Tuesday, January 6, 2015

ரஹ்மான்


ன் வாழ்வின் மிக அதிக நிகழ்வுகளையும் நினைவுகளையும் கொடுத்த அதே 1992 ஆம் ஆண்டு. நாங்கள் அப்போது கோவை காளப்பட்டியில் குடியிருந்தோம்.

ஷார்ப் கம்பெனி வழியாக வரும் 16B பஸ்ஸில் எப்போதும் ஒலிப்பதாக இருந்தது ரோஜா பட பாடல். வித்தியாசமான இசை நின்று கேட்கவைக்கும். ஜங்ஷன் டீக்கடை அருகில் (இப்போது ரவுண்டானா வந்தபின் அந்த கடை  இல்லை) இதற்காகவே நின்று காத்திருந்து அந்த பாடல்களை முழுமையாக கேட்டு முடிப்பேன், பஸ் மீண்டும் புறப்படும் வரை.

பலகாலமாக இரும்பு கோட்டையாக இருந்த தமிழ் திரை இசையை மொத்தமாக உடைத்து புதுப்புது வடிவங்களும் புதுப்புது குரல்களும் புதுப்புது இசையமைப்புமாய் புறப்பட்டிருந்தார் ரஹ்மான். பாட வாய்ப்பு கிடைப்பது என்பது அத்தனை எளியது அல்ல. அசோசியேஷன், மெம்பர்ஷிப், இசையமைப்பாளரிடத்தில் அறிமுகம், ரெக்கமண்டேசன் என பல விஷயங்கள் இருந்தது. இசையமைப்பாளரை தேர்ந்தெடுப்பது வேண்டுமானால் டைரக்டராகவோ தயாரிப்பாளராகவோ இருக்கலாம். ஆனால் பாடகர்களை, இசை வல்லுனர்களை தேர்ந்தெடுப்பது இசையமைப்பாளர்களே என்பதால் உள்ளே நுழைவது அவ்வளவு சுலபமில்லை. ரிஸ்க் எடுக்க பயந்த பல ஜாம்பவான்கள் பிரபலமான குரல்களை கொண்டே காலத்தை ஒட்டிக்கொண்டிருந்த கால கட்டம் அது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் ரஹ்மானின் முயற்சி வித்தியாசமானதாக தெரியும்.

திரை இசை என்பது ஒரு கூட்டு முயற்சி. என்றாலும் மொத்த லகானும் இசையமைப்பாளர்கள் கையில் தான். பாடல்கள் வெற்றிபெறாவிட்டால் மொத்த சுமையும் இசையமைப்பாளர்களுக்கு தான். எனவே புதிய முயற்சிகளை அதிகம் பரீட்சித்து பார்க்காமல், அதே பாரம்பரியமான, ஒரு  பல்லவி இரண்டு சரணம் டைப்பிலான பாடல்கள், அதே ஏழு பிரபலமான பாடகர்கள் என ஒரு புரோட்டோடைப் இசையாகவே இருந்துவந்த தமிழ் திரையிசையில் ரஹ்மான் பல புதிய பரிமாணங்களை புகுத்தினார். புதிய குரல்களை பரீட்சிக்க கூட தயங்கி ஆண்டாண்டு காலமாக முடங்கி கிடந்தவர்களிடையே பரவை முனியம்மா முதல் பாம்பே ஜயஸ்ரீ வரை, தேனி குஞ்சரம்பாள் முதல் தேன்குரல் நித்யஸ்ரீ வரை அனைத்து விதமான குரலையும் பரீட்சித்து பார்த்து வெற்றி கண்டவர் ரஹ்மான். சபாக்களில் கிளாசிக் பாடிக்கொண்டிருந்த உன்னிக்கிருஷ்ணனை வெஸ்டெர்ன் கிளாசிக், குத்துப்பாட்டு என முயற்சித்ததும், கிராமிய பாடகர் புஷ்பவனம் போன்றோரை திரையிசையில் இழுத்ததுமாக பல வித்தியாச முயற்சிகள் ஒருபுறம், எல்லா படங்களிலும் ஏதேனும் ஒரு பாடலிலாவது ஏதேனும் ஒரு இசைக்கருவியின் ஒட்டுமொத்த பிரவாக பிரமாண்டத்தை புரிய வைத்த லாவகம் என விரைவில் ரஹ்மான் எனக்கு மிக பிடித்தமானவராக ஆனார்.

மேமாதம் படத்தில் மின்னலே நீ வந்ததேனடி பாடலின் இன்டர் லூடில் வரும் ஒற்றை வயலினுக்கு சில காலம் நான் அடிமையாக இருந்திருக்கிறேன். கேட்கும் போதெல்லாம் கண்ணீர் உகுத்தபடி. டூயட்டில் சாக்சபோன் தீம் மற்றுமொரு வெள்ள பிரவாகம்.



என்னை ஆச்சர்ய படுத்திய மற்றுமொரு விஷயம், மொத்தமாக இசை – ரஹ்மான் என கிரெடிட்டை அள்ளிக்கொள்ளாமல், சிறப்பு வாத்தியங்கள் இசைத்தவர்களுக்கான கிரெடிட்டையும் தனித்தனியாக அங்கீகரித்தது. வயலின் – கார்த்திக் என பல கேசட்டுகளில் பார்த்தபோது தான் அதை  புரிந்து கொண்டேன், இசை எந்த வடிவத்தில் வரவேண்டும் என ஒரு அவுட்லைன் தருவது தான் இசையமைப்பாளரின் பொறுப்பு. அதை அதே வடிவில் கொண்டுவருவது கலைஞனின் திறமை. அதை அங்கீகரித்தவர் முதலில் ரஹ்மான் தான். திரைத்துறையில் இது புதிய நடைமுறை அல்ல. கிட்டத்தட்ட டைரக்டர் நடிகர் சிஸ்டம் தான். எப்படி நடிப்பு இருக்கவேண்டும் என டைரக்டர் அவுட்லைன் தருகிறார். அதை சிறப்பாக வெளிப்படுத்துபவர் நடிகர். அதனால் நடிகருக்கு கிரெடிட் கிடைக்கிறது. அதேமாதிரி அவுட் லைன் தரும் இசையமைப்பாளர் அதை வெளிப்படுத்திய கலைஞருக்கு கிரெடிட் தரவேண்டும் என்கிற அவரது நிலைப்பாடு, அவர் மீதான மதிப்பை அதிகரிக்க செய்தது.

ஆரம்பகால இசையில் மெல்லிசையும் பியூஷனும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்த பாடல்கள் என்னை கவர்ந்தது.

ஜெண்டில்மேன், வண்டிச்சோலை சின்னராசு, மேமாதம், ரிதம், மிஸ்டர் ரோமியோ, திருடா திருடா, ரட்சகன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, லவ் பேர்ட்ஸ், காதலன், காதலர் தினம், முத்து, இந்தியன், முதல்வன், காதல் தேசம், புதிய மன்னர்கள், பவித்ரா, டூயட், உயிரே, இருவர், ஜோடி, ஜீன்ஸ் என பல பல படங்கள் வீட்டில் ஆடியோ கேசட்டுகளாக சிடிக்களாக குவிந்து கிடந்தன.

பார்த்தாலே பரவசம், ஆயுத எழுத்து, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், விண்ணை தாண்டி வருவாயா மாதிரியான படங்களின் பாடல்கள் மனதுக்கு மிக நெருக்கமானவை. பாரதிராஜா, பாலச்சந்தர், மணி ரத்னம், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களின் ஆஸ்த்தான இசையமைப்பாளராக ரஹ்மான் ஆனதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. அதே சமயம் புதுமுக இயக்குனர்கள், குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்திருக்கிறார்.

ஹிந்தி பாடல்கள் மீது எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு காதல் இருந்தது. அனுமாலிக் தான் ஆதர்சம். நம்ம ஊர் தேவாவையும் இளையராஜாவையும் மிக்ஸ் செய்த கலவையில் இருக்கும் அவரது பாடல்கள். அனைத்து ரகத்திலும் பாடல்கள் இயற்றியவர். ரஹ்மான் பெரும்பாலும் தமிழில் இட்ட பாடல்களையே ஹிந்தியில் இசை அமைத்திருந்தாலும், ரங்கீலா முழுமையாக ஹிந்திக்காக அமைத்த ஆல்பம். தமிழில் அது வராமல் இருந்ததில் எனக்கு மிக பெரிய வருத்தம் இருந்தது. லகானும் தாலும் கேட்காத நாளில்லை ஒரு காலத்தில். ககனு ககனு (லகான்) பாடல் முணுமுணுப்பில் ரிப்பீட்டில் இருந்தது. டெல்லி 6, ஜோதா அக்பர் ஆகியவையும் அப்படியே.

திருடா திருடா படத்தின் ராசாத்தீ என் உசுரு என்னதில்லை முழுமையாக வோக்கல் மியூசிக்கல். அதன் பிரமிப்பு இத்தனை காலம் கழிந்தும் இன்னும் மாறவில்லை. தாளம் லயம் ஸ்ருதி ஆகியவற்றுக்கு தக்கபடி கவிப்பேரரசர் வைரமுத்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தி இருந்த வார்த்தைகள் எந்த இன்ஸ்டிருமெண்டும் இல்லாமலேயே ரிதம் சேர்த்து பாடலை முழுமை செய்தன. கேட்டு பாருங்கள். “தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலயே... மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே...” வார்த்தைகளே தாளமிடும் ஜாலம். வீரபாண்டி கோட்டையிலே, ஒருவன் ஒருவன் முதலாளி ஆகியவை ஆர்கேஸ்டிராவின் சிகரம்.


புதிய புதிய குரல்களை பயன்படுத்துவதில் வல்லவர். எஸ்.பி.பி யின் மகள் பல்லவியின் 'காதலிக்கும் பெண்ணின் கைகள்', சுசீலாம்மாவின் உறவினர் சந்தியா பாடிய 'பூ கொடியின் புன்னகை', சுக்வீந்தரின் தையா தையா’, இளா அருணின் முத்து முத்து மழை’, சாதனாவின் சினேகிதனே’, சுவர்ணாலதாவின் போறாளே பொன்னுத்தாயி சுஜாதாவின் சொட்ட சொட்ட நனையுது ஸ்ரீநிவாசின் அழகே சுகமா எம்.ஜி.ஸ்ரீகுமாரின் சின்ன சின்ன மழை துளியை ஹரிணியின் நிலா காய்கிறது சின்மயியின் மையா மையா ஜெயச்சந்திரனின் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் ஆகியவை மிக பிடித்தவை. சாகுல் ஹமீது, ஃபெபி, பென்னி தயாள், பிளசி, சித்ரா சிவராமன், மகாலக்ஷ்மி ஐயர், மின்மினி, நரேஷ் ஐயர், சோனு நிகாம், கிளிண்டன், என ஒரு பெரும் படையே திரை இசைக்கு இவரால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.  ஒரு பென் டிரைவ் முழுக்க அவரது கிளாசிக் மெலடிக்களும், கிராமிய மெல்லிசையுமாக நிரப்பி வைத்திருக்கிறேன்.

ஃபாஸ்ட் பீட்டுக்களிலும் ஒரு மெல்லிய நளினம் இருக்கும். மாயா மச்சிந்திரா (இந்தியன்), முக்காலா முக்காபுலா (காதலன்), சிக்கு புக்கு (ஜெண்டில் மேன்) ஆகியவை சிறந்த உதாரணம். குத்து, கிராமியம், ராப், ஜாஸ், என எல்லா பரிமாணங்களிலும் அவர் பாடல் இசைத்திருந்தாலும் சில கிளாசிக்கல் பாடல்கள் நெகிழ வைத்து விடுகிறது. சிவாஜியின் சஹானா (விஜய் ஏசுதாஸ்) பாடலின் இடையே ஆழி மழை கண்ணா..’, காதலனின் இந்திரையோ இவள் சுந்தரியோ.. ஆகியவை குறிப்பிடலாம்.

மின்சார கனவின் அன்பென்ற மழையிலே இந்த நிமிடம் வரை கிறித்துவ பாடல்களை திரையிசையில் கொணர்ந்ததில் சிறப்பான பாடல் என்பது எனது கருத்து. அந்த ஃபீல், இன்ஸ்ட்ரூமென்ட், குரல், டியூன் ஆகியவை நம்மை அந்த சர்ச்சுக்குள்ளேயே கொண்டு சென்று விடுகிறது.

பல சிறு சிறு பாடல்களை படங்களில் ஆங்காங்கே அள்ளி தெளிப்பதிலும் வல்லவர். அதில் மிக பிடித்தது கன்னத்தில் முத்தமிட்டாலின் சைனோரே...சைனோரேவும் சட்டென நனைந்தது நெஞ்சமும்.


சோக பாடல்களை இசையமைப்பதில் தனி கவனம் செலுத்துவார். மிக எமோஷணலான பாடல்கள் எனில் வேறு யாரையும் அல்லாமல் தானே பாடிவிடுவதும் உண்டு. உயிரேவில் 'கண்ணீரே கண்ணீரே' அப்படியான பாடல்களுள் ஒன்று. பவித்ராவில் 'அழகு நிலவே..' சித்ராவின் குரலில் தாய்மையடையாத பெண்ணின் ஏக்கத்தை உருக்கி தந்தது என்றால், அலைபாயுதேவில் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்'உம்  கருத்தம்மாவின் 'போறாளே பொன்னுத்தாயியும்' சுவர்ண லதாவின் குரலில் மொத்த துயரத்தையும் கொண்டுவந்து நாம் முன் வந்து கொட்டிவிட்டு கதறடித்து போகும். உருக்கமான பாடல் எனிலும் ஜாலியான பாடல் எனிலும் இரண்டின் உச்சத்தையும் தொட்டு பார்த்துவிடும் ஆர்வம் அவரிடத்தில் எப்போதும்.

எம்.எஸ்.வீ, யுவன் என பலரையும் எந்த ஈகோவும் பார்க்காமல் தனது பாடலுக்கு ஏற்ற குரல் என்றால் பயன்படுத்தி கொள்வார்.

அவரது இசை என எடுத்துக்கொண்டால் அது மிக சாதாரணமானது தான். வித்யாசாகர், ஹாரிஸ், ஜீவிபி போன்றோர் கூட அதே தரத்தில் பாடல்கள் தருகிறார்கள். ஆனால் ரஹ்மானின் சிறப்பே அதை ரசிக்கும் வகையில் கொடுப்பதில் தான் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ரசிகனாக அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு கேட்டு எந்த இடத்தில் எந்த இன்ஸ்ட்ருமெண்ட் ஒலியை அதிகரிக்கவேண்டும், எதை குறைக்கவேண்டும் என கணித்து கொடுப்பதில் தான் இருக்கிறது அவரது வெற்றி. புது வெள்ளை மழை பாடல் சரணத்தின் இறுதியின் வரும் வயலின் இசை, பதிவு செய்தபோது ஒரே சப்தத்தில் இருந்தாலும், பாடலின் இறுதி வடிவத்தில், மெல்ல மெல்ல சப்தத்தை அதிகரித்துக்கொண்டே வந்து சரணம் முடிகையில் சட்டென நிறுத்தி அமைதி தருவதை சொல்லலாம். எந்த ஒலி எப்படி இருக்கவேண்டும் என கணிப்பதில் தான் அவரது வெற்றி இருப்பதாக நினைக்கிறேன். அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நல்ல ரசிகர் என்பதாலும் கூட இருக்கலாம்.

ரஜினியின் தீவிர விசிறியாக இருந்ததாலோ என்னவோ எனக்கு தேவாவை ரொம்ப பிடிக்கும். காரணம் மற்றவர்கள் இசையை முதன்மை படுத்துகையில் தேவா மட்டும்தான் ரஜினியை முதன்மைப்படுத்தி அதற்கு தக்கவாறு இசை அமைத்தவர். ரஹ்மானும் அதே பாலிசியை கையாண்டு ரஜினி படங்களில் ரஹ்மான் பாடல்கள் இல்லாமல் ரஜினி பாடல்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டது எனக்கு மிக பிடித்தது (பாபா தவிர)

எத்தனை புகழும் பெருமையும் விருதும் கிடைத்தாலும் தளும்பாத நிறைகுடமாய் அமைதிகாத்தாலும், உண்மையில் மிக கலகலப்பான எளிமையான நபர் அவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக என்பதை விட ஒரு மனிதராக எனக்கு அவர் பிடித்து போனதற்கு அதுவும் ஒரு காரணம்,

மெல்ல கொல்லும் விஷம் என்பார்கள் ரஹ்மான் இசையை. முதலில் கேட்கும்போது பிடிக்காது. ஆனால் கேட்க கேட்க நம்மை அடிமைப்படுத்தி விடும். மிக சத்தியமான வார்த்தை அது.

 

 

Printfriendly