Wednesday, November 8, 2017

டீமானிடைசேஷன் – வெற்றியா தோல்வியா?

இன்றோடு டீமானிடைசெஷன் கொண்டு வந்து ஓராண்டு ஆயிடுச்சு. எல்லா எதிர்க்கட்சிகளும் இதை கறுப்பு நாளா கொண்டாட, அரசோ இதை வெற்றி விழாவா கொண்டாடுது. மக்கள் நாம தான் குழம்பி கிடக்கிறோம். உண்மையில் இது கறுப்பு நாளா நல்ல நாளா? டீமானிடைசேஷன் வெற்றியா தோல்வியா? இப்படி ஒரு விடை தெரியாத கேள்வி இன்னும் இருக்குதுல்ல?

டீமானிடைசேஷன் நோக்கம் என்னவோ நல்லது தான். கருப்புப்பணம் கண்டுபிடிக்கப்படும், லஞ்சம் ஊழல் குறையும், தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்காமல் தடுக்கப்படும், போலி ரூபாய் நோட்டுக்கள் வராது, e-Transactions மேம்படும், பொருளாதாரம் வளரும்... இதெல்லாம் தான் அரசு சொன்ன நோக்கம்.

அதன் யதார்த்தம் என்னன்னு பார்ப்போம்!

புழக்கத்தில் இருந்த ரூ.1000 & ரூ.500 நோட்டுகளில் கிட்டத்தட்ட 99% பேங்குக்கு திரும்பி வந்திருச்சு. அதனால் கருப்புப்பணம் கண்டுபிடிக்கப்படலை! கருப்புப்பணம் எல்லாம் நிலமாகவும் தங்கமாகவும் சொத்துக்களாகவும் கிடப்பதால் கரன்சியா அதை கைப்பற்ற முடியாதுன்றதை அரசு இப்ப தான் புரிஞ்சிருக்கு.  லஞ்சத்தை பொறுத்தவரை பணமா வாங்குறது குறைஞ்சிருக்கு. மாறா, பொருளா கேட்டு வாங்க ஆரம்பிச்சாங்க. அரசும் கொஞ்ச நாளிலேயே e-transactions முறையை டீலா விட்டுட்டதால் எல்லா இடங்களிலும் மீண்டும் பண பரிமாற்றமே நடக்க தொடங்கிருச்சு.  குறிப்பிட்ட அளவுக்கு மேல் யாரும் கரன்சி வாங்கிக்க முடியாதுன்னு அரசு சொன்னாலும் கிட்டத்தட்ட எல்லா ஊழல்வாதிகளும் கோடிக்கணக்கான ரூபாய்கள் புது கரன்சில தான் வெச்சிருக்காங்க. வெறும் 4000 ரூபாய்க்காக சாதாரண ஜனங்கள் பேங்க் வாசலில் நாள் கணக்கா காத்து கிடந்தப்ப, சில பேரு மட்டும் கட்டுக்கட்டா புது கரன்சி நோட்டை வாங்கி செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால பெருமையா வெளியிட்டபோதே, அரசு யார்  பக்கம் நிக்குதுன்றது பலருக்கும் புரிஞ்சுபோச்சு. வங்கிகளுக்கும் அரசுக்கும் எந்த தகவலும் இல்லாம அவங்க கைக்கு அவ்வளவு பணம் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஆக மொத்தம், லஞ்சம் ஊழல் செய்தவங்க சந்தோஷமா இருக்க தான் இந்த டீமானிடைசெஷன் உதவிச்சே தவிர சாதாரண ஜனங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

தீவிரவாதம் குறைஞ்சதா தெரியலை. பிஸினஸ் ஆஸ் யூசுவல் நிலை தான். இன்னும் சொல்லப்போனா இப்பல்லாம் சாப்பாடு பொட்டலம் கட்டிக்கொண்டு வந்து உக்காந்து அடிச்சிட்டு போறாங்க.

முன்னேல்லாம் கட்டுக்கட்டா வந்த கள்ள நோட்டுக்கள் இப்போ சூட்கேஸ் சூட்கேசா வந்திட்டிருக்க நிலையை பார்த்தால் அங்கேயும் அந்த நோக்கம் நிறைவேறலைன்றது புரியும். ரொம்ப செக்யூர்டு சிஸ்டம் உள்ள ஹை டெக் கரன்சின்னு எல்லாம் கலர் காலரா சொன்னாலும் ஆங்காங்கே போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றை பிடிச்சாங்க என்கிற செய்தியே, போலி நோட்டுக்கள் இருப்பதையும் புழக்கத்தில் கலந்திருப்பதையும் உறுதிப்படுத்திருச்சு.

e-Transactions உண்மையில் மேம்பட்டது தான். ஆனா 700 மில்லியன் டெபிட் கார்டுகள் இருக்கும் ஒரு நாட்டில் வெறும் 3 லட்சம் PoS மெஷிங்களை வெச்சுக்கிட்டு எப்படி அதை முழுமையா நிறைவேத்த முடியும்? இப்போ மீண்டும் எல்லோரும் பண பரிவர்த்தனைக்கே திரும்பிட்டாங்க. போன வருஷம் அவசரம் அவசரமா PoS, PayTM வாங்கின கடைகளில் கூட இப்போ e-Transactions ஏத்துக்கறதில்லை. பணமா கொடுங்கன்றாங்க.

e-Transactions க்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இருந்தும் அரசு அதை கோட்டை விட்டிருச்சு. டெபிட் கிரெடிட் கார்டுகளுக்கான செர்வீஸ் சார்ஜை ரத்து செய்யுறது, எல்லா கடைகளுக்கும் PoS மெஷிங்களை கொடுக்குறது, PayTM, BHIM மாதிரியான UPI க்களை எல்லா வர்த்தகத்துக்கும் பயன்படுத்த ஊக்குவிக்கிறதுன்னு இருந்திருந்தா, மக்கள் பணத்துக்கு பதிலா e-Transactions மூலமாவே எல்லாத்தையும் வாங்கிருப்பாங்க. ஆனா, e-Transactions பண்ணுங்க பண்ணுங்கன்னு சொன்ன அரசு அதுக்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை, ஒரு வருஷமாகியும் இன்னமும்   எடுக்கவே இல்லை.

இப்பவும் ஜூவல்லரி, ஹோட்டல், கிளினிக் மாதிரி பல இடங்களில் மட்டும் இல்லாம பல கடைகளில் கூட பணம் தான் வேண்டும் என சொல்றாங்க. அப்புறம் எப்படி e-Transactions வளரும்?

பொருளாதாரம் வளரும்னு சொன்னது தான் எந்த லாஜிக்குமே இல்லாம தொங்கல்ல இருக்கு. பொருளாதாரத்துக்கு தேவை பணம். அது பணமாவோ e-Transactions மூலமாவோ எப்படி வந்தாலும் விளைவு ஒண்ணு தான் என அரசு நினைச்சுது.

ஆனா, டீமானிடைசெஷன் அமலான முதல் சில வாரங்களில் யாருக்கிட்டேயும் பணம் இல்லாததால் பல பல தொழில்கள் முடங்கி போச்சு. பலருக்கு வேலையிழப்பு. அதன் காரணமா கையில் பணம் இல்லை. வாங்குன கடனை கட்டலை. வராக்கடன் அதிகரிப்பு. வங்கிகள் நிதி இருப்பு குறைவுன்னு அது ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வா மொத்த பொருளாதாரத்தையும் தகர்த்திருச்சு. பொருளாதார மந்த நிலைல இருந்து பொருளாதார சீரழிவை நோக்கி கொண்டு சென்றது தான் மிச்சம்.அரசு டீமானிடைசெஷன் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே, சரியா திட்டமிட்டு, புது ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவில் அச்சடிச்சு வெச்சு, ATM மெஷிங்களில் புது ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதற்கான மாடிபிக்கேஷன்கள் செய்துவிட்டு அப்புறமா அறிவிச்சிருந்தா, ஒரு வேளை இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. ஆனா பணத்தை செல்லாதுன்னு அறிவிச்சிட்டு அதுக்கு பதிலான புது பணத்தை வங்கிகளுக்கே அனுப்பாம இருந்ததால் மக்கள் கணக்கில் பணமிருந்தும் கையில் பணமில்லாம பட்டினி கிடந்த கதைகளும், 4000 ரூபாய் பணத்துக்காக நாள் கணக்கா காத்திருந்து லைன்லேயே செத்து வீழ்ந்த செய்திகளுமா அரசுக்கு எதிரான ஒரு கட்டுக்கடங்காத கோப எரிமலையை உருவாக்கி வெச்சிருச்சு.

வீட்டில பிரியாணி செய்யுறேன்.. எல்லோரும் சாப்பிட்டு சந்தோஷமா இருங்கன்னு ஆசை காட்டிட்டு, தாளிக்கிற நேரத்தில பட்டை கிராம்பு வாங்கலைன்றது ஞாபகம் வந்து பாதியிலேயே ஸ்டவ்வை ஆஃப் செஞ்சிட்டு பட்டை கிராம்பு வாங்க ஓடி போய் மொத்த சமையலையும் சொதப்பின கதையாயிருச்சு டீமானிடைசெஷன் அமலாக்கம்.

அதுக்குத்தான் அந்தந்த வேலையை அந்தந்த ஞானம் உள்ளவங்க செய்யணும்னு சொல்றது. நானும் அவங்க ஐடியாவை செய்யுறேன்னு இறங்கினா இப்படித்தான்.

ஆக மொத்தம், டீமானிடைசெஷன் எந்த நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டதா சொல்லப்பட்டதோ அதில் ஒண்ணு கூட உருப்படியா நடக்கலை. இப்பவும் அரசு அதுக்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலைன்றது தான் வருத்தம்.

சந்தேகம் இல்லாம டீமானிடைசெஷன் தோல்வி தான், இது ஒரு கறுப்பு நாள் தான். குறிச்சு வெச்சுக்கோங்க!

1 comment:

Printfriendly