Thursday, May 24, 2012

ஏர் இந்தியா - என்ன பிரச்ச்னை?

17 நாட்களை கடந்து நீண்டுகொண்டிருக்கிறது ஏர் இந்தியா பைலட்டுக்களின் வேலை நிறுத்தம். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பைலட்டுக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வேலை நிறுத்தத்தை விமானிகள் கைவிட்டால் தான் பேச்சுவார்த்தை என அரசு உறுதியாக இருக்கிறது. என்ன தான் பிரச்சனை?


மே 8ம் தேதி திடீரென்று 150 பைலட்டுகள் சிக் லீவு எடுத்ததுடன் ஆரம்பித்தது இப்போதைய எபிசோடு. அப்பப்போ அடிக்கடி பல்வேறு காரணங்களை சொல்லி ஸ்டிரைக் செய்துட்டு இருந்தாலும், இப்போது தான் முறையாக எந்த அறிவிப்பும் கொடுக்காமல் மொத்தமாக லீவு எடுத்து அரசுக்கு ஆச்சரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அரசின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்கிறது.

வரலாறு!

இந்தியாவின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. உள்நாட்டு சேவைக்காக இந்தியன் ஏர்லைன்ஸ், வெளிநாட்டு சேவைக்காக ஏர் இந்தியா. இது தவிர இந்தியன் ஏர்லைன்சின் ஒரு எகனாமி பிரிவாக அலையன்ஸ் ஏர் செயல்பட்டு பின் நிறுத்தப்பட்டது. அதேபோல ஏர் இந்தியாவின் ஒரு எகனாமி வெர்ஷனாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது பலவகையான நிர்வாக சிக்கல்களை கொடுத்துக்கொண்டிருந்தது. உதாரணமாக, தனித்தனியான எரிபொருள் பில்லிங், கடன்சுமை, தனித்தனி டிக்கெட் கவுண்டர்கள், பயண திட்டமிடலில் பயணிகளுக்கு ஏற்பட்ட குழப்பம், ஒரே வழித்தட பயணத்துக்கு வெவ்வேறு இடங்களில் பதிவுசெய்யவேண்டிய குழப்பம்னு ரொம்ப கஷ்டம். இதற்கிடையில், உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம், கவர்ச்சிகரமான சிக்கனமான சிறந்த விமான சேவைகளை பயணிகள் பெற துவங்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட போட்டியை சமாளிக்கமுடியாமல் திணறியதால், 2007 ல் மத்திய அரசு, இந்த இரண்டு விமான நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்தது. படிப்படியான இணைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று 2009ல் முழுமையாக முடிவடைந்துவிடும்னு திட்டமிட்டாங்க.. ஆனா இன்னமும் இணைப்பு நடவடிக்கை முழுமை பெறவில்லை.

இதுக்கு சொல்லப்படுற அதிர்ச்சியான காரணம் இரண்டு நிறுவன ஊழியர்களும் இன்னமும் ஒருங்கிணையவில்லை.அவர்களுக்குள் மன பேதம் இருக்கிறது என்பது. அவர்களை விடுங்கள், நிர்வாக ரீதியாகவே, இரு தரப்பினருக்கும் இடையில் சம்பள வேறுபாடு, சலுகைகளில் வேறுபாடுன்னு கிட்டத்தட்ட ஒரு அகதிகளை போல நடத்தப்பட்டு வருகிறார்கள் இந்தியன் ஏர்லைன்சிலிருந்து வந்த ஊழியர்கள். இரண்டு விமான நிறுவனங்களும் ஏற்கனவே சமமாக செயல்பட்டு வந்தது தான், ஊழியர்களும் திறன் மிகுந்தவர்கள் தான் என்பன போன்ற யதார்த்தங்களை மீறி, வேற்றுமையும் ஓரவஞ்சனையும் நிலவி வருகிறது என்பது மிக மிக கொடுமையான அதிர்ச்சி தரும் செய்தி தான்! கேண்டீன் கூட தனித்தனியாம்!

இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், ஊழியர்களின் மனக்குமுறல், சம்பள வேறுபாடு போன்ற எல்லா வேறுபாடுகளையும் அலசி ஆராய்வதற்காக "தர்மாதிகாரி கமிட்டி" அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளும் அரசிடம் தாக்கல் செய்யப்ப்ட்டு விட்டது. ஆனாலும் என்ன காரணத்தாலோ அரசு இன்னமும் அதை அமல்படுத்தவில்லை. அந்த பரிந்துரைகள் அமலானாலே பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை பிரச்சனை முடிந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அரசு தள்ளிப்போட்டு வருகிறதா என்றும் தெரியவில்லை!

இப்போதைய பிரச்சனை!

இப்போ திடீர்னு இப்படி ஒரு போராட்டம் தலையெடுக்க என்ன காரணம்? சம்பள ஏற்றதாழ்வு, ஒருங்கிணைப்பு பிரச்சனை எல்லாம் பல காலமாகவே இருக்கிறது தானே? அதுக்கான பதில் தெரிஞ்சா ரொம்ப சின்னப்புள்ளைத்தனமா இருக்கும்!

போயிங் நிறுவனத்தின் டிரீம்லைனர் னு சொல்லப்படும் கனவு விமானமான போயின் 787 விமானங்களை இந்தியா வாங்க இருக்கிறது. அந்த விமானங்களை இயக்குவதற்கான பைலட்டுக்களை தேர்ந்தெடுத்தில் தான் அதிருப்தி ஏற்பட்டு, இப்போ பிரச்சனை ஆகி வேலைநிறுத்தத்தில் நிற்கிறது. முதல் கட்டமாக வாங்கப்படும் 12 டிரீம்லைனர்களை ஏர் இந்தியா விமானிகளே இயக்குவார்கள் எனவும் அடுத்தடுத்த விமானக்களை இயக்க இந்தியன் ஏர்லைன்சிலிருந்து வந்த விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்னும் அரசு சொல்லி இருக்கு. அதாவது இரு தரப்பிலிருந்தும் விமானிகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படணும்ங்கறது அரசின் நிலைப்பாடு. ஆனால், அப்படி செய்யக்கூடாது, ஏர் இந்தியா விமானிகளுக்கு மட்டும் தான் பயிற்சி தரணும். டிரீம்லைனர்களை இயக்க இந்தியன் ஏர்லைன்சிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாதுங்கறது போராடும் பைலட்டுக்களின் வாதம். கிட்டத்தட்ட இது ஒருவகையான ஈகோ,அல்லது தீண்டாமை மாதிரி ஒரு ஒதுக்குமுறை.

டிரீம்லைனர்களை இயக்குவதற்கு குறைந்தபட்சம் 5000 மணிநேரம் பறந்தவர்களை தான் பயன்படுத்தணும்னு பைலட்டுகள் சொல்றாங்க. ஆனா அரசு 2500-3000 மணிநேரம் பறந்தாலே போதும்னு சொல்லுது. அதுக்கு அவங்க சொல்ற லாஜிக் என்னன்னா, நீண்டதூரம் நீண்டநேரம் பறக்கும் அனுபவம் ஏர் இந்தியா நிறுவன பைலட்டுக்களுக்கு இருந்தாலும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் உள்நாட்டிலேயே குறைந்த தூர பயணங்களை அதிகமாக மேற்கொள்ளுவதால் அதிகமுறை விமானங்களை லேண்டிங் செய்த அனுபவம் கொண்டிருக்கிறார்கள, அதனால் குறைந்த பறக்கும் தகுதி போதும், டிரீம்லைனர்களை பொறுத்தவரை லேண்டிங் அனுபவம் தான் முக்கியம் என்பது அரசின் வாதம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

ஏர்-இந்தியாவின் சிக்கல்கள்

இன்றைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏகப்பட்ட சிக்கல்களில் சிக்கி தவிச்சிட்டு இருக்கு! 44,000 கோடி ரூபாய் நஷ்டம். அரசு 30,000 ரூபாய் பெயில் அவுட்டுக்கு திட்டம் போட்டு காப்பாத்த முயற்சி செஞ்சிட்டு இருக்கு. போராட்டம் நடத்துறவங்க ஏழை பாழைகள் இல்லை, மாசத்துக்கு 8-10 லட்சம் சம்பளம் வாங்குறவங்க. உலகின் அதிக சம்பளம் பெறும் கமாண்டர்கள் ஏர் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இதிலிருந்தே ஏர் இந்தியாவின் ஆடம்பர நிர்வாக செலவுகளை யூகிச்சுக்கலாம்! இதுதவிர தனிக்காட்டு ராஜாவாக இந்திய வானை ஆண்டுகொண்டிருந்த ஏர் இந்தியாவின் இப்போதைய மார்கெட் 17.6%. காரணம் தனியார் நிறுவனங்களின் போட்டி. இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிற நிலையில் பைலட்டுக்களின் சின்னப்புள்ளைத்தனமான ஈகோ போட்டியால் இழுத்து மூடுற கண்டிஷனை நோக்கி போயிட்டு இருக்கு ஏர்-இந்தியா நிறுவனம்.

அரசு அமைதியா இருக்கிறது ஒரு வகையில் நல்லது தான்னு நான் நினைக்கிறேன். காரணம் பைலட்டுக்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணியறது அத்தனை நல்லதுக்கல்ல. அதனால், போராட்டத்தை கைவிட்டால் தான் பேச்சுவார்த்தை என்பதில் உறுதியா இருக்காங்க. மேலும் இன்னும் 5 வருஷத்தில் கிட்டத்தட்ட 7,000 பேர் ரிட்டயர் ஆகப்போறாங்க. இந்த நேரத்தில் அமைதியா இருக்கிறது தான் சரி. அப்போ தான் அடுத்து எடுக்கப்படும் பணியாட்களை அரசின் கட்டுப்பாட்டில் வெச்சிருக்க முடியும்னு அரசு நினைச்சிருக்கலாம்! 1989 லிருந்து புதுசா ஆட்களே எடுக்கப்படவில்லை என்பதையும், இப்போ இருக்கிறவங்களின் சராசரி வயது 50 ங்கறதையும் கணக்கிலெடுத்துகிட்டா, அடுத்த வேலைவாய்ப்பு மிக பிரமாண்டமா இருக்கும்.

நஷ்டம்?

சரி, ஏன் ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு இத்தனை நஷ்டம்?

முக்கியமான வருமானம் தரக்கூடிய விமான வழித்தடங்களில் ஏர்-இந்தியா இல்லை. இதுவே ஒரு அதிர்ச்சியான விஷயம் தான். அந்த ரூட்டுகளில் எல்லாம் தனியார் நிறுவனங்கள் சக்கை போடு போட்டு பணம் குவிக்கிறது. இதில ஆச்சரியமான விஷயம் என்னன்னா, ஒரு தனியார் விமான நிறுவனம், ஒரு வழித்தடத்தில் தன் விமானத்தை இயக்க அனுமதி கேட்டால், ஏர் இந்தியா நிறுவனம் “தான் அந்த வழித்தடத்தில் விமானம் இயக்க திட்டமில்லை, அதனால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை”ன்னு சான்று கொடுக்கணும். சுருக்கமா சொல்லப்போனா, சென்னை-கோவை வழித்தடத்தில் ஸ்பைஸ், இண்டிகோ, கிங் ஃபிஷர்னு எல்லா விமான நிறுவனங்களும் தொடர்ச்சியா விமான சேவை கொடுத்து வருமானமும் லாபமும் ஈட்டி வரும்போது, அந்த வழித்தடத்தில் விமானம் இயக்கும் திட்டம் இல்லைன்னு தடையில்லா சான்றிதழ் கொடுத்த ஏர்-இந்தியா நிறுவனம் ஏன் நஷடம் ஆகாது? சொல்லுங்க! இது ஒரு உதாரணம் தான். நாட்டில் பல பல லாபகரமான வழித்தடத்தில் இதே நிலைமை தான்.

சுருக்கமா சொன்னா, பொறுப்பற்ற நிர்வாகம், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகள், சிறுபிள்ளைத்தனமான ஊழியர்கள்னு கிட்டத்தட்ட ஒரு மோசமான நிறுவனமாக ஏர்-இந்தியா மாறிட்டு வருது.

என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!



2 comments:

  1. Now i understand this issue well. Thank you.

    ReplyDelete
  2. good one - though i have following this on newspapers - ur article explains the issue very well - thanx satheesh @sweetsudha1

    ReplyDelete

Printfriendly