். பஸ் வசதியில்லாத பகுதிகளிலிருந்து 10 வகுப்புக்கு மேல் யாரும் தொலை தூரம் பயணித்து படிப்பதில்லைன்றதை அறிஞ்ச ஜெயலலிதா இலவச சைக்கிள் கொடுத்தார். இப்படி எல்லாருமே நம் பிள்ளைகள் படிக்கணும்னு தான் எல்லா முயற்சியும் செஞ்சாங்க.பள்ளி குழந்தைகள் சரி. வயசானவங்க, வேலைக்கு போறவங்க எல்லாம்?
அதுக்காக தான் மத்திய அரசு,அனைவருக்கும் கல்வி (SSA Sarva Siksha Abhyan)னு ஒரு திட்டம் கொண்டுவந்தாங்க. முதியோர் கல்வி, வேலைக்கு போறவங்களுக்காக இரவு பாட சாலை ன்னு பல பல திட்டங்களை கொண்டுவந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கல்வியறிவு பெற்று எல்லோரும் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்னு முடிவு செஞ்சு நடந்துட்டு இருக்கு.

இதுக்காக மத்திய மாநில அரசுகள் பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கி எல்லோருக்கும் கல்வி கொடுக்க முயற்சி செய்யுறாங்க.

மத்திய அரசு இன்னும் ஒரு படி மேலே போயி, மத்திய அரசுக்கு செலுத்தும் எல்லா நேரடி, மறைமுக வரிகளிலும் 2% கல்வி துணைவரியும் (Education CESS) 1% உயர்கல்வி துணைவரியும் (Secondary & Higher Education CESS) வசூலிக்கிறாங்க. 

இது எதுக்காக? 

மத்திய மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கியும், நாட்டில் எல்லோருக்கும் கல்வி கொடுக்க முடியலை. பள்ளிகள் கல்லூரிகளை தரமுயர்த்த முடியலை. அதனால் அதுக்கான செலவுக்கான தொகையை இப்படி வசூலிச்சு அதை முழுக்க முழுக்க கல்விக்கே செலவு செய்யணுமு 2007 ம் ஆண்டு முடிவு செஞ்சு அன்னையிலிருந்து வசூலிக்க ஆரம்பிச்சாங்க. முதல் வருஷம் 10,300 கோடி ரூபாய் வசூல் ஆச்சு. அதுக்கப்புறம் சேவை வரி விரிவாக்கம் காரணமா வருஷத்துக்கு சராசரியா 20,000 கோடி ரூபாய் கல்வி துணை வரி மட்டுமே வசூல் ஆச்சு. இது தவிர பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வேறே (2010-11 ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 21,000 கோடி ரூபாய். ஆனால் அனில் போர்டியா குழு பரிந்துரை 35,659 கோடி. அரசு அதை விட குறைவா தான் ஒதுக்கிச்சு! அது தனி சப்ஜெக்டு)

இப்படி வசூலான கல்வி துணை வரியை கிட்டத்தட்ட 3 வருஷமா மத்திய அரசு உபயோகமே படுத்தாம வெச்சிருந்தாங்க. யாரோ ஒரு புண்ணியவான் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த சுளீருக்கு பிறகு, இப்போ அதை செலவு செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறதா தகவல் வருது.

இன்னும் இதில் விரிவா பேச நிறைய இருந்தாலும், நான் முக்கியமான விஷயங்களை மட்டும் உங்ககிட்டே சொல்லி இருக்கேன். இதில் இருந்தே நீங்க சில விஷயங்களை யூகிச்சிக்கலாம்.

எத்தனையோ கோடி அரசு செலவு செய்யுறதா சொல்றாங்க, ஆனா அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமுயரலை. தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் கொள்ளை கொள்ளளயா சம்பாதிக்கிறாங்க. ஆனாலும் கல்வி தரம் உயரலை. (டிகிரி படிச்சிட்டேன்னு பெருமை சொல்றவங்களுக்கு பேங்குக்கு போயி அவ்ங்க ஃபீஸ் கட்டறதுக்கான ஒரு டி.டி கூட எடுக்க தெரியாத கல்வியை தான் நாம கொடுத்திருக்கிறோம்!) எல்லா பணத்தையும் கோடி கோடியா அரசு செலவு செய்ததா சொல்லுது. ஆனாலும் 100% கல்வி அறிவு முழுமையா கிடைக்கலை. அப்படி கடமையை செய்ய தவறிய அரசுகள் மேல இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இது தான் இந்த நாட்டின் கல்வி நிலைமை. பி.எஸ் வீரப்பாவின் வசனம் ஞாபகம் வருது இல்லே? இந்த நாடும்.. நாட்டு மக்களும்……”


Related Posts:

Monday, August 27, 2012

நம்பிக்கை வாக்கெடுப்பு – நியாயத்தீர்ப்பா?ன்றைய தினம் அகில இந்தியாவையும் பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும் விஷயம், பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் தினசரி நடைபெற்றுவரும் எதிர்கட்சிகளின் அமளி தான்!

எப்போதுமே எதிர்கட்சிகள் இப்படி எதையாவது ஒரு விஷயத்தை கையில் எடுத்து பிரதமரை ராஜினாமா செய்ய சொல்வதும், பிரதமர் மறுப்பதும், காங்கிரஸ் பிரதமரை பாதுகாப்பதும், நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கசெய்வதும் வழக்கமான ஒன்று தான்! ஆனால் இப்போதைய விஷயம் கொஞ்சம் கவனிக்க தக்க ஒன்று!

நிலக்கரி சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிட்டத்தட்ட ரூபாய். 1, 80,000 கோடி அரசுக்கு இழப்பு என்று தணிக்கை துறை கொடுத்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும், அதற்காக தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என்பது தான் இப்போதைய கோரிக்கை!

ஏற்கனவே 2G வழக்கில் இதே போலொரு குற்றச்சாட்டை மத்திய தணிக்கை துறை கொடுத்ததுமே, அவசரம் அவசரமாக வழக்கு பதிவு செய்து அந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு, பதவி விலகியபின் கைது செய்யப்பட்டார். அது போலவே, இந்த வழக்கையும் கையாண்டு, பிரதமரை பதவி நீக்கம் செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பது தான் எதிர்கட்சிகளின் வாதம்.

2G வழக்கு யூகமான வழக்கு என்பதும் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு நிச்சயமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான ஒன்று என்பதும் ஏற்கனவே இது குறித்த எனது பதிவை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்!

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு தவறானது. மத்திய தணிக்கை துறை தனது வரம்பு மீறி செயல்படுகிறது. தவறான தகவல்களை கொடுக்கிறது என மத்திய அரசு சொல்கிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து சொன்ன, என் மதிப்பிற்குறிய திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கூட, ராஜாவை பதவி நீக்கியதற்கு காரணம் அவர் அமைச்சர். ஆனால் பிரதமர் தான் இந்த அரசின் அச்சாணி. அதனால் அவவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என  சொல்லி இருக்கிறார். சுரங்கத்துக்கு அனுமதி தான் கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதில் இருந்து ஒரு டன் நிலக்கரி கூட இன்னமும் வெட்டி எடுக்கப்படவில்லை. அப்படியிருக்க ஒரு பைசா கூட அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என  மத்திய அமைச்சர். ப. சிதம்பரமும் முட்டாள்தனமான பேட்டி அளித்திருக்கிறார்.

இப்படியான சூழலில் இன்றைக்கு பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்தில் விளக்கங்களை கொடுக்கும் போது, இந்த விவகாரத்தில் தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் பதவி விலகுவதை பற்றி எந்த தகவலும் இல்லை. விசாரணை விவரங்களும் இல்லை.


மேலும், இதில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுத்து அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார் பிரதமர்.

அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால் (விட்டால் என்ன, காங்கிரஸ் கூட்டணிக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் அவர் தான் வெற்றி பெறுவார்) இந்த ஊழல் குற்றச்சாட்டு தவறு என்றாகிவிடுமா? அரசுக்கு ரூ.1,80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படவில்லை என்றாகிவிடுமா? ஆள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தில் என்ன தவறை வேண்டுமானாலும் அரசு பொறுப்பில் உள்ளவர்கள் செய்து கொள்ளலாமா? புரியவில்லை.

2G விஷயம் போல இந்த நிலக்கரி விஷயம் இல்லை என்பதை எனது முந்தைய பதிவில் ஓரளவுக்கு விளக்க முற்பட்டு இருக்கிறேன். இன்னும் விரிவாக சொல்வதென்றால்:

மத்திய நிலக்கரி அமைச்சராக இருந்த சிபு சோரன் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டபின், அந்த துறையை பிரதமர் நிர்வகிக்க தொடங்கினார். திரு. தாசி நாராயணன் அவர்களும் திரு. சந்தோஷ் பாக்தோத்யா அவர்களும் இணை/துணை அமைச்சர்கள்.

2007ல் மார்கெட் விலையில் டன்னுக்கு ரூ.2000/- விற்கும் நிலக்கரியை டன்னுக்கு ரூ.100/-க்கும் குறைவாக இந்த அமைச்சர்கள் குழு தனியாருக்கு தாரை வார்த்தது. இதை நியாயப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டுவந்த சுரங்க சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை. நான்கு ஆண்டுகளாக அது நிலுவையில் உள்ளது.

2006-2011 கால கட்டத்தில் 175 சுரங்கங்கள் தனியாருக்கு இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கொடுக்கப்பட்டன. லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் இதுவரை நிலக்கரியை வெட்டி விற்று வருகின்றன. இதன் மூலம், மார்கெட் விலையை விட மிக மிக குறைந்த அடிமாட்டு விலைக்கு நிலக்கரியை கொடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட 26 லட்சம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த நஷ்டம்! லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் வெறும் 26 நிறுவனங்கள் மட்டுமே இதுவரை நிலக்கரியை வெட்டி விற்று வருகின்றன. அதாவது அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய 54 லட்சம் கோடி ரூபாய்க்கு பதிலாக, 28 லட்சம் கோடி ரூபாய் தான் கிடைத்திருக்கிறது.

இன்னொரு வேடிக்கை, லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் லைசன்ஸ் பெற்ற நாளில் இருந்து 48 மாதங்களுக்குள் நிலக்கரி உற்பத்தியை தொடங்காவிட்டால் அவர்களது லைசன்ஸை ரத்து செய்திருக்கவேண்டும். 

இந்த வகையில் கிட்டத்தட்ட 150 நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படாமல் இருக்கிறது. இப்படி செயல்படாத நிறுவனங்களின் லைசன்சை ரத்து செய்யாமல் விட்ட வகையில் மத்திய அரசு பெற்ற லாபம் என்ன என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும், அதுவும் இது விஷயமாக விசாரணை ஏதும் நடந்தால் மட்டுமே!

2G வழக்கில் அரசுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இன்னமும் கூடுதலாக லாபம் கிடைத்திருக்குமே என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால் நிலக்கரி விஷயத்தில் ஒட்டுமொத்தமாக அரசுக்கு நஷ்டம். சுரங்க ஒதுக்கீட்டு தொகையில் ஏற்பட்ட நஷ்டமான 1.80 லட்சம் கோடி பற்றி மட்டும் தான் இங்கே இப்போது பேசப்பட்டு வருகிறதே தவிர, வெட்டி எடுக்கப்பட்ட / இனி வெட்டி எடுக்கப்படவிருக்கின்ற நிலக்கரிக்கான மார்கெட் விலையுடன், அரசு நிர்ணயித்த விலையை ஒப்பிட்டால் வரக்கூடிய நஷ்டமான 26 லட்சம் கோடி ரூபாய் பற்றி இன்னும் யாரும் பெரிதாக பிரச்சனை கிளப்பவில்லை. இந்த இடத்தில் தான் சிதம்பரம் அவர்கள் சொன்னதை போல, இன்னமும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படவில்லை. அதனால் (இன்னும்) நஷ்டம் ஏற்படவில்லை என்கிற வாதம் பொருந்தும்.

சரி, நான் மீண்டும், இந்த பதிவின் நோக்கத்திற்கே மீண்டும் வருகிறேன்.

பிரதமர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு உரிய ஆதாரங்களை மத்திய தணிக்கை துறையே விரிவாக சமர்ப்பித்து இருக்கிறது. அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இழப்பை ஏற்படுத்தியதற்கான பலனை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். நியாயமாக என்ன  செய்திருக்கவேண்டும்?

சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரான பிரதமர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொண்டு, தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, நம்பிக்கை வாக்கெடுக்கிறேன். வென்றால் நான் குற்றமற்றவன், தோற்றால் பார்க்கலாம் என்பது என்ன வகையான நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை. இது தான் நியாய தீர்ப்பா என்பதும் புரியவில்லை.

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

Printfriendly