Saturday, September 19, 2015

சகாயமும் கிரானைட் ஊழலும் – ஒரு சாமானியனின் பார்வையில்

ராது வந்த மாமணியாய் தமிழகத்தில் பல நேர்மையான அதிகாரிகள் வந்து போனதுண்டு. பிரமிக்கத்தக்க சாதனைகள் செய்தும், மக்களிடம் எளிமையாக பழகியும், நேர்மையை மட்டுமே கைக்கொண்டும் பெயரும் பெருமையும் பெற்றவர்கள் மிக பலர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் எஸ்.ராதாகிருஷ்ணன், சி.வி.ராவ், மு.கலைவாணன், அபூர்வா போன்றோரும், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் சைலேந்திரபாபு, ரவி ஆறுமுகம், கருணாசாகர், திரிபாதி போன்றோரும் அந்த நீளமான பட்டியலில் சிலர். இதில் பலரும் எந்த விளம்பரமும் இன்றி மக்கள் சேவையும் நேர்மையும் மட்டுமே பிரதானமாக கொண்டு தங்கள் அரசு பணியை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடமும் அன்பையும் அபிமானமும் பெற்றவர்கள். சிலர் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடி அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் பணியாற்றி பெருமை சேர்த்துள்ளனர்.
 
திரு. சகாயம் IAS
இந்த பட்டியலில் மிக சமீபத்திய இணைப்பு திரு. உபகாரம்பிள்ளை சகாயம் அவர்கள். பெயரை போலவே எல்லோருக்கும் உபகாரமாக திகழ்பவர். பல பல அதிரடி நடவடிக்கைகளை மக்களுக்காக எடுத்தவர். 23 முறைக்கு மேல் அவரது நேர்மைக்காகவே பந்தாடப்பட்டவர். எத்தனை மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் கலங்காமல் நேர்மையாய் இருப்பவர். எளிமையான அதிகாரி. முதல் முதலாக தானாக முன்வந்து தனது சொத்து கணக்கை வெளியிட்ட அதிகாரி. மக்களிடம் எளிமையாக பழக்கக்கூடியவர். அதைஎல்லாம் விட என்னை மிகவும் கவர்ந்தது அவரது தெளிவான வெள்ளமெனப்பாயும் அழகு தமிழ் பேச்சு. மிக மிக அதிகமாக நம்மால்  நேசிக்கப்படும் அந்த அதிகாரி தான் இப்போது சமீப காலமாக மீடியாக்களில் அதிகம் அடிபடும் நபராக இருக்கிறார். காரணம் கிரானைட் குவாரி முறைகேடு.

பின் கதை சுருக்கம்:

2008 ஆம் ஆண்டு ஒரு சமூக சேவகரால் வெளிக்கொண்டு வரப்பட்டது தான் இந்த கிரானைட் முறைகேடு விவகாரம். அப்போது அது யாராலும் அதிகமாக கண்டுகொள்ளப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை மாவட்ட கலெக்டராக திரு சகாயம் அவர்கள் பொறுப்பேற்றதும், இந்த முறைகேடு குறித்து விசாரித்து, மூன்று பெரிய நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி 2012 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். திரு. பி. ஆர். பழனிச்சாமி அவர்களின் பி.ஆர்.பி கிரானைட்ஸ் மற்றும் சிந்து கிரானைட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட்ஸ் ஆகியவை தான் அந்த மூன்று நிறுவனங்கள். இந்த கடிதம் கிடைக்கபெற்ற .நான்கு தினங்களிலேயே அதாவது 2012 மே 23 ஆம் தேதியே அப்போதைய முதல்வர் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சகாயத்தை மதுரை கலெக்டர் பதவியிலிருந்து விடுவித்து கோ ஆப்டெக்ஸின் அதிகாரியாக நியமித்து பந்தாடினார். அப்போது முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் பலத்த விமர்சனத்துக்கு ஆளானது தனி கதை. (சகாயம் மதுரை கலெக்டராக பணியாற்றிய காலம் மத்திய அரசு அறிக்கையில் வேறு மாதிரி காட்டப்பட்டு இருக்கிறது. அது ஏன் என்பதும் புரியவில்லை.)
 
சகாயம் அவர்களது சர்வீஸ் ரெகார்டு. ஹைலைட் செய்த காலம் அவர் மதுரை கலெக்டராக இருந்தார். ஆனால் ரெக்கார்டில் வேறு மாதிரி இருக்கிறது 
ஆனால் சகாயத்துக்கு பதிலாக மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்ட திரு அன்சுல் மிஸ்ரா, இந்த கிரானைட் முறைகேட்டை விரிவாக ஆராய்ந்து மொத்தம் 175 நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கண்டு பிடித்து அவற்றில் 02.08.2012 ஆம் தேதி ரெய்டு நடத்த உத்தரவிட்டார். (இதில் ஆச்சரியமான விஷயம் 19.05.2012 ஆம் தேதி முதல்வருக்கு சகாயம் அனுப்பிய கடிதம், அன்சுல் மிஸ்ரா ரெய்டுக்கு முந்தய நாள் அதாவது 01.08.2012 ஆம் தேதி யாராலோ லீக் செய்யப்பட்டு, பத்திரிக்கைகளில் வெளியானது. ஆனால் 2012 ஜூன் மாதத்திலிருந்தே அன்சுல் மிஸ்ரா முறைகேடுகள் குறித்து விசாரித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பி ரெய்டுக்கு அனுமதியும் பெற்று அதன் பேரில் தான் 02.08.2012 ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ரெய்டுக்கான நடவடிக்கை தொடங்கியதை துறையின் பிற அதிகாரிகள் மூலம் அறிந்த திரு சகாயம் அவர்கள் தான் ரெய்டுக்கு முந்தய நாள் அந்த கடிதத்தை வெளியிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டாலும், அப்படியெல்லாம் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு தனக்கான கிரெடிட்டை தேடி பெற்று கொள்ளும் நபர் சகாயம் அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.)

திரு. அன்சுல் மிஸ்ரா IAS

அப்படி அன்சுல் மிஸ்ரா ரெய்டு நடத்தி பதிவு செய்த வழக்குகள் தான் நீதிமன்றத்தில் வேகம் பிடித்து இன்றைக்கு மிக பெரிய முறைகேட்டை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஏன் சகாயம் அவர்கள் மூன்றே மூன்று நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்டினார் என பலரும் விவாதித்துக்கொண்டிருந்தாலும், அந்த மூன்று நிறுவனங்களில் முக்கியமான பி.ஆர்.பி நிறுவனம் தான் இந்த முறைகேட்டில் மிக முக்கியமான நிறுவனம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். (அன்சுல் மிஸ்ரா கிரானைட் முறைகேட்டை மிக மிக தீவிரமாக விசாரிக்க தொடங்கியதும் அவரும் மதுரை கலெக்டர் பதவியிலிருந்து மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களால் மாற்றப்பட்டார். அன்சுல் என்ன நினைத்தாரோ, அவர் தமிழக அரசு பணியே வேண்டாம் என்று மத்திய அரசு பணிக்கே சென்று விட்டார்.) 

நரபலி விவகாரம்:

பி.ஆர்.பி நிறுவனம் சார்பாக மனநலம் பாதிக்கப்பட்ட சிலரை நரபலி கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு 2004 ஆம் ஆண்டிலேயே புகாராக கொடுக்கப்பட்டது. ஆனால் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சகாயம் கலெக்டராக இருந்தபோதும் (2011-12) அதன் மீது நடவடிக்கை எதுவும் இல்லை. ஆனால் அன்சுல் மிஸ்ரா அந்த புகாரை விசாரித்தபின் என்ன காரணத்தாலோ புகார் தாரரான சேவற்கொடியோனை அழைத்து அவர் குறிப்பிடும் இடங்களில் ஏதேனும் அடையாளத்தை நட்டு வைத்து கண்காணித்துவர சொன்னார். அவரும் அதே மாதிரி அந்த இடங்களில் கல் நட்டு கண்காணித்து வந்தார். 2013 ஆம் ஆண்டு மீண்டும் சேவற்கொடியோன் இந்த நரபலி தொடர்பாக மாவட்ட எஸ்.பிக்கு ஒரு புகார் அளித்தார். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது.

இப்போதைய எபிசோட்:

இந்த நிலையில் சமூக சேவகர்கள் சார்பாக கிரானைட் முறைகேடு உயர்நீதிமன்றத்தை எட்டியது. நீதிபதிகள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மூலம் விசாரிக்கவேண்டும் என சொல்ல திரு சகாயம் அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அவர் கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார். ஆனால் தமிழக அரசு அவருக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்து விட்டது. அவருக்கான அலுவலகம், வாகனம், உதவியாளர்கள் ஏன் ஸ்டேஷனரி கூட கொடுக்க முன்வரவில்லை. ஒவ்வொன்றுக்கும் உயர்நீதிமன்றத்தை நாடி தான் சகாயம் அவர்கள் இந்த முறைகேட்டை விசாரிக்க தொடங்கினார்.  சகாயம் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதன் பின் உயர்நீதிமன்றம் கொடுத்த கண்டிப்பான உத்தரவுகளால் தமிழக அரசு வேறு வழி இல்லாமல் திரு. சகாயத்துக்கு ஒத்துழைக்க தொடங்கியது.

அக்டோபர் மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கிரானைட் மற்றும் கனிம வள விவரங்கள் குறித்த தகவல்களை தனக்கு தாக்கல் செய்யவேண்டும் என சகாயம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவில், சகாயத்தின் விசாரணை எல்லை மதுரை மாவட்டத்துக்குள் மட்டும் தான் எனவும் மற்ற மாவட்ட கலெக்டர்களை அவர் கட்டுப்படுத்தமுடியாது என சொல்லிவிட்டது. அதன் பின் தான் மதுரை கிரானைட் முறைகேடு விசாரணை தீவிரமடைந்தது. (அவர் எதற்காக எல்லா மாவட்ட ஆட்சியாளர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முனைந்தார் என்பது இன்னமும் கூட புரியாத புதிர் தான்)

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டிய நிர்பந்தம் இருந்த நிலையில், கிரானைட் முறைகேடு எனும் மெயின் மேட்டரை விட்டு நகர்ந்து நரபலி விவகாரத்தை கையில் எடுத்தார் சகாயம். 2004, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட புகார்களை தூசு தட்டி எடுத்து அவற்றை விசாரிக்க தொடங்கினார்.

நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தபோதும் தமிழக அரசு அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய இரவில் அவர் அந்த மயானத்திலேயே படுத்து உறங்கி போராடி பின்னர் தான் அரசின் ஒத்துழைப்பை அவரால் பெற முடிந்தது.

தோண்டிய இடத்தில் 5 எலும்புக்கூடுகள் தென்பட்டது. அதில் 4 எலும்பு கூடுகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. எலும்புக்கூடுகள் 4 முதல் 5 அடி ஆழத்தில் கிடைத்திருக்கின்றன. (10 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பிணத்தின் எலும்புகள் எப்படி 5 அடி ஆழத்திலேயே கிடைத்தது என்கிற கேள்வி பதிலளிக்கப்படாமல் கிடக்கிறது)

முதல் பிணம் தெற்கு நோக்கி தலைவைத்தும் மற்றவை தென்மேற்கு திசை நோக்கி தலைவைத்தும் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுவனின் பிணம் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மரணம் பற்றி  ஊர்க்காரர்கள் விவரித்து உறுதிப்படுத்தியதால் அதன் மீதான விசாரணை கைவிடப்பட்டது.

நரபலி புகார் கொடுத்த திரு சேவற்கொடியோன் பி.ஆர்.பி நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்தவர். கிரானைட் முறைகேடு விசாரணையை திசை திருப்பத்தான் இப்படி ஒரு நரபலி புகாரை அவர் முன்வைத்திருக்கிறார் என பேசப்பட்டாலும், கிடைத்திருக்கும் சடலங்கள் அவர் சொல்லியதில் உண்மை இருக்கலாமோ என சந்தேகிக்க வைக்கிறது.

இன்னொருபுறம், அந்த இடம் மயானமே அல்ல என சகாயம் அரசு ஆவணங்களை காட்டி சொல்லி இருக்கிறார். அதாவது, அந்த இடத்தை மயான பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கவில்லை, அதனால் அங்கே கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் நரபலி கொடுக்கப்பட்டவை தான் என்கிறார். ஆனால் ஊர்க்காரர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தை தான் மயானமாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவும், இப்போது கண்டு பிடிக்கப்பட்ட சடலங்கள் எல்லாம் சமீபத்தில் புதைக்கப்பட்டவை எனவும், சேவற்கொடியோனும் சகாயமும் சொல்வதை போல 10 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்டவை அல்ல எனவும், அப்படி இருந்திருந்தால் அவை வெறும் 5 அடி ஆழத்திலேயே கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் சிலரால் பேசப்படுகிறது. எலும்புக்கூடுகளில் சுற்றப்பட்ட சிவப்பு துணி (உறவினர்கள் போர்த்தும் கோடி துணி?) சற்றே புதிதாக தென்படுவதை அதற்கு ஆதாரமாக சொல்கிறார்கள்.

ஒரு சாமானியனாக நமக்குள் எழும் கேள்விகள் எல்லாம்..


  1. முக்கிய வழக்கான கிரானைட் முறைகேட்டை விட்டு நகர்ந்து நரபலி பக்கம் விசாரணை திசை திரும்பியது எதற்காக?
  2. நரபலி தானா அவை? அல்லது மயானத்தில் இயல்பாக கிடைக்கும் சடலங்களை வைத்து வழக்கை நரபலி என மேலும் இறுக்க முயற்சி நடக்கிறதா?
  3. குறித்த காலகெடுவுக்குள் முடிக்கப்படவேண்டிய விசாரணையின் தாமதத்தை நரபலி விசாரணை மூலம் சரி செய்ய முயற்சி நடக்கிறதா?
  4. தமிழக அரசு ஏன் இந்த அளவுக்கு இந்த முறைகேடு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது?
  5. விசாரணை கால அளவை நீட்டிக்கவும், திட்ட செல்வை விட அதிக தொகையை ஒதுக்குமாறும் கேட்டு சகாயம்  இப்போது கோரிக்கை வைக்க வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?
  6. உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் விசாரணை வரம்பின் கீழ் கிரானைட் முறைகேடு மற்றும் அரசுக்கு அதன் மூலமான இழப்பை கணக்கீட்டு தருவது மட்டும் தானே அடங்கும்?

என்றெல்லாம் நீள்கிறது தான்.

இதற்கான விடை அடுத்த மாதம் விசாரணை அறிக்கை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகையில் தெரிய வரலாம். அதுவரை காத்திருப்போம் நண்பர்களே.
  


Thursday, September 3, 2015

வருங்கால முதல்வர் ஸ்டாலின்?


ட்டமன்ற தேர்தல் நெருங்குது. வழக்கமான தேர்தல் அலைன்னு எதுவும் இப்போதைக்கு இல்லை. (இனிமேல் தான் யாராச்சும் அப்படி ஒண்ணை உருவாக்கணும்). ஆனா யார் முதல்வர்ங்கற விவாதம் மட்டும் சூடு பிடிச்சிருச்சு.

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் ஸ்டாலினுக்கு கலைஞரை விட அதிக ஆதரவு கிடைச்சது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திருக்கு. (பிற சலசலப்புக்கள்: சீமானுக்கும் வைகோவுக்கும் கிட்டத்தட்ட சரிநிகர் செல்வாக்கு, அதாவது சீமான் வைகோ அளவுக்கு உயர்ந்துட்டார் என்பதும், அன்புமணி கணிசமான மக்களிடம் டீசண்டான ஆதரவு வாங்க்கிருக்கார் என்பதும்). 

திமுகவின் சலசலப்பை மேலும் கல்லு விட்டு கலகலக்க வைக்கும் விதமா அண்ணன் அழகிரி கொடுத்திருக்கும் பேட்டியில் “ஸ்டாலின் முதல்வராக முடியாது”ன்னு சொல்லி இருக்கார். அவர் என்ன காரணத்துக்காக சொல்லி இருக்கார்னு தெரியாது. ஆனா அதுக்கு லைட்டா சாத்தியமிருக்குன்னு தான் எனக்கு தோணுது. நாம அது பத்தி கொஞ்சம் விரிவா பேசலாம்.


நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியிருப்பது மாதிரி, ஸ்டாலின் சட்டுனெல்லாம் அரசியல் அரங்கத்துக்கோ லைம்லைட்டுக்கோ வந்தவர் அல்ல. மிக இளம் வயதிலிருந்தே கழகத்தின் அடிப்படை தொண்டரா இருந்து களங்கள் பல கண்டு சிறை ஏகி காலங்களாய் காத்திருந்து தலைவர் மகனெனும் சலுகைகளையெல்லாம் புறம்தள்ளி சுய திறமையால் மெல்ல மெல்ல முன்னேறி கழக அரசின் துணை முதல்வராக அமர்ந்தவர். மிக பெரிய சரித்திர சாதனை புத்தகமே எழுதலாம். அத்தனை தன்னம்பிக்கை நிறைந்த போராட்ட வாழ்வு அவருடையது. ஆனால் இப்போதைய நிலைமை என்ன?

100 க்கு 80 சதவீதம் அடுத்தமுறையும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்ன்ற பரவலான எண்ணத்தை முதலில் உடைச்சவர் அவர் தான். மெல்ல மெல்ல மக்களுடன் மீடியாக்கள் மூலமா பழகி, அவருடைய இயல்பான எளிய பழகும் திறனால் மக்களின் மனதிலிருந்த வேதனைகளை எல்லாம் அறிந்து அது தொடர்பான போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் மாநாடுகள் என நடத்தி, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என கழகத்தை மக்கள் மனதில் உயரத்தில் மீண்டும் உட்கார்த்தி வைத்திருக்கிறார். இப்போதைய மக்களின் மனநிலை மெல்ல மாறி அதிமுக திமுக இரண்டுக்கும் அடுத்த தேர்தலில் சம வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டாலும், திமுகவுக்கு ஒரு அதீத நம்பிக்கை துளிர்த்திருப்பதை பரவலாக காண முடிகிறது. கழக உடன்பிறப்புக்களுக்கெல்லாம் அடுத்ததா நம்ம ஆட்சி தான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையே ஏற்பட்டு இருக்கு. நல்ல விஷயம் தான். ஆனா யார் முதல்வர்? ஸ்டாலினா அல்லது மீண்டும் தலைவரேவா? இது தான் குழப்பம். இந்த மாதிரியான ஒரு சீன்ல தான் அண்ணன் அழகிரியின் சமீபத்திய டயலாக் டெலிவரியை பார்க்கிறேன் நான்.

2016 தேர்தலில் வெற்றி பெற்றதுமே ஸ்டாலின் முதல்வராகணும்னு ஒரு தரப்பும், இல்லை இல்லை தலைவர் ஒருவருஷமோ ரெண்டுவருஷமோ முதல்வரா இருந்துட்டு அதுக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கலாம், அதுவரைக்கும் துணை முதல்வரா இருக்கட்டும்னு மற்றொரு தரப்பும் விவாதிச்சிட்டு இருக்காங்க. (இப்படியான விவாதங்கள் மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மனநிலையை உண்டுபண்ணும்னு கலைஞர் அறியாதவர் அல்ல, ஆனாலும் அதை தடுக்கும் எந்த நடவடிக்கையும் காணோம்)

ஏன் கலைஞர் முதல்வரா இருக்கணும்?

இப்போதைக்கு தமிழகத்தை பொருத்தவரைக்கும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஸ்தம்பிச்சு கிடக்கு. சுத்தமா எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலை. வளர்ச்சி திட்டங்கள்னு எதுவுமே செயல்படுத்தப்படலை. துறை அமைச்சர்களுக்கு தங்கள் துறையில் என்ன நடந்துட்டு இருக்குன்னே தெரியலை. (துறையில் இருப்பவங்களுக்கு யார் அமைச்சர்னே தெரியலை, அது வேறொரு தனி கதை). அதிமுககாரங்களே சலிப்படையுற அளவுக்கு எல்லா திட்டங்களிலும் முடக்கம். அதிமுக மீதான இந்த விரக்தி மனநிலை திமுகவுக்கு சாதகமா மாறும் தான். அப்படி மாறி திமுக கையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் செய்யவேண்டிய பணியே நிர்வாக சீர்திருத்தம் தான். அதுக்கு தலைவர் தான் சரியான ஆள். குறுகிய காலத்துக்குள் நிர்வாகத்தை அதன் சீரான பாதையில் நிறுத்தும் திறன் இப்போதைக்கு அவருக்கு மட்டும் தான் இருப்பதா பலரும் நம்புகிறார்கள்.

அவர் அப்படி இரண்டு வருஷம் நிர்வாகத்தை சீராக்கி அதன் பின் ஸ்டாலினை அரியணையில் அமர்த்தினால் எந்த சிக்கலும் இருக்காது. மாறாக ஸ்டாலின் எடுத்த எடுப்பிலேயே முதல்வராகி அவரால் சீர்திருத்த நடவடிக்கைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் போனால் கழகத்துக்கு அது ஒரு தீராத களங்கமாக, மக்கள் மத்தியில் திமுகவின் நிர்வாகத்திறமை தோற்றுவிட்டதான உணர்வாக, மீண்டு எழமுடியாத ஒரு அவநம்பிக்கையாக மாற வாய்ப்பு இருக்கு. இது தான் அந்த பயம்.

சரி, ஏன் ஸ்டாலினால் சீர்திருத்தம் செய்ய முடியாது?

ஏற்கனவே சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றவர் ஸ்டாலின். ஆனாலும் அவர் மிக எளிமையாக பழக்கக்கூடியவர், யாரிடமும் அனாவசியமாக அதிகமாக கண்டிப்பு காட்டாதவர், சிலர் கொடுக்கும் சமாளிபிக்கேஷன் விளக்கங்களை அப்படியே எற்றுக்கொண்டவர் என்றெல்லாம் சில செய்திகள் வந்தன. மேலும் அவரது பேச்சாற்றல் திமுகவிலேயே பலரை சங்கடப்படுத்தக்கூடியவை. பேச்சை அடிப்படையாக வைத்து மக்களிடம் வளர்ந்த ஒரு மாபெரும் இயக்கத்தில் பேச்சு திறமை அற்ற ஒரு தலைவர் என்பதை பலரும் ஜீரணிக்கவில்லை.


இணைய தளங்களில் அவர் எழுதுவதில் தெறிக்கும் தெளிவும் சிந்தனை செறிவும் நிர்வாக திறமும் பேச்சில் தெரிவதில்லை. பெரும்பாலும் மேடைகளில் பேசுவதை விட வாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் என்ன பிரச்சனை என்று பலரும் கேட்கலாம். இணைய தளங்களை படித்து தெரிந்து கொள்பவர்களை விட செய்தி ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் நேரடியான மேடைகளிலும் பேச்சுக்களை கேட்டு பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் மக்களை அதிகமாக கொண்ட தமிழகத்தில் அவர் ஒவ்வொரு மேடையிலும் தெளிந்த நீரோடை போலல்லாமல் ஆங்காங்கே திக்கி அவ்வப்போது தடுமாறி (மன்னிக்கவும்னு செய்தி வாசிப்பாளர் மாதிரி சொன்னாலும் கூட) பேசுவதை கவனிக்கும் மக்கள் அதை வைத்து அவரது திறமையை எடைபோட்டு கொண்டிருப்பதை அவர் அறிவாரோ என்னவோ? அந்த எடைபோடல் தான் அவருக்கான செல்வாக்கை தீர்மானிக்கும், அவருக்கு கட்டுப்படும் தன்மையை மற்றவர்களிடம் வளர்க்கும் சக்தியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் அவரது பேச்சை ஒலிபரப்பு மூலமும் மேடையிலும் காணும் மக்களின் / அதிகாரிகளின் மனநிலை, இவரை ஜமாய்ச்சிறலாம் எனும் தொனியில் இருப்பதாலோ என்னவோ, குறுகிய காலத்துக்குள் நிர்வாகத்தை அவரால் சீரமைத்துவிட முடியுமா என்கிற சந்தேகத்தை எல்லோர் மனதிலும் தூவி விட்டு சென்றிருக்கிறது. அப்படி தூவப்பட்ட விதை நாற்றாக பரிணமிக்கும் முன் அவர் சுதாரித்துக்கொள்வது, அவருக்கும், கழகத்துக்கும் தமிழகத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

பேச்சு பயிற்சிக்காக பாசறை நடத்திய பேரியக்கம் திமுக. ஆனால் இப்போதெல்லாம் அவை அரிதாகிவிட்டன. இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் கூட தங்கு தடையில்லாமல் பேசும் திறன் இழந்திருப்பதும், முன்போல் அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் இருப்பதும் (இப்போது தொடங்கி இருக்கிறது) மக்கள் மனதில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி இருக்கக்கூடும். கலைஞர் இனியேனும் சுதாரித்து கழக பேச்சு பயிற்ச்சி பாசறைகளை தீவிரமாக முன்னெடுத்து சென்றாலொழிய மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பது கடினம் என நினைக்கிறேன்.

நிச்சயமாக ஸ்டாலின் முதல்வரானால் அடிப்படை மக்களின் துயரங்கள் களைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு முன்பாக அவர் செய்யவேண்டிய விரைவான குறுகிய கால பணியான நிர்வாக சீர்திருத்தத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று தமிழக அதிகாரிகளை, மேலாண்மையை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போகிறார் என்பதில் தான் இருக்கிறது எல்லாமே.

அதை விட பெட்டர், கலைஞரே சில காலம் முதல்வராக இருந்து எல்லா சீர்திருத்தங்களையும் செய்து அலுங்காமல் குலுங்காமல் நிர்வாகத்தை ஸ்டாலினிடம் ஒப்படைத்தால் அதை முன்னெடுத்து மெருகேற்றி செல்லக்கூடிய திறமை அவரிடம் இருப்பதால் தமிழகம் நலம் பெறும்.

அடுத்த வருஷம் இதை பற்றி ஆராயலாம் நாம்.



Printfriendly