Thursday, May 24, 2012

பெட்ரோல் விலை உயர்வும் மத்திய அரசும்!


டந்த ஒரு மாசமா இதோ அதோன்னு இழுத்துட்டு இருந்த பெட்ரோல் விலை உயர்வு நேத்து ராத்திரியில் இருந்து அமலுக்கு வந்துருச்சு. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரே அடியாக ரூ.7.50 ஒரு லிட்டருக்கு. பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிஞ்ச ரெண்டாவது நாளே இந்த விலை உயர்வு அமலாகி இருக்கு, என்றாலும் இது பத்தி இத்தனை நாள் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு சின்ன குறிப்பு கூட அரசு கொடுக்கவே இல்லை.

மத்திய அரசின் நிலை:

இந்த விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை-ன்னு மத்திய அரசு சொல்லிருச்சு. அவங்க பாயிண்ட் என்னன்னா, பெட்ரோலிய விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, அது அந்தந்த பெட்ரோலிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்குது. அதெல்லாமே ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம்ங்கறதால அவங்கவங்க நிதி நிலமையை தீர்மானிக்கிற உரிமை அவங்களுக்கு உள்ளது. இதுக்கும் அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு விளக்கம் கொடுத்திருக்காங்க.

விலை ஏற்றத்துக்கான காரணிகள்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம், உள்நாட்டில் பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சின்னு சில காரணிகள் தான் பெட்ரோல் விலையேற்றத்துக்கு காரணமாக சொல்லப்படுது. இதில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் நம்ம கையில் இல்லை. அதனால் அதை விட்டுரலாம். ஆனால், உள்நாட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் விட்டதையும், ரூபாயின் மதிப்பு அதலபாதாளம் நோக்கி வீழ்வதையும் கட்டுப்படுத்தவேண்டிய மத்திய அரசு, தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதமாதிரி, “நாங்கள் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறோம்”னு பொறுப்பில்லாம பேசுறது கொடுமையா இருக்கு.

பணவீக்கம்

பணவீக்கம் எதனால் வந்தது? தொழில் வளர்ச்சி பாதிப்பு, உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைந்தது, விவசாய விளைபொருட்கள் நஷ்டத்தை சந்தித்தது (போதிய விலை கிடைக்காமை / குறைவான கொள்முதல் / வறட்சி / நீர்வளமின்மை / இயற்கை சீற்றங்களால் அழிவு போன்றவை காரணிகள்), இறக்குமதியை அதிகம் நம்பி இருப்பது, நமது சந்தையை உலக வணிகத்துக்கு தடையின்றி திறந்துவிட்டது, அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை அனுமதித்ததுன்னு பல பல முட்டாள்தனமான முடிவுகளால் தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைஞ்சுது. இப்படியான ஒரு பொருளாதார முடிவை எடுத்த மத்திய அரசு, விலையேற்றத்துக்கு நாங்கள் எந்த விதத்திலும் காரணம் அல்லன்னு சொல்றது பொறுப்பற்ற தன்மையின் உச்சகட்டம்!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததால், அதிகமாக செலவு செய்யவேண்டிய நிலை. சிம்பிளா சொல்றேன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலர்னு வெச்சுக்குவோம். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 48 ரூபாயா இருந்தப்போ ஒரு பேரலுக்கு நாம ரூ.4800/- கொடுத்தா போதுமாக இருந்தது. இப்போ டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 55 ரூபாயா ஆனதால், ஒரு பேரலுக்கு நாம ரூ. 5500/- கொடுத்தாகணும். இந்த கூடுதல் தொகை, பெட்ரோலிய நிறுவனங்களின் கொள்முதல் செலவினை அதிகரிக்கும், உற்பத்தி செலவை கூடுதலாக்கும்ங்கறதெல்லாமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய பிசினஸ் பொருளாதார உண்மைகள் தான். ஆனா, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் இது வரை எடுக்காம, நாங்கள் நிலைமையை உன்னிப்பா கவனிக்கிறோம், பெட்ரோல் விலை உயர்வுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்றதெல்லாம், மிக மிக கொடூரமான சப்பைக்கட்டு.

பெட்ரோலிய நிறுவனங்களின் செயல்பாடு:

பெட்ரோலிய நிறுவனங்களை எடுத்துக்கிட்டா, அவங்களோட ஒவ்வொரு வருஷ நிதி நிலை அறிக்கையிலும், லாபத்தை காட்டிட்டு இருக்காங்க. அது தவிர்க்கமுடியாது தான். பங்குதாரர்களுக்கான டிவிடெண்ட் கூடிட்டு தான் இருக்கு. பங்கு சந்தையிலும் நல்ல நிலைமையில் இருக்காங்க. அவ்ங்களுக்கு ஏற்படுற மிக சிறிய நஷ்டத்தை சரிக்கட்ட விலையேற்றம் மூலம் மக்கள் கிட்டே இருந்து நிதியை வசூலிச்சு சமாளிக்கிறாங்களே தவிர, ஆடம்பரமான அதிகாரிகளின் சம்பளம், நிர்வாக செல்வு மாதிரியான அவசியமற்ற செலவுகளை கட்டுப்படுத்தி லாபத்தை உயர்த்துறதுக்கான எந்த நடவைக்கையையும் அவங்க எடுக்கலை. அதாவது, செலவு கூடுதலா செஞ்சிட்டு அதை சரிக்கட்ட விலையை ஏத்தறது.. அல்லது இன்னொரு வகையில் சொல்றதுன்னா, மக்கள் கிட்டே பணம் வசூலிச்சு அவங்க ஆடம்பரமா இருக்கிறது..இது தான் நடந்துட்டு இருக்கு!

மாநில அரசுகளின் வரி:

அடுத்த முக்கியமான விஷயம் மாநில அரசுகளின் பெட்ரோல் மீதான வரி. மாநில வரிகள், மத்திய வரிகள், உற்பத்தி வரின்னு பெட்ரோல் விலை மீதான வரிவிதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 30%. அதாவது வரிகளே இல்லைன்னா பெட்ரோல் விலை கணிசமா குறைஞ்சிடும். சமீபத்தில் கோவா மாநில அரசு பெட்ரோலுக்கு வரிவிலக்கு கொடுத்ததன்மூலம் கிட்டத்தட்ட ரூ.11/- குறைஞ்சிருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு. அதே சமயத்தில் மாநில அரசுகளுக்கு பெட்ரோல் மூலம் கிடைக்கும் வரி வருவாய் தான் முக்கிய வருவாய் ஆதாரங்களுள் ஒன்று. அதாவது பெட்ரோல் மூலமான வரி வருவாயை வெச்சு தான் பல மாநில அரசுகள் அந்தந்த மாநில மக்களுக்கான நலத்திட்டத்தை செயல்படுத்திட்டு வருது. அதனால் அதை நாம் தவிர்க்கமுடியாது. கோவாவை பொறுத்தவரை இதர வருவாய் அதிகமாக இருப்பதால் பெட்ரோலுக்கான வரிக்கான விலக்கை கொடுத்து இருக்காங்க.

சுருக்கமா சொன்னா, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும், பெட்ரோலிய நிறுவனங்களின் நிர்வாகத்திறமின்மையும் தான் மக்கள் தலையில் சுமையை ஏத்தி இருக்கே தவிர மத்திய அரசு சப்பை கட்டு கட்டுற மாதிரியான காரணங்கள், நிஜமான காரணங்கள் அல்லன்னு எந்த சாமானியனுக்கும் தெளிவா தெரியும்.

தற்போதைய நிலை:

சரி, மத்திய அரசு இனி பெட்ரோல் விலையை கட்டுப்படுத்தறதுக்கும், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், பணவீக்கத்தை குறைக்கவும் என்ன செய்ய போகிறது? அதுக்கான விடை யாருக்குமே இன்னும் தெரியாது. மத்திய அரசின் நோக்கம் என்னன்னு கூட பலருக்கும் தெரியாது.

மத்திய அரசுக்கு இந்த அளவுக்கு துணிச்சல் வர எளிமையான காரணம், வலுவான எதிர்கட்சிகள் இல்லாதது. பாஜக பல மாநிலங்களிலும் கெட்ட பெயரை வாங்கி கட்டிட்டு வலுவிழந்து நிக்கிது. அடுத்த பெரிய எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் இயக்கம் தன் நோக்கத்தில் இருந்து பிழன்று என்ன செஞ்சிட்டு இருக்கோம்னே தெரியாம எதை எதையோ செஞ்சிட்டு இருக்கு. மாநில கட்சிகள் பலவும் அந்தந்த மாநிலங்களில் மிக மிக வலுவாக இருந்தாலும், தேசிய அளவில் ஒரு கமாண்டிங்கான நிலைக்கு வராததாலும், வரக்கூடிய நிலை இல்லாததாலும், கிட்டத்தட்ட கேட்கறதுக்கு ஆள் இல்லாத சட்டம்பியாக தான் மத்திய அரசு இருக்குது. என்ன செஞ்சாலும், எதை செய்யலைன்னாலும் யாரும் அவங்களை கேள்வி கேக்க போறதில்லை. மக்களுக்கும் சகிப்புத்தன்மை வருஷாவருஷம் கூடிட்டே வருது. இணைய எழுத்தில் மட்டும் தான் புரட்சி, போராட்டம்னு அழகா எழுதுவாங்களே தவிர தன் வீட்டுக்கு எதிரே குப்பை அள்ளாம கிடந்தா கூட அரசின் மீது கோபம் வராது. இந்த சகிப்பு தன்மையும், வலுவான எதிர்கட்சி இல்லாத சவுகரியமுமாக மத்திய அரசு தெம்பாக நாட்டை கெடுத்து வருகிறது.

நாம் வழக்கம்போல சகிச்சிகிட்டு இருக்க பழகிக்கலாம்!

No comments:

Post a Comment

Printfriendly