முதலில் ஒரு அருஞ்சொற்பொருள்
Demonetisation – குறிப்பிட்ட தொகையிலான
ரூபாய் நோட்டு இனி செல்லாது என அறிவிக்கப்படுவது
Replacement of Currency – குறிப்பிட்ட தொகையிலான ரூபாய் நோட்டுக்களின் பழைய வெர்ஷனை திரும்ப
பெற்று அதற்கு பதிலாக புதிய வெர்ஷனில் அதே தொகைக்கான ரூபாய் நோட்டுக்களை
கொடுப்பது.
இந்த புரிதல் ரொம்ப முக்கியம். இந்த
பதிவு பூரா படிக்கும்போது இதை மனசுல வெச்சுக்கோங்க. அப்ப தான் குழப்பம் வராது.
******
Demonetisation – கடைசியா 1978 ஆம் வருஷம் மொரார்ஜி
தேசாய் அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது நிலுவையில் இருந்த 5000, 10000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டன. அதன் பின் அவை கொண்டுவரப்படவே இல்லை.
(அதனால் தான் அது Demonetisation)
முதல் முதலாக வெளியிடப்பட்ட 500 ரூ நோட்டு. பின்னர் இதில் பல பல வெளியீடுகள் வந்தன |
அதன் பின் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல
பல ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று இருக்கு. பழைய வெர்ஷனை மாத்தி புதிய வெர்ஷனை
வெளியிடுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. கடைசியா 2014 ஆம் வருஷம் 500 ரூ நோட்டுக்களில், ‘2005 ஆம் வருசத்துக்கு முன்பு வெளியிடப்பட்டவை’ எல்லாம்
செல்லாதுன்னு அப்போதைய அரசு அறிவிச்சது தான் இந்தியாவின் மிகப்பெரிய ரூபாய் திரும்பப்பெறும்
நடவடிக்கை. ஆனால் அப்படி அறிவிக்கிறதுக்கு முன்னாடி அதற்கு இணையான அளவுக்கு புதிய மாற்று
500 ரூபாய் நோட்டுக்களை போதுமான அளவுக்கு வங்கிகளுக்கு அனுப்பி வெச்சு, பேங்கை திடுதிப்புன்னு மூடாம, எல்லா நாளிலும் எந்த பிரச்சனையும்
இல்லாம 500 ரூ நோட்டுக்களை மாற்றிக்கலாம்னு முறையா அறிவிப்பு கொடுத்து இருந்தது அரசு.
அதாவது 500 ரூ நோட்டுக்கள் ஒழிக்கப்படலை. புதிய வெர்ஷனில் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட்டாங்க.
(அதனால் தான் அது Replacement of Currency)
இப்போ அறிவிச்சிருப்பதை நாட்டு நலனுக்கான
Demonetisation என பிரதமரே பரபரப்பான விளம்பரமா
சொன்னாலும் கூட, குறைந்த பட்ச அறிவு உள்ள எல்லாருக்குமே இது வெறும்
Replacement of Currency என்பதும், இதனால் கருப்பு பனமெல்லாம் ஒழிய வாய்ப்பே
இல்லைன்னும் தெரிஞ்சிருக்கும். ஏன்னா 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்
ஒழிக்கப்படலை. மாறாக புதிய நோட்டுக்களா வழங்கப்படுது.
மிக மிக பெரிய அளவில் பரபரப்பான டிராமாவா
அறிவிக்கப்பட்ட இப்போதைய நிகழ்வு பெரிய சொதப்பலில் விழுந்து, பிரதமரே மக்கள் படும் அல்லல்களை ஒரு வழியா புரிஞ்சுகிட்டு தனது
தவறுகளை மறைக்க எல்லா அரசியல்வாதிகளும் கையில் எடுக்கும் அதே சிம்பதி ஆயுதத்தை கையில்
எடுக்க வெச்சிருப்பது தான் இந்தியாவுக்கான மிகப்பெரிய சோதனை.
******
இனி இப்போதைய இந்த டிராமா
விஷயத்துக்கு விரிவா போகலாம்.
2012 ஆம் வருஷம் மத்திய நேரடி வரிகள்
ஆணையம் (CBDT) 500, 1000 ரூ
நோட்டுக்களை Demonetisation செய்ய கூடாதுன்னு தடை விதிச்சு
ஒரு உத்தரவை போட்டு இருக்கு. (இதில் இருந்தே பழைய காங்கிரஸ் அரசும் இதே மாதிரி ஒரு
முடிவில் இருந்திருக்காங்கன்றது புரியுது). அதனால் அப்போதைக்கு அந்த ஐடியா தள்ளி
வைக்கப்பட்டது. அப்படி Demonetisation செய்யக்கூடாதுன்னு
CBDT சொன்னதுக்கு காரணம் அது மக்களின் பணப்புழக்கத்தை வெகுவா பாதிக்கும்
என்பது.
அதன் பின் கடந்த 2016 ஆம் வருஷம்
அக்டோபர் மாசம் 20 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் ரிசர்வ்
வங்கியின் போர்டு மீட்டிங் நடந்தது (அது ஏன் மும்பைலயோ டெல்லிலயோ இல்லாம கான்பூர்? அதுவும் தேர்தல் நடக்கபோற மாநிலம் வேறேன்னு எல்லாம்
குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு இருக்காம மேல படிங்க)
அந்த மீட்டிங்க்ல தான் ரெண்டு
முக்கியமான விஷயம் பேசப்பட்டது. ஒண்ணு புதிதா 2000 ரூ நோட்டுக்கள்
கொண்டுவரப்படுவது. மற்றொன்று 500 1000 ரூபாய் நோட்டுக்கள் Demonetisation
செய்யப்படுவது. இந்த விஷயத்தை
பற்றி பல பத்திரிகைகளும் பெரிசா கண்டுக்கிடலை. ஆனா பிஸினஸ் லைன் பத்திரிக்கையின் அக்ட்டோபர் 21
ஆம் தேதி இதழில் இது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பபெற வாய்ப்பு இருக்குன்ற மாதிரி ஒரு
யூகமான செய்தி வந்திருந்தது.
ஆனால் கான்பூரில் இருந்து வெளிவரும்
ஒரு ஹிந்தி நாளிதழான ‘டெயினிக் ஜாக்ரன்’ வெளியீட்டின் அக்டோபர் 27 ஆம் தேதி பதிப்பில் முதல் பக்கத்தில் கீழே
சின்னதா ஒரு பெட்டி செய்தியா இந்த செய்தியும் வெளி ஆகி இருந்தது. அதை எழுதியவர்
பிரஜேஷ் துபே என்னும் நிருபர். அவருக்கு அப்போது அவர் எழுதிய கட்டுரையின்
முக்கியத்துவம் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லைதான். (இப்ப அவர் திடீர் ஹீரோ)
இதில் இருந்து நமக்கு தெரிய வரும்
முக்கியமான விஷயம் என்னன்னா, பிரதமர்
சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றும் அவ்வளவு ரகசியமா வைக்கப்படலை, குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களுக்கும் ரிசர்வ் வங்கியின் பல
அதிகாரிகளுக்கும் முன்பே தெரியும் என்பது தான். பத்திரிக்கை செய்தியை படிச்ச
பலரும் அப்பவே உஷாராகி தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய்
நோட்டுக்களை மாற்றி 100 ரூபாய் தாள்களாக சேகரிச்சுக்கிட்டதா இப்போ சொல்லப்படுது.
*******
கடந்த 4, 5 நாளா எந்த வங்கியிலும் ஏ.டி.எம்மிலும் கேஷ் இல்லை. மக்கள்
தினசரி அல்லாடிட்டு இருக்காங்க. கிலோ மீட்டர் கணக்கில் ஒவ்வொரு பேங்க் வாசலிலும்
கியூ நிக்குது. உணவோ குடிநீரோ இல்லாம ஒவ்வொருவரும் மணிக்கணக்கா வெயிலில் நின்னு
பணத்தை மாற்றீட்டு போறாங்க.
ரிசர்வ் வங்கியோ தேவையான பணம்
வங்கிகளுக்கு அனுப்பியாச்சுன்னு சொல்லுது. வங்கிகளோ எங்களிடம் போதுமான அளவுக்கு
100 ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பு இல்லைன்னு சொல்லுது. நிதி அமைச்சகமோ நோட்டு
தட்டுப்பாடை போக்க 2000, 500 ரூபாய் புதிய
நோட்டுக்கள் விரைவா அச்சடிக்கப்பட்டு வருந்துன்னு சொல்றார். பிரதமரோ நான் ஏதாவது
தப்பு செஞ்சிருந்து உங்களை எல்லாம் சிரமப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்கோங்கன்னு தன்னுடைய
டிரெட் மார்க் செண்டிமெண்டல் சிம்பதியோட சொல்லிருக்கார்.
இதில் இருந்தே எங்கேயோ தப்பு நடந்து
இருக்குனு புரியுது இல்லே?
இனி அதை புள்ளிவிவர அடிப்படையில்
டீட்டேயிலா பார்க்கலாம்.
என்னை பொறுத்தவரை இந்த Demonetisation என்கிற பெயரில் நடத்தப்படும் Replacement of Currency ரொம்ப முக்கியமான
நடவடிக்கை. வரவேற்க வேண்டிய துணிச்சலான முடிவு. இதனால் கருப்பு பணம் கட்டுப்படாது
ஆனாலும் நிச்சயமா கள்ள நோட்டு புழக்கம் முற்றிலுமா கட்டுப்படுத்தப்படும். அதனால்
இந்த துணிச்சலான முடிவை எடுத்த பிரதமர் மோடி பாராட்டுக்கு உரியவர் தான். சந்தேகமே
இல்லை.
ஆனா அதை செயல்படுத்த மத்திய நிதி
அமைச்சகம் தேர்ந்தெடுத்த வழிமுறைகளும் ஏற்பாடுகளும் தான் இந்த மாபெரும் திட்டத்தை
காமெடி டிராமாவா ஆக்கிருக்கு.
ரிசர்வ் வங்கி கணக்கு படி இந்தியாவில்
2016 மார்ச் 31 ஆம் தேதி நிலைமையில் 1000 ரூ நோட்டு 633 கோடி பீஸ்களும், 500 ரூ நோட்டு 1571 கோடி பீஸ்களும், 100
ரூ நோட்டு 1578 கோடி பீஸ்களும் வெளியிடப்பட்டு நாட்டில் இருக்கு.
இதில் 500, 1000 ரூ நோட்டுக்கள் செல்லாதுன்னு அறிவிக்கப்பட்டு அதுக்கு
பதிலா 2000 ரூ நோட்டுக்கள் வெளியிடப்படும்னு சொன்னா,
கிட்டத்தட்ட இப்போ புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களின் எண்ணிக்கையில் ஜஸ்ட் 25%
நோட்டுகள் வெளியிட்டால் போதும் (4 x 500 க்கு பதிலா 1 x 2000). அது தான் அரசின் ஐடியா. ஆனா அந்த புதிதா அச்சடிக்கப்பட்ட 2000 ரூ
நோட்டுக்களை ஏ.டி.எம் இயந்தரங்களின் கேசட்டுகளில் வைத்து டிஸ்பென்ஸ் செய்து
டிரையல் செய்து பார்த்தார்களா இல்லையான்னு தெரியலை, இப்போ
ஏ.டி.எம் மூலமா 2000 ரூ நோட்டுக்களையும் புதிய 500 ரூ நோட்டுக்களையும் மக்களுக்கு
வழங்க முடியலைன்னு அரசு அறிவிச்சிருக்கு. அதாவது ஏற்கனவே இருக்கும் கேசட்டுகளில்
இந்த புதிய 2000, 500 ரூ நோட்டுக்களை மேனேஜ் செய்ய முடியலை.
இதுக்கு அடுத்த தீர்வு கேசட்டுக்களை எல்லாம் மாற்றணும். அது பெரிய வேலை. நாடு
முழுதும் உள்ள கோடிக்கணக்கான ஏ.டி.எம் இயந்திரங்களின் கேசட்டுக்கள் மாற்றுவது அவ்வளவு
சீக்கிரம் நடக்கும்னு தோணலை.
அடுத்த தீர்வு என்னன்னா, எல்லா ஏடிஎம் இயந்திரங்களிலும்,
வங்கிகளிலும் 100 ரூ 50 ரூ நோட்டுக்களை வழங்குவது. இது தான் கைவசம் இருக்கும் ஒரே
தீர்வு. அதை செயல்படுத்த முடிவெடுத்த அரசு, மொத்தமாக நாடு
முழுதும் உள்ள வங்கிகளில் எத்தனை 100 ரூ, எத்தனை 50 ரூ நோட்டுக்கள் கையிருப்பு இருக்குன்ற விவரத்தை சேகரிக்காம
போயிருச்சு. அதனால் எல்லா வங்கிகளிலும், ஏடிஎம் வாசலிலும்
நீண்ட கியூவில் மக்கள் நின்றுகொண்டே இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும்.
அரசு நினைத்திருந்தால் ஒரே நாளில்
எல்லா வங்கிகளிடமிருக்கும் கையிருப்பு எவ்வளவு எனும் விவரத்தை சேகரிச்சு அதுக்கு
தகுந்த மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ அதை செய்யவேயில்லை என சொல்றாங்க.
இப்போதைக்கு வங்கிகள் எப்படி
சமாளிக்குதுன்னா, 100 ரூ நோட்டுகள் மற்றவர்கள் மூலமா வங்கிக்கு
கிடைப்பதையும்,
ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனுப்பி வைப்பதையும் வெச்சு எல்லோருக்கும்
கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து (சம வாய்ப்பு கொடுக்கணுமில்லே?)
சமாளிக்கிறாங்க. அதனால் தான் ஒரு நபருக்கு வெறும் ரூ. 4000 மட்டும் தான் எனும்
வரம்பு. (குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் பண்டில் பண்டிலா 2000 ரூ நோட்டுக்களை
மாற்றி அதை செல்ஃபி வேறே எடுத்து சோசியல் மீடியாவுல வெளியீட்டு இருக்காங்களே எப்படி? அவங்களுக்கு எல்லாம் இந்த 4000 லிமிட் கிடையாதான்னு எல்லாம் கேட்டா நம்மளை
தேச துரோகி லிஸ்ட்ல சேர்த்திருவாங்க என்பதால் அத்தகைய கேள்விகளை தவிர்ப்போமாக. ஆமென்!)
குறைஞ்ச பட்சம் ஏடிஎம், டெபிட் கிரெடிட் கார்டுகள் மூலமா நேர்மையான பரிவர்த்தனை செய்யும்
மக்களுக்கு அப்படிபட்ட பரிவர்த்தனைக்கான கட்டணங்களையாவது ரத்து செஞ்சிருக்கல்லாம் அரசு.
அதை விடுத்து ராகுலை குத்தம் சொல்றதா நினைச்சு, “இன்னைக்கு ஊழல்
செஞ்சவங்க எல்லாம் மொத்தமாக வங்கிகளின் வாசலில் லைன்ல நிக்குறாங்க”ன்னு பனாஜில நேத்து
பேசிய பிரதமர் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இன்சல்ட் பன்னீட்டாருன்னு வேற ஒரு குரூப்
கொந்தளிச்சிட்டு இருக்கு. (அவர் நம்மளை இன்சல்ட் பண்றது என்னவோ இது தான் புதுசுன்ற
மாதிரி)
சரி அந்த 100 ரூ நோட்டெல்லாம் என்ன
ஆச்சு? அது தான் இப்போதைக்கு மில்லியன் டாலர்
கேள்வி. பெரும்பாலான 1000, 500 ரூ நோட்டுக்கள் வெளியே
வந்திருச்சு. சிலர் மாத்திட்டாங்க, பலர் வங்கியில் டெபாசிட்
செஞ்சிட்டாங்க. கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்த 500, 1000
ரூ நோட்டுக்களில் சுமார் 73 சதவிகிதம் நோட்டுக்கள் இப்போது வங்கிக்கு பத்திரமா திரும்ப
வந்திருச்சு. ஆனா வங்கியிலும் ஏடிஎம் மிஷினிலும் இல்லாத அந்த 100 ரூ நோட்டுக்கள்
மக்களிடமும் கொஞ்சமா தான் புழக்கத்தில் இருக்கு என்பதே லாஜிக்கா இடிக்குது.
அனேகமா அரசு நினைச்சமாதிரி 500 ரூ
நோட்டுக்களா அல்லாம எல்லோரும் 100 ரூ நோட்டுக்களா பதுக்கி வெச்சிருக்காங்களான்னு
ஒரு சந்தேகம் இப்போ தான் அரசுக்கே வந்திருக்கு.
இந்த சிச்சுவேஷன்ல தான் மேலே சொன்ன
டைனிக் ஜாக்ரான் பத்திரிக்கை செய்தியை நீங்க பார்க்கணும். அதாவது ரிசர்வ்
வங்கியின் புதிய கவர்னரா பதவி ஏற்றுகிட்ட ஊர்ஜித் பட்டேல் அவர்கள் நடத்திய
கான்பூர் போர்டு மீட்டிங்கில், அரசின் Replacement of Currency திட்டத்தை 2
வாரத்துக்கு முன்பே வெளியாகி பலரும் அப்பவே உஷார் ஆகிருக்கலாம்னும் சிலருக்கு
தோணுது. (இந்த ஊர்ஜித் பட்டேல் இதற்கு முன்பாக ரிலயன்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகரா
இருந்தவர் என்பது எல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது). இந்த காரணங்களால் தான்
100 ரூ நோட்டுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கணும் என்பது பொருளாதார நிபுணர்களின்
கருத்து.
மக்களிடம் இருக்கும் பண புழக்கம்னு எடுத்துக்கிட்டா
கூட கடந்த 2 வருஷத்தில் கிட்டத்தட்ட 55% அதிகரிச்சிருக்குன்னு ரிசர்வ் வங்கி சொல்லுது.
அதாவது வங்கிகள் கிட்டே இருந்த பணத்தை எல்லாம் மக்கள் வெளியில் எடுத்துட்டாங்க. மக்கள்
கிட்டே தான் இப்போ வங்கிகளை விட அதிகமா பணம் புழங்குதுன்னு ரிசர்வ் வங்கி சொல்லுது.
இதில் குறிப்பிட்ட அளவிலான பெரிய தொகை 100 ரூ நோட்டுக்களா பதுக்கப்பட்டு இருக்கலாம்னு அரசு நினைக்குது. அதனால் தான் இத்தனை
நாளாகியும் வங்கிகளில் பணப்பற்றாக்குறை நீடிக்குது.
நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தை சட்டபூர்வமான
ஐடி கார்டுகள் மூலமா வங்கியில் கால்கடுக்க நின்னு மாற்றீட்டு போகும் பொதுமக்கள் எல்லாரையும்
ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்தும், பெரும் பெரும்
தொழிலதிபர்களையும், கருப்பு பண முதலைகளையும் முன்கூட்டிய தகவல்களால்
பாதுகாத்தும் தனது பணியை மத்திய அரசு செவ்வனே செய்துட்டு இருக்குன்றது புரியுதுல்ல?
******
ஆகவே மக்களே, முன்னேற்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்ட இந்த டிராமாவால் நீங்கள்
பாதிக்கப்பட்டு இருந்தாலும் நாட்டு நலன் கருதி, எதிர்கால நன்மைகளை
கருத்தில் கொண்டு, நிதி அமைச்சகம் சொல்வது போல 3 வாரமோ, பிரதமர் சொல்வது போல 50 நாட்களோ பொறுத்து அருள வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கை.
(வேறே என்னத்தை சொல்ல?)
ரிஃபரன்ஸ்:
- தைனிக் ஜாக்ரான் நாளிதழின் 2016 அக்டோபர் 27 ஆம் தேதி பதிப்பு
- தைனிக் ஜாக்ரான் கட்டுரை ஆசிரியர் பற்றிய செய்தி
- 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி பெரிய அளவில் ரூபாய் நோட்டுக்களைதிரும்ப பெற்றதுக்கான செய்தி