Wednesday, March 20, 2013

மற்றுமொரு விலகல் நாடகம்!
2004 முதல் 2013 வரையிலான இந்த ஒன்பது ஆண்டு காலங்களில் திராவிட முன்னேற்ற கழகம், மத்திய அரசிலிருந்து விலகுவதாக, மத்திய கூட்டணியிலிருந்து விலகுவதாக இதுவரை ஆறு முறை அச்சுறுத்தி இருக்கிறது. அதில் மூன்று முறை தான் ஆசைப்பட்ட காரியத்தை சாதித்தும் இருக்கிறது. அந்த ஆறு முறையும் வெகு லாவகமாக பின்வாங்கி தங்கள் கட்சியின் பெயரை செவ்வனே கெடுத்துக்கொண்டும் உள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10% பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி அதை தடுத்த பொது நிகழ்வாகட்டும், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி மனித உரிமைகளுக்கான (பொய்யான?) வாக்குறுதியை பெற்ற சமூக நிகழ்வாகட்டும், ஏழு மத்திய அமைச்சர் பதவிகளை தரவேண்டும், அதுவும் தமிழக வளர்ச்சிக்கான துறைகளாக வேண்டும் என அச்சுறுத்தி பெற்ற சொந்த, சுயலாப, மாநில நலன் சார்ந்த நிகழ்வாகட்டும்… அவரது பதவி விலகல் நாடகத்தை எந்த சங்கடமும் இல்லாமல் தான் செய்து வந்துள்ளார்.

எனினும் இந்த முறை, அவர் விடுத்திருக்கும் அச்சுறுத்தல் என்பது உணர்வுப்பூர்வமானது மட்டுமல்ல, அவசிய தேவையானதும் கூட என்பதை எல்லா நடுநிலையாளர்களும் அறிவார்கள். மேலும், இன்றைய சூழலில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் இல்லை, எதிர்கட்சியாகவும் இல்லை. மாநில அரசு ஏகப்பட்ட வழக்குகளை கையில் வைத்து, மொத்த கட்சியினரையும் வளைக்க காத்துக்கொண்டிருக்கிறது. பொதுமக்களின் அபிமானத்தையும் இழந்து அனாதரவாக நிற்கிறது திமுக என்னும் பேரியக்கம். இந்த சூழலில், மத்திய அரசில் இருந்து வெளியேறுவது மட்டுமல்லாமல், மத்திய ஆளும் கூட்டணியிலிருந்தே மொத்தமாக வெளியேறுவது என்பது உச்சபட்ச ரிஸ்க் என்பதை உணராதவர்கள் இல்லை. இந்த பின்னணியில் வைத்து இந்த பதவி விலகலை காண்கையில் தான் இது மொத்த பணயம் என்பது விளங்கும்.

நேற்றிரவு குடியரசு தலைவரிடம் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் கடிதத்தையும், இன்று பிரதமரிடம் அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தையும் முறைப்படி சமர்ப்பித்தாயிற்று.

சரி இப்போது இத்தனை அழுத்தம் தரவேண்டிய அவசியம் என்ன?

2009-ல் இறுதிப்போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததற்கான ஆதாரங்களை மீடியாக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி ஆவணங்களாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இலங்கை தீவிரவாத ஒடுக்குதல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், மனித உரிமைகளை மீறியதற்கும் கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் அமெரிக்க, ஐநாவின் மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது.

அந்த தீர்மானம் வலுவானதாக இல்லை என்பதாலும், அது போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போன்றவை குறித்து தெளிவான குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதாலும், முறையான சுதந்திரமான நடவடிக்கைகளை இலங்கைக்கு எதிராக எடுப்பதற்கான வலியுறுத்தல்கள் இல்லை என்பதாலும், அத்தகைய வலுவான திருத்தங்களை இந்தியா கொண்டுவரவேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது.

அதை நோக்கிய பயணத்தை திமுக கடந்த 2012ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. ஈழ விவகாரத்தில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் டெசோ வுக்கு மறுஜென்மம் கொடுத்து புதுப்பிக்கப்ப்ட்டது. ஐநாவிடமும் பல்வேறு நாடுகளின் பிரதமர்களிடமும் நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை கொடுத்து விவகாரத்தின் வீரியத்தை விளக்கி சொல்லி, ஐ.நாவில் தீர்மானம் வருகையில் அதை ஆதரிக்க வேண்டுகோளும் விடுத்து விட்டு வந்தது.

இந்திய நாடாளுமன்றத்திலும், தனது குரலை கடந்த ஒராண்டு காலமாக ஓங்கி ஒலித்து வந்தது. இதன் அடிப்படையில் தான், கடந்த 2012ம் ஆண்டு ஐநாவில் தாக்கலான தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஆனால் அந்த தீர்மானம் மிக மென்மையாக அமைந்திருந்ததால் நாம் எதிர்பார்த்த பலனை அப்போது பெற முடியாமல் போய்விட்டது. இது வரை பட்ட அத்தனை பாடுகளும் வீணாகிப்போனதன் வலியை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்த திமுக, இந்த ஆண்டு அப்படி வீணாகப்போய்விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, விலகல் நாடகம்(!) நடத்தியேனும் இந்திய அரசு ஐநா தீர்மானத்தில் வலுவான திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என மெனக்கெட்டு கொண்டிருக்கிறது.

எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இன்று, மத்திய அரசு சூசகமாக தெரிவித்து இருக்கிறது. சோனியா அவர்கள், இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சொன்னதோடு, இந்திய அரசை எந்த நாடும் தங்கள் இஷ்டத்துக்கு வளைத்துக்கொள்வதை அனுமதிக்கமுடியாது என்பதையும்  உறுதியாக சொல்லி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சர், திரு.சல்மான் குர்ஷித், சோனியா அவர்களின் முடிவே இறுதியானது என தெரிவித்திருப்பதோடு, அவசரமாக ஐநாவுக்கான இந்திய தூதரை டெல்லி வரவழைத்து இன்று நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தியா ஐநா தீர்மானத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் தான் ஐநாவில் திருத்தம் கொண்டு வரமுடியும். அதனால் தான் திமுக விலகல் முடிவை அறிவித்த அதே நேரத்தில், அவருக்கு வந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, ஐநாவில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்தால், முடிவை ‘பரிசீலனை’ செய்யலாம் என்கிற ஒரு பரிகாரத்தையும் வெளியிட்டிருந்தார்.

இச்சமயத்தில், திமுகவை பகைத்துக்கொள்வது என்பது இந்திய நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதுணர்ந்த மத்திய அரசு, இன்று, அனைத்து கட்சி கூட்டம் கூட்டி அதில் நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் கொண்டுவருவது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

இந்திய அளவில் ஈழ விவகாரத்தை கொண்டு சென்றதிலும், நாடாளுமன்றத்திலும், ஐநாவிலும், பிற உலக நாடுகளிலும் ஈழ ஆதரவை பெற்று தந்ததிலும் தனி ஒரு இயக்கமாக திமுக இயங்கியதை யாரும் மறுக்க முடியாது!

1950 களிலிருந்தே ஈழ விவகாரத்தில் முழுமையான ஆழ்ந்த அனுபவம் உள்ள கலைஞர் 1970 களிலேயே அகில இந்திய அளவில் இந்த விவகாரத்தை கொண்டு சென்று இந்திய தலைவர்களை ஈழ விவகாரத்தின்பால் ஈடுபடுத்தினார். வாஜ்பாயி, பஸ்வான், பகுகுணா போன்ற இந்திய தலைவர்கள் ஆகட்டும், தங்கபாலு, ராசாராம், போன்ற தமிழக தலைவர்கள் ஆகட்டும், எல்லோரையும் ஈழத்தின் பால் ஈர்த்து சென்றதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

அது தான், இப்போதைய நாடாளுமன்ற விவாதத்தில் மிகவும் கை கொடுத்தது. பஸ்வான், யஷ்வந்த் சின்ஹா, டி.ராஜா, லாலு போன்ற தேசிய தலைவர்கள் ஈழ விவகாரம் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசிய அந்த விவாதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அந்த ஆதரவு தான் இன்றைக்கு நாடாளுமன்ற தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதுவரையும் வெறும் தமிழகம் சார்ந்த விவகாரமாக மட்டுமே இருந்துவந்த ஈழ விவகாரம், இப்போது இந்திய அளவிலான விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.

இத்தனை அடிப்படை கட்டமைப்பையும் ஏற்படுத்தி, ஒட்டு மொத்த இந்திய அரசியலையும் தன் பக்கம் ஈர்த்து தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்த பின் தான், விலகல் ‘நாடகத்தை’ அரங்கேற்றி இருக்கிறார்.

இப்போது மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. திமுக கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றியாகவேண்டிய ஒரு கட்டாய நிர்ப்பந்தத்தில் தத்தளிக்கிறது. இதை, நேற்றைய ப.சிதம்பரம் அவர்களின் பேட்டியில் தெளிவாக உணரமுடிந்தது.

"பொய்ம்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என வள்ளுவர் சொன்னதை போல, இது வெறும் வழக்கமான நாடகமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டதோ, அந்த நோக்கம், வழக்கம் போல நிறைவேறினால், அது தான் தமிழகத்தின் அவசிய தேவையாக இருக்கக்கூடும்.

அந்த வரம் கிடைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். காத்திருப்போம்!

Friday, March 15, 2013

மாணவர் போராட்டம் – எனது பார்வையில் – பாகம் 2


மிழகத்தில் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் குறித்து, அதன் துவக்கம், காரணம், தற்போதைய நிலைகளை குறித்து ஏற்கனவே நீங்கள் முதல் பாகத்தில் விரிவாக படித்திருப்பீர்கள்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை, எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் ஒரு முக்கியமான விஷயம், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தான்.

முதல்வர் ஜெ. பற்றி தமிழகம் அறியாததல்ல. எந்த ஒரு விவகாரத்திலும், தனது அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அட்க்குவதில் தயவு தாட்சணியமே பார்த்ததில்லை அவர்.

தலைமை செயலக கட்டிடம் கட்டுவதற்காக, கடற்கரை சாலையிலுள்ள இராணி மேரி கல்லூரியை தகர்க்க முடிவெடுத்தபோது, அந்த கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்கியதிலாகட்டும், பத்திரிக்கையாளர் பேரணியை முறியடித்து முடக்கியதிலாகட்டும், அரசு ஊழியர் தங்களது உரிமைகளை கோரி போரடிய போராட்டத்தை நிர்மூலமாக்கியதிலாகட்டும், ஹிந்து பத்திரிக்கையில் தனது அரசு பற்றிய விமர்சனம் வந்ததற்காக, ஆசிரியர் குழுவின் ஐவரையும் பெங்களூர் வரை விரட்டி சென்று பிடித்து வந்து கைது செய்து காட்டிய உத்வேகத்திலாகட்டும், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆஜராக சென்ற வக்கீல் சண்முகசுந்தரம், கலைஞர் கைது சம்பவத்தை சட்டப்படி விசாரித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி அசோக் குமார் அவர்களை பழிவாங்க அவரது மருமகன் மீதே கஞ்சா வழக்கிட்டு கைது செய்ததாகட்டும், சாலைப்பணியாளர்கள், மக்கள் பணியாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கி, அதை எதிர்த்து போராடிய அந்த அப்பாவி ஏழை தொழிலாளர்களை காவல்துறையை விட்டு நொறுக்கி எடுத்ததாகட்டும்… இவை போன்ற இன்னும் பல பல சம்பவங்களில், தன்னையோ, தனது அரசையோ விமர்சிப்பதை அவர் எந்த அளவுக்கு கடுமையாக கையாள்வார் என்பது தமிழகம் மிக நன்றாக அறிந்த ஒரு விஷயமே.

அவரை விமர்சித்த காரணத்துக்காக, அவரது அரசின் செயல்பாடுகளை எதிர்த்த காரணத்துக்காகவே முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்டராமன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், போன்றோர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவையெல்லாம் தனியே விரிவாக சொல்லப்படவேண்டிய ஒன்று எனினும், அவரது இத்தகைய குணாம்சங்களை கண்டு தான் பெரும் செல்வாக்கு பெற்று வளைய வந்த பல பல அரசியல் தலைவர்களும் அமைதியாக அடிபணிந்து ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள், என்பதை தொடர்ச்சியாக தமிழக அரசியலை கண்டு வருவோர் அறிவர்.

அப்படி இருக்க, தன் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முயலும் மாணவர்களை அவர் எப்படி கையாள்வார் என்பது யூகிக்கக்கூடிய ஒன்றே! அதனால் தான், கலைஞர் அவர்களும் இன்ன பிற நடுநிலையாளர்களும், அடையாள உண்ணாவிரதத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள், நீண்ட கால போராட்டம் என்பது உங்களையும் உங்கள் எதிர்கால வாழ்க்கையையும் சீரழித்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது என எச்சரித்து, போராட்டத்தை கைவிட கோரினார்கள்.

ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்ட களத்திலே தான் இருக்கிறார்கள், விளைவுகள் பற்றிய எந்த கவலையுமின்றி! குறைந்த பட்சம், தங்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்கவேண்டிய மதிமுக, விசி, போன்ற கட்சிகள் கூட அடக்கி வாசிப்பது ஏன் என அவர்க்ள சற்று சிந்தித்து பார்த்து இருக்கலாம்!

சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி நிலையங்கள், மாணவர்களின் இந்த போராட்டத்தை அடுத்து காலவரையின்றி மூடப்பட்டு உள்ளன. கல்லூரி விடுமுறை அறிவிக்க பட்ட அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் மாணவர்கள் என்கிற தகுதியை இழந்து, பொதுமக்கள் என்கிற சமநிலைக்கு வந்துவிடுகிறார்கள். எனவே சட்டவிரோதமாக கூடுவது, அனுமதியின்றி போராட்டம் நடத்துவது போன்ற இந்திய தண்டனை சட்டம் சொல்லும் அத்தனை குற்றங்களுக்கும் மாணவர்களை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க முடியும்.

விடுமுறை விடப்படாத கல்லூரிகளில், போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் முற்றிலுமாக நீக்கப்படும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கிறது. இது எல்லா மாணவர்களையும் உளவியல் ரீதியாக பலவீனமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஸ்பென்ஷன் என இல்லாமல் நேரடியாக டிஸ்மிஸ் என்பது மாணவர்களின் படிப்பையும், எதிர்காலத்தையும், வாழ்க்கை மீதான அவர்களது நம்பிக்கையையும் ஒருசேர ஒட்டுமொத்தமாக ஒடுக்கிவிடும். இதன் வீரியத்தை மாணவர்கள் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அதனால் தான் கலைஞர் அவர்கள், தனது அனுபவத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, இப்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் மாணவர்கள்.

இந்த டிஸ்மிஸ் நடவடிக்கையை நாம் குற்றம் சொல்ல முடியாது. கல்லூரியின் பார்வையில், கல்லூரி விடுமுறை விடப்படவில்லை. மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு முறையான அனுமதியின்றி போராட்ட களத்தில் இருக்கிறார்கள். இது ஒன்றே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போதுமானதாகும். பத்து மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டால், ஆயிரம் மாணவர்கள் உளவியல் ரீதியாக பலவீனப்பட்டு போராட்ட களத்திலிருந்து பின்வாங்குவார்கள் என்பதை அரசு தெளிவாக உணர்ந்து செயல்பட்டதன் பலன் இப்போது தெளிவாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

போராட்ட மாணவர்களில் சிலர், நாங்கள் தமிழக அரசுக்கு எதிராக போராடவில்லை என வலிய விளக்கம் கொடுத்து தமிழக அரசின் நன்னம்பிக்கையை பெற முயற்சிப்பதையும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், தமிழக அரசு தங்களுக்கு முழு ஆதரவு தருவதாக பொய்யுரைப்பதையும் காண முடிகிறது. இது மனதளவில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கத்தை வெட்டவெளிச்சமாக வெளிப்படுத்துவதாகவே ஆட்சியாளர்களும் உணர்ந்திருக்கக்கூடும்!

முன்பே சொன்னது போல, மாணவர்கள் இன உணர்வின் அடிப்படையிலோ, தமிழுணர்வின் அடிப்படையிலோ இந்த போராட்டத்தை துவங்கவில்லை எனபதால், இயல்பாக அப்படியான போராட்டங்களில் காணக்கிடைக்கும் கொள்கை பிடிப்பும், உறுதியும் இந்த போராட்டங்களில் காண இயலவில்லை. குறைந்த பட்சம், ஈழ தமிழர்களின் பால் இயற்கையாகவே ஆதரவும், அன்பும் உள்ளவர்கள் இந்த மாணவர்கள் என்று கூட கருத முடியவில்லை. அப்படி ஏதேனும் இருந்திருந்தால், தமிழகத்திலேயே பல்வேறு இன்னல்களுக்கிடையே, எந்த வித அடிப்படை வசதியுமின்றி வாடும் ஈழ தமிழ் அகதிகளுக்கு ஒருவேளையேனும் உதவி செய்வதோ, ஆதரவு நல்கி ஆறுதல் படுத்துவதோ நடந்திருக்கும். அப்படி கூட அவர்கள் இதுவரை யாரும் ஈடுபட்டதாக தெரியவில்லை.

மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கையை வைக்கும் நோக்கமும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இந்திய அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையானாலும், இந்திய அரசே தனியாக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையானாலும், இந்திய அரசு இலைங்கையை கண்டித்து ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கிகொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையானாலும், அனைத்துமே இந்திய அரசை நோக்கிய கோரிக்கையாக, இந்திய அரசு மட்டுமே செயல்படுத்தக்கூடிய கோரிக்கையாக தான் இருக்கிறது. இருந்தும், டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு சில பிரதிநிதிகள் சென்று உள்துறை செயலாளரையோ, உள்துறை அமைச்சரையோ சந்திக்க முயற்சி செய்வது; அல்லது சென்னையிலேயே மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வைத்து மத்திய அரசிடம் அதை சேர்ப்பிப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை.

எப்படி சிந்தித்தாலும், இது உணர்வுப்பூர்வமானதாகவோ, ஆக்கப்பூர்வமாகவோ முன்னெடுக்கப்படும் போராட்டம் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு வழங்க மாணவர்கள் தவறி விட்டனர்.

போராட்ட குழுவினரிடமே கூட ஒரு ஒற்றுமையின்மையும், கோரிக்கைகளில் நிலவும் வேறுபாடும் ஒரு புறம் எனில், நாளை அரசு தனது வழக்கமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுமேயானால், இப்படி சிதறிக்கிடந்து என்ன செய்ய போகிறார்களோ என்கிற கவலை இன்னொரு புறம் வந்து கலக்கத்தை கொடுப்பதையும் தவிர்க்க முடிவதில்லை. அப்படி ஒரு சூழல் வந்தால் வழக்கம் போலவே, கலைஞர் களமிறங்கி அரசிடம் எதிர்ப்பார் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் உள்ளூர எல்லோருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கிறது. காரணம் இன்றைய தேதியில், தமிழக அரசை துணிச்சலாக எதிர்க்கும் ஒரே ஒரு நபராக அவர் மட்டும் தானே இருக்கிறார்?

இந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாததை போலவே, பல கட்சிகளின் ஆதரவும் இல்லை. போராட்ட அறிவிப்பு வந்தபின் சென்று பார்க்காவிட்டால் நன்றாக இருக்காது என்பதற்காக சம்பிரதாயமாக சென்று வாழ்த்தி வந்ததை தவிர தமிழக அரசியல் கட்சிகள் வேறெதையும் செய்ய தயங்குவதற்கு, தமிழக அரசின் மீதான அவர்களது அச்சம் தான் காரணம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

இப்போது இந்த போராட்டத்துக்கு உடனடியாக தேவை படுவது ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொண்டிருக்காமல், எல்லா மாவட்டங்களிலும் ஒரே விதமான கோரிக்கைகள், ஒரே விதமான மன வலிமையை கொடுக்கக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர். மேலும் என்னென்ன கோரிக்கைகள் என்கிற பட்டியல், அதை யாரிடம் சமர்ப்பிப்பது என்கிற தெளிவு, அதை நோக்கிய முன்னெடுப்புக்கள், அதற்கான பொதுமக்களின் ஆதரவு திரட்டுதல் போன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் ஆலோசனைகளையும் கொடுக்கக்கூடிய ஒரு வழி காட்டி தான் இப்போது இந்த போராட்டத்துக்கு உடனடி தேவையானதாக இருக்கிறது. ஒற்றுமை தான் அரசின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் என்பதும், வெற்று விளம்பரங்களுக்காகவும், சுய நற்பலன்களுக்காகவும் சிதறிக்கிடப்பது அரசு நடவடிக்கைகளை எளிதாக்கும் என்பதும் தெரிந்து உணர்ந்துள்ள ஒரு நல்ல வழிகாட்டியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதே இப்போது மிக அத்தியாவசியமாக உணர்கிறேன்.

இது விஷயத்தில் (பிடிக்கிறதோ இல்லையோ) டெசோவின் செயல்பாடுகளை மாணவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐநா மன்றத்தில் தீர்மானம் மூலமாக தான் இலங்கையை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, இந்திய அரசிடமும், ஐநாவிடமும், நேரடியாக விளக்கமான கோரிக்கைகளை கடந்த ஆண்டே சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்துவிட்டு வந்தனர். மேலும், அந்த தீர்மானத்துக்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பொருட்டு பல்வேறு நாடுகளின் தூதர்களையும், பிரதமர்களையும் சந்தித்து இந்த விவகாரத்தின் வீரியத்தை எடுத்து சொல்லி, அவர்களது ஆதரவை பெற்று வந்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் 30 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்ததிலும், அமெரிக்க இந்த ஆண்டு தீர்மானம் கொண்டுவருவதிலும், ஐநா அப்படியான ஒரு தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்வதிலும், இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க தயங்காது என சொல்லியிருப்பதிலும், டெசோவின் திட்டமிட்ட, கடந்த 15 மாதங்களாக அவர்கள் எடுத்த தெளிவான வழிமுறைகளின் பங்கு மிக பெரும்பான்மையாக உள்ளதை மறந்துவிடக்கூடாது. விவரம் தெரியாதவர்கள் விமர்சிப்பதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஆக்கப்பூர்வமாக யார் இந்த தீர்மானத்தை செயலாக்க முடியுமோ அவர்களையெல்லாம் சந்தித்து விளக்கியது தான் இன்றைக்கு விவாதமாக முகிழ்த்திருக்கிறது.

அதுபோலவே, மாணவர்களும் தங்கள் கோரிக்கைகளை ‘உரியவர்களிடத்தில்’ கொண்டு சேர்த்து, அதற்குரிய பிற ஆதரவாளர்களை திரட்டி, தங்கள் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தாலன்றி மாநிலம் தழுவிய இவ்வளவு பெரிய எழுச்சியை மரியாதை செய்ய முடியாது.

வெறுமனே, மஸ்கிடோ மேட் வேண்டும், வங்கி கணக்குக்கு நிதி வேண்டும், பந்தல் வேண்டும், மைக் வேண்டும், உணவு வேண்டும், பெட்சீட் வேண்டும், பிளக்ஸ் பேனர் வேண்டும் என்று கோரிக்கை வைத்துகொண்டிருந்தால், இப்போது மாணவர்களின் இந்த போராட்டம் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் இல்லாமல் ஆகிவிடுமே என்கிற கவலையுடன் அமைகிறேன்!

Thursday, March 14, 2013

மாணவர் போராட்டம் – எனது பார்வையில் – பாகம் 1


மிழகம் முழுவதும் இப்போது பரபரத்து கிடக்கிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் போராட்டம் வீறு கொண்டு எழுச்சி பெற்றிருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராகவும் ஒட்டுமொத்த தமிழக மாணவர் சமுதாயமும் களம் கண்டுகொண்டிருக்கிறது.

ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கான பொது விசாரணை நடத்தி ராஜபக்சேவை தண்டிக்கவேண்டும் என்றும், ஈழ விடுதலையை வலியுறுத்தியும், இன்ன பிற கோரிக்கைகளுமாக லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க தொடங்கியதில் தொடங்குகிறது இந்த எழுச்சி போராட்டம்.உண்ணாவிரத செய்தி கேள்விப்பட்டதும், ஈழ விவகாரத்தை கைகொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான வைகோ, நெடுமாறன், திருமாவளவன், சுப.வீரபாண்டியன், போன்றோரும், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு போன்றோரும் மாணவர்களை சந்திக்க வந்தனர். இதில் தங்கபாலு மீது செருப்பு எறியப்பட்டு, சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பி தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்து விட்டனர் மாணவர்கள்.

நான்கு நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்ததை அடுத்து, தமிழக அரசு சட்டப்படி மாணவர்களை கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தது. பின்னர் அந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சொல்லி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால், அது அங்கே முடியவில்லை. மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகளும் அவரவர் அளவிலே குழுக்களாக தொடர்ந்து அலை அலையாக போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம், தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய மாணவர் போராட்டங்களை எல்லாம் நினைவு படுத்தினாலும், பொதுமக்களின், அரசியல் கட்சிகளின், ஊடகங்களின் ஆதரவு முழுமையாக அவர்களுக்கு கிடைக்கவில்லை.

2009 ம் ஆண்டு இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும், ஆயிரக்கணக்கான போராளிகளூம் கொன்று குவிக்கப்பட்ட போதும், அச்சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இதுவரை அது தொடர்பான பெரும் போராட்டம் எதையும் தமிழகத்தில் யாரும் நடத்தவில்லை. இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சேனல் 4’ தொலைக்காட்சியில் அவ்வப்போது வெளியிடப்படும் கொடூரமான ஆவணப்படங்களில் பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளிட்ட அப்பாவி தமிழர்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என கண்டபோதும் யாரும் எந்த பெரும் கிளர்ச்சியும் செய்யவில்லை.

ஆனால், இயக்க தலைவரின் மகனான பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட ஆவணப்படம் கண்டதும், ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து விட்டது. திமுக, அதிமுக இருவரும் (அதிசயமாக) ஒரே குரலில் பாராளுமன்றத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விவாதங்களில் இறங்கின. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் பெரும் கண்டனத்தை தெரிவித்தன. அதை தொடர்ந்து, மாணவர்கள் எட்டு பேர் திடீரென உண்ணாவிரதம் தொடங்கி பரபரப்பை கூட்டினர்.

இதை பலரும் இன உணர்வாக அல்லாமல், இயக்க உணர்வாக பார்க்க தொடங்கியதாலேயே, நியாயமாக இந்த போராட்டத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய ஆதரவு கிடைக்காமல் போய்விட்டதோ என்கிற ஐயம் எனக்குண்டு! இன உணர்வு போராட்டமாக இருந்திருந்தால் 2009 லோ அல்லது அதற்கு பின்னர் இந்த நான்கு ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் நடைபெற்று இருக்கும். தமிழுணர்வு எனில், சேனல் 4 ல் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதே கிளர்ந்திருக்கும்.

பொதுவாகவே தமிழகத்தை பொறுத்தவரை ஈழ தமிழர்களையும், விடுதலைப்புலைகளையும் குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருப்பது பரவலாக உணரப்படும் ஒன்று. எனவே, புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை வைத்திருக்கும் கட்சிகள், அதை வெளிப்படையாக வெளிப்படுத்தமுடியாமல் அதற்கு தமிழுணர்வு / இன உணர்வு சாயம் பூசி மெழுகுவது மதிமுக, வி.சி பொதுக்கூட்ட பேச்சுக்களை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரின் விடுதலைக்காக போராடுவோரும் கூட, அவர்கள் தமிழர்கள், அதனால் தமிழுணர்வின் அடிப்படையிலே அவர்களது விடுதலையை கோருகிறோம் என்று தான் போராடுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களது உதவியால் நடந்தேறிய இந்திய வரலாற்றின் மிகக்கொடூரமான கொலையில், எந்த சம்மந்தமுமற்ற 15 அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். அவர்களும் தமிழர்களே! ஆனால், ஏனோ தமிழுணர்வு அங்கே செல்லுபடியாகவில்லை.

தமிழக தமிழர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும், ஈழ தமிழர்களுக்காக போராடுவது மட்டுமே தமிழுணர்வு என பல அரசியல் இயக்கங்களால் நிறுவப்பட்டு விட்டது.

எனவே, தமிழுணர்வு, இன உணர்வு, ஈழ உணர்வு என்பதெல்லாம் உடனடியாக பலன் தரக்கூடிய விஷயங்கள் என்கிற எண்ணம் தமிழகத்திலே பரப்பப்பட்டு விட்டது. அந்த வகையிலே, மாணவர்களும் ஈழ விவகாரத்தை கையில் எடுத்து போராட தொடங்கி இருக்கிறார்கள்.

போராட்டத்தின் நோக்கமாக சொல்லப்பட்டுள்ளவற்றில் ஒன்று, மத்திய அரசு ஐநாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்பதும் ஒன்று. ஆனால், அது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கையையோ, ஆளுநரிடம் பேசுவதற்கான கோரிக்கையோ, மத்திய அரசு பிரதிநிதிகளை சந்திக்கும் முயற்சியோ அவர்கள் செய்ததாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற காங்கிரசின் முக்கிய தமிழக தலைவரான திரு. தங்கபாலுவே மாணவர்களை சந்திக்க முன்வந்தபோது கூட, அவரை சந்திக்காமல் செருப்பெறிந்து துரத்தி அடித்து, கிடைத்தற்கரிய அரிய வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள்.

தங்கபாலு அவர்கள் ஈழ போராட்டத்தில் எந்த அளவுக்கு ஈடுபட்டு இருந்தார் என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 80களில் ஈழ விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டவர்களில், ஈழ விவகாரத்தின் முழு பரிணாமத்தையும் முழுமையாக அறிந்தவர்களில் இப்போது உயிர்த்திருப்பவர்கள் மிக சிலரே. கலைஞர், நெடுமாறன், வைகோ, போன்றோருடன் தங்கபாலும் அதில் அடங்குவார்.

பிரபாகரனை ஜாமீனில் எடுக்க வந்த நெடுமாறன் ஐயா அவர்களையும் அடையாறில் தங்கி இருந்த பிரபாகரனுக்கு உணவு உதவி செய்த திருமாவளவன் அவர்களையும், திமுகவின் ஈழ விவகாரத்தை கவனிக்கும் முக்கிய நபராக இருந்த வைகோவையும் ஈழ ஆதரவாளர், ஈழ போராளி என்கிற அளவுக்கு சொல்வதில் எனக்கு எந்த நெருடலும் இல்லை. ஆனால் எந்த சம்மந்தமுமே இல்லாத சீமான் போன்றோரெல்லாம் ஈழ விவகாரம் அறிந்தவர் என போற்றப்படுவதை ஜீரணிக்கவே முடியவில்லை. அப்படியான பலரையும் சந்தித்து உரையாடிய மாணவர் குழு, மத்திய அரசின் கட்சிபிரதிநிதியான தங்கபாலுவை சந்திக்க மறுத்தது மிக மிக தவறான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.


மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராடும் மாணவர்கள், தங்கபாலுவை சந்திக்க மறுப்பதும், எந்தவித அதிகாரமும், கடமையுணர்வும் இல்லாத பிற சிறு அரசியல் தலைவர்களை கொண்டாடுவதும் சரியாகப்படவில்லை. மத்திய அரசை நிர்ப்பந்திப்பது தான் உண்மையான நோக்கம் எனில், வலிய வந்த தங்கபாலு மூலமாகவே தங்கள் உணர்வுகளையும், வேதனைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசுக்கு எடுத்து சென்றிருக்க முடியும். அவசியமானால், மாணவ பிரதிநிதிகள் அவருடனே கூட பிரதமரையோ, வெளியுறவு துறை அமைச்சரையோ சந்தித்து பேசியிருக்க முடியும். ஆனால், அதை எல்லாம் மொத்தமாக புறக்கணித்து விட்டு, மத்திய அரசை ஈர்ப்பதற்காக போராடுகிறோம் என சொல்வது எனக்கு உண்மையில் வியப்பை தான் தருகிறது.

சுப.வீரபாண்டியன், நெடுமாறன், வைகோ, திருமாவளவன் போன்றோரது ஆதரவை மேடையிலேயே பெற்றுக்கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பேட்டி அளித்த பின்னால், எங்கள் மேடையில் எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதியில்லை. நாங்கள் மத்திய அரசை நிர்ப்பந்திக்கவே சுயமாக போராடுகிறோம் என மழுப்புவதன் உள்ளரசியலை தமிழக மக்கள் உணராமலில்லை.

பொதுவாகவே, இணைய தளங்களில் உள்ள சில நூறு இளைஞர்களின் கருத்து தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்து என்கிற ஒரு தவறான அபிப்பிராயம் இணைய வெளிகளிலே உலாவருகிறது. ஆனால் இணைய வெளிகளை விட யதார்த்த வாழ்க்கையிலுள்ள பொதுமக்களே அதிக அரசியல் அறிவு கொண்டவர்கள் என்கிற உண்மை பலரும் அறிந்த ஒன்றே!

இதுவரையும் தமிழக மக்கள், ஈழ விவகாரத்தை கையிலெடுத்த கட்சிகளான மதிமுக, வி.சி, பாமக போன்ற கட்சிகளை புறக்கணித்தே வந்திருக்கின்றன. அதிமுக, திமுக போன்றவர்கள் தமிழக தமிழர்களுக்கான தங்கள் திட்டங்களை பற்றி மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்வதன் நோக்கமும் அதுவே. தமிழக தமிழர்களை பற்றி கவலைப்படுவோருக்கே இது வரை தமிழகம் ஆதரவுகொடுத்து வந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால், மாணவர் போராட்டத்துக்கு தமிழக பொதுமக்களின் ஆதரவு கிட்டாததில் ஆச்சரியமில்லை. ஒரு பொதுநோக்கத்துக்காகவோ, சமூக பிரச்சனைக்காகவோ மாணவர்கள் போராடுபவர்களாக இதுவரை இல்லை. இப்போதும் இல்லை.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி, மற்றும் மின்வெட்டு, சமூகத்தை சீரழிக்கும் மது, விவசாய தற்கொலை, நெசவாளர் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, பெண்களின் பாதுகாப்பின்மை, தொடரும் கொலை கொள்ளை, விலைவாசி உயர்வு, போன்ற சமூக பிரச்சனைகளுக்கோ, அல்லது தங்களையே நேரடியாக பாதிக்கும் தரமற்ற கல்வி, கல்வி கட்டண பிரச்சனை, சமச்சீர் கல்வி குளறுபடி, பேருந்து கட்டண உயர்வு போன்ற தங்களின் பிரச்சனைகளுக்கோ கூட தங்களுக்கென்று கருத்தோ, அதை முன்னெடுக்கின்ற போராட்டமோ அவர்கள் இது வரை செய்ததில்லை.

எனவே, மாணவர்கள், தமிழ் உணர்விலோ, சமூக உணர்விலோ, மக்கள் பிரச்சனைக்காகவோ இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டதாலோ என்னவோ, தமிழக மக்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.

சந்தர்ப்பவாத அரசியலை புறக்கணித்து பழகிய ஊடகங்களும் மாணவர்களை அதிகம் கண்டுகொள்ளாததன் உள்ளீடும் அதுவாக இருக்கக்கூடும்.

மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்காகவோ, ஐநாவின் தீர்மானத்துக்காகவோ போராடுவதாக இருந்திருந்தால், இந்நேரம் மத்திய அரசை சந்திக்கவோ, தங்கள் கோரிக்கையை குறைந்த பட்சம் ஐநாவுக்கே அனுப்புவதற்கோ எதேனும் முயற்சியை செய்திருப்பார்கள். அதுவும் இதுவரை இல்லை! மேலும் தங்கபாலு மீதான தாக்குதல் அவர்களது நோக்கம் அதுவல்ல என்பதை மிக தெளிவாகவே எடுத்து சொல்லிவிட்டது!

மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்து, முன் கூட்டியே தெளிவாக திட்டமிடப்பட்டு, அனைத்து மாணவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழக போராட்டமாக தொடங்காமல், எட்டு பேர் மட்டும் திடீரென்று எந்த முன்னறிவிப்புமின்றி தொடங்குவதும், அதை வாழ்த்த அரசியல் தலைவர்கள் அன்று ஒரு நாள், ஒரே ஒரு நாள் சம்பிரதாயமாக வந்து வாழ்த்திவிட்டு சென்று பின் அமைதியானதும், அதே போன்ற போராட்டத்தை மாவட்டம் தோறும் சின்ன சின்னதாக சிலர் தொடங்குவதும், அப்படி தொடங்கியபின் மற்றவர்களின் ஆதரவையும், நிதி உதவியையும் கேட்டு கோரிக்கை விடுத்தவண்ணம் இருப்பதும், எல்லாமாக சேர்ந்து பார்த்தால் ஒரு வெற்று பரபரப்புக்கான போராட்டமாக மக்கள் முன்னிலையில் ஒரு பிம்பம் விழுவதை தவிர்க்க முடியவில்லை.

இணைய வெளிகளில், தங்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தும் பதிவுகளை விட மிக மிக அதிகமாக, நிதி உதவி வேண்டிய விண்ணப்பங்களும், ஆதரவு கேட்டு ஊடகங்களுக்கு விடுக்கும் கோரிக்கைகளுமே கொட்டி கொண்டு இருப்பது, சலிப்பையே தருகிறது.

மிக மிக அவசியமான ஒரு கோரிக்கையை, மிக மிக சாதாரணமாக கையாண்டு, அதற்கான மரியாதையை சிதைத்து விட்டார்களே என்கிற வருத்தமும் ஊடாடுவதை தவிர்க்க முடியவில்லை!

இன்றைய நிலையில் எதற்காக இந்த போராட்டம் உண்மையில் தொடங்கப்பட்டது என்கிற தெளிவில்லாமல் இருப்பது ஒரு புறம் எனில், மாநில அரசு, பிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன, ஒருங்கிணைப்பில்லாத இந்த போராட்டத்தின் நிலை என்னவாகும், இனி இதை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து செல்ல என்ன செய்யவேண்டும், மாணவர்களின் இப்போதைய நிலைப்பாட்டால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் என்ன என்பதை எல்லாம் யோசிக்கையில் கொஞ்சம் வருத்தமாகவும் உள்ளது. அதை பற்றியெல்லாம் அடுத்த பதிவில் இன்னும் விரிவாக நாளை எழுதுகிறேன்.

இப்போதைக்கு கனத்த மனதுடன் விடைபெறுவதை தவிர வேறென்ன செய்ய?

Printfriendly