Monday, July 20, 2015

ஜெ - எந்த வதந்தி நிஜம்?

மீப காலங்களாக தமிழக மீடியாவையும் தேசிய மீடியாவையும் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் வதந்திகளில் பெரும்பாலானவை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்தானது. அவற்றை சொத்து குவிப்பு வழக்கு, உடல்நலம் என இரண்டாக பிரிக்கலாம்.சொத்து குவிப்பு வழக்கை பொறுத்தவரை, கர்நாடக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தவுடனேயே பல பல ஹேஷ்யங்கள் இறக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டது. அதே போல சமீப காலமாக அவரது உடல் நிலை குறித்தும் சில வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என நான் கருதுவது

 • வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி அமையும், அதில் அதிக இடங்களை கோருவதற்கான முதற்படி தான் இந்த அப்பீல் பூச்சாண்டி (ஆனால் இது யதார்த்தம் அல்ல. ஏனென்றால் முறைப்படி மனு தாக்கல் செய்து விசாரணைக்கும் வரவிருக்கிறது)

 • நில கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என மாறி மாறி கருத்து தெரிவிக்கும் அதிமுக இதுவரை அது குறித்து தெளிவான எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால் தான் பாஜகவும் இந்த அப்பீல் விஷயத்தில் மவுனம் காக்கிறது (பாஜக இந்த வழக்கு விவகாரத்தில் எந்த தலையீடும் ஆதரவும் எதிர்ப்பும் செய்யவில்லை என்பது தெரியவருகிறது 

 • அப்பீல் மிக நியாயமான காரணங்களை கொண்டதால் உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டுவ்தற்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தண்டனை அளிக்கும்.

 • உச்சநீதிமன்றம் எப்போதுமே ஜெயலலிதாவுக்கு உரிய சாதகமான நடவடிக்கைகளையே இதுவரையும் எடுத்து வந்துள்ளது. புதிய விதிமுறைகளை புகுத்தியோ இருக்கும் விதிகளை மீறியோ அவருக்கு சாதகமான தீர்ப்புகளை அளிப்பதே வழக்கம். அதுவே தான் இப்போதும் நடக்கும்

 • உச்சநீதிமன்றமே நீதியை நிலைநாட்ட இந்த வழக்கில் அதீத ஆர்வம் காட்டுகிறது. குறைகளை காரணம் காட்டி மனுவை ரிஜக்ட் செய்யாமல் திருத்தி வாங்கி இருப்பதுடன், முந்தய தாக்கல் தேதியான ஜூன் 23 ஆம் தேதியிட்டே அந்த வழக்குக்கு சீனியாரிட்டி கொடுத்திருப்பதிலிருந்தே தெரியவில்லையா, உச்சநீதிமன்றம் இனி சட்டப்படி மட்டுமே செயல்படும் என்று?

 • மதில்மேல் பூனை போலிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் இப்போதைய நிலை. ஜெ.வுக்கு சாதகமாக நடந்துகொண்டால் நீதியை குழி தொண்டி புதைத்ததாக ஆகிவிடும். எனவே வழக்கை ஆறப்போட்டு நீட்டித்து கொண்டே இருப்பது தான் உச்சநீதிமன்றத்தின் திட்டம். 2008 ஆம் ஆண்டு தாக்கலான ஸ்பெஷல் லீவ் பெட்டிஷனையே அடுத்த வாரம் தான் விசாரணைக்கு எடுக்கிறது உச்சநீதிமன்றம். எனவே இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும்.

 • ஃபாலி நாரிமன் இன்னமும் ஜெ. தரப்பு சார்பாக ஆஜராக முடிவெடுக்கவில்லை. அவரது நெருங்கிய வட்டாரங்களும், நீதித்துறை நண்பர்களும் அவரிடம் இதுபோன்ற அப்பட்டமான விதிமீறல் வழக்குகளை ஆதரித்து ஆஜராகி உங்கள் இமேஜை கெடுத்துக்கொள்ளவேண்டாம் என அக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாக கேள்வி

 • வழக்கு எப்படியும் தனக்கு சாதகமாக தான் அமையும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். அதனால் தான் எந்த பதற்றமோ அவசரமோ இல்லாமல் கட்சி அமைதியாக இருக்கிறது

 • ஜெயலலிதாவுக்கு தீவிர உடல்நல குறைவு. வெளிநாடு சென்று அதற்கான வைத்தியம் பார்க்க போகிறார்.

 • ஜெயலலிதா நலமாக தான் உள்ளார். வழக்கில் கைது செய்யப்படும் சூழல் வந்தால் அதிலிருந்து தப்பிக்க தான் அவர் வெளிநாடு செல்ல முயல்கிறார். அதற்காக தான் உடல் நலம் இல்லாமல் இருப்பதாக எல்லோரையும் நம்ப வைக்கிறார்

 • உடல்நலத்தை காரணம் காட்டி வெளிநாடு சென்றுவிட்டு, லலித் மோடி போல வெளிநாட்டிலிருந்தபடியே இண்டர்நெட் மூலம் செயல்படுவார். இங்கே தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பெயரளவில் பதவியை கொடுத்துவிட்டு அங்கிருந்தபடி ஆட்சியை நடத்துவார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நிர்வாகம் செய்வதற்கான பயிற்சியை அதற்காக தான் எடுத்து வருகிறார்.

 • லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வாங்கப்பட்டதே பின்னாளில் அங்கே போய் செட்டில் ஆகி அமைதியாக வாழத்தான். அதை இப்போது செயல்படுத்தி அரசியலில் இருந்து ஒதுங்கி அங்கே போய் செட்டில் ஆகிவிடுவார்


இவையும்.. இவை போன்ற இன்னும் பலவும் வதந்திகளாக பறந்துகொண்டிருக்கிறது மீடியாக்களில். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்த உறுதியான மறுப்போ விளக்கமோ எதற்கும் தரப்படாமல் இயல்பாக தான் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

எது எப்படியாயினும், என்னளவில் ஜெ. தமிழகத்தின் தவிர்க்கமுடியாத தலைவர். ஒருமுறை அவர் சொன்னதை போல, “தமிழகம் பெரியாரின் புண்ணிய பூமி. அவரது வழித்தோன்றல்கள் மட்டுமே ஆட்சி செய்ய உரிமையுள்ள நிலம்.” அது அத்தனை சத்தியமான வார்த்தை. அதன்படி பார்த்தால் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் அல்லாமல் திமுக அதிமுக இருவர் மட்டுமே ஆள உரிமை கொண்டவர்கள் என்கிற பொருள் வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிமுக திமுக இருவருக்குமே பங்கு இருக்கிறது. இன்றைய சூழலில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், ஜெ. போன்ற ஒரு தலைவர் உடல் நல குறைவுதான் இருக்கிறார் என்பதை கேட்டபின் வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர் மிக நல்லபடியாக குணமடைந்து வரவேண்டும் என்பது ஒவ்வொரு தமிழக மக்களின் வேண்டுதல் என்பதை எல்லோரும் அறிவார்.

சட்ட ரீதியான போராட்டங்களில் சட்டம் தான் ஜெயிக்கவேண்டும் என்பது ஒரு புறம். எனினும் மனதின் ஒரு ஓரத்தில் எப்படியாவது ஜெயலலிதா அந்த வழக்கிலிருந்து விடுபட்டு வெளிவந்துவிடுவார் என்கிற கருத்தும் ஒரு ஓரத்தில் இருக்க தான் செய்கிறது.

எத்தனை எத்தனையோ வதந்திகள் சுற்றி கொண்டு இருக்கின்றன. ஆனால் அந்த வதந்திகளில் எந்த வதந்தி நிஜமாகும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். அது நல்ல வதந்தியாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எனது ஆசை.

No comments:

Post a Comment

Printfriendly