டாடா நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கடந்த செப் 15 ஆம் தேதி தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளது.
யார் அந்த நிறுவனத்தை பெற போகிறார்கள் என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
*****
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இப்போது சுமார் ₹43,000 கோடி கடன் உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தது ஒன்றிய அரசு.
ஏர் இந்தியா நிறுவனம் முழுமையும், விமானங்கள், பராமரிப்பு நிறுவனம், நிலங்கள், அலுவலகங்கள், வீட்டு குடியிருப்புக்கள் என எல்லாவற்றையும் விற்பனைக்கு அறிவித்து இருக்கிறது அரசு.
இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, விமான பயணங்கள் அதி வேகமாக வளர்ந்து வரும் இப்போதைய காலகட்டத்தில் ஏன் நஷ்டம் ஆனது, ஏன் அதனை சீரமைக்காமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது எல்லாம் மிகப் பெரிய புதிர் தான்
உள்நாட்டு விமான சேவை கொள்கையில் அரசால் செய்யப்பட்ட மாறுதல்கள் காரணமாக ஏர் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய லாபகரமான வழித்தடங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தன.
அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் ஏர் இந்தியாவை விட அதிகமாக தனியாருக்கு அனுமதி கொடுத்தது.. அதிக பயணிகள் இல்லாத இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஏர் இந்தியாவை இயக்க செய்ததும் தான் நஷ்டத்தில் மிக முக்கிய காரணி
சுமார் 127 விமானங்கள் கொண்டது ஏர் இந்தியா. அதில் 4 ஜம்போ ஜெட் (B 747) விமானங்களும் அடக்கம். இது தவிர ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சுமார் 24 விமானங்கள் வைத்து இருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பாலான சேவை முக்கியம் அல்லாத வழித் தடங்களில் தான் அமைந்து இருக்கின்றன.
அதிக பயணிகள் தேவை உள்ள வழித்தடங்களில் ஏர் இந்தியாவுக்கு கிடைத்த அனுமதி மிகக் குறைவே.
இது தவிர மற்றொரு முக்கிய காரணி, ஏர் இந்தியாவை முழு சேவை கொண்ட நிறுவனமாக (Full Service Carrier) நடத்துவது.
இந்தியாவில் இப்போது குறைந்த செல்லவுள்ள விமான சேவைகள் (LCC - Low Cost Carriers) தான் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எல்லா முக்கிய வழி தடங்களும் சுமார் 2 மணி நேரத்துக்குள் பயணிக்கத் தக்கவை என்பதால் முழு சேவை அவசியம் இல்லை.
உணவு தேவைப்படும் பயணிகள் அதை தனியாக வாங்கி கொள்ளலாம். இப்படி தான் தனியார் விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அவற்றின் கட்டணங்களும் குறைவே.
ஆனால் ஏர் இந்தியா இன்னமும் Full Service Airline ஆக செயல்பட்டு சில வழித் தடங்களில் தனியாரின் போட்டியை சமாளிக்க கட்டண குறைப்பையும் அறிவிப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.
உணவு மற்றும் பிற சேவைகளுக்காக கொடுத்த காண்டிராக்ட் ரத்து செய்யும் துணிச்சலான முடிவை எடுக்க முடிந்தால், ஏர் இந்தியாவையும் LCC ஆக மாற்ற முடிவு எடுக்கக் கூடிய திராணி உள்ள ஒரு அரசு அமைந்தால், நிச்சயமாக operating cost கணிசமாக குறைந்து நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ அரசு இந்த முடிவை எடுக்கவே இல்லை.
UDAAN போன்ற சேவைகள் வரக்கூடிய நேரத்தில் ஏர் இந்தியாவுக்கு மிகப் பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன.
Indigo நிறுவனம் 200+ விமானங்கள் இப்போது கைவசம் வைத்து இருந்த போதும் இன்னமும் 500+ விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதில் இருந்தே இந்திய விமான சேவை துறைக்கு உள்ள வாய்ப்புக்கள் எவ்வளவு என்பது தெளிவு ஆகும்.
இச்சூழலில் 127 விமானங்கள் கொண்ட ஏர் இந்தியா முழு கொள்ளளவு நிறைய பயணிகளை கொண்டு பறப்பது சுலபம். இன்னமும் கூட விமானங்களை வாங்கி அவற்றையும் முழு கொள்ளளவுடன் இயக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் என்ன? நல்ல டிமாண்ட் உள்ள வழித்தடங்களை ஏர் இந்தியாவுக்கு அரசு கொடுக்க வேண்டும்.
உதாரணமாக சென்னை - மும்பை வழி தடத்தில் 11 விமானங்கள் இயங்கினால் அதில் 3 தான் ஏர் இந்தியா. கோவை மும்பை வழித்தடத்தில் 7 க்கு 1 தான் ஏர் இந்தியா. அதிலும் ஏர் இந்தியாவுக்கு PHS எனும் Peak Hour Service நேரமான காலை மாலை வேளைகளில் அனுமதி கொடுக்காமல் அதிக பயணிகள் இல்லாத மதிய நேரத்தை கொடுத்து இருக்கிறது அரசு. எப்படி ஏர் இந்தியா வருவாய் பார்க்கும்?
எனவே எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கையில் திட்டமிட்டே அரசு ஏர் இந்தியாவை நஷ்டத்துக்கு தள்ளி விட்டதோ? அதையே காரணம் காட்டி தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்கிறதோ? என்கிற சந்தேகங்கள் பலருக்கும் வருவதில் வியப்பு இல்லை.
அதை மேலும் அதிகரிக்கும் விதமாக, தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க காட்டும் ஆர்வம், ஏர் இந்தியா ஒரு மதிப்பு மிக்க, வருவாய் ஈட்டும் வாய்ப்பு கொண்ட நிறுவனம் என அவர்கள் புரிந்து கொண்டதை தெளிவு ஆக்குகிறது.
ஏர் இந்தியாவிடம் போயிங் மற்றும் ஏர் பஸ் ஆகிய இரண்டு வகை விமானங்களும் உள்ளன. மேலும் ATR விமானங்களும் உள்ளன. அவற்றுக்கான ரிப்பேர் & சேவை அமைப்பும் சொந்தமாக உள்ளன.
இத்தனை பெருமையும் வசதிகளும் கொண்ட நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் வாங்க துடிப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
தனியார் நிறுவனங்களால் ஏர் இந்தியாவை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றால், அரசால் ஏன் அதை செய்ய முடியவில்லை?
சரியான நிர்வாகிகளை நியமித்து, விமான கொள்கைகளை சீர் திருத்தினால் ஏர் இந்தியா மீண்டும் பழைய பெருமையை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. சரியான நிர்வாகி கிடைக்கவில்லை எனில், மூன்றாம் நபர் நிர்வாக அமைப்பை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம். Contract based third party administrator.
ஏர் இந்தியாவை சீர் செய்ய வேண்டும் என நினைத்தால் அரசுக்கு அது மிக மிக எளிதான காரியம் தான்.
அதிலும் வெறும் ₹43,000 கோடி கடனுக்காக அதை விட அதிக மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்வது எல்லாம் பலருக்கும் பல விதமான சந்தேகத்தை கிளப்பாமல் இல்லை.
பெட்ரோல் டீசல் போன்றவற்றின் வரி வருவாய் மூலம் மட்டுமே சுமார் ₹3 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஒரு அரசுக்கு, ₹43,000 கோடி ரூபாய் எல்லாம் ஒரு விஷயமே அல்ல.
ஆனால் அரசு ஏனோ ஏர் இந்தியாவை விற்றே ஆக வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி கொண்டு இருக்கிறது.
BSNL நிறுவனத்தை போலவே ஏர் இந்தியாவையும் அவற்றுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கூட கொடுக்காமல் மறுதலித்து நஷ்டத்துக்கு உள்ளாக்கி தனியாருக்கு தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு கிளம்பி இருந்தாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் ஏர் இந்தியாவை விற்பனை செய்வதில் உறுதியாக இருக்கிறது அரசு.
அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்பது தெளிவான பிறகு நாம் இனி அதை யார் வாங்குவார்கள்? ஏர் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? ஊழியர்கள் நிலை என்ன என்பதை பற்றிய கவலைக்கு திரும்புவதே சரியாக இருக்கும்
அதற்கு.. யார் வாங்க போகிறார்கள் என தெரிய வேண்டும்.
அது வரை காத்திருப்போம்.
No comments:
Post a Comment