Thursday, June 1, 2017

ஜி.எஸ்.டி – எனது பார்வையில் – பாகம் 6

ன்றைய தேதிக்கு ஜி.எஸ்.டி 90% முழுமை ஆயிருச்சு. இப்போ நிலமை எப்படி இருக்குனு பார்க்கலாமா?

கடந்த மே மாதம் 18,19 தேதிகளில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானமும் சேர்த்து இதுவரை 7 விதமான ரூல்ஸ் அப்ரூவ் ஆகிருக்கு. இன்னும் 2 ரூல்ஸ் பாக்கி. இப்போதிருக்கும் வரியிலிருந்து ஜி.எஸ்.டி வரிக்கு மாறும்போது செய்யவேண்டியது என்னென்ன என்கிற Transitional Provisions Rules மற்றும் மாதாந்திர வரி செலுத்தும் முறைகளுக்கான விதிகள் Returns Rules இரண்டும் வரும் ஜூன் 3 ஆம் தேதி இறுதி செய்யப்படும்.

ஆனா, என்னை பொருத்தவரைக்கும் இந்த இரண்டு ரூல்ஸ் தான் மிக முக்கியமானது. முதலிலேயே இறுதி செஞ்சிருக்கணும். இது ஏன் முக்கியம்?

Transitional Rule - ஜி.எஸ்.டி முறைக்கு மாறுவதற்கு முன்பு செய்யவேண்டிய பணிகள், மாறியபின் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இதன் அடிப்படையில் தான் நாம் நமது கொள்முதல் திட்டங்களை (Purchase Strategy) தீர்மானிக்கவே முடியும். ஏற்கனவே கையிருப்பில் இருக்கும் சரக்குகளுக்கு (Stock in Hand) நாம் செலுத்திய வரியை சிந்தாமல் சிதறாமல் ஜி.எஸ்.டிக்கு எடுத்து செல்லவும் இந்த விதிகள் தான் உதவும். ஆனால் இதை இன்னமும் இறுதி செய்யாததால் பல பல முடிவுகள் எடுக்கமுடியாமல் இருக்கிறது. அதாவது ஜூன் 30 ஆம் தேதி கையிலுள்ள ஸ்டாக் எடுக்கணுமா வேண்டாமா, அப்படி எடுக்கணும்னால், ஜூன் 25 ஆம் தேதியில் இருந்து எந்த பொருட்களும் நாம் வாங்காமல் இருக்கணும். அப்படி வாங்காமல் இருந்தால் நமது உற்பத்தி பாதிக்கும், அதை தவிர்க்க ஜூன் 25 முதல் ஜூலை 5 வரையான உற்பத்திக்கு தேவையான பொருட்களை ஜூன் 25க்கு முன்பே வாங்கி வெக்கணும். அதுக்கு இப்பவே ஆர்டர் கொடுக்கணும். இதெல்லாம் செய்யலாமா வேண்டாமா.. எதுவும் தெரியாமல் எல்லோரும் திரிசங்கு நிலையில் இருக்காங்க.

அதே மாதிரி, Closing Stock விவரங்களை கொடுக்கும்போது அது தொடர்பான Purchase Bills விவரங்களையும் கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. ஒரு வருடத்துக்கு முன்பு வாங்கிய பொருட்களில் இப்போது எவ்வளவு கையிருப்பில் இருக்கு என கணக்கெடுப்பதும், அது எந்த பில் மூலம் வாங்கப்பட்டதுன்னு கணிக்கிறதும், அந்த பில் விவரங்களை தேடி எடுத்து அரசுக்கு தாக்கல் செய்வதும் இமாலய வேலை. அதுவும் ஜூன் 30 அன்னைக்கு ஸ்டாக் எடுத்து முடிச்சப்பறம் அது தொடர்பான பில்லை தேடி எடுத்து அதை தாக்கல் செய்தால் தான் அதிலுள்ள Input Tax Credit நமக்கு கிடைக்கும். இல்லைன்னா அந்த தொகை ஹொகையா தான்.

ஜூன் 25 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் வழியில் வந்துகொண்டிருக்கும் சரக்குகளின் விவரங்களையும் நாம் தாக்கல் செய்தாக வேண்டும். அது மற்றுமொரு குழப்பமான பணி. நாம் எதிர்பார்க்கும் நாளில் அந்த வண்டி நம்மை வந்து சேருமா என்பதை கணிக்கவே முடியாதே.

இதெல்லாம் ஒருபுறம்.

வரி விகிதங்களை இப்போதைக்கு முடிவு செய்து விட்டார்கள். இதில் ஆச்சர்ய அதிர்ச்சியாக சேவைகளுக்கான வரி விகிதம் (Service Tax Rate) ஒற்றை வரி விகிதமாக அல்லாமல் (Single Slab) 0%, 5%, 12%, 18%, 28% என வெவ்வேறு வரி விகிதமாக (Multiple Slab) இருப்பது.   

அதிலும் ஒரே சேவைக்கு வெவ்வேறு வரிவிகிதங்களும் உள்ளது. இன்னொரு புறம் ஒவ்வொரு சேவைக்கும் ஒரே அக்கவுண்டிங் கோட் தான் தரப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே அக்கவுண்டிங் கோடில் வெவ்வேறு வரி விகிதம். உதாரணமாக லாட்ஜ் & அக்காமடெஷன் வழங்கும் ஒரு ஹோட்டல் சேவைகளுக்கு ஒரே அக்கவுண்ட் கோடு தான். ஆனால் அவற்றின் விலை அடிப்படையில் வரி விகிதங்கள். அதாவது 1000 ரூ வரை வாடகை எனில் 0%; 2500 வரை வாடகை எனில் 12%; 5000 வரை வாடகை எனில் 18%; 5000 க்கு மேல் வாடகை எனில் 28%. முன்பு ஹோட்டல் சேவைக்கு ஒரே அக்கவுண்ட் ஒரே வரிவிகிதம் (14%). எத்தனை வாடகை என்றாலும் அந்த வாடகைக்கு 14% வரி என எளிமையாக இருந்தது.

ஒரே ஹோட்டலில் வெவ்வேறு வகையான ரூம்கள் இருக்கும். நான் ஏசி, ஏசி, ஏசி டீலக்ஸ், ஃபாமிலி ரூம் என பல வகையான ரூம்களும் அதற்கு தக்கபடி விதம் விதமான வாடகையும் இருக்கும். இவர்கள் இனி தனி தனியாக கணக்கு வைத்து அதற்கு தக்கபடி வரி கட்டவேண்டி இருக்கும்.

இதே நிலை தான் பல பல சேவைகளுக்கும் பல சரக்குகளுக்கும். ஒரே பொருளுக்கு அதன் HSN Code அடிப்படையில் வெவ்வேறு வரி.
இந்த குழப்பங்கள் அதன் தாக்கங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு இனி எப்படி பட்ட வியாபார உக்திகளை கையாள்வது என முடிவெடுப்பதற்கு முன்பாகவே ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி வந்துவிடும்.

ஜூன் 3 ஆம் தேதி இறுதி செய்யப்படும் விதிகளின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி வரும் என கொண்டால் ஜூலை 1 ஆம் தேதிக்கு வெறும் 27 தினங்களே இருக்கின்றன. இதில் 20+ மாநிலங்கள் இன்னமும் தங்கள் மாநில சட்டங்களை இயற்றவில்லை, தமிழகம் உட்பட. அவர்களெல்லாம் சட்டங்களை இயற்றி அமலாக்க 10 நாட்கள் என கொண்டால், மிச்சமிருப்பது 17 நாட்கள். இதற்குள்ளாக நாம் நமது ERP மென்பொருளை மாற்றி, நம் தொழில் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஜி.எஸ்.டிக்கு தயார் படுத்தி, வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கான வரி சலுகையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமது பொருள் கொள்முதலை இறுதிசெய்து, அதன் அடிப்படையில் பணியை தொடர்வது என்பது பெரும் வேலை. அதுவரை எல்லாம் ஒரு தேக்க நிலையில் தான் செல்லும். இப்போதே பல வியாபாரங்கள் கொள்முதலோ விற்பனையோ இல்லாமல் டல்லடித்து கிடக்கின்றன. என்ன நடக்கபோகிறது என்பதே தெரியாமல் குழப்பத்தில் தான் எல்லோருமே இருக்கின்றனர்.


இப்போதிருக்கும் வரி சட்ட அடிப்படையிலான Assessment, Appeal, Refund ஆகியவை அதே சட்டப்படி தொடரும் என அறிவித்திருப்பது மற்றுமொரு குழப்பம். இப்படியான விஷயங்கள் இன்னமும் நிலுவையில் உள்ள நிறுவனங்கள் Technically இரு வித வரிவிதிப்பு முறைகளிலும் Parallel பயணம் செய்யவேண்டி இருக்கும்.

சேவை வரி விதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு மற்றுமொரு பாதிப்பாக சரக்கு போக்குவரத்துக்கான வரிக்கு (GTA) ITC வசதி இல்லை என அறிவித்து இருப்பது. இப்போது நாம் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான போக்குவரத்து செலவுக்களுக்கு (Freight Charges) வரி செலுத்தி அதை ITC ஆக எடுத்து கொள்ளலாம்.  இனி அது முடியாது. இது மிகப்பெரிய இழப்பாக நிறுவனங்களுக்கு வரும்.

அதே போல காண்டிராக்டர் முறையில் வேலைக்கு ஆட்களை வைத்து செய்வோர்களுக்கு (Manpower / Labour Supply) இதுவரை நிறுவனங்கள் RCM முறையில் வரி செலுத்தி வந்திருக்கின்றன. இனி அதற்கு RCM இல்லை. அதனால் பதிவு பெற்ற பெரும் காண்டிராக்டர் தவிர சிறு காண்டீராக்டர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்காது. இது மற்றுமொரு பெரும் வேலை வாய்ப்பிழக்கு வழி கோலும்.

ஈ வே பில் (E-Way Bill) என ஒன்றை அறிவித்தது அரசு. அதாவது, இப்போது ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென்று தனித்தனியாக ரோடு பெர்மிட் வைத்திருக்கிறது. (தமிழகத்தில் Form JJ; குஜராத்தில் Form 403; கர்நாடகத்தில் e-Sugam போன்றவை) இவற்றை அந்தந்த மாநிலங்கள் மட்டுமே பரிசீலிக்க முடியும். எனவே இதை எல்லாம் முற்றிலுமாக ஒழித்துவிட்டு,  E-Way Bill என ஒன்றை நாடு முழுமைக்குமான ஒரே ஆவணமாக அரசு அனுமதித்தது.

ஒவ்வொரு விற்பனையின் போதும் அது தொடர்பான ஆவணங்களை (Sales Documents) GST வலைதளத்தில் பதிவேற்றி அதற்கான பிரத்யேகமான E-Way Bill நம்பெரை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த எண் நாடு முழுமையும் உள்ள அனைத்து மாநிலங்களின் வரி விதிப்பாளர்களுக்கும் பார்க்க அனுமதி உள்ளது. எந்த மாநிலத்தில் இருந்து எந்த மாநிலத்துக்கு சென்றாலும் வழியில் இதை பரிசீலித்து சோதனை செய்ய முடியும். அதனால் மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்டுகள் நீக்கப்படும் என்றெல்லாம் அரசு சொன்னது. ஆனால் இப்போது அந்த திட்டம் 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இது மேலும் டாக்குமெண்டேஷன் சுமையை நிறுவனங்களுக்கு ஏற்றும். இப்போது போலவே பல்வேறு ரோடு பெர்மிட்டுகளை, செக்போஸ்ட் டிக்ளரேஷங்களை ஒவ்வொரு விற்பனைக்கும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கவேண்டும்.

இவை எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது, தெளிவில்லாத ஒரு குழப்பமான சட்டத்தை அரசு மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணித்துக்கொண்டிருக்கிறதோ என தோன்றுவது இயல்பு.

பொதுவான நோக்கில் GST மிக நல்ல விஷயம். ஆனால் அதை முற்றிலுமாக திருத்தி திருத்தி குழப்பியடித்து வைத்திருக்கிறது இப்போதைய அரசு. இது எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் நிறுவனங்களை கட்டிப்போட்டு இந்தியா பொருளாதார தேக்கநிலைக்கு வழி வகுத்திருக்கிறது.

எல்லா குழப்பங்களையும் ஆராய்ந்து தெளிவு படுத்தி எளிமை படுத்தி, அதற்கு தக்க உட்கட்டமைப்புக்களையும் பயிற்சியும் கொடுத்து பின்னர் தெளிவான நோக்கத்தோடு கொண்டுவந்தால் GST பல நன்மைகளை செய்யும். அதனால் தான் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்க சொல்லி பலரும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அரசு அதை ஏற்றுக்கொள்ளுமா என தெரியவில்லை.


No comments:

Post a Comment

Printfriendly