Tuesday, February 18, 2020

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

மதிய உணவு என்பது தமிழகத்தை பொறுத்த மட்டில் சமூக நீதிக்கான விதை.

முன்பெல்லாம் பள்ளிக்கு செல்லாத பிள்ளைகள் அதிகம். அவர்கள் வேலைக்கு சென்றார்கள். படிப்பதை விட வேலைக்கு சென்றால் ஒரு நேர உணவுக்காவது சம்பாதிப்பார்கள் என்கிற மனோநிலை தான் பெரும்பாலான ஏழைகளுக்கு இருந்தது.

பட்டாசு தொழிற்சாலை, வயல் வேலை, கதிர் அறுத்தல், செங்கல் சூளை, கடைகள், தொழிற் சாலைகளில் என குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இடமே இல்லை

நீதி கட்சி (திராவிட இயக்கங்களின் முன்னோடி) ஆட்சியில் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்பது முக்கியமான பணியாக எடுத்து கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழஙகும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இது சமூக படிநிலைகளை மெல்ல உடைக்க தொடங்கியது.  பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மெல்ல பள்ளிக்கு வர தொடங்கினார்கள். உணவுக்காக வந்து கல்வியும் கற்றார்கள். அது சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்க தொடங்கியது

சுதந்திரத்துக்கு பின்னர் காமராஜர் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டினார். பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிய உணவு திட்டமும் விரிவானது.

இவை எல்லாம் மிக சொற்ப அளவிலேயே இருந்து வந்தன.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் மிக பெரியது.

கல்வி தான் ஒருவனை எல்லா சமூக தளைகளில் இருந்தும் விடுதலை கொடுத்து முன்னேற வைக்கும் என்பதை உணர்ந்த திராவிட அரசுகள் கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்ல எல்லா வகையான திட்டஙகளையும் செயல் படுத்தியது.

கட்டணம் செலுத்த வசதி இல்லையா? கல்வி இலவசம்

புத்தகம் வாங்க பணம் இல்லையா? புத்தகஙகள் இலவசம்

உடை வாங்க வழி இல்லையா? சீருடை இலவசம்

நடந்து செல்ல காலணி இலவசம்

பள்ளிக்கூடம் தூரமாக இருக்கிறதா? தொடக்க பள்ளி, நடு நிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என பிரித்து எல்லா ஊர்களிலும் ஏதேனும் ஒரு பள்ளி இருக்கும் வகையில் கட்டப்பட்டது.

அப்படியும் தூரமாக இருக்கிறதா? அரசு பேருந்தில் போய் கொள். கட்டணம் இல்லை.

மேல்நிலை பள்ளிகளில படிப்போருக்கு சைக்கிள் இலவசம்.. மடிக்கணினி இலவசம்.

இப்படி எல்லா சலுகைகளும் கொடுக்கப்பட காரணம், எப்படியாவது நம் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலைக்கு முன்னேறி வாழ்க்கையை வெல்ல வேண்டும் என திராவிட அரசுகள் நினைத்ததால் தான்.

அதன் ஒரு பகுதியாக தான் மதிய உணவும். பள்ளிக்கு போனால் ஒரு நேரமாவது வயிறார உணவு உண்பான் என்பதாலேயே பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தொடங்கினார்கள். அது அவனுக்கு கல்வியையும் கொடுத்தது. அப்படி படித்து பெரிய நிலைக்கு சென்றவர்கள் பல லட்சம் பேர்

சொந்த கிராமத்தில் இடுப்பில் துணி கட்டி காலில் செருப்பின்றி கூனி குறுகி நடந்து கொண்டு இருந்தவர்களின் பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்கு சென்று தங்கள் சமூகத்தை நிமிர்த்தி தலை உயர்த்தி வாழ வைத்தார்கள்.

அதற்கு காரணம் கல்வி. அதை ஊக்குவித்தது இலவச திட்டம். அதன் மதிய உணவு திட்டம். ஆகியவை.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த வேளையில் UNICEF அறிக்கை ஒன்று, ஊட்டச்சத்து குறைப்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் ஊரக குழந்தைகள் போதுமான உட்டச்சத்து இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதை விவரித்து எழுதி இருந்தது.

அதை படித்த எம்.ஜி.ஆர், பள்ளியில் செயல் பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவு திட்டம் ஆக மாற்றினார்.

ஊட்டச்சத்து மிக்க பருப்பு காய்கறிகள் என உணவு முறையை மாற்றி மாணவர்களின் பசியையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் கவனித்து கொண்டார்

இப்படி சமூக நோக்கில் செயல்படுத்த படும் மதிய உணவுத் திட்டத்தை தான் இப்போது இன்னமும் விரிவு படுத்தி காலை உணவையும் கொடுக்க திட்டம் இட்டு உள்ளது தமிழக அரசு.

இது ஒரு வரவேற்க வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலை உணவு உண்ணாத மாணவர்கள் பாடத்தில் கவனம் கொள்வது இல்லை என பல சமூக ஆய்வாளர்கள் சொல்லிய விஷயத்தை வைத்து இதை பார்க்க வேண்டும்.

ஆனால் இதை அரசே செய்யாமல் தனியாரிடம் கொடுப்பது தான் இப்போது விமர்சனம் ஆகி உள்ளது.

இஸ்கான் அமைப்பின் அக்ஷய பாத்திரம் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த அமைப்புக்கு சுமார் ₹200 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தையும் கொடுத்து, மின்சாரம் குடிநீர் ஆகியவையும் இலவசமாக கொடுத்து இந்த திட்டத்தை செயல் படுத்த போகிறது தமிழக அரசு.

அப்படியான திட்டத்தில் அவர்கள் இட்லி, உப்புமா ஆகியவை கொடுப்பார்களாம். அதுவும் வெங்காயம் பூண்டு ஆகியவை சேர்க்காமல்.

அரசின் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது அரசின் நெறிமுறைகள் படி தான் எல்லோரும் செயல் படுத்துவது வழக்கம். ஆனால் இந்த திட்டத்தை பொருத்த வரை, தனியாரின் விருப்பப்படி செயல்பட அரசு அனுமதி கொடுத்து உள்ளது.

அதாவது தனியாரின் கொள்கைகள் அடிப்படையில் தான் அவர்களது சமையல் இருக்கும். அதை தான் மாணவர்கள் சாப்பிட்டு ஆகவேண்டும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட எந்த அரசும் இப்படியான விதிகளை ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

நாளை வேறொரு தனியார் அவர்களது கொள்கை படி தான் சமைப்பார்கள் என்றால் அதையும் அரசு ஒப்பு கொள்ளுமா?

இப்படியான நிலையில் மாணவர்கள் மனதுக்கு பிடிக்காத உணவை உண்ண முடியாமல், அந்த மன நெருக்கடி சுமந்த படி கல்வியிலும கவனம் இல்லாமல் படிப்பை சரியாக படிக்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

இத்தனை ஆண்டு காலமாக தமிழக அரசு எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் ஒரே திட்டம் மூலம் செயலிழக்க செய்ய இந்த காலை உணவு திட்டம் போதும்

இதை இப்படியே விடாமல் தமிழக அரசு மறு பரிசீலனை செய்து அரசே திட்டத்தை செயல்படுத்துவது நல்லது.

ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு கூடங்களும் சத்துணவு அமைப்பாளர் களும் உள்ளனர். எல்லா வச திகளும் உள்ளதால் அரசே இந்த திட்டத்தை நேரடியாக நடததுவதே நல்லது.

மாணவர்களின் எதிர்காலம் கருதி இதை அரசு செய்ய வேண்டும்

Printfriendly