Monday, December 19, 2016

சசிகலா

சிகலா.

இந்த பெயர் தான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழக அரசியலின் முக்கிய பங்கு வகித்த பெயர். அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு தோழியாக அறிமுகமாகி, அவரது கடுமையான காலகட்டங்களில் உற்ற துணையாக இருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தினரால் அவரது உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலங்களில் தனது உறவினர்களை கொண்டு தனியாக ஒரு பாதுகாப்பு படையை அமைத்து பாதுகாத்து, ஜெ. அரசு நிர்வாகத்தில் முழு மூச்சில் ஈடுபட்டிருந்த காலகட்டங்களில் அவரது தனிப்பட்ட உடமைகளுக்கும் அவரது உடல்நலத்துக்கும் பொறுப்பெடுத்து என பல பல வகைகளில் துணையாக இருந்தவர். 

இன்னொருபக்கம், ஜெ.வுடனான நெருக்கத்தை பயன்படுத்தி, தன்னையும் தனது உறவினர்களையும் தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அரசாங்க ரீதியாகவும் பலமான பவர் செண்டர்களாக உருவாக்கியதாகவும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலரையும் மிரட்டி சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதிமுக நிர்வாகத்திலும் அரசின் நிர்வாகத்திலும் பல வகைகளிலும் தலையீடு செய்து தான் விரும்பிய படியே தமிழகத்தை பின்னனியில் இருந்து ஆட்டி வைத்து கொண்டிருந்தவர் எனவும் பரவலாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர்.



இதன் காரணமாகவே, 'சசிகலாவும் அவரது சுற்றத்தாரும் உறவினர்களும் தனக்கு தெரியாமல் தன்னுடைய கட்சியிலும் அரசிலும் பல தலையீடுகள் செய்துவந்ததாக அறிந்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்தும் தனது வீட்டில் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைப்பதாகவும்' ஜெயலலிதா அறிக்கை வெளியீட்டு நீக்கியதும், சில மாதங்கள் கழித்து, 'அவை எல்லாம் சசிகலாவுக்கு தெரியாமலேயே நடந்ததாக சசிகலாவே அறிக்கை விட்டதோடு, இனிமேல் உயிருள்ளவரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், தனது உறவினர்களுடனோ சுற்றத்தாருடனோ இனி எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்பதாகவும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டதை' அடுத்து, ஜெயலலிதா சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்டதும், அதே சமயம் அவரது உறவினர்கள் அனைவரும் ஒதுக்கி வைக்கப்பட்டது ஒதுக்கிவைக்கப்பட்டதாகவே இருக்கும் என அறிவித்ததும் வரலாறு.

எது எப்படியாயினும், ஜெயலலிதா என்கிற தனி நபருக்கு சசிகலா எனும் தனி நபர் கொடுத்த ஆதரவும் அனுசரணையும் அக்கறையும் மனதிடமும் தோழமையும் மெச்ச தகுந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இப்போது, ஜெயலலிதா நம்மை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்தி மறைந்துவிட்ட இந்நிலையில், மொத்த கட்சியினரும் திடீரென சசிகலா விசுவாசிகளாக மாறியதோடு மட்டுமலாமல், ஜெயலலிதா இத்தனை வருடங்களாக செய்துவந்த நிர்வாகத்திறமைக்கும் கூட சசிகலா தான் வழிகாட்டி என சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா அவர்கள் தான் இருந்து கட்சியை வழி நடத்தவேண்டும் என பல நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வேண்டி விரும்பி கேட்டு கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். 

இன்னும் சிலரோ மேலும் ஒரு படி முன்னேறி தமிழகத்தின் முதல்வராகவும் சசிகலா தான் இருந்து தமிழகத்தை 'காப்பாற்ற' வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நேற்றைய தினம் இதே கோரிக்கையை வலியுறுத்தி சில அமைச்சர்களே திருமுடி காணிக்கை செலுத்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இச்சூழலில், சசிகலா கட்சியின் தலைமையோ அரசின் தலைமையோ ஏற்பது என்பது தமிழகத்துக்கு நன்மை பயக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டிய கடமை தமிழகத்திலுள்ள நம் அனைவருக்கும் உள்ளது. 

சசிகலா அவர்கள் முதல்வராக வருவதில் எந்த ஆட்சேபணையும் யாருக்கும் இருக்க முடியாது. அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்.

ஆனால் அதிமுகவின் பொது செயலாளராக அவர் வருவதில் மட்டும் பல சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக அவர் கட்சியில் 'மீண்டும்' சேர்த்துக்கொள்ளப்பட்டு இன்னும் 5 ஆண்டுகள் முடியவில்லை. கட்சி விதிகளின் படி, கழகத்தில் ஐந்து ஆண்டுகள் 'தொடர்ச்சியாக' உறுப்பினராக இருக்கும் ஒருவரை தான் நிர்வாகியாக நியமிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், கழகத்தில் ஒரு கிளைக்கழக செயலாளராகக் கூட இப்போது சசிகலா அவர்களை நியமிக்க முடியாது.

இரண்டொரு நாட்கள் முன்பு பொன்னையன் அவர்கள், சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கான தடைகள் தளர்த்தப்படும் என சொல்லி இருக்கிறார். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. விதிகளை மாற்றுவதற்கும்  ஒரு பொதுச்செயலாளர் வேண்டும். ஆனால் இப்போது பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கிறது.

ஒரு வேளை ஜெ. ஏற்கனவே விதிகளை தளர்த்தி இருப்பதாக ஒரு ஆவணத்தை தயார் செய்து வெளியிடலாம். ஆனால் அது சட்டப்படி செல்லாது. ஏனெனில் விதிமுறைகளில் மாற்றம் என்பது, பொதுக்குழு செயற்குழு மூலமாக மாற்றி அது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழிலும் பிற பத்திரிக்கைகளிலும் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி அவர்களது ஒப்புதலையும் வாங்கி இருக்கவேண்டும்.

இப்போது முன் தேதியிட்டு ஒரு ஆவணத்தை தயார் செய்தாலும், நாளேடுகளில் பழைய தேதியில் பிரசுரித்ததாக ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல் ஆணைய ஒப்புதலை முன் தேதியிட்டு பெறுவது சற்று சிக்கலான காரியம். நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களில் ஏதேனும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் சந்தேகம் கிளப்பினாலும் அந்த ஆவணம் சட்ட ரீதியாக நிற்பது கடினம்.

இவை ஒரு புறமிருக்க, கட்சியின் அடிமட்ட தொண்டனின் ஆதரவை பெறுவது தான் மிகப்பெரிய சவால்.  ஜெவுடன் பல முறை பயணித்து இருந்தாலும், தனிப்பட்ட முறையில் கழகத்தின் உறுப்பினராக கட்சி சார்ந்து கட்சிக்காக மாவட்டம் தோறும் பயணித்ததோ, நிர்வாகிகள் சந்திப்போ, கொடியேற்றமோ, போராட்டமோ, ஏன் அட்லீஸ்ட் ஒரு பொதுக்கூட்டமோ கூட அவர் கலந்துகொண்டதில்லை. இதை எல்லாம் செய்யாமல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்களை வேண்டுமானால் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தொண்டர்களை ஒருபோதும் அப்படி சமாதானப்படுத்திவிட முடியாது.

திமுகவை பொறுத்த வரை, அந்தந்த மாவட்ட / பகுதி கழக முன்னணியினர் சொல்லுவதை அனுசரித்து தான் தொண்டர்கள் அதன்படி நடந்துகொள்வார்கள். ஆனால் அதிமுக தொண்டன் அப்படி அல்ல. தலைமைக்கும் கட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவன். அவன் பிரமுகர்களுக்காகவோ, அமைச்சர்களுக்காகவோ இயங்கவே மாட்டான்.

இப்போது சசிகலாவை ஆதரிப்போர் பலரும் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள், பிற கட்சிகளிலிருந்து பதவிகளுக்காக வந்திணைந்தவர்கள், மிகச்சமீப காலங்களில் கட்சியில் இணைந்த கழகத்தின் ஆரம்பகால வரலாறு அறியாதவர்கள் போன்றோரே. பொன்னையன், பன்ருட்டியார், செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன், கருணாஸ் போன்ற பலரும் இந்த பட்டியலில் வருபவர்களே. அவர்களுக்கு எந்த தலைமையை வேண்டுமானாலும் சட்டென ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அவரது கட்சியில் இணைத்துக்கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் தான் கட்சியின் பலம். நிர்வாகிகள், அமைச்சர்கள் என ஒரு ஐம்பது பேர் ஆளுக்கு ஐம்பது ஐம்பது பேரை கொண்டு வந்து காட்டி ஆதரவை வெளிப்படுத்துவதை, ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக ஊடகங்கள் உருவகப்படுத்துவது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது தெரியவில்லை. ஏனெனில் சில முக்கியமான கால கட்டங்களில், கட்சியின் நலனையும் கட்சி கொள்கையையும் காப்பாற்றும் முடிவை தொண்டர்களே எடுத்தனர்.

தலைமையால் நீக்கப்பட்டவர், ஒதுக்கிவைக்கப்பட்டவர், பின்னர் நிபந்தனைகளோடு இணைத்துக்கொள்ளப்பட்டவர் என்பதாலேயே அரை மனதாக சசிகலாவை ஏற்றுக்கொண்ட தொண்டன்..., இப்போது அந்த நிபந்தனைகள் அப்பட்டமாக மீறப்படுவதை ஒப்புக்கொள்ளவே மாட்டான். சசிகலா நீக்கப்பட்டதை கொண்டாடியவன், பின்னர் ஜெ. அவரை உறவினர்களுடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் இணைத்துக்கொண்டபோது மவுனமாக ஏற்றுக்கொண்டவன், மிக சமீபத்தில் கூட நெல்லையில் சின்னம்மா பேரவை என ஒன்றை தொடங்கியவர்களை ஜெ கட்சியை விட்டே நீக்கியதை அறிந்து சமாதானமும் நம்பிக்கையும் கொண்டவன் அத்தொண்டன். அந்த தொண்டனின் உள்ளுணர்வை புரிந்து கொண்டதால் தான் ஜெ. அப்படியான நிபந்தனைகளை விதித்திருந்தார் என்பது அவனுக்கு தெரியும். இப்போது அதை எல்லாம் மீறி இருப்பது அவனது கருத்துக்கு இனி மதிப்பில்லை என்பதை அவனுக்கு திட்டவட்டமாக உணர்த்தி இருக்கக்கூடும்.

எனவே அவர்களை சமாதானப்படுத்தி அவர்களது ஒப்புதலுக்குரிய தலைவராக வர சசிகலாவால் முடிகிறதா என்பதை தான் நமக்கு முக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனெனில் சில நிர்வாகிகளின் ஆதரவை விட, லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவு மட்டுமே தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை இத்தனை வருடம் ஜெ.வுடன் இருந்த சசிகலாவுக்கு புரிந்துகொள்ள கடினமான விஷயம் அல்ல.

நிற்க!

அதிமுக கட்சி பொது செயலாளர் (அ) தமிழக அதிமுக அரசின் முதல்வர் (அ) ஜெ.வின் சொத்துக்களின் வாரிசு என எந்த ஒரு பதவியில் சசிகலா அமர்ந்தாலும் அதன் மற்றொரு விளைவு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்து குவிப்பு வழக்கின் அப்பீலின் முடிவை மாற்றக்கூடும். வாதங்கள் முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருந்தாலும், இப்போதைய நிகழ்வுகள் நிச்சயமாக தீர்ப்பு எழுதுபவரின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதுவரையும், ஜெ.வின் அதிகாரத்தை பயன்படுத்தி சசி & கோ சொத்துக்கள் வாங்கியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும், கூட்டுச்சதி என்கிற குற்றச்சாட்டையும், பொருளாதார பகிர்வு / கூட்டணி என்பதையும், தொழில் பங்குதாரர் என்பதையும் திட்டவட்டமாக மறுத்து வாதாடி வந்தவர் சசிகலா.

அப்படியிருக்க, இப்போது ஜெ.வின் சொத்துக்களுக்கும் பதவிகளுக்கும் சசிகலா தான் வாரிசுதாரர் என்றால் அத்தனை குற்றச்சாட்டுக்களும் உண்மை என்பது ஊர்ஜிதமாகிவிடும்.

அவரை தலைமை ஏற்க வற்புறுத்தும் தலைவர்கள் இதையெல்லாம் யோசித்தார்களா? யோசித்து அதற்காக தான் வற்புறித்தி வருகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை.

ஆரம்பத்திலிருந்தே கட்சி மற்றும் அரசின் முடிவுகளில் ஜெ.வுக்கு சசிகலாவின் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் இருந்ததாக மக்களவை துணை சபாநாயகர் அவர்களே சொல்லி இருப்பது கூட சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா வைத்த வாதங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது.

எதுவானாலும், சொ.கு.தீர்ப்பு வரும்வரை சசிகலா ஒதுங்கி நிற்பது தான் அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது என்பதை அவரது வழக்கறிஞர்கள் எடுத்து சொல்லி இருக்கக்கூடும்.

அப்படி ஒரு சூழல் ஏற்படுமானால், புத்திசாலித்தனமாக சசிகலா அவர்கள் பின்னணி அரசியலையே வழக்கம்போல செய்து வருவதானால், நேரடி அரசியல் பொறுப்புக்கு அதிமுகவில் தகுதியானவர் யார் என்பதை தான் கவலையோடு ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்..

ஏனெனில், தமிழக அரசியலை பொருத்தவரையும் திமுகவும் அதிமுகவும் இரு கண்கள். இரட்டை குழல் துப்பாக்கி போன்றவை. அதில் ஒற்றைக்குழல் இப்போது ஊனமடைந்து கிடக்கையில் அதனை செப்பனிட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தான் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிற கோட்பாடுடையவன் நான். 

மேலும், சில காலங்களாக தீவிர அதிமுக இயக்கத்தவனாக கழிந்தவன், பிரச்சாரங்கள் செய்தவன் என்கிற முறையிலும், எம்.ஜி.ஆரை அவரது இயக்கத்தை நேசித்தவன், நேசிப்பவன் என்கிற முறையிலும், அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் நலனையும் பற்றி கவலைகொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

பொறுத்திருந்து கவனிப்போம்!

Printfriendly