Monday, April 15, 2013

கருணை மனு - மீண்டும் முதலிலிருந்து?



ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்கு தண்டனை கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதே போன்ற மற்றொரு வழக்கின் முடிவுக்காக காத்திருந்த(?) நிலையில், அந்த வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கிலும் அதே முறை பின்பற்றப்படும் என தெரிகிறது.

உச்சநீதிமன்றம் கருணை மனுவை நிராகரித்ததோடு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கும் செல்லாததாகிவிட்டது. என்னை பொறுத்தவரை, ஆளுநர், உச்சநீதிமன்றம், குடியரசு தலைவர் ஆகியோர் நிராகரித்தபின்னர், மறு ஆய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதே சரியல்ல. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் குடியரசு தலைவர் தான் இறுதி அதிகாரம் மிக்கவர். அதனை எதிர்த்து மறு ஆய்வு மனு என்பது உரிய காரணங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதே சரியல்ல.

இப்போது எல்லா முறையீடுகளும் முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் அந்த மூவருக்கும் தண்டனையை குறைக்க வலியுறுத்துவதும், தமிழக அரசு அவசரமாக அமைச்சரவையை கூட்டி தீர்மானமியற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்துவதுமாக முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. நீண்ட அரசியல் / அரசு அனுபவமுள்ள கலைஞரே இப்படியான கோரிக்கையை வைத்திருப்பது தான் ஆச்சரியம்.

இத்தனை நீண்டகால தண்டனையா என இப்போது கண்ணீர் உகுக்கும் கலைஞர் அவர்களுக்கே நன்றாக தெரியும், அவர்களுக்கு அளிக்கப்பட்டது தண்டனையே அல்ல என்பது. சட்டம் அவர்களுக்கான தண்டனையை உறுதி செய்தபோதும், இந்திய சட்டத்தின் படி, அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டும், அவர்கள் தரப்பில் ஏதேனும் ஒரு துளி நியாயமேனும் இருந்தால் அதை நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் பொருட்டும், சட்டவழியான மேல்முறையீட்டுக்கான அனைத்து வாய்ப்புக்களையும் வழங்கி அவற்றின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்த காலகட்டம் தான் இத்தனை நாள். இதற்கிடையில் படித்து பட்டம் பெற விரும்பிய பேரறிவாளன் படித்து பட்டமும் பெற்றுவிட்டார். முருகன் – நளினி திருமணம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சிறையிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இப்படியான வசதிகள் எந்த தண்டனை கைதிகளுக்கும் செய்துகொடுக்கப்பட்டதில்லை.

உண்மையில், அவர்கள் தண்டனை கைதிகளேயான போதும், அவர்களுக்கு அப்படி எந்த தண்டனையும் தரப்படவில்லை. மக்களிடமிருந்து அவர்களையும், அவர்களிடமிருந்து மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் வேலூர் சிறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தார்களேயன்றி, தண்டனை அனுபவித்தார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

இந்தியாவின் மேன்மை தாங்கிய சட்ட நடைமுறை, அவர்கள் தரப்பில் ஏதேனும் நியாயம் இருக்குமா என தேடிய தேடல்கள், அதற்காக வழங்கப்பட்ட வாய்ப்புக்கள், அதன் நடைமுறை காலம் போன்றவை தான் இத்தனை நாளும் அவர்கள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்ததன் காரணி. இப்போது எல்லா நிலையிலும் அவர்களது குற்றமும் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டு உள்ள நிலையில், நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்கிற மாயக்கதை சொல்லி விடுவிக்க வேண்டும் கலைஞரின் அறிக்கை எந்த ரீதியிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நளினியின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க இதே கலைஞர் தான் முடிவெடுத்து அறிவித்தார். அப்போதே பிறரது கருணை மனுக்களை சட்டப்படி மட்டுமே கையாள்வதாக சொல்லியிருந்தார். இப்போது அவரே அதை மாற்றி சொல்வதற்கு காரணம், இப்போது அவர் அரசாளவில்லை என்பதும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் அணி அமைக்கும் யோசனையில் இருப்பதும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

கலைஞர் அவர்களது வேண்டுகோளில், “ஏற்கனவே நீண்டகாலம் தண்டனையை அனுபவித்து இருப்பதால், இப்போது தூக்கு தண்டனை அளிப்பது என்பது இரட்டை தண்டனையாக அமைந்துவிடும்” என்று வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனை இத்தனை நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பதும், அவர்கள் சட்ட ரீதியான நியாயமான பரிகாரத்தை தேடிக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டதும் தான் உண்மை. இப்போது சட்டத்தின் எல்லா நிலையிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும், முதலிலிருந்து ஆளுநரிடம் கருணை மனு அளிப்பதில் தொடங்குவது சரியான நடைமுறை அல்ல.

பொதுவாகவே தமிழகத்தில் இன உணர்வு என்கிற பெயரில் இயக்க உணர்வே முன்வைக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவர். இந்த மூவர் விஷயத்திலும் அவ்வாறே நடந்து வருகிறது.

இந்த மூவரின் தண்டனையை குறைக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் காரணங்களுள் மற்றொன்று, இவர்கள் தமிழர்கள் என்பது. அப்படியானால், சிறையில் தண்டனை அல்லாமல் விசாரணை கைதிகளாக அடைபட்டுக்கிறக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய இவர்கள் என்றேனும் கோரிக்கை வைத்திருக்கிறார்களா என்றால், அப்படி எதுவும் இல்லை. எனவே தமிழர்கள் என்பதற்காக தண்டனை குறைப்பு என்கிற வாதம் அடிபட்டு போய்விடுகிறது.

தமிழின உணர்வின் அடிப்படையில் இந்த அப்பாவிகளுக்காக குரல்கொடுக்கிறோம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இவர்கள் உதவியால் நடந்தேறிய இந்திய வரலாற்றின் மிகக்கொடூரமான தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தது ராஜீவ் மட்டுமல்ல, பதினைந்து அப்பாவிகளும் தான். ( பி.கே.குப்தா, இக்பால், ராஜகுரு, எட்வார்ட், ஜோசஃப் எத்திராஜ், சுந்தரராஜு, ரவி, தர்மன், சந்திரா, லதா கண்ணன், கோகிலவாணி, சாந்தனி, டேரி பீட்டர், சரோஜா தேவி, முனுசாமி.) அதிலும் ஒன்பது பேர் தமிழர்கள். அதில் ஒருவர் சிறுமி கோகிலவாணி.

தமிழினத்துக்காக ஆதரவு குரல் கொடுப்பதாக சொல்லும் எவரும் இந்த அப்பாவி தமிழர்களுக்காக எந்த குரலும் ஆதரவும் கொடுத்ததாக நினைவில்லை. உண்மையில் தமிழுணர்வாளர்கள், எங்கள் அப்பாவி தமிழ் மக்களை கொன்றுவிட்டீர்களே என கோபம் வந்திருக்கவேண்டும். ஆனால், வரவில்லை!

ஆழ்ந்து சிந்தித்து பார்க்கும் எவருக்கும், இந்த ஆதரவெல்லாம் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது என்கிற அக்கறையின் வெளிப்பாடு என்பது புரியும். ஆனால் இயக்க ஆதரவு என வெளிப்படையாக சொல்ல முடியாத சூழலால் அதற்கு இன உணர்வு சாயம் பூசப்பட்டு இருக்கிறது.

இப்போதைய சூழலில், அரசியல் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு இருப்பதால், நாம் மெல்ல ஒதுங்கி நின்று சட்டம் வெல்கிறதா, பலியான அப்பாவி தமிழக தமிழர்களுக்கான நீதி வெல்கிறதா, அரசியல் அழுத்தம் வெல்கிறதா என்பதை கவனிப்போம். சாமானியனரான நம்மால் அதை தானே செய்ய முடியும்??

Printfriendly