நேற்று நடந்த பாஜக காரிய கமிட்டி கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரு வேறு கருத்துக்கள் நாடெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக வரக்கூடாது என ஒரு சாராரும், அவர் தான் வரவேண்டும் என ஒரு சாராரும் கடுமையாக விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
நேற்று மாலை மோடி
அவர்கள், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மகிழ்ச்சியையும் தனது
பொறுப்பையும் பற்றி மிக சிறந்த ஒரு உரை ஆற்றினார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால்,
நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளால் மிக அருமையானதொரு உரை அது. நான் கேட்ட வரையில்
மோடியின் மிக சிறந்த பேச்சு அது தான்.
மோடி மிக சிறந்த
நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. குஜராத் மாநிலத்தின் இப்போதைய வளர்ச்சி,
உள்கட்டமைப்பு, சீரிய நிர்வாகம் இதனை எல்லாம் நான் சூரத், வதோதரா, கச், அஹமதாபாத் போன்ற
நகரங்களுக்கு சென்றபோதெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள எனது நண்பர்கள் பலரும்
மோடியின் அருமைகளை விளக்கமாக எடுத்து சொன்னார்கள். இன்றைக்கு தொழில், கல்வி, சுகாதாரம்,
போக்குவரத்து, உள்கட்டமைப்பு என பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருப்பதற்கு மோடியின்
செயல்களும் திட்டங்களும் தான் அடிப்படை காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து
அடுத்தடுத்து முதல்வராக அவர் நீடிப்பதன் காரணமும் அது தான். பரவலாக மாநிலம் முழுமையும்
மோடி குறித்தான மிக நல்ல அபிப்பிராயமே நிலவுவதை நான் கண்டிருக்கிறேன்.
அவர் மீது சொல்லப்படும்
குற்றச்சாட்டு என பார்த்தால் வகுப்பு வாதம், கோத்ரா கலவரம், கலவரத்தை ஊக்குவித்தது,
இனப்படுகொலைக்கு துணை நின்றது போன்றவையாக மட்டும் தான் இருக்கமுடியும். அதுவும் இன்னமும்
சட்டரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு ஊகம் தான். எப்படி பார்த்தாலும் குஜராத்தை பொறுத்தவரை
மோடி தான் ஹீரோ. அதில் எந்த சந்தேகமுமில்லை.
ஆனால் பிரதமர்
பதவி வேட்பாளர் என வரும்பொழுது நான் குஜராத் முதலவராக மட்டுமே மோடியை பார்க்க விரும்பவில்லை.
பிரதமர் பதவி என்பது நாடு முழுமைக்குமான பொதுவான பதவி. மேலும், அவர் முன் நிறுத்தப்படுவது
பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளராக.
இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.
இதை இரண்டு விதமாக அலசுவது நல்லது. ஒன்று, பாஜக என்கிற கட்சிக்கு இந்தியாவில் இப்போதைய நிலை என்ன என்பது. இரண்டு, மோடி என்கிற தலைவருக்கு அவரது சொந்த கட்சியான பாஜகவிலும், நாடு முழுமையுமுள்ள பொதுமக்களிடமும் உள்ள பிம்பம், செல்வாக்கு ஆகியவை என்ன என்பது. இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் தான் நான் மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்படுவதை கவனிக்க விரும்புகிறேன்.
பாரதிய ஜனதா கட்சி
என்பது அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் என்பது எல்லோருக்கும்
தெரியும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதுவும் எல்லோருக்கும்
தெரியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் யாரும் ஒரு மதம் சார்ந்த கொள்கையினை
முன்னெடுத்து அரசியல் செய்வதை விரும்பமாட்டார்கள்.
இன்றைய தேதியில்
பாஜகவின் வலுவான செல்வாக்கு என்பது ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியபிரதேசம்
ஆகிய மாநிலங்கள் என்பதோடு, ஓரளவு செல்வாக்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்டு, பீஹார்,
ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆகிய மாநிலங்களிலும் இருக்கிறது. இதை சற்று பரவலாக பார்த்தால்,
வட இந்தியாவின் ஒரு பகுதி, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மட்டும்
தான் பாஜகவுக்கு ஆதரவுள்ளது என்பது புரியும். தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே
பாஜகவுக்கு ஆதரவு.
வடகிழக்கு மாநிலங்கள்,
கிழக்கு மாநிலங்கள், தெற்கு இந்தியா, உச்ச வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜகவுக்கு
என எந்த செல்வாக்கும் இல்லை. கட்சியை இந்த பகுதிகளில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியையும்
இதுவரை பாஜக எடுக்கவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஏ.பி.வி.பி, சங் பரிவார் போன்றவை
அதிக பலத்துடன் உள்ள மேற்கு & மத்திய இந்தியாவை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல்
செய்துவந்த கட்சி தான் பாஜக. எனவே மிக பெரும்பான்மையான நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய
பகுதிகளில் பா.ஜ.க செல்வாக்காக இல்லை என்பது தெளிவாக விளங்கும்.
வட இந்தியாவை எடுத்துக்கொண்டால்,
உத்தரபிரதேசம் & உத்தரகாண்டு தான் இந்தியாவின் மிக அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை
கொண்ட பகுதி. பஹுஜன் சமாஜ் பார்ட்டி, சமாஜ்வாடி பார்ட்டி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக
காங்கிரஸ் தான் இந்த பகுதியில் செல்வாக்காக உள்ளது. பீஹாரில் நிதிஷ்குமாரும் லாலுவும் கோலோச்சுகிறார்கள். ஒடிஷாவில்
பிஜு ஜனதா தளமும், பஞ்சாபில் அகாலிதளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்
& கம்யூனிஸ்டு கட்சிகளும், அசாமில் அசாம் கன பரிஷத்தும், மிக அதிக செல்வாக்குடன்
இருக்கின்றனர். இந்த அத்தனை மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் தான் இப்போதும்
இருக்கிறது.
தென் இந்தியாவை
எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக & திமுக, கேரளாவில்
கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக
காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு
அடிப்படையில் அது இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறது.
எனவே சுருக்கமாக
பார்த்தால் நாடு முழுதும் பரவலாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில கட்சிகளின் கையே
ஓங்கி இருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட ‘எல்லா’ மாநிலங்களிலும்
கணிசமான ஓட்டுவங்கி நிரந்தரமாக இருக்கிறது.
ஆட்சி பெரும்பான்மையான 272 எம்.பிக்களை வென்றெடுப்பது தான் பிரதமர் பதவிக்கான அடிப்படை தகுதி என எடுத்துக்கொண்டால், என்னை பொறுத்தவரை காங்கிரஸ் அதை எளிதாக எட்டிப்பிடித்துவிடும் என்றே நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் கொண்டுவந்த அருமையான திட்டங்களை விரிவாகவும் முறையாகவும் எடுத்து சொன்னாலே போது. பயனை அனுபவித்தவர்கள் திட்டத்தின் நன்மை உணர்ந்து எளிதாக காங்கிரஸை ஆதரித்துவிடுவார்கள்.
காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் அள்ளிக்கொள்வது போக, மீதமிருக்கும் தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கக்கூடும். எனினும், பாஜக மிகுந்த செல்வாக்காக இருக்கும் மேற்கு, மத்திய இந்தியாவில் கணிசமான தொகுதிகளை வென்றெடுப்பதன் மூலம், எதிர்கட்சி வரிசையை தக்கவைத்துக்கொள்வதில் ஒன்றும் சிரமமிருக்காது என்றே நினைக்கிறேன்.
எனது இத்தனை கணக்கும்,
மூன்றாவது அணி என ஒன்று அமையாத நிலையில் தான். ஒருவேளை, மூன்றாவது அணி அமையுமானால்,
மாநில கட்சிகளின் தனி செல்வாக்கு ஓங்குமானால், எதிர்கட்சி வரிசை மூன்றாம் அணிக்கு கிடைக்க
வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் மீதான அதிருப்தியை
சரியாக ஊதி பெரிதாக்க முடிந்து, மூன்றாவது அணியில் ஒற்றுமையும் இருந்து, பிரதமர் பதவிக்காக
ஏகமனதாக ஒரு நபர் முன்னிறுத்தப்படுவாரேயானால், மூன்றாவது அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு
கூட கிட்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது அணி என நான் நினைக்கும் அணியில் நிறைய
பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சமாதானம் செய்து ஒருவர் வென்று
நிற்பது கஷ்டம் தான்.
கட்சி சார்ந்து
இது தான் பாஜகவின் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் கள நிலை.
மோடி, மிக சிறந்த
நிர்வாகி என்றாலும் கூட அவரது கட்சியிலேயே கூட அவர் 'ஏகமனதாக' வேட்பாளராக்கப்படவில்லை
என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன என்பது
உங்களுக்கு தெரியும். சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோருக்கு பிரதமர் பதவி ஆசை இருந்ததும்,
அதற்காக அணிகள் அமைத்துக்கொண்டதும் பிரசித்தமான விஷயம்.
இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.
இப்போது கூட மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தனது அதிருப்தியை அத்வானி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அத்வானி கிட்டத்தட்ட பாதி பாஜகவின் தலைவர். எனவே அவரது அதிருப்தி மோடியின் கனவுகளை தகர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ராஜ்நாத் சிங்கின் தன்னிச்சையான முடிவு தான் மோடியை முன்னிறுத்துவது என்கிற வெதும்பல் சுஷ்மா ஆதரவாளர்களுக்கும், பாதி பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரான அத்வானிக்கும் இருப்பதை கவனத்தில் கொண்டால், சொந்த கட்சியினரையே சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாத மோடியின் திறமையின்மை பளிச்சென விளங்கும்.
மோடி நிர்வாகி
என்பது ஒரு புறம். அடிப்படையில் அவரது மன ஓட்டம் என்பது வீரிய ஹிந்துத்துவாவை சார்ந்தது
என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவரது வெளியுறவு கொள்கை அவ்வளவு பாராட்ட தக்கதல்ல.
இன்றைக்கு கூட அமெரிக்கா, மோடிக்கான தனது விசா கொள்கையை உறுதி செய்திருக்கிறது. கோபம்,
பிடிவாதம், தீவிர ஹிந்துத்துவா, பின் விளைவுகள் குறித்த கவலையின்றி முடிவுகள் எடுத்து
சிக்கலாக்கி கொள்வது என சமீப காலமாக மோடியின் செயல்பாடுகள் கவலையளிக்கக்கூடியவை தான்.
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் குஜராத் உயர்நீதிமன்றம், உள்கட்டமைப்பு,
சாலைகளின் நிலை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுக்காக மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதையும்
கவனிக்கவேண்டும். சூரத், அஹமதாபாத், வதோதரா போன்ற நகரங்களை மட்டுமே காட்டி மாநிலம்
வளர்ந்துவிட்டது என விளம்பரம் செய்கிறார் என்கிற பிற கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள்
உண்மையோ என்கிற ஐயம் பரவலாக தோன்ற தொடங்கி இருக்கிறது. அவருக்கென அமைக்கப்பட்ட தனியார்
விளம்பர நிறுவனம், அவரது செல்வாக்கை உயர்த்துவதாக சொல்லி செய்யும் செய்கைகளில் உண்மையில்
அவரது செல்வாக்கு சரிந்துகொண்டு தான் வருகிறது. இந்தியாவிலேயே தனது சுய செல்வாக்கை
மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்தை நியமித்து அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும்
ஒரே தலைவர் என்கிற பெருமையும் மோடிக்கே உள்ளது!
பொதுவாக பாஜக கட்சி
தலைவர்களில் வாஜ்பாயி மிதவாதி, எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவராக இருந்தார்.
அத்வானி முன்பு பிடிவாத போக்கு கொண்டவராக விளங்கினாலும், தற்போது அவரும் மிதவாதியாகவே
மாறிவிட்டார். நாட்டு நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவரது தனிப்பட்ட வலைப்பூங்காவில்
அதிகம் காணமுடிகிறது. மோடி அப்படிப்பட்டவரல்ல. எனவே பிரதமர் பதவி என்கிற உயர் அந்தஸ்து
கிடைக்குமானால், அவரது செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. நம்மை
போன்ற பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒரு சாராருக்கே அந்த அச்சம்
இருக்கிறதை உணரமுடிகிறது.
இதெல்லாம்,
2014ம் ஆண்டு இறுதியில் முறைப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் இருக்கக்கூடிய
சூழல் தான். ஒருவேளை காங்கிரஸ் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, மூன்றாம் அணி இன்னும்
அமையவில்லை, பாஜவிலும் அதிருப்தி நிறைந்திருக்கிறது, இந்த சமயத்தில் முன்கூட்டியே பாராளுமன்ற
தேர்தலை நடத்திவிட்டால் மொத்தமாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட
சாத்தியமிருப்பதை உணர்ந்து செயல்பட்டால், எல்லா கணக்குகளும் முடிந்தது.
நாடாளுமன்ற தேர்தல்
எப்போது நடக்கும்? சொந்த கட்சியான பாஜகவின் தலைவர்களை மோடியால் சமாதானப்படுத்த முடிகிறதா?
இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் பரவலாக பாஜக பெற முடியுமா? மூன்றாவது அணி அமையுமா?
அப்படி அமைந்தால் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு
என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடையில் தான் இருக்கிறது மோடியின் பிரதமர் கனவு.
இப்போதைக்கு பிரதமர்
பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததையே மிகப்பெரிய வெற்றியாக கருதி அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும்
கொண்டாடிக்கொண்டிருக்கட்டும். அதில் எந்த சங்கடமும் யாருக்கும் இல்லை!