Saturday, August 24, 2013

இந்திய பொருளாதார நெருக்கடி – பாகம் 1

நேற்றைய தினம் இந்தியா முழுக்க பரபரப்பாக்கிய ஒரு செய்தி, இந்திய வங்கிகளின் வாராக்கடன் (NPA - Non-Performing Asset) 1.76 லட்சம் கோடி என்பது. இந்த 1.76 லட்சம் கோடிங்கறது ஆடிட்டருங்களுக்கு ரொம்ப பிடிச்ச தொகை போல இருக்கு. 2ஜி ஊழலுக்கும் அதே அமௌண்ட்டு, நிலக்கரி ஊழலுக்கும் கிட்டத்தட்ட அதே அமௌண்ட்டு, இப்போ வாரா கடனுக்கும். சரி, அதை விடுங்க. நாம விஷயத்துக்கு வரலாம்.


இந்திய பொருளாதாரம் மிக பெரிய சரிவை நோக்கி போயிட்டு இருக்கிறது நமக்கெல்லாம் தெரியும். டாலருக்கு எதிரா இந்திய ரூபாய் 65ங்கற நிலைக்கு போயிருச்சு. தங்கம் பவுனுக்கு 24,000 ரூபாயை தாண்டிடுச்சு. பங்கு சந்தையில் ஒரே நாளில் 2.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. இப்படியான செய்திகள் நமக்கு சொல்ல வர்றது என்னன்னா, இந்திய பொருளாதார மந்த நிலைங்கறதில் (Economic Recession) இருந்து பொருளாதார நெருக்கடியை (Economic Emergency) நோக்கி போயிட்டிருக்குங்கறது தான். ஆனா இதில் பயப்படுற அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏன்னா, இது நஷ்டம் இல்லை. வரவேண்டிய தொகை வராம இருக்கிறது, உற்பத்தி குறைப்பு, அபரிமிதமான இறக்குமதி, வரி ஏய்ப்பு (Tax Evasion) போன்ற காரணிகளால தான் இந்த நிலை. இதை ரொம்ப சுலபமா சீர் செஞ்சிட முடியும். ஆனா அதுக்கு உறுதியும் தொலைநோக்கும் கொண்ட ஒரு திறமையான அரசாங்கம் வேணும். அதுவும் இருக்கு. ஆனா செயல்பட முடியாம அதை ஏதோ ஒண்ணு கட்டி போடுது. அந்த ஏதோ ஒண்ணு தான் இப்போ பிரச்சனை.

உலகம் முழுக்க பொருளாதார மந்தநிலை இருந்தப்ப கூட நிமிர்ந்து நின்ன பொருளாதாரத்துக்கு சொந்தக்காரங்க நாம. இப்பவும் அந்த திறன் இருக்கு. அதுக்கான காரணங்களை சுருக்கமா பார்க்கலாம்.

கரண்ட் டிஃபிசிட் (Current Deficit):

இந்திய பொருட்களை வாங்காம, இறக்குமதி பொருட்கள் மீதும், வெளிநாட்டு உதிரிபாகங்களை வெச்சு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுற பொருட்கள் மீதும் நமக்கு இப்போ அபரிமிதமான ஆர்வம் வந்திருக்குது. சாதாரண பேனா தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, போன், அட நாம போடுற ஷூ, ஷாம்பூ வரைக்கும் வெளிநாட்டு மோகம் பிடிச்சு ஆட்டுறதால் அந்த பொருட்களை அதிக விலை கொடுத்தாவது இறக்குமதி செய்யுறோம். அதே சமயத்தில் இந்திய பொருட்களின் உற்பத்தி வெகுவா குறைஞ்சிருச்சு. வேலை நேரத்தில் முழு திறனோடு உற்பத்தி செய்யாம இருக்கிறது (பாதி நேரம் சோஷியல் நெட்வொர்க்கிலேயே போயிருது பாஸ். அப்புறம் எங்கே வேலை செய்யுறது?), தரமற்ற உற்பத்தி போன்ற காரணங்களால் பொருட்களின் உற்பத்தி விலை கூடி, இந்திய பொருட்களுக்கான சந்தை குறைஞ்சிட்டு வருது. யாரும் நம்ம பொருட்களை விரும்பலை. நாமளே விரும்பலை அப்புறம் தானே வெளிநாட்டுக்காரன்?

இதன் ரிசல்ட் என்னன்னா, இறக்குமதி மதிப்பு அதிகம். ஏற்றுமதி மதிப்பு குறைவு. இது ரெண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை தான் ‘கரண்ட் டிஃபிசிட்’ ன்னு சொல்லுவாங்க. இந்த வித்தியாசம் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு டாலர் தேவையும் தட்டுப்பாடும் அதிகரிக்குது. அதாவது அன்னிய செலாவணி கையிருப்பு குறையுது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைஞ்சிருச்சுன்னா, ரூபாயின் மதிப்பும் குறைய தொடங்கும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP – Gross Domestic Production Value), அன்னிய செலாவணி கையிருப்பு, தங்கத்தின் கையிருப்பு, கரண்ட் டிஃபிசிட்டின் அளவு இதெல்லாம் வெச்சு தான் மதிப்பிடுறாங்க.

தங்கம் இறக்குமதி:

சமீப காலமா திடீர் திடீர்ன்னு நிறைய நகைக்கடைகள் முளைச்சிட்டு வருது. இந்திய மக்களுக்கும் தங்கம் வாங்கும் ஆசை அதிகரிச்சிட்டு வருது. 1991-ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் பலனா இன்னைக்கு நிறைய தொழில் வாய்ப்புக்களும் கைநிறைய சம்பளமும் எல்லோருக்கும் கிடைக்க தொடங்கிருச்சு. அதனால் வீடு, வண்டின்னு வாங்கி போட்டு முடிச்ச்வங்க அடுத்ததா தங்கத்தை வாங்கி சேமிக்க ஆரம்பிச்சாங்க. அதோட இப்போதைய ரிசல்ட், அதிகமான நகை கடைகள் தோன்றி இருக்கு. அது யாருடைய பினாமிங்கற சர்வதேச அரசியல் விளையாட்டுக்குள்ளே எல்லாம் போக விரும்பலை. ஆனா இந்த அதிகப்படியான நகை கடைகள் மிக மிக அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செஞ்சு ஒவ்வொரு கடையிலும் டன் கணக்கில் ஸ்டாக் வெச்சிருக்காங்க. அதனால் தங்கம் இறக்குமதி அளவு அதிகரிச்சிருக்கு. ஆனா இங்கிருந்து ஏற்றுமதி குறைஞ்சிருக்கு. இது தங்க கையிருப்புக்கான கடனை அதிகரிச்சதால சமீபத்தில் இந்திய அரசாங்கம் தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிச்சதோட மட்டுமில்லாம, மக்களையும், தங்கம் வாங்காதீங்கன்னு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.

வரி ஏய்ப்பு (Tax Evasion) :

பில் இல்லாம வியாபாரம் பண்றது, குறிப்பா பெரும்பான்மை வியாபாரத்தில் ஈடுபடுற மளிகை கடைகள், கமிஷன் ஏஜெண்டு வகையறாக்கள், குறைந்த வரிக்காக குறைத்து மதிப்பிட்டு பதிவு செய்யப்படும் சொத்துக்கள், வருமான வரியை குறைக்க கணக்கில் காட்டப்படாத வருமானங்கள், விதிக்கப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரியை கூட ஒழுங்காக கட்டாத மக்கள்ன்னு வரி ஏய்ப்பு பல பல வகையில் தொடர்ந்து நடந்துட்டு தான் இருக்கு. இதன் விளைவு என்னன்னா, இந்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரி வருவாய் கிடைக்கலை. அதனால் திட்டங்களை தீட்ட பிற வரிகளை உயர்த்தியாகவேண்டிய நிலை. இது விலைவாசி உயர்வில் கொண்டு போய் விட்டுடுது. நாம ஓரிடத்தில் செய்யும் வரி ஏய்ப்பை சரிக்கட்ட இன்னொரு இடத்தில் கூடுதல் வரி செலுத்தவேண்டிய நிலை ஏற்படுது. இதனால் வரி சமநிலை இந்தியாவில் இல்லாம போயிருச்சு (Tax Imbalance). வரி சீர்திருத்தத்துக்காகவும், வரி வசூலுக்காகவும், நிறைய குழுக்கள் நியமிச்சு அதன் பரிந்துரைகள் கிடைச்சாலும், மக்கள் அதை ஏத்துக்கமாட்டாங்கன்ங்கறாதால் அதையெல்லாம் அமல் படுத்தாம இருக்கு அரசாங்கம். இன்னொரு பக்கம் ஹசன் அலி மாதிரியானவங்க கோடி கணக்கில் வரி பாக்கி வெச்சிருந்தாலும், அவங்ககிட்டேயும் வசூலிக்க தயங்கறாங்க. டெண்டுல்கர், சினிமா துறை மாதிரி நிறைய இடங்களில் வரி சலுகையும் கொடுத்து இருக்கிற வருவாயையும் குறைச்சிக்கிட்டாங்க. எல்லாம் சேர்ந்து நம்ம தலையில் தான் வந்து வீழுது.

வாரா கடன் (NPA – Non Performing Asset) :

வங்கிகள் கொடுக்கிற கடன்களை திருப்பி செலுத்தாதவர்களாள் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கிற வாராக்கடன் ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட ரூ.1.05 லட்சம் கோடி ரூபாய் மொத்தமா ஒரு 30 நிறுவனங்கள் கிட்டே இருந்து மட்டும் வரணும். பாக்கி இருக்கிறது சில்லறை கடன்கள் (தனிநபர் கடன், வாகன கடன், வீட்டு கடன், விவசாய கடன், கல்வி கடன், தொழில் முதலீட்டு கடன் இத்யாதி இத்யாதி)

சில்லறை கடன்களை பொறுத்தவரை, கடன்களை கட்ட முடியாத சூழல் தான் காரணம். 2008-09 ல் ஏற்பட்ட உலக பொருளாதார முடக்கம் எல்லாரையும் பதம் பார்த்திருச்சு. அதனால் பலர் தொழிற்சாலைகளை மூடிட்டாங்க, கடன்களை கட்ட முடியாம சிலர் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. இப்படியான நிலை ஒருபக்கம்னா, கட்ட வாய்ப்பும் வசதியும் இருந்தும் கட்டாம இருக்கிறவங்க சிலர். இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெளிவா உணர்ந்தாலும், பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாதுன்னு கடுமையான நடவடிகை எடுக்கலை. அதில் ஒரு மனிதாபிமான நியாயம் இருக்குதுன்னு ஒத்துக்கலாம்.

பெரும் நிறுவனங்களின் வாரா கடனான 1.05 லட்சம் கோடியை வசூலிக்க அரசு காட்டுற தயக்கம் தான் யோசிக்க வைக்குது. நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும்போது அதை விட அதிக மதிப்புக்கு ஈடான சொத்துக்களையோ உத்தரவதத்தையோ வங்கிகள் வாங்கிக்கொள்ளும். வாரா கடனை அதன் மூலமா ஈடு செஞ்சுக்கலாம். ஆனா எந்த வங்கியும் அதை செய்யலை. சிறு கடன்களை போல, கட்ட முடியாத சூழலில் அவர்கள் இல்லை. கட்ட மனமில்லாத நிலையில் தான் இருக்காங்க.


உதாரணத்துக்கு விஜய் மல்லையாவை எடுத்துக்கலாம். அவருடைய கிங்ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டம் ஆனதால் அந்த நிறுவனத்துக்காக வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன் வாரா கடன் ஆகிருச்சு. பொருளாதார கணக்கு படி அது சரி தான். ஆனா, வங்கிகள் அடுத்து செஞ்சது தான் ஷாக். மீண்டும், நிதி சீர்திருத்தம்ங்கற பேரில் ஏற்கனவே இருந்த வாரா கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செஞ்ச்தோட கூடுதலா கடன் கொடுத்துச்சு. அதுவும் வரலை. சரி, அந்த கடனை அடைக்க முடியாத நிலையில் மல்லையா இருக்கிறாரான்னா, அப்படி இல்லை. அவருடைய யூ.பி குரூப்பின் (UB Group – Union Breweries, Distilleries, Union Batteries etc.,) பிற தொழில்கள் மூலம் அபரிமிதமான லாபம் கிடைச்சிருக்குன்னு அவரே அரசாங்கத்துக்கு அறிக்கை கொடுத்திருக்காரு. கிங்ஃபிஷரின் நஷ்டத்துக்கு அவர் தான் கடனை திருப்பி அடைக்கணும். பிற தொழில்களின் லாபத்துக்கும் அவர் தான் வரி கட்டணும். ஆனா கிங்ஃபிஷர் கடன் பார்வையில் மல்லையா கடனை கட்ட வழியில்லாதவர். மற்ற தொழில்களின் பார்வையில் அவர் அபரிமிதமான வரி செலுத்துபவர். இப்போ நிலுவையில் இருக்கும் சட்டங்களால், ஒரே நபரின் ஒரு நஷ்டத்துக்கு ஈடாக அதே நபரின் பிற வருமானத்திலிருந்து பொறுப்பு கேட்க முடியாது. அவரா முன்வந்து கட்டினால் தான் உண்டு. இந்த இடத்தில் தான் நிதிக்கொள்கையில் சீர்திருத்தம் தேவை படுது. இதே நிலை தான் அந்த 30 நிறுவனங்களுக்கும்.

அரசு அந்த 30 நிறுவனங்களின் பெயரை கூட வெளியிட மறுக்குது. அதே சமயம் தேனியில் கல்வி கடனின் இரண்டு டியூவை கட்டாத மாணவியின் ஃபோட்டோவை நடுரோட்டில் விளம்பரமா வெச்சாங்க. அரசு பாரபட்சம் பார்க்காமல் நாட்டு நலன் கருதி அந்த 30 நிறுவனங்களின் வாரா கடனையும் வசூலித்தாலே பாதி பொருளாதார பிரச்சனை தீரும். கருப்பு பணம், வரி ஏய்ப்பு ஆகியவையும் கட்டுப்படுத்தினால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பழையபடி 45 ரூபாய்க்கு கீழே வந்துவிட நிறைய வாய்ப்பு இருக்கு.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த கணக்கீடு (1.76 லட்சம் கோடி) சரிதானா? அல்லது 2ஜியில் சொதப்பின மாதிரி உல்லுலாயி கணக்கான்னு ஒரு கேள்வி இருக்கு இல்லே? உல்லுல்லாயி மாதிரி தான் இருக்கு. அடுத்த பதிவு வரைக்கும் வெயிட் பண்ணுங்க… விரிவா விளக்குறேன். 

2 comments:

  1. //2ஜியில் சொதப்பின மாதிரி//2ஜி யில் சொதப்பினார்களா? சொல்லவேயில்ல!
    //இதில் கிட்டத்தட்ட ரூ.1.05 லட்சம் கோடி ரூபாய் மொத்தமா ஒரு 30 நிறுவனங்கள் கிட்டே இருந்து மட்டும் வரணும்.//
    //அரசு அந்த 30 நிறுவனங்களின் பெயரை கூட வெளியிட மறுக்குது//
    //மக்கள் பாதிக்கப்படக்கூடாதுன்னு கடுமையான நடவடிகை எடுக்கலை. அதில் ஒரு மனிதாபிமான நியாயம் இருக்குதுன்னு ஒத்துக்கலாம்.//
    // தேனியில் கல்வி கடனின் இரண்டு டியூவை கட்டாத மாணவியின் ஃபோட்டோவை நடுரோட்டில் விளம்பரமா வெச்சாங்க.//

    //அதுக்கு உறுதியும் தொலைநோக்கும் கொண்ட ஒரு திறமையான அரசாங்கம் வேணும். அதுவும் இருக்கு.//
    சப்பைக்கட்டுகளின் மொத்த வடிவம் உங்கள் கட்டுரை. மிக மேம்போக்காக எழுதியிருக்கிறீர்கள். பிரச்சனையை அரசு சார்பாக அணுகவேண்டும் என்ற முடிவோடு எழுதிருப்பது போல தோன்றுகிறது! நடத்துங்கள்!
    ஒரே ஒரு கேள்வி. பத்துவருடமாக அயல்நாட்டினர் முதலீடு செய்த பணத்தில் எந்த உள்கட்டமைப்பை பெருக்கியிருக்கிறார்கள் ? இப்போது முதலீடு வந்து குவிந்தால் என்ன கழட்டிவிடுவார்கள்? இத்தனை வருடம் வந்த முதலீட்டை வைத்து ஏற்றுமதியை பெருக்கியிருந்தால் பிரச்சனையை வந்திருக்காது.
    பிரச்சனையின் மூலம் அமெரிக்காவில் Quantitative Easing ஐ நிறுத்தப்போகிறார்கள். அதனால் இன்வெஸ்ட் பண்ண இருக்கும் பணம் குறைந்த வட்டியில் கிடைக்காது. இருக்கும் பணத்தை மேலும் இன்வெஸ்ட் பண்ணும் அளவு இந்தியா அட்ரக்டிவ் ஆக இல்லை. அதனால் தான் கடந்த மூன்று மாதங்களில் ஐம்பதாயிரம் கோடி அளவு ஸ்டாக் மார்க்கெட் மற்றும் டெப்ட் மார்க்கெட்டில் இருந்து திரும்ப எடுத்திருக்கிறார்கள். இந்தியா அட்ரக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஆக இல்லாததற்கு மன்மோகன், ப.சி, மாண்டேக் , சோனியா போன்றவர்கள் பொறுப்பு. இவர்கள் போனால் நல்லது நடக்கலாம்!

    ReplyDelete
  2. சந்தேகம் 1:அந்நிய முதலீடு - இறக்குமதி குறைப்பு இவை எப்படி ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன ?(கட்டுரை படித்தேன் புரியவில்லை)

    சந்தேகம் 2:அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது யார்?அவற்றின் வரவுசெலவு விபரங்களை அறிந்துகொள்ள முடியுமா?

    சந்தேகம் 3:எந்தெந்த தொழில்களில் அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது ?அவற்றின் பெயர் பட்டியல்,அவற்றின் லாப நஷ்ட விபரம் அறிந்து கொள்ள முடியுமா?

    சந்தேகம் 3:அதிக அளவு முதலீடு செய்த நாடு எது?முதலீடு செய்துள்ள மற்ற நாடுகள் எவை?

    சந்தேகம் 4:இந்தியப் பொருளாதாரத்தின் மேல் அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?இவற்றை சரி செய்ய பொருளாதார வல்லுனர்கள் பொது மக்களுக்கு(மக்களால் செய்யக்கூடிய ) எந்த வழியும் சொல்லவில்லை ஏன்?

    சந்தேகம் 5:மக்களை தங்கம் வாங்க வேண்டாம் யென்று சொல்லிவிட்டு புற்றீசல் போல் கடைகளை ஏன் அனுமதிக்கிறார்கள்?ஓராண்டிற்காவது தங்க இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால் என்ன ?(விளைவு என்ன ஆகும்?)

    விடை சொல்லுங்களேன் ?(கொஞ்சம் தாங்கி புடிங்க ... அப்பிடியே கிரு கிருன்னு வருது சார்)

    -ஒரு நடுத்தர வர்க அப்பாவி இந்தியன்

    ReplyDelete

Printfriendly