கல்விக்கூடங்களில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை நீக்கும் நோக்கிலும், அனைத்து வகையான கல்வியும் சீரான ஒரே தரத்தில் அமையவேண்டும் என்கிற நோக்கிலும் கொண்டு வரப்பட்டது தான் தமிழக சமசீர் கல்வி சட்டம்.
ஒரே வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனுக்கும், தனியார் / மெட்ரிக் பள்ளி மாணவனுக்கும் இடையே நிலவும் ஏற்ற தாழ்வு என்பது பாட திட்டத்தின் அடிப்படையிலும் கூட பெரும்பாலும் அமைவதால், ஒரே சீரான பாட திட்டம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டது.
அகில இந்திய தேர்வுகளிலும் இதர போட்டி தேர்வுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பாலான மாணவர்கள் நகர்புறத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதும், கிராமப்புற மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், சமூக வாழ்க்கையில் அவர்களுக்கு மனதளவில் ஒரு தேக்க நிலை இருப்பது தெரிய வருவதுமாக பல காரணிகள் சமசீர் கல்வியின் அவசியத்தை எடுத்து சொல்வதாக அமைந்துள்ளது.
இத்தகைய சூழலில், முறையாக கல்வியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கான புத்தகங்களுடன் கடந்த ஆண்டு சமசீர் கல்வி திட்டம் தமிழகத்திலே அமலானது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அதிமுக அரசானது, என்ன காரணம் என்கிற அடிப்படை தகவலை கூட தெரிவிக்காமல் திடுதிப்பென்று அமைச்சரவை கூட்டி அதில் விவாதிக்கப்பட்டதாக சொல்லி, சமசீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்கில், அரசின் தடை ஆணை செல்லாது என தீர்ப்பானத்தை அடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்திருக்கிறது.
அந்த மேல் முறையீட்டின் மீது தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்றம், மீண்டும் ஒரு குழு அமைத்து சமசீர் கல்வி தொடருவதா வேண்டாமா / அப்படி தொடருவதாக இருந்தால் என்ன மாதிரியான பாட திட்டங்கள் தேவை எனபதை எல்லாம் ஆராய வேண்டும் என சொல்லி இருக்கிறது.
இது, தேவையில்லாமல் மாணவர்களின் கல்வி உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிற ஒரு நிலையை உண்டுபண்ணி இருக்கிறது.
மேலும், உச்ச நீதிமன்ற அறிவுரை படி அமைக்க்கப்பட்ட குழுவில், அரசு உயர் அதிகாரிகளும், மெட்ரிக் பள்ளிக்கூட முதல்வர்களுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதும், அரசு பள்ளி கூட தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர் / மாணவர் பிரதிநிதிகளோ, கல்விக்கான சமூக அமைப்புக்களோ அந்த குழுவில் இடம் பெறாமல் இருப்பதும், அரசின் முடிவை 'முறைப்படி' செயல்படுத்தவே இந்த குழு அமைக்க பட்டு இருக்கிறது என்கிற ஐயத்தை உறுதிபடுத்துவது போல இருக்கிறது.
அதிமுகவும் - மாணவர்களும்:
பொதுவாகவே அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்களாகவே இருப்பது எதேச்சையானதாக நடப்பது தானா என்பது இன்னமும் புரியவில்லை.
கடந்த முறை, அதிமுக ஆட்சியில், கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்த ஓராசிரியர் பள்ளிகள் அனைத்திற்கும் மூடுவிழா அறிவிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இருக்கின்ற நிலையாலும், அவர்கள் பல்வேறு வயதுகளில் இருப்பதாலும் பள்ளிக்கூடங்கள் அமைப்பது சரியான முடிவாக இருக்காது என்பதால், ஓராசிரியர் பள்ளிகள் அமைக்கப்பட்டது. நடுநிலை கல்வி வரையும், சில மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்படுவதால், அனைவரும் கல்வி கற்கும் சூழல் இருந்தது. அதிமுக அரசின் அறிவிப்பால், பல பல கிராமங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
பின்னர், தமிழக அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழக தேர்வாணைய தேர்வுகளை ரத்து செய்து, வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்ததன் மூலம், ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பட்டதாரியும் அரசு வேலைக்கான முயற்சியை செய்ய முடியாமல் முடக்கி வைக்க பட்டனர்.
கிராமங்களுக்கு சென்று கொண்டு இருந்த சிற்றுந்துகளை நிறுத்தியதன் மூலம், கிராமங்களில் இருந்து பயணித்து மேல்நிலை / உயர்நிலை படிப்பு படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இடை நிறுத்தத்துக்கு தள்ளப்பட்டனர்.
இப்போதைய புதிய அரசின் முதல் நாளிலேயே, சமசீர் கல்வி பாடு பட தொடங்கி, இந்த நிமிடம் வரை, என்ன பாட திட்டம் / என்ன மாதிரியான நடைமுறை / என்ன புத்தகங்கள் / எப்போது பள்ளி திறக்கும் என்கிற எந்த விவரமும் அறியாமல் அந்தகாரத்தில் இருக்கின்றனர் மாணவர்கள்.
மேலும் ஒரு கூடுதல் இணைப்பாக, பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் நடக்காது என்றும், அனைவரும் சென்னைக்கு தான் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது வீணான அலைச்சலையும் போருளிழப்புகளையும் மன உளைச்சளையுமே உண்டு செய்யும்.
இவ்வாறு பல பல வழிகளில் மாணவர்கள் மீது இந்த அரசு நடத்தும் மறைமுக தாக்குதலின் காரணம் என்ன / இதன் விளைவு என்ன என்பதை எல்லாம் யார் தான் தெளிவுபடுத்த முடியும்?