Monday, January 15, 2018

தமிழை ஆண்டாள் - புரிதல்

வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையை தினமணி நீக்கி இருக்கிறது.

இன்று மதியம் கூட அதை படித்தேன்

அதை நீக்க வேண்டிய அளவுக்கு அதில் எந்த பிழையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட நூலில் உள்ள பகுதியை தான் அங்கே எடுத்து சொன்னார். அந்த நூலின் கருத்தை பக்தர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். (பார்க்க: படம்)

இந்த ஒரு இடத்தை தவிர்த்து பார்த்தால் அது ஒரு தெள்ளிய நீரோடை போன்றதொரு அருமையான ஆய்வுரை



பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான கோதை, அவரது வாழ்வியல், அப்போதைய கால கட்டத்தின் கட்டுப்பாடுகள், அவற்றை உடைத்து பெண்விடுதலை பேசும் கோதையின் பாடல்கள், அந்த பாடல்களில் இளமையும் செழுமையும் இனிமையுமாக ததும்பி தெறிக்கும் அந்த தமிழ், அதன் நளினம், அதன் நயனம் என பலவற்றைப்பற்றி விரிவாக பேசியிருந்தது அக்கட்டுரை

அதே காலகட்டத்தில் பிற பெண்களின் நிலை, பிறரது பாடல்கள், அவற்றின் தொனிக்கும் கோதையின் தொனிக்குமான வேறுபாடு, திருவரங்கத்தில் மாயோனிடம் ஐக்கியமானதாக சொல்லப்படுவதன் நம்பகத்தன்மை, பெரியாழ்வாரின் நிலை என விசாலமான அலசல் அந்த கட்டுரையில் இருந்தது

தினமணி அதனை மொத்தமாக நீக்கி இருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அமெரிக்க நூலின் மேற்கோளை மட்டும் நீக்கி இருந்தால் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும்.

தலைப்பே 'தமிழை ஆண்டாள்' அதாவது தமிழை ஆண்டவள் என்பது

ஆண்டாளின் தமிழை விவரித்த வைரமுத்து அது எதனால் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதையும் விவரிக்கிறார்

அதாவது.. ஆண்டாள் வாழ்ந்த காலமான 7ம் நூற்றாண்டில், பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். அந்த சூழலிலும் ஆண்டாள் முற்போக்காக எழுதி இருக்கிறார். அவர் திருமணமாகாத இளம் பிராயத்தினர். எனவே குறுகிய காலத்தில் தமிழையும் கண்ணனையும் புராணங்களையும் தெள்ளென கற்று இத்தகைய தமிழ் பாசுரங்களை இயற்றி இருக்கிறார் என்கிற தனிச்சிறப்பு தான் கட்டுரையின் நோக்கம்

அதில் அந்த சிறப்பை மேலும் வலுப்படுத்த ஒரே ஒரு இடத்தில் அவரது குலம் குறித்தும் சொல்லப்படுவதை மேற்கோள் காட்டுகிறார். அது அப்போது உயரிய மரியாதைக்கு உரிய குலம். எனினும் அது இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்ட குலம். பக்தி மயமானவர்கள். அப்படி ஒரு குலத்திலிருந்து வந்ததாக சொல்லப்படும் ஆண்டாள் தமிழையும் ஐந்திரிபற பயின்று யாரும் சொல்ல தயங்கும் விஷயங்களை எல்லாம் துணிச்சலாகவும் அழகாகவும் சொல்லி இருக்கும் அந்த சொல்லாட்சி... தமிழை ஆண்ட பாங்கு... அது தான் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையின் கரு

தமிழை முழுமையாக புரிந்துகொள்ளாத சிலரால், அந்த குலத்தின் வரலாறும் மாண்பும் பின்னர் அது எவரால் சிறுமைப்படுத்தப்பட்டது என்கிற நிகழ்வுகளும் அறியப்பெறாத சிலரால்.. வெற்று பரபரப்புக்காக பெரிதாக்கப்பட்ட பிரச்சனை தான் இப்போது நாம் கண்டதெல்லாம்.

உண்மையில் தமிழ் அறிந்தோர் இக்கட்டுரையை கண்டு படித்து புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு பெருமையாக ஆண்டாளை எழுதியமைக்காக வைரமுத்துவை கொண்டாடி இருப்பார்கள்.

சிறுமதியாளர்கள் மட்டுமே விளம்பர நோக்கில் எதிர்ப்பார்கள். எதிர்ப்பவர்களை கண்டு பரிதாபப்படுவதை வேறொன்றும் சொல்வதற்கில்லை!

இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதை யாரேனும் எனக்கு அவ்வப்போது நியாபகப்படுத்திக்கொண்டிருந்தால் தேவலாம்!

ஞாநி - நாம் இழந்த நடுநிலையாளர்

ஞாநி....

காலையிலேயே பேரதிர்ச்சி தந்திருக்கிறது இவ்விடியல்

****
அருமை நண்பர் திரு காளிபிரசாத் அவர்கள் தான் ஞாநி அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.



ஞாநியின் கட்டுரைகள் அரசியல் விமர்சனங்கள் ஆகியவை எனக்கு அதற்கு முன்பே பரிச்சயமானவை. மிக விருப்பமானவையும் கூட. ஓ பக்கங்கள் மட்டுமல்ல அவரது பேச்சுக்களையும் நான் தேடி தேடி போய் ரசித்ததுண்டு

அஷோக் நகர் வீட்டில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு 'கேணி கூட்டம்' நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு விஷயங்கள் பற்றி பேசுவார். எல்லோருடனும் இயல்பாக பழகுவார். ஒரு நெருங்கிய நண்பர் வீட்டில் இருப்பதைப்போல அவரது வீட்டில் வளைய வரலாம். நிறைய புத்தகங்களை அங்கே தான் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டேன்.

கேணிக்கூட்டத்தின்போது எல்லோருக்கும் அங்கே தேநீர் தயாராகும். Black Tea & Lemon Tea எனக்கு அறிமுகமானதும் முதன்முதலில் பருகியதும் அவரது வீட்டில் தான்.

***

தமிழக அரசியல் வெளியில் அவர் ஒரு பார்வையாளர்.. தீவிர ரசிகரும் கூட

இன்னார் என்றில்லாமல் எல்லோரையும் விமர்சிக்கும் உண்மையான நடுநிலை கொண்டவர். ஒரு சாதாரணனின் பார்வையிலிருந்து அரசியலை பார்ப்பவர். அந்த விஷயத்தில் அவர் தான் எனது ஆதர்சமும் கூட.

எங்கு தவறு நடந்தாலும் விமர்சிப்பார். ஆனால் அந்த விமர்சினத்தில் ஒரு நாகரீகம் இருக்கும். வரம்பு மீறாத வார்த்தைகளால் பிரம்பு நெய்து விளாசும் வாத்தியார் அவர்.

***

தமிழக அரசியல் களத்தில் இது போன்ற நடுநிலை விமரிசிகர்கள் மிகமிக அரிதாகி வருகின்றனர். இப்போது ஞாநியின் இழப்பு மற்றுமொரு பேரிழப்பு தான்.

அவர் ஆத்மா அமைதியில் துயில் கொள்ளட்டும்

Printfriendly