கடந்த
மார்ச் 31 ஆம்
தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
மிக மிக முக்கியமானது. ஏனெனில் இந்திய தொழில் வளர்ச்சியை பாதிக்கும்/தீர்மானிக்கும் முடிவுகளை அன்று அவர்கள் எடுத்திருந்தார்கள். அது என்ன அவ்வளவு முக்கியமான முடிவுகள்? ஒண்ணொண்ணா பார்ப்போமா?
முதலாவதாக, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த
5 விதிகளை (Invoice Rules; Payment Rules; Refund Rules; Registration Rules; Return Rules) சிறு சிறு மாற்றங்களுடன் இறுதி செய்திருக்கிறார்கள்.
அடுத்ததாக
மீதமுள்ள 4 விதிகளை (Input Tax Credit Rules; Transitional Provision Rules; Valuation of Supply Rules; Composition Scheme Rules) கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த கவுன்சில்
கூட்டம் நடக்கும் பொழுது, இந்த 4 விதிகளும்
விரிவாக விவாதிக்கப்பட்டு, ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு
இறுதி செய்யப்படும்.
மூன்றாவது
முடிவு தான் மிக முக்கியமானது.
அதாவது அடுத்த கூட்டம் மே மாதம் 18, 19 ஆகிய தேதிகளில்
ஸ்ரீநகரில் நடக்கும் என்பது. அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம்
என்கிறீர்களா?
பிரதமர்
மோடியும் அவரது கட்சியினரும் ஜூலை
1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டியை அமல்ப்படுத்தியே ஆகவேண்டும் என முழங்கி கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் கவுன்சிலோ ஏப்ரல் மாதத்தில் கூடுவதாக இல்லை. அடுத்த கூட்டம் மே 18,19 தான். அதில் விவாதிக்கப்படும் திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு அனேகமாக மே
25க்குள் பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் என நினைக்கிறேன்.
அது விவாதிக்கப்பட்டு வெற்றிபெற அனேகமாக மே 30 ஆகலாம்.
அதன் பின்னர்
இறுதி செய்யப்பட்ட அந்த விதிகளின் அடிப்படையில் 32 மாநிலங்களும் புதிதாக சட்டங்கள் இயற்றி தங்கள்
சட்டசபைகளில் சட்டத்தை தாக்கல் செய்து வெற்றி பெறச்செய்து, குடியரசு
தலைவரின் ஒப்புதலை பெற்றால் தான் சட்டம் முழுமை பெறும். இது முடிய
எப்படியும் ஜூன் 25 ஆகலாம்.
இப்படி
இருக்க ஜூலை 1 ல் அமல்ப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அரசுக்கே
அப்படி ஒரு எண்ணம் இல்லை. இருந்திருந்தால் ஏப்ரல் மாதம் முழுக்க
சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.
தொழில்
வர்த்தக நிறுவனங்களை பொறுத்தவரை,
இப்போதைக்கு குருடர்கள் தடவிப்பார்த்த யானை போல தான் இருக்கிறது ஜி.எஸ்.டி. முழுமையாக எந்த விவரமும்
இறுதி செய்யப்படவில்லை. அப்படி ஏதேனும் இறுதி என சொல்லப்பட்டு
அதன் அடிப்படையில் தங்கள் வியாபாரத்தை கணக்கிட்டு ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அந்த
‘இறுதி’ செய்யப்பட்ட சட்டத்தில் ஒரு திருத்தம்
கொண்டு வந்து மீண்டும் குழப்பி விடுகிறார்கள்.
சரி, அரசு பல வகையான பிரச்சனைகளையும்
விரிவாக ஆராய்ந்து வருவதால் பல பல திருத்தங்களை தேவைக்கு ஏற்ப செய்துகொண்டே வருகிறது.
அதில் தவறு இல்லை. இதில் தொழில் நிறுவனங்களுக்கு
என்ன பிரச்சனை?
தொழில்
நிறுவனங்களுக்கு இப்போதைக்கு ஜி.எஸ்.டி தங்கள் தொழிலை எப்படி பாதிக்கும் என்பதே புரியவில்லை.
எல்லா சட்டங்களும் இறுதி செய்யப்பட்டால் தான் ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும்.
அதன் பின் அது தங்கள் தொழிலுக்கு சாதகமா பாதகமா என ஆராய்ந்து அதற்கு
தகுந்த படி தங்களின் வியாபார திட்டங்களை வகுக்க வேண்டும்.
இது தவிர, தங்களின் கணக்குகளை இரு
வகையாக பிரிக்கவேண்டும். ஜி.எஸ்.டிக்கு முன், ஜி.எஸ்.டிக்கு பின். இரு வகையாக பிரித்தால் தான் தெளிவான வரி
தாக்கல் செய்யமுடியும். ஏதேனும் சிறு பிழை இருந்தாலும் ஜி.எஸ்.டி சட்டப்படி ‘கைது’
நடவடிக்கையே எடுக்க முடியும்.
எனவே தொழில்
நிறுவனங்கள், எல்லா சட்ட விதிகளையும் அறிந்து அதன் அடிப்படையில் தான் தங்களது கணக்கு வழக்குகளை
நிர்வகிக்க முடியும். அரசே ஜூன் மத்தியில் தான் எல்லாவற்றையும்
இறுதி செய்யும் எனில், அதன்பின் தங்களது கணக்கியல் மென்பொருளை (Billing/Accounting Software) மேம்படுத்தி அது தொடர்பாக தங்களது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து முழுமையாக தயாராக
எப்படியும் குறைந்தது மூன்று மாதங்களேனும் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே செப்டம்பர் 1 ஆம் தேதி தான் அமலாக வாய்ப்பு
உள்ளது. ஆனாலும் அரசு ஏனோ ஜூலை 1 முதல் அமல்ப்படுத்த கட்டாயப்படுத்தி
வருகிறது.
இப்போதைய
வரி முறையில் இருந்து ஜி.எஸ்.டி வரிமுறைக்கு மாறுகையில் தற்போது கையிலிருக்கும்
ஸ்டாக் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். ஜூலையா செப்டம்பரா
என தெரியாத நிலையில் கொள்முதல் திட்டமிடுதலை கூட முறையாக செய்யமுடியாத அவல நிலைக்கு
எல்லாவரையும் தள்ளி இருக்கிறது முன்னேற்பாடு இல்லாத இவ்வரசு.
இப்போது
நாமே நமது வரியை தாக்கல் செய்ய முடியும்.
ஆனால் ஜி.எஸ்.டி முறையில்
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வரி ஆளுனர்கள் (GSP - GST Service Providers) தான் நம் சார்பாக வரி செலுத்த வேண்டி வரும்.
அவர்களிடம் நாம் நமது கணக்கு விவரங்களை கொடுத்தால் போதும். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதற்கு ஒவ்வொரு
பரிவர்த்தனைக்கும் தனித்தனி கட்டணம் இருக்கும். இந்த கூடுதல்
செலவை சமாளிக்க தங்களிடம் இருக்கும் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவேண்டிய நிலையில்
தொழிற்சாலைகள் இருக்கின்றன. மேலும் அதிக பணியாளர்கள் ஜி.எஸ்.டிக்கு தேவை இல்லை. கணிப்பொறி
மென்பொருள் (ERP) பக்காவாக இருந்தால் அதிலிருந்து ரிப்போர்ட் எடுத்து ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்யும் நிறுவனத்துக்கு கொடுக்க
என ஒன்றிரண்டு பேர் இருந்தாலே போதும். எனவே வணிகவியல் பட்டதாரிகளின்
வேலை இழப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இது தவிர
சிறு குறு வியாபாரிகளின் நிலைமை தான் மிக மோசம். ஜி.எஸ்.டியினால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் தான். அதாவது,
சாதாரண வியாபாரிகள் தங்கள் பொருட்களை வாங்கிய போது செலுத்திய வரியினை
கழித்து (Set-Off) விற்பனை செய்வதால் விலை குறைவாக இருக்கும். ஆனால் ரூ
50 லட்சத்துக்கும் கீழ் டர்ன் ஓவர் இருக்கும் சிறு வியாபாரிகள்
‘கம்போசைட்’ முறையில் வரி செலுத்துவோர் என கொள்வதால்,
அவர்களால் செலுத்திய வரியை கழித்துக்கொள்ளும் வசதி இல்லை. மேலும் 1% வரி விதித்து விற்பனை செய்யவேண்டும்.
எனவே விலைவாசி அபரிமிதமாக ஏறும். அல்லது தொழிற்
நிறுவனங்கள், சிறு குறு வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை வாங்குவதை
தவிர்க்க வேண்டி வரும். ஏனெனில் பெரும் வியாபாரிகளிடமிருந்து
வாங்கும் பொருட்களை விட சிறு வியாபாரிகளிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு
18% கொள்முதல் வரியும் 1% விற்பனை வரியும் சேர்த்து
அதிக விலை கொடுக்க வேண்டி வரும். மேலும் அப்படி விலை கொடுத்து
வாங்கினாலும் அந்த வரியை கழித்துக்கொள்ளும் வசதி (ITC Set Off) இல்லாததால் யாரும் சிறு குறு வியாபாரிகளிடம்
வாங்க மாட்டார்கள். இது நாளாவட்டத்தில் சிறு குறு வியாபாரிகளை
முற்றிலுமாக ஒழித்து விடக்கூடும்.
இப்போது
வெளி மாநில உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு வரிக்கழிவு வசதி இல்லாததால், அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும்
வேர் ஹவுஸ்/குடோன் வைத்து அதற்கு தங்கள் பொருட்களை ஸ்டாக் டிரான்ஸ்ஃபர்
முறையில் வரியின்றி மாற்றி அங்கிருந்து உள்ளூர் வரி செலுத்தி விற்பனை செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் பல பல நிறுவனங்களின் வேர்ஹவுஸ் / குடோன்கள்
மூலம் பல லட்சக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
ஜி.எஸ்.டி சட்டம் வெளிமாநில பொருட்களுக்கும் வரிக்கழிவு தருவதால் இனி இப்படியான வேர்
ஹவுஸ் தேவை இல்லை. தொழிற்சாலைகளே நேரடியாக இந்தியா முழுதும் விற்றுக்கொள்ள
முடியும். இதனால் ஏற்படக்கூடிய வேலை இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு
பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சிறு குறு தொழில் மற்றும் இது
போன்ற துணை தொழில்களின் அழிவு ஆகியவை, அடுத்த இரண்டொரு வருடங்களில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை
இந்தியாவை பெரும் சிக்கலுக்குள்ளாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.
தொழில்
நிறுவனங்களுக்கு எளிமையான முறையாக இருக்கும் ஜி.எஸ்.டி சமூக பொருளாதார
நோக்கில் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
உற்பத்தி
மாநிலங்களுக்கு குறைந்த வரி வருவாயும் உபயோகிப்பாளர் மாநிலத்துக்கு அதிக வரி வருவாயும்
கிடைப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரி முறை நம்மை போல வளர்ச்சியை நோக்கிய மாநிலங்களுக்கான
பெருத்த தண்டனையாக வந்திருக்கிறது. அதை தான் மாண்புமிகு தமிழக
முதல்வராக இருந்த புரட்சித்தலைவி ஜெயல்லிதா அவர்கள் தெளிவாக குறிப்பிட்டு ஜி.எஸ்.டி வரி விதிப்பை முழுமையாக எதிர்த்தார். மேலும் இந்தியா முழுதும் அமலானாலும் தமிழகம் அமல்ப்படுத்தாது என சொல்லியதற்கும்
நியாயமான காரணங்கள் உள்ளன. அவர் மறைந்துவிட்ட நிலையில்
இப்போதிருக்கும் அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை
ஆர்வத்தோடு அமல்ப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
இவை பற்றியெல்லாம்
அடுத்த பதிவில்.
*****
Also Read
1. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 4
2. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3
3. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2
4. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 1
*****
Also Read
1. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 4
2. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3
3. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2
4. ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 1