Monday, April 27, 2015

ஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 2


ச்ச நீதிமன்றம் இன்னைக்கு ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கு. அது தான் இப்ப திருப்புமுனை.

இந்த வழக்கை தொடர்ந்து கவனிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லா விவரமும் தெரியும்ன்றதால் நான் நேரடியா விஷயத்துக்கே போயிடுறேன்.

மதன் லோகூர், பானுமதி அடங்கிய இருவர் பெஞ்ச் முன்பு பவானிசிங் நியமனம் பற்றிய வழக்கு வந்தப்ப, லோகூர், பவானிசிங் நியமனம் செல்லாதுன்னும், பானுமதி பவானிசிங் நியமனம் செல்லும்னும் சொன்னதால் வழக்கை அதை விட உயர் பெஞ்சான மூவர் பெஞ்சுக்கு அனுப்பினாங்க

தலைமை நீதிபதி தாத்து அவர்கள், ரெண்டே நாளில் அந்த மூவர் பெஞ்சை அறிவிச்சார்.

மிஸ்ரா தலைமையிலான அந்த பெஞ்ச் அமைக்கப்பட்டதுமே ஒரு விஷயம் எல்லோருக்குமே புரிஞ்சுது. இதே மிஸ்ரா தான் மூணரை வருசத்துக்கு முன்பு இதே ஜெ. வழக்கை விசாரிச்சு பிடி பிடின்னு பிடிச்சவர். "ஒரு வழக்கை 15 வருஷமாவா இழுத்தடிப்பீங்க? நீதித்துறையை முட்டாளாக்க நினைக்கிறீங்களா?" ன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுத்து கதி கலங்க வெச்சவர். இப்ப இந்த வழக்கு அவர் முன்னிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வந்தப்ப இன்னுமா இந்த வழக்கு முடியலை?’னு நக்கலா மனசுக்குள்ளே நினைச்சிருப்பாரோ என்னவோ? அதனால் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்னு ஒரு யூகம் வந்திருச்சு.

ரெண்டே நாள் விசாரிச்சு ஏப்ரல் 22 ஆம் தேதியே விசாரணையை முடிச்சிருச்சு மூவர் பெஞ்ச். அன்னைக்கே சில க்ளூக்கள் கொடுத்துட்டாரு மிஸ்ரா. அதாவது பவானி சிங் நியமனம் சட்டப்படி தவறு. தமிழக அரசு தன்னுடைய அதிகாரத்தை மீறி செயல்பட்டு இருக்கு. அதுக்காக எல்லாம் குமாரசாமி, வழக்கை மீண்டும் விசாரிக்க தேவை இல்லை. பவானி சிங் (குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவா செயல்பட்டதால்) வைத்த  வாதங்களை குமாரசாமி முழுமையா கருத்தில் எடுத்துக்க வேணாம். அன்பழகனும் கர்நாடக உயர்நீதிமன்றமும் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் குமாரசாமிக்கிட்டே தனி தனியா விரிவா (ஜெ & கோ செய்த குற்றங்கள் குறித்தும், பவானிசிங் சொல்லாமல் விட்ட / மறைத்த குற்றங்கள் குறித்தும்!?!) மனு தாக்கல் செய்யணும். குமாரசாமி அந்த மனுக்கள் அடிப்படையில் தீர்ப்பு சொல்லலாம்னு மிஸ்ரா சொன்னாரு.

வழக்கறிஞர் திரு. பவானி சிங் 

மேலும், அன்பழகன் 80 பக்க அளவிலும், கர்நாடக அரசு 50 பக்க அளவிலும் தங்களுடைய வாதத்தை (ஜெ. செய்த குற்றங்கள், பவானிசிங் அதை ஆதரித்த விதம்) மூவர் பெஞ்சுக்கு தாக்கல் செய்யணும்னும் அதன் அடிப்படையில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பு சொல்றோம்னும் மிஸ்ரா சொல்லி இருந்தாரு.

அந்த தீர்ப்பு தான் இன்னைக்கு வந்திருக்கு.

ஏப்ரல் 22ஆம் தேதி சொன்னதை அப்படியே இன்னைக்கு தீர்ப்பா சொன்ன மிஸ்ரா, அன்பழகன் & கர்நாடக அரசு குமாரசாமியிடம் மனு தாக்கல் செய்ய வேண்டிய நாளை ஏப்ரல் 28ன்னு நீட்டிச்சும் கொடுத்து இருக்கார்.

சரி இனி என்ன ஆகும்?? யூகிக்கலாமா?

பவானி சிங் நியமனம் செல்லாதுன்னு தெளிவா சொல்லிட்டதால அவருடைய வாதங்கள் எல்லாம் இனி கணக்கில் வராது. பவானிசிங் கொடுத்திருக்கும் எழுத்துப்பூர்வமான வாதத்தை கணக்கில் எடுக்க வேண்டாம்னு மூவர் பெஞ்ச் தெளிவா குமாரசாமிக்கு உத்தரவு கொடுத்திருக்கு இன்னைக்கு.

பவானி சிங் ஜெ.வுக்கு ஆதரவா செயல்பட்ட விதத்தில் ஜெ.வின் சில குற்றங்களை கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வராம விட்டதும் அடங்கும். அதுமாதிரி பவானிசிங் சொல்லாமல் விட்ட அனைத்து விஷயங்களையும் அன்பழகனும் கர்நாடக அரசும் தனி தனியா குமாரசாமிக்கிட்டே ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் மனு தாக்கல் செய்யணும். அதை குமாரசாமி கவனமா பரிசீலிச்சு அதன் அடிப்படையில் தான் தீர்ப்பை சொல்லுவார். ஆக, பவானிசிங்குக்கு பதிலா இப்ப அன்பழகனே நேரடியா பிராசிக்கியூஷன் தரப்பு வாதத்தை எழுத்து மூலமா தாக்கல் செய்ய போறார். இதில் அவர் ஜெவின் குற்றங்களின் மொத்த பரிணாமத்தையும் விரிவா சொல்லுவார் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே, பவானிசிங் சொன்ன குறைந்தபட்ச விஷயங்களை வெச்சே நீதிபதி குன்ஹா மிக வலுவான தீர்ப்பை சொல்லி இருக்கார். இப்ப ஜெ. செய்த குற்றங்களின் மொத்த பரிணாமமும் தெரிய வந்தா குமாரசாமியின் தீர்ப்பு எப்படி கடுமையா இருக்கும்னு நம்மால் ஈஸியா யூகிக்க முடியும்.

மே 12 க்குள் தீர்ப்பு தரணும்னு கட்டுபாடு இருந்தாலும், ஏப்ரல் 29க்கு பின் எப்ப வேணும்னாலும் ஜெ. அப்பீல் வழக்கில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை குமாரசாமி தண்டனையை உறுதிபடுத்தினால் அதோடு எல்லாம் முடிஞ்சு ஜெ. ஜெயிலுக்கு போயிருவார்னு எல்லாம் நாம நம்பிட கூடாது.

குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி, அவரும் தண்டனையை உறுதிப்படுத்தினா உயர்நீதிமன்ற பெஞ்ச், அதுவும் தண்டனையை உறுதிப்படுத்தினா உச்ச நீதிமன்ற நீதிபதி, அவரும் தண்டனையை உறுதிப்படுத்தினா உச்ச நீதிமன்ற இருவர் பெஞ்ச், அதுவும் தண்டனையை உறுதிப்படுத்தினா உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்ச், அதுவும் தண்டனையை உறுதிப்படுத்தினா உச்ச நீதிமன்ற ஐவர் பெஞ்ச், அதுவும் தண்டனையை உறுதிப்படுத்தினா தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற முதல் பெஞ்ச், அதுவும் தண்டனையை உறுதிப்படுத்தினா மறு ஆய்வு மனுன்னு அப்பீல் மேல அப்பீலா போட்டுகிட்டே இருக்கலாம். அதுக்கெல்லாம் எந்த தடையும் இல்லை.

எல்லா அப்பீலும் முடிவாகிற வரை அவர் ஜாமீனில் இருக்கலாம். தண்டனையை ரத்து செய்யாத வரைக்கும் எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர் பதவி ஏற்க முடியாதுன்றது மட்டும் தான் குறை. (ஆனா அது தேவையும் இல்லைன்னு வெச்சுக்கோங்க)

இன்னொரு பக்கம், இன்னைக்கு வெளியான மூவர் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து ஐவர் பெஞ்சிலும் அதன் பின் தேவை பட்டால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்சிலும், பின் மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்ய முடியும்.

ஆக, குமாரசாமி தீர்ப்பு, மூவர் பெஞ்ச் தீர்ப்பு இரண்டையும் தனி தனியா அப்பீல் மேல அப்பீலா செஞ்சு காலம் தள்ளிட்டே இருக்க முடியும். அந்த அளவுக்கு நீதித்துறை தன்னை தானே அவமானப்படுத்திக்குமான்னு தெரியலை.

பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் நிறைய சுவாரசியமான திருப்பங்களை எதிர்பார்க்கிறேன். இந்திய நீதித்துறையை நாம சரியா புரிஞ்சுக்க இந்த வழக்கை விட வேறு நல்ல உதாரணம் கிடையாது.

***************

தொடர்புடைய பதிவுகள்:


2 comments:

  1. நீதி துறை எப்படி இவ்வளவு தூரம் மீண்டும் மீண்டும் தான் தீர்ப்பு எழுதியதையே பற்பல நீதி மன்றங்களில் அனுமதிக்கிறது. இதற்குள் பல அரசுகள் வரலாம். இதற்கு ஒரு வரம்பு இல்லையா ?

    ReplyDelete

Printfriendly