தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிவுற்றது! யாரும்.. யாருமே எதிர்பாராத ஒரு தேர்தல் முடிவாக தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இவ்வாறான ஒரு தேர்தல் முடிவினை முன்பே கணித்தவர் ஜெ. ஒருவர் தான் என்பது ஆச்சரியகரமான உண்மை!
இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி தொகுப்பு என்ன?
- காங். கட்சிக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாக ராகுல் சொல்லிய சொல்லாடல்கள் கற்பனை என்பது தெளிவாகி இருக்கிறது.
- சீட்டு எண்ணிக்கை உயர்த்துவதற்காக காங். கட்சி திமுகவுடன் நடத்திய அநாகரீக பேச்சுவார்த்தை முறைகள், மக்களுக்கு அந்த கூட்டணி மீதான நம்பிக்கையை உடைத்து, வெறுப்பை வளர்த்துவிட்டிருக்கிறது.
- மீடியாக்கள் தங்கள் செல்வாக்கை நிருபித்து இருக்கின்றன. தாங்கள் விரும்பிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்த அவர்கள் எடுத்த முயற்ச்சிகள் வெற்றி.
- கேப்டன் கட்சிக்கு என்று சொந்த செல்வாக்கு எதுவும் இல்லாதபோதும், மதிமுக, பாமக போன்ற கட்சிகளை அரவணைத்து அவற்றுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கி தந்த அதிமுக தேமுதிகவுக்கும் அவ்வாறே ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்து இருக்கிறது.
- நான் மாறி விட்டேன் என்ற ஜெ.வின் கூற்றுக்கு தமிழகம் மதிப்பு அளித்து இருக்கிறது.
- மக்கள் நல திட்டங்கள் பலவற்றை சிறப்பாக செயல்படுத்தினாலும், கடைசி நேரத்தில் மீடியாக்களால் பெரிது படுத்தப்பட்ட அலைக்கற்றை ஊழல்கள் அவற்றை எல்லாம் மறக்கடிக்கவைத்து விட்டன.
- இலவசங்கள் என்பதை யார் சொன்னாலும், அதன் எண்ணிக்கையை பொறுத்து செல்வாக்கு இருக்குமே தவிர, அது நிறைவேறுமா இல்லையா என்பது பற்றி மக்கள் அக்கறை கொள்வதில்லை என்பதை ஜெ. நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்!
- நலத்திட்டங்கள், மக்கள் பணிகள் ஆகியவற்றை விடவும், கவர்ச்சி வாக்குறுதிகள் வலிமையானவை என்பது புரியவைக்கப்பட்டு இருக்கிறது.
- ஈழ பிரச்னையை கையில் எடுத்த கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன.
- சாதி ரீதியான கட்சிகளை மக்கள் ஒரே அடியாக புறக்கணிக்கவில்லை என்பதும் தெரிகிறது.
- ஜெ. மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனினும் விஜயகாந்த் மீதோ, மற்ற கூட்டணி கட்சிகள் மீதோ அவர்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பது அந்தந்த கட்சிகள் பெற்ற குறைவான வாக்குகள் தெளிவாக்குகின்றன. (தேமுதிக இருபத்து ஒன்பது லட்சம் வாக்குகள், பாமக முப்பத்துநான்கு லட்சம் வாக்குகள்)
- திமுக மீதான மக்கள் வெறுப்பு என்ன தான் பலமாக இருந்தாலும், சில அமைச்சர்களின் வெற்றி அவர்களது சொந்த செல்வாக்கை காட்டுகிறது.
- இது முழுக்க முழுக்க ஜெ.வின் பிரச்சாரத்துக்கும், தேர்தல் வியூகத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதன் மூலம், "நான் யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற செய்ய வைக்க என்னால் முடியும்" என்கிற ஜெ.வின் பழைய அறிக்கையின் சத்தியம் மீண்டும் உறுதியாகிறது.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கள்:
- சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதும் சீர்திருத்தப்படவேண்டும். அதே சமயம், வழக்கமாக அதிமுக ஆட்சியில் நடைபெறும், "தனிநபர்" அத்துமீறல்கள், காவல்துறையின் அராஜகம், இந்த முறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கடந்த முறைகளை போல அல்லாமல், இந்த முறையேனும், வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல பணிகளுக்கு ஜெ. முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- அசுர பலம் கிடைத்திருப்பதாலும், கூட்டணி கட்சியே அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருப்பதாலும், என்ன வேண்டுமானாலும் சட்டமியர்றலாம் என்கிற வழக்கமான மனோநிலை வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறைகளில் இருக்கும் தேக்கநிலை போக்க வேண்டும்
- மக்களை அவதிக்குள்ளாக்கி நிறுத்திவைத்து கடந்து செல்லும் தண்டனை இந்த முறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- விமரிசனங்களை எதிரி மனோபாவத்துடன் பாராமல், விமரிசனங்களை ஏற்று கொண்டு அதில் நியாயம் இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விமரிசகர்கள் மீதான வழக்கமான அடக்குமுறை தவிர்ப்பது நலம்.
அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு எப்போதுமே இருக்கும் ஒரே குற்றச்சாட்டு, தொலை நோக்கு பார்வையோ, அனுசரனையோ இல்லாமல் இருப்பது என்பது. இந்த முறை அதெல்லாம் இருக்காது என்கிற ஜெ.வின் வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதை ஆறு மாதங்களுக்கு பிறகு தான் முடிவு செய்ய முடியும்.