Thursday, May 28, 2015

மும்பை பயண குறிப்புகள் – பாகம் 1

மும்பைல ஒரு கான்ஃபரன்ஸ். பிப் 26,27,28. நீங்க கலந்துக்கறீங்க. புறப்படு பீம்னு டோலாக்பூர் மஹாராஜா சொல்றமாதிரி என் மேனேஜர் சொன்னப்பவே அதுக்கான பயணக்திட்டஙகளை எடுக்க ஆரம்பிச்சாச்சு.

வழக்கமா போற ஸ்பைஸ் ஜெட் வேண்டாம்னு ஜெட் ஏர்வேஸ்ல பார்த்தா ரேட்டு ரொம்ப ஓவரா போயிட்டிருந்துது. கொச்சி – மும்பை கோ ஏர்ல செம்ம சீப்பா ஒரு ஆஃபர் இருந்துச்சு. ஜஸ்ட் 2089. அதுக்கே பிளான் பண்ணி டிராவல் புரபோசலை ஆபீஸ்ல கொடுத்ததும், “யப்பா, இது இயர் எண்டு, காஸ்ட் ரிடக்ஷன் டார்கெட் அச்சீவ் ஆகலை, அதனால் ஏர் டிராவல் கிடையாது, டிரெயின்ல புக் பண்ணி தர்றேன், போறியா?”ன்னு கேட்டாங்க. நான் அப்செட் ஆவேன்னு எதிர்பார்த்தாரோ என்னவோ, நான் “ரொம்ப சந்தோஷம் சார்.. ஒரே ஒரு ரிக்வெஸ்ட்.. கொங்கன் ரயில்வே ரூட்ல டிக்கெட் போடுங்க சார்”னு சொன்னதும் ஒரு மாதிரியா பார்த்தாரு.

பிப் 23 நேத்ராவதி எக்ஸ்பிரஸ், ஏசி 3 டயர், எர்ணாகுளம் – லோகமானியா திலக் டெர்மினல் (அதாங்க நம்ம குர்லா). ரூ. 1,635. டிக்கெட் ரெடின்னு கூப்பிட்டு சொன்னாங்க. அவர்ட்ட சிரிச்சிட்டே சொன்னேன், “சார் டிக்கெட் 1,635, அது தவிர 28 மணிநேர பயணம், ஒரு நாள் ஆபீஸ் வேலை முடக்கம். என் சாப்பாட்டு செலவு எல்லாம் பார்த்தா, கோ ஏர் செம சீப் சார்”ன்னேன். “என்னப்பா பண்றது கம்பெனி பாலிசி அப்படி”ன்னாரு சிரிச்சிட்டே. நல்லது தான். ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்த கொங்கன் ரயில் பயணம் அப்படியாக இனிதே துவங்கியது.

மதியம் ரெண்டு மணி டிரெயினுக்கு பன்னெண்டு மணிக்கெல்லாம் எர்ணாகுளம் ஜங்ஷன் வந்து காத்திருந்தேன். அருமையான ஸ்டேஷன் அது. கொஞ்சூண்டு லேட்டா வந்துச்சு ரயில். வழக்கமான அதே பழைய பெட்டிகள் தான். சுத்தமா சுத்தமே இல்லாத த்ரீ டயர் கோச். (இதை தேர்டு ஏசின்னு சொல்றவங்களை கொமட்டிலேயே குத்தணும். தேர்டு கிளாசை ஒழிச்சு பல மாமாங்கம் ஆச்சு). அஞ்சு நிமிஷம் தான் நிக்கணும் எர்னாகுளத்தில். ஆனா இருபது நிமிஷம் நின்னுச்சு. சரியா 14:30க்கு கிளம்பிச்சு.


வழியெல்லாம் பச்சை பசுமை, கடல், நதி, மலை, மழை... நிஜமாவே சொல்றேன், கேரளாவில் பகல் நேர ரயில் பயணங்கள் அதிலும் மழைக்கால பயணங்கள், நம்ம ஆன்மாவை முழுசா சுத்திகரிச்சிரும். அனுபவிச்சு பார்த்தா தான் அந்த சுகம் புரியும். எத்தனை பெரிய கவலை இருந்தாலும் மறந்து மனசு லேசாயிரும்.

ராத்திரி டின்னருக்கு என்ன வேணும்னு சாயங்காலமே வந்து கேட்டுட்டு போனாங்க. ரயிலில் பேண்ட்டரி இருக்கு. அது தவிர IRCTC மீல்ஸ் ஆன் வீல்ஸ் ஸ்கீமும் இருக்கு. வெஜ்.மீல்ஸ் ஆர்டர் செஞ்சுட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.

ஏசி கோச் பயணங்களை நான் அதிகம் விரும்பறதில்லை, அதிலும் நீண்ட தூர பயணங்கள். அதுக்கெல்லாம் ஸ்லீப்பர் கிளாஸ் தான் பெஸ்ட்டு. ஜன்னலோரம் உக்காந்து சற்றே வளைஞ்ச ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதிச்சு சிலுசிலுன்னு அடிக்கும் காத்தையும் சாரலையும் அனுபவிச்சபடி பயணிக்கிற அந்த சுகமும், ரயில் பெட்டியின் தடக் தடக் தாலாட்டு சத்தமும் எல்லாம் ஏசி கோச்சில் கிடைக்கறதில்லை. ஆனா கம்பெனி என்னை கவுரவமா நடத்துதாம். அதனால ஏசி கோச். வேற வழியில்லை. கோச்சை விட்டு வெளியேறி, கதவாண்டை போய் படியில் உக்காந்தபடி வேடிக்கையை தொடர்ந்தேன். கோழிக்கோடு வரைக்கும் தான். அப்புறம் இருட்டிடிச்சு. அதுல என்னத்தை வேடிக்கை பார்க்கிறது? எழுந்து உள்ளாற வந்துட்டேன்.

ஒன்பது மணி சுமாருக்கு கண்ணூர் (கண்ணனூருன்னும் சொல்லலாம்). இரவு டின்னர் வந்துச்சு. சூடா இருந்தது. முன்னேல்லாம் ரயில் உணவுகள் படு கேவலமா இருக்கும். இப்ப சில வருஷமா நல்ல முன்னேற்றம். சூடாவும் சுவையாவும் நியாயமான விலையிலும் கிடைக்குது.

மீல்ஸ் ஆன் வீல்ஸ் - டின்னர் பாக்கெட்
இந்த மீல்ஸ் ஆன் வீல்ஸ் உண்மையிலேயே நல்ல திட்டம். யார் யாருக்கு என்னென்ன உணவுன்ற லிஸ்டை முன்கூட்டியே நம்மகிட்டே வந்து வாங்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி உணவை பேக் செய்து டயத்துக்கு சூடா கொண்டுவந்து தந்திடுறாங்க. பேண்டிரி இல்லாத ரயிலில் கூட  இதே மாதிரி ஆர்டர் வாங்கி இரவு எந்த ரயில் நிலையத்தில் டின்னர் டைமுக்கு ரயில் நிக்குமோ, அந்த ரயில்நிலைய கேண்டீனுக்கு தகவல் சொல்லி, பாக்கெட்ஸ் ரெடி செஞ்சு கரெக்டா அந்த டைமுக்கு டெலிவெரி கொடுத்துடறாங்க. இதே மாதிரி ஒரு திட்டத்தை சில தனி நபர்கள் நம்ம நெல்லை எக்ஸ்பிரசில் செஞ்சிட்டு இருந்ததை சில வருசத்துக்கு முன்னே பார்த்திருக்கேன். அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் பயணிகளுக்காக. அவங்களும் நெல்லைல எறிக்குவாங்க, ஆர்டர் எடுத்துக்குவாங்க, அந்த தகவலை போன்ல பாஸ் செஞ்சு விருதுநகர் வரும்போது பக்காவா டெலிவெரி கொடுத்துருவாங்க. எல்லாம் முடிஞ்சு திருமங்கலத்துல ஏறங்கிருவாங்க. நான் கூட அந்த பிஸினஸ் பண்ணலாமான்னு யோசிச்சிருக்கேன். இப்ப இருக்கான்னு தெரியலை. ஆனா ரொம்ப நல்ல லாபகரமான ஐடியா.

இரவு 11:45 மணி சுமாருக்கு மங்களூரை கடந்தது ரயில். நான் முழிச்சிருந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. மங்களூர் தாண்டி 200 கிமீ கடந்து முருதேஷ்வர்ல கடலோரமா ஒரு பிரமாண்டமான சிவன் சிலை இருக்கு. அந்த கோவில் கடலில் உட்புறமா ஒரு சின்ன தீவில் கட்டி இருக்காங்க. சிலை மிக மிக மிக பிரமாண்டம். பக்கத்துலயே இருபது மாடி கோபுரம் கட்டி அதில் லிஃப்ட்டெல்லாம் வெச்சு பக்தர்கள் அதில் மேலேறி போயி சிவனின் முகத்தை பார்க்கமுடியும். அவ்வளவு உயரம். சிவன் உட்கார்ந்திருக்கிற மாதிரி சிலை. பல கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து பார்த்தாலும் கடலில் அவர் உட்கார்ந்திருப்பது அவ்வளவு தத்ரூபமா தெரியும். அதிலும் இரவில் அந்த சிலையை பார்ப்பது சாக்ஷாத் அவரே உட்கார்ந்திருக்கும் உணர்வை தரும். அதனால் அதை பார்க்கணும்னு ஒரு ஆசை. ரயிலிலிருந்து பார்த்தால் தெரியும்னு சிலரும், இல்லை இல்லை ரயில் பாதை ரொம்ப தூரத்தில் இருக்கு, அதனால் தெரியாதுன்னு சிலரும் சொன்னாங்க. வெயிட் பண்ணி பார்த்துரலாம்னு தான் முழிச்சிருந்தேன்.

முருதேஷ்வர் சிவன் சிலை.
(பக்கத்துல இருக்க கோவிலை கவனிங்க, சிலையின் பிரமாண்டம் புரியும்)

முருதேஷ்வர் 02:50 க்கு தான் போகும். இடையில தூங்கிட்டேன்னா? அதனால் 02:30 க்கு அலாரம் வெச்சுட்டு முழிச்சிட்டிருந்தேன். அப்பப்பா கொஞ்சம் கண்ணயர்தல் பின் முழித்தல்னு ஒரு மாதிரியா போச்சு.

02:30 க்கு அலாரம் அடிச்சாபோது செம தூக்கம். திடுக்குனு எழுந்து முகம் கழுவி ஃபிரெஷ் ஆகிட்டேன். அப்போ ரயில் பத்கல் (Bhatkal) ரயில் நிலையத்தில் நின்னிட்டு இருந்துச்சு. அட அவ்வளவு லேட்டா சுலோவா வந்தும் கரெக்ட் டயமுக்கு வந்திருச்சேன்னு ஆச்சரியம். இறங்கி நல்ல சூடா ஒரு டீயை வாங்கி குடிச்சிட்டு மீண்டும் ரயிலேறவும் ரயில் புறப்படவும் சரியா இருந்துச்சு. இன்னும் கால் மணி நேரம் தான். முருதேஷ்வர் வந்திரும். இப்ப திடீர்னு ஒரு கன்பீசன். முருதேஷ்வருக்கு முன்னாடியே சிலை வந்திருமா, முருதேஷ்வர் கடந்தா? எதுக்கும் இருக்கட்டும்னு பத்கல் தாண்டினதுமே இருட்டை வெறிச்சு வெறிச்சு உத்து உத்து பாத்துட்டே வந்தேன். முருதேஷ்வர் ஸ்டேஷனும் வந்துச்சு. ரெண்டு நிமிஷம் நின்னு கிளம்பிருச்சு. ஆனா அந்த சிலை தெரியவேயில்லை. கடல் காத்து மட்டும் சிலுசிலுன்னு அடிச்சிட்டே இருந்துச்சு. சிலை தெரியலையா அல்லது நான் கவனிக்கலையான்னு புரியாமலேயே வந்து படுத்துட்டேன். என்னமோ இனம் தெரியாத ஒரு ஏமாற்றம், எதுக்குன்னே தெரியலை

சாய்... சாய்.... சத்தம் கேட்டு எழுந்தப்ப மணி 10:30. டிரெயின் நின்னிட்டு இருந்துச்சு. போன்ல எந்த இடம்னு பார்த்தா ராஜாபூர்னு காட்டிச்சு. இங்கே ஸ்டாப்பிங்கே இல்லையென்னு கோச்சை விட்டு வெளியே வந்து கீழே இறங்கி நின்னேன். கொங்கன் ரயில்வே சிங்கிள் டிராக் என்பதால் எதிரே வரும் ரயில்களுக்காக பாசிங்குக்கு நிக்கும். அப்படி ஒரு பாசிங்குக்காக அப்போ அங்கே ஒரு சின்ன ஹால்ட். ரம்மியமான இடம். சின்ன கிராமம். மரங்கள் அடர்ந்த ஊர். கொஞ்ச நேரம் ஊரை ரசிச்சிட்டு இருந்தா, வண்டி கிளம்பிருச்சு. மீண்டும் பயணம். இரவு அசந்து தூங்கியதில் கோவாவை விட்டுட்டேன். பரவாயில்லை. இன்னொரு தபா பார்த்துக்கலாம்.

குகையிலிருந்து வெளியேறும் ரயில் 

கொங்கன் ரயில்வேயில் நிறைய குகைகள், உயர்ந்த பாலங்கள். மலைகளை உடைச்சு ரயில்பாதை போட்டிருப்பதால், மலைசரிவிலிருந்து பாறைகள் உருண்டு வரும் அபாயம் இருக்கு. அதனால் ரயில்பாதையின் ரெண்டு பக்க மலைப்பாறையிலும் கம்பி வேலி அடிச்சு பாதுக்காத்து இருக்காங்க. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்கும்போது தான் எத்தனை பயங்கரமான ஆபத்து அதுன்னு புரியுது. அதேமாதிரி மிக மிக உயரமான பாலங்கள். ஒற்றை பில்லர்ல நிக்குது. அதிலும் வளைந்து செல்லும் பாலங்களில் வேகம் குறைக்காமல் பறக்கும் ரயிலின் படிக்கட்டில் நின்றபடி அந்த பயணத்தை அனுபவிப்பது செம்ம திரில். குகைகள் மிக நேர்த்தியா இருக்கு. வெளிச்சம் காற்று இரண்டையும் செயற்கையா உள்ளே ஏற்பாடு செஞ்சிருக்காங்க. மின்சார விளக்குகளும் இருக்கு. ஆங்காங்கே ரயில்பாதை ஓரம் ஆட்கள் நிற்பதற்கு இடம், குடிநீர் வசதி எல்லாம் செஞ்சிருக்காங்க. ஒருவேளை குகைக்குள் ரயில் மக்கராகி நின்னுடுச்சின்னா, உதவி வரும் வரைக்கும் மக்களுக்கு தற்காலிக ஏற்பாடு வேணுமில்லே, அதுக்காக. ச்சே.. என்னா பிளானிங்.. செம

குகைக்குள் இரயில் 
நான் ரொம்ப எதிர்பார்த்த அந்த அபூர்வ காட்சி ரத்னகிரி கிட்டே பார்த்தேன். இந்தியாவில் இருக்கும் ஒரே RO-RO சர்வீஸ் (Roll On-Roll Off Service). இந்த சர்வீஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பார்த்ததில்லை. இது தான் முதல்தடவை பார்க்கிறேன். ரயில்மீது லாரிகளை ஏத்திட்டு போறது. இதன்மூலம் லாரி டிரைவர்களுக்கு செம்ம லாபம். மகாராஷ்டிரா மாநிலம் கோலாடிலிருந்து (Kolad) கர்நாடக மாநிலம் மங்களூர் வரை இந்த சர்வீஸ் இருக்கு. இந்த தூரத்தை ரோடு மூலமா ஒரு லாரி கடக்கறதா இருந்தா, ரொம்ப லேட் ஆகும். மலைப்பாங்கான காட்டு பகுதின்றதால் ரிஸ்கும் ஜாஸ்தி. மேலும் வாரத்துக்கு ரெண்டு டிரிப் தான் அடிக்கமுடியும். செலவும் ஜாஸ்தி. ஆனா இந்த RO-RO சர்வீஸ் உபயோகிச்சா, வாரத்துக்கு மூணு டிரிப் அடிக்கலாம், டிரைவர்களுக்கு நிறைய ரெஸ்ட் கிடைக்கும் (பத்து மணிநேரம் நிம்மதியா தூங்கிக்கலாம்), அதை விட இந்த சர்வீசுக்கு ஒரு 16 டன் டாரஸ் லாரிக்கு வெறும் 7,000 ரூபா தான் கட்டணம். அப்படி எல்லா வகையிலும் லாரிக்காரங்களுக்கு நன்மை.

அஞ்சு ரயில்கள் இந்த சர்வீசில் இயங்குது. அப்படியும் பத்தாம ஆறாவது ரயில் இயக்கறது பத்தி யோசிச்சிட்டு இருக்கு கொங்கன் ரயில்வே நிர்வாகம். கூட்ஸ் ரயிலின் மீது லோடட் லாரிகளை அப்படியே ஏத்தி அதை கோலாடு – மங்களூர், மங்களூர் – கோலாடு டிரிப் அடிக்குது இந்த சர்வீஸ். தினமும் மங்களூர்ல 50 லாரி, கோலாடுல 100 லாரி வெயிட்டிங்க்ல இருக்கிற அளவுக்கு இந்த சர்வீசுக்கு டிமாண்டு.

RO-RO சர்வீஸ் ரயில்  
என் ரயில் ரத்னகிரி வரும்போது மணி 11:30. அப்போ எங்க ரயிலுக்கு வழி விட இந்த RO-RO சர்வீஸ் ரயில் ஷண்டிங் லைன்ல நின்னுட்டிருந்துச்சு. எப்படியும் ஒரு 70 லாரி இருக்கும். ஃபுல் லோடடு. டிரைவர்கள் லாரிக்குள் உக்காந்து பேசிட்டும், விளையாடிட்டும் இருந்தாங்க. ரயில் லாரியை சுமந்து போயிட்டிருக்கு. ஆச்சரியமா பார்த்தேன். இது மாதிரி ஏன் எல்லா ரூட்டிலும் விடக்கூடாதுன்னு தோணிச்சு. நல்ல வருமானம் அரசுக்கு. லாரிக்காரங்களுக்கும் லாபம். சுற்று சூழல் பாதிப்பும் குறையும்.

காலை உணவுக்கு பூரி, மதிய லஞ்சுக்கு மீண்டும் வெஜ் மீல்சுனு என் வயித்துப்பாட்டை மீல்ஸ் ஆன் வீல்ஸ் டீம் பாத்துக்கிச்சு. எதுக்கும் காசு வாங்கலை. கடைசியா இறங்கும்போது மொத்தமா பில் தர்றோம் அப்ப கொடுத்தா போதும்னு அன்பா சொன்னாங்க. ஆச்சரியமா இருந்துச்சு. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் காசை கையில் கொடுத்தா தான் ஆர்டரே எடுப்பாங்க.
பனுவேல் ரயில் நிலையம் 
சாயங்காலம் நாலரை சுமாருக்கு பனுவேல் (Panvel) வந்துச்சு. மும்பை நகரத்துக்கான முதல் அத்தாட்சி. நிறைய நிறைய வானுயர்ந்த கட்டிடங்கள் உருவாகிட்டு இருக்கு. மெல்ல மெல்ல நகரம் கண்ணில் பட தொடங்கிச்சு. அடுக்கடுக்கா வீடுகள், மலை மலையா குப்பைகள், சுகாதாரமில்லாத சுற்றுப்புறம், அடிக்கடி எங்களை கடந்து செல்லும் மின்சார ரயில், அந்த ரயில் முழுக்க சாரி சாரியா மக்கள்னு ஒரு பரபரப்பான மிக பெரிய வணிக நகரத்துக்கான குறியீடுகள் தெரிய ஆரம்பிச்சிச்சு.

காட்கோபார் மெட்ரோ ரயில் நிலையம் 
குர்லாவுக்கு 6:30 க்கு தான் இந்த ரயில் போகும். ஆனா எனக்கு ஜாகை அந்தெரில இருக்கு. நான் எதுக்கு குர்லா வரைக்கும் போகணும்னு எனக்குள்ளேயே ஒரு கேள்வி. நல்லவேளையா காட்கோபார் ரயில் நிலையத்துகிட்டே என் ரயில் ரொம்ப சுலோவா இன்ச் பை இன்ச்சா நகர்ந்திட்டிருந்த ஒரு நல்ல தருணத்தில் ரன்னிங்ல இறங்கிட்டேன். காட்கோபார் ஸ்டேஷன்ல இருந்து அந்தெரிக்கு மெட்ரோ இருக்கே..

மும்பை மெட்ரோ
காட்கோபார் ஸ்டேஷனுக்குள்ளேயே பக்கத்திலிருக்கும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஒரு வழி போகுது. அதில் நடந்து மெட்ரோ ஸ்டேஷன் போய் டிக்கெட் வாங்கி ஏர்போர்ட் போலிருக்கும் ஸ்டேஷனின் முதல் தளம் போனேன். அங்கே தான் பிளாட்ஃபார்ம். அழகான ரயில். நம்ம பெங்களூருவின் “நம்ம மெட்ரோ” ரயிலின் அதே குடும்பத்தை சேர்ந்த டிசைன். முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நாமகரணம், எங்கெங்கும். பிளாட்ஃபார்மில் செகியூரிட்டிகள் அவ்வளவு ஹாண்ட்ஸம்மா இருந்தாங்க.

மெட்ரோ ரயில் உட்புறம் 
ரயில் மெல்ல ஊர்ந்து அந்தெரி வந்தது. நான் இறங்கி விசாரிச்சப்பறம் தான் தெரிஞ்சது நான் எக்ஸ்பிரஸ்ஹைவே ஸ்டேஷன்ல எறங்கிருக்கணும்னு. அப்புறம் என்ன. ஒரு ஆட்டோ பிடிச்சு அபார்ட்மெண்ட் போய் சேர்ந்தேன். இன்னும் நிறைய டைம் இருக்கே. நைட்டு சும்மா தானே இருக்க போறோம். ஒரு நைட் ரவுண்டப் அடிக்கலாமான்னு தோணிச்சு. ஜஸ்ட் அப்படியே கேட்வே ஆஃப் இந்தியாவரைக்கும்?? பிளான் முடிவாச்சு.

வெயிட் அதை அடுத்த பதிவில் சொல்றேன். இப்ப கொஞ்சம் ரெஸ்ட்.



1 comment:

Printfriendly