Sunday, August 14, 2022

வீட்டு வாடகைக்கு GST - விளக்கங்கள்

நடந்து முடிந்த GST கவுண்சில் கூட்டத்தில் நிறுவனஙகள் வாடகைக்கு எடுக்கும் வீடுகளுக்கும் இனி GST வரி செலுத்த வேண்டும் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிறுவனஙகள் எதற்காக வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும்?



உதாரணமாக அரியலூர் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த தொழிற்சாலைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள், அதிகாரிகள், பொருட்கள் வழங்கும் நிறுவனததினர், சேவை வழங்கும் நிறுவனத்தினர், புதிய ஆர்டர்கள் வாங்க வருவோர் என பலரும் தொழில் நிமித்தமாக வந்து செல்வார்கள்.

திருச்சியில் தங்கி அங்கே வந்து செல்ல சிரமப்படுவதை தவிர்க்க தொழிற்சாலை நிர்வாகம் அந்த ஊரிலேயே சகல வசதிகளும் கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும். 

தொழில் நிமித்தமாக தொழிற்சாலைக்கு வருவோர் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி செல்ல அந்த வீடு பயன்படும். 

அந்த தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கிறது என வைத்து கொள்வோம். அங்கிருந்து இதே நிறுவனத்தின் அதிகாரிகள் தொழிற்சாலையில் மீட்டிங், ரிவியூ போன்றவற்றுக்கு வரும் போதும் அந்த வீட்டை பயன் படுத்தி கொள்வார்கள்.

இது ஒரு உதாரணமாக சொன்னது தான்.

டெல்லி மும்பை சென்னை பெங்களூரு ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் தலைமை அலுவலகம் கொண்ட நிறுவனஙகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தங்கள் நிறுவன ஊழியர்கள் அதிகாரிகள் தங்க அங்கே பல வீடுகளை வாடகைக்கு எடுத்து வைக்கும்.

ஒரு சில பெரிய நிறுவனஙகள் தங்கள் நிறுவன இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றவர்களுக்கு தங்குமிடம் கொடுப்பது வழக்கம். கம்பெனி செலவில் வீட்டு வசதி கொடுப்பது.. குறிப்பாக அந்த அதிகாரிகள் வெளியூர் ஆட்களாக இருந்து இந்த வேலைக்காக இந்த ஊருக்கு வரவேண்டும் என்று இருந்தால்.. அவர்களை போன்றவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது நிறுவனஙகள் வழக்கமாக செய்வது தான்.

இப்படியாக தொழில் நிமித்தமாக கெஸ்ட் ஹவுஸ், transit accommodation, employee accommodation என பல காரணங்களுக்காக வீடு வாடகைக்கு எடுப்பது உண்டு.

அவ்வாறு எடுக்கப்படும் வாடகை வீடுகளுக்கு இனி GST வரி உண்டு என்பது தான் GST கவுண்சில் எடுத்து இருக்கும் முடிவு.

ஒரு நிறுவனம் தனது தொழில் சார்ந்து வாடகைக்கு எடுக்கும் அலுவலகம், தொழிற்சாலை, கடை, வணிக வளாகம் போன்றவற்றுக்கு எப்படி வரி கட்டுகிறதோ அதே போல தொழில் நிமித்தமாக எடுக்கும் வீடுகளுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது சரியான முடிவு தான்.

இந்த வரியை கூட வீட்டு உரிமையாளர் செலுத்த தேவை இல்லை. 

வாடகைக்கு வீடு எடுக்கும் நிறுவனமே Reverse Charge Mechanism (RCM) முறையில் இந்த GST வரியை கட்டி விடும்.

அப்படி கட்டிய வரியை Input Tax Credit ஆக மீண்டும் அந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்ளும். தொழில் நிமித்தமாக எடுத்த வீடு என்பதால் ITC கு தடை இல்லை.

இதனால் அரசுக்கு ஒரு பைசா வருமானமும் இல்லை. நிறுவனஙகளுக்கு ஒரு பைசா நஷ்டமும் இல்லை.

யார் யாருக்கு வாடகையாக எவ்வளவு தொகை ஒரு ஆண்டில் கொடுக்கப் படுகிறது. அப்படி வாடகையாக வாங்கும் வருவாயை வீட்டு உரிமையாளர் தனது வருமான வரி விவரஙகளில் முறையாக காட்டி இருக்கிறாரா போன்ற தகவல்களை ஆராய இந்த புதிய நடைமுறை உதவும்.

இதன் மூலம் இது வரை இருந்த வருமான வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்படும்.

இந்த செய்தியின் உண்மை தன்மை புரியாமல் இனி வாடகை வீடுகளுக்கு எல்லாம் GST வரி விதிக்கப்பட்டு உள்ளது என ஒரு தவறான செய்தி இணைய தளங்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

தனி நபர் தனது குடும்பத்துக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு GST கிடையாது.

நிறுவனஙகள் தங்கள் தொழில் தேவைக்காக எடுக்கும் வாடகை வீட்டுக்கு மட்டுமே GST வரி விதிக்கப்படும்.

அந்த வரியை நிறுவனஙகள் செலுத்தி திரும்ப எடுத்துக் கொள்ளும்.

யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாத வெறும் declaration process தான் இது.

நன்றி




No comments:

Post a Comment

Printfriendly