Saturday, November 26, 2011

முல்லை பெரியாரும் தமிழகமும்

 சமீப காலமாக செய்திகளில் அதிகமாக மீண்டும் அடிபட துவங்கி இருக்கிறது முல்லை பெரியார் அணை.  இது தொடர்பாக இணைய தளங்களில் நண்பர்கள் பலர் எனது கருத்தினை கேட்டபோது அவர்களுக்கு முழுமையாக அப்போது சொல்ல முடியாமல் போன விஷயங்களை இந்த பதிவு மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றும் போன வாரமும் ஏற்பட்ட இரண்டு நில அதிர்வுகள், அங்கே ஏற்கனவே இருந்துவரும் அச்சத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த அச்சத்தை பற்றியும் பெரியார் அணை குறித்த விழிப்புணர்வு பற்றியும் நாடு தழுவிய அளவிலே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அணை பலவீனமாக இருப்பதாகவும், ஒருவேளை அந்த அணை உடையுமானால் கேரளத்தில் இருக்கும் நான்கு மாவட்டங்கள் முழுவதுமாக நீருக்குள் மூழ்கிவிடும் எனவும் அதனால் 25  லட்சம் மக்கள் உயிரிழக்கக்கூடும் எனவும், எனவே தமிழகம் கருணை காட்டவேண்டும் எனவும் கேரளம் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?



அணையின் பலம்!

115  ஆண்டுகளுக்கு முன்பு கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட 152  அடி கொள்ளளவுள்ள அணை தற்பொழுது கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

80 களில் அணை பலவீனமாக இருப்பதாக கேரளம் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அப்போதைய முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று கட்டங்களாக அணையை பலப்படுத்த உத்தரவிட்டு, அவ்வாறு முதல் கட்ட பணி நிறைவடைந்ததும் 136 அடி, இரண்டாம் கட்டத்துக்கு பின் 142 அடி, இறுதி கட்ட பணி முடிவடைந்தபின் 152 அடி தேக்கி கொள்ளலாம் என ஒப்பந்தமானது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே இரண்டு கட்ட பணிகளும் முடிவடைந்து 142  அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட பணிகள் முடிவடைந்து 152 அடி நீர் தேக்க முனைந்தபோது தான் கேரளம் தனது ஆட்சேபணை தெரிவித்தது. பலப்படுத்தும் பணி சரியாக இல்லை என்றும், நீர் கசிவு தொடர்வதாகவும், தொடர்ச்சியான நீர்க்கசிவு அணையை பலவீனமாக்கி விடும் எனவும் சொல்லி, முழு கொள்ளளவான 152 அடி நீர் தேக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.  அன்று முதல் முழு கொள்ளளவுக்கு நீர் தேக்குவதற்கான போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

உண்மையில் அணை பலமாக உள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்து இருக்கின்றன. முதல் கட்ட பணியிலேயே அஸ்த்திவாரத்தை  பலப்படுத்திவிட்டது தமிழகம். பிறகு தொடர்ச்சியான பராமரிப்பினால் இப்போதைய நிலையில் அணை மிக பலமாகவும் உறுதியாகவும் உள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் இருக்கின்றன. 115 ஆண்டு பழமையான அணை கிட்டத்தட்ட பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கேரளம் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை, கற்பனையானவை, உருவகப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

கேரளத்தின் அச்சம்!

தொடர்ச்சியாக நீர் கசிவு இருந்தாலும் தமிழகம் தொடர்ச்சியான பராமரிப்பால் அணையை அவ்வப்போது செப்பனிட்டு கொண்டு தான் வந்திருக்கிறது. ஆனால் இந்த நீர்க்கசிவு அணையை பலப்படுத்தி விட்டது என்றும், எந்த நேரத்திலும் அணை உடையக்கூடும் என்றும், அப்படி உடைந்தால் பெருக்கெடுக்கும் வெள்ளம், இடுக்கி, பத்தனம் திட்டா, கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை வெள்ளத்தில் அமிழ்த்திவிடும் என்றும் கிட்டத்தட்ட 25  லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் கேரளம் அச்சப்படுகிறது.  எனவே பலவீனமாக இருப்பதாக சொல்லப்படும் முல்லை பெரியார் அணைக்கு அருகில் இன்னொரு அணையை கட்டி அதில் இருந்து தண்ணீரை தமிழகத்துக்கு கொடுக்கவேண்டும். புதிய அணை தான் பாதுகாப்பானது என்பது கேரளத்தின் நிலைப்பாடு. நேற்றைய தினம் கூட கேரள முதல்வர் அவர்கள் "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளத்துக்கு பாதுகாப்பு" என்கிற சுலோகனை சொல்லி கேரளத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்கிறார்.

அணை 'உடைந்தால்' நிச்சயமாக கேரளம் அச்சப்படும் விஷயங்கள் எல்லாம்  நடக்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அணை தானாக உடையும் நிலையில் இப்போது இல்லை. அணை மிக பலமாகவே இருக்கிறது.

ஆனால் இன்னொரு அச்சம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அதாவது அந்த பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலநடுக்கம், நில அதிர்வுகளால் அணை உடைவதற்கான வாய்ப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இப்போதைய பழைய அணை இப்போதைக்கு உறுதியாக இருந்தாலும் தொடர்ச்சியான அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்கும் என்பதற்கு நம்மால் எந்த உறுதியும் கொடுக்க முடியவில்லை.

இவ்வாறான சூழலில் புதிய அணை கட்டப்படுவதில் எந்த விதமான தடையும் சொல்வதற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை. புதிய அணை கட்டுவது என்பது கிட்டத்தட்ட 20 - 25  ஆண்டுகள் பிடிக்கக்கூடிய பெரும் பணியாகும். அதுவரையும், அதற்கு பின்னரும் கூட இப்போதைய அணை நிலைக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நிலநடுக்கத்தின் தாக்கத்தை நம்மால் எந்த சூழலிலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. எனவே நிலநடுக்கத்திலும் நீட்சியடைந்து நிற்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திலான ஒரு அணையை ஏற்படுத்துவது என்பது மட்டுமே நீண்ட நாள் தீர்வாக இருக்க முடியும். மேலும், எந்த நேரத்தில் அணை உடையுமோ, நமது உயிருக்கு என்ன உத்திரவாதம் என்கிற அச்சத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் தருகிற முடிவாகவும் இது அமையும்.

தமிழகத்தின் அச்சம்!

புதிய அணை கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கிறோம். அதற்கு சொல்லப்படும் காரணம், கேரளம் வஞ்சகமாக தமிழகத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது. புதிய அணை கட்டிவிட்டால் அதில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வரமாட்டார்கள். பழைய அணையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் புதிய அணைக்கு பொருந்தாது என சொல்லக்கூடும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், முல்லைபெரியாரை நம்பி வாழும் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகியவை வறண்டு விடும். இது தமிழகத்துக்கான வாழ்வாதார பிரச்சனை என நாம் சொல்லுகிறோம். 

எனவே கூர்ந்து கவனித்தால் நமது அச்சம் புதிய அணை கட்டுவது பற்றி அல்ல, புதிய அணை கட்டப்பட்ட பின் அதில் தற்பொழுது தமிழகத்துக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுவிடுமோ, தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விடுமோ என்பதே நமத்து நுண்ணிய அச்சமாக இருக்கிறது. நமது தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயம் இது என்பதால் சட்டென்று எந்த விதமான உடனடி முடிவையும் எடுக்க துணியாத நிலையிலே நாம் இருக்கிறோம்.

ஆனால், இது மிக மிக எளிதாக தீர்க்கக்கூடிய பிரச்சனை தான். தண்ணீர் தர கேரளம் மறுக்காது என்றும், கேரளத்துக்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது என்றும், எனவே மொத்த தண்ணீரையும் தமிழகமே எடுத்துக்கொள்ளலாம் என்றும் கேரளம் தன நிலைப்பாட்டை தெளிவு படுத்ஹ்டி இருக்கிறது. 

அதனால், புதிய அணையில் தமிழகத்துக்கு தற்பொழுது இருக்கும் உரிமைகள் தொடர்வதற்கான ஒப்பந்தத்தின் பேரில் புதிய அணை கட்டிக்கொள்வது என்பது, தமிழகத்துக்கான நீர் தேவையையும், கேரள மக்களின் அச்சத்தை நீக்கவும் உதவுகின்ற செயலாக செயல்படுத்த முடியும்.


நீர் கொள்ளளவு பிரச்சனை

இவ்வாறான ஒரு உடன்படிக்கை எட்டப்படும்வரை, அல்லது நிலுவையில் இருக்கும் வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் வரை, தற்போதைய முல்லை பெரியார் அணையில் 136  அடிக்கு மேல் தண்ணீரை தேக்கவேண்டாம் என கேரளமும், 152  அடி தண்ணீர் தேக்கினால் தான் கடை மடை தமிழகத்துக்கு நீர்கிடைக்கும் என தமிழகமும் வாதாடி வருகிறது.



பெரியார் அணையில் 152  அடி நீர் தேக்கினால் தான் ராமநாதபுரம் வரை நீர் பாயும் என்கிற நிலை 1958 வரை உண்மை தான். ஆனால் 1959 ல் வைகை அணை கட்டப்பட்ட பிறகு, வைகையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தான் ராமநாதபுரம் வரை செல்வதற்கான வேகத்தை தீர்மானிக்கிறதே தவிர, முல்லை பெரியாறு அல்ல.

எனவே முல்லைபெரியாரின் நீரின் அளவை குறைத்தால் ராமநாதபுரம் மாவட்டம் வறண்டு விடும் என்கிற வாதத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.  நீர் கசிந்து வந்தாலும் பெருகி வந்தாலும் வைகையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கே இருந்து தான் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

எனவே கொள்ளளவு பிரச்சனையில் நாம் பிடித்து வரும் பிடிவாதத்தை தளர்த்துவதே சிறந்தது.

தற்போதைய நிலையில் எனது கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்வது நல்லது என நினைக்கிறேன்.

  1.  தற்போதைய முல்லைபெரியார் அணை பலவீனமாக இருப்பதாக கேரளம் பரப்பும் செய்தி உண்மையானது அல்ல. அது வன்மையாக கண்டிக்க தக்கது. அணை மிக பலமாகவே இருக்கிறது.
  2. அணை தானாக உடையும் நிலையில் இல்லை, என்றாலும், தொடர்ச்சியான நில அதிர்வுகளால் உடைவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது
  3. அவ்வாறு அணை உடைந்தால் 4 மாவட்டங்களும் அதன் 25 லட்சம் மக்களும் மொத்தமாக நீருக்குள் அமிழும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
  4. தற்போதைய அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையில் நாம் அதற்கு இசைவு தெரிவிப்பதே நல்லது. 
  5. தமிழகத்துக்கு அணையில்  தற்போதிருக்கும் உரிமைகளை புதிய அணைக்கும் தக்கவைத்துக்கொள்ள நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் சரியாக இருக்க முடியும்.
  6. கேரளம் தண்ணீர் தர மறுக்கவில்லை, அப்படி மறுக்கின்ற சூழலும் அங்கே இல்லை என்பதை தெளிவு படுத்தி இருப்பது கவனிக்க தக்கது.
  7. தமிழகம் தனக்கென்று எந்த ஜீவா நதியையும் கொண்டிருக்கவில்லை. பிற மாநிலங்களை நம்பியே நாம் இருந்து வருகிறோம். இந்நிலையில் நியாயமற்ற காரணங்களையும் அச்சத்தையும் காரணமாக்கி தமிழக விவசாயிகளையும் கேரள மக்களையும் ஒரு நிலையற்ற தன்மையில் வைத்துக்கொண்டிருப்பதற்கு விரைவில் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.
தமிழக அரசு இப்படி முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட முனைந்தாலும், இங்கே இருக்கும், மக்களின் அறியாமையையும் உணர்ச்சிவசப்படுதளையும் மூலதனமாக்கி செயல்படும் பிற சிறு அரசியல் இயக்கங்கள் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தான் இப்போதைய எனது அச்சம்!
 

Printfriendly