Sunday, June 3, 2012

கலைஞரும் தமிழகமும்!

மிழகத்தின் அரசியல், பொருளாதாரம், வரலாறு, வளர்ச்சி, சமூகவியல் என எதை பற்றி யார் எழுதினாலும் அதில் தவிர்க்கமுடியாத ஒரு பெயர் கருணாநிதி. எல்லோராலும் கலைஞர் என அழைக்கப்படும் அந்த மனிதன், தமிழகத்தை சத்தமின்றி புரட்டி போட்ட விதம் மாற்றுக்கட்சியினரையும் கூட வியக்கவைக்கும் ஒன்று.


இந்தியா மிக மிக இளமையான நாடு. சுதந்திரம் பெற்று வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே ஆன இளைய பாரதம். சுய ஆட்சியின் தாத்பரியங்களை அறிந்து செயல்படுத்தி வளர்ச்சியை நோக்கி அடி எடுத்து வைக்கவே இந்தியாவின் பல பல மாநிலங்கள் திக்கி திணறிக்கொண்டிருக்கும் வேளையில் மிக சில மாநிலங்கள் மட்டும் மிக வேகமான முன்னேற்றங்களை அடைந்தது. அவற்றில் மிக முக்கியமான இடம் தமிழகத்துக்கு உண்டு. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூகவியல் என பலவற்றிலும் தமிழகம் முன்னோடியாய் திகழ்வதற்கு, முற்போக்கு சிந்தனையுள்ள பல பல தலைவர்கள் இங்கே தோன்றி, மக்களை பற்றி அக்கறை கொண்டு அவர்களுக்காக உழைத்தது ஒரு காரணம். அப்படிப்பட்ட தலைவர்களுள், யாராலும் எண்ணிப்பார்க்கமுடியாத வளர்ச்சியை மிக குறுகிய காலங்களுள் தமிழகத்துக்கு தந்தவர்கள் இரண்டே இரண்டு பேர் மட்டும் தான். ஒருவர் மக்கள்திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், மற்றொருவர் இன்றைக்கு பிறந்தநாள் காணும் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

பெரியார் நீதிகட்சி தலைமை ஏற்று அதனை திராவிடர்கழகமாக மாற்றுகையில் என்ன கொடி வைக்கலாம் என சிந்திக்கிறார். ஒரு குழுவே தீவிரமாக ஆராய்கிறது. அப்போது கழகத்திலிருந்த கலைஞர் அவர்கள் தன் கட்டைவிரலை கீறி அந்த ரத்தத்தை கறுப்பு துணியின் மையத்தில் வட்டமாய் தீட்டி ‘இருண்ட தமிழகத்தின் மேன்மைக்காக ரத்தம் கொடுப்போம்’ என வரைந்த அந்த கொடி தான் இன்றுவரை திராவிடர் கழக கொடியாக திகழ்கிறது. அப்போது ஆரம்பித்தது அவரது அரசியல் பயணம்.

திரைப்பட வசனம், திரைக்கதை, பாடல்கள், நூல்கள், பேச்சாற்றல், சிந்தனை திறன் என வெல்லாம் அறியப்பட்டிருந்த கலைஞர் அரசியல்வாதியாகவும், சிறந்த பொருளாதார நிபுணராகவும், நிர்வாகியாகவும் செயல்பட்டார். அவரது திரைத்துறை பற்றி இப்போது எதுவும் விவாதிக்காமல் அவர் தமிழகத்துக்கு எந்த வகையில் உபயோகமாக இருந்தார் என்பதை பற்றி மட்டும் பதியமிட விரும்புகிறேன்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை தோற்றுவித்தபோதே முதல் நாளிலிருந்தே முதல் நிலை தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் கலைஞர். திராவிடர் கழகம் போலவே வெறும் சமூக இயக்கமாக மட்டுமே இயங்கவேண்டும் என கருதிய அண்ணாவிடன் விவாதம் செய்து, திமுகவை அரசியல் இயக்கமாக மாற்றியதிலும், அண்ணாவே எதிர்பாராதவிதத்தில் தேர்தலில் வெற்றி தேடி தந்து அண்ணாவை அரியணையில் அமர்த்தியதிலும் கலைஞரின் பங்கு மகத்தானது.

1969-ல் முதலமைச்சர் ஆகும் வரை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதியின் முக்கிய குறிக்கோளே, தமிழகம் போக்குவரத்தில் சிறப்பான இடத்தை பிடிக்கவேண்டும் என்பதாக இருந்தது. சாலைகள், பாலங்கள் என பல கட்டுமானங்களை தமிழகம் முழுவதும் அமைத்தார். இன்றைக்கும் இந்தியாவின் சிறந்த போக்குவரத்து வலைப்பின்னல் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது என்கிற பெருமைக்கு அவர் மட்டுமே காரணம். எந்த ஊரிலுள்ள எந்த பாலத்தை பார்த்தாலும், எந்த ஒரு விஷயம் மக்களுக்கு நன்மை தருவதாக நீங்கள் உணர்ந்தாலும் அது அவரது முயற்சியாகவே இருக்கும். கோவை உப்பிலிபாளையம் பாலம், சென்னை அண்ணா மேம்பாலம், சென்னையில் 17 சிறு பாலங்கள், திருச்சி காவிரி பாலம், மதுரை வைகையின் மீதான 6 பாலங்கள், நெல்லை ஈரடுக்கு பாலம் என பிரம்மாண்டமான அனைத்து பாலங்கள், சாலைகள் அவரது முயற்சி. அதே போல மாநிலம் முழுவதுமான சிறு அணைகளும், தஞ்சை தரணியின் சிற்றாறுகள் பராமரிப்பும் அவரது முயற்சி.

இவை போன்ற அரசு ரீதியான திட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுவது தான். ஆனால் இந்தியா முழுமையும் கலைஞர் மீது மரியாதை கொள்வதற்கான காரணமே, இந்த மாநில மக்களின் அடிப்படை வசதிகள் பற்றி, அவர்களது சிரமங்களை பற்றி கவலை பட்டு அவர்களுக்காக அவர் தீட்டிய சமூக திட்டங்கள் தான். அவை பற்றி சொல்வதானால் வலைப்பூ போதாது, எனினும் முக்கியமான திட்டங்களுள் மிக சில திட்டங்களை மட்டும் பட்டியலிட்டாலே, மக்கள் மீதும், மக்களின் சுய மரியாதை மீதும் அவர் கொண்ட அக்கறை லேசாக விளங்கும்.

1. மனிதனை மனிதனே இழுக்கும் கைவண்டியை ஒழித்து ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை உண்டு என உணர்த்திய இலவச சைக்கிள் ரிக்ஷா திட்டம்.

2. கார்விபத்தில் கண்ணில் அடிபட்டு சிகிச்சையிலிருக்கையில் டாக்டர்.அகர்வால் மூலமாக கேடராக்ட் பற்றியும், அப்படி ஒரு நோயே இருப்பதை அறியாமலிருக்கும் தமிழக மக்களை பற்றியும் அறிந்து, கொண்டு வந்த ‘இலவச கண் சிகிச்சை திட்டம்’. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் மருத்துவ குழு சென்று அனைவருக்கும் கட்டாயமாக கண் பரிசோதனையும் இலவச அறுவை சிகிச்சையும் செய்து கண்ணொளி வழங்கிய திட்டம்.

3. திருமண செலவுக்கு வழியில்லாத விரக்தியில் தற்கொலை சென்ற பெண் பற்றிய செய்தியை படித்து, இனி யாரும் இப்படியொரு நிலைக்கு தள்ளப்படக்கூடாது என கொண்டு வந்த ‘மூவலூர் ராமாமிர்தம் இலவச திருமண உதவி திட்டம்’

4. குடிசையுள் உழன்ற ஏழை மக்களுக்காக, அவர்களும் நாகரீக வாழ்க்கை வாழவேண்டும் என நகரங்களில் கொண்டு வந்த குடிசைமாற்று வாரிய திட்டம்.

5. 24 மணிநேரமும் உழைக்கும் காவலர்களுக்காக காவலர் வீட்டு வசதி திட்டம்

6. தனியாரின் ஏகபோகமாக இருந்து, நகரங்களை மட்டுமே இணைத்த பேருந்துகளை தேசிய உடமையாக்கி எல்லா குக்கிராமங்களுக்கும் பேருந்து இணைப்பு கொடுத்த போக்குவரத்து கழக சட்டம்

7. காதல் மணம் என்பது சட்டப்படி குற்றமாக கருதிய கால கட்டத்தில், காதல் திருமணங்களையும், கலப்பு திருமணங்களையும் சட்டப்படி அங்கீகரித்த முதல் மாநிலம் தமிழகம். இன்றைக்கு காதலிக்கும், இதுவரை காதல் மணமோ / கலப்பு மணமோ செய்த ஒவ்வொருவரும் நன்றிகாட்டும் கலப்புமண சட்டம்.

8. கடவுள் முன்பு அனைவரும் சமம் எனும் படிக்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கொண்டுவந்த சட்டம்

9. கடவுள் மறுப்பு இயக்கத்தில் இருந்து வந்தாலும், தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும், கடவுள் மீதான நம்பிக்கை கொண்டோரின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக கொண்டு வந்த இந்து சமய அறநிலைய துறை சட்டம். கிறித்துவ, இசுலாமிய வழிபாட்டிடங்களுக்கெல்லாம் ஏதேனும் ஒரு அமைப்பு பொறுப்பாக இருக்கையில், சிதறிக்கிடந்த இந்து ஆலையங்களை எல்லாம் இந்த துறையின் கீழ் கொண்டுவந்து, தினசரி ஒரு வேளையாவது பூஜை தவறாமல் நடைபெறவேண்டும் என அரசின் சார்பில் நிதியுதவி செய்து, கோவில்களை புனரமைத்த திட்டம்.

10. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காக இடஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தி பரவலாக்கி விரிவாக்கிய பாங்கு என மிக மிக நீண்ட பட்டியல் அது.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமான மிக முக்கிய வித்தியாசமே, மக்களை நேரடியாக சென்று சேர்கின்ற திட்டங்களை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார் எனில், மறைமுகமாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான நீண்ட கால திட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார் என்பது மட்டும் தான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகிய இருவராலும் நன்மைகளை பெறாமல் இருந்ததில்லை. ஏதேனும் ஒரு வகையில் நாம் அனைவருமே, ஒவ்வொருவருமே இவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள் தாம்!

தனது கட்சியை ஒரு குடும்பத்தை வைத்து மட்டுமே நடத்திவரும் இந்தியாவில், தனது கட்சியையே ஒரு குடும்பமாக பாவித்து நடத்திவரும் தலைவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். இது குறித்த பதிவு தனியாக இங்கே காணலாம், விருப்பமுள்ளவர்களுக்காக!

மாற்று கட்சியினரிடம் அவர் காட்டிய மரியாதையும், நாகரீகமும் தனி பத்தியாக சொல்லப்படவேண்டிய முக்கியமான விஷயம் எனினும், ஒன்றே ஒன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்த போது, அவரை சாதாரணமாக தான் அடக்கம் செய்ய முடிவெடுத்திருந்ததாம் அப்போதைய காங்கிரஸ். விவரம் அறிந்த கலைஞர், இரவோடிரவாக அப்போதைய ஆளுநரிடம் வாதிட்டு, கிண்டி பூங்காவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, பொதுப்பணித்துறை ஊழியர்களை கொண்டு, தனது கார் லைட் வெளிச்சத்தில் அந்த இடத்தை சுத்தப்படுத்தி, மறுநாள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தாராம். அதோடு நில்லாமல் பின்னர் அந்த இடத்தில் அவருக்கு ஒரு நினைவிடத்தையும் கட்டி, அதன் மீது ராட்டை சின்னத்தை வைக்கவேண்டும் என அவர் தான் வரந்துகொடுத்தாராம்.

இதுபோலவே, ராஜாஜி, பக்தவத்சலம், ஜீவானந்தம் என மாற்று கட்சியினருக்கு அவர் செய்த மரியாதை ஏராளம்.

சொந்த கட்சிக்காரர் இறந்தாலே இரங்கல் தெரிவிக்காத தமிழக அரசியலில் மாற்று கட்சி தலைவர் இறந்தாலும் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நாகரீக வழக்கத்தை திமுக மட்டுமே கைகொண்டு வருகிறது இன்னமும்.

கலைஞர் செய்த பல நல்ல செய்ல்களும், திட்டங்களும், உரிய முறையில் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்துவிட்டது. அது சரியான முறையில் புரிந்துகொள்ளப்படவுமில்லை, அவர் அதனை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் இல்லை. அவர் அளவுக்கு விமரிசிக்கப்பட்டவர் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. விமரிசனத்தை மிக கடுமையாக கையாளும் கட்சி தலைவர்களுக்கிடையில், விமரிசனத்த்தை விமரிசனமாக மட்டுமே பார்த்தவர் அவர். மேலும் அப்படியான விமரிசனத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இருப்பின் அதனையும் பகிரங்கமாக தெரிவித்து ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் ஏராளம்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாமல் செய்துவிட்டார்கள் என விவிலியத்தில் சொல்லப்படுவதை போல, தன்னை விமரிசிப்பவர்கள் அனைவரும் விவரமில்லாமல் தான் விமரிசிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர் அவர். தன்னை விமரிசித்தவர்களுக்காகவும், அவர்களது வாழ்க்கைக்காகவும் சேர்த்தே போராடுவதில் நிகரற்றவர்.

அவரது போர்க்குணம் மிக பிரசித்திபெற்றது.

உழவேர் வாரம், மாட்டேர் வாரம் போராட்டத்துக்காக குளித்தலையில் தொடங்கிய அவரது போராட்ட வாழ்வு பல பல போராட்டங்களை சந்தித்தது. அவர் எந்த சூழலிலும், தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுத்து தலை தாழ்ந்து நின்றதேயில்லை.

இந்தியா முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அனைத்து மாநிலங்களும் இந்திராவை எதிர்க்க முடியாமல் அடிபணிந்து நின்றபோது, அவசரநிலையில் நிழல் கூட தமிழக மக்களின் மீது படராமல் பார்த்துக்கொண்டவர் அவர். இந்திராவை எதிர்த்த முதல் தலைவர் அவர் தான் அப்போது. கடைசியில் அவரது ஆட்சியை கலைத்து தான் அவசரநிலையின் கொடுமைகளை தமிழக மக்கள் மீது ஏவ முடிந்தது இந்திராவால். (பின்னர், நட்பெனினும், எதிர்ப்பெனினும் தன் நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கும் ஒரே தலைவர் என இந்திராவே அவரது எதிர்ப்பை பாராட்டியது தனி கதை!)

தேச நலனில் அக்கறைகொண்ட மிக சில இந்திய தலைவர்களுள் கலைஞரும் ஒருவர். இந்திரா, ராஜாஜி, சி.எஸ், மொரார்ஜி தேசாய், ஜெ.பி, பர்னாலா, குண்டுராவ், பட்நாயக், பாதல் என பல பல தலைவர்கள் மிக முக்கிய நெருக்கடியான காலகட்டங்களில் இவரது ஆலோசனையை நாடி வரும் அளவுக்கு தேச நலன் குறித்து மட்டுமே அக்கறை கொண்டு நிலைப்பாடெடுப்பவர் அவர். இப்போதும் கூட, காங்கிரஸ் தவிர வேறு நல்ல உறுதியான கட்சியோ, தலைவரோ இல்லாததால், கசப்புடன் காங்கிரசை ஆதரிக்கவேண்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால், தற்போதைய இந்திய பொருளாதார நிலையில், ஒரு நிலையற்ற ஆட்சி அமையுமானால், இந்தியா அதோடு முடிந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்களுள் அவரும் ஒருவர்.

பா.ஜ.கவுடன் அணிசேர்ந்தபோது அவரை நோக்கி வந்த பல பல விமரிசன கணைகளுள் ஒன்று, பா.ஜ..க போன்ற மதவாத சக்திகளுக்கு இவர் ஊக்கம் கொடுப்பதா என்பது. அப்போது ஒரு மேடையில் அழகாக சொன்னார்கள், திமுக பாஜகவுடன் அணிசேர்வதால் திமுக நிச்சயமாக மதவாத கட்சி ஆகாது. மாறாக மதவாத செயல்களையோ, மக்கள் விரோத செயல்களையோ பாஜக செய்யாமல் திமுக பார்த்துக்கொள்ளும் என்று. அது தான் நடந்தது.

கலை, இலக்கியம், சமூகம், பத்திரிக்கை, அரசியல், சமுதாயம், சமூகம், வரலாறு, பொருளாதாரம், தொழில்வளர்ச்சி என எதை பற்றி எழுதுவதானாலும் கலைஞரை தவிர்த்துவிட்டு எழுத முடியாத அளவுக்கு தமிழகத்துடன் ஒன்றிணைந்து விட்டவர் அவர்.

இன்றைக்கு பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்துவதற்கு மனம் வரவில்லை எனக்கு. அதற்கான தகுதியும் இல்லை எனக்கு.

எனது கவலையெல்லாம், கலைஞருக்கு பின் தமிழகம் என்னவாகுமோ என்பது தான்! திமுக உடைவதை பற்றி திமுகவினர் தான் கவலைகொள்ளவேண்டும். அது எனது பணியல்ல! ஆனால், தமிழகம் சிதறுவதை பற்றி நான் கவலைகொள்வதில் அர்த்தமுள்ளதாக உணர்கிறேன்!

இன்றைக்கும் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக கலைஞர் மட்டுமே இருக்கிறார். தன்னை புறக்கணித்த மக்களுக்காக எதற்காக போராடவேண்டும் என மக்களின் துன்பபொழுதுகளிலும் வாளாவிருக்கும் கட்சிகளுக்கு மத்தியில்; தன்னை முன்பு புறக்கணித்த காரணத்துக்காகவே பின்னர் தன்னை ஆதரித்தாலும் மக்களை தண்டித்து மகிழும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தன்னை புறக்கணித்தாலும் அந்த மக்கள் துன்பத்துக்குள்ளாகும்போது அவர்களுக்காக வீதியிலிறங்கி போராடும் ஒரு தலைவராக இப்போது அவர் மட்டுமே இருக்கிறார்!

அவர் நீண்ட நாட்கள் நலமுடன் வாழ்ந்து நம்மையெல்லாம் பாதுகாக்கவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பாமலில்லை! அது அப்படியே நடப்பதாக!



16 comments:

  1. மிக அருமையான பதிவு, ஆழ்ந்த திறனாய்வு

    ReplyDelete
  2. மிக மிக தெளிவான கட்டுரை. எத்தனை எத்தனை ஊடகப் போர்கள் அவர்மேல் நிகழ்த்தப்பட்டன! எத்தனை எத்தனை அழிவு எவுகணைகள் அவர் மேல்!! அனைத்தையும் சட்டையில் பட்ட தூசி போல் தட்டிவிட்டு அடுத்தநாள் மேடையில் அசரமால் ஜோக்கடிக்கும் அந்த இரும்பு மனம் தான் 89வயதில் அவரை இளைஞனாக வைத்திருக்கிறது. அந்த மூளையும், தாங்கும் சக்தியும் லட்சம் சுய-வளர்ச்சி புத்தகங்களுக்கு சமம். கலைஞர் ஒருவரே. எனக்கும் அவருக்குப் பின் தமிழகம் என்னாகும் என்ற கவலையே மிதமிஞ்சி நிற்கிறது. அண்ணாவின் பிரிவை மக்கள் தாங்கிக்கொள்ள கலைஞர் என ஒருவர் இருந்தார். கலைஞருக்குப் பின்??? :-(

    ReplyDelete
  3. மிகத்தெளிவான பதிவு முடிந்தவரை பரப்ப வேண்டும்

    - abu rayyan

    ReplyDelete
  4. சூப்பர்..அருமை..பாராட்டுகள்

    ReplyDelete
  5. நல்லக் கட்டுரை

    ReplyDelete
  6. தெளிவான கட்டுரை..!! ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், கலைஞர் என்னும் ஆளுமையைத் தமிழகம் தவிர்க்க முடியாது. இன்றைய தீடீர் தமிழர்கள் படிக்கவேண்டிய கட்டுரை..!! என்ன பண்றது சூரியன் பார்த்து ஃவோடஃபோன் குலைச்சால் யாருக்கு நட்டம்?

    ReplyDelete
  7. அழகாகவும்,தெளிவாகவும்,தீர்கதரிசனமாகவும் உங்கள்எண்ணங்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.
    கலைஞர் ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அவரை சுற்றிதான் தமிழக அரசியல் பின்னப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  8. மிக அருமையான பதிவு...மிக மிக தெளிவான கட்டுரை....

    ReplyDelete
  9. நல்லதொரு பகிர்வு தோழரே. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  10. பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல விஷயங்களை பற்றியும் எழுதுவதற்கான ஊக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கொள்கிறேன்.

    இந்த பதிவை பொறுத்தவரை, நான் சொல்லாமல் விட்ட விஷயங்கள் மிக மிக அதிகம். காரைக்குடி கம்பன் கழக சொற்பொழிவு, இந்தி எதிர்ப்பு போர், சமூக சித்தாந்தங்கலையே மாற்றி போட்ட இன்னும் பல திட்டங்கள், அவரது பேச்சாற்றல், கடைசி தொண்டன் வரை இறங்கி பசக்கும் எளிமை, மிக மிக கூறிய நினைவாற்றல், என பல விஷயங்களை நான் சொல்ல முடியாமல் போனதுக்கான காரணமே, வாசகனை களைப்படைய செய்துவிடக்கூடாது என்பதனால் தான். எனவே தான், மிக சுருக்கமாக, மிக மிக முக்கியமான விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை பற்றிய அறிமுகத்தை எழுத முற்பட்டேன். நான் சொல்ல வந்த அனைத்தையும் சொல்லிவிட முடியவில்லை என்கிற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், நான் சொல்லி இருப்பவை அனைத்துமே நான் சொல்ல நினைத்தவை என்பதில் ஒரு ஆத்மா திருப்தி.

    நன்றி தோழர்களே!

    ReplyDelete
  11. நல்ல பதிவு.. மிகச் சிறந்த தலைவன் (2006-க்கு பிறகு குடும்பம் படுத்திய பாடு வேறு) தனக்கு பிறகு ஸ்டாலின் தான் என்று தீர்க்கமாக அறிவிக்காமால் இருப்பதும் அவர் தவறு தானே.. - iGhillli

    ReplyDelete
  12. nabera nalla pathivu, kalaigarai paththi kurai mattum solli kodirukkum intha tharunaththil thangal paththippu migavum arumai

    ReplyDelete
  13. மிக அருமையான தெளிவான பதிவு.! வாழ்த்துக்கள் தோழர்! அனைத்து தரப்பையும் இந்த பதிவு சென்றடைய வேண்டும்!

    ReplyDelete