Saturday, December 31, 2011

திமுகவின் குடும்ப அரசியல்!



இணைய தளங்களிலும் அரசியல் அரங்கத்திலும் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் திமுகவின் குடும்ப அரசியல் என்பது. திமுக என்றாலே வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்கிற ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை!

வாரிசு முறை என்பது உலகம் முழுதும் அனைத்து துறைகளும் இருக்கக்கூடிய ஒன்று தான். இந்தியாவும் தமிழகமும் அதில் விதி விலக்கல்ல. தொழில்துறை, விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளிலும் வழி வழியாக வாரிசு முறை கொண்டு வரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் பல கட்சிகளிலும் நீண்டகாலமாக நிலவி வரக்கூடியது தான் குடும்ப அரசியல்  / வாரிசு அரசியல் என்பது. இதில் விதி விலக்கான கட்சிகளே இல்லை. தமிழகத்தை எடுத்ஹ்டுக்கொண்டால், திமுக பெரும் இயக்கமாக இருப்பதால் அது முன்னிலைப்படுத்தப்படுகிறது.  அதை சற்று விரிவாக பார்க்கலாம்!


குடும்ப கட்சியா கட்சி குடும்பமா?

திமுக என்பது குடும்பத்தை கட்சியாக கொண்டது என்கிற கருத்து ஊடக துறையினராலும் பிற அரசியல் இயக்கங்களாலும், அரசியல் அறியாத பல எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எனது பார்வையில் திமுக கட்சியை குடும்பமாக கொண்டது எனவே கருதுகிறேன்.

கழகம் 1949 ல் துவங்கப்பட்டு பல்வேறு கடினமான காலகட்டங்களையும் கடந்து வந்ததும், தமிழகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் திமுக ஆற்றிய சேவைகள், அதற்கான போராட்டங்கள், கைதுகள் என பலவும் எல்லோரும் அறிந்த ஒன்றே. எனவே அதை பற்றி எல்லாம் விவாதிக்காமல் குடும்ப அரசியல் என்கிற ஒன்றை மட்டும் இப்போது விவாதிப்பது தகும் என கருதுகிறேன்.




திமுகவில் இப்போது முதன்மை குடும்பத்தின் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே சமீபத்தில் தான் பொறுப்புக்களும் பதவிகளும் கொடுக்கப்பட்டன.

ஸ்டாலினை பொறுத்த வரை கட்சியில்
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைகளை அனுபவித்து படிப்படியாக கிளைக்கழகம், இளைஞ்சர் அணி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர், கட்சியின் பொருளாளர், துணை பொதுசெயலாளர் என முன்னேறியவர். ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு தாமதாமாக தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என மாற்று கட்சியினரும் கருத்து தெரிவித்தது உண்டு.

சரி! அப்படியானால் கட்சிக்காக உழைத்தவர்களை கண்டுகொள்ளவில்லையா கழகம்?

குடும்ப வாரிசுகளுக்கு பதவிகளும் பொறுப்புக்களும் கொடுப்பதற்கு முன்பாக பல காலமாகவே கழகத்துக்காக பாடுபட்டவர்களை உரிய முறையில் கவுரவித்து வந்திருக்கிறது திமுக.

மிக சில உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தங்கபாண்டியனின் பிள்ளைகள்.  பரிதி இளம் வழுதி இளம்பரிதியின் மகன். பழக்கடை ஜெயராமனின் மகன் தான் ஜெ. அன்பழகன். கீதா ஜீவன் கருப்பசாமி பாண்டியனின் மருமகள்.   பூங்கோதை அருணா, ஆலடி அருணாவின் மகள். ஐ.பி.செந்தில் திண்டுக்கல் பெரியசாமியின் பிள்ளை.  வானூர் ஏ.ஜி சம்பத் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.கோவிந்தசாமியின் மகன். இப்படி எல்லா மாவட்டங்களிலும் பலப்பல கழக மறவர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும், பதவியும் கொடுத்து அழகு பார்த்ததற்கு பின்னர் தான் முதன்மை குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மொத்த கழகமும் குடும்பம், கழக உறுப்பினர்கள் எல்லோருமே குடும்பத்தினர் என்கிற பார்வை இருந்ததால் தான் இத்தனை முக்கிய பிரமுகர்கள், கொள்கை பிடிப்போடு திமுகவில் இருந்து வருகின்றனர் என்பதை எல்லா கட்சியினருமே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


உட்கட்சி ஜனநாயகம்!

திமுகவில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், உட்கட்சி ஜனநாயகம்.

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சியோடு ஒப்பிட்டு பார்த்தாலும், முறையாக தேர்தல் நடத்தி சீராக பல ஆண்டுகளாக இயங்கி வருகிற ஒரு இயக்கம் திமுக.  மேலும் தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக இருப்பதும் திமுகவில் தான்.


 இன்றைய தேதியில் பார்த்தால் கூட, பொன்முடி, துரை முருகன், ஆற்காட்டார், அன்பழகன், வீரபாண்டியார், மூக்கையா, கருப்பசாமி பாண்டியன், சாத்தூரார் என முக்கிய மூத்த தலைவர்களும், பிராந்திய அளவில் மாவட்ட அளவில் முக்கிய பிரமுகர்களும் உரிய முக்கியத்துவத்தொடும் பிரபல்யத்தொடும் இருப்பதை எல்லோரும் அறிவர்.

இவர்கள் சுயமாக தங்கள் கருத்துக்களை வெளியிடவோ, பொதுக்கூட்டங்களில் சுந்தந்திரமாக கருத்து சொல்வதற்கோ எந்த தடையும் விதிக்கப்பட்டு இருக்க வில்லை. மாற்று கட்சியில் இருந்து வந்து இணைந்தவர்களுக்கும் அதே முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது!

ஒரு ஒப்பீட்டுக்காக தமிழகத்தின் பிற கட்சிகளை எடுத்துக்கொள்வதானால், பெரும்பாலான காட்சிகளில் இரண்டாம் கட்ட செயல் தலைவர்கள் என்பதே இல்லை.

மதிமுக, பாமக, நாம் தமிழர், இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போன்ற எந்த கட்சியாக இருந்தாலும், தலைவர், தலைவர் குடும்பம் தவிர வேறு யாரையும் பிரபலமாக ஆக்க விடுவதில்லை. எல்லோருமே அடக்கி வைக்கப்பட்டவர்கலாகவே இருந்து வருவதை நான் கண்கூடாக கண்டு வருகிறோம்.


அதிமுகவை பொறுத்தவரை இரண்டாம் கட்ட தலைவர்கள் மிக சிலர் இருந்தாலும், அவர்களால் சுயமாக செயல்பட முடிவதுமில்லை, அவர்கள் முக்கியத்துவபடுத்த படுவதும் இல்லை. அப்படி ஒரு வேலை முக்கியத்துவத்தை நோக்கி முன்னேருகையிலேல்லாம் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பல பல உதாரணங்கள் இருந்தாலும், திருநாவுக்கரசர், எஸ்.டி.எஸ், சாத்தூரார், முத்துசாமி என குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிலர்.

பொதுவான நோக்கில் பார்க்கையில், திமுக தனது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதோடு, உரிய பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது, இரண்டாம் நிலை செயல்வீரர்களாக அவர்களை மேம்படுத்துகிறது, உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறது என்பதை அரசியல் அறிந்த விமர்சகர்கள் யாவரும் அறிவர்.

ஏன் இப்போது இந்த பதிவு?

இன்றைக்கு இணைய தளங்களிலும் பிற ஊடகங்களிலும் திமுகவை குறித்து ஒரு தவறான சித்தரிப்பு இருந்து வருகிறது. காரணம் அரசியல் வரலாறு முழுமையாக அறியாத, அறிய முயலாத பல பல எழுத்தாளர்கள் பெருகி விட்டதும், அப்படியான எழுத்தாளர்களின் சொற்கள் வேதவாக்காக கருதப்பட்டு வருவதும், அதில் சில முக்கிய எழுத்தாளர்களின் கருத்துக்கள் பிரபல ஊடகங்களில் வெளியாவதும், உண்மையின் உண்மை நிலையை உண்மையாக உரைத்தாமல் போய்விடுகிறது.  எனவே உண்மையில் எது தான் உண்மை என சீர்தூக்கி பார்க்க விரும்பும் மிக சிலருக்கான பதிவாகவே இதை பதிந்து அமைகிறேன்.

Thursday, December 1, 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. சமீபகாலமாக அதிகம் அடிபடும் வாக்கியம் இது தான்.

கடந்த வாரம் மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து முடிவு எடுத்தது. அது முதலே நாடு முழுதும் பெரும் அளவிலான விவாதங்கள் வாதங்கள் பிரதிவாதங்கள் தொடங்கி இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் அளவிலே சென்று கொண்டிருக்கிறது. உண்மையில் என்ன தான் பிரச்சனை?

மத்திய அரசு முடிவு

பொருளாதார சீர்திருத்தத்தின் படிப்படியான அமலாக்கத்தின் ஒரு கட்டமாக சில்லறை வணிகத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு கடந்த வாரம் முடிவு எடுத்தது. 51 % வரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை எடுத்த முடிவு, மத்திய அரசின் முடிவு தான் எனவும், மாநிலங்கள் விருப்பப்பட்டால் அதனை அமல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனி வணிகத்தில் 100 % வரையும் பல்பொருள் வணிகத்தில் 51 % வரையும் அந்நிய நேரடி முதலீடு இருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் சில்லறை வணிகத்தின் நிலை.

பொதுவாக இந்தியாவில் பாரம்பரியமாக மளிகை மற்றும் சிறு கடைகளை குடும்ப தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். இப்போது தேவைகள் அதிகமானதாலும், கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனி குடித்தனங்கள்  பெருகி விட்டதாலும், கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. தினசரி தேவைகளுக்கான பொருட்கள் பெரும்பாலும் இவ்வாறான மளிகை கடைகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்று விற்கும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை பெற்று விற்பதால் விலை கூடுதலாகவும், பொருட்கள் சில சமயங்களில் நாள்  பட்டதாகவும் இருப்பதை தவிர்க்க முடிவதில்லை. இது போன்ற நிலையை தவிர்க்கவும் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கே கிடைப்பதற்காகவும் சூப்பர் மார்க்கெட்டுகள் தோன்ற துவங்கின. எனினும் அவை பாரம்பரியமான மளிகை கடைகளின் செல்வாக்கை பெற முடியாமல் போனது.

இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்கள் சற்று தாமதாமாக மளிகை பொருட்களுக்கான தேவையின் விஸ்வரூபத்தை அறிந்து கொண்டனர். அதன் விளைவாக மிக பெரிய வர்த்தக விற்பனை நிறுவனங்களை, ரிலையன்ஸ், பிர்லா குழுமங்கள் துவக்கின. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. நாம் உதாரணத்துக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் பிரெஷ் 

அம்பானி குழுமத்தில் இருந்து துவக்கப்பட்ட ரிலையன்ஸ் பிரெஷ் நிறுவனம் பல முன்னோடியான வர்த்தக முறைகளை கையாண்டது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்வது, தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக பல்வேறு நகரங்களிலும் இருக்கும் தங்கள் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்வது பிரம்மாண்டமான கடைகளை நிறுவி டீஸ்பூன் முதல் டெலிபோன் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்க செய்வது போன்றவற்றால், தரமான பொருட்களை குறைவான விலையில் விற்கமுடிந்து மக்களிடம் ஆதரவை பெற்றது.

சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள விவசாய பொருட்கள் கொள்முதல் நிலையத்திற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் இடை தரகர்களின் செலவுகள் இன்றி விலை குறைவாக கிடைப்பதாகவும், விவசாயிகளுக்கும் கூடுதல் தொகை கிடைப்பதாகவும் சொன்னார்கள்.  பல மாநிலங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்கு குறிப்பிட்ட விவசாயிகளிடம் ஒப்பந்தமே போட்டு கொள்கிறார்கள். இதன் மூலம் , விளைச்சலுக்கு பின்னர் தங்கள் விலை பொருட்களை விற்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம் இல்லாமல் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த முடிகிறது. தரமான உற்பத்தி, உறுதியான வியாபார ஒப்பந்தம், அவ்வப்போது முன்தொகை போன்றவை விவசாயிகளின் விளைச்சல் பளுவை குறைக்கிறது. இடைத்தரகர் இல்லாததால் லாபமும் அதிகரிக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நாடு முழுவதுமுள்ள தங்கள் விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதால் ஒரு சிறப்பான Supply Chain System கொண்டு செயல்பட முடிகிறது.  இப்படி தான் பெரிய வணிக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க இன்னொரு நிறுவனம் பிக் பசார். இவர்களும் மொத்த கொள்முதலை விவசாயிகளிடமிருந்தும், உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெற்று விற்பனை செய்து வருகிறார்கள். உற்பத்தியாளர்களும், மொத்தமான கொள்முதல் என்பதால் விலையை அபரிமிதமாக குறைத்து உற்பத்தி செய்து தர முடிகிறது. மார்கெட்டிங் தலைவலியும் உற்பத்தியாளர்களுக்கு இல்லாமல் அவற்றை இது போன்ற வர்த்தக நிறுவனங்களே ஏற்று கொள்கின்றன.

அந்நிய நேரடி முதலீடு - அவசியம் என்ன

இப்போதைய சூழலில் பெரிய வணிகங்களை செய்யக்கூடியவர்களாக ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற மிக சில நிறுவனங்களே இருக்கின்றன. சுபிக்ஷா, திரிநேத்ரா, போன்ற பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கி போய்விட்டன. கிட்டத்தட்ட மறைமுகமாக ஒரு ஒருமுகத்தன்மை (Monopoly) இந்த வியாபாரத்தில் நிலவ தொடங்கி விட்டது.  எனவே எல்லாவரும் இந்த தொழிலே ஈடுபடவேண்டும் என்கிற நோக்கத்திலும், வணிக விற்பனை பரவலாக்கப்படவேண்டும் என்கிற எண்ணத்திலும் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதன் மூலம் அந்நிய பங்குதாரர்களை கொண்டு பெரிய வர்த்தக நிறுவனங்களை இந்தியர்கள் ஏற்படுத்தி கொள்ள முடியும். அதாவது நம்மிடம் தொகை குறைவாக இருப்பதால் ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தை தொடங்க முடியவில்லையே என ஏங்கும் பல இந்தியர்கள், இனி வெளிநாட்டு நிறுவனங்களை துணையாக கொண்டு பெரும் அளவிலே கடைகளை நிறுவ முடியும்.  அவ்வாறு பெறப்படும் முதலீடு என்பது 51 % க்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பது தான் மத்திய அரசின் முடிவு.  இது சில்லறை விற்பனையில் தற்போது இருக்கும் ஒருமுகத்தன்மையை உடைத்து பன்முக தன்மையை ஏற்படுத்துவதோடு, எவர் வேண்டுமானாலும் இத்தொழிலில் இறங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இதன் விளைவுகள்

அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு புதிதல்ல.  ஏற்கனவே ஆட்டோமோட்டிவ் துறையில் இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹிரோ நிறுவனம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ ஹோண்டா நிறுவனமாக அமைத்தது ஒரு உதாரணம். அவ்வாறே, டிவிஎஸ் சுசுகி, எஸ்கார்ட்ஸ் யமஹா, கவாசாகி பஜாஜ், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் மிட்சுபிஷி என பல பல நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து வியாபாரத்தை நடத்தி வருகின்றன. இதன் மூலம் போட்டி அதிகமாகி குறைந்த விலையில் தரமான பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்க துவங்கின.

சில்லறை விற்பனையை பொறுத்தவரை இது தான் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கும் அனுமதி என்பதால் பலத்த எத்ரிப்பு கிளம்பி இருக்கிறது. இவ்வாறான அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் காலூன்ற விட்டு, பாரம்பரியமான மளிகை வியாபாரத்தை சிதைத்து விடும் என்கிற அச்சம் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற மிக பெரிய நிறுவனங்களும்,  ஊர் சார்ந்த வட்டார டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இருந்தாலும் மளிகை கடைகளும் சந்தைகளும் இப்போதும் இயங்கி கொண்டு தான் வருகின்றன. எதுவும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.  ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து இப்போது பரவலாக்க பட்டு இருக்கும் சில்லறை விற்பனை துறை, கூட்டு தொழிலாக ஏற்படுத்தப்படுகிறது என்கிற வித்தியாசத்தை தவிர வேறு இல்லை.

நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால், நாம் அச்சப்படும் அளவுக்கு இந்த அந்நிய முதலீட்டு முடிவில் எந்த அம்சமும் இல்லை.

அரசு நிறுவனங்கள்

அரசே என் நேரடியாக விற்பனை நிலையங்களை ஏற்படுத்தக்கூடாது என்கிற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக தோன்ற கூடியதே. இந்த விஷயத்தில் நான் உதாரணத்துக்காக தமிழகத்தை எடுத்து கொள்ள விரும்புகிறேன்.

விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக வேளாண் விலைபொருள் விற்பனையகம், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் போன்றவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. மளிகை பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (TAmilnadu State MArketing Corporation - TASMAC) தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலமாக சிந்தாமணி, அமுதம் போன்ற சிறப்பங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இது தான் தமிழகத்தை பொறுத்தவரை சப்ளை செயின் பலமாக இருந்த சில்லறை விற்பனை அங்காடி (ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் வரும் வரை).

விவசாயிகள் இடை தரகர்களிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைவதை தடுக்கவும், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே இருந்து விலையை கூட்டி வந்த இடை தரகு முறையை ஒழிப்பதற்காகவும் உழவர் சந்தைகளை தமிழக அரசு அமைத்தது. இது விவசாயிகளுக்கு மிக வசதியான ஒரு திட்டமாக செயல்பட்டது.

எனினும் மக்கள் எதிர்பார்க்கும் அளவில் மிக பிரம்மாண்டமான கடைகளை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தும் அளவுக்கு அரசுடன் நிதி ஆதாரம் இல்லை. அவ்வாறு நிதி ஆதாரம் இருந்த பெரும் நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த தொழிலில் எல்லாவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே அந்நிய முதலீடு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

இதன் நன்மைகள்:

மிக பெரிய அளவிலான வியாபார போட்டி, ஒருமுகத்தன்மை உடைத்து பன்முக தன்மை நிலை நாட்டப்படுதல், நேரடி கொள்முதல், விவசாயிகள் உற்பத்தியாளர்களின் உற்பத்திக்கு ஏற்ற விலை, நுகர்வோருக்கு குறைவான விலையில் தரமான பொருட்கள், மிக சிறந்த விநியோக கட்டுமானம், அனைத்து நகரங்களிலும் வணிக வளாகங்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதன் பாதகங்கள்:

அந்நிய நிறுவனம் பின்னர் தங்கள் பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வது, விவசாய பொருட்கள் இறக்குமதி, மளிகை போன்ற சிறு வியாபாரிகளின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை, தரகு தொழிலில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வாதார கேள்விக்குறி, நிலைநின்றபின் விலையை அவர்கள் இஷ்டத்திற்கு நிர்ணயித்து பெரும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஆகியவை இதன் பாதகங்களாக உணரப்படுகின்றன.

அரசு செய்யவேண்டியது.

மொத்த விற்பனையில் 60 % கொள்முதல் உள்நாட்டில் இருந்து செய்யவேண்டும் என வலியுறுத்துவது, நகரங்களில் இவ்வாறான வணிக வளாகங்கள் அமைப்பதில் ஒதுக்கீடு கட்டுப்பாடுகள் கொண்டுவருவது ஆகியவை அனைத்து தரப்பினரும் சமமான போட்டியில் ஈடுபட வாய்ப்பு வழங்கும்.

எனது உரை:

எப்படி பார்த்தாலும், இந்திய பொருளாதாரத்திற்கும், நுகர்வோருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் நன்மைகளை தரக்கூடிய திட்டம் எனினும், தமிழகத்தின் பாரம்பரிய மளிகை கடைகள், சந்தைகள், போன்றவற்றை அழித்து விடக்கூடிய ஆபத்தும், சிறு வணிகர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கக்கூடிய நிச்சயமற்ற நிலையம் வர வாய்ப்பிருக்கிறது.

அந்நிய நேரடி முதலீடு தேவைப்படும் போக்குவரத்து, சாலைகள் கட்டுமானம், விமான சேவை என பல துறைகள் ஏங்கி கொண்டிருக்க மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அவசரம் ஏன் என்பது புரியவில்லை. இன்னும் சற்று காலம் பொறுத்து இருந்திருக்கலாம் என கருதுகிறேன்.

Printfriendly