Wednesday, January 2, 2019

சபரிமலை பெண்கள் தரிசனம்

இன்று சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.

இதுவரை தரிசனம் செய்ய வந்த பெண்கள் பலத்த விளம்பரங்களை செய்து விட்டு வந்ததால் பல பல பிரச்சனைகள் ஏற்பட்டன. சில அரசியல் கட்சியினரும் சில இயக்கங்களும் தொடர்ந்து அங்கே முகாமிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனால் தானோ என்னவோ, இன்று காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களின் பலத்த பாதுகாப்புடன் விடியற்காலை நேரத்தில் அந்த இரண்டு பெண்களையும் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களது தரிசனம் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்ப்படுத்தி தனது கடமையை நிறைவேற்றி விட்டது கேரள அரசு.

விஷயம் தெரியவந்ததும், கேரளம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்ததோடு நாளைய தினம் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தரிசனம் செய்ய விரும்பவேயில்லை என நிறுவ, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிற்சில இயக்கங்கள் ஒரு சிலரை ஆங்காங்கே அழைத்து வந்து ஐயப்ப ஜோதி என்றொரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியது.




அதை முறியடிக்கும் விதமாக கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 'மகளிர் சுவர்' அமைக்க அழைப்பு விடுத்திருந்தது. உண்மையிலேயே பெண்களின் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் ஐயப்ப தரிசனத்தை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா? என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் விதமாக, நேற்றைய தினம் (01.01.2019) மாலை 4 மணி முதல் 4:30 வரை, அரை மணிநேரம் மட்டும் மகளிர் சுவர் அமைக்கவும், சபரிமலையில் பெண்களை ஐயப்ப தரிசனத்துக்கு அனுமதிக்கவேண்டும் என்கிற கருத்துடைய பெண்கள் அதில் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சுமார் 10 லட்சம் பெண்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காசர்கோடு முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரை சுமார் 620 கி.மீ நீளத்துக்கு கிட்டத்தட்ட 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்து நின்று 'சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்கவேண்டும்' என ஆதரவு குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே எதிர்பார்க்காத சந்தோஷ அதிர்ச்சி. இந்த மாபெரும் வெற்றி தந்த உத்வேகத்தில் இன்று காலை தைரியமாக சபரிமலையில் பெண்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து இருக்கிறது கேரள போலீஸ்.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவரம் வெளியானதுமே சபரிமலை கோவில் தந்திரி, ஐயப்பன் சன்னிதானத்தின் நடையை அடைத்து ஒரு மணி நேரம் 'பரிகார பூஜைகள்' நடத்தியபின் மீண்டும் தரிசனத்துக்கு நடை திறந்து விட்டிருக்கிறார்.

பெண்கள் தரிசனம் செய்ததற்காக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்தது என்பது, பெண்களை, அவர்களது வழிபாட்டு உரிமையை, உச்சநீதிமன்றம் தந்த உத்தரவை அவமதிக்கும் செயல் என்கிற எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் 'பரிகார பூஜை என்பது இவ்வளவு தானே? இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? பேசாமல் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை பெண்களுக்கு என தரிசனத்துக்கு ஒதுக்கி தந்து அது முடிந்த பின் இந்த பூஜையை நடத்தி பொது தரிசனத்துக்கு அனுமதிக்கலாமே' போன்ற குரல்களும் கேட்க தொடங்கி இருக்கிறது.

பெண்கள் தரிசனம் செய்தால் அது ஜஸ்ட் ஒரு பரிகார பூஜை செய்தால் நிவர்த்தி ஆகக்கூடிய அளவிலான விஷயம் தான் என தந்திரி மறைமுகமாக புரிய வைத்திருப்பது, இத்தனை நாளும் பலத்த போராட்டங்கள் எல்லாம் நடத்தி வந்த அரசியல் இயக்கத்தினருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பின்னடவை சற்றும் எதிர்பார்க்காத போராட்ட குழுவினர் நாளை முழு அடைப்பை அறிவித்து இருப்பது கூட அவர்களது பதற்றத்தையே காட்டுகிறது. அதிலும், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக சொல்லி போராடி வருவது, 'பரிகார பூஜை செய்தபின் புனிதமாகிவிட்டது'  என உறுதி அளித்த சபரிமலை தந்திரியின் வாக்கை கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

சபரிமலை தந்திரியே சொன்னபின்னும் அதை ஏற்காமல் போராடுவதை பார்த்தால் அவர்களது நோக்கம் ஐயப்பனோ, பக்தியோ, பாரம்பரியமோ, கலாச்சாரமோ, சாஸ்திரமோ, சம்பிரதாயமோ அல்ல.. வெறும் அரசியல் லாபஙகளுக்காகவும், கேரளத்தில் அமைதியின்மை நிகழவேண்டும் என்கிற குறிக்கோளுக்காகவும் தான் இப்படியான போராட்டங்கள் நடக்கிறதோ என்கிற ஐயத்தை எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

எது எப்படியாயினும் கேரள அரசும் கேரள போலீசும் மிக பெரிய விஷயத்தை வரலாற்று நிகழ்வை இன்று நடத்தி காட்டி இருக்கிறார்கள்.

பெண்ணை தன்னில் ஒரு பாதியாக சரிசமமாக நடத்தவேண்டும் என்றுணர்த்த சிவசக்தியை கொடுத்த இந்து மதமும் அதன் உண்மையான பக்தர்களும், பெண்ணுரிமைக்கு ஆதரவானவர்களும் நிச்சயமாய் இதனை பாராட்டுவார்கள்.

வாழ்த்துக்கள்.


2 comments:

  1. //பெண்ணை தன்னில் ஒரு பாதியாக சரிசமமாக நடத்தவேண்டும் என்றுணர்த்த சிவசக்தியை கொடுத்த இந்து மதமும் அதன் உண்மையான பக்தர்களும், பெண்ணுரிமைக்கு ஆதரவானவர்களும் நிச்சயமாய் இதனை பாராட்டுவார்கள்//
    கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த மகளிர் சுவர் அல்லது வனிதா மதிலில் பெண்கள் உரிமை, பெண்கள் சமனானவர்கள் என்பது எங்கே வந்தது?மகளிர் சுவரில் இஸ்லாமிய பெண்கள் கடைந்தெடுத்த பெண் அடிமைதன அரபு புர்க்காவால் மூடி மறைத்து நிறுத்தி வைக்கபட்டுள்ளார்களே!

    ReplyDelete
  2. dont publish wrong article bro...மகளிர் சுவரில் இஸ்லாமிய பெண்கள் கடைந்தெடுத்த பெண் அடிமைதன அரபு புர்க்காவால் மூடி மறைத்து நிறுத்தி வைக்கபட்டுள்ளார்களே! reply for this

    ReplyDelete

Printfriendly