திருமணம்
இந்த ஒற்றை சொல் தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் உந்து சக்தியாக உள்ளது.
பெற்றோர், தங்கள் மகளுக்கு / மகனுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என போராடுகிறார்கள். அதற்காக நல்ல கல்வி, கௌரவமான வேலை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என மெனக்கெடுகிறார்கள். பிள்ளைகளின் எதிர்காலம், அவர்கள் மண வாழ்க்கை, அவர்களை நம்பி வருபவர்களை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைப்பதற்கான முயற்சிகள் என போகிறது பட்டியல். இது தவிர திருமணச் செலவுகள், நகைகள் என அதற்கான மெனக்கெடல் எல்லாம் தனி.
இவற்றை சமாளிக்க பெற்றோர் பெரிய வேலைகளுக்கு முயற்சிப்பது, அதிக வருமானம் உள்ள வேலைகளுக்கு மாறுவது, இருக்கும் வேலையை விட்டு பிசினஸ் செய்வது, இருக்கும் வேலையில் கிடைக்கும் வருவாய் போதாமல் பார்ட் டைம் வேலைக்கு செல்வது என எல்லா வகையிலும் முயற்சி செய்கிறார்கள்.
எல்லாம் பிள்ளைகளின் எதிர்காலம் என்கிற ஒற்றை புள்ளியை நோக்கி. அந்த எதிர்காலம் எனப்படுவது பிள்ளைகளின் கல்வி வேலை வாய்ப்பு என சுருக்கிக் கொண்டாலும், அதன் நீட்சி அவர்களுக்கு நல்ல ஒரு இடத்தில் நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்து அந்த திருமண வாழ்வை தானாகவே சமாளிக்கும் நிலைக்கு பிள்ளைகளை தயார் படுத்துதல் என்கிற புள்ளியில் கொண்டு போய் தான் நிறுத்துகிறது.
சுருக்கமாக சொன்னால் இந்திய வாழ்வியலில் திருமணம் என்பதை மையப் புள்ளியாக வைத்தே பெரும்பாலான குடும்பங்கள் இயங்கி வருவதாக பார்க்கலாம்.
தனது திருமண வாழ்வு, அதன் பொறுப்புகள் கடமைகள், பிள்ளைகளின் வாழ்வு, அவர்களது திருமணம், இதற்கான பொருளாதார தேவை, அதை ஈடு செய்யும் வேலை.. என எல்லாமே ஏதோ ஒரு வகையில் திருமணம் என்கிற புள்ளியை சுற்றியே இயங்கி வருவதாக ஒரு உணர்வு.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமணம் என்பது என்ன?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அதிகாரப்பூர்வமாக இணைந்து தங்கள் வாழ்க்கையை இணைந்து முன்னெடுத்து செல்லும் ஒரு வைபோகம் என பொதுவாக சொல்லலாம்.
அது ஒரு ஆண் ஒரு பெண் இணைப்பு மட்டும் அல்ல, இரு வேறு குடும்பங்கள், அவர் தம் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் ஆகியவையும் இணைந்து கொள்ளும் வைபோகம் என்றும் விரிவாக சொல்லலாம்.
இதனாலேயே, தன் பிள்ளைகளுக்கு வரப்போகும் மணமகன்/மணமகள் பற்றி மட்டும் அல்லாமல் அவர்களது வேலை, குடும்பம், சொந்தம் பற்றி எல்லாம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது.
இவை எல்லாம் கலாச்சார ரீதியான விஷயங்கள்.
திருமணம் - இதை சட்ட ரீதியாக பார்த்தால் வேறு வகையான புரிதல்கள் வருகிறது.
சட்டத்தின் பார்வையில் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதற்கு, நட்பாக இருப்பதற்கு, காதலிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவர்கள் ஒன்றாக பொது இடங்களுக்கு, கோவில், பூங்கா, திரையரங்கு என போய் வருவதற்கும் சட்டம் எந்த தடையும் சொல்வது இல்லை.
நீங்கள் ஏன் பழகுகிறீர்கள், காதலிக்கிறீர்கள் என்று சட்டம் கேள்வி கேட்பது இல்லை. அப்படி பழகுகிறவர்களை யாரேனும் தொந்தரவு செய்தால், அது குறித்து சம்பந்தப் பட்டவர்கள் புகார் அளித்தால், தொந்தரவு செய்பவர்களை தண்டிக்கவும் சட்டம் தயஙகுவது இல்லை.
பருவம் பூர்த்தி அடைந்த ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்துகொள்ள சட்டம் தடை சொல்வது இல்லை. மேலே நாம் விரிவாக பார்த்த கலாச்சார ரீதியான எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகள் எதையும் சட்டம் எதிர்பார்ப்பது இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
இன்னும் ஒரு படி மேலே போய், இப்போது ஒரு பாலின திருமணங்களைக் கூட சட்டம் அங்கீகரிக்க தொடங்கி உள்ளது.
ஆக சட்டத்தின் பார்வையில் திருமணம் என்பது வேறு. அது பொறுப்பு சம்பந்தப்பட்டது. அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியான பொறுப்பு சம்பந்தப்ப ட்டது.
ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தனது பாதுகாப்பு, எதிர்காலம், வருமானம், சொத்து (தனக்கு பாரம்பரியமாக கிடைத்த சொத்து / தான் உழைத்து சேர்த்து வைத்த சொத்து) ஆகியவற்றை தனக்கு பின் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது எனதற்கான ஆவணப் பதிவாகவே திருமணம் பார்க்கப்படுகிறது.
திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ யார் யாருடன் பழகினாலும், உறவு கொண்டாலும் சட்டம் அது பற்றி கேள்வி கேட்பது இல்லை. சட்டத்தின் பார்வையில் அது தவறும் இல்லை.
ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒருவரை திருமணம் செய்து இவர் தான் இனி தனது பொறுப்பு, தனது பொருளாதார ரீதியான செயல்களுக்கு பொறுப்பு என்று அங்கீகரித்த பிறகு, இன்னொருவரை திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்காது.
திருமணம் செய்யாமல் பழகுவது, திருமணம் மீறிய உறவு, அவர்களுக்கு செலவு செய்வது போன்றவற்றை கூட சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவரை திருமணம் செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்வதை மட்டுமே தவறு என்கிறது. சுருக்கமாக ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக ஒருவர் தான் பொறுப்பாக இருக்க முடியும். அவரை விவாக ரத்து செய்து விட்டு தான் இன்னொருவரை திருமணம் செய்து பொறுப்பாளர் ஆக்க முடியும்.
சுருக்கமாக பார்த்தால் சொத்துக்கள், வருமானம் ஆகியவற்றுக்கான வாரிசு பொறுப்பு யார் என்பது மட்டுமே சட்ட ஆவணம் கவனிக்கும் ஒரே செயல். ஒருவரை திருமணம் மூலம் அங்கீகரித்து விட்டால் அது யார் எவர் என்ன என்று எல்லாம் ஆராயாமல் சட்டமும் அவர்களை தான் பொறுப்பான நபராக பார்க்கும். அவரை சட்டப்பூர்வமாக விவாக ரத்து செய்த பின் இன்னொருவரை திருமணம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும். விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்தால் அதை சட்டம் ஏற்காது. அதாவது இரண்டு பொறுப்பாளர்களை ஏற்காது. அதிலும் விதி விலக்கு உண்டு. முதல் பொறுப்பாளர் சம்மதத்துடன் இரண்டாம் பொறுப்பாளராக ஒருவரை அங்கீகரிக்கும்.
முதல் பொறுப்பாளர் இருக்கும் போது, வேறு ஒருவருடன் பழகினாலும் வாழ்ந்தாலும் சட்டப்படி முதல் பொறுப்பாளர் தான் சட்டபூர்வமான வாரிசுதாரர். விவாக ரத்து என்பது ஆகும் வரை அவர் தான் பொறுப்பாளர்.
எனவே பொருளாதார சார்பு எவரிடத்தில் என்பது மட்டுமே ஆவணங்கள் கவனிக்கும். மற்றப்படி யார் எவருடன் எப்படி பழகினாலும் சட்டம் அதை கேள்வி கேட்காது.
அவ்வளவு ஏன், பெரு நகரங்களில் இப்போது பரவலாக இருக்கும் லிவ் இன் கலாச்சாரம் கூட சட்டம் தவறு என்று சொல்லி கேள்வி கேட்பது இல்லை. அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டம் தலை இடுவது இல்லை. எல்லோருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை தருகிறது. ஆனால் அங்கீகார பொறுப்பாளர் ஒருவர் தான் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது.
இப்போது மீண்டும் திருமணம் என்பதை பார்ப்போம்.
கலாச்சார பண்பாட்டு ரீதியாக திருமணம் என்பது இரு நபர்கள் இரு குடும்பங்கள் இணையும் விழா.
சட்ட ரீதியாக திருமணம் என்பது பொருளாதார சமூக பொறுப்பு யாரிடம் என்பதை தீர்மானிக்கும் ஒரு ஆவணம்.
குடும்ப ரீதியாக தனக்கும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் சரியான துணையை சரியான குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஒப்படைக்கும் வைபோகம்.
இந்த திருமணம் எனும் ஒற்றை புள்ளி தான் வாழ்வின் பல முடிவுகளை தீர்மானிக்கிறது.
திருமணம் ஒரு சமூக நிகழ்வு, இரு குடும்ப இணைப்பு, இரு பாரம்பரிய ஒட்டுதல், எதிர்கால பாதுகாப்பு என விரிவாக்கம் செய்தும் பார்க்கலாம்.
திருமணம் ஒரு வாரிசு ஆவனத்துக்கான ஆயத்தம் மட்டுமே என சட்ட ரீதியாக சுருக்கியும் பார்க்கலாம்.
அப்போ திருமணமே வேண்டாம் என தனியாக வாழ்பவர்கள்?
அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment