இந்திய வரலாற்றின்
இரண்டாவது மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்பட்ட 2G ஊழல் இப்போது இந்திய வரலாற்றின் மிகப்பெரிய
பொய் என மெல்ல மாறிவந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த பதிவு எழுதப்படுகிறது.
ஏற்கனவே 2G வழக்கு தொடர்பாக 2 பதிவுகள் ( விவரங்கள் கீழே ) இதே வலைப்பூவில்
எழுதப்பட்டிருப்பதால் முன்கதை பின்கதை கிளைக்கதைகளை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக
சொல்லவந்த விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.
கடந்த அக்டோபர்
31ம் தேதி மத்திய தணிக்கை துறையின் அதிகாரியாக இருந்த ஆர்.பி.சிங் அவர்கள் ஓய்வு பெற்றார்.
அவர் தான் 2G விவகாரத்தை தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பித்தவர்.
அரசு ஊழியராக இருந்தவரை
அமைதியாக இருந்தவர், ஓய்வு பெற்றபின் சுதந்திரமாக தனது தரப்பு வாதத்தை வெளிப்படுத்தி
இருக்கிறார். அதன் சாரம்சம் இது தான்:
“2G ஏலமுறையில்
இழப்பீடு ஏற்பட்டதாக நான் சொல்லவேயில்லை. எனது உயர் அதிகாரிகள் தான் அப்படி எழுதி என்னை
கையெழுத்திட கட்டாயப்படுத்தினார்கள். வரைவு அறிக்கையில் 1,76,000 கோடி இழப்பு என்று
இருந்ததை நான் நீக்கினேன். காரணம், அதற்கு உரிய நியாயமான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லை
என்பது தான். ஆனால், மீண்டும் அதே தொகையோடு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அதில் நான்
கையெழுத்திட வற்புறுத்தப்பட்டேன்.”
இதில் இன்னுமொரு
அதிர்ச்சி தகவல் என்னவென்றால், “இந்த முறைகேட்டுக்கு திட்டமிட்டு கொடுத்து CAG அலுவலகத்துக்கே
வந்து, அறிக்கை தயாரிக்க முழுமையாக துணை நின்றது பா.ஜ.கவின் முரளி மனோகர் ஜோஷி தான்”
என்றும் அவர் சொல்லியிருந்தார். பின்னர் சில நாட்களிலேயே நான் அப்படி எதுவும் சொல்லவில்லை
என மறுத்து விட்டார்.
இந்த விவரங்களின்
அடிப்படையில் மீண்டும் 2G வழக்கு விவகாரத்தை விவாதிக்கவேண்டும் என திமுக பாராளுமன்றத்தில்
கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதில் இருந்து
நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் மிக சில உள்ளன.
பா.ஜ.க காங்கிரஸ்
மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து அதன் மதிப்பை குலைக்க முயற்சிக்கிறது.
வேறு எதை பற்றி சொன்னாலும் பிரச்சனை என்பதால் ஸ்பெக்டிரத்தை கையில் எடுத்திருக்கிறது.
காரணம், இந்த நிமிடம் வரை இந்தியாவில் ஸ்பெக்டிரத்துக்கான மதிப்பு என்ன என்பது யாருக்குமே
தெரியாது. யூகமான விலை தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே CAG யின் அதிகாரிகள்
துணையுடன், மேலும் யூகமான மதிப்பீட்டுப்படியான குற்றச்சாட்டை முன்வைத்தால், அந்த குற்றச்சாட்டு
சரியா தவறா என்றெல்லாம் யாரும் சிந்திக்க முன்வரமாட்டார்கள். CAG சொல்வதால், அதை அப்படியே
ஏற்றுக்கொண்டு விடுவார்கள். மேலும், ஸ்பெக்டிரத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படாததால்,
அரசுக்கு நஷ்டம் என சொன்னால் அதை யாராலும் மறுத்து பேச முடியாது. மீடியா மூலம் இது
பெரும் பரபரப்புக்குள்ளானால் மொத்த தேசமும் காங்கிரஸ் மீதான மதிப்பை மறுபரிசீலனை செய்யும்.
அது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையும் என்கிற மிக மிக வலுவான, தெளிவான, சிறப்ப்பான திட்டமிடல்
மூலம் இந்த 2G ஊழல் என்கிற குற்றச்சாட்டு கட்டமைக்கப்பட்டிருப்பதாக எல்லோராலும் எளிதாக
யூகிக்க முடிகிறது.
உண்மையில், இந்த
திட்டம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும். ஆர்.பி.சிங் மட்டும் உண்மையை சொல்லியிருக்காவிட்டால், இந்த நிமிடம் கூட
2G யால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படும் கதையை எல்லோரும் தொடர்ந்து நம்பிக்கொண்டு
தான் இருந்திருப்பார்கள்.
சமீபத்தில் நீதிமன்றத்தில்
சி.பி.ஐ தரப்பில் தரப்பட்ட விவரத்தின் படி, 2G விவகாரத்தில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு
இருக்கிறதா என்பதோ, அப்படி ஏற்பட்டிருந்தால் அதன் மதிப்பு என்ன என்பதோ அது குறித்த
விவரமோ ஆதாரப்பூர்வமாக இல்லை என தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அப்படியெனில்
2G வழக்கு மற்றும் 2G ஒதுக்கீடு தொடர்பான பரவலான குற்றச்சாட்டுக்களுக்கு என்ன பதில்?
அவையெல்லாமே தவறான குற்றச்சாட்டுக்களா? இது தான் இப்போது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான
கேள்வி.
அவற்றில் மிக சில
குற்றச்சாட்டுக்கள் என்னவென்று அலசலாமா?
2G விண்ணப்பம்
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மாற்றி முன்னுக்கு கொண்டுவந்தது ஏன்? அதனால் பல நிறுவனங்கள்
விண்ணப்பிக்க முடியாமல் போய்விட்டது. இது சில நிறுவனங்களுக்கு ஆதரவான முடிவு அல்லவா?
2G ஒதுக்கீட்டை
பொறுத்தவரை, இது முதலில் வருவோருக்கு முதலில் ஒதுக்கீடு முறையில் ஒதுக்கப்படுவது. இப்படியான
ஒதுக்கீட்டு முறையை பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது தான் முடிவெடுத்து அமல்படுத்தியது.
2G ஸ்பெக்டிரத்தை பல முறை இதே முறையில் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது கடைசியாக
கொஞ்சமாக அரசிடம் மிச்சமிருக்கும் 2G ஸ்பெக்டிரத்தை கிட்டத்தட்ட கிளியரஸ் சேல் ரீதியில்
ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். காரணம் 3G மற்றும் 4G தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு
வந்துவிட்டபடியால் 2G தொழில்நுட்பம் பழையதாகிவிட்டது. அதனால் 2G ஸ்பெக்டிரத்தில் மிச்சமிருக்கும்
கொஞ்சம் நஞ்சத்தையும் விற்றுவிட்டால் 2G முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பது
தான் அரசின் முடிவு.
இப்படி முதலில்
வருவோர்க்கு முதலில் ஒதுக்கிய வகையில் முதல் இரண்டு நாட்களிலேயே அரசிடம் மிச்சமிருந்த
மொத்த 2G ஸ்பெக்டிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கடைசி தேதி என்பதற்கு
எந்த மதிப்பும் இல்லை. கடைசி தேதி எதுவாக இருந்தாலும், எத்தனை பேர் விண்ணப்பித்தாலும்
அவர்களுக்கு 2G ஸ்பெக்டிரம் ஒதுக்க முடியாது. காரணம் முதல் இரு நாட்களிலேயே முடிந்துவிட்டது.
எனவே கடைசி நாளை மாற்றியதால் எந்த முறைகேடும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
2G லைசன்ஸ் வாங்கிய
நிறுவனங்கள் லைசன்ஸ் விலையை விட மிக அதிகமான தொகைக்கு தங்கள் நிறுவன பங்குகளை விற்றிருக்கின்றனவே.
அப்படியென்றால் 2G லைசன்ஸின் விலை அதிகம் தானே?
முதலில் ஒரு விஷயத்தை
கவனிக்க வேண்டும். நிறுவனங்கள் லைசன்ஸை விற்கவில்லை. அதை விற்கவும் முடியாது. அவர்கள்
விற்றது அவர்களது நிறுவனத்தின் பங்குகளை தான். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
2G லைசன்ஸ் வாங்கிய
நிறுவனம், 2G வசதியை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அதிக அளவில்
முதலீடு செய்யவேண்டி இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் டவர்கள், டிரான்ஸ்மிஷன்
செண்டர்கள் என பல கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டி இருக்கிறது. அதற்கான நிதியை பல வகைகளில்
திரட்டுகிறார்கள். அதில் ஒரு வழிமுறை தான் தங்கள் நிறுவனத்தின் பங்கு விற்பனை என்பதும்.
2G லைசன்ஸ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கென்று ஒரு
மதிப்பு விலை இருக்கிறது. அப்படியான தங்கள் நிறுவன பங்குகளை விற்று முதலீட்டுக்கான
நிதியை திரட்டுகிறார்கள்.
2G லைசன்ஸ் மதிப்பு
என்பது மிக சிறிய தொகை. ஆனால் அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைபு வசதிகள், அதற்கான
நிதி ஆதாரங்களின் தேவை என்பதெல்லாம் மிக மிக அதிகமானது. எனவே அதை தங்களின் பங்குகள்
மூலம் (நிறுவனத்தை மறைமுக அடகு வைப்பதன் மூலம்) நிதி திரட்டுகிறார்கள். இதை 2G யின்
விலை என கருதுவது தவறு.
இவைபோன்ற பல கேள்விகள்
மிக மிக சிறுபிள்ளைத்தனமானதும், இயல்பற்றதாகவுமே இருக்கிறது.
இப்போது மெல்ல
விலக தொடங்கி இருக்கும் திரை, முழுமையாக விலகி, உண்மையில் 2G விஷயத்தில் யார் என்ன
செய்தார்கள் என்பதெல்லாம் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் இப்போது புரிகிறது.