சமீப காலமாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் எழுச்சி பெற்று வருவதை காணலாம். அதிமுக மிக மிக பிரம்மாண்டமான ஒரு கண்டன பொதுக்கூட்டத்தை கோவை மாநகரில் நடத்தி காட்டியது. மதிமுக, கம்மியூநிச்ட்டு கட்சிகள் இணைந்து மயிலை நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்பாட்டம் செய்து வைகோ உட்பட பலர் கைதாகி இருக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பராமரிப்பில் இருக்கும் மக்களை கொண்ட மாநிலமாக தான் இது வரையும் இருந்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னதை போல, எதிர்கட்சிகள் என்பவை விளக்கை தூண்டுகின்ற தூண்டுகோலாக இருக்க வேண்டும். அப்படியான தூண்டு கோல் இல்லாவிட்டால் விளக்கு சீராக எரியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1977 க்கு பிறகு எதிர்கட்சிகள் என்பது கிட்டத்தட்ட எதிரி கட்சிகள் என்கிற நிலையிலே மட்டுமே இயங்கி வந்து கொண்டு இருக்கிறது.
அரசு எதை செய்தாலும் அதனை எதிர்ப்பது. அரசு எதை செய்ய எண்ணினாலும் அதனை முட்டுக்கட்டை இட்டு தடுப்பது என்பது மட்டுமே எதிர்கட்சிகளின் பணி என்றாகி போனது. அரசின் நல திட்டங்கள் குறித்த விவாதங்களில் கூட கலந்துகொள்ளாமல் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது என்பது ஒரு கவுரவமான வழக்கமாக இரு இயக்கங்களும் போற்றி பேணி காத்து வருகின்றன.
பொதுவாக எதிர்கட்சிகள் என்பவை, மக்களின் குறைகளை அறிந்து அரசுக்கு எடுத்து சொல்லி, அரசை முறைப்படி இயங்கவைக்கும் பெரும் பொறுப்பு கொண்டவையாக நமது இந்திய அரசியல் சாசனம் வடிவுறுத்துகிறது. ஆனால் நிஜத்தில் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி அதிகம் அலட்டி கொள்வதில்லை தமிழக எதிர்கட்சிகள்.
மாற்று கட்சியினருடன் சந்திப்பு நடத்தும் தன் கட்சிக்காரர்களை களை எடுப்பது, அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது, மாற்று கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களை தங்கள் முகாமுக்கு மாற்றுவது போன்றவற்றை மட்டுமே செய்துவரும் தமிழக எதிர்கட்சிகள், ஒரு போதும், தற்கால பிரச்சனைகள் குறித்து கவலை கொள்வதில்லை.
ஐந்தாண்டு காலம் முழுவதும் நித்திரையில் மூழ்கி திளைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளியே எட்டி பார்த்து பத்திரிகை செய்திகளில் தங்களை பிராதன படுத்துவதற்கான அதிரடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. மக்களின் மறதி என்பதை பெரும் வரமாக கொண்டு இயங்கும் எதிர்கட்சிகள், இத்தனை காலம் வாளாவிருந்ததை பற்றி மக்கள் அதிகம் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தமிழக பிரச்சனைகளுக்காக இதுவரையும் குரல் கொடுக்கவில்லை. தமிழக ரயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர், மின்சார தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, அரசின் சில துறைகளில் காணும் செயலற்ற தன்மை, முற்போக்கான திட்டங்கள் போடாதது, வளர்ச்சி பணிகளின் சுணக்கம், போன்ற எதை பற்றியும் கவலை கொள்ளாமல், தன் இயக்கத்துக்கு நீண்ட விடுப்பு கொடுத்து நித்திரையில் ஆழ்திருந்தது. இடை தேர்தல்கள் அறிவிக்கப்படும் பொழுது மட்டும் அந்தந்தந்த வட்டார பிரச்சனைகளை கையில் எடுத்து குரல் கொடுப்பதும் பின் சுனங்கிவிடுவதுமாக கழிந்தது காலம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் இருத்தலை வெளிக்காட்டி கொள்ளும் விதமாக, "குப்பை அள்லாததை கண்டித்து ______________ நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்"; " சாலைகளை செப்பனிடாததை கண்டித்து _____________ பேரூராட்சியை கண்டித்து உண்ணாவிரதம்" ; "குடிதண்ணீர் குழாயை சரி செய்யாததை கண்டித்து ___________ பஞ்சாயத்தை கண்டித்து பேரணி" என்றெல்லாம் அங்காங்கே நடத்தி வந்தது அதிமுக. இதில் விசித்திரமாக சில இடங்களில் அதிமுக நிர்வாகத்தையே கண்டித்தும் ஆர்பாட்டங்கள் அதிமுகவால் நடத்தப்பட்டு இருக்கின்றன. இவையன்னி, அரசை எதிர்த்தோ, அரசின் செயலற்ற தன்மைகளை சாடியோ, மக்கள் அவதியுறும் முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தியோ பெரும் போராட்டங்களை நடத்துவதோ, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதோ இத்தனை காலமாக காணவில்லை.
நீண்ட நித்திரை களைந்து, கோவையில் கர்ஜித்த ஜெயலலிதா கூட, திமுக தனது குடும்பத்துக்காக கேபிள் டிவி வருமானத்தை மேம்படுத்துகிறது, மணல் கொள்ளையை அசட்டையாக கையாள்கிறது போன்ற பிசினஸ் விஷயங்களை பற்றி மட்டுமே குற்றம் சாட்டி இருக்கிறார்.
வைகோ போன்றவர்கள் மிக மிக விசித்திரமானவர்கள். அவர் கையில் எடுக்கும் விஷயங்கள் ஒன்று, இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும் அல்லது கேரளா/கர்நாடக அரசுகளுக்கு எதிராக இருக்கும். மதிமுக போன்றவலிமையான, மாநிலம் முழுமையும் பரவி இருக்கும் ஒரு பேரியக்கம் தமிழக மக்களின் அன்றாட முக்கிய பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் சர்வதேச இயக்கம் போலவே செயல்படுவது தமிழக மக்களுக்கு ஏனோ பெரிய வியப்பை தருவதில்லை.. இதுவரை.
இப்போதும் கூட நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் போராட்டம் செய்திருப்பது, குடிதண்ணீர் பிரச்சனைக்காகவோ, மின் தட்டுப்படுக்காகவோ, விலைவாசி உயர்வுக்காகவோ, அரசின் செயலற்ற தன்மைக்கு எதிராகவோ அல்ல. இலங்கையின் துணை தூதரகம் சென்னையில் செயல்பட கூடாது என்பதற்காக தான். இத்தனை நாளும் செயல்பட்டுக்கொண்டிருக்கையில் வாளாவிருந்துவிட்டு இப்போது திடீரென்று ஆட்டகாசமாக ஆரம்பமாகி இருக்கிறது ஆர்ப்பாட்டம், கைது, ரிமாண்டு. பத்திரிக்கைகளின் முதல்பக்கத்தில் படத்துடன் செய்தி.
சரி, இத்தனை நாள் துயில்கொண்டவர்கள் இப்போது துள்ளி எழுந்திருப்பது ஏன்?
தமிழக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைய இருக்கிறது. தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டைகளை / எண்ணிக்கையை சரிபார்க்க துவங்கி விட்டது. தேர்தல் வாக்குப்பதிவு கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகளை அரசு ஊழியர்களுக்கு கொடுக்க சித்தமாகி இருக்கிறது. அரசின் திட்டங்களை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.
வந்து விட்டது தேர்தல் காலம்.
இந்த நேரத்தில் மக்களின் மனதில் இடம்பிடிப்பதற்கான போட்டி தான் இப்போது திடீரென்று தோன்றி இருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் இத்தியாதி இதியாதிக்கள் எல்லாம்.
மக்களும் சாமானியமானவர்கள் அல்ல... "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்னா பயத்ததோ சார்பு" எனும் குறளுக்கேற்ப, தனக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாத எதிர்கட்சிகளை, சகித்து மன்னித்து, பெரும் வரவேற்போடு ஆரவாரமாக வரவேற்க தயாராகி விட்டார்கள்.
பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, ஆரத்தி, ஊர்வலம், பொதுக்கூட்டம், சாரி சாரியாக அணிவகுத்து வரும் மக்கள் வெள்ளம், இதுவரையும் தங்களுக்காக எதையுமே செய்யாவிட்டாலும், இப்போது செய்யபோவதாக சொல்லும் வர்ண ஜால வார்த்தை சித்தங்களில் மயங்கி மகுடிக்கு ஆடுவது போல ஆட தயாராகி விட்டார்கள்.
அப்படியான மக்களின் மனதில் தங்களை மீண்டும் நிலை நிறுத்தி கொள்வதற்காக விசித்திரமான விஷயங்களுக்காக எல்லாம் போராட்டங்கள் அறிவித்து, கைதாகி, பரபரப்பை ஏற்படுத்தி, அரசை சாடி, சவால் விட்டு, மக்களுக்காகவே உழைப்பதாக உதார் விட்டு, சொந்த விஷயங்களை சற்று பின் தள்ளி, மக்கள் மன்றத்தை நோக்கி ஓடி வர துவங்கி விட்டது எதிர்கட்சியினரின் கூட்டம்.
எழுச்சி பெற்று விட்டனர் எதிர் கட்சியினர்...
ஒரு கவிஞன் சொன்னதை போல, தன முகத்தில் குத்தப்படும் கரும்புள்ளிக்கான முன்னோட்டமாக தன விரலில் கரும்புள்ளி குத்திக்கொள்ள தயாராகி விட்டான் வாக்காளன்.
வந்தே விட்டது தேர்தல் காலம்.