Wednesday, March 2, 2011

தமிழக தேர்தல் 2011


தமிழகத்துக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏப்ரில் மாதம் 13  ஆம் தேதி தேர்தல்; மே மாதம் 13  அம தேதி ஒட்டு எண்ணிக்கை.  வெறும் 40 நாட்களில் தேர்தல். 15  நாட்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம். அதுவும் ஒரே ஒரு வாரம் தான் அவகாசம் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்துகொள்ளவும் வாபஸ் வாங்கவும். ( ஆனால் ஒட்டு எண்ணிக்கைக்கு மட்டும் ஒரு மாத இடைவெளி?? )

இன்றைய தேதியில் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது?

திமுக, காங்கிரஸ், விசி, கூட்டணியில் "போட்டு வாங்கிய" இன்னொரு கட்சியாக பாமகவும் இணைந்து இருக்கிறது. (போட்டு வாங்கிய என்று சொல்ல காரணம், டெல்லி பயணத்தில் கருணாநிதி சொன்ன பாமக அணியில் இருக்கிறது என்கிற பதிலும், அதை தொடர்ந்து பாமக தாங்கள் இல்லை என்று மறுத்த மறுப்பும், அப்படியானால் sari நான் தான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்ற கருணாநிதியில் ஜகஜால வேலையும், அதை தொடர்ந்து, இல்லை இல்லை இதோ இருக்கிறோம் என்று ஓடி வந்து ஒட்டிக்கொண்ட அதிசயமும் தான்.  அதோடு பாமகவின் பேரம் பேசும் சக்தி குறைந்து, இடம் கிடைச்சதே போதுமடா சாமி என 31  இடங்களுக்கு செட்டில் ஆகி கொண்டது)

காங்கிரஸ் இந்த நிமிஷம் வரையிலும் திமுக அணியிலே இருந்தாலும் கூட, எனக்கென்னவோ அவர்கள் வெளியே வந்து விஜியுடன் அணி சேர்ந்து போட்டி இடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.  அதற்காக தானோ என்னவோ சாத்தியமற்ற கோரிக்கைகளை அடுக்குவதாக தகவல்கள் கசிகிறது. திமுகவுக்கும் கூட காங்கிரஸ் வெளியேறினால் போதும் என்று தோன்றி இருக்குமோ என்னவோ, "இளவல்" வீரமணி மூலமாக காட்டமாக காங்கிரசை எதிர்த்து மறைமுக குத்தலுடன் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. (இப்போதைக்கு திமுகவின் மனசாட்சி அவர் தானே!)

திமுகவின்  கணக்கு ஒரு வகையில் சரியாக கூட இருக்கலாம்.  காங்கிரசை வைத்து கொண்டு போட்டி இடுவதை விட, காங்கிரசை எப்படியாவது மூன்றாவது அணி அமைக்க செய்துவிட்டால், திமுகவின் வெற்றி மிக மிக எளிமை ஆகிவிடும்.  இன்றைய சூழலில் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் தான் அதிகம். அது ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு போய்விடாமல், அதிமுக காங்கிரஸ் என இரண்டாக பிரிந்தால், சைக்கிள் கேப்பில் ஜல்சா பண்ணிக்கொள்ளலாம் என திமுக மனதில் ஏதேனும் ஓட்டம் இருக்கிறதோ என்னவோ?

அதிமுக அணியின் நிலைமை இன்னமும் புரியாமல் இருக்கிறது.  லெட்டர் பேடு கட்சிகளுடன் எல்லாம் தொகுதி பங்கீடு (!) வெற்றிகரமாக முடிந்து விட்ட நிலையில் கூட்டணியின் முக்கிய கட்சிகளான சி.பி.எம்; சி.பி.ஐ போன்றவற்றின் நிலை பாடு என்னவென்று தெளிவாக இல்லை.  மதிமுகவை பொறுத்துவரை பிரச்சனையே இல்லை. என்ன கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். (இங்கே இன்னொன்றை சொல்லணும் போல இருக்கிறது. எனக்கு மதிமுகவை பிடித்ததற்கு காரணமே அதன் நேர்மை தான்.  1996  தேர்தலில் தனித்து களம் கண்ட கட்சி அது. 211  தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. பாக்கி 23  இடங்களில் என் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு, நிறுத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த நேர்மை 'ஹமாமையே' மிஞ்சிய ஒன்று!)

விஜி அதிமுக அணிக்கு வருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அவர் காங்கிரசுடன் அணி அமைக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவார் என தோன்றுகிறது.  அப்போ தான் அதிக இடங்களில் போட்டி இட முடியும்.  அதிமுகவில் அதிகம் தேற வழி இல்லை. 

திமுக அணியை  பொறுத்தவரை அரசின் செயல் திட்டங்கள் பெரிதும் கை கொடுக்கும் என்கிற பெரும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்ளுகிறது.  என்ன இருந்தாலும் எத்தனின் எத்தனையோ திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த அரசு என்பதை பொதுவாக எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். மேலும் இன்றைய தலை முறை, பிரச்சாரங்களை விட அதிகமாக செயல்பாடுகளையே எடை போடுபவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிமுக கூட, குப்பை அல்லாததை கண்டித்து _____ நகராட்சியை எதிர்த்து போராட்டம், குண்டும் குழியுமான சாலையை கண்டித்து ஆர்பாட்டம் என்று ஒரு சிறு சங்கத்தை போல செயல்பட்டதே அல்லாமல், பெரும் தவறு என்று அரசிடம் எதையும் சுட்டி காட்டி பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யாமல் இருந்ததே, திமுக ஆட்சிக்கு ஒரு மறைமுக நற்சான்றாக அமைந்து விட்டது. 

இந்த நிலையில் திடீர் என்று என்ன குற்றச்சாட்டை கையில் எடுத்து அதிமுக பிரச்சாரம் செய்யும் என்பதை அறிய எல்லோரையும் போல எனக்கும் ஆவலாக தான் இருக்கிறது.  (அதை விட ஆர்வம், அதிமுகவுக்காக யார் பிரச்சாரம் செய்ய போகிறார்கள் என்பது.  ஜே.நலிவுற்று இருப்பதால், முழுக்க முழுக்க வைகோவை நம்பியே இருக்கிறது தேர்தல் பிரச்சாரம். விஜி வந்தால் அவர் கொஞ்சம் பார்த்துப்பார்!)

தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய திருப்புமுனையான பிரச்சனை என்று இப்போதைக்கு ஒன்றுமே இல்லை என்பதும் கவனிக்க தக்கது.

கிட்டத்தட்ட, தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கூட மந்தமான சூழல் தான் நிலவுகிறது தமிழகத்தில். எந்த பரபரப்போ, சுறுசுறுப்போ, அட சுவர் விளம்பரங்களோ கூட அவ்வளவாக இல்லை. எதுக்குடா தேர்தல் வருது.. இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்கிற மனநிலையில் எல்லோருமே இருப்பது மாதிரியான ஒரு பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


முதலில் அணிகள் இறுதியாகட்டும். அதை வைத்து தான் களம் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.   பத்தே  நாளில் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தலை எழுத்து எப்படி அமையும் என்பது குறித்து ஒருவாறான யூகம் கிடைத்து விடும். 

அதுவரை காத்திருப்போம்!

Printfriendly