Saturday, August 22, 2015

வராக்கடன் – இந்தியாவின் பெருநோய்

ன்னைக்கு காலையில் பேப்பரில் என்னை பகீர்னு அதிர்ச்சியாக்கிய செய்திகளில் முக்கியமானது “இந்திய பொதுத்துறை வங்க்கிகளின் வராக்கடன் தொகை 2.67 லட்சம் கோடி” என்பது.

2014-15 ஆண்டுக்கான அறிக்கை படி பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 2.67 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன். இது முந்தைய ஆண்டான 2013-14 இல் 2.16 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது பாஜக அரசின் ஓராண்டு ஆட்சியில் வராக்காடன் மட்டும் 51 ஆயிரம் கோடி.



பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் நிதி நிலையை உயர்த்தவும் ஏழை மக்களுக்கான நல திட்டங்கள் வழங்குவதற்கு வசதி செய்யவும் பொதுமக்கள் தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு உருக்கமான வேண்டுகோளை அனைத்து மீடியாக்களிலும் வெளியிட்டார். அவரது அற்புதமான பேச்சு மற்றும் அதன் நியாயமான காரணங்கள் ஆகியவற்றால் இதுவரை சுமார் 6.50 லட்சம் பேருக்கு மேல் தங்கள் மானியத்தை விட்டு கொடுத்து இருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சுக்கு பொதுமக்கள் காட்டிய அளப்பரிய மரியாதை ஆச்சரியப்பட வைத்தது. நாடு இருக்கும் இக்கட்டான நிலையை சொல்லி அதற்கு உதவுமாறு அவர் கொடுத்த கோரிக்கை மெகா ஹிட் அடித்தது.

இன்றைய செய்திக்கு வருவோம்

இந்த வாரா கடன் என்பது தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாவரும் வங்க்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட நிலுவை தொகை. மார்ச் 31, 2015 நிலவரப்படி அந்த தொகை ரூ.2.67 லட்சம் கோடி. இந்த அளவுக்கு நிலுவை வராக்கடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி கண்டிப்பு காட்டி இருக்கிறார். ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜனும் வங்கிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் சொல்லும் வராக்கடன் முழுமையான தகவல் அல்ல, அது மறைக்கப்படுகிறது என்றும் சொல்லி இருக்கிறார். (அதன் படி பார்த்தால் தொகை இன்னும் கூடலாம்).



இந்த வராக்கடன் என்பது நியாயமாக பார்த்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை தான். இதில் கால அவகாசம் கொடுக்க எந்த காரணமும் இல்லை. சட்டப்படி அதை வசூலித்து அரசிடம் சேர்த்திருக்கவேண்டிய கடமை வங்கிகளுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி எதையும் வங்கிகள் செய்ததாக தெரியவில்லை. இந்த 2.67 லட்சம் கோடியில் சுமார் 1.82 லட்சம் கோடி பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகை. அவர்களால் அதை செலுத்தமுடியாத நிலை எல்லாம் இப்போது இல்லை. நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கும் பல பெரிய நிறுவனங்கள் கூட வேண்டுமென்றே அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை கடன் பாக்கியை செலுத்தாமல் வைத்திருக்கிறது. அவர்கள் சொத்துக்களை முடக்கி, விற்று கடனை சரிக்கட்டக்கூடிய அதிகாரம் இருந்தும் வங்கிகள் மெத்தனமாக இருக்கின்றன. 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 41,236 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது  வங்கிகள். அது போக தான் இந்த 2.67 லட்சம் கோடி.

தன்னுடைய மேலான நேரத்தை ஒதுக்கி பொதுமக்களிடமிருந்து சுமார் 250 ரூபாய் மானியத்தை நாட்டு நலனுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்சும் பாரத பிரதமர், இதுவரை கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் அவர்கள் செலுத்தவேண்டிய நிலுவை தொகையை செலுத்துமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம் தான்.

அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரின் கவலைகளை பிரதமர் உணர்ந்திருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அவரது அபரிமிதமான செல்வாக்கை பயன்படுத்தி கார்ப்பொரெட்டுகளுக்கு கோரிக்கை விடுத்து நிலுவையை வசூல் செய்தால் இந்தியா பொருளாதாரம் சட்டென தழைக்கும், ரூபாயின் மதிப்பும் உயரும். பொதுமக்களிடம் 250 ரூபாய்க்கு கெஞ்சிக்கொண்டிருப்பதை விட, நாடு நாடாக சென்று முதலீட்டுக்கு கையேந்திக்கொண்டிருப்பதை விட, நிலுவை கடன் தொகை, நிலுவை வரி பாக்கிகளை வசூல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், இந்தியாவின் பொருளாதாரத்தை சீரமைக்க.

செய்வாரா பிரதமர்?

References:





Monday, August 3, 2015

Still-Birth – துயரங்களில் பெருந்துயரம்

Still-Birth. 

இந்த வார்த்தையை நான் அறிந்துகொண்டது 2013 ஆம் ஆண்டு இதே போன்றதொரு ஆகஸ்ட் மூன்றாம் நாள் தான். ஆசை ஆசையாய் குழந்தைக்காக காத்திருக்கையில் அவன் இறந்தே பிறந்த கொடும் அதிர்ச்சியினூடே அறிந்துகொண்ட வார்த்தை. அப்போதிருந்த அதிர்ச்சியில் அது பற்றி எல்லாம் அறிந்துகொள்ள ஆவல் இல்லாமல் இருந்தது. சில வாரங்கள் கழித்து ஓரளவு அந்த அதிர்ச்சியிலிருந்தெல்லாம் மீண்டு வந்த பின் தான் அதை பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியது. இது குறித்த எந்த விஷயமும் அறியாத பலர் இப்போதும் இருப்பதை அறிந்தே இந்த பதிவு.

முதலில் எனக்கு என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.



எல்லோரையும் போலவே குழந்தைகள் என்றால் எனக்கும் ஆசை தான். அப்படியான அளவற்ற ஆசையோடு தான் நான் தந்தையாக போகும் தகவல் அறிந்து துள்ளி குதித்தேன். ஆனால் முதல் செக்கப்புக்கு சென்றபோது அந்த மருத்துவர் ஒரு பெரும் குண்டை தூக்கி போட்டார்.

என் மனைவிக்கு தைராய்டு & சுகர் இரண்டுமே இருப்பதால் இந்த குழந்தை பிறப்பது கஷ்டம். அது உங்கள் மனைவியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். முதலில் கலைத்து விடுங்கள். பின் தைராய்டு & சுகர் இரண்டையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின் முறையாக முயற்சிக்கலாம் என்று அவர் சொன்னபோது அவர் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

நாம் திருப்தியடையும் பதில் கிடைக்கும் வரை அதற்கான நபர்களை தேடி செல்லும் இயல்பான மனித சுபாவம் என்னையும் வேறொரு மருத்துவரை நாடி செல்ல வைத்தது. அவர் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

சுகர் இப்போது எல்லோருக்குமே இருக்கு. குழந்தைகளில் கூட டையாபட்டீஸ் இருக்கு. அதனால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. மருந்து, உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு இருந்தால் போதும்னு சொல்லி, அதற்கான மருந்துகள் கொடுத்தார். உணவு பழக்கத்தை அடியோடு மாற்றிக்கொள்ள டையட்டீஷியன் நிறைய கட்டுப்பாடுகள் கொண்ட உணவு லிஸ்ட் தந்தார். தைராய்டு பிரச்சனைக்காக ஏற்கனவே மாத்திரைகள் எடுத்து கொண்டு இருப்பதால் அது ஓரளவு கட்டுபாடாக இருக்கிறது. ஏற்கனவே மூன்று மாதம் ஆகிவிட்டதால் இரும்பு சத்து, போலிக் ஆசிட் குறைபாடு இருப்பதால் அதற்கான மாத்திரைகள் கொடுத்தார். என்னென்ன உடற்பயிற்சி செய்யவேண்டும் என விளக்கமாக வகுப்பெடுத்தார்.

கிடைத்த குழந்தை பேறை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அத்தனை கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது.

எல்லாம் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது.

ஒவ்வொரு மாதமும் முறையாக செக்கப் செய்து கொண்டோம். அவ்வப்போது காண்பிக்கப்படும் ஸ்கேன் ரிப்போர்ட் கண்டு மகிழ்ந்தோம். ஏழாம் மாதம் எல்லோரையும் கூட்டி சிறப்பாக வளைகாப்பு வைபோகம் நடத்தினோம். வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது.

2013 ஜூலை மாதம் ஸ்கேன் செய்தபோது, குழந்தை மிக ஆரோக்கியமாக இருப்பதை காட்டினார்கள். மூவ்மெண்ட்ஸ் நன்றாக தெரிந்தது. அநேகமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி வாக்கில் டெலிவெரி இருக்கும். ஆனாலும் எப்போது வலி வந்தாலும் உடனடியாக வந்து அட்மிட் ஆக்கிக்கொள்ள சொன்னார்கள். திக் திக் நாட்கள் தொடங்கியது. முதல் பிரசவம் என்பது மரண அவஸ்தை தானே?

ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு வலி வந்தது. இரவு 11 மணி. கழிப்பறைக்கு சென்றவளுக்கு அங்கேயே பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற தொடங்கியது. உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு விஷயத்தை சொன்னதும் இம்மீடியட்டாக அட்மிட் செய்ய சொன்னார்கள். எனது காரில் மனைவியையும் துணைக்கு இருவரையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் பறந்தேன். 10 நிமிட பயணம். சரியாக 12 மணிக்கு அட்மிட் செய்தார்கள்.

டாக்டர் வந்து பார்த்து டெஸ்ட் செய்தார். மூவ்மெண்ட் எதுவும் காணோம் என்றார். திக்கென்றது. என்னிடம் வந்து விரிவாக சிக்கலை சொன்னார். அதாவது குழந்தையின் மூவ்மெண்ட் இல்லை. அதனால் எப்படி அதை வெளியே எடுப்பது என பார்க்கவேண்டும். இயல்பாக வெளிவர முயற்சிக்கிறோம். இருவரில் ஒருவர் தான் பிழைக்க வாய்ப்பு என சொன்னதும் நான் கதறிய கதறல் ஹாஸ்பிடல் முழுவதையும் விழிப்புக்கு கொண்டுவந்துவிட்டது. 

டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த என் மனைவியை கண்டபோது மிக பாவமாக இருந்தது. சில நொடி யோசனை தான், டாக்டரிடம் தீர்க்கமாக சொல்லிவிட்டேன், “என் மனைவி எனக்கு வேண்டும்”. இரண்டு பேரையும் காப்பாற்ற முயற்சிப்பதாக எனக்கு தைரியம் சொன்னார்

பிரசவ அறைக்குள் நானும் சென்றேன். என் மனைவி அங்கே பட்ட துயரங்களும் துடிப்புக்களும் கண் கொண்டு பார்க்க சகிக்கவில்லை. மனதை திடப்படுத்திக்கொண்டு தான் அவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். அவளது கைகளை பற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவளது வேதனையான கதறல்களுக்கிடையே, அதிக சிக்கலின்றி மென்மையாக வெளிவந்தான் என் மகன். ஆனால் உயிரற்று.

மிக அழகான மகன். தலையில் நிறைய முடி இருந்தது. லேசாக புன்னகைத்தபடியே இறந்துபோயிருந்தான் அவன்.

எதிர்பார்த்த ஒன்று தான் ஆனாலும் துக்கம் தாளமுடியவில்லை. மனைவிக்கு எந்த விவரமும் தெரியாமல் மயக்கத்தில் இருந்தாள். இனி ஆக வேண்டியதை பார்க்கவேண்டும் என்கிற கட்டாயம் என்னை நானே திடப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.

டாக்டருக்கு ஒரு பெரும் நிம்மதி. அவர் எதிர்பார்த்தது, மிஸ்-கேரேஜ் (வெளியே எடுக்க முடியாத நிலையில் தவறாக சென்று சிக்கிக்கொள்வது) அல்லது வழியில் சிக்கிக்கொண்டு வெளிவராமல் இருப்பது என்பதை தான். அப்படி ஆகி இருந்தால் மனைவிக்கு உத்தரவாதமில்லை. ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாமல் சுமுகமாக வெளிவந்து என் மனைவியை காப்பாற்றிவிட்டான் மகன்.

பின் அவனை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து அதற்கான அனுமதி கடிதம், மாநகராட்சி அனுமதி, சடங்குகள் என எல்லாவற்றையும் முன்னின்று நடத்தவேண்டிய கட்டாயம் இருந்ததால், இறந்த துயரத்தை உடனடியாக அடக்கிக்கொண்டு, ஆக வேண்டியதை கவனித்து நல்லபடியாக அடக்கம் செய்துவிட்டு வந்தேன்.

அன்றைக்கு மதியம் தான் மனைவிக்கு மயக்கம் தெளிந்தது. அவளிடம் நடந்ததை எடுத்து சொல்லி புரியவைத்து அவளது கதறலை கட்டுப்படுத்தி, சமாதானப்படுத்தி ஒரு வழியாக அமைதி பெற வைத்து.. மிக மிக கொடுமையான நாள் அது.

********

இரண்டு நாள் வரை புரியவேயில்லை. என்ன நடந்தது என்று. பின்னர் இணையத்தில் அது குறித்து படிக்க தொடங்கினேன். அதில் தான் எனக்கு அறிமுகமானது இந்த Still-Birth என்னும் சொல்லின் மிக பெரும் பரிமாணம்.


உலகில் ஏற்படும் Still-Birth களில் 66% இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்கிற பேரதிர்ச்சி தரும் செய்திகள் கண்ணில் பட்டன. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி 1000 பிரசவத்தில் 22.1 பிரசவங்கள் இப்படியான Still-Birth ஆக நிகழ்கிறது. (உலக அளவில் சராசரி என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது 18.9 per 1000). 2009 ஆம் ஆண்டு மட்டும் இப்படி இறந்தே பிறந்த குழந்தைகள் இந்தியாவில் மட்டும் 6,05,230.

2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம் கிராமப்புற பிரசவங்களில் 1000க்கு 14 பிரசவங்கள் Still-Birth ஆக நடைபெறுவதாக சொல்லி இந்தியாவில் இரண்டாம் இடம் கொடுத்து இருக்கிறது தென் கிழக்கு ஆசிய பொது சுகாதார அமைப்பு (முதலிடம் கர்நாடகாவுக்கு 16/1000). நகர்ப்புறங்களில் தமிழகம் பரவாயில்லை (5/1000). ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த Still-Birth பிரச்சனையில் மிக குறைந்த அளவிலான உயிரிழப்புக்களை (1/1000) கொண்டிருக்கும் மாநிலங்கள், நாம் பின் தங்கிய மாநிலங்கள் என கிண்டலடிக்கும் பீகார் & ஜார்க்கண்ட்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்திய உடல்நல மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின், திவ்யா K பாரதி அவர்களின் ஆய்வு கட்டுரையில், இந்தியாவில் இந்த Still-Birth பிரச்சனை மிக பெரிய அளவில் இருப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க தவறிவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.


இந்த Still-Birth பிரச்சனை மிக மிக எளிமையாக தவிர்க்கப்பட கூடியது தான். அதாவது சரியான நேரத்தில், முறையான மருத்துவ பரிசோதனைகள், உணவு கட்டுபாடு, போதிய சத்துமிக்க உணவுகள், ஆரோக்கியமான சுற்றுப்புறம், சுகாதாரமான வாழ்க்கைமுறை போன்றவைகளை வைத்தே கட்டுப்படுத்த முடியும். இதில் இருந்தே தமிழக அரசு பொது சுகாதாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

நாமும் நம் மக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். கருத்தரிப்பிற்கு முன்னரே ஒரு முறை மருத்துவரை கண்டு தங்கள் உடல்நிலையை, குறைபாடுகளை கண்டறிந்து கொள்ளுவது எல்லாவித எதிர்கால பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காக்கும். இந்த அடிப்படை விஷயம் கூட எனக்கு தெரியாமல் போனது தான் எனது இழப்புக்கு காரணம்.

இப்போதெல்லாம் நான் என் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தோர் அறிந்தோர் என யார் புதிதாக திருமணம் செய்தாலும், செய்திருந்தாலும் அவர்களிடம் இது போல pre-pregnancy test செய்ய சொல்லிவிடுகிறேன்.


பத்து மாதங்கள் சுமந்து ஒவ்வொரு கணமும் ஆசை ஆசையாய் காத்திருந்து கடைசியில் கைக்கு எட்டும் போது இல்லாது போகும் துயரம் துயரங்களில் ஆக பெரும் கொடும் துயரம் என்று அறிந்தவன் என்பதாலோ என்னவோ.

******

Reference:


Printfriendly