Sunday, December 23, 2018

GST கவுன்சில் கூட்ட முடிவுகள்

நேற்று கூடிய GST கவுன்சில் கூட்டம் பல முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறது.

சுருக்கமாக சொல்வதானால் 23 பொருட்களுக்கு வரி குறைப்பு, 42 கொள்கை முடிவுகள், 18 விளக்கங்கள், 4 சட்ட திருத்தங்கள். அவ்வளவு தான்.

இவற்றுள் சிலவற்றின் சாதக பாதகங்கள் என்ன என சுருக்கமாக பார்க்கலாம்.

1. மாதாந்திர ரிட்டர்ன் தொடர்ந்து 2 மாதங்கள் தாக்கல் செய்யாத வணிகர்கள் இனி E Way Bill எடுக்க முடியாது.

இது ஒருவகையில் நல்ல திட்டம். பல வர்த்தகர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலும் வரி கட்டாமலும் தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களிடம் பொருட்கள் வாங்குவோருக்கு ITC கிடைக்காமல் பெரும் பொருள் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக இந்த திட்டம். வரவேற்கத்தக்கது.

ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. உதாரணமாக ஒரு கன்ஸ்டிரக்‌ஷன் சர்வீஸ் புராஜக்டை எடுத்து கொள்வோம். திட்டம் முடிவடைய ஆறு மாதங்கள் ஆகும் என வைத்து கொள்வோம். ஆறு மாதம் கழித்து திட்டம் முடிந்த பின்னர் தான் பில் இட்டு வருவாய் பெற்று வரி செலுத்த முடியும் எனில், இடைப்பட்ட காலங்களில் அவர்கள் பொருட்களை எப்படி எடுத்து செல்வது? இது பற்றி எல்லாம் சிந்தித்தார்களா என தெரியவில்லை. இதற்கு இன்னொரு திருத்தம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

2. 2017-18 காலகட்டத்தில் நடைபெற்ற வர்த்தகத்துக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் அவகாசம் 31.10.2018 ல் முடிவடைந்து விட்டது. அதை மீண்டும் உயிர்பித்து 31.03.2019 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.

இதுவும் ஒரு வகையில் நல்ல முடிவு. பல வர்த்தகர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்களிடம் பொருட்களை வாங்கியவர்களுக்கு ITC கிடைக்கவில்லை. எனவே பொருட்களை விற்றவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் அதன் அடிப்படையில் பொருட்களை வாங்கியோர் ITC எடுத்து கொள்ளவும் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது வணிகர்களின் நஷ்டத்தை பெருமளவில் குறைக்கும்.

இப்போது வணிகர்கள் மீண்டும் 2017-18 வர்த்தக விவரங்களை சரிபார்த்து விடுபட்ட விவரங்களை அந்தந்த வணிகர்களுக்கு அனுப்பி வரிகட்ட சொல்ல வேண்டும். ஏற்கனவே பல நிறுவனங்கள் அவ்வாறு ரிட்டர்ன் தாக்கல் செய்யாத வர்த்தகர்களை Blacklist செய்து வியாபாரத்தை நிறுத்தியதால் அந்த வணிகர்கள் நொடிந்து போயிருந்தனர். பல்வேறு முறையீடுகளுக்கு பின்னர் இப்போது அரசு அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

3. 2017-18 ஆண்டுக்கான வருடாந்திர ரிட்டர்ன் (GSTR9) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 31.12.2018 லிருந்து 31.03.2019 ஆக முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. அது மீண்டும் 30.06.2019 க்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம், டிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் GSTR9 படிவத்தை இணையத்தில் ஏற்றமுடியாத நிலை ஏற்பட்டு தவிப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நீட்டிப்பின் அடிப்படையில் தான் வரிக்கழிவுக்கான கால அளவை 31.03.2019 வரை நீட்டப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


4. 2017-18 காலகட்ட வணிகங்களை 2018-19 காலகட்டத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்தாலும் செல்லும் என முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனடிப்படையில் சட்டத்தை திருத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இது கொஞ்சமும் லாஜிக் இல்லாத விஷயம் என்றாலும், வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் என்பதால் வரவேற்கத்தக்கது.

அதாவது, ஒரு வணிகர் தனது பொருளை நவம்பர் 2017 ல் விற்பனை செய்தார் என வைத்துக்கொள்வோம். அவர் அதற்கான வரியை டிசம்பர் 2017 ல் செலுத்தி, ரிட்டர்னை தாக்கல் செய்திருக்கவேண்டும். அந்த பொருளை வாங்கியவருக்கு அப்போது தான் ITC கிடைக்கும்.

ஆனால் விற்றவர் வரி தாக்கல் செய்யவில்லை. அவருக்கு 31.10.2018 வரை அவகாசம் கொடுத்தது அரசு. ஆனால் அவர் அந்த காலகட்டத்தில் வரி செலுத்துவதாக இருந்தாலும் நவம்பர் 2017 மாதத்துக்குரிய ரிட்டர்ன் படிவத்தில் தாக்கல் செய்தால் தான் செல்லும். ITC யும் கிடைக்கும். மாறாக ஜூன் 2018 மாதத்துக்குரிய ரிட்டர்னில் வரி செலுத்தி இருந்தால் ITC கிடைக்காது. காரணம் அது 2018-19 க்குரிய ரிட்டர்ன்.

சில டெக்னிகல் கரணங்கள் காரணமாக அவரால் நவம்பர் 2017 ரிட்டர்னை திறக்க முடியவில்லை. அரசும் தனது இணைய தளத்திலும் அந்த வசதி ஏற்படுத்தி வைக்கவில்லை. இதனால் வரி செலுத்த தயாராக இருக்கும் ஒரு நேர்மையான வணிகரால் வரி செலுத்த முடியாமல் போகிறது. அவரிடம் பொருளை வாங்கியவருக்கும் நஷ்டம். அந்த நஷ்டத்தை விற்றவரின் கணக்கில் வைப்பதோடு இனி அவர்களிடம் பொருட்கள் வாங்காதபடிக்கு Blacklist உம் செய்யப்பட்டது சில நிறுவனங்களில். இதனால் பல பல வணிகர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இப்போது அரசு தனது தவறால் ஏற்பட்ட முடிவை மாற்றிக்கொண்டு, ஜூன் 2018 ல் வரி தாக்கல் செய்தாலும் அதை நவம்பர் 2017 க்கு உரியதாக கருதி ITC எடுத்து கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது.

இதில் ஒரு சிக்கலான சவாலும் உள்ளது.

2018-19 க்கான வரி தாக்கல் கணக்கீடு செய்கையில் இது போல 2017-18 க்கான வரிகள் எவை என்பதை தனியாக கணக்கிட்டு அவற்றை கழிக்க வேண்டி இருக்கும்.

இதை விட நவம்பர் 2017 ரிட்டர்னை திருத்த வசதி செய்திருந்தாலே போதும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனால் அது மிக மிக எளிமையான தீர்வு என்பதாலோ என்னவோ அரசு அதை செய்யாமல், சிக்கலான மற்றொரு தீர்வை முன்வைத்து இருக்கிறது.

எது எப்படியானாலும், சிரமமான பணி என்றாலும் இது நஷ்டத்தை பெருமளவு குறைக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது தான்.

5. புதிய ரிட்டர்ன் படிவங்கள் 01.07.2019 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. முன்னதாக 01.04.2019 முதல் 30.06.2019 வரை அதன் டிரயல் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் அர்த்தம் ஏப்ரல், மே, ஜூன் 2019 காலத்தில் நீங்கள் இரண்டிரண்டு ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய வேண்டி வரும். (அதிகாரப்பூர்வமானது ஒன்று, டிரயல் ஒன்று)

மேலும் 2019-20 க்கான ஆனுவல் ரிட்டர்ன் கணக்கிடும் பொழுது முதல் மூன்று மாதங்கள் ஒரு வகையாகவும் மற்ற ஒன்பது மாதங்கள் வேறு வகையாகவும் கணக்கிட வேண்டி இருக்கும் என்பது தான் ஒரே சிறு சிரமம்.

ஆனால் முறையான ரிட்டர்ன் படிவத்தை கூட முடிவு செய்யாமல் அரைகுறையாக 2017 ஜூலையில் GST அமலாக்கி எல்லாரது வாழ்க்கையையும் சிரமத்துக்குள்ளாக்கியது ஏன் என்பது தான் தெரியவில்லை

6. பொருட்கள் வகைகளில் 17 சேவை துறையில் 6 இனங்கள் வரி குறைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

இதை தான் எல்லோரும் பல காலமாக கேட்டு வருகிறார்கள். ராகுல் மிக தீவிரமாக கோரிக்கை வைத்தபோது அவரை அரசு கிண்டல் செய்தது. இப்போது யதார்த்தத்தை உணர்ந்து இறங்கி வந்திருப்பது நல்ல விஷயம்.

மொத்தத்தில் வணிகர்களின் சிரமத்தை மிக மிக கால தாமதமாக உணர்ந்து கொண்டு செயல்பட தொடங்கி இருக்கிறது அரசு.

ஆனால் இடைப்பட்ட இந்த ஒன்றரை வருடங்களில் நசிந்து போன வர்த்தகம் இனி துளிர்த்தெழ மிக நீண்ட காலம் ஆகலாம். திருத்த முடியாத சில தவற்களை அரசு செய்ததால் அழிந்து போனவர்கள் அதிகம்.

இனியேனும் அரசு எதையும் யோசித்து தகுந்த ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டால் தான் இந்திய பொருளாதார நிலை சீராகும்

அதற்கு நேற்றைய முடிவுகள் முதல் படியாக இருக்கட்டும்

No comments:

Post a Comment

Printfriendly