Sunday, February 27, 2011

ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை.

யில்வே பட்ஜெட் தாக்கல் ஆகி இருக்கிறது.. இந்த ஆண்டும்.

வழக்கம் போலவே தமிழகம் ஏமாற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறது அதே வழக்கமான அமைதியுடன்.

ஐந்து மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த வேளையிலும், முக்கியமான மாநிலமான தமிழகம் போதிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாமல் இருப்பதன் பின்னணி அரசியல் சார்ந்தவையாக இருக்கக்கூடும். எனினும் ஒரு தமிழனாக நம் மாநில தேவைகள், எதிர்பார்ப்புக்கள் அதன் ஏமாற்றங்களை அசைபோட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

முதலில் இந்த பட்ஜெட் நமக்கு குறிப்பாக கொடுத்தவை என்ன என்று பார்க்கலாம்.

சென்னை - மதுரை; சென்னை - மதுரை - திருவனந்தபுரம்  ஆகிய வழி தடங்களில் துரந்தோ ரயில் விடப்படுகிறது.  இது பெரும் தொழிலதிபர்களுக்கே வசதியாக இருக்கும்.. எனினும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விடப்படும் ரயில் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்பது புரியவில்லை. காரணம் விமான கட்டணமும் அதே அளவுக்குள் வருகிறது.. பயண நேரமோ 2 மணி நேரம் தான்.

கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் கோவை நாகர்கோவில் ரயிலில் சில இணைப்பு பேட்டிகள் மட்டும் என்று சுருங்கி போனதில் சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு நாகூர் எக்ஸ்பிரஸ்.  இது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் லிங்க் ரயில் தான்.  திருவாரூரில் இருந்து சில பெட்டிகள் தனியாக நாகூர் வரை சென்று கொண்டிருந்தது.  அகல பாதை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இப்போது மீண்டும் விடப்பட்டு இருக்கிறது.  புதிய மொந்தையில் பழைய கல்.

தருமபுரி - பெங்களூர் இடையே விடப்பட்டு இருக்கும் ரயில் எக்ச்பிரசாக இயங்காமல் பயணிகள் ரயிலாக இயங்குவதாக இருந்தால் நலம்

விழுப்புரம் இப்போது தேர்மினலாக உருவெடுத்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து காரக்பூருக்கு ரயில் சேவை வேலூர் வழியாக துவக்கபடுகிறது..நல்ல விஷயம்.


சென்னை திருச்செந்தூர் ரயில் தினசரி இயக்கப்படும் (முன்பு வாரம் ஒரு முறை); கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் என்பவை வரவேற்க்கப்படவேண்டிய நீண்ட நாள் கோரிக்கைகள்.

காஞ்சீபுரம் - திருப்பதி; பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் வழித்தடத்துக்கான ஒப்புதல் ஆச்சரியம் கொடுக்கிறது.. எனினும் சேலம் நாமக்கல் பழனி வழித்தடம் என்ன ஆயிற்று என்பது விளக்கப்படவில்லை.  நாமக்கல் வரை பணிகள் முடிவடைந்தும் ரயில் சேவை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது

சென்னையில் இருந்து மதுரைக்கு காலை நேர விரைவு ரயில் ஒன்றும், சென்னை நெல்லை வழியில் இன்னும் ஒரு ரயில் வேண்டும் என்றும் உள்ள தேவைகள் கவனிக்கப்படவில்லை.  கோவை நெல்லை, கோவை திருவனந்தபுரம், கோவை பெங்களூரு மார்க்கத்தில் தனி ரயில் வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை

கோவை சென்னை துறந்தோ ரயில் நேரம் கிட்டத்தட்ட கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை ஒட்டியே இருப்பதும், கட்டணமும் கூடுதலாக இருப்பதும், கவனத்தில் கொண்டு, துறந்தோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் வீணாயிற்று.

எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுவதாக இருக்கும் இண்டர்சிட்டி ரயிலும், திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்த ரயிலும் கோவை வரை நீட்டிக்கப்படவேண்டும்.

உள்கட்டமைப்பு, பாலங்கள், போன்ற பணிகளுக்கு தமிழகத்துக்கு இந்த முறை அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

மிக மிக நீண்ட காலமாக பனி நடந்து வரும் கோவை - திண்டுக்கல்; மதுரை - போடி; திருவாரூர் - காரைக்குடி அகல பாதை திட்டங்கள் இந்த ஆண்டும் கனவாக போய் விட்டது.

சென்னை - மதுரை; சென்னை - நெல்லை; சென்னை - பெங்களூரு; சென்னை - கோவை மார்க்கங்களில் இன்னமும் ரயில் தேவை இருந்துகொண்டே இருப்பதை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில்கள் விடப்படவேண்டும் என்கிற நம்பிக்கை நப்பாசை ஆகிக்கொண்டு இருக்கிறது.

சென்னையை போலவே.. கோவையை மையமாக கொண்டு, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர்/ஈரோடு, பொள்ளாச்சி வழித்தடங்களிலும்; திருச்சியை மையமாக கொண்டு, தஞ்சாவூர், மதுரை, கரூர், விழுப்புரம் வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்கிற ஆசையும் நப்பாசை பட்டியலில் சேர்ந்து கொள்கிறது.

போதுமான ரயில்கள் விடப்படாமல், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல், வேற்று கவர்ச்சியாக சில ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ரயில் பட்ஜெட் இனிதே தாக்கல் ஆகி விட்டது தமிழகத்தை பொறுத்தவரை.

அடுத்த ஆண்டுக்காக ஆசையை தள்ளி வைப்போம்...

Thursday, February 3, 2011

2G - கைது சரியா?

இந்திய ஊழல் வரலாற்றிலேயே முதல் முறையாக என்கிற பட்டம் மட்டும் தான் பாக்கி!

அட்டகாசமாக அரங்கேறிவிட்டது தொலைதொடர்பு ஊழல், விசாரணை, அறிக்கை, கைது படலங்கள்.

சுருக்கமாக பார்த்தால் ஒரு யூகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது தான் உறுத்துகிற நிஜம்.

மத்திய தணிக்கை அதிகாரி ஒரு அறிக்கை கொடுக்கிறார். அதில் 2G அலைக்கற்றைகளை ஏல முறையில் விற்பனை செய்திருந்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும் என அறிவிக்கிறார்.  அந்த கூடுதல் வருமானம் என்பது சுமார் 1,76,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறார்.  அதாவது, அலைக்கற்றைகளுக்கு அந்த அளவுக்கு தேவை இருந்து, இத்தனை போட்டியாளர்கள் இருந்து, அவர்கள் ஏலத்தில் பங்கேற்று இந்த அளவுக்கு விலையை ஏற்றி இருந்தால், ஒருவேளை அரசுக்கு இந்த கூடுதல் வருமானம் கிடைத்து இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடுகிறார்.  மேலும், இந்த கணக்கீடு ஒரு யுகமான மதிப்பீடு தான் என்றும் அவரே சொல்லி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூக்குரல் இட்டு இன்று ராசாவும் கைது செய்யப்பட்டாயிற்று.

சரி... தணிக்கை துறை இதை மட்டும் தான் சொல்லி இருக்கிறதா?

விவசாயம், கல்வி, பெட்ரோல், சுகாதாரம் போன்ற பலவற்றுக்கும் அரசு தருகிற மானியங்களை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கும் என்று கூட தான் சொல்லி இருக்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அல்ல பல்வேறு மாநில அரசுகளுக்கான தணிக்கை அறிக்கையிலும் இது போன்ற மானியங்களை / கடன் தள்ளுபடிகளை / சலுகைகளை குறைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.  இதன் அடிப்படையில் மானியங்களை குறைத்து வருவாயை ஈட்டி அரசு கஜானாக்களை நிரப்பி இருக்கலாமே?  அப்படி செய்யாமல் இருந்த அனைவருமே அரசுக்கு இழப்பை ஏற்ப்படுத்தியவர்கள் என்று பட்டயம் கட்டிவிடலாமா?

பொதுவாக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்பது மரபு.  தணிக்கை துறையை பொறுத்த மட்டில், வெறும் வருவாய் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே பார்த்து தணிக்கை செய்து கூடுதல் வருவாய்க்கான வழிகளை சொல்லி வைக்கிற ஒரு ஆலோசனை குழு தானே தவிர, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல.  மானியங்கள் கொடுப்பது என்பது அந்த அந்த துறையை பொறுத்து தேவையை பொறுத்து அரசாங்கங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

இலவச கல்வி கொடுக்கவேண்டும், அதன் மூலம் தான் கல்வி அறிவு வளரும் என்று ஒரு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தலாம்.  ஆனால் தணிக்கை துறையை பொறுத்தவரை , கல்விக்கு கட்டணம் வசூலிக்காமல் விட்ட வகையில் இத்தனை கோடி வருவாய் இழப்பு என்று தான் அறிக்கை தரும்.

2G விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது விசாரணையில் இருக்கிறது. எனினும் தணிக்கை துறை சொல்கிற அளவுக்கான ஊழல் நடைபெற சாத்தியமே இல்லை என்று பாஜக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சரே சொல்லி இருக்கிறார்.  அவரது கணிப்பு படி, ஒருவேளை வருவாய் இழப்பு என்பதை  காரணமாக கொண்டாலும் கூட அதிகபட்சம் 30,000 கோடி வரை தான் இருக்கக்கூடும் என்கிறார்.

ஒதுக்கீட்டில் முறைகேடு, லஞ்சம் பெற்று கொண்டு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை தான் நடந்திருக்கக்கூடும் எனபதும், அத்தகைய முறை கேடு என்பது கூட தண்டனைகுரிய குற்றம் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.  அதன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை, தக்க ஆதாரங்களுடன் கைது செய்வதை எல்லோருமே ஏற்று கொள்ள தான் செய்வார்கள்.

ஆனால், ஏல முறை ஒதுக்கீட்டை மேற்கொள்ளாததால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று காரணம் சொல்லி, அதன் பேரில் கைது என்பது நெருடலாகவே உள்ளது.

ஒரு எளிய உதாரணம் சொல்வது இங்கே பொருந்தும்:

2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் BPL, Aircel ஆகிய இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் செல்போன் சேவைக்கான ஒதுக்கீடு பெற்றது.  பின்னர் சில ஆண்டுகள் கழித்து BSNL, Airtel, Reliance (CDMA), Tata Indicom(CDMA) ஆகியவற்றுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது.  இவை போக மிச்சம் இருக்கும் அலைவரிசைகள் தான் இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் MTS, Reliance GSM, Tata Docomo, Uninor, Videocon, Idea போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் தங்கள் சேவையை தொடங்கின.

ஒரே தொலை தொடர்பு வட்டத்தில், ஒரே தொழில் நுட்பத்தில் மூன்று முறை ஒதுக்கீடுகள் நடைபெற்றதால், ஒரே மாதிரியான ஒதுக்கீடு விதிமுறைகளும், கட்டணங்களும் தான் இருக்க முடியும் என்பது பொது விதி.  அப்போது தான் போட்டியாளர்களுக்கிடையே சமநிலை (Level Playing Field) இருக்கும். அப்படி இல்லாமல், ஒரே மாதிரியான சேவைக்கான லைசன்சுக்கு வெவ்வேறு வகையான கட்டணங்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு முறைகள் என்று  இருந்தால் அது சரியான வழி முறையாக இருக்க நியாயம் இல்லை.

அனைவருக்கும் ஒரே வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான், தொலை தொடர்பு சேவைக்கான கட்டணமும் சீராக இருக்கும்.  அதில்லாமல், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை என்று நிர்ணயம் செய்யப்பட்டால், கட்டண விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, அதிக கட்டணம் உள்ள நிறுவனங்கள் நாளாவட்டத்தில் செயலிழந்து போக கூடிய அபாயம் இருக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் அதே சமயம், ராசா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது போன்ற விசாரணைகள் அவசியமானவையே.

விசாரணையில் என்ன வெளிவருகிறது என்பதில் இருக்கிறது எதிர்கட்சிகளின் எதிர்காலம்!


Printfriendly