Wednesday, September 24, 2014

தள்ளாடும் திமுக

மீப காலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்பாடுகளை கவனித்து வரும் எவருக்கும் கவலையாக தான் இருந்திருக்கக்கூடும்.

மிக பரவலான மக்கள் பிரச்சனைகள் தலை தூக்கியபோதெல்லாம் வாளாவிருப்பதும், மக்களுக்கான போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் இருப்பதும், பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தாமல் இருப்பதுமாக தீவிர அரசியலிலிருந்து மொத்தமாக ஒதுங்கி விட்டதை போல அமைதி காக்கிறது திமுக.

அதே சமயத்தில், உட்கட்சி பூசல்களாலும், ஒத்துழைப்பின்மையாலும், உள்ளாடி அரசியல்களாலும் தினந்தோறும் சுய பரிசோதனைகளுக்கும், உட்கட்சி பஞ்சாயத்துக்களுக்கும், விளக்க அறிக்கைகளுக்கும் தங்க்களது பொன்னான நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சட்டமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு இப்போதிருந்தே மக்களிடம் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டிய திமுக, சமீபத்தில் சில மாவட்டங்க்களில் கழகத்தினருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி முடித்ததுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதிக்கிடக்கிறது.

இருக்கிற எல்லா தமிழக பிரச்சனைகளையும் வசதியாக மறந்துவிட்டு தேவையில்லாமல் டெசோ மாநாடு நடத்துவதும், சம்மந்தா சம்மந்தமில்லாமல் தமிழக தமிழர்களை வசை மாரி பொழிவதும் திமுக மீது தமிழக தமிழர்களுக்கு இருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கையையும் நசித்துவிடும் என்பதை கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் திமுக தலைமை இருப்பது கவலை அளிக்கிறது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் மொத்தமாக அடங்கி கிடக்கும் இந்த சூழலை லாவகமாக பயன்படுத்திக்கொள்ள முனையாமல், உட்கட்சி பிரச்சனைகளில் சிக்கி தவிப்பது திமுக போன்ற ஒரு கட்சிக்கு அழகல்ல.

சட்ட மன்ற தேர்தல் நெருங்குகிறது, பிரதான எதிர்கட்சி வலுவிழந்திருக்கிறது, இதர கட்சிகளும் செயலிழந்திருக்கிறது… இப்படியான சூழலை சாதகமாக்கி முன்னெடுப்பு அரசியல் செய்ய முனையாமல் திமுக இருப்பது ஏன் என்பது புரியவில்லை. ஸ்டாலின் ஆதரவாளர் எதிர்ப்பாளர் சண்டையிலேயே மொத்த சக்தியையும் செலவிட்டு கொண்டிருந்தால் தமிழகத்தில் திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை கூட பழுத்த அரசியல் தலைவரான கலைஞர் உணராமல் இருக்கமாட்டார்.

திமுக மீது இப்போதும் மக்களுக்கும் இதர அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் மதிப்பையும், மரியாதையையும், அக்கறையையும் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு வலுவான அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் இட்டால், எதிர்கால தமிழக அரசும் அரசியலும் திமுக வசமாகிவிடும்.

மிக வலுவான மரக்கலாமான திமுக, சரியான தலைமையின்றி தள்ளாடுவதை போன்ற பிரமையை திமுகவே வலிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இப்போதும் சுதாரித்து செயல்படாவிட்டால், திமுகவின் வரலாறு மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாறும் கூட மாற்றி எழுதவேண்டியதாகிவிடும்.

Printfriendly