Saturday, October 24, 2015

தமிழக அரசு – முன்னணி டீலர்

ரு அரசு செயல்படவேண்டியவற்றை பற்றி சுருக்கமாக சொல்லுவதானால் வியாபாரம் தொழில் செய்வோருக்கு உதவி செய்து அதன் மூலம் வரிவருவாய் ஈட்டி சேவைகளையும் அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு உறுதிசெய்யவேண்டும் என்பார்கள்.  ஆனால் தமிழக அரசு கொஞ்சம் வித்தியாசமானது. நேரடியாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி அதை அரசின் திட்ட செலவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதிலும் ஒரு படி மேலே போய், அடிப்படை விஷயமான பொதுமக்கள் சேவை என்பதில் கூட லாபம் தரும் சேவை, லாபமில்லா சேவை என பிரித்து லாபமில்லா சேவைகளை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு வியாபார நிறுவனமாக பரிணமிக்க தொடங்கி இருக்கிறது தமிழக அரசு.

இது ஜெயலலிதாவோ கருணாநிதியோ தொடங்கி வைத்தது அல்ல. காமராஜர் காலத்திலேயே டான்சி சிறு தொழில் நிறுவனத்தை அரசாங்கமே தொடங்கியதில் ஆரம்பித்தது இந்த வியாபாரப்படுத்தல். சிறு தொழிலாளர்களுடன் போட்டியிடுவது அரசின் பணி அல்ல, மாறாக அவர்களுக்கு உதவி செய்வதும் தேவையான கட்டமைப்புக்களை உருவாக்குவதும் தான் அரசின் பணி என்கிற அடிப்படை விஷயம் கூட  அப்போதைய ஆட்சியாளர்களுக்கு புரியாததால் வந்த வினை அது. இப்போது அது பல்கி பெருகி பிரம்மாண்டமாக வளர்ந்து மிக பெரிய வியாபார ஏஜென்சியாக மாறி இருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் நோட்டு பாட புத்தகங்களை வாங்கி அதை இலவசமாக மாணவர்களுக்கு கொடுத்ததற்கு ஒரு அடிப்படை காரணமும் நியாயமான மனிதாபிமான நோக்கமும் இருந்தது. நம் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்கிற முற்போக்கு சிந்தனை அது. ஜெயலலிதா இப்போது கொடுக்கும் இலவச லாப்டாப்புக்கும் அதே காரணம் தான். ஆனால் தேவையற்ற கொள்முதல்கள் சிலவும் உள்ளது.

மிக முக்கியமான வியாபார ஏஜென்சியாக மது உற்பத்தியாளர்களின் விநியோக டீலராக இப்போது தமிழக அரசு இருக்கிறது. அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி அதன் மூலமான வருவாயை ஈட்டுகிறது. அதாவது மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் சந்தைப்படுத்துதல் வியாபாரம் போக்குவரது விநியோகம் ஆகியவற்றை அரசே செயல்படுத்துகிறது. இதன் மூலம் மது உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங்க் மற்றும் விநியோக செலவுகள் மிச்சப்படுவதுடன், மிக பெரிய அளவிலான விற்பனையும் உறுதி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த ஒயின்ஷாப் டீலராக தமிழக அரசின் டாஸ்மாக் முற்றிலுமாக மாறிவிட்டது.



சைக்கிள், ஃபேன், மிக்சி, கிரைண்டர், டிவி, மொபைல் போன்ற பல ஏலக்டிரானிக் சாதனங்களுக்கான மிகப்பெரிய டீலராக நம் தமிழக அரசு இருக்கிறது. அதாவது அரசின் கஜானாவில் இருந்து பணத்தை கொடுத்து உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து அதை நமக்கு கொடுத்து அதன் மூலம் ஒரு மிகப்பெரிய வியாபார சந்தையை உருவாக்கி வைத்திருக்கிறது அரசு.

பொதுவான நோக்கில் பார்க்கையில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதான ஒரு தோற்றம் தென்பட்டாலும், அதன் அடி ஆழத்தை அலசி பார்த்தால் அதிலுள்ள வியாபார தந்திரமும் அதன் மூலம் சில தனிப்பட்ட நபர்கள் அடையும் லாபமும் உணரமுடியும்.

உதாரணமாக அரசு மானவர்களுக்கு தரும் லாப்டாப்பை ரூ. 25000 என விலைகொடுத்து வாங்குகிறது. அதனை மானவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறது. அரசு தரும் லேப்டாப்பின் அதே செயல் திறன் வெளி சந்தையில் ரூ 23000 முதல் கிடைக்கிறது. அரசே மொத்தமாக, மொத்தமாக என்றால் லட்சக்கணக்கில், கொள்முதல் செய்கையில் உற்பத்தியாளர்கள் அதை மேலும் குறைந்த விலைக்கு, அதாவது ரூ. 20000 க்கு கொடுக்க முன்வருவார்கள். ஆனால் அதை ரூ. 25000 கொடுத்து வாங்குகிறது அரசு. மக்களின் வரிப்பணத்தில் மொத்தமாக செலவு செய்வதன் மூலம் எதிர்கால திட்டங்களுக்கான செல்வு தொகை நஷ்டப்பட்டு போவதுடன், உற்பத்தியாளர்களிடம் இருந்து வித்தியாச தொகையான ரூ. 5000 த்தில் ரூ 3000 வரை ஒரு லேப்டாப்பில் தனி நபர்கள் தங்களுக்கு என ஒதுக்கி கொள்வதாகவும் சொல்கிறார்கள். எப்படியோ அரசு லேப்டாப் டீலர் ஆகிவிட்டது.

இதே கதை தான் ஃபேன், மிக்சி, கிரைண்டர், சைக்கிள் போன்றவற்றுக்கும். உற்பத்தியாளர்களின் விற்பனை விலையிலேயே அரசும் வாங்குகிறது, அதுவும் லட்சக்கணக்கில், அதற்கு மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது, அந்த பொருட்கள் மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டு மக்களின் வாய் அடைக்கப்படுகிறது. அரசை மக்களும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறார்கள். ஆனால் உண்மையில் விற்பனை விலைக்கும் கொள்முதல் விலைக்குமான வித்தியாச தொகை யாருக்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. மிகப்பெரிய அளவில் எல்லாவற்றையும் கொள்முதல் செய்வதன் நோக்கமும் அதுதான்.

தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கல்விச்சாலைகள், தரமான கல்வி, சுகாதாரமான மருத்துவ வசதி, போக்குவரத்து, விவசாயத்துக்கான உதவி ஆகியவற்றை செய்து தரவேண்டிய அரசு, அதை விடுத்து வியாபாரம் செய்து கொண்டு இருப்பதால், மக்களிடம் இருந்து பெறப்படும் வரித்தொகை வீணாகிறது. அதாவது எதிர்காலத்துக்கான முதலீடாக இல்லாமல் நிகழ்காலத்துக்கான செலவாக அவை மாறிவிட்டது. இதன் காரணமாகவே வரலாறு காணாத நிதி நெருக்கடியை தமிழக அரசு சந்தித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு விவாசாயம் ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை கொடுத்தால், அதன் மூலம் எல்லோரும் வளம்பெற்று வேலைவாய்ப்பு மூலம் தானே சம்பாதித்து தனக்கு தேவையானவற்றை தானே வாங்கி கொள்வார்கள். இது மாதிரி அரசிடம் கையேந்தி நிற்கவும் மாட்டார்கள்.

சுயமரியாதை உள்ள ஒவ்வொருவரும் அரசின் இலவசத்தை வாங்க மறுத்து தொழில் வளர்ச்சிக்காக குரல்கொடுக்க தொடங்கினால் ஒழிய தமிழகத்தின் வளர்ச்சி உறுதியாகாது.

நாம் என்ன செய்ய போகிறோம்? அரசை அரசாக மாற்ற போகிறோமா அல்லது வியாபார டீலராக வைத்திருக்க போகிறோமா?



Printfriendly