Sunday, May 27, 2012

இருண்ட தமிழகம்

ன்னைக்கு ஒரு ஆச்சரியமான செய்தி ஒன்னு டிவி செய்தியில் பார்த்தேன். சென்னை ராயபுரம் பகுதியில் ஒரு மாசமா ராத்திரியில் கரெண்ட் இல்லாம இருக்கிறதை சகிக்கமுடியாம நேத்து ராத்திரி ரோட்டுக்கு எறங்கி ஒரு சாலை மறியலே செஞ்சிருக்காங்க. “வேலைக்கு போயிட்டு வந்தவங்களுக்கும், பள்ளிக்கூட மாணவர்களுக்கும், வயசானவங்களுக்கும், குழந்தைகளுக்கும் நிம்மதியான தூக்கம் இல்லை, அதனால் உடல்நலம் பாதிக்குது, மனசு அமைதியா இருக்கிறதில்லை, இத்தனைக்கும் காரணம் கரண்டு இருக்கிறதே இல்லை. யாரை கேட்டாலும் பதில் சொல்லமாட்டேங்குறாங்க. கட்டணத்தை ஏத்திட்டீங்க, ஆனா கரண்டை கொடுக்க மாட்டேங்குறீங்க. எங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கொடுங்கன்னு” ரோட்ல இறங்கி மக்கள் கெஞ்சுறதை பார்க்கும்போது மனசை அறுக்குது. ஆனாலும் அரசு மௌனமா தான் இருக்கு. இந்த நிலமை, சென்னையில் மட்டும்னு இல்லை தமிழ்நாடு முழுவதுமே இருக்கு. சென்னையில் தினசரி 2 மணிநேரமும், இரவு முழுமையும் கரண்டு கட்டுன்னா..தமிழகம் முழுவதும் 14 மணிநேரமும் கரண்டு கட் இருக்கு. சென்னை ராயபுரம் மக்கள் ரோட்டுக்கு வந்து அரசை எதிர்த்து குரல் கொடுத்திருக்காங்க, மத்தவங்க சகிச்சிட்டு இருக்க பழகிட்டாங்க.. இது தான் வித்தியாசம்.


என்ன தான் பிரச்சனை?

2011 மே மாசம் வரைக்கும் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளுக்கு 2 மணிநேர கரண்டு கட் மட்டும் தான் இருந்தது. அதுவும் பகலில் Non-Peak Hour Period களில் மட்டும் தான். அதை சகித்துக்கொள்ள முடியாத மக்களின் மனப்புரட்சி மௌனப்புரட்சியாக வெடித்து தமிழக ஆட்சியையே தூக்கி எறிந்து அதிமுகவை அரியணையில் அமர்த்தி அழகுபார்த்தது. எந்த நம்பிக்கையில் மக்கள் அதிமுகவை ஆதரித்தார்களோ அது அப்படியே போய்த்து போனது. அதிமுக வந்ததும், சென்னையில் 2 மணிநேரமும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 8 மணிநேரமும் அதிகாரப்பூர்வமாக மின்வெட்டை அமல்படுத்தியது. இது தவிர சென்னையில் 4 மணிநேரமும், பிற பகுதிகளில் 7 மணிநேரம் வரையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலானது. இதன் விளைவுகள் மிக மிக கொடுமையானவை.

பள்ளி குழந்தைகள் படிக்க முடியவில்லை. அதிகாலையில் சமையல் செய்து பள்ளிக்கும், வேலைக்கும் அனுப்பிவைக்க முடியாமல் இல்லத்தரசிகள் திணறினார்கள். வயதானவர்கள், குழந்தைகள், வேலையிலிருந்து வந்தவர்கள் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. உறக்கமின்மை, மன உளைச்சலையும், அமைதியின்மையையும் கொடுத்து பணியிடங்களில் எரிச்சல், வாக்குவாதம் என ஒரு நிம்மதியற்ற சூழலை மாநிலம் முழுதும் விதைத்துவிட்டது. இவை எல்லாம் மறைமுக உளவியல் பிரச்சனைகள் என்பதால் அரசை குற்றம் சொல்ல முடியாது. இல்லங்களில் சமையல் செய்யும் நேரம் முன்கூட்டியே ஆனது. விடிகாலை சமைத்து மதியம் உண்டு உடல்நலம் கெட்டவர்கள் அநேகம். வாழ்க்கை முறை, கலாச்சாரம் எல்லாமே மாறிப்போனது. மின் வசதி உள்ள நேரத்தை அனுசரித்து அதற்கு தக்கபடி வாழ்க்கை முறை மாறிப்போனது. சுருக்கமாக சொல்வதானால், அரசு இந்த மின்வெட்டு மூலம் கிட்டத்தட்ட மொத்த தமிழக மக்களையும் ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டது.

இதன் இலவச இணைப்பாக, மின்கட்டண உயர்வையும் அறிவித்து சந்தோஷப்பட்டுக்கொண்டது தமிழக அரசு. அதாவது கிடைக்காத மின்சாரத்துக்காக கூடுதல் கட்டணம், அல்லது கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருந்தாலும் மக்களுக்கு மின்சாரம் கிட்டவில்லை.

உண்மையில் அந்த அளவுக்கு மின் தட்டுப்பாடு இருக்கிறதா? 2011 மே மாதம் வரை 22 மணிநேரம் மின்சாரம் வழங்கிக்கொண்டிருந்தது மின் வாரியம். அதற்கு அடுத்தமாதமே அது 10 மணிநேரமாக குறைந்துவிட்டது. மின் உற்பத்தியில் எந்த குறைவும் ஏற்படவில்லை, அதே போல மின் உபயோகத்திலும் தீடீரென அந்த அளவுக்கு உயர்வு ஏற்படவில்லை. எனில் எதற்காக இந்த விநியோக குறைவு? என்பதற்கு இதுவரை அரசு பதில் சொல்லவே இல்லை.

பொத்தாம் பொதுவாக அவர்கள் சொல்வது, கடந்த திமுக ஆட்சி, மின் திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை, அதனால் மின் பற்றாக்குறை, அதனால் தான் மின்வெட்டு என கைகாட்டி விட்டார்கள். சரி, கடைசி வரை அதே திமுக அரசு 22 மணிநேர மின்வசதி கொடுத்தபோது உங்களால் ஏன் அதை கொடுக்க முடியவில்லை என கேட்பதற்கும் யாருமில்லை, கேட்டால் பதில் கிடைக்கும் என்கிற உறுதியும் இல்லை.

சரி அந்த குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? முதலில் மின்பற்றாக்குறை ஏன் வந்தது?

1991-1996 ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக தான் தமிழகத்தில் முதல்முறையாக தொழில் புரட்சிக்கு வித்திட்டது. மிகப்பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து வளமான மாநிலம் ஆக்கவேண்டும் என்கிற அதிமுகவின் அடிப்படை நோக்கம் செயல்வடிவம் பெற துவங்கிய கால கட்டம் அது. ஃபோர்டு, ஹ்யூண்டாய், மிட்சுபிஷி என கார் கம்பெனிகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட திட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் முதல் அடிஎடுத்து வைக்க செய்தது அப்போதைய அதிமுக அரசு.

அதற்கு பின்னர் 1996-2001 ஆண்டுகளில் ஆட்சி செய்த திமுக அரசு, அதிமுகவின் தொழில் வளர்ச்சி கொள்கையையே பின் பற்றி, அதனை விரிவு செய்து, சென்னை தவிர்த்து மாநிலம் முழுதும் எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு வகையான தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முடிவுகளை எடுத்து செயல்படுத்த துவங்கியது. அதற்கான காரணம், சென்னை, கோவை, திருச்சி, ஹோசூர் போன்ற பகுதிகள் மட்டுமே தொழிற்வளர்ச்சி என்றிருக்கும் நிலையை மாற்றி தமிழகம் முழுவதும் பரவலாக தொழிற்வளர்ச்சி இருக்கவேண்டும் என கருதியதே.

பின்னர் 2001-2006 ஆண்டுகளிலான அதிமுக ஆட்சி, என்ன காரணத்தாலோ வளர்ச்சி பணிகள் எதிலும் கவனம் செலுத்தவில்லை. எந்தவிதமான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மேலும் செயல்பாட்டில் இருந்த திட்டங்களும் முடக்கிவைக்கப்பட்டன. தமிழகம் தன் வளர்ச்சி வேகத்தை குறைத்துக்கொண்டது. குஜராத்,மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் நம்மை முந்தி சென்றன.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தொழில்வளர்ச்சியில் காட்டிய அக்கறையை யாரும் இந்த 15 வருடத்தில் மின் உற்பத்தியில் காண்பிக்கவேயில்லை. இதன் காரணமாக மின் உபயோகம் உயர்ந்துகொண்டே வர, மின் உற்பத்தி அதே அளவில் நிலையாக நின்றுபோனது. இதன் விளைவாக, உபரி மின்சாரம் வைத்துக்கொண்டிருந்த தமிழகம், மின் பற்றாக்குறை மாநிலமாக மாறிப்போனது.

2006ல் ஆட்சிக்கு வந்த திமுக, மின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து புதிய மின் திட்டங்களை துவங்க முடிவெடுத்து 10,500 மெ.வா மின் உற்பத்தி உடைய தமிழகத்தில் மேலும் 14,000 மெ.வா மின் வசதி பெறும் வகையில் பல பல மின் திட்டங்களை துவக்கியது. அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் சில:



1. வடசென்னை அனல்மின் நிலையத்தில் (NCTPS) விரிவாக்கம் - 1200 மெ.வா

2. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் (MTPS) விரிவாக்கம் – 600 மெ.வா

3. TNEB-NTPC-BHEL கூட்டு முயற்சியில் உடன்குடி அனல் மின் நிலையம் – 1600 மெ.வா

4. TNEB-NLC மின் திட்டம் தூத்துக்குடியில் – 1000 மெ.வா

5. வல்லூர் அனல்மின் நிலையம் – 1000 மெ.வா

6. ஜெயங்கொண்டம் மின் திட்டம் – 1600 மெ.வா

7. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் மின் நிலையம் – 4000 மெ.வா

8. கடலூரில் BGR நிறுவனத்துடன் மின் திட்டம் – 1300 மெ.வா

இவைகள் எல்லாம் 2007-2009 ஆண்டுகளில் துவங்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இவை 2011 ல் முழுமை பெற்று செயல்பட துவங்கி தமிழகத்தின் மின் தேவைகள் தீர்ந்துவிடும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

2011 மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, வல்லூர், மேட்டூர், வடசென்னை மின் திட்டங்கள் நிறைவு கட்டத்தில் இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பின், அந்த பணிகளை தீவிரப்படுத்தியிருந்தால் 2012க்கு முன்பே தமிழகம் மின் உபரி மாநிலமாக ஆகியிருக்கக்கூடும்.

ஆனால், மாறாக, தமிழக அரசு திட்டங்களை தாமதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உடன்குடி திட்டத்தை ரத்தும் செய்துவிட்டது. அந்த காலகட்டத்தில் உற்பத்தியாகிக்கொண்டிருந்த மின்சாரத்தை வைத்தே முந்தய திமுக அரசு 22 மணிநேர மின்விநியோகம் செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த மின்விநியோகம் 14 மணிநேரமாக குறைக்கப்பட்டதன் காரணம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்த மின் வெட்டால் தொழில்வளர்ச்சி பாதிப்பு ஒரு புறம், முன்பே விவரித்ததை போல பொது மக்களின் வாழ்க்கை முறையே பாதித்துவிட்ட கொடுமை ஒருபுறம் என தொடர்ந்துகொண்டிருந்தாலும், அரசு எந்த முற்போக்கான நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தய திமுக அரசு மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறது தமிழகத்தின் சாபக்கேடு.

மாநில மக்களுக்கு உறங்கிக்கொண்டிருக்கும் உணர்வுகள் உந்திதள்ளப்பட்டு வீதியிறங்கி பெரும் போராட்டமாக முகிழ்க்கும் முன்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து மின் விநியோகத்தை சீராக்கவேண்டும். இன்றைக்கு ராயபுரத்தில் நடந்த போராட்டம் தமிழகம் முழுமையும் படராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இருப்பதாக தெரியவில்லை. அவர்களும் மக்கள் தானே?

9 comments:

  1. வேற ஒண்ணுமில்லை வந்தவுடனேயே மின்சாரத்தைக் கொடுத்து விட்டால் , அந்த திட்டங்கள் முந்தைய ஆட்சியில் போடப்பட்டவை என்பது மக்களுக்குத் தெரிந்து விடுமென்பதால் திட்டமிட்டுத் தாமதப் படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  2. தமிழகத்தில் 20 ஆண்டுகளாக மிந்திட்டம் செயல் படுத்துவதில் சுனக்கம் ஏற்ப்ட்டது உண்மையே..98யில் தூத்துக்குடியில் முதலவதாக 500MW super thermal திட்டம் ஸ்பிக் நிறுவனம்..அமெரிக்காவின் Raytheon / Badger Energy Inc நிறுவனத்தின் உதவியுடன் செயல் படுத்த திட்டம் செய்த நேரத்தில் பாஜாக அரசு அணு குண்டு சோதனை செய்ததால் அத்திட்டம் கைவிடபட்டது...பின்பு 2008க்கு பின்பு TNEB-NLC யின் கூட்டு முயற்ச்சியில் 2 x 500 MW திட்டம் ஆரம்பிக்க பட்டு இன்னும் 12-18 மாதங்களில் முடியும் தருவாயில் உள்ளது..மேலும் தனியார் நிறுவன்ம் ஆன Costal Energy - 3 x 600 MW திட்டமும் 12-18 மதங்களில் முடிவு பெறும் நிலையில் உள்ளது,, மற்றொரு தனியார் நிறுவனமான IBPIL 3 x 30 MW, செயல் பட தொடங்கிவிட்டது 3 x 150MW, இன்னும் 6-12 மாதங்களில் செயல் பட தொடங்கும் 2x 630MW இன்னும் 30-35 மாதங்களில் செயல் பட தொடங்கும்..உடன்குடி 2 x 800 MW ஜெ வின் தன்னிச்சை முடிவால் செயல் பட தொடங்குமா? என்பதில் சந்தேகம் உள்ளது ..தூத்துக்குடியில் இன்னும் 5 வருடங்களில் 10000 MW மின் உற்பத்தி செய்யப்ப்டுன் நிலை உள்ளது...தமிழக்த்தில் மின் தலைந்கரமாக உருவாகக்கூடும்....jokin.jey

    ReplyDelete
  3. கூடங்குள போராட்டத்தை திசைத்திருப்பும் முயற்சியும் கூட... நண்பர் கூறியதை போல "மின் உற்பத்தியில் எந்த குறைவும் ஏற்படவில்லை, அதே போல மின் உபயோகத்திலும் தீடீரென அந்த அளவுக்கு உயர்வு ஏற்படவில்லை. எனில் எதற்காக இந்த விநியோக குறைவு? என்பதற்கு இதுவரை அரசு பதில் சொல்லவே இல்லை." முதலில் மின்தட்டுப்பாடு இருப்பது போன்ற நாடகம். கூடங்குளம் திறந்துவிட்டால் இதை சரிசெய்துவிடலாம் என்ற மாயையை மக்களுக்குள் புகுத்தும் முயற்சிதான் இந்த மின்தட்டுப்பாடு.... நாம் தான் புரிந்து செயல்பட வேண்டும்....

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. பல அரிய தகவல்களை தந்துள்ளீர்கள். நன்றி !! :)

    ReplyDelete
  6. முந்தய திமுக அரசு 22 மணிநேர மின்விநியோகம் செய்துகொண்டிருந்த நிலையில், //

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  7. செயங்கொண்டத்தில் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லையே அய்யா :-)

    ReplyDelete
  8. Pointing fingers towards one another is an unending episode in tamilnadu politics, solution to combat the pathetic electricity shortage, being unknown to anyone. Many huge projects are envisaged which end up often in financial or technical chaos. I have heard that one whole city in California USA is being served with geothermal electricity. Why not one of the ruling parties in India or in the state when in power, study this potential and implement captive generation with this technology which can be bought in US. In one firm in Andhra Pradesh such technology is being utilised for captive consumption.

    ReplyDelete

Printfriendly