Sunday, January 13, 2019

கொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்

சமீபத்திய பரபரப்பு கொடநாடு.

டெல்லியில் இருந்து வெளியாகும் 'தெஹல்கா' பத்திரிக்கையின் 'முன்னாள் ஆசிரியர்' சாமுவேல் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு பேரை வைத்து ஒரு பரபரப்பான பேட்டியை அளித்தார்.

பேட்டியின் சாரம்சம் கொடநாடு ஜெயலலிதா வீட்டில் நடந்த கொள்ளைகள் அது தொடர்பான கொலைகள் ஆகியவற்றை நடத்தியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்பது. எடப்பாடி அவர்களது திட்டப்படி தான் அந்த கொள்ளைகள் நடத்தப்பட்டது எனவும், அதிமுக பிரமுகர்கள் பலரது ஆவணங்கள வீடியோ பதிவுகள் அங்கிருந்து கொள்ளை அடிக்கப்பட்டன எனவும், அவை இப்போது எடப்பாடியாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன எனவும், அதை வைத்து தான் கட்சியினரை மிரட்டி பணிய வைத்திருக்கிறார் எனவும் குற்றம் சுட்டப்பட்டுள்ளது.

அந்த இருவரும் அந்த கொள்ளையில் தொடர்புள்ளதாக சொல்லப்படுபவர்கள். அவர்களது 'வாக்குமூலமாக'வே பலரும் இதை பார்க்கிறார்கள்.

விஷயம் வெளியானதும் திமுகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் இதனை பெரிய அளவில் பரபரப்பாக்கி இருக்கின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையும், உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
திமுக இதனை சட்டப்போராட்டமாக முன்னெடுக்கவும் முனைப்பு காட்டுகிறது.

இதில் எனக்கு சில மாற்று கருத்துக்கள் உள்ளன.

கொடநாடு கொள்ளைகள் மற்றும் அது தொடர்பான கொலைகள் ஆகியவற்றில் மறைந்திருக்கும் மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சரியே. ஒன்றரை வருடங்களாக இது குறித்து வலியுறுத்தாமல் இருப்பதன் ஆச்சர்யம் இனியும் விலவில்லை.

ஆனால் அதில் எடப்பாடி தொடர்புடையவர் எனக் கூறி பதவி விலகச்சொல்வது கொஞ்சம் அதீதமாகவே படுகிறது எனக்கு. ஆட்சிக்கு எதிரான இன்னொரு வாய்ப்பாக இதனை திமுக கருதுவது சரிதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

முதலாவதாக, பேட்டி அளித்தவர் 'தெஹல்கா'வின் 'முன்னாள் ஆசிரியர்'. அந்த இருவரும் ஏற்கனவே போலீஸால் விசாரிக்கப்பட்டவர்கள். அப்போது இது குறித்து எதுவும் சொல்லாதவர்கள்.

இப்போது சொல்லி இருப்பது உண்மை என உறுதியாக தெரிந்திருந்தால் சாமுவேல் அதனை ஏதேனும் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்ய செய்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அது அசைக்கமுடியாத ஒரு ஆவணமாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

ஆனால் இப்போதைக்கு இதை ஒரு பரபரப்புக்கான பேட்டியாக மட்டுமே வெளியிட்டதால் அதன் நம்பகத்தன்மை உறுதியாக இல்லை. யார் வேண்டுமானாலும் யாரை குறித்து வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டியாக குற்றச்சாட்டு கூற முடியும். அதன் அடிப்படையில் எல்லாம் ஒருவரை பதவி விலக சொல்லி கேட்க முடியாது என்பது திமுகவுக்கு தெரியாததல்ல. இதே கருத்தை தலைவர் கலைஞர் பலமுறை சொல்லியும் இருக்கிறார்.

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியாருக்கு உண்மையில் தொடர்பு இருக்கலாம். அல்லது தொடர்பு இல்லாமலும் இருக்கலாம். வெறும் ஒரு பேட்டியின் அடிப்படையில் அதனை உறுதி செய்துவிட முடியாது. ஒரு முறையான முதற்கட்ட விசாரணை நடத்தி அது எடப்பாடியாரை நோக்கி சென்றால் மட்டுமே அந்த கோரிக்கைக்கு மரியாதை இருக்கும்.

அல்லது இந்த குற்றச்சாட்டை வைத்தது ஒரு நம்பகத்தன்மை கொண்ட அமைப்பாக இருக்கவேண்டும். போலீஸ் ஆவணம், நீதிமன்ற குறிப்பு, புலனாய்வு அமைப்புக்களின் குறிப்பு போன்றவை

2ஜி விவகாரத்தில் கூட ராசா அவர்களை ராஜினாமா செய்யக் கோரும் முன்பாக CAG கொடுத்த அறிக்கை மற்றும் அதன் அடிப்படையிலான முதற்கட்ட விசாரணை இருந்தது. அந்த குற்றச்சாட்டுக்கள் தவறு என பின்னர் நிரூபிக்கப்பட்டாலும் கூட முதற்கட்ட வலுவான ஆவணம் இல்லாமல் பதவி விலக சொல்லி கேட்க முடியாது என்பதை அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இப்போது யாரோ ஒரு தனி நபர், ஒரு முன்னாள் பத்திரிக்கை ஆசிரியர் ஆகியோரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவி விலகச்சொல்லி கேட்பது சரியென தோன்றவில்லை.

எடப்பாடி அவர்கள் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருப்பதுடன், சாமுவேல் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார். தமிழக போலீஸ் டெல்லியில் பேட்டி அளித்தவர்களை கைதும் செய்திருக்கிறது.

இந்த சூழலில், நீதிமன்றத்தில் கொடுக்காமல் பேட்டியில் கொடுத்த அந்த வாக்குமூலம் உண்மையாகவே இருந்தாலும் போலீஸை வைத்து அதை பொய்யென சொல்ல வைக்க அரசுக்கு எளிதாக முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒரு வாரத்திலேயே இது பலவீனமாகிப்போய்விட கூடிய விஷயமாகவே படுகிறது. உண்மையில் இந்த வாக்குமூலத்தை சட்டரீதியாக செய்யாமல் பரபரப்பு பேட்டியாக மட்டுமே செய்திருப்பதே ஒரு மிகப்பெரிய நெருடலை தருகிறது.

இந்த சூழலில் இந்த பேட்டியை வைத்து ஓரிரு சாதாரணர்களின் குற்றச்சாட்டை வைத்து எல்லாம் முதல்வரை பதவி விலக வைக்கலாம் என எதிர்பார்க்கும் அளவுக்கு திமுக இறங்கி விடவில்லை என்றே நான் நம்புகிறேன்

திமுக செய்யக்கூடியதெல்லாம், கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை கேட்கலாம். அவ்வளவு தான். அந்த விசாரணை தான் அதில் யார் தொடர்புடையவர் என்பதை தீர்மானிக்கும். விசாரணைக்கு முன்பாகவே ஒருவரை நோக்கி அந்த வழக்கை செலுத்துவது சரியல்ல.

எடப்பாடி குற்றம் செய்தவராகவே கூட இருக்கலாம். ஆனால் அதை கொடநாடு குறித்த விசாரணை தான் தெளிவாக்கவேண்டும். ஒருவேளை எடப்பாடி அல்லாமல் வேறு யாரேனும் கூட காரணமாக இருக்கலாம்.

திமுகவின் கோரிக்கை விசாரணையை நோக்கி தான் இருக்கவேண்டுமே தவிர விசாரணைக்கு முன்பே எடப்பாடியாரை குற்றவாளி ஆக்குவதாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

ஒருவேளை, அந்த பேட்டியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு தவறாக இருக்கும் பட்சத்தில் அதை நம்பி திமுக முன்னெடுத்த நடவடிக்கைகள் கேலிக்குள்ளாவது எதிர்வரும் தேர்தலில் எதிர்மறை இமேஜை உருவாக்கும் ஆபத்து உள்ளது.

வேகத்தை விட இப்போதைய அவசியம் விவேகம் தான்.

4 comments:

  1. "வேகத்தை விட இப்போதைய அவசியம் விவேகம் தான்."
    .
    ஸ்டாலினுக்கு 2 ம் இல்லை
    200 ரூபா அடிமை உடன்பிறப்புகளுக்கு விவேகம் இல்லை

    ReplyDelete
  2. திமுக ஆதரவு ஊடகங்கள் பரபரப்பாக்கும் அதே வேளையில் பாஜக ஆதரவு ஊடகங்கள் வாய் திறக்காது கள்ள மவுனம் சாதித்து வருவதையும் கவனிக்க வேண்டும்.

    விசாரணையைப்பொறுத்தவரை முதல்வர் ராஜினாமா செய்யாவிட்டாலும் உள் துறை அமைச்சகத்தை தன் பொறுப்பில் வைத்து கொள்ளக்கூடாது.
    தமிழக காவல் துறை விசாரிப்பது சரியாக இருக்காது.
    சிபிஐ இன்று இருக்கும் நிலையில் அதன் சுயாதீன தன்மை கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

    எனவே இப்போது பதவி வகிக்கும் நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.

    மக்களுக்கும் அதுதான் நம்பகத்தன்மை உடையதாக இருக்கும் .

    ReplyDelete
  3. தங்கள் அறிமுகப் பக்கத்தில் *ஒண்ணும்* என்னும் வார்த்தையை *ஒன்னும்* என்று ஒரு முறை அல்ல மூன்று முறை பயன்படுத்தி உள்ளீர்கள்! சரி செய்யவும். தாய் மொழியை முதலில் சரியே கற்போம். பிழையின்றி எழுதுவோம். பிழையின்றி பேசுவோம். ஜி ஓ பி. ஜே ஓ பி விவரங்களை பின்னர் பார்ப்போம்! நன்றி. வாழ்க நற்றமிழ்!

    ReplyDelete
  4. I agree that a thorough investigation into the Kodanadu heist and related murders is necessary.

    ReplyDelete

Printfriendly