Friday, May 4, 2018

NEET - கருகிய கனவுகள்

தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது.

தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் எஞ்சினியர்களையும் டாக்டர்களையும் தந்துகொண்டிருக்கும் மாநிலம் தமிழகம்.

உலகம் முழுதம் அவர்கள் பரந்து விரிந்து பரவி கிடக்கிறார்கள்.

இதெல்லாம் இந்தியா முழுவதும் எல்லோரும் அறிந்ததே. அதனால் தான் எல்லா மாநில மாணவர்களும் தமிழகத்தில் கல்வி கற்க பேரார்வம் காட்டுகிறார்கள்.

தமிழக மாணவர்களே அதிக இடங்களை பிடித்து விடுவதால் மற்ற மாநில மாணவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைத்து வருகிறது என்பது ஒரு குறையாக வட மாநில மக்கள் மனத்தில் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது.

அதற்கு தீர்வாக முதலில் நீட் கொண்டு வரப்பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் நீட் கட்டாயமாக்கப்பட்டதால் அதையும் எழுதி வென்று இடம்பிடித்தனர் நம் மாணவ சிங்கங்கள்.

அதனால் இந்த முறை புதியதொரு உபாயத்தை கைக்கொண்டு இருக்கிறது மத்திய பாஜக அரசு.

தனது கட்டுப்பாட்டில் உள்ள CBSE நடத்தும் நீட் தேர்வுக்கான தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கையில், தமிழகத்தில் மட்டும் தேர்வு மையங்களை கோட்டைவிட்டு விட்டதாம். இதை மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறது.

மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அதிகமாக ஏற்படுத்தி தமிழகத்தில் குறைத்திருப்பதன்மூலம் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கு சென்று தேர்வெழுத வேண்டிய சூழலுக்கு தள்ளிவிட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

கேரள மாநில எர்ணாகுளத்தில் மட்டும் தமிழக மாணவர்கள் 5,371 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள். ஆறுதலாக தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் தானே முன்வந்து அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டு இருக்கிறார். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆதரவுக்கரம் எதுவும் நம் மாணவர்களுக்காக நீளவில்லை.

மேலோட்டமாக பார்த்தால் மத்திய அரசு மீது எந்த தவறும் சொல்ல முடியாது. ஆனால் தொலை தூரத்துக்கு சென்று தேர்வு எழுதக்கூடிய சூழலில் பல மாணவர்கள் இல்லை என்பதை உணர்ந்தே மிக மிக தூரமாக தேர்வு மையங்களை ஏற்படுத்தி இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழாமலில்லை. அப்படியே அங்கே செல்ல முடிவெடுத்தால் கூட குறைந்த கால இடைவெளியில் அங்கே சென்று சேர முடியாதபடிக்கு தூரமாக தேர்வு மையங்களை அமைத்திருப்பதில் இருந்தே, தமிழக மாணவர்கள் இவ்வாண்டு நீட் தேர்வை எழுதக்கூடாது என்பதில் மத்திய பாஜக அரசு எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பது புரியும்.

இதில் சுவாரசியமான மற்றொரு விஷயமும் இருக்கிறது.

தமிழகத்தில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்களில் முன்னேறிய வகுப்பினரே அதிகம். மத்திய பாஜக அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் அவர்களும் அடக்கம்.

எனவே இதை இனரீதியான அடக்குமுறையாக அல்லாமல் மொழியியல் ரீதியான அடக்குமுறையாகவே நான் பார்க்கிறேன்.

தஞ்சை குடந்தை பகுதிகளில் தீவிர தமிழுணர்வுள்ள பிராமண குடும்பத்தினர் பலர் உள்ளனர். அவர்களில் எனது சில நண்பர்களும் அடக்கம். அவர்களது குடும்பத்திலேயே சில மாணவர்கள் இப்போது பாதிக்கப்பட்டு உள்ளதில் அவர்களுக்கே மத்திய பாஜக அரசு மீது கோபம் உள்ளது.

தனது மகன் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் எழுத வாய்ப்பு கிடைத்தும் தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் அவனது மருத்துவர் கனவே பாழாகிப்போன வருத்தத்தில் பலர் உள்ளனர். இதில் எல்லா இனத்தவர்களும் எல்லா குலத்தவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரின் ஒரே ஒற்றுமை, தமிழர்கள் என்பது மட்டும் தான்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வட மாநில மாணவர்கள் அதிகமாக மருத்துவத்துறையில் நுழைய வேண்டும், அதுவும் தமிழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களின் மாணவர்களாக வரவேண்டும் என்பதற்காகவும், தமிழக மாணவர்கள் மருத்துவத்தில் சேர முடியாதபடிக்கு முட்டுக்கட்டை இடவேண்டும் என்பதற்காகவும் மத்திய பாஜக அரசு இத்தகைய கொடுமையான முடிவை எடுத்திருப்பதாக மெத்த படித்த அறிஞர்களே ஐயப்படுகிறார்கள்.

இரண்டொரு நாள் முன்புவரை கூட பாஜகவை தீவிரமாக ஆதரித்து வந்த என் நண்பர் ஒருவரே இன்று மிக கடுமையாக மத்திய அரசின் முடிவை சாடியது அதன் ஒரு துளி. அவரது குடும்பத்திலேயே ஒரு மாணவரின் டாக்டர் கனவு இப்போது கானலாகி விட்ட சோகமும், அடுத்தவருடம் வரை காத்திருப்பதன் விரயமும், பொருளாதார வசதி இருந்தும் நல்ல மதிப்பெண் இருந்தும் டாக்டர் ஆக முடியாமல் போன ஆதஙகமுமாக இன்று வெடித்து புலம்பி தள்ளிவிட்டார். அப்போது தான் இதன் வீச்சை நான் முழுமையாக உணர்ந்தேன்.

தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் இப்போது தமிழக மாணவர்களுக்கும் எதிராக மத்திய பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால், இன குல மத பேதமின்றி அனைத்து தமிழர்களும் மெல்ல மெல்ல ஒன்றிணைந்து வருவது ஒருபுறம் நடந்தாலும், இன்னொரு புறம் எதார்த்தம் புரியாமல் 'எங்கோ' இருந்து இணையத்தில் மத்திய அரசின் முடிவுக்கு சப்பைக்கட்டு கட்டிவரும் சில நண்பர்கள் எரிச்சலூட்டுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது தான் அவர்களை மிகச்சரியாக கணித்து கண்டிக்க தொடங்கி இருக்கிறார்கள் சமீப காலம் வரை மோடியை ஆதரித்து வந்து இப்போது எதார்த்தம் புரிய தொடங்கிய மற்ற சில நண்பர்கள்.

தமிழக மாணவர்களின் நலன் காக்க வேண்டிய தமிழக அரசு வாளாவிருந்து மாணவர்களின் கனவுகளை சிதைத்து விட்டதையும், முன்னேற்பான நடவடிக்கைகளையோ மத்திய அரசுக்கு எதிரான கடுமையான கண்டனத்தையோ தெரிவிக்காமல் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டதாக சில அதிமுகவினரே கொந்தளித்து வருவதையும் கவனித்தேன்.

அதிமுகவினரே தமிழக அரசை தீவிரமாக எதிர்க்க தொடஙகியதை அறிந்த தமிழக அரசு வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு பயணப்படியும் செலவு தொகையும் வழஙகுவதாக அறிவித்து இருக்கிறது. இது சுத்தமாக போதாது.

கட்சி பேதமின்றி, இன மத குல பேதமின்றி எல்லோரும் பெற்றோர் என்கிற ஒற்றை வரியில் ஒன்றாகி மத்திய பாஜக அரசின் கொடுமையையும் மாநில அதிமுக அரசின் கையாலாகாத்தனத்தையும் உணர்ந்து கண்டித்து வருகிறார்கள்.

இதனால் எல்லாம் 'இந்த வருடம் மருத்துவத்துறை மாணவனாக சேரமுடியவில்லையே' என ஏங்கும் நம் பிள்ளைகளின் துயரத்தை துடைத்து விட முடியுமா? அவர்களது கனவுகளை நிறைவேற்ற முடியுமா? இத்தனை மன உளைச்சல்களுக்கிடையே நம் மாணவர்களால் இத்தேர்வை நன்கு எழுத முடியுமா?

மௌனம் மட்டுமே சுமந்து நிற்கும் ஒரு வக்கற்ற சமுதாயத்தில் நானும் இருப்பதை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன்.

நம் பிள்ளைகளுக்கான வாழ்க்கையை நம்மால் தரமுடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியுடனும்!

மன்னித்து விடுங்கள் பிள்ளைகளே!

Printfriendly